விஜயலக்ஷ்மி
திரு வண்ணநிலவன் அவர்கள் எழுதிய கம்பா நதி நாவலின் எனது வாசிப்பு அனுபவத்தை இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்
எத்தனையோ நாவல்களும் கட்டுரைகளும் இருக்க நான் ஏன் இந்த நாவலை குறித்து பேசுகிறேன் என்று யோசிக்கலாம். பெரிய காரணம் ஒன்றும் இல்லை, இந்த நாவல் வசிக்கும் போதும் சும்மா வாசித்ததை பற்றி சிந்திக்கும் போதும் எனக்கு கிடைக்கும் சந்தோஷமும் விசாலமுமே காரணம்
இந்த நாவலை நான் முதல் முறையாக எங்கள் ஊர் புத்தக கண்காட்சியில் தான் பார்த்தேன். என் ஊர் ஈரோடு. அதற்கு முன்பு யாரும் இந்நாவலை எனக்கு பரிந்துரைக்கவோ இது பற்றி கூறவோ இல்லை,
என்னை ஈர்த்தது இந்த தலைப்பு தான்.

திரு வண்ணநிலவன் அவர்களின் எஸ்தர் கதையை நான் படித்திருந்தேன். அந்த அனுபவத்தில் இந்த நாவலை நான் வாங்கினேன். முதல் தடவை வாசித்த போது ஒவ்வொரு கதாபாத்திரமும் என் கண் முன்னே உயிருடன் நடமாடினார்கள். நான் கூறுவது மிகை என்று எண்ணி விடாதீர்கள். இந்நாவலை நான் குறைந்தது 25 முறை வாசித்திருப்பேன்
சில முறை தொடக்கம் முதல் முடிவு வரை வைக்காமலும், சில முறை பாதி படித்து சில நாட்கள் மனதில் ஊறப்போட்டு பின் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து வாசித்ததும் இருக்கிறேன். அது ஒரு ஆச்சர்யம் தான் எனக்கு ஒரு முறை கூட வாசித்த வரியை திரும்ப வாசிக்கிறேன் என்ற சோர்வு வந்ததில்லை. இது போல் வேறு நாவல்களை என்னால் வாசிக்க முடியவில்லை
எப்பொழுது வசித்தாலும் கதை மாந்தர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்களாகவும் என் பெரியம்மா எங்கள் சொந்தகார குடும்பம் ஒன்றை பற்றி பேசுகிறது போலவும் மட்டுமே எனக்கு இருக்கும்
இவ்வளவு சிலாகிப்பும் எதற்கு என்று நான் யோசித்த பொழுது எனக்கு ஐந்து விஷயங்கள் தோன்றியன, அவற்றை உங்களுடன் பகிர்கிறேன்
முதலாவது எளிமை. நான் பள்ளியில் படிக்கும் போது எனது ஆங்கில ஆசிரியை ஒரு முறை கூறிய சொற்றொடர் ஞாபகம் வந்தது
சிம்ப்ளிஸிட்டி ஈஸ் மை லக்ஸுரி. திரு வண்ணநிலவன் தனிப்பட்டமுறையில் தானே மிகவும் எளிமையான மனிதர், அது போலவே இந்த நாவலும் அவ்வளவு எளிமை. ஒரு இடத்தில் கூட ஒரு அதிர்வோ, தோரணையோ, திருப்பமோ இன்றி அவரின் தாமிரவருணி போல நகரும் கதை தான் இந்நாவல்
உண்மையில் நம் பெரும்பான்மையானவர்களின் வாழ்வும் அப்படி ஒன்றும் பெரிய திருப்பங்கள் நிறைந்தவை அல்லவே
இரண்டாவது விஷயம், கதாபாத்திரங்கள். நாம் அனைவரும் இந்நாவலில் வரும் பெரும்பான்மையான பாத்திரங்களை சந்தித்ததோ அவர்களுடன் வாழ்ந்தோ இருப்போம்
நிறைய கதாபாத்திரங்கள் கொண்டது என்றாலும் முக்கால்வாசி பாத்திரங்கள் தனித்து ஒரு குணாதிசயம் கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கிறது
உதாரணத்துக்கு, கோமதியின் வளவு வீட்டில் புதிதாக கல்யாணம் ஆகி வந்திருக்கும் பெண்ணின் அக்கா செல்லம்மா, அப்பெண்ணுக்கு என்று ஒரு சிறு சினிமா கதை சொல்லும் குணம், சௌந்திரத்தின் அக்காவான வடிவுக்கரசியின் வெகுளித்தனமான மனம், ஆற்றுக்கு குளிக்க செல்லும் பால்துரை வாத்தியார் என்று பலதும் உண்டு
மூன்றாவது விஷயம் அறம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு அறம் உண்டு என்பதை நம்மை ஒரு நேரம் இல்லை என்றாலும் ஒரு நேரம் உணர செய்து விடுகிறார்
உதாரணத்துக்கு சீட்டு விளையாட போகும் இடத்தில் போலீஸிடம் மாட்டி கொள்ளும் போது திருநாவுக்கரசு குனிந்த தலை நிமிராமல் அமைதியாக போலீஸ் வண்டியில் ஏறுவதாக சொல்லும் இடத்தில் அவன் நல்லவன் என்றோ, ஒன்றும் அறியாதவன் என்றோ, திரு வண்ணநிலவன் அவர்கள் கூறுவதில்லை ஆனால் நாம் அதை உணர்வோம்
அது போல வெள்ளைமடத்தாச்சி. என்ன தான் சுத்தபத்தம் பார்ப்பவளாக இருந்தாலும் கோமதியின் அம்மாவிற்கு முறுக்கு மாவு அரைப்பதில் உதவதில் இருந்து, முறுக்கு வாங்க வருவோர் பற்றி கண்டும் காணாமலும் இருப்பதாகச் சித்தரிப்பது வரை, ஆச்சியின் அடி மனதில் இருக்கும் ஒரு சிறிய அறத்தை காட்டுவார்
நான்காவதாக இந்நாவல் எற்படுத்தும் மனித நெருக்கம்.
இந்த இடத்தில் வேறு வார்த்தை பிரயோகம் எனக்கு தெரியாததால் மேலே குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்
இந்நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களும் என் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் நான் சந்தித்தவர்களே.
வேணு செட்டியார் , சொடலி, சௌந்திரம், சரவண பிள்ளை, ஆராம்புலி மாப்பிளை, கல்கத்தாவுக்கு கண்ணாடி பாக்டரியில் வேலைக்கு போன படம் போடத் தெரிந்த மணி, மார்க்கெட் ஹை ஸ்கூலில் வேலை பார்க்கும் தியோபிளாசின் அம்மா , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
ஐந்தாவதாக திரு வண்ணநிலவன் அவர்கள் வெளிப்படுத்தும் மிக மிக மென்மையான உணர்வு
கோமதியின் கால் நகம் உள்ளார்ந்து அமுங்கி இருப்பது, மார்க்கெட் ஸ்கூலுக்கு வேலைக்கு போனபின் டீச்சரின் கை விரலில் தெரியும் ஒரு சதை பிடிப்பு எங்கள் ஊரில் இதை பணத்தின் பவுசு என்று கூறுவோம். பாப்பையா வேலை தேடி கொண்டு இருக்கிறான் என்று நமக்கு இந்நாவலை வாசிக்கும் போது வெளிப்படையாக தெரியும் ஆனால் அவன் ஆற்றில் குளிக்கும் சிறு சந்தோஷத்தை தொலைத்தவன் என்பதை ஒரு ஒற்றை வரியில் கூறுவார்.
திரு வண்ணநிலவன் கூறிய எதுவும் மிகை இல்லை.
பாப்பையா இன்டர்வியூவிற்கு போகவேண்டிய நாளன்று காலையில் எதிரில் இன்ன வாகனம் வந்தால் இன்டெர்வியூவில் செலக்ட் ஆகலாம் என்று சிந்திப்பது வரை நம் மனதை படித்தவராகவோ ( நான் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் இருக்கும் எண்களின் கூட்டு தொகை என்ன எண்ணாக வரும் என்று பார்ப்பேன் . இந்த எண் வந்தால் நடக்கும் எல்லை என்றால் நடக்காது என்று ஒரு அனுமானம் செய்யும் பழக்கம் கொண்டவளாக இருந்திருக்கிறேன்) அல்லது இத்தனை உணர்வுகளும் துளியும் சிதறாமல் மனதில் தேக்கியவராகவோ தான் அவர் இருக்கிறார்
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் நான் திருநெல்வேலிக்கு இது வரை போனது இல்லை. ஆனால் குறுக்கு தெரு, கல்லத்தி முடுக்கு , முதலியார் பாலம், படித்துறை, மார்க்கெட் ரோடு எல்லாம் என் மனதில் வரித்து கொண்ட இடங்கள். அடுத்த முறை கண்டிப்பாக திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும் என்பது ஒரு ஆசை.

கடைசி வரை சங்கரன் பிள்ளை மீது கோபம் வரவில்லை, ஆற்றாமை தான் வருகிறது. அதில் கூட யாரையும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ திரு வண்ணநிலவன் கூறுவதில்லை. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே என்ற தோணியிலேயே நகர்த்திச் செல்கிறார். வாழ்க்கையை கருப்பு வெள்ளை தவிர்த்து இடையில் பார்க்கக் கற்றுத் தந்தது இந்நாவல்.
இவ்வளவு கூறி எனக்குப் பிடித்தது யார் என்று எப்படி கூறாமல் விடுவது, அது சௌந்திரம் தான்.
என் நினைவு தேயும் வயதை எட்டும் போதும், இந்நாவல் என் நினைவில் நிலைக்க வேண்டும்.
***
அருமையான வாசகப்பதிவு