புஷ்பால ஜெயக்குமார்
நிலை – 1
அவன் விழித்துக்கொள்ளும்போது
அவன் தெரிந்து கொள்கிறான்
ஒருவகையில் முன்பே அவன்
அதுவாகத்தான் இருக்கிறான்
அதன்மேல் நிற்கிறான்
அல்லது அதற்குள் இருக்கிறான்
ஒரு வீரன் வாளை சுழற்றுகிறான்
வலை பின்னிய உணர்வை
அணிந்திருந்த அவன்
வாசலில் நின்றான்
நிலை கொள்ளாமல்
தவிக்கும் அவனை
முடிவுகள் அழைக்கின்றன
எவ்வளவு முரண்பாடுகள்
கசக்கும் உண்மைகள்
சந்தித்தாகவேண்டிய நிர்ப்பந்தங்கள்
சீரமைக்கிறது அழகியல்
அவன் ஆகிறான்
அவன் போல் அவனாக

நிலை — 2
உன் விருப்பத்தினாலோ
உன் நிலையினாலோ
இயற்கையாக உனக்குள்
தோன்றும் கற்பனையினாலோ
நீ நடந்து கொள்வது
தான் உன் வாழ்க்கை
நீ காணும் காட்சிகள்
உன்னை வழி நடத்துகின்றன
உன் எண்ணங்கள்
உன்னை அர்த்தம்
கொள்ளச் செய்கின்றன
நீ உயிருடன் இருக்க
உன் பிரக்ஞை
உன்னைத் தாலாட்டுகிறது
கடந்த காலத்தின்
துயரத்தை உன் நிகழ்காலம்
ஒன்றும் செய்துவிட முடியது
துல்லியமாகத் தொட்டுச் செல்லும்
உனது எண்ணங்களின்
படிக்கட்டுக்கள் உன் காலடி
சத்தத்தில் உன்னை விடுதலை செய்கிறன.

காத்திருத்தல்
அவன் எதற்கோ காத்திருந்தபடி
மிறலும் விழியுடன்
புலி வருகிறது புலி வருகிறது
என்று ஏமாற்றிய சிறுவனின்
சாபத்தில் பாதிக்கப்பட்டிருந்தான்
என்ன ஆகவேண்டும்
எது நடக்க வேண்டும்
எல்லாம் போக மிஞ்சியது
எதுவோ அதுதான் அவன்
விருப்பப்பட்ட இடத்திற்கு
போகவேண்டிக் காத்திருக்கும்
பயணி அவன்
கொக்கு ஒன்று
ஓடும் ஆற்றில்
ஒற்றைக் காலில்
சிலைபோல் நின்றபடி இருந்தது
எல்லா நாட்களும்
வானம் தோன்றியபடி இருக்க
கடலும் அவ்வாறே இருந்து வந்தது
தேசம் மாறினாலும்
இயற்கை மாறாதிருந்தது
நள்ளிரவுக்கு அப்பால் பூத்திட
ஒரு மலர் காத்திருந்தது
காலத்தில் வடித்த உணர்வுகள்
நிறமற்று ஒருநாள் பிறக்கும்
அதன் பெயர் அதுவாக
அவன்
அவனை எனக்கு நன்றாகத் தெரியும்
நான் பிறந்த நாளிலிருந்து
அவன் என்னுடனே இருக்கிறான்
அவனுடன் தான் நான் இருக்கிறேன்
என்னுடன் தான் அவன் இருக்கிறான்
எந்த பொருளும் எந்த விஷயமும்
எந்த கருமமும் எங்கள் இருவரின்
நடுவில் வந்து விழுகிறது
நானும் அவனும் தான்
அதைப் பற்றிப் பேசி சிந்தித்து
ஒரு முடிவுக்கு வந்தாலும்
அது போகிற போக்கில் போகிறது
எல்லாவற்றிற்கும் கனகச்சிதமாக
ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும்
இந்த மாய உலகின் மன்னர்கள்
நாங்கள் இருவர் அல்ல பலபேர்
ஒருவனின் வாழ்நாள்
முடியும் போது
அவனோடு சேர்ந்து
இந்த பிரபஞ்சமும் அழிகிறது
நாய்
சிரித்த முகம் உனக்கு என்றான்
அவன் அந்த நாயிடம்
அவன் தன் அன்பைக் காண்பித்தது
அது ஒரு நாய்
என்பதற்காக மட்டும் அல்லாமல்
அவர்களின் நட்பு
அர்த்தம் உள்ளதாக இருந்தது
அவர்களுக்கு மட்டுமே தெரிந்த
அந்த ஒன்று
அவர்கள் வேறு வேறு மனிதர்கள்
என்பதற்கு மாறாக அந்த அன்பு இருந்தது
வாலை குழைத்து வரும் அது
மனிதனுக்குத் தோழனாக
ரகசியப் பேச்சொன்று
அவர்களுக்கிடையே இருந்து வந்தது
அதனுடன் அவன் இருக்கும் போது
அவன் நடத்தை வினோதமானது
நண்பர்கள் அவர்கள் தனித்துவமானவர்கள்
ஒன்று நீ அவனைப் பார்க்கவேண்டும்
அல்லது அந்த நாயைப் பார்க்கவேண்டும்
இரண்டு பேரும்
எதிர்மறையான அற்புதங்கள்
அவர்கள் காலத்தோடு ஒன்றி வாழ்ந்தார்கள்
பிரதேசம்
எல்லோர் மனதில் ஓடும்
எண்ணங்களை என்னால்
நினைத்துக் கூட பார்க்க முடியாது
வேறு வேறு எண்ணங்கள்
மட்டுமல்ல வேறு வேறு உணர்ச்சிகள்
உணர்வுகள் வழிந்தோடும்
ஆற்றில் நாம் நீந்துகிறோம்
அவ்வாறே இயற்கைக்கும்
இருக்குமென்று நினைக்கிறேன்
எனக்குக் கிடைக்கும் அமைதியை
கெடுக்காமலிருந்தால் நல்லது
நான் எந்த ஒரு சுயநலமும் இன்றி
இன்னொரு பிரதேசத்தினுள் நுழைகிறேன்
நான் பேசுவது
அர்த்தமுள்ளதாக மாறும்போது
யாருக்கும் புரியாமல் போகிறது
கடந்த காலம் எப்படி இருந்ததோ
அப்படித்தான் எதிர்காலமும் இருந்தது
வெளியே மறுக்க ஆள் இருக்கிறார்கள்
உள்ளே அதைவிட மௌனமாக மறுக்கிறார்கள்
எந்திர உடலைச் சுமக்கும்
என் மனம் சொல்லுகிறது
அல்லது காத்திருக்கிறது
இந்த புதிரில் ஒரு கண்ணி
நான் என்று
எண்ணங்கள்
எனது உணர்ச்சிகளைக்
கூர்மையாக வைத்து
கொள்ள முடியவில்லை
துல்லியமாக எதையும்
சொல்லமுடியாத போது
நான் காத்திருக்கிறேன்
பிசிறு தட்டிய
எனது எண்ணங்களை
ஒரு மண்பானையில்
ததும்பும் குளிர்ந்த நீரில்
அதைக் கழுவுகிறேன்
எனது நினைவுகளின் வழியே
அதைக் கண்ணடியில்
பார்ப்பது போல்
இப்படியும் அப்படியும்
அசைத்துப் பார்க்கிறேன்
நான் அதைப் பயன்படுத்துவதற்கு
தோதான பொருளாக மாற்றுகிறேன்
முதலில் நான் அவ்வாறு
செய்து விட்டால்
வாழைப் பழத்தில்
ஊசி ஏற்றுவது போல்
எல்லாம் சுலபமாக முடியும்
இப்பொழுது பார்
எல்லாம் தனித்தனியாகத் தெரிகிறது
இனி நீ எதைக் கோர்க்கிறாயோ
அது மாலை
முற்றம்
இரவின் போர்வையில்
விண் வெளியின்
அந்தர ஆகாசத்தில்
நிகழ்ந்த கனவுரும்
நிஜ நிலவின் பிரகாசத்தில்
முற்றம் நனைந்திருந்தது
மர்மம் நடந்திட
போதுமான இருள்
உச்சத்தில் இருக்க
அங்கே யாருக்கும் தெரியாமல்
அப்பிரதேசம் எரிந்து கொண்டிருந்தது
வறுமை அவ்வீட்டின்
உள்ளே உறங்கிக் கொண்டிருந்தது
காற்றில் ஆடும்
அம்மரத்தின் இலைகள்
உதிர்ந்த சிமண்ட் தரையில்
காலம் விரயமாகிக் கொண்டிருந்தது
மாடத்தில் ஏற்றிய விளக்கின்
ஒளி நிழலை நகர்த்திட
கடந்த காலத்தைக் கசக்கச் செய்தது
ஆழமான தனிமை
எப்படியும் கரையும் நேரத்தை
எல்லோரும் பார்க்க வாய்ப்பை கொடுத்தது
எழுத்து
நான் அந்த எழுத்துக்களின்
மீது அடர்த்தியான இலைகள்
கொண்ட ஒரு மரத்தை வைக்கிறேன்
பிறகு ஒரு தெருவை வைக்கிறேன்
கொஞ்சம் இருளையும்
அப்புறம் சாலையோரத்து
விளக்கைப் பொருத்திப் பார்க்கிறேன்
இப்பொழுது அந்த தெருவில்
நடந்து சென்ற அந்த மனிதர்கள்
அந்த இரவிலும்
அதற்கு முன் அந்த இருளிலும்
பிறகு அந்த தெருவில்
கசிந்த விளக்கின் ஒளியிலும்
மரத்தின் நிழல்
படர்ந்த தரையை
கடந்து போனார்கள்
திடீரென மழை வரவே
எல்லோரும் நனைந்தார்கள்
எழுதிய காகிதத்தில்
இருந்தவர்களும் நனைந்தார்கள்
யார்
நீ தெருவில்
நடந்து போவதற்கப்பால்
உனக்கு வேறு வழியில்லை
உண்மையில் நீ
பறக்கத்தான் ஆசைப்படுகிறாய்
உன்னை உன் மனம்போல்
வாழ அனுமதிக்க முடியாது
என்று யார் சொன்னது
உனது ஆசைகளிலும்
விருப்பங்களிலும்
நினைவுகளிலும்
கற்பனைகளிலும்
புதைந்து கிடக்கும் அர்த்தங்களை
மாற்றிக் கொண்டே இருப்பது யார்
இவ்வளவு பெரிய
கரைசலிலிருந்து
எடுக்கும் தங்கத்தை
யார் அணிந்து கொள்ளப் போகிறார்கள்
இடம் அளிப்பது
நேரத்தைக் கொடுப்பது
காலத்தைக் காட்டுவது எதற்காக
உன்னை அறிந்து கொள்ளவா
உன்னை அழித்துக் கொள்ளவா
மௌனமான சமிக்ஞைகள்
யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றன
இதில் நீ எங்கே
யார் அது என்கிற
அவன் எங்கே
அருமையான கவிதைகள், மிக்க வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.