தெரிசை சிவா
“இன்னும் எத்ர நாளாகும்?”- கேட்கும்போதே குரலில் ஒரு வேதனை தெரிந்தது. வெளுத்து தடித்த கன்னத்தில் ஒரு எதிர்பார்ப்பும்.
“அது எப்படி சாமி சொல்ல முடியும். புன்செய் நிலம்னு கேஸ் கொடுத்திருக்கானுக்கோ… விவசாயநிலத்துல வீடு கட்ட அனுமதி இல்லைலா?” – அதிகாரத் தோரணையில் பேசிக் கொண்டிருந்தார் மாரிமுத்து.
“நெறைய பேர்… கட்டியிருக்காளே. இன்னைக்கு கூட என் இடத்துக்கு பின்னாடி வேலை நடக்குதே?”
“அவங்கெல்லாம் கைகாசை போட்டு கட்டுறாங்க… உங்களால முடியும்னா… நீங்களும் கட்டுங்கோ…”
“பேங்க் லோன் இல்லாம என்னால எப்படிங்க கட்ட முடியும். என் நிலைமைதான் உங்களுக்கு தெரியாததா?” – இயலாமையின் குழைவை உடலில் காட்டி பேசினார் கிருஷ்ணசாமி.
“உங்க நிலைமை தெரிஞ்சுதான் இத சொல்லுகேன் சாமி… இந்த கேசு முடியிற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…”- கண்டிப்புடன் மறுவார்த்தை பேசினார் மாரிமுத்து.
கிருஷ்ணசாமி சிறிதுநேரம் தலைகுனிந்து தரையை நோக்கிக் கொண்டிருந்தார். போட்டிருந்த காட்டன் ஜிப்பாவில் திரட்டு திரடாய் வியர்வையின் அடையாளங்கள். கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து சின்ன வயது வினுசக்கரவர்த்தி பாணியிலிருந்தார். அவர் மனதிற்குள் மெலிதான கர்வமும், வன்மமும் சேர்ந்து நர்த்தனமாடிக் கொண்டிருந்தது. வாழும் நெருக்கடியில் மனிதன் மீது மற்றொரு மனிதன் செலுத்தும் ஆதிக்க வன்முறைதான் எத்தனை கொடிது.
அரசு அலுவலகத்திற்கே உரிய கொடும் மௌனம் சில மணித்துளிகளுக்கு அவர்களை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. போட்டோவிலிருந்த மகாத்மா காந்தி தூசு, ஒட்டடையின் வழியாக நடப்பவைகளை கவனித்துக் கொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு எண்ணையோ, பராமரிப்பையோ பார்க்காத மின்விசிறி ஓன்று கிரீச்… கிரீச்… என்று அவர்கள் தலைமேல் சுற்றிக் கொண்டிருந்தது. வெளிப்புறத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்து, உள்ளே வந்திருந்த பியூன் மாசானம், ஒரு கேலிப் புன்னகையை உதிர்த்து, மரஅலமாரியை திறந்து ஏதோ ஒரு காகிதக்கட்டை எடுத்துச் சென்றான்.
“ஒரு ஒருவாரம் கழிச்சு வாருங்கோ சாமி, நான் என்ன செய்ய முடியும்னு பாக்குறேன்” – மௌனம் கலைத்து மறுபடி பேசினார் மாரிமுத்து.
“சரி சார், எப்படியாவது பார்த்து பண்ணிக் கொடுங்க… உங்களுக்கு என்ன பண்ணணுமோ பண்ணிடலாம்…” – புளித்த சிரிப்போடு கிருஷ்ணசுவாமி கூறினார்.
“என்ன சாமி, இப்படி பேசுரீங்க… டாக்குமெண்ட்ஸ் சரியா இருந்தா… நான் சைன் பண்ண போறேன். வில்லங்கமான இடத்துல பிளாட்ட வாங்கிட்டு, இப்ப நம்மள்ட வருத்தப்பட்டா என்ன செய்ய முடியும்.” – எண்ணையில் போட்ட கடுகாய் பொரிந்து தள்ளினார் மாரிமுத்து.
அவர் பதிலேதும் கூற முடியாமல், எச்சில் விழுங்குவதை பார்க்கையில் மாரிமுத்துக்குள் ஒரு ஆனந்தம்.
“சரி சார்… கொஞ்சம் பார்த்து முடிச்சு கொடுத்திடுங்க… கோவில் தீவார்ண தட்டுல விழுகுற காசை வச்சும், சொந்தமா செய்யுற பலகார கடையை வச்சுதான் எங்க காலமே ஓடுது. அப்படியும், இப்படியும் கஷ்டப்பட்டு இந்த இடத்தை வாங்கி நாலு வருசமாச்சு. சொந்தமாக ஒரு வீடுங்கிறது, என்னோட இருபத்தைந்து வருஷ கனவாக்கும்.” – என்று அவர் சோகம் கொப்பளிக்க பேசிய போதும், மாரிமுத்துக்குள் பெரிதான அதிர்வேதும் இல்லை.
“பாக்கலாம் சாமி” என்று கூறிக்கொண்டு, அவர் போனால் போதும் என்பதுபோல், மேஜையிலிருந்த பேப்பர் கட்டை விரித்து, இல்லாத வேலையை அவசரமாய் செய்வதுபோல் பாசாங்கு காட்டினார் மாரிமுத்து.
கிருஷ்ணசாமி இறங்கி சென்ற சில வினாடிகளில் உதட்டுப் புன்னகையுடன் மாசானம் உள்ளே வந்தான். வெற்றிலை குவியலை கடவாய் பல்லுக்கிடையில் ஒதுக்கி, குதப்பி கொண்டே பேச ஆரம்பித்தான்.
“கோவில் போத்தி என்ன சொல்லுகேரு… பேசி… பேசி… காரியத்தை சாதிச்சிருவேரு போலுக்க…”
“நம்ம சைன் இல்லாம ஒரு காரியமும் நடக்காது… எப்டிலாம் நம்மள அடக்கி வச்சிருந்தானுகோ… இப்ப பாரு… நம்மள பாக்க நடையா நடக்கத…” – பெருமிதத்துடன் கூறினார் மாரிமுத்து.
“நடக்கட்டும்… நடக்கட்டும்… தலைமுறை தலைமுறையா ஆண்டு அனுபவிச்சாச்சுல்லா… இப்ப கொஞ்சம் அடங்கி ஒடுங்கித்தான் இருக்கட்டுமே…”-வெற்றிலை குதப்பலோடு பதில் கூறினான் மாசானம்.
“அடங்கி, ஒடுங்குறது ரெண்டாவது மாசானம்… மொதல்ல நிமிந்து நிக்குற முதுகு, கொஞ்சம் குனியட்டும்… அதிகாரம் செஞ்ச வாய் கொஞ்சம் கெஞ்சட்டுமே… நம்மளும் கொஞ்ச நாள் ஆண்டு பாப்போம்டே…” – சொல்லி முடிக்கும் போதே மாரிமுத்துவின் கண்களில் அதிகாரத்தோரணையின் அதிர்வுகள்.
“கரெக்ட் சார்… அன்னைக்கு ஆனைக்கு இருந்த காலம், இப்ப பூனைக்கு வந்து சேர்ந்துருக்கு” – சிரித்து கொண்டே மாசானம் தலையசைத்தான் .
“ஆனையோ, பூனையோ எவனா இருந்தாலும் மனுஷனை மனுசனா மதிக்கணும்டே… அதில்லாம தொட்டா தீட்டு… பார்த்தா தீட்டுன்னா… இவனுகள சும்ம விடலாமா?”
“அத ஏன் கேக்கியோ?… போத்தியும் லேசு பட்ட ஆளு இல்ல… இப்பவும் அவருக்கு ரெண்டு வருமானம்லா… காலையிலையும் சாயங்காலமும் மட்டும் தான் கோவில்ல வேலை. மத்த டைம்ல பலகார கடைல நல்ல பைசாவாக்கும்… இவ்வளவு போல இருக்கு முறுக்கு. ஏழு ரூபாயாம்… இவருக்கு அப்பா இருக்காரே… பெரிய போத்தி, எப்போ… அந்த காலத்துல அவரு வந்தா, அரைகிலோமீட்டருக்கு நம்ம யாரும் எதுக்க போக முடியாது… என்னென்ன சம்பிரதாயம்னு நினைக்கியோ?” – இறந்து போன கிருஷ்ணசாமியின் அப்பா ரகு போத்தியை பற்றிய நினைவுகளை பகிர்ந்தான் மாசானம்.
“இப்ப இவர்ட்ட, என் கால்ல விழுத்தாதான் காரியம் நடக்கும்னு நான் சொன்னேன்னு வச்சுக்கோ, லெக்காழி கால்ல கூட விழுவாரு…”- மாரிமுத்து சிரித்துக் கொண்டே கூறினார்.
மாசானமும் உதடு விரித்து சிரித்தான். குதப்பிய வெற்றிலையிலிருந்து சில துளிகள் வெளியில் தெறித்தது. வாயை பொத்திக் கொண்டு வெற்றிலையைத் துப்ப வெளியே ஓடினான்.
மாரிமுத்துவின் மனதிற்குள் ஒரு இறுமாப்பு இருந்து கொண்டே இருந்தது. சாதியின் பெயரால் அவரைச் சார்ந்தவர்கள் சந்தித்த பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. சாதிப் பாகுபாட்டால் எவ்வளவு பெரிய அதிகார துஷ்ப்ரயோகம் நடந்திருக்கிறது. குனிந்து குனிந்து கூனனாகிய தாத்தா கருப்பசாமியின் “காய்ச்ச விரல்கள்” கண் முன்னே தோன்றியது. இடஒதுக்கீடு என்ற சீரமைப்பின் மூலம் சமுதாயச் சமநிலையை உருவாக்கிய அம்பேத்காரும், பெரியாரும் திடிரென்று மாரிமுத்துவின் மனத்திரையில் வந்தனர். அவர்கள் இரு கையையும் தூக்கி மாரிமுத்துவை ஆசிர்வதிப்பது போலிருந்தது. மேஜையின் மேலிருந்த அ. மாரிமுத்து, கிராம நிர்வாக அதிகாரி என்றிருந்த பெயர் பலகையை திருப்பி, இறுமாப்புடன் ஒருமுறை நோக்கினார். ஏதோ ஒன்றை சாதித்த மகிழ்ச்சியை நடந்த நினைவுகள் தர, “நிம்மதி பெருமூச்சுடன்” நேரம் கழிக்கத் தொடங்கினார்.
ஐந்தாறு நிமிட இடைவெளியில் குரங்காய் தாவும் மனது வேறுவழியில் பயணித்தது. செய்தது தப்போன்னு ஒரு தீர்க்கச் சிந்தனை. இதுல தப்பென்ன இருக்கு, ஒரு காலத்துல ஏன்னா ஆட்டம் போட்டானுகோ… இப்ப அனுபவிக்கட்டும் – என்றது மற்றொரு சிந்தனை. சகமனிதன் என்பதை தாண்டி, இனத்தையோ, படிப்பையோ முன்னிறுத்தி வரையறுக்கப்படும் சமுதாய அதிகாரங்களே ஒரு மனிதனின் மீது மற்றொரு மனிதனை ஆதிக்கம் செலுத்த வைக்கிறது. தவிர்க்க முடியாத இந்த கட்டமைப்பு, சமுதாய நடைமுறைக்கு கட்டாயம் என்றாலும், மனிதனால் மனிதனுக்கு இழைக்கப்படும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு இதுவே காரணமாக இருக்கிறது. இவ்வாறு மாரிமுத்துக்குள் இருந்த “அதிகாரச்செருக்கை” திடீரென்று எழும்பிய “மனசாட்சியின் நேர்மை” கேள்விகளால் துளைத்தெடுத்தது. கலங்கிய முகத்தோடு திரும்பிச் சென்ற கிருஷ்ணசாமியின் முதுகும், நடையும் மனதை என்னவோ செய்தது. என்ன இருந்தாலும் வயசான ஆளு. சொந்த வீடுங்கிறது மனிதனோட வாழ்நாள் கனவுல்லா. சவம் அடுத்த தடவை வந்தவுடன், சைனை போட்டு அப்ரூவல் கொடுத்திரணும். அவருடைய மூதாதையர் செய்த தப்பிற்கு அவரு என்ன செய்வாரு. மழை நாளில் ஊற்றெடுக்கும் பல வண்ண ஆற்று நீரைப்போல், பற்பல நினைவுகள் மாரிமுத்துவின் எண்ணவோட்டத்தினை நனைத்தன.

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் வெள்ளாளர் சமுதாயத்திற்கு உரியதாக இருந்த கோமதியம்மன் கோவில் சில நூறாண்டுகள் பழமையானது. சக்தி சொரூபமாக இருக்கும் பார்வதி அம்மையை, தேவப்பெண்கள் பசுக்களாக வந்து வழிபட்டதால் இக்கோவில் உருவானதாக ஸ்தல வரலாறு. கோ என்னும் பசுக்கள் வழிபட்ட அம்மையாதலால் கோமதியம்மையாகினாள். வேளாண்மை மட்டும் தெரிந்ததாக சொல்லிக்கொண்ட வெள்ளாளர் இன மக்கள் பொருளாதார தேவையின் பொருட்டு, பல ஊருக்கு இடம்பெயர, திராவிடச் சிந்தனைகள் மேலோங்கிய ஒரு ஐந்தாண்டில், புதிதாக ஒரு சமத்துவபுரம் கோவிலுக்கு அருகில் உதயமானது. சிறிதாக கிளம்பிய இனப்பற்றாளர்களை பெரியாரின் பாசறைகள் சிறப்பாக கவனிக்க, சமுதாயச் சாமியாக இருந்த கோமதியம்மன் சமத்துவச் சாமியாக மாறினாள். இன்ன சாதிக்கென்ற வரையறையின்றி, எல்லோரையும் வாரியணைத்து வழிநடத்தும் சர்வ சாட்சி தெய்வமாய் அவள் மாறி, முப்பது நாற்பது வருடமிருக்கும். இன்றைய தேதியில் தவிர்க்க முடியாத சமத்துவச் சிந்தனையோடு, சிறுதெய்வமாய் எல்லா பக்தர்களுக்கும் அருள் பாலிக்கிறாள் கோமதியம்மன்.
கோவில் கைமாறினாலும் வழிவழியாக கோமதிக்கு பூஜை செய்யும் பேறு மட்டும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கே வாய்த்தது. அந்தணர்களை வாரி அணைத்து முத்தமிடும் அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ இடம்பெயர ரகு போத்தியின் குடும்பத்தினருக்கு வாய்ப்பிருந்தும், அனுதினமும் நீராட்டி, பாராட்டி, சீராட்டும் கோமதியைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் கோவில் பணியே நிற்கதி என்றிருந்தனர். போற்றிப் புகழ கோமதியின் திருப்பாதங்கள், வாழ்வின் தேவைகளுக்கு ஒரு பலகாரக் கடை என மூன்று தலைமுறையாய் அவ்விடமே சுற்றம் சுற்றிக் கழிக்கிறது கிருஷ்ணசாமியின் குடும்பம். என்ன நேரப்பலனோ என்னவோ, அறப்பாடுபட்டு வாங்கிய இடத்தில், ஒரு வீடுகட்ட இயலாமல் இன்று கலங்கி, தெவங்கியும் நிற்கிறது.
சித்திரை ஆராட்டு விழாவிற்காக தன் மனைவி பொன்னி, மகள் செல்வி சகிதம் கோவிலை அடைந்திருந்தார் மாரிமுத்து. விடியற்காலையாதலால் கோவிலுக்குள் பெரிதான கூட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பக்தர்கள். பக்தி ஆவேசத்தில் சில முதிர்ந்த பெண்கள் சாமியாடிக்கொண்டிருந்தனர். சந்நிதியின் முன்னே திரையிருக்க, உள்ளுக்குள் உஷத்கால பூஜைக்கான அலங்கார ஏற்பாடுகளை கிருஷ்ணசாமியும், அவர் உதவியாளர்களும் செய்து கொண்டிருந்தனர்.
திராவிட சித்தாந்த விதிகளின் படி கடவுள் இல்லையென்று கூட்டத்தில் பேசினாலும், திருவிழா நாட்களில் குடும்பத்தோடு மாரிமுத்துவைக் கோவிலில் பார்க்க இயலும். அதிலும் இம்முறை கணவன் பதவி உயர்வு பெற்று, வருவாய் ஆய்வாளராக வேண்டுமென, பொன்னியின் சார்பில் சிறப்பு “நேர்த்திக்கடன் வழிபாடு” வேறு உண்டு. “எனக்கு இதெல்லாம் நம்பிக்கையே கிடையாது என மாரிமுத்து ஆரம்பத்தில் கூறிக்கொண்டார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் பிள்ளைப்பேறு கிட்டியது, நினைத்த இடத்தில் பணி மாற்றம் கிட்டியது, சொந்தமாக வீடு வைத்தது, என பல விஷயங்கள் நேர்த்திக்கடன் முடிந்ததும் நடக்க, அவை யாவும் “பிராத்தனையின் பலனே” என்பதை மாரிமுத்துவும் உள்மனத்துக்குள் ஒத்துக் கொண்டார். இருந்தாலும் உணர்ந்த “ஆத்திக தர்மத்தை” அவர் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. மனைவியின் நம்பிக்கைக்கு துணை நிற்பதாகச் சொல்வார். மற்றபடி கடவுள் நம்பிக்கை இல்லையென்பார். மனதில் “ஆசை” இல்லாதவன் மட்டுமே, கடவுள் இல்லையென்று கூறமுடியும். மனதிற்குள் ஆசையை வைத்திருப்பவன், கடவுளன்றி யாரிடம் கோரிக்கை வைக்க முடியும். அவ்வாறே ரெவனியூ இன்ஸ்பெக்டருக்கான கோரிக்கையுடன், கோமதிஅம்மனை தரிசிக்க வந்திருந்தனர் மாரிமுத்துவின் குடும்பத்தார்.
பின் வந்த சில நிமிடங்களில் திரை விலக, பக்தர்கள் ஆவேச பெருமிதத்துடன் கை கூப்பினர். ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக, சந்தனக் காப்புடன், இளமங்கை கோலத்தில், புன்னகை பூத்த முகத்துடன், சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க, காட்சி தருகிறாள். மாவிளக்கு, பூவிளக்கும் ஏந்தி பக்தர்கள் இருகரம் கூப்பி வணங்கி, பக்தியில் திளைக்கின்றனர்.
அதிகாலையில் விழித்த சிவப்பு கண்களுடன், ஆத்மார்த்த பூஜையாக கரந்யாஸம், ப்ராணாயாமம் செய்து, பூதசுத்தி, அந்தர்யாகம், சிவோகம்பாவனை ஆகிய கிரியைகளைச் செய்து, அன்னையை அலங்கரித்து பாமாலையாகப் பாசுரம் பாடுவதற்காக, பக்திப்பெருக்கில் வெளியில் வந்தார் அர்ச்சகர் கிருஷ்ணசாமி.
முதல் ஆளாய் நின்றிருந்த மாரிமுத்து பார்த்த மாத்திரத்தில் கிருஷ்ணசாமியை நோக்கி புன்னகைக்க, பக்தி இறுக்கத்தில் சிறு சலமின்றி அன்னையை நோக்கி திரும்பி பாட ஆரம்பித்தார்.
கேடாவரும் நமனைக்கிட் டவரா தேதூரப்
போடாயென் றோட்டியுன்றன் பொற்கமலத் தாள்நிழற்கீழ்
வாடாவென அழைத்துவாழ் வித்தாலம் மாயுனைக்
கூடாதென் றார்தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே.
– என்ற வெண்கலக்குரல் பாடல் முழங்கி, சாஸ்திர மந்திரங்களுடன், தீப ஆராதனைக் காட்டி முடிய, நேர்த்தி கடன் செய்ய வேண்டி சில பெண்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னே சென்றனர். சிலர் பக்தி பெருக்கில் கிருஷ்ணசாமியின் காலில் விழுந்தனர். முன்னால் நின்றிருந்த மாரிமுத்துவை இடித்து தள்ளிக்கொண்டு ஏனைய கூட்டமும் சாமியை நோக்கி முன்னேறியது. கிருஷ்ணசாமி அன்னையின் முன் அமர்ந்து ஆத்திக பரவசத்தில் குங்குமமும், திருநீறும் வழங்கிக் கொண்டிருந்தார். முகமெங்கும் திரட்டு நிற்கும் பக்தி பரவசம். பெருமூச்சில் ஊற்றெடுக்கும் ஆன்மீக அங்கலாய்ப்பு. பொன்னியும், மாரிமுத்துவும் சாமியை நோக்கி நகர முயன்றனர். கூட்டத்தின் அலைப்பெருக்கு ஆட்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலைக்கழித்தது. அவசர கதியில் சிலபேர்கள் நறுக்கென்று மாரிமுத்துவின் காலை மிதிக்க, அவருக்குள் திராவிடக் கொள்கைகள் வெளிப்பட ஆரம்பித்தன.
உங்களுக்கு சாமியைத் தெரியும்னு சொன்னீங்கள்லா… கொஞ்சம் முன்ன போகப் பிடாதா? என்று பொன்னி நச்சரிக்க, பூஜை தாம்பாளத்துடன் கூட்டத்திற்குள் நுழைய முயன்றார் மாரிமுத்து. சிறிது நேரத்திற்குள் எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? மாரிமுத்துவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தூரத்தில் இருந்தாலும் கிருஷ்ணசாமியின் முகம் மாரிமுத்துவுக்கு தெளிவாகத் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை சாமியை நோக்கி சிரித்துப் பார்த்தார். தாம்பாளத்தட்டை தூக்கிப் பிடித்து கை அசைத்தார். கிருஷ்ணசாமி எல்லாவற்றையும் பார்த்தது போலிருந்தது. ஆனால் அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
சிறிதான தள்ளு முள்ளலுக்கு பின் கோவில் காவலாளிகள் எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்தனர். கடைசி ஆளுக்கு முன்னால் மாரிமுத்து நின்று கொண்டிருந்தார். முன்னால் எழுபது, எண்பது பேர் இருந்தனர். நீங்க ஒரு வகைக்கும் கொள்ளாது? என கோபப்பரிகாசம் செய்தாள் பொன்னி. சித்திரையின் கத்திரி வெயில் நெருப்பைக் கக்க, வியர்வையும், கோபமும் அனைவரையும் நனைத்தது. முக்கால் மணிநேரத்தில் வரிசை பாதியாக குறைந்திருக்க, கால்கடுக்க நின்றிருந்த மாரிமுத்துவுக்கு கோபம் கோபமாய் வந்தது. இரண்டொரு முறை மீண்டும் கிருஷ்ணசாமிக்கு சைகை செய்தார். பலனேதுமில்லை. திருப்பி போய் விடலாமாவென பொன்னியிடம் கேட்க, நேர்த்திக்கடனே முக்கியமென்றாள். பிராத்தனைப் பலனால் கிடைக்க வாய்ப்பிருக்கும் “ரெவனியூ இன்ஸ்பெக்டர்” பதவி வேறு கண் முன்னே அசைந்தாடியது. இடையிடையே கிருஷ்ணசாமியின் மீது மாரிமுத்துவுக்கு கோபம் கோபமாய் வந்தது. சாமிய நம்ப வேண்டியதுதான், நாங்க உசத்தியாகும்னு சொல்ற, இவனுகள எதுக்கு நம்பணும் என்கிற கமியூனிச சிந்தனை வேறு மேலோங்கியது. இவன் எப்படி நம்மள்ட்ட சைன் வாங்குகான்னு பாப்போம்? – மனதிற்குள் கங்கணம் கட்டினார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் யாருமே எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தேறியது.
மாரிமுத்துவின் முன்னால் நின்றிருந்த ஒரு பெண்மணி திடீரென்று பக்தி ஆவேசத்தில் நிலம் குத்தி, குதித்தெழ, நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி வைத்திருந்த தாம்பாளத்தட்டு பூஜை பொருள்களோடு தலைகீழாக விழுந்து சிதறியது. நடந்தது அபசகுனமென, பொன்னி முகம் மாற, கோபத்தோடும், சண்டையோடும் வீட்டுக்கு கிளம்பினர் மாரிமுத்து குடும்பத்தார்.
.மூன்று வார இடைவெளியில் அதே கீரிச் கிரீச் ராகத்தோடு மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. இருண்ட முகத்துடன் இருந்த மாரிமுத்துவுக்கு பியூன் மாசானம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“விடுங்க சார்… பணத்த கொடுத்து போஸ்டிங் வாங்கிருக்கானுக்கோ… நியாயப்படி பார்த்தா நீங்கதான் ரெவனியூ இன்ஸ்பெக்டர் RI ஆயிருக்கணும்…”
“போஸ்டிங் வராதது கூட பிரச்சனை இல்லை மசானம்… சீனியாரிட்டில முதல்ல இருக்குற எனக்கு, போஸ்டிங் தாராததுக்கு பொய்யா ஒரு காரணம் சொன்னாங்க பார்த்தியா… அந்த பழியைத்தான் என்னால தாங்கிக்க முடியல…”
“சார்… பணம் விளையாடும் போது என்ன வேணும்னாலும் சொல்லுவானுகோ… அது பொய்- ன்னு எல்லோருக்கும் தெரியும்… அதுக்காக கவலைப்படாதீங்க…”
“ரெம்ப எதிர்பார்த்த ப்ரோமோஷன்லா… அதுதான் வருத்தமா இருக்கு…” – என்று பேசிக்கொண்டிருந்த அந்த வினாடியில் கிருஷ்ணசாமி அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
மாரிமுத்து கண்ணசைக்க, மாசானம் நிலைமையுணர்ந்து வெளியேறினான். உள் நுழைந்த சாமியை பார்க்க, பார்க்க மாரிமுத்துவுக்கு ஏதோ ஒரு கோபம். அவர் உட்கார்வதற்குள் பேச ஆரம்பித்தார்.
“சாமி… உங்க அப்ரூவல் இன்னும் ரெடி ஆகல… ஏற்கனவே மாசானத்திட்ட சொல்லியிருந்தேனே… எதுக்கு அடிக்கடி வந்து டிஸ்டர்ப் பண்றீங்க?”
வந்ததும் மாரிமுத்து இப்படி பேசியது, கிருஷ்ணசாமிக்கு பெரும் நெருடலைத் தந்தது.
“இல்ல சார்… பேங்க்ல லோன் எல்லாம் அப்ரூவல் ஆயிட்டுத்து … இந்த டாக்குமெண்ட் மட்டும் தான் பாக்கி…”
“சாமி… உங்க அவசரத்துக்கெல்லாம் கவர்மெண்ட் ரூலை மாத்த முடியாது. விவசாய நிலத்துல கட்டிடம் கட்ட அனுமதி இல்ல… எதுவா இருந்தாலும் கேசு முடியுற வரை வெய்ட் பண்ணுங்க…”
“சார்… ப்ளீஸ்… உங்களுக்கு வேணும்னாலும்… “- என்று சாமி பேச ஆரம்பித்த அந்த வினாடி கடும் கோபத்திற்கு சென்றார் மாரிமுத்து. தேங்கி நின்ற மொத்த வெறுப்பையும் சாமியின் மீது பாய்ச்சினார்.
“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா சாமி… இனி இப்படி பேசுனேங்கண்ணா, லஞ்சம் கொடுக்க வந்ததா உங்க மேல போலீஸ்ல கம்ளைண்ட் கொடுத்துருவேன்… பெரிய மனுஷனாச்சேன்னு மரியாதையா பேசுனா, ரெம்பதான் ஓவரா பேசுறீங்க… இவ்வளவுதான் உங்களுக்குள்ள மரியாதை … இப்ப கிளம்புறேங்களா…”
மாரிமுத்து போட்ட சத்தத்தில் கிருஷ்ணசாமி கொஞ்சம் அதிர்ந்துதான் போனார். சட்டென்று எதுவும் பேசாமல் வெளியேறி விட்டார். எதிர்பாராத அவமானப் பேச்சு அவரை என்னவோ செய்தது. பேங்க் மேனேஜருக்கு என்ன பதில் சொல்லவதென குழம்பினார். சொந்தவீடு கனவு வெறும் கனவாகி விடுவோமென வெதும்பினார். நடை தளர்ந்து போய் கொண்டிருந்த சாமியை, பின்தொடர்ந்த மாசானம் தன் “தரகு” வேலையைத் தொடங்கினான்.
“சாமி… நேரம் தெரியாம போய் மாட்டிகிட்டேளே… ஏற்கனவே அவரு பயங்கர டென்ஷன்ல இருந்தாரு…”
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும் மாசானம்…”- கிருஷ்ணசாமி கலங்கினார்.
“அதில்லை சாமி … ஏற்கனவே அவரு டென்ஷன்ல இருந்தாரு… அதுக்கு மேல, உங்க ஆட்கள்னாலே வேற அவருக்கு புடிக்காது…”
எங்க ஆட்கள புடிக்காதா… ஏன் மாசானம்… ஒண்ண மட்டும் நல்ல தெரிஞ்சுக்கோ… ஒரு மனுஷனை இன்னொரு மனுஷனுக்கு புடிக்காம போறதுக்கு காரணம் ஜாதி, மதம், இனம், நிறம் எதுவும் காரணம் இல்லை… கொடுக்கப்படும் அதிகாரம்தான்…அது ஒண்ணுதான்… அன்னைக்கு அதிகாரம் எங்க கைல இருந்தப்ப நாங்க ஆடுனோம்… இப்ப நீங்க ஆடுறீங்க… இங்க உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதில்லாம் எதுவும் இல்ல… அதிகாரம் உள்ள மனுஷன், அதிகாரம் இல்லாத மனுஷன்… ரெண்டே பேருதான்… இதத் தவிர வேற எதுவும் இல்லை. பாக்கலாம் மாசானம்… உங்களுக்கு ஒரு அம்பேத்கர் வந்த மாதிரி, எங்களுக்கும் ஒரு அம்பேத்கர் வராமலா போவாரு… பாக்கலாம்…
இல்ல சாமி… உங்க ஆட்கள் அந்த காலத்துல…
இருக்கட்டும் மாசானம்… என் முன்னோர்கள் செய்ததுக்கு நாங்க அனுபவிக்கணும்னா… இப்ப நீங்க செய்றதுக்கு…- சட்டென்று பேச்சை நிறுத்தி விரக்தியில் நடக்க ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.
மாசானத்திற்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
***
அருமையான கதை!! அன்றாட வாழ்வின், மனித உணர்வுகளின் நிதர்சனங்களை, சோகங்கள துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்!!👍👍
கதை பல விவாதங்களை எழுப்புகிறது. அதிகாரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றால் அந்த அதிகாரம் எங்கிருந்து வருகிறது? அதிகாரம் செலுத்துவதற்கு மன விகாரங்கள் மட்டும்தான் காரணமா?
தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை பேர் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருக்கிறார்கள்? பஞ்சாயத்து தலைவர் ஆனாலும் உட்காரக் கூட முடிவதில்லை. கொடியேற்ற முடிவதில்லை. அதே போல் எத்தனை பிராமணர்கள் தங்களுடைய தனிப்பட்ட வேலைக்கு அரசு அலுவலகங்களுக்கு அலைகிறார்கள்? கொடுக்க வேண்டியதை கொடுத்தோ சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியோ வேலையை முடித்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் எல்லோரும் அப்படித்தான். மேலும் கதாசிரியரே சொல்வது போல ‘அந்தணர்களை வாரி அணைத்து முத்தமிடும் அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ இடம்பெயர ரகு போத்தியின் குடும்பத்தினருக்கு’ வாய்ப்பிருகின்றது.
இன்னொரு விவாதம் ஆதிக்க-நாத்திகம் குறித்தது. ஆசைதான் கடவுள் நம்பிக்கைக்கு காரணம் என்கிறார் கதாசிரியர். பயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். நோய், எதிர்காலம் என பலவற்றிற்கும் நமக்கு அச்சம் இருக்கிறது. ‘அஞ்சி அஞ்சி சாவார்.அவனியில் இவர் அஞ்சாத பொருளே இல்லை’ என்று பாரதி சொன்னான். ஆனால் அச்சத்தை எப்படிப் போக்குவது? கதையில் வரும் கோமதி அம்மன் சிறு தெய்வம் என்று சொல்லிவிட்டு அடுத்த பாராவில் ‘சந்நிதியின் முன்னே திரையிருக்க, உள்ளுக்குள் உஷத்கால பூஜைக்கான அலங்கார ஏற்பாடுகளை கிருஷ்ணசாமியும், அவர் உதவியாளர்களும் செய்து கொண்டிருந்தனர். ‘ என்று கூறுகிறார். இந்த முரண்பாடு ஒரு புறமிருக்க ‘பெரும் தெய்வ’ வழிபடும் ‘சிறு தெய்வ’ வழிபாடும் ஒன்றுதானா?
முக்கியமான விவாதம் அம்பேத்கர் குறித்தது. கதையை படிக்கும்போது இரண்டு மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. ஒன்று அம்பேத்கார் ஒரு சாதியத் தலைவர் என நிறுத்துவது. ‘உங்களுக்கு ஒரு அம்பேத்கர் வந்த மாதிரி, எங்களுக்கும் ஒரு அம்பேத்கர் வராமலா போவாரு… பாக்கலாம்…’ என்கிற வரி அம்பேத்காரின் பொருளாதார, சட்ட, சமூக ஞானம், இந்தியாவிலுள்ள எல்லோருக்காகவும் அவர் இயற்றிய சட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை மறைக்கும் முயற்சியில் போய் சேர்ந்து விடுகிறது. இன்னொன்று ஒடுக்கப்படும் பிரிவினர் எவரானாலும் அம்பேத்கார் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்பது.(பிராமணர்கள் ஒடுக்கப்படவில்லை என்பது தனி.)
‘தாச்சி’ என்கிற கதையில்(சொல்வனம் இதழ் 245) பெண்கள் மாவட்ட ஆட்சி தலைவராக வர முடிகிற அதே நேரத்தில் அவர்கள் பொது இடங்களில் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லை’ என்று வலுவாக பேசிய தெரிசை சிவா இதில் ஒரு பிரிவு அதிகாரத்தில் இருப்பது போலவும் இன்னொரு பிரிவு ஒடுக்கப்படுவது போலவும் தலைகீழாக சித்தரித்திருப்பது நெருடலாக உள்ளது. இரண்டு பேரின் உள்ளக் குமுறலை மட்டும் காட்டி முடிவை வாசகனின் சிந்தனைக்கு விட்டிருக்கலாம்.
‘உங்களுக்கு ஒரு அம்பேத்கர் வந்த மாதிரி, எங்களுக்கும் ஒரு அம்பேத்கர் வராமலா போவாரு… பாக்கலாம்…’ என்கிற வரி அம்பேத்காரின் பொருளாதார, சட்ட, சமூக ஞானம், இந்தியாவிலுள்ள எல்லோருக்காகவும் அவர் இயற்றிய சட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை மறைத்து அம்பேத்கார் ஒரு சாதியத் தலைவர் என நிறுத்தும் முயற்சியில் போய் சேர்ந்து விடுகிறது. இன்னொன்று ஒடுக்கப்படும் பிரிவினர் எவரானாலும் அம்பேத்கார் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்பது.(
தோழர் உங்களுக்கு ஒரு அம்பேத்கர் எங்களுக்கு ஒரு அம்பேத்கர் இல்லை அவர் எல்லோருக்கும் ஒரே அம்பேத்கர்தான்.
இன்னும் இட ஒதுக்கீட்டால் அத்தனை மக்களும் முன்னேற வில்லை அத்தனை பார்பனரும் கீழே போக
வில்லை. ஆய்வு செய்து எழுதுங்கள் அம்பேத்கர் பறித்து தரவில்லை சமபடுத்தினார். பார்பனர்கள் இன்னும் மேலேதான் இருக்கிறார்கள் அத்தனை அதிகார பதவிகளிலும், சங்கி தனமான கதை நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அம்பேத்கர் பொதுவனவர் திரிக்காதீர்கள்.