டால்கம் பவுடர்

This entry is part 23 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

என்னுடைய கல்லூரி நாள்களில் சென்னைப் புறநகர் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். இந்தப் பயணத்தின் சில விஷயங்கள் இன்னும் ஞாபகத்தில் உள்ளது. இதில் முக்கியமான ஒன்று, பல்லாவரம் ஸ்டேஷனைத் தாண்டினால் இந்த ரயில் பயணத்தில் நாம் அனுபவிக்கும் நறுமணம். உடனே, அட பாண்ட்ஸ் வந்துவிட்டது என்று பயணிகளுக்கு நன்றாகத் தெரிந்துவிடும். தாம்பரம்வரை பயணம் செய்பவர்கள், இந்த நறுமணத்தை வைத்தே தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவார்கள்! அந்த நாள்களில், பாண்ட்ஸ் நிறுவனத்தை யுனிலீவர் வாங்கியிருக்கவில்லை. குரோம்பேட்டை வந்தாலே, மாட்டுத் தோலைப் பதம்படுத்தும் தொழிற்சாலைகளின் நாற்றம். ஆக, சைதாபேட்டையிலிருந்து தாம்பரம்வரை பயணத்தில் வரும் ஒரே நறுமண விஷயம் டால்கம் பவுடர் தயாரித்த பாண்ட்ஸ் தொழிற்சாலை.

மும்பை நகரில் உள்ள மூலண்ட் புறநகர் பகுதியில், இன்றும் காலை நேரங்களில், அங்கு வசிப்பவர்கள் ஜான்ஸன் தோட்டத்திற்குச் சென்று நடப்பதும் உடற்பயிற்சி செய்வதும் வழக்கம். சுற்றியுள்ள சமூகத்திற்கு இந்த அழகிய தோட்டத்தை நன்கொடையாக வழங்கிப் பராமரிப்பது ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனம்.

இந்த இரு உதாரணங்களும் இந்தக் கட்டுரைத் தொடருக்குச் சம்பந்தம் இல்லாதவைபோலத் தோன்றலாம்.

சம்மந்தம் இருக்கிறது.

வாசமான பல்லாவரம், தோட்டமான மூலண்ட் இரண்டிற்கும் உள்ள தொடர்பு, டால்கம் பவுடர். இன்று, டால்கம் பவுடர் புற்றுநோயைப் பெண்களுக்கு உருவாக்கும் என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும், டால்கம் பவுடர் தயாரிப்பிலிருந்து பின்வாங்கியுள்ளன. சில பல ஆயிரம் கோடிகள் லாபத்திற்குப்பின்.

முதலில், வழக்கம்போல விஞ்ஞானம்.

டால்க் (talc) என்பது மெக்னிஷியம் சிலிகேட் கலந்த களிமண்ணாக இயற்கையில் கிடைக்கிறது. (அட, களிமண்ணையா முகத்தில் இத்தனை நாள் பூசி அழகுபார்த்தோம்?) அத்துடன், சோளப் பொடியையும் கலந்து டால்க் உருவாகிறது. இது வெறும் முகப்பூச்சுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளன்று. இந்த டால்கை வண்ணப்பூச்சு (paints), பீங்கான் (ceramic), மசகு (lubricant) மற்றும் வீட்டுக் கூரை போன்ற பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ஒரு பொருள், தொழிற்சாலைகளில் மிகப் பயனுள்ள ஒரு பொருள் என்று சொல்லலாம். இயற்கையில் கிடைக்கும் கனிமங்களின் கடினத் தன்மைக்கு, மோஸ் அளவு (Mohs scale) என்ற ஒன்று உள்ளது. இது 1 முதல் 10 வரையிலான அளவு. 10 என்பது மிகவும் கரடுமுரடான அளவு.

இருப்பதிலேயே, மிகவும் மிருதுவான கனிமத்திற்கு மோஸ் அளவு 1. டால்க் என்பது மோஸ் அளவு 1–ஐச் சேர்ந்தது. நீரில் கரையாத தன்மைகொண்டது. அமெரிக்க மேற்குப் பகுதிகள், இத்தாலிய ஆல்ப்ஸ் மற்றும் இமாலயப் பகுதிகளில் இந்தக் கனிமம் கிடைக்கிறது. புவியியல் வகுப்பெடுக்க இதைச் சொல்லவில்லை – நாம் சொன்ன பகுதிகளில், இந்தக் கனிமத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் உருவானது உங்களுக்கு வியப்பளிக்காது என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரைத் தொடரில், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளும் அதனால் உருவாகும் புற்றுநோய் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். ஆஸ்பெஸ்டாஸ் போன்ற ஒரு கனிமம்தான் டால்க். ஆஸ்பெஸ்டாஸை ஆராயத்தொடங்கிய சில விஞ்ஞானிகளின் சந்தேகப் பார்வை, டால்கின்மீதும் விழுந்தது. அதே உள்ளமைப்புக்கொண்ட இன்னொரு கனிமம், எப்படி மனித உடல் நலத்திற்கு நல்லது செய்யும் என்ற சந்தேகம் நியாயமான ஒன்றே.

புற்றுநோய் ஆராய்ச்சியில் ஓர் அங்கம், பெண்களின் முட்டையகப் புற்றுநோய். (Ovarian cancer.) 1970–களில் முட்டையகப் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள், டால்க்கிற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை விஞ்ஞான உலகின்முன் பரீசலனைக்கு வைத்தனர். இது சற்று ஓவராக இருப்பதுபோலத் தோன்றலாம். இந்த விஞ்ஞான ஆராய்ச்சியை விளக்குவதற்குமுன், சில விஷயங்களை இங்கே சொல்லுவது முக்கியம். விஞ்ஞானத்தில் சும்மாவாவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுதல் முடியாத காரியம்.

சற்று நுட்பமான விஷயமாக இருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் பெண்களின் பிறப்புறுப்புகள் சார்ந்த விஷயங்களை இங்கு வாசகர்கள்முன் வைப்பது அவசியமாக உள்ளது.

  • பெண்கள், தங்களது பிறப்புறுப்புகளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவது வழக்கம். உடலிலிருந்து வெளியாகும் வேர்வையைக் குறைக்கவும் இதைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள். மேலும், கால் பகுதிகள் உராய்வினால் சில பெண்களுக்குப் புண்ணாகவும் வாய்ப்பு உண்டு. இந்தக் காரணங்களால், பெண்கள் டால்க் பவுடரைப் பயன்படுத்திவந்தார்கள். இன்றும் செய்கிறார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கான டால்க் பவுடர் மிகவும் பாதுகாப்பானது என்ற எண்ணம், 100 வருடங்களாகப் பெண்கள் நம்பும் ஒரு விஷயம். இதனால், தங்களது பிறப்புறுப்புக்களில் குழந்தைகளுக்கான டால்க் பவுடரைப் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
  • பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள், மற்ற கருத்தடைக் கருவிகள் வழியாகப் பிறப்புறுப்புகளில் போடப்படும் டால்கம் பவுடர், முட்டைப்பைக் குழாய் (fallopian tube) வழியாக முட்டைப்பையை அடைந்துவிடுகிறது. இது எல்லாப் பெண்களையும் பாதிக்காவிட்டாலும், பல பெண்களை பாதித்துள்ளது.
  • இவ்வாறு முட்டையகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், அதிகமாக டால்கம் பவுடரைப் பயன்படுத்துவதே சந்தேகத்திற்கு வழிவகுத்தது.
  • சந்தேகம் விஞ்ஞானமாகாது. சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதே விஞ்ஞானம். 1981–ல் நடந்த ஒரு விஞ்ஞான ஆய்வில், பெண்கள் நாப்கின்களில் டால்கம் பவுடரைப் பயன்படுத்தினால், முட்டையகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று ஒரு விஞ்ஞான அறிக்கையை க்ரேமர் மற்றும் குழுவினர் வெளியிட்டனர்.
  • இதனால், சந்தேகம் வலுத்தது என்று மட்டுமே சொல்லலாம். 1989–ல் ஹார்லோ என்ற விஞ்ஞானி, 1981 அறிக்கையை ஊர்ஜிதப்படுத்தினார். முட்டையகக் கட்டிகள் வந்த பெண்களை ஆராய்ந்ததில், டால்கம் பவுடர் மற்றும் நாற்றங்கொல்லிகளைப் (deodorizer) பயன்படுத்தும் பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட 2.8 முறை அதிகம் கட்டிவர வாய்ப்புண்டு என்று தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார்.
  • 1992–ல் மிகவும் மதிக்கத்தக்க, மகப்பேறியல் விஞ்ஞான வெளியீடு (journal of gynecology), டால்கம் பவுடரைப் பிறப்புறுப்புக்களில் தூவிக்கொள்ளும் பெண்களுக்கு முட்டையகப் புற்றுநோய் வர, மற்ற பெண்களைவிட, மூன்று மடங்கு சாத்தியம் என்று மீண்டும் விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி வெளியிட்டது.
  • 1990–களில், இவ்வகை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்த வண்ணம் இருந்தன. 2003-ல் 12,000 பெண்கள் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு அதே முடிவிற்கு வந்தது. அதாவது, டால்கம் பவுடர் பயன்படுத்தும் பெண்களுக்கு முட்டையகப் புற்றுநோய் வர மற்ற பெண்களைவிட மூன்று மடங்கு சாத்தியம் என்பதே அந்த முடிவு.
  • இந்த நிலையில், விஞ்ஞானிகள் மத்தியில் சந்தேகம் விலகி, முக்கிய விஞ்ஞான முடிவை நோக்கிப் பயணம் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.
  • 2008–ல், டாக்டர் மார்கரெட் கேட்ஸ் என்னும் விஞ்ஞானி, அதுவரை விஞ்ஞானிகள் சொல்லிவந்ததைச் சொல்லியதோடு, ஜான்ஸன் & ஜான்ஸன் தயாரிக்கும் Shower to Shower என்ற டால்கம் பவுடர், இந்தச் சாத்தியத்தை 41% அதிகரிக்கிறது என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்.
  • 2015–ல் வெளியிடப்பட்ட விஞ்ஞானக் கட்டுரை, இந்த சாத்தியக்கூறை 30 முதல் 60% என்று சொல்லியது. அமெரிக்கக் கருப்பினப் பெண்களை ஆராய்ந்ததில், டால்கம் பவுடர் பயன்படுத்துவதால் முட்டையகப் புற்றுநோய் வர வாய்ப்பு 44% என்று அறிவித்தது.

முட்டையகப் புற்றுநோய் வந்தால், பெண்களின் முடி கொட்டிவிடும். மேலும் கதிரியக்கச் சிகிச்சையால் பலவகை அவதிகளையும் புற்றுநோய் நோயாளிகளுக்கே உரிய பிரச்னைகளையும் சந்திக்கவேண்டி வந்தது. சில பெண்கள் உயிரையும் இழந்துவிடுகின்றனர்.

இவ்வாறு மிகவும் அவதிப்பட்ட பெண் ஒருவர், ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்தை நீதிமன்றத்திற்கு இழுத்து, மற்ற பெண்களைக் காப்பதற்காக முயற்சித்தார்.

அவரது முயற்சி என்னவாயிற்று? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Series Navigation<< விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்டால்கம் பவுடர் – பகுதி 2 >>

One Reply to “டால்கம் பவுடர்”

  1. சொல்வனத்தின் இந்த அறிவியல் சார்ந்த பதிவு வகைகள் வேறு எந்தச் சிற்றிதழிலும் காணக் கிடைக்காதவை. உங்கள் கட்டுரைகளுக்கு வாழ்த்துக்களும் , நன்றியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.