இருட்டு

பிரபு மயிலாடுதுறை

அந்த அறைக்குள் நுழைந்ததும் முகத்தில் அறைந்த வாடை குமட்டலை ஏற்படுத்தியது. குமட்டினால் சந்தோஷுக்கு வலிக்கும். வருத்தப்படுவான். ரொம்ப கஷ்டப்படுகிறான். எல்லாம் எனக்காகத்தானா சந்தோஷ். 

ரசம் போன கண்ணாடி பெரிதாயிருந்த டிரஸ்ஸிங் டேபிள். அதன் ஸ்டூல் அத்தனை பழுப்பேறியிருந்தது. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என பார்வையிலேயே நினைக்க வைக்கும் பிசுபிசுப்பான பிளாஸ்டிக் வாட்டர் ஜக்.  மெத்தையும் போர்வையும் தலையணையும் இவ்வளவு அழுக்காக இருக்க முடியுமா?

சந்தோஷ் டாய்லெட்டுக்குள் சென்றான். விளக்கமாறால் கிளாசெட்டைத் தேய்க்கும் சத்தமும் கொட்டும் தண்ணீரை ஊற்றும் சத்தமும் கேட்டது. அவன் வந்ததும் நான் உள்ளே சென்றேன். சிமெண்ட் டிரேக்களில் துண்டு துண்டு சிகரெட்கள், தீக்குச்சிகள். டாய்லெட்டைப் பயன்படுத்தி விட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்தேன். 

கட்டிலின் விளிம்பில் சந்தோஷ் உட்கார்ந்திருந்தான். நான் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து கொண்டேன். சந்தோஷ் என்னைப் பார்த்தான். நான் அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன். 

‘’இந்த இடம் தான் சேஃப். இன்னைக்கு நைட் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்க. நாளைக்கு வேற நல்ல இடத்துக்குப் போயிடலாம்.’’

சந்தோஷ் கொஞ்ச நேரம் வெளியில் சென்றான். நான் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தேன். வராண்டாவின் இரண்டு பக்கமும் கதவுகள். சில கதவுகளின் அடியில் அறையின் வெளிச்சம் ரொம்ப முயன்று வெளியே வந்து கொண்டிருந்தது. ஒரு சின்னப் பையன் அங்கே வந்தான். 

‘’தம்பி! ஒரு வெளக்கமாறு வேணும்’’

‘’கீழ இருக்கும் க்கா. நான் போயி எடுத்துட்டு வர்ரேன்’’

‘’கொஞ்சம் இரு’’ நான் அறைக்குள் சென்று என் பர்ஸிலிருந்து இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். 

கொஞ்ச நேரத்தில் விளக்கமாறுடன் வந்தான். 

‘’வராண்டா ரூமெல்லாம் ஏன் இவ்வளவு குப்பையா இருக்கு. டெய்லி கிளீன் பண்ண மாட்டாங்களா?’’

அவன் பதிலேதும் சொல்லாமல் வெறுமையாகப் பார்த்தான். 

‘’ரெண்டு மினரல் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வர்ரியா?’’

ஐம்பது ரூபாய் கொடுத்து அனுப்பினேன். 

அறையின் மூலையில் ஒரு பிளாஸ்டிக் குப்பைக்கூடை இருந்தது. ரூமைக் கூட்டி தூசி, மண், சிகரெட் துண்டுகள், கட்டிலுக்குக் கீழ் இருந்த சாராய பாட்டில்கள் என அனைத்தையும் குப்பைக்கூடையில் போட்டேன். பழுப்பு நிறத்தில் மங்கலாக இருந்த போர்வையை உதறி மெத்தையின் மீது போட்டு சரிசெய்தேன். 

பையன் கதவைத் தட்டினான். 

‘’மீதியை நீயே வச்சுக்க’’ வாட்டர் பாட்டிலை வாங்கிக் கொண்டேன். 

பையன் போன கொஞ்ச நேரத்தில் சந்தோஷ் வந்தான். அறையைக் கூட்டியதில் என் நெற்றியில் லேசாக வியர்வை அரும்பியிருந்தது. அறையைப் பார்த்தான். என்னைப் பார்த்தான். அறைக் கதவை மூடி லைட்டை ஆஃப் செய்து விட்டு என்னைக் கட்டியணைத்து முத்தமிடத் தொடங்கினான். என் நெற்றியில். முகத்தில். கழுத்தில். முத்தமிட்டுக் கொண்டேயிருந்தான். 

எனக்கு மயக்கக் கலக்கமாக இருந்தது. என்னால் நிற்க முடியவில்லை. கீழே விழுந்து விடுவேனோ என்று தோன்றியது. சந்தோஷ் இருக்கிறான் அதனால் கீழே விழமாட்டேன் என நினைத்தேன். என் மனதில் அந்த எண்ணம் உருவானவுடன் சந்தோஷ் என்னை கட்டிலுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான். 

‘’சந்தோஷ்! நாளைக்குத் தான் நம்ம கல்யாணம். நாளைக்கு ராத்திரிதான் முதலிரவு’’

சந்தோஷ் பதில் ஒன்றும் சொல்லவில்லை. என் உதட்டில் முத்தமிட்டான். 

ஆடை என்பது அத்தனை கனமானதா? ஆடை உடலைச் சூழ்வதை விட மென்மையாக நீ உடலைச் சூழ்வது ஏன் இருக்கிறது? இன்று என்ன ஆயிற்று உனக்கு? என்ன ஆயிற்று எனக்கு? இவ்வளவு இனிமையை இந்த வாடை  நிரம்பிய அறையில் இந்த இருட்டில்தான் ருசிக்க வேண்டுமா? இருட்டுக்கு இத்தனை ருசி உண்டா?

நான் கட்டிலின் பின்னால் இருந்த இரவு விளக்கின் சுவிட்சைத் தேடிப் போட்டேன். சந்தோஷ் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஒருக்களித்து எதிர்ப்பக்கம் திரும்பி தூங்கிக் கொண்டிருந்தான். என் ஆடைகளும் அவன் ஆடைகளும் கட்டிலிலும் தரையிலுமாகக் கிடந்தன. நான் என் ஆடைகளை அணிந்து கொண்டேன். சந்தோஷ் ஆடைகளை மடித்து பிளாஸ்டிக் நாற்காலி மீது வைத்தேன். 

டிரெஸ்ஸிங் டேபிள் மேல் மினரல் வாட்டர் பாட்டில்கள் இருந்தன. தண்ணீர் குடித்தேன். உடம்பு கடுமையாக வேர்த்திருந்தது. சந்தோஷ் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். அவனை முத்தமிட வேண்டும் என்று தோன்றியது. நன்றாகத் தூங்குகிறான். தூங்கட்டும். அவனது ஆடைகளை பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாமா என நினைத்தேன். அந்த நினைப்பே இனிப்பாக இருந்தது. அப்படியே தூங்கி விட்டேன். 

***

ஆகாஷ் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் அருகில் படுத்துக் கொண்டு அவன் வயிற்றின் மீது கையை வைத்துக் கொண்டிருந்தாள். 

கதவு தட்டப்படும் சத்தம். 

தலைமுடியை ஒட்ட வெட்டியிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர். 

‘’சந்தோஷ் உங்க ஹஸ்பண்ட் தானே?’’

‘’ஆமாங்க’’

‘’டி. எஸ். கே சிட் ஃபண்ட்ல வேலை பாக்கறாரா?’’

‘’ஆமாம். நீங்க யாரு.’’

’’சொல்றன்’’

‘’வாங்க. உள்ள வாங்க.’’

பழக்கமின்மையின் தயக்கம் இல்லாமல் சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.  எதிர்ப்பக்கம் இருந்த சேரில் அமர்ந்தேன்.

‘’குழந்தைக்கு எத்தனை வயசு?’’

‘’ஒரு வயசு. என்ன சார் விஷயம்? ஏன் சந்தோஷ் பத்தி விசாரிக்கிறீங்க?’’

அவர் பதில் சொல்லவில்லை. இமைக்காமல் சில வினாடிகள் என்னைப் பார்த்தார். பின்னர் மிகவும் தெரிந்த ஒருவர் போல் என்னிடம் பேசத் தொடங்கினார். அவருடைய கேள்விகள் மூலம் என்னைப் பற்றி என் பெற்றோர் பற்றி உறவினர்கள் பற்றி என் தோழிகள் பற்றி விளக்கமாக கேட்டுத் தெரிந்து கொண்டார். 

‘’சார் ஏன் சார் சந்தோஷ் பத்தி எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க? நான் அவர் ஆஃபிஸுக்கு ஃபோன் செய்யட்டுமா?’’ என செல்ஃபோனை எடுக்கப் போனேன். 

‘’ஆஃபிஸுக்கு ஃபோன் பண்ணா உங்களுக்குத்தான் கஷ்டம். விஷயம் கொஞ்சம் சிக்கலானது’’. என் செல்ஃபோனைத் தரச் சொல்லி என்னிடம் கையை நீட்டினார். எதனாலோ ஆட்டுவிக்கப்பட்ட ஒருத்தியாக ஃபோனைத் தந்தேன். ஆகாஷ் புரண்டு படுத்தான். 

’’டாய்லெட் எங்க இருக்கு?’’

அவர் சென்றிருந்த நேரத்தில் பக்கத்து வீட்டு அம்மாவைக் கூப்பிடலாமா என்று யோசித்தேன். ஆகாஷைத் தூக்கத்திலேயே தூக்கிக் கொண்டு போய் அறையில் கட்டிலில் படுக்க வைத்தேன். நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். 

அவர் மிக சகஜமாக வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொண்டிருந்தார். பின்னர் சோஃபாவில் அமர்ந்தார். 

‘’லவ் மேரேஜ். வெளியூர் வந்திருக்கீங்க. லைஃப் ஸ்மூத்தா போகுது. சந்தோஷ் எல்லாம் சொன்னான்’’

நான் அவர் முகத்தைப் பார்த்தேன். 

‘’இப்ப சந்தோஷ் ஒரு சிக்கல்ல இருக்கான். என்னால மட்டும் தான் அவனைக் காப்பாத்த முடியும்.’’

ஒவ்வாதது ஏதோ நிகழ்ந்துள்ளது என ஒரு பயம் இருந்தது. அவர் முகத்தில் எந்த பதட்டமும் இல்லை என்பதால் நான் சாதாரணமாக இருந்தேன். 

‘’கோயில் சிலையைத் திருடின கும்பல் ஒன்னு பிடிபட்டிருக்கு. அவங்க காரை சந்தோஷ் ஓட்டியிருக்கான்.’’

நான் அவரையே பார்த்தேன். என் உலகம் மெல்ல இருட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. 

‘’ஸ்மக்ளர்ஸ் சாதாரணமா பண்ற டிரிக். அந்த குரூப்போட ஆக்டிவிட்டில எந்த தொடர்பும் இல்லாத ஒருத்தர அவங்க வெஹிக்களை ஓட்ட வைப்பாங்க. போலீஸ் செக்கிங்னா வண்டி ஓட்ற அந்த நபர் விஷயம் தெரியாததால ரொம்ப சாதாரணமா இருப்பார். அவர் முகத்தைப் பாத்தா போலீஸுக்கு டவுட் ஃபுல்லா ஏதும் இருக்காது.’’

அவருடைய செல்ஃபோன் ஒலித்தது. சில வினாடிகள் அந்த அழைப்புக்கு பதில் சொன்னார். 

‘’ஷோல்டர் பெயினா இருக்கு. அடுத்த ஊருக்கு போகணும். டிரைவ் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டிருக்காங்க. சந்தோஷ் கார் ஓட்டியிருக்கான்.’’

மீண்டும் ஒரு ஃபோன். 

‘’நாங்க இன்னும் எஃப். ஐ. ஆர் போடலை’’

‘’எனக்கு நீங்க சொல்ற விஷயம் முழுசா புரியலை சார்”

‘’இது ஒரு இருட்டான உலகம். நீங்க ரெண்டு பேரும் தற்செயலா இதுக்குள்ள வந்துட்டீங்க. உங்க வீட்லயோ சந்தோஷ் வீட்லயோ சப்போர்ட் பண்ணுவாங்களா?’’

‘’ரெண்டு வருஷமா ரெண்டு வீட்டோடயும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை சார்’’

’’டிபார்ட்மெண்ட்ல எங்களுக்கு இந்த விஷயம் ஈஸியா புரிஞ்சிரும். சாமானிய ஜனங்களுக்கு இது புரியாது. சந்தோஷ்க்கு சிலை திருட்டுல பங்கிருக்குன்னுதான் நினைப்பாங்க. சிட் ஃபண்ட் வேலை போயிடும். வீடு வாடகைக்கு தர மாட்டாங்க. இருக்கற வீட்டை காலி பண்ண சொல்லுவாங்க. புதுசா யாரும் வேலை தர மாட்டாங்க.’’

அவர் உடலைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு அமர்ந்தார். 

‘’குடிக்க தண்ணி கொடு’’

நான் தண்ணீர் கொண்டு வந்தேன். வாங்கி டீபாயின் மீது வைத்துக் கொண்டார். 

‘’இந்த குரூப்புக்கு வெளி நாடுகள்ல நல்ல தொடர்பிருக்கு. முதல்ல ஒரு ஊர்ல அவங்களுக்கு சேஃபான இடத்தை தேர்ந்தெடுத்துப்பாங்க. அந்த ஊர் கோயில்ல இருக்கற சிலையைத் திருடிட்டு அவங்க சூஸ் பண்ண இடத்தில வச்சிடுவாங்க. ஆறு மாசம் கழிச்சுத்தான் வெளிய எடுப்பாங்க. சமயத்துல ஒரு வருஷம் ஆன பிறகு. வெளியில கொண்டு போய்ட்டுதான் எப்படி விக்கறதுன்னு யோசிப்பாங்க.’’

நடுத்தெருவில் நிற்க நேரிடும் போது காதில் விழும் ஒலிகளும் சப்தங்களும் போல அவர் சொற்களை மனம் உள்வாங்கியது. 

‘’இந்த குரூப்புக்கு பல நாட்களா பொறி வச்சோம். இப்பதான் சிக்கினாங்க.’’

நான் அர்த்தமில்லாமல் அவர் முகத்தைப் பார்த்தேன். 

‘’இந்த கேஸ்ஸை நாங்க வேற விதமா செட் பண்ணிப்போம். அது எங்க விஷயம். சந்தோஷ் இது உள்ள போகாம இருக்கணும்னா அது உன்னால தான் முடியும்’’

அவர் அரை பாட்டில் தண்ணீரைக் குடித்தார். 

‘’நீங்க ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டு போய்டுங்க. வேற ஊர்ல போய்  இருங்க. எந்த விதத்திலயும் நாங்க திரும்பி வர மாட்டோம்.’’

ஆகாஷ் லேசாக சிணுங்கினான். நான் சமாதானப்படுத்தி விட்டு வந்தேன். 

‘’குழந்தையைப் பத்தி நினைச்சுப் பாரு. உன்னைப் பத்தியும் நினைச்சுப் பாரு. அந்த குரூப் சிலையை வச்சுருந்தது உங்க வீட்லதான் எங்களால சொல்ல முடியும். சிலை கடத்தல் கும்பல். யங் கப்புள் சப்போர்ட். வழக்கை ஜனங்களே ரொம்ப சுவாரசியமா ஆக்கிடுவாங்க’’

‘’நாங்க எந்த பாவமும் பண்ணலை சார்’’

அவர் என் ஃபோனை எடுத்து டீபாய் மீது வைத்தார். 

‘’யாருக்கு வேணாலும் ஃபோன் பண்ணு. உங்க அப்பா அம்மாவுக்கு. சந்தோஷ்ஷோட அப்பா அம்மாவுக்கு. உன் ஃபிரண்ட்ஸுக்கு. சந்தோஷ் ஃபிரண்ட்ஸுக்கு. உனக்குத் தெரிஞ்சவங்க. வேண்டியவங்க. யாருக்கு வேணாலும். இந்த விஷயத்தை நீ எப்படி புரிஞ்சுகிட்டயோ அப்படி அவங்க கிட்ட சொல்லு. இந்த விஷயத்துல இருந்து மினிமம் டேமேஜோட வெளியில வர என்ன வழின்னு கேளு.’’

பலருடைய முகங்கள் என் நினைவில் வந்தது. 

‘’நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்க. இங்க கோர்ட் கேஸூன்னா ஒதுங்கிப் போயிடறவங்க தான் அதிகம். இது கிரிமினல் கேஸ். என்னோட யூகம் உனக்கு யாரும் பெரிய அளவில ஹெல்ப் பண்ண மாட்டாங்க. ரெண்டு பேர் குடும்பமும் மிடில் கிளாஸ் குடும்பம். உனக்கும் கூடப் பிறந்தவங்க இருக்காங்க. சந்தோஷ்க்கும் இருக்காங்க. அதனால அவங்க உங்களை சேஃப் கார்டு பண்ண மாட்டாங்க. குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது; இருந்தும் உங்க ரெண்டு சைடுல இருந்தும் பேரண்ட்ஸ் வந்து பாக்கலை. ரிலேட்டிவ்ஸ் யாரும் டச்ல இல்ல’

அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சம்மட்டி போல விழுந்தன. 

‘’உன்னை நான் ஃபோர்ஸ் பண்ணல. கட்டாயப்படுத்தல. உனக்கு சம்மதம்னா நான் ஒரு வழி சொல்றன்’’

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் முகத்தைப் பார்த்தேன். 

‘’ சந்தோஷ் செல்ஃபோன் ஸ்கிரீன் சேவரில் இருக்கும் உன் ஃபோட்டோவை பாஸ் பார்த்தார். அவர் கூட இன்னைக்கு ஒரு ராத்திரி இருக்கணும்’’

எனக்குத் தலை சுற்றி குமட்டிக் கொண்டு வந்தது. வாஷ் பேசினுக்கு ஓடி வாந்தி எடுத்தேன். முழுக்க வராமல் வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் அடைத்தது. வாயில் இருந்த எச்சிலைத் துப்பி விட்டு தண்ணீரைத் திறந்து விட்டேன். முகம் கழுவிக் கொண்டு சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தேன். ஹாலில் சுவர் ஓரமாக ஒடுங்கிக் கொண்டு அழ ஆரம்பித்தேன். 

கையெடுத்துக் கும்பிட்டு ‘’என்னால சந்தோஷ்க்கு துரோகம் பண்ண முடியாது’’ என்றேன். அழுகையும் கேவலும் என் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொண்டிருந்தது. 

‘’அவன் தான் உன்கிட்ட பேசச் சொன்னான்’’

நான் தலையில் அடித்துக் கொண்டு அழுதேன். 

***

புது ஊர். 

உடம்பு சரியாக இல்லை. 

அவ்வப்போது தீப்பற்றி எரிவது போலவும் உடலில் ஏதோ ஊர்வது போலவும் இருந்தது. வீடு பூட்டியிருக்கும் போதும் சில உருவங்கள் சுவரைத் தாண்டி உள்நுழைவது போல இருந்தது. 

ஆகாஷின் கால்களை அவ்வப்போது பிடித்துக் கொண்டேன். அவன் பாதத்தின் கீழே தலையை வைத்துக் கொண்டேன். 

சந்தோஷ் வேலைக்குச் செல்கிறான். 

நாங்கள் இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. 

இரண்டு மாதங்கள் ஆனது. 

நானும் ஆகாஷும் ஹாலில் படுத்துத் தூங்குகிறோம். சந்தோஷ் ரூமில் கட்டிலில் தூங்குகிறான். 

ஒரு நள்ளிரவு.

என் அருகில் படுத்து சந்தோஷ் என் கழுத்தில் முத்தமிட்டான். 

நான் உடல் நடுங்க எழுந்தேன். வாஷ்பேசினுக்கு ஓடி வாந்தி எடுத்தேன். 

ஹாலுக்கு வந்தேன். 

‘’சந்தோஷ் வேண்டாம் சந்தோஷ். ஆகாஷ்க்காகத்தான் நான் உயிரோட இருக்கன். என்ன கஷ்டப்படுத்தாத.’’

‘’பெரிய பத்தினி. புருஷன் கூட படுக்க மாட்டா. மத்தவனோடதான் படுப்பா. அன்னைக்கு ராத்திரி படுத்தவன் கூடத்தான் படுப்பியா. தேவடியா’’

சந்தோஷ் ரூமுக்கு சென்று விட்டான். 

இருட்டு மணல் போல என்னைப் புதைத்துக் கொண்டிருந்தது. 

***

2 Replies to “இருட்டு”

  1. ‘இருட்டு’ சிறுகதை பெண்களின் வாழ்வியல் நடக்கும் சம்பவம் குறித்த யதார்த்தமான கதை..பாவம் ஓரிடம்.. பழியும்.. தண்டனையும் ஓரிடம்.

    -தஞ்சிகுமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.