அர்ஜுன் ராச்
ஓர் அபூர்வ விலங்கு

முன்புபோல் யாசகம்
இடுவோர் தயை
அவ்வளவு இயல்பானதாக
இருக்கவில்லை என்றுணர்ந்தவன்
கையிருப்பில் உள்ள பணத்தைக்கொண்டு
ஓர் அபூர்வ விலங்கொன்று
வாங்கினான்
அதன் பண்பு:
தாமாக பிச்சை இடுபவர்களிடம்
தன் எளிய மீசையிழையை மழித்துக்கொண்டு வழிவதுபோல்
“மியாவ் மியாவ்” என்று குனுகிக்குழையுமாம்;
கண்டுகொள்ளாமல் செல்பவரிடம்
வரிவரியாய் தடித்த
உடற்கோடு தரித்து
முள்மயிர்கூச்செரிக்க உறுமுமாம்.
யாசகமிட்டுவந்தவர்களிடம்
இப்படி பம்மாத்திக்கொண்டு
முகம் முகமாக மாறாட்டம் செய்ததில்
பெரும் இலாபம் பார்த்தினும்,
பூனை இளைத்துக்கொண்டும்
புலி கொழுத்துக்கொண்டும் போவதை
யாசகனவன் சரிவர கவனிக்கவே இல்லை
போகப் போக
இவர்களைப்பற்றிய புகார்கள் போலிஸிடம் சேகரமாக
பிடித்துக்கொண்டுபோனவர்கள்
ஸ்டேஸன் கூடத்தின் மூலையில் அவர்களைத்
துச்சித்துவிட்டும்,
வறியவன் ஒருவனை வெகுவாக தாக்கிக்கொண்டும்,
தத்தம் தப்பித
அச்சுறுத்தலில் ஆழ்ந்திருக்கலானர்
அதோடு
வாடிக்கையாக வந்து செல்பவர்கள்
போலிஸுடன்
உடன்கட்டை ஏறுதலும்
போலிஸ் சிலரோடு
உடன்போக்கு செல்லுதலுமான
கயமைகளை
ஆழ்ந்தவதானித்துக்கொண்டு
வறியயுண்ணியாகவும்
மிரட்டுண்ணியாகவும்
மாறி மாறி சப்தமிட்டுக்கொண்டிருந்த
‘அ’விலங்கு
நெருப்பில் காய்த்த பறைக்கு
பேரரவ வீரியம் கூடியதுபோலானது
கையூட்டுத்தினவு முற்றிய போலிஸ்
சாவதானமாக அவர்களிடம்
பேரம்பேசத் துவங்கிய அடுத்த கணமே
விலங்கின் கோரைப்பற்கள்
மேலும் கீழுமாய்
பறங்கருக்கு வாயோடு பிதுங்கி
அகோரம் பொங்கி நீடலாய் உறும
அவரவர் அதன் கட்டுப்பாட்டுக்குள்
நிலைகுலைந்து சால்வித்துக்கொண்டனர்
மெல்ல இருள் இரட்டிப்பாக,
வெளிச்சம் கண்ணை மூடிக்கொண்டு
நுழைந்தது
போலிஸ் ஸ்டேஸனுக்குள்
இப்போது
தன் உடல் நிமிர்த்தி
முன் கால்கள் உயர்த்தி
மனித சுபாவத்தின் அகோரப்பசிக்கு
முதல் களபலியாக பூனையையே சமிபாடுற்று
பூர்வமாக மனிதனானது புலி.
மேலும்,
நன்றி மறவாத புலி
இனி
தொடர்ந்து ஸ்டேஸன் வருபவர்களில்
உடன்படுபவர்களுக்கு யாசகன் தொலியையும்
படாதவர்க்கு தன் தொலியையும்
அணிந்தே
காட்சிதருவதாக உறுதிமொழி வாசித்ததும்
உபபோலிஸ் ஒவ்வொருவருக்கும்
பரிசாக பூனையின் குரல்கள் வழங்கப்பட்டன
அதன்படி அனைவரும் அச்சிப் பிசகாமல்
‘அ”விலங்கிற்கு ‘மியாவ்… சார்.’ என்று
சல்யூட் பணிக்க
புலியின் வாயினின் ஏப்பமொன்று
சிரித்துக்கொண்டு வந்தது
பூனையின் சப்தத்தில்.
துணைகள்

நாள்தோறும்
உன் ஆடையிலிருந்து
பட்டாம்பூச்சிகளும்
பறவைகளும்
பிதிர்ந்து செல்கின்றன
ஒருவன் கால்பந்தை உந்தி உந்தி
வெளியேறுகிறான்
முத்தம் சில சொண்டுதிர்கின்றன
நீ கோவிலொன்றைக் கடக்க
சாத்தான் தன் தலையைப் பிய்த்துக்கொண்டு
இறங்கியோடுகிறது
கண்ணீர் ஒரு சில கண்களை நிலம் சிந்துகின்றன
விவசாயி ஒருவர் கட்டுமானப் பணிமனையொன்றைப்
பார்த்து சும்மாடு முடிந்து
சித்தாளாக ஆயத்தப்படுகிறார்
“இந்தி தெரியாது போடா ” என்ற
வாசக எழுத்துருகள்
இரயில்வேயின் அனேக அயல்மாநில ஊழியருக்கு
புரியவைக்க ஒவ்வொன்றாய்
உதிரத்தொடங்க
உன்னாடைகளில் உடன் வந்த
உன் துணைகள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் பிரச்சனைகள், அலுவல்கள்
உன் வாழ்வின் மாந்தர்களைப்போலவே
உனக்கென எவரும்
உதவுவதற்கில்லை
அதற்கென அலமந்திடாதே
ஒன்று செய்
தற்காலிகமாக
நீ உன் ஆடையை மட்டும் நம்பு
அல்லது
உன் நிர்வாணத்தின்
நிரந்தர நிலையாமையை.