காகித மலர் – ழ்ஜான் பாரெ

லோகமாதேவி

ழ்ஜான் பாரெ[1]

இன்றிலிருந்து ஏறத்தாழ  250 வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 1, 1766 அன்று  பாரிஸின்  ரோஷ்ஃபோர் துறைமுகத்திலிருந்து பூடேஸ் என்னும் கடற்படை கப்பலும்[2] அதற்கு தேவையான எரிபொருள்கள் மற்றும் உணவுகளுடன் இன்னொமொரு சிறிய கப்பலான இட்வாலும்[3]  இணைந்து  ஒரு புதிய தேடல் பயணத்தை துவங்கின.

102 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்ட இட்வால், 480 டன் எடை கொள்ளும்; எட்டு அதிகாரிகள் மற்றும் 108 பணியாளர்கள் அதிலிருந்தனர்.

பூடேஸ் மிக உயரமான பெரிய  விரைவுக் கப்பல், அதை துறைமுகங்களில் நிறுத்துகையில்,  கட்டிவைக்கவே  25 மைல்களுக்கு மேல் கயிறு தேவைப்பட்டது. 

அப்போது ஃப்ரான்ஸின் கடற்படை கப்பல் பயணங்களில் பெண்கள் பயணிக்க சட்டப்படி தடை இருந்ததால், இரண்டு கப்பல்களிலும் சேர்த்து  400 ஆண்கள் மட்டும் இருந்தனர். .இந்த பயணத்தின் தளபதி , ஒரு சிறந்த விஞ்ஞானி, கணிதவியலாளர், சிப்பாய், மீகாமன், இராஜதந்திரி மற்றும் ஃப்ரான்ஸின் அரசரான பதினைந்தாம் லூயியின் நண்பருமான ’’லூயி ஆன்ட்வான் டு பூகென்வீயெல.’’[4]

 “இண்டீஸ் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைகளுக்கு இடையில் உள்ள நிலங்களை‘ ஆராயுங்கள், நமது சேகரிப்புக்களும் கண்டுபிடிப்புகளும்  மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும்  மேலும் ஃப்ரான்சுக்கு பயனுள்ளதாக இருக்கும் எதையும் கையகப்படுத்த வேண்டும்,’’  இதுவே பூகென்வீல்ல கப்பல் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பயணத்தின் துவக்கத்தில் சொன்னது.

இந்த பயணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, (1756─1763) ல் நடந்த பிரெஞ்சு-(அமெரிக்க)இந்தியப் போரில், ஃப்ரான்ஸ் வட அமெரிக்காவில் தனது நிலப்பரப்பை இழந்திருந்தது. இங்கிலாந்துடன் நடந்த போர்களின் போது இழந்த பெருமைகளை மீண்டும் பெற  விரும்பிய ஃப்ரான்ஸ், உலகெங்கிலும் பயணம் செய்வதற்காகத் துவக்கிய பல கடற்பயணங்களில் இதுவே முதலாவது. தென் பசிஃபிக் பகுதியில் காலனித்துவ புறக்காவல் நிலையங்களை நிறுவுவதும் இப்பயணத்தின் ஒரு ரகசிய குறிக்கோளாக இருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கடல் பயணங்களை மேற்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானதாகவே இருந்தது.  சென்று சேரவேண்டிய இடத்தை அடைவதில்  நிலவிய  நிச்சயமற்ற தன்மையும், உணவுப் பற்றாக்குறை, விபத்து, நோய் மற்றும் கடல்கொள்ளை ஆகியவற்றின் அச்சுறுத்தல்களும்  எப்போதும் இருந்தன.

13ஆம் நூற்றாண்டில் இருந்துதான் புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடல்சார்வியல், வானிலை ஆய்வு ஆகியவற்றிற்கான முன்னெடுப்புக்களுக்காகக் கடற்பயணங்கள்  அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டன.

அறிவியல் ஆய்வின் புதிய சகாப்தம் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான்  தொடங்கியது,  அறிவியல் சங்கங்களை நிறுவி, இயற்கை வரலாற்றாசிரியர்கள்,  பத்திரிகைகளில் வெளியிட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள்  பெரும் புகழை பெறத் துவங்கியிருந்த காலமும் அதுதான். என்வே உலகின் ஆராயப்படாத பகுதிகளின் தாவரங்களையும் விலங்குகளையும் கண்டுபிடித்து ஆய்வு செய்ய பிற நாடுகளைப் போலவே  ஃப்ரான்ஸும் விழைந்தது.

பயணத்தின் மற்றொரு குறிக்கோள், ஃப்ரெஞ்சு தோட்டங்களுக்கான உணவுப் பயிர்கள், மருந்துகள் மற்றும் அழகிய மலர்ச்செடிகளை கண்டுபிடிப்பதாகும். ஏனெனில் தோட்டக்கலை அப்போது வெகு பிரபலமாக இருந்தது.

இந்த கப்பல் பயணத்துக்குச் சில மாதங்கள் முன்பாக, ஃப்ரான்ஸில் பூங்காவொன்றின் பசுமை போர்த்தியிருந்த  நடைபாதையில் ஓங்குதாங்கான ஆகிருதியுடனிருந்த  தாவரவியலாளர் ஃபிலிபேர் கம்மர்சனிடம்[5] அவரது உதவியாளரா[6]ன ஒல்லியான உயரமான  ‘பாரெ’ ஆயிரமாவது முறையாக கேட்டார் ‘’நீங்கள் உறுதியாகத்தான் சொல்லுகிறீர்களா? பிடிபட்டால் இருவருமே சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருக்கிறீர்களா?’’

கம்மர்சன் பதிலுக்கு, ’’இல்லை, பிடிபட வாய்ப்பேயில்லை உன்னால் இதை திறம்பட செய்ய முடியும் எனக்ககாக செய்ய மாட்டாயா இதை?” என்றார். பாரெடிடமிருந்து சிறிதும் தயக்கமின்றி பதில் வந்தது’’ நிச்சயம், உங்களுக்காக நான் எதையும் செய்வேன்.’’

பின்னர் சில நாட்களிலேயே  கம்மர்சன் பாரெடிடம், “பிரெஞ்சு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தாவரவியலாளர்கள் என்ற வகையில், என்னுடையதுடன், உன் பெயரையும் உலகெங்கிலும் செல்லப்போகும் ஒரு பயணத்துடன் இணைத்திருக்கிறேன்,”  என்றார்

“புகழ்பெற்ற லூயி ஆண்ட்வான் டி பூகென்வீல்லயின் தலைமையில் ஒரு பயணம்,” என்ற பாரெ புன்னகையுடன் கூறினார, “நிச்சயமாக  எனக்கிது ஒரு பெரிய மரியாதை, அத்தகைய பெரிய அட்மிரல் மற்றும் ஆராய்ச்சியாளருடன் இணைந்திருப்பதும், உங்களுடன் பயணிப்பதும்.”

ரோஷ்ஃபோர் துறைமுகத்தில் பூகென்வீல்லயின் தலைமையிலான தேடல் பயணத்தில் பாரெ மற்றும் கம்மர்சன் இணைந்தனர். கம்மர்சன் முதலிலும், கப்பல் புறப்படுவதற்கு சற்று முன்னர் கம்மர்சனுக்கு அறிமுகமற்றவர் போல பாரெடும் வந்து, அவருக்கு அந்தப் பயணத்தில் உதவியாளனாக இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டு பயணத்தில் இணைந்தார்.

அவர்கள்  இருவரும்  இட்வாலில் பயணம் செய்யும்படி ஏற்பாடானது. ஏனெனில், கம்மர்சன் கொண்டு வந்திருந்த   தாவரங்களை சேகரிக்கவும், உலரவைத்து பாடமாக்கவுமான ஏராளமான உபகரணங்கள் காரணம். இட்வால் கப்பலின் கேப்டன் ’ஃப்ரான்சுவா செனார்ட் டி லா கிராடாய்ஸ்’, கப்பலில் தனக்கான  கழிப்பறையுடன் இணைந்திருந்த பெரிய அறையை கம்மர்சன் மற்றும் அவரது புதிய “உதவியாளருக்கு” விட்டுக் கொடுத்தார்.

முதல் சில மாதப்  பயணத்தில் சொல்லிக்கொள்ளும்படியான சேகரிப்புக்களும், கண்டுபிடிப்புகளும் இன்றி பயணம் சாதாரணமாகவே இருந்தது, வழியில் பல இடங்களில் கப்பல் கரையணைந்து கொண்டே இருந்தது.

கப்பல் கரை சேரும்போதெல்லாம், நிலப்பரப்பில் கம்மர்சனும், பிற பயணிகளும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு பாரெ துணிந்து சென்றார். அவர்களால் சுமக்க முடியாத பல சுமைகளை  எளிதாக அவர் எடுத்துச் சென்றார். கம்மர்சனுக்கு தேவையான அனைத்தையும் முன்னின்று அதிக அக்கறையுடன் செய்துவந்தார். பெரும்பாலான  கரையணைதல்களில்,  நோய்வாய்ப்பட்டிருந்த கம்மர்சனை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாரெ தானே தாவரங்களை ஆராய்ந்து, குறிப்பெடுத்து,  அவற்றை   உலர்த்தி, பாடமாக்கி, சேகரிப்பதைச் செய்தார்.

கப்பல் ரியோ த ஹனைரோ[7] சென்றபோது, அங்கிருந்த கடுமையான வன்முறை நிறைந்த சூழலில் இட்வால் கப்பலின் பாதிரி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அப்படியும் பாரெ அங்கிருந்து  முக்கியமான பல நூறு தாவரங்களை சேகரித்தார்

ஜூன் 21, 1767 இல்  தென் அமெரிக்காவின் ரியோ த ஹனைரோவின் எல்லையில் உள்ள கடற்கரையில், கம்மர்சன்  காலில் இருந்த ஆறாக்காயத்திற்கான பெரிய கட்டுடன் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கடலை ஒட்டி வளர்ந்திருந்த  புதிய பல தாவரங்களை  கத்தரித்து மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டிருந்த அழுத்தும் கருவிகளில் வைத்து பாதுகாத்து கொண்டிருந்த பாரெயைப் பார்த்துக்கொண்டிருந்தார்

திடீரென பாரெ  ஒரு கொடியை துண்டித்து கொண்டு வந்து உற்சாகமாய் ’’இங்கே பாருங்கள், இது எத்தனை அழகு,’’ என்று கூவினார்,

பாரெ கொண்டு வந்த பளபளக்கும் இலைகளை கொண்டிருந்த  நீண்ட உறுதியான  கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.

’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract)  எனப்படும் மலரடிச் செதில்கள், உள்ளே சிறிய குச்சிகளைப் போல வெண்ணிறத்தில் இவற்றால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள்,‘’ என்றார் பாரெ.

மாணவப் பருவத்தில் பேராசிரியர்கள் உரையாற்றும் போதே குறுக்கிட்டு, பிழைகளை சுட்டிக்காட்டும் அறிவும் துணிவும் கொண்டிருந்த, பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த கம்மர்சனை, அனுபவ அறிவால் பாரெ விஞ்சி நின்ற பல தருணங்களில் அதுவும் ஒன்று. வியந்து போய் ‘’ ஆம் உண்மைதான்,’’ என்ற கம்மர்சன்,  ’’இந்த புதிய தாவரத்திற்கு என்ன பெயரிடலாம்’’  என்ற போது சற்றும் தயக்கமின்றி ’’தேடல் குழுவின் தலைவரின் பெயரைத்தானே வைக்கவெண்டும்,’’ என்றார் பாரெ.

அப்படியே அந்த புதிய தாவரத்திற்கு  பூகென்வீலியா ப்ராஸிலியன்ஸிஸ்[8]. (இப்போது பூகென்வீலியா ஸ்பெக்டாபிலிஸ்)[9] என்று பெயரிடப்பட்டது.  ”இதை கண்டறிந்தவராக  நீங்களும் உலகெங்கிலும் அறியப்படுவீர்கள்,” என்ற பாரெடிடம்,  “இல்லை அன்பே, இதை நீயல்லவா கண்டறிந்தாய்? எனது கண்டுபிடிப்புகள் என இவ்வுலகம் இனி சொல்லப் போவதெல்லாம் நீ கண்டுபிடித்தவை தானே?’’  என்றார் துயருடன்.

தன் அடையாளத்தை மறைத்து ஆணென வேடமிட்டு அந்த கப்பலில் பயணித்த ழ்ஜான் பாரெ,  கம்மர்சனின் உதவியாளரும் காதலியுமாவார்.  திருமணம் செய்துகொண்டிருக்கவில்லையெனினும் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்தான், ஆனால் ஒரு வருடத்துக்குள் இறந்து போனான்.

கப்பல் புறப்பட்ட சில நாட்களிலேயே பாரெடைக் குறித்த பல சந்தேகங்களும் வதந்திகளும் உலவத்துவங்கியது. அவரின் மெல்லிய குரல், மீசையில்லா  முகம்,  மொழு மொழுவென்றிருந்த மோவாய், மறந்தும் பிறர் முன்னிலையில் உடைகளை மாற்றாதது, எப்போதும் கம்மர்சனின் அறையிலே தங்கியது என பற்பல விதங்களில் அவர் மீதான் சந்தேகங்களையும், புகார்களையும் பிற பயணிகளும், பணியாளர்களும்   குழுத்தலைவர் பூகென்வீல்லயிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பூகென்வீல்லயோ அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாரெடின் துணிவையும் தாவர அறிவியலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் கடின உழைப்பையும் அவரது முக்கிய சேகரிப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் வியந்து பாராட்டியவாறிருந்தார்.

கம்மர்சனும் அந்த புகார்களில்  தனக்கு ஆர்வம் இல்லாதது போலவே காட்டிக்கொண்டார்

1767, ஏப்ரலில் தஹிடி  தீவில் கப்பல் கரையணைந்த போது பாரெடும்[1] , [2] ம்மர்சனும் இறங்கி தீவுக்கு வந்தனர். அப்போது வழக்கத்திலிருந்தது போல ஆண் பயணிகளை நோக்கி ஓடிவந்த தீவுப்பெண்கள் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கையில் ஆண் வேடத்திலிருந்த பாரெடை நோக்கிய தீவின் ஆண்கள் வியப்புடன் ’’ஆ, ஒரு பெண் கப்பலில் வந்திருக்கிறார்,’’ என்றபடியே கூவிக்கொண்டு பெண்கள் தீவுக்கு வருகை தருகையில் செய்யப்படும் மரியாதைகளை செய்யத்  தொடங்கியபோதுதான்  பாரெடின்[3]  குட்டு வெளிப்பட்டது. கண்ணீருடன் தலைகுனிந்து நின்றிருந்த பாரெடை[4]  பூகென்வீல்ல மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்.திரும்ப கப்பலுக்கு வரவழைக்கப் பட்ட பாரெடைப்[5]  பல வகையிலும் பிற பயணிகள் சித்ரவதை செய்ய முயன்றனர். அவரின் ஆடைகளை உருவவும் பல முறை முயற்சிகள் நடந்தன.

அடுத்துக் கரைசேர்ந்த நியூ அயர்லாந்தில் (இன்றைய பாபுவா நியூ கினி),  இது குறித்து விசாரணை நடந்தது.  பூகென்வீல்ல தன் முன் அப்போதும் ஆண் உடையில் நின்றிருந்த பாரெடிடம்[6]  ’’எப்படி பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் கப்பல் பயணத்தை நீ அடையாளத்தை மறைத்து மேற்கொள்ளலாம்?’’ என்று வினவினார்

’’உடல்நலிவுற்றிருந்த  கம்மர்சனுக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டது, எனக்கும் தாவரங்களுக்கான தேடலே  வாழ்வின் ஆகச்சிறந்த கனவென்பதால் இதற்கு துணிந்தேன்,’’ என்றார் பாரெ. உண்மையில் பூகென்வீல்லவுக்கு பாரெ எப்படி அத்தனை காலம் அந்த கப்பலில் தாக்குப்பிடித்தார்  என்பதே அதிசயமாக இருந்தது. தான் பல தொல்லைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அவற்றை சகித்து கொண்டதாகவும்,  எல்லை மீறிப்போகையில்  உதவிக்காக ஒரு கைத்துப்பாக்கியையும் வைத்திருந்ததையும்  பாரெ அப்போது தெரியப்படுத்தினார்.

’’ஏன் இத்தனை ஆபத்துக்களை சந்தித்து இந்த பயணத்தில்  இணைந்தாய்?” என்ற கேள்விக்கு, ’’ஏன் செய்யக்கூடாது? என்றே பதில் கேள்வி கேட்ட பாரெ, ’’ஒரு பெண் அறிவியலில் ஆர்வம் கொள்ளக்கூடாதா,  ஆய்வுகள் செய்யக்கூடாதா புதியவற்றைக் கண்டுபிடிக்க கூடாதா, ஆண்கள்தான் இவற்றையெல்லாம்  செய்ய முடியும் என்பதற்கு  மாற்றாக இனி என்னை இவ்வுலகம் எடுத்துக்காட்டாக சொல்லட்டுமே,’’ என்றார்.

பூகென்வீல்லவுக்கு  தாவரங்களின் தேடலுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து கடற் பயணத்தை மேற்கொண்ட பா[7] ரெ மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது. ழ்ஜானுக்கு தண்டனை ஏதும் தரகூடாதென்றே அவர் பரிந்துரைத்தார்.

18 மாதங்கள் அந்த கப்பலில் தனது மார்பகங்கள் வெளியே தெரிந்துவிடாமலிருக்க  பட்டையான லினென் துணிகளால் இறுக்க கட்டிக்கொண்டு, ஆண்கள்  தூக்கும் எடையை காட்டிலும் அதிக எடையைச் சுமந்தபடி பனியிலும், வெயிலும், மழையிலும், கல்லிலும், முள்ளிலும் அலைந்து பல்லாயிரக்கணக்கான புதிய பல தாவரங்களை கண்டுபிடித்த ழ்ஜான் பாரெக்கு அப்பயணம் துவங்கியபோது 26 வயதுதான்.

ழ்ஜான் பாரெ ஜூலை 27, 1740 அன்று ஃப்ரான்சின் பர்கண்டி ஃப்ராந்தியத்தில் ’லா காமெல்’ கிராமத்தில் பிறந்தார்[10]. ஞானஸ்நானம் குறித்த அவரது பதிவில்  ஜீன் பாரெ மற்றும் ஜீன் போச்சார்ட் ஆகியோரின் மகளென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்றரை வயதில் தாயையும் 15 வயதில் தந்தையையும் இழந்த ழ்ஜான் கல்வி பெறவில்லை என்பதை அவரது தந்தையின் இறப்பு சான்றிதழில் அவரது கையெழுத்து இல்லாததை வைத்து முடிவு செய்யும் வரலாற்றாய்வாளர்கள், பின்னர்  கம்மர்சனே ஜேனுக்கு கல்வியளித்திருக்கலாமென்றும் யூகிக்கின்றனர். எளிய விவசாய குடும்பத்தில்  கல்வியறிவற்ற பெற்றோருக்கு மகளாக பிறந்த ழ்ஜான் அதற்கு முன்பு தனது ஊரிலிருந்து 20 மைலுக்கு மேல் வெளியே பயணித்ததில்லை.

பிரசவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்துவிட்டு  மனைவி இறந்து போன பின்னர், அடிக்கடி உடல் நலிவுற்றுக் கொண்டிருந்த  தாவரவியலாளர் கம்மர்சனுக்கு உதவியாளரான ழ்ஜான் குறுகிய காலத்திலேயே, தனது தாவர வகைப்பாட்டியல் ஆர்வத்தினால், அவரின் காதலியுமாகி ஒரு மகனுக்கும் தாயாகியிருந்தார்.. பாரிஸிலிருந்து கப்பல் புறப்படுமுன்பே கம்மர்சன் தனது முக்கிய சொத்துக்களை ழ்ஜானின் பெயருக்கு உயிலெழுதியும் வைத்து விட்டிருந்தார். கம்மர்சனுக்கும் ழ்ஜானுக்கும் பிறந்த மகன் அப்போதே வளர்ப்புத் தாயிடம் கொடுக்கப்பட்டவன், ஒரு வயதாகுமுன் இறந்து போனான். திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை, அன்றைய ஃப்ரான்ஸில் மோசமானது.

விவசாய பின்னணி கொண்டவராதலால் ழ்ஜானுக்கு கம்மர்சனிடம் உதவியாளராக சேரும் முன்பே ஏராளமான மூலிகைகள், பிற தாவரங்கள் குறித்த நல்ல அனுபவ அறிவிருந்தது. நோயாளியான கம்மர்சனின் மீதிருந்த அன்புக்கு இணையாக தாவரங்கள் மீதும் அன்பு கொண்டிருந்ததால் அவரை இப்பயணத்தில் பிரிய முடியாத ழ்ஜானும் கம்மர்சனுமாகப்[8]  போட்ட இந்த திட்டத்தால் தான் அந்த பயணம் சாத்தியமானது,  அந்த சாகசப் பயணத்தில் இருந்து கிடைத்ததுதான் உலகெங்கிலும்[9]  காணப்படும் பல வண்ண பிரகாசமான மலர்களுடன் கூடிய  அலங்கார செடியான தமிழில் காகிதப்பூச்செடி என அழைக்கப்படும் பூகென்வீலியா.

அங்கிருந்து மொரிஷியசுக்கு சென்ற கப்பல்களிரண்டும் காற்று திசை மாறும் பொருட்டு  நீண்ட நாட்கள் அங்கு காத்திருக்க  வேண்டியிருந்தது. மொரிஷியசில்  கவர்னராக இருந்த, தாவரவியலாளர் பியரி கம்மர்சனின் நெருங்கிய நண்பராதலால்,  அவரும் ழ்ஜானும் தேடல் குழுவில் இருந்து விலகி மொரீஷியசில் தங்குவதாக தீர்மானித்தனர். மொரிஷியஸ் தாவரவியல் பூங்காவின் பொறுப்பை கம்மர்சன் ஏற்றுக்கொண்டார்.

பூகென்வீல்லயும்  இதற்கு சம்மதித்ததால் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு இரண்டு கப்பல்களும் மொரிஷியஸை விட்டு புறப்பட்டன. அதன் பின்னர் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் சிக்கல்களை சந்தித்த கப்பல்களிரண்டிலும் எலிகளும் காவல் நாய்களும் கூட உணவாக்கப்பட்டன, பலர் நோயால் இறந்து போனார்கள். பல சோதனைகளை கடந்து  உயிருடன் இருந்த  பிற பயணிகளுடன் கப்பல்கள் இரண்டும் தட்டுத்தடுமாறி டச்சு ஈஸ்ட் இண்டீஸில்  1769ல்  கரைசேர்ந்து அந்த தேடல் பயணத்தை நிறைவு செய்தன.

மொரிஷியஸில் இருந்து கம்மர்சனுடன் 1770–1772-ல் மடகாஸ்கருக்கும், இன்னும் சில தீவுகளுக்கும் சென்ற ழ்ஜான்மேலும் பல புதிய தாவரங்களைக் கண்டறிந்தார். 1772 வாக்கில் உடல்நிலை மேலும் நலிவுற்று  மார்ச் 1773 இல்  தனது நாற்பத்தைந்தாவது வயதில், அந்த பயணத்தின் கண்டறிதல்களை வெளியிடாமலேயே கம்மர்சன்  இறந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு ழ்ஜான் மொரிஷியஸில் ஒரு மதுபான விடுதி நடத்தினார்.  1774 ஜனவரி 27 ஆம் தேதி, முன்னாள் ஃப்ரான்ஸ் இராணுவ சார்ஜென்ட் ஜீன் டு பெர்னாட்டை மணந்து, அவருடன் ஃப்ரான்சுக்கு திரும்பினார், 22 மாதங்கள் கடற் பயணத்தில் 6000 தாவரங்கள் உள்ளிட்ட  ழ்ஜான் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளின் பொருட்டு, பூகென்வீல்லயின் பெருமுயற்சியால்  அந்த பயணத்திற்குப் பத்து வருடங்கள் கழித்து அவருக்கு ஃப்ரான்ஸ்  கடற்படை அமைச்சகத்திலிருந்து   ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றது. முதன் முதலாக தனது கண்டுபிடிப்புக்களுக்கு அரசு ஒய்வூதியம் பெற்ற பெண்ணும் ழ்ஜான்தான்.

கடற்பயணத்தில்  உலகை முதன் முதலில் சுற்றி வந்த பெருமைக்குரிய தாவரவியலாளர் ழ்ஜான் பாரெ  1807 ஆகஸ்ட் 5 அன்று  தனது 67 ஆவது வயதில்  இறந்தார்.

ழ்ஜான் பாரேயின் சாகசப் பயணம் குறித்து உலகம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. கம்மர்சனின் நாட்குறிப்புக்கள்  மற்றும் இட்வாலின்மருத்துவரான ஃப்ரான்சுவா வீவ்[11] எழுதியிருந்த  குறிப்புகள் பெருமளவில் அவரைக்[10]  குறித்து தெரிவித்தன.  பூகென்வீல்லயின் பயணத்தில் கலந்து கொண்டிருந்த   நாசாவ்-சீகனின் இளவரசர், பாரெடின் சாதனைகளைக் குறிப்பிட்டு. “அவளுடைய துணிச்சலுக்கான அனைத்துப் பெருமைகளையும் நான் அவளுக்கு கொடுக்க விரும்புகிறேன்,” என்று தனது நினைவுக் குறிப்புகளில் எழுதினார்.மேலும்  “அத்தகைய பயணத்தில் ஒருவர் நிச்சயமாக எதிர்பார்க்கக்கூடிய மன அழுத்தம், ஆபத்துகள் மற்றும் நடந்த அனைத்தையும் எதிர்கொள்ள அவள் துணிந்தாள். அவளது சாகசம், பிரபலமான பெண்களின் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்போது கடற்பயணிகளின் உடையாக அறியப்பட்டிருந்த வரிக்கோடுகளிட்ட    உடையும் புரட்சியாளர்களுக்கான சிவப்பு தொப்பியும் கைகளில் தாவரங்களுமாக  இருக்கும் ழ்ஜானின் சித்திரம் கூட அவரைக்குறித்த வாய்வழிச்செய்திகளின் அடிப்படையில் அவரது மறைவுக்கு பின்னர் வரையப்பட்டதுதான்[11] ..

கம்மர்சனுடன் இணைந்து ழ்ஜான் பாரெ கண்டறிந்த  ஆயிரக்கணக்கான தென் அமெரிக்க தாவரங்கள் உலர் தாவரங்களாக (Herbaria) இன்றும் ஃப்ரான்ஸ் அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக இருக்கின்றன.

1789 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஏ.எல். டி ஜூஸ்ஸோவின்  புகழ்பெற்ற ஜெனிரா பிளாண்டேரியத்தில், பூகென்வீல்லா பட்டியலிடப்பட்டபோது,  “Buginvilla” என்று தவறுதலாக எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டது. 1930ல் க்யூ  ராயல் தாவரவியல் பூங்கா தொகுத்த புதிய தாவரங்களின் பட்டியல் வெளியாகி அது  சரி செய்யப்படும் வரை இந்த எழுத்துப்பிழை அப்படியே நிலைத்திருந்தது.

பூகென்வீலியாவின் இரண்டு இனங்கள் – பூகென்வீலியா. ஸ்பெக்டாபிலிஸ் மற்றும்  பூகென்வீலியா கிளாப்ரா – 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின. பின்னர்  யூரோப்பிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன; கியூ ராயல் தாவரவியல் பூங்காவிலிருந்து 1923 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்களின் பட்டியலில் பூகென்வீலியாவின் பெயரும் இருக்கிறது.

பூகென்வீலியா மேற்கு பிரேசிலிலிருந்து பெரு வரையிலும், தெற்கு ஆர்ஜென்டினாவையும் தென் அமெரிக்காவையும் தாயகமாகக் கொண்ட  பல்லாண்டு தாவரமாகும். நாலு மணிப்பூ எனப்படும் அந்திமந்தாரை, பவளமல்லி ஆகியவை அடங்கிய நைக்டஜினேசியே (Nyctaginaceae) குடும்பத்தை சேர்ந்த  பூகென்வீலியா 18 சிற்றினங்களை கொண்டது.  இப்போது 300க்கும் மேற்பட்ட உட்கலப்பு (inbreeding) வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. வளர்ந்த முதல் வருடத்திலிருந்து, மூன்று ஆண்டுகளில் மலர்களை அளிக்க துவங்கும், பூகென்வீலியா  வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடையது.

பசுமை மாறா பளபளப்பான இலைகளும், உறுதியான கொடித்தண்டும் கொக்கிகளை போன்ற கூர்முட்களையும் கொண்ட  பூகென்வீலியா கொடி 12-15 மீட்டர் நீளம் வரையிலும்  பற்றிப் படர்ந்து வளரும் இயல்புடையது, எனினும் இவற்றை தொடர்ந்து கத்தரித்து, குட்டையாக தொட்டிகளிலும், குறுமரங்களை போலவும் கூட வளர்க்க முடியும். பூகென்வீலியாக்களை  அரிதாகவே நோயும் பூச்சிகளும் தாக்கும். 

பூகென்வீலியாவின் மலரென்பது, மூன்று அல்லது ஆறு பிரகாசமான காகிதம் போன்ற மலரடி செதில்களால் சூழப்பட்டிருக்கும்  மூன்று குழல் போன்ற சிறிய வெண்ணிற மலர்களின் தொகுப்புதான். இதன் கனி மிகச்சிறியது, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். வெள்ளை ஆரஞ்சு சிவப்பு மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரடி செதில்கள் இருக்கும்.

உலகின் எந்த பகுதியாக இருப்பினும் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் ஒரு பூகென்வீலியாவையாவது பார்த்துவிடலாம் என்னும் அளவிற்கு இந்தக் கொடி உலகெங்கும் பிரபலமான, பலரின் விருப்பத்துக்குரிய அலங்காரச் செடியாகி விட்டிருக்கிறது. தோல் அழற்சியை உண்டாக்கும் இதன் இலைச்சாற்றை உலகின் பல பழங்குடியினத்தவர்கள் மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்துகின்றனர்.

இனி இவற்றை அழகான பூக்கள் இருக்கும் ஒரு செடி என்று மட்டும் எளிதில்  கடந்து போகாமல் ழ்ஜான் பாரெடின் [12]  சாகச கடற் பிரயாணத்தின்  பொருட்டாவது நின்று ஒரு கணம் அதன் அழகை ஆராதித்து விட்டே செல்லவெண்டும்.

மலரடிச் செதில்களால் மறைக்கப்பட்டிருக்கும்  பூகென்வீலியா மலர் போலத்தான், 250 வருடங்களுக்கு  முன்னர் இப்போதுகூட பெண்கள் எண்ணிப்பார்க்க முடியாத  ஆபத்துக்களை துணிவுடன் சந்தித்து, பல  புதிய தாவரங்களை தனது காதலனின் பெயரில் பெருந்தன்மையுடன் உலகிற்கு தந்த ஜேனும் தாவரவியல் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கிறார்.

கம்மர்சனின் மறைவுக்கு பின்னர் அவரின் கண்டுபிடிப்புகள் பலரும் பிரசுரித்தனர். ஆனால் யாருமே ழ்ஜான் பாரெடைக் குறித்து ஒரு வார்த்தையையும் குறிப்பிடவில்லை பிரபல பரிணாமக் கொள்கையை அறிவித்தவரான ’ழ்ஜான் – பாட்டீஸ்ட் லமார்க்’ மட்டுமே ழ்ஜான் பாரெடின்[13]  பங்களிப்பையும் அவரது துணிச்சலையும் குறிப்பிட்டு எழுதிய ஒரே ஒருவர்.

சுமார் 70 தாவரங்கள் இப்போது கம்மர்சனின் பெயரில் இருக்கின்றன. தன் பெயரை,  நண்பர்கள், உறவினர்கள் பெயரை பல தாவரங்களுக்கு வைத்த கம்மர்சன்  காதலின் பொருட்டு உலகில் எந்த பெண்ணும் செய்ய துணிந்திராத  சாகசத்தை செய்தவளான  தன் காதலியின் பெயரை அடர் பச்சையில், ஒரே மரத்தில் பல வடிவங்களில் இலைகளையும், வெண்ணிற மலர்களையும் கொண்டிருந்த  ஒரே ஒரு மடகாஸ்கர் குறுமரத்திற்கு  மட்டும் Baretia Bonafidia என்று வைத்தார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக  கம்மர்சனின் அறிக்கை பாரிஸ் சென்று சேரும் முன்னே அந்த மரத்துக்கு மற்றொரு பெயர்  (Turraea) வைக்கப்பட்டுவிட்டது. பிரசுர முன்னோடி விதிகளின் படி பாரெடின்[14]  பெயரை அந்த மரத்துக்கு வைக்கமுடியாமலானது[12].

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு 2012 ல் கண்டுபிடிக்கப்பட்ட உருளைகிழங்கு, தக்காளியின் குடும்பத்தை சேர்ந்த  ஒரு தாவரத்திற்கு மட்டுமே Solanum baretiae, என்று பாரெடின்[15]  பெயரிடப்பட்டிருக்கிறது.

2020ல் அவரது 280 வது பிறந்த நாளை  கூகில் டூடுல்  பூகென்வீலியா கொடிகளால் சூழப்பட்டிருக்கும் ழ்ஜானின் புகைப்படத்துடன் சிறப்பித்தது.

The 2010 ல் பாரெடின் சுயசரிதை The Discovery of Jeanne Baret, என்னும் பெயரில் க்லெனிஸ் ரிட்லி[13] யால் எழுதப்பட்டது ஆனால் அந்நூலில் பல கண்ணிகள் விட்டு போயிருப்பதாகவும் பல தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பின்னர் கடந்த 2020 ல் வெளியான டானியெல் க்ளோட்[14] , எழுதிய நூலிலிருந்து ழ்ஜான் பாரெடின் வாழ்வைக் குறித்து நம்பகமான தகவல்கள் ஓரளவுக்கு உலகிற்கு தெரிய வந்திருக்கிறது[15].

கடந்த செப்டம்பர் 2019 இல், 77 வயதான பிரிட்டிஷ் பெண் ஜீன் சாக்ரடீஸ்[16], உலகத்தை தனியாக  கடல்வழியே சுற்றிவந்த முதல்  வயதான பெண்ணாக அறியப்பட்டார். அவர் தான் சந்தித்த சவால்களையும் இடர்களையும் சொல்லித் தான் விடாமுயற்சியுடன் அவற்றை எதிர்கொண்டு பயணத்தை நிறைவு செய்ததாகச் சொன்னதை,  ழ்ஜான் உயிருடன் இருந்து கேட்டிருந்தால் புன்னகைத்திருப்பாளாயிருக்கும்.

***

பின்குறிப்புகள்:

[1] ழ்ஜான் பாரெ= Jeanne Baret (or) Jeanne Baré

[2] பூடேஸ் = frigate Boudeuse

[3] இட்வால்= Etoile

[4] லூயி ஆன்ட்வான் டி பூகென்வியெல = Louis Antoine de Bougainville

[5] ஃபிலிபேர் கம்மர்சன் =  Philibert Commerson

[7] ரியோ த ஹனைரோ= Rio de Janeiro

[8] பூகென்வீலியா ப்ராஸிலியென்ஸிஸ்= Bougainvillea brasiliensis

[9] பூகென்வீலியா ஸ்பெக்டாபிலிஸ்= Bougainvillea Spectabilis

[10] பார்க்க: https://en.wikipedia.org/wiki/Jeanne_Baret

[11] François Vivès = ஃப்ரான்சுவா வீவ்

[12] ழ்ஜான் பாரே பற்றியும் இன்னும் சில பெண் அறிவியலாளர் பற்றியும் எழுதப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே காணலாம்: https://sydneyreviewofbooks.com/review/danielle-clode-gabrielle-carey/

[13]  Glynis Ridley: The Discovery of Jeanne Baret: A Story of Science, the High Seas, and the First Woman to Circumnavigate the Globe; Hardcover, 288 pages

Published December 28th 2010 by Crown ; ISBN: 0307463524 (ISBN13: 9780307463524)

[14] In Search of the Woman who Sailed the World by Danielle Clode

Paperback, 352 pages

Published October 1st 2020 by Picador; ISBN: 1760784958 (ISBN13: 9781760784959)

[15] டானியெல் க்ளோட் நிகழ்த்தும் ஓர் உரை- ழ்ஜான் பாரேடின் உலகம் சுற்றும்  பயணம் பற்றியது இங்கே ஓர் விடியோவாகக் கிட்டும்: https://www.youtube.com/watch?v=fethpew18WM&list=PLH6AAKWGOLH2-KnHGl8jZC4m-YBw6d4gA&index=27

[16] Jeanne Socrates உடன் ஒரு பேட்டியை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=lTGjhIWcJs8


One Reply to “காகித மலர் – ழ்ஜான் பாரெ”

  1. அருமையான கட்டுரை.

    தாவரவியல் மாணவர்கள் மட்டுமா ?
    அனைவரும் படித்து அனுபவித்து நினைவில் வைத்திருக்க கூடிய பதிவு. பாராட்டுக்கள். கட்டுரையாளர் மேன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.