
முகவுரை:
அமெரிக்க தேசிய உடல் நலப் பாதுகாப்பு முகமை, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Center for Disease Control &prevention சுருக்கமாக CDC) என்று பெயரிடப் பட்டுள்ளது. இது மைய அரசின் நலம் மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்குகிறது. தொற்று நோய்களுக்காகவே உண்டாக்கப் பட்ட அமைப்பு,நோய் எதிர்ப்புத் திறனூட்டல் மற்றும் சுவாச நோய்கள் மையம். அமெரிக்காவில் Covid-19 தடுப்பூசி போடுதல் பற்றிய 26-04-2021 வரை நிலவரம் (CDC தரவுகள் ) வருமாறு: (www.nytimes.com)
2 தவணை தடுப்பூசியும் முடித்தவர்கள் = 29%
முதல் தவணை மட்டும் முடித்தவர்கள் = 42%
மாகாணங்களுக்கு விநியோகிக்கப் பட்ட டோஸ்களில் 79% பயன்படுத்தப்பட்டுவிட்டன. ஆனாலும் டென்னசி, ஜார்ஜியா, யுட்டா, மிஸ்ஸிசிப்பி, அலபாமா போன்ற மகாணங்களில் சராசரிக்கும் குறைவாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதற்கு மக்களின் தயக்கமே காரணம் என்று இந்த கார்டியன் கட்டுரை குறிப்பிடுகிறது. நாடளாவிய தடுப்பூசி இயக்கத்தின் அடுத்த மற்றும் மிகக் கடினமான இக் கால கட்டத்தில் நாட்டுப்புற அமெரிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முன்னோடிகள் தம் தூண்டும் சக்தியில் (persuasion) நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள் தொகையில் 40% க்கும் மேல் ஓரளவுக்கு கோவிட் -19 எதிர்ப்பாற்றல் பெற்றுவிட்ட நிலையில், பெருந்தொற்றின் உக்கிரம் தணிந்து கோவிட்டுக்கு முந்திய கால கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் முழு வீச்சில் தொடங்கிவிடப் போகின்றன. தடுப்பூசி விகிதம் குறைவாயுள்ள சில தனித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தப்பிப் பிழைத்துத் தழைத்தோங்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தாக்கம் குறைந்துவிட்ட பின்பும், தடுப்பூசி விகிதம் குறைவாக இருந்த அந்த தனித்த பகுதிகளில், செழித்து வரும் கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து மக்களுக்கு நோயையும் மரணத்தையும் தந்து கொண்டிருக்கும். வைரஸ் பிறழ்வடைந்து அதி வேகமாகப் பரவக் கூடியதும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதுமான பதிப்பாக மாறிவிடுவது படு மோசமான எதிர்கால சாத்தியம். கடைசியில் வைரசின் புதிய மாற்றுரு தனித்த பகுதிகளில் இருந்து கசிந்து நாட்டின் முக்கிய பகுதிகளில் பரவி ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் அச்சுறுத்தலாகிவிடலாம். பொது நல நிபுணர்கள் இது போன்ற சாத்தியங்கள் கொண்ட எதிர்காலத்தை எண்ணி பீதியடைந்துள்ளார்கள். விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அளிப்பதே தற்போதைய அணுகுமுறை. நாட்டுப்புற மக்கள் பெரும்பாலும் பழமை வாத அரசியல் சார்பினராகவும், கிருமியை உடலில் செலுத்துவதைத் தீவிரமாக எதிர்ப்பவர்களாகவும் இருப்பதால், தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயக்கம் காட்டி வருகிறார்கள். இன்றைய நிலையில் தடுப்பூசிக்கு தயக்கம் காட்டுபவர்களை இணங்கச் செய்வதே அடுத்த கட்டப் பணி என்று பொது நல முன்னோடிகள் உணர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் தடுப்பூசி எதிர்ப்பு அரசியலாக்கப் பட்டது 2015ல் தான். அதற்கு முன்பிருந்த எதிர்ப்புகள் அனைத்தும் மருத்துவக் காரணங்களைக் கொண்டவை.
2015-ல் இரு டிஸ்னி லாண்ட் கருத்துக்கரு (theme) பூங்காக்கள் சம்பந்தப்பட்ட திடீர் தட்டம்மை எழுச்சி நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் பரவி ஒரு பல் மாநிலப் பொது நலக்கேடு நிகழ்வானது. கலிபோர்னியா மாவட்ட சட்ட மன்றம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தது. அது தடுப்பூசி எதிரிகளின் மூர்க்கமான பின் விளைவுகளைச் சந்தித்தது. மருத்துவப் பாதுகாப்பு என்ற கருத்தாக்கம் ஓரங்கட்டப்பட்டு தனி மனித சுதந்திரப் பிரச்னையாக உருவெடுத்தது. உள்நாட்டு சுதந்திர அக்கறைகள் ஊடகங்களால் ஊதிப் பெருக்கப் பட்டன. அப்போது பழமை வாதிகள் பலர் தடுப்பூசி எதிர்ப்பாளர்களாகி அணி திரண்டனர் என்கிறார் முகநூல் பதிவுகளாக வந்த தடுப்பூசி எதிர்ப்புச் சொற்சிலம்பங்களை ஆராய்ச்சி செய்த Broniatowski என்னும் ஆய்வாளர்.
கோவிட் பிரச்னை உச்சத்தில் இருக்கும் இன்றைய கால கட்டத்தில், குறிப்பாக நாட்டுப்புறப் பகுதிகளின் தடுப்பூசித் தயக்கத்தை முறியடிக்கத் தூண்டல் (persuasion) பரப்புரைகளில் தீவிரமாக முதலீடு செய்யவேண்டும் எனப் புதிய வாக்கெடுப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி ஒருபோதும் போட்டுக்கொள்ள மாட்டோம் என்கிற அமெரிக்கர்கள் நகர்ப்புறத்தை விட நாட்டுப்புறத்தில் இரு மடங்கு அதிகமாக இருக்கிறார்கள். புதுக் கருத்துக்கணிப்பு தரவுகளின் படி, எதிர்ப்பாளர்களில் முக்கால்வாசிப்பேர் ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் என்கிறது கட்சி சார்பற்ற Kaiser Family Foundation. பெரும்பான்மை (58%) நாட்டுப்புறக் குடிமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது சொந்த விருப்பத் தெரிவாகவே இருக்கவேண்டும் என்கிறார்கள், அவர்கள் செய்தி ஊடகங்கள் பெருந்தொற்றுக் கடுமைகளை மிகைப் படுத்தி விட்டார்கள் என்று சொல்லக் கூடியவர்கள் என்கிறார் KFF-ன் வாக்கெடுப்பை நெறிப்படுத்தும் லிஜ் ஹமெல். (Liz Hamel.)
தன்னார்வ தேசிய நாட்டுப்புற நலச் சங்க தலைமைச் செயல் அதிகாரியான ஆலன் மோர்கன், தடுப்பூசித் தயக்கம் போக்குவதில் முழுக் கவனம் செலுத்துகிறார். அவருடைய செயல்திட்டத்தின் முக்கியக் கூறுகள்:
- நலப் பணியாளர்கள் வேக்சின்களை நன்கறிந்த உள்ளூர் மருத்துவமனை, தேவாலயம் மற்றும் மருத்துவர் அலுவலகங்களுக்கு அனுப்புதல். உள்ளூர்த் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்களின் தூண்டல் நாட்டுப்புற மக்களின் தடுப்பூசித் தயக்கம் விலக உதவும்.
- கோவிட் -19 பற்றிய உரையாடல்கள் கேட்பவரின் கௌரவத்தைக் குலைப்பதாகவோ, அதிகார தோரணையில் மிரட்டுவதாகவோ இருந்துவிடக் கூடாது. வெறும் அறிவியல் தகவல்கள் மூலம் அவர்களின் சந்தேகம் அகலாது. அறியாமைக்காக அவர்களைத் திட்டவோ, கேலி செய்யவோ கூடாது. முதலில் அவர்களின் கவலை மற்றும் பயங்களை முழுதும் சிரத்தையுடன் கேட்கவேண்டும். தடுப்பூசி மறுப்புக்கு அவருக்குள்ள உரிமையை மதிப்பதாகத் தெரிவித்து விட்டுப் பின்னர் தன் வேண்டுகோள் நிறைவேற்றம் அவருக்கு ஊறு விளைவிக்காது, ஆனால் நோய்ப் பரவலைத் தடுக்கும் என்று கூறவேண்டும்.
- தேசிய மக்காச் சோளம் விளைவிப்போர் கூட்டமைப்பு, பண்ணைப் பணியகம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், உள்ளூர் தூண்டல் தலைவர்களாக செயல்படுகிறார்கள்.
- அனைவர்க்கும் வேக்சின் கொண்டு சேர்க்கவும் தடுப்பூசி போடவும் CDC கோடிக் கணக்கில் செலவழிக்கிறது.
- பிடேன் நிர்வாகம் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தூண்டும் விளம்பர பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி இருக்கின்றன என்கிறது KFF வாக்கெடுப்பு. முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவர்கள் இறங்கி வராவிட்டாலும், குளிர் காலத்தை விட இப்போது அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்; நாட்டுப்புற அமெரிக்காவில், மக்களின் தயக்கம் இன்னும் முழுதாக நீங்கவில்லை என்றாலும், இப்போது பாதிக்கும் மேலானோர் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் அல்லது போட்டுக் கொள்ள உத்தேசித்திருப்பவர்கள் என்கிறது அதன் அறிக்கை.
மிஸ்ஸுரி மாகாண ரிப்லே கவுன்டியின் பொது நல நிர்வாகியான ஜேன் மொர்ரோவ், மக்களின் தடுப்பூசி-தயக்கம் மெதுவாக மாறி வருகிறது என்கிறார்.
முன்பு அவரிடம் முகக் கவசம் மட்டும் போட்டால் போதுமா என்றோ, கோவிட்-19-ன் கடுமையை ஊடகங்கள் மிகைப் படுத்துகின்றனவா என்றோ விசாரித்துக் கொண்டிருந்த கவுன்ட்டி மக்கள், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்கிறார்கள் என்கிறார். அவ்வாறு கேட்பவரிடம் “நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும். நான் வற்புறுத்த மாட்டேன்” என்று சொல்லிவிடுகிறார். அவரிடம் வேக்சினால் என்ன பலன் என்று கேட்டறிந்த சிலரை உடனே கால வரையீட்டுக்கு (scheduling) இணங்க வைத்து விடுகிறார்.
சுட்டி :
The Atlantic: Rural Americans Are Much Less Likely to Get a Vaccine.
(மூலம்: தி அட்லாண்டிக், 14-04-2021 இதழ்
கட்டுரை ஆசிரியர்: Elaine Godfrey, Staff Writer, The Atlantic)
தமிழில் குறிப்பு: கோரா
***
2 Replies to “தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் நாட்டுப்புற அமெரிக்கர்கள்”