விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்

This entry is part 22 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இந்திய கிராமப் பள்ளி என்றவுடன் நமக்கெல்லாம் பல ஞாபகங்கள் வந்து மறையும். அதில் ஒரு முக்கிய ஞாபகம், பள்ளியின் கூரை மற்றும் ஓடுகள். இந்தியப் பள்ளிகள், சிறு வியாபாரங்கள் மற்றும் பல அமைப்புகள் கூரைச் செலவைக் குறைக்கப் பயன்படுத்தும் ஒரு பொருள் ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) என்னும் மலிவான பொருளால் செய்யப்பட்ட கூரை. ஏன், சில கிராமப்புறத் தொழிற்சாலைகளின் கூரையும் ஆஸ்பெஸ்டாஸால் செய்யப்பட்டவையே. இன்று மேற்குலகில் முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒரு தயாரிப்பு ஆஸ்பெஸ்டாஸ். ஆனால், வளரும் நாடுகளில் இன்றும் இந்தப் பொருள் பயனில் உள்ளது.

இந்தச் சாதாரணர்கள் பயன்படுத்தும் பொருளில் என்ன விஞ்ஞான மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என்று தோன்றலாம். இதற்குமுன் நாம் பார்த்த டிடிடி–யும் சாதாரணர்கள் பயன்படுத்தும் பொருள்தான் – பூச்சி மருந்து அல்லது மலேரியாக் கொல்லி என்று பார்ப்பதைவிட, இவை மலிவான ரசாயனங்கள் என்பதே முக்கியம். டிடிடியைப்போல, வளரும் நாடுகள் இன்னும் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட ஒரு பொருள் ஆஸ்பெஸ்டாஸ். அத்துடன், இதில் மேற்குலகம் லாபம் பார்த்து, விஞ்ஞானத்தைத் திசைதிருப்பி எல்லா முயற்சிகளும் எடுத்துப் பிறகு வேறு வழியில்லாமல், தடையை ஒப்புக்கொண்டுள்ளன. ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்பதைப்போல, வியாபாரத்தில் லாபம் என்பது டிடிடி விற்றோ அல்லது ஈயம் கலந்த பெட்ரோலை விற்றோ, எப்படி இருந்தாலும் விஞ்ஞானம் குறுக்கே வந்தால், அதைத் திசைதிருப்ப வியாபாரங்கள் என்றுமே தயார்.

விஞ்ஞானம்

சரி, இதை விவரமாகப் பார்க்குமுன், முதலில் வழக்கம்போல ஆஸ்பெஸ்டாஸ் விஞ்ஞானத்தைக் கொஞ்சம் அலசுவோம். ஆறு வகையான கனிமப் பொருள்களுக்குப் பொதுவான பெயர் ஆஸ்பெஸ்டாஸ். அதிக நார்கள்கொண்ட சிலிகேட்டினால் (silicates) உருவானவை இவை. ஆஸ்பெஸ்டாஸ், மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாது. இதனால், பல நூறு ஆண்டுகளாக ஆஸ்பெஸ்டாஸ் ஒரு கட்டுமானப் பொருளாக வெற்றிநடை போட்டது உண்மை.

  1. க்ரைஸொடைல் (Chrysotile) என்பது வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் என்று அழைக்கப்பட்டது. நளடைவில் அதுவே ஆஸ்பெஸ்டாஸ் என்று சொல்லப்பட்டது. இதைச் சிமெண்ட்டுடன் கலந்து ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் என்றும் விற்கப்பட்டது(படுகிறது). பெரும்பாலும் கூரை, தரை, சுவர்கள் என்று கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்பட்டது. இதைத்தவிர வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் ஒரு பெரும் தொழில் சார்ந்த பொருளும்கூட. ஊர்த்திகளின் பிரேக் லைனிங், கொதிகலன்களில் சீல்கள், குழாய்களில் காப்புறை என்று என்று பலவிதப் பயன்கள் இதற்கு இருந்தது உண்மை.
  2. அடுத்தபடியாக, அமோஸைட் (Amosite) என்பதும் அரக்கு நிற ஆஸ்பெஸ்டாஸ். இது சில காலங்களுக்குக் குழாய் காப்புறை மற்றும் கூரை ஓடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
  3. க்ரோஸிடோலைட் (Chrocidolite) என்பது நீல நிற ஆஸ்பெஸ்டாஸ். இதன் முக்கியப் பயன் நீராவி எஞ்சின்களில் காப்புறையாகப் பயன்படுத்துவது. உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் நிறைந்த குழாய்களைப் பாதுகாக்கும் பொருள் இது.
  4. ஆந்தோஃபைலைட் (Anthophylite) கட்டுமானத்திலும் சில காப்புறைப் பயன்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டாலும் க்ரைஸொடைல்போல அதிக அளவு பயனில் இல்லை.
  5. ட்ரேமோலைட் (Tremolite) மற்றும் ஆக்டினோலைட் (Actinolite) ஆகிய இரண்டு வகைகளும் வியாபாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கவில்லை. இவை இரண்டும் மற்ற ஆஸ்பெஸ்டாஸ் வகைகளை மாசுபடுத்தும் வகை.

பெரும்பாலும் ஆஸ்பெஸ்டாஸ் என்றவுடன் விஞ்ஞானரீதியில் க்ரஸோடைல் என்பதையே குறிக்கும். ஏனென்றால் 95% பயன் இதற்குத்தான். அல்லது 95% லாபம் இதிலிருந்துதான்.

இவ்வளவு பயனுள்ள பொருள் ஏன் விஞ்ஞானிகளின் பார்வையில் ஒரு மோசமான பொருளானது?

ஆஸ்பெஸ்டாஸ் உடல்நலப் பிரச்னை

19–ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே கனடா, யூரோப் மற்றும் அமெரிக்காவில் ஆஸ்பெஸ்டாஸின் மனித உடல்நலம் பற்றிய கவலைகள் பதிவாகியுள்ளன. 1920–ல், ஆஸ்பெஸ்டாஸிஸ் என்ற நோய் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிவந்தன. இந்த நோய் வந்தால், சுவாசிப்பது கடினமாகும். அத்துடன், ஆஸ்பெஸ்டாஸ் சூழலில் இயங்கும் மனிதர்களின் நுரையீரலும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் பதிவுசெய்தார்கள்.

1930–களில் விஞ்ஞானிகள் ஆஸ்பெஸ்டாஸிற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதைக் கண்டறிந்து வெளியிட்டார்கள். மெஸொதெலியோமா (mesothelioma) என்பது, நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களை அரிக்கும் ஒரு வகைப் புற்றுநோய். இன்னும் ஆராய்ந்ததில், அமோஸைட் மற்றும் க்ரோஸிடோலைட் இந்த விஷயத்தில் மிகவும் மோசம் என்று தெரியவந்தது. இருப்பினும், பரவலாகப் பயனில் இருந்த க்ரைஸொடைல் வகையின் தாக்கம் குறைவாக இருந்தாலும் முற்றிலும் பாதுகாப்பானது என்று விஞ்ஞானிகளால் முடிவுக்கு வர முடியவில்லை. குறிப்பாக, க்ரைஸொடைல் பொடி இருக்கும் சூழலில் விலங்குகள் புற்றுநோய் வந்து இறக்கவும் செய்தன. முடிவாக, ஆஸ்பெஸ்டாஸுடன் நெடுநாள்களுக்கு அந்தச் சூழலில் வேலைசெய்தால், புற்றுநோய் வர நிறையச் சாத்தியங்கள் உள்ளன என்று திட்டவட்டமாக 1970-களில் நிரூபிக்கப்பட்டது.

ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தித் தடை

பல்லாண்டுகள் பாதிக்கப்பட்டவர்கள் போராடிக் கடைசியாக, மேற்குலகில் ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி படிப்படியாகத் தடைசெய்யப்பட்டது. கீழுள்ள பட்டியல் ஒரு சாம்பிள்தான்.

நாடுவருடம்தடைகுறிப்பு
ஆஸ்திரேலியா1967க்ரோஸிடோலைட் தடை

1980அமோஸைட் தடைகட்டுமானத் தொழில் இழுபறியால் நேர்ந்த நிகழ்வு

2030முழுத் தடைஇது ஒரு குறிக்கோளே தவிர முடிவு அன்று
அமெரிக்கா1991முழுத் தடைஇது நீதிமன்றத்தில் தோற்று, அமெரிக்க நிலை குழப்பமானதாகிவிட்டது
கனடா2018முழுத் தடைஅமெரிக்கா போலல்லாமல் இந்தத் தடை அமல்படுத்தப் பட்டுள்ளது
ஜப்பான்2012முழுத் தடை2006 முயற்சி தோல்வியடைந்து மீண்டும் எடுத்த முயற்சி இன்று நடைமுறையில் உள்ளது
யூ.கே.1985உற்பத்தித் தடைஇறக்குமதி அனுமதிக்கப்பட்டது

1989இறக்குமதித் தடை

இந்த நிலையில், இன்னும் சில ஊர்திகளின் ப்ரேக் பாகங்களில், வளர்ந்த நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்படுகின்றன. ஏறக்குறைய, உலகின் 50 நாடுகளில் இன்று ஆஸ்பெஸ்டாஸ் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல வளரும் நாடுகள் ஆஸ்பெஸ்டாஸைப் பயன்படுத்தி வருகின்றன. உதாரணத்திற்கு, இந்தியா, ஆஸ்பெஸ்டாஸ் தயாரிப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது. ஆனால், 2017 வரை உலகின் மிகப் பெரிய ஆஸ்பெஸ்டாஸ் இறக்குமதி நாடு இந்தியா. பெரும்பாலும் கனடாவிடமிருந்து இந்தப் பொருளை இறக்குமதி செய்துவந்தது. இன்று ரஷ்யா மற்றும் சைனா உலகின் பெரும் ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் நாடுகள்.

ஆஸ்பெஸ்டாஸின் வியாபாரங்கள் எப்படி விஞ்ஞானத்தைத் திரித்தன மற்றும் அவை எப்படி முறிக்கப்பட்டன என்று பார்ப்போம்.

வியாபார லாபத்திற்காக விஞ்ஞானத் திரித்தல்

வாதம் செய்வது என் கடமை
அதில் வழியைக் காண்பது உன் திறமை
– கவிஞர் கண்ணதாசன்

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, 1930 முதல் ஆஸ்பெஸ்டாஸின் தீய உடல்நலப் பாதிப்புகள் விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட ஒன்று. ஆனால், 1940 முதல் 1980 வரை ஆஸ்பெஸ்டாஸ் தொழில் மிக லாபகரமாகக் கொழித்த காலம். அதிகமாக, விஞ்ஞான ஆராய்ச்சி மக்களைச் சென்றடையாமல் பார்த்துக்கொண்டது இந்தத் தொழில். அத்துடன், அப்படியே வெளிவந்தாலும், முடிந்தவரை குழப்பித் திசை திருப்பிவிடுவதில் வெற்றியும் பெற்றது. இரண்டு லட்சம் ஊழியர்களைக்கொண்டு பல பில்லியன் டாலர்கள் ஈட்டிய ஒரு தொழில் இது. குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸினால் வரும் வியாதிகளைப் பற்றிய செய்திகள் தொழிலாளர்கள், பொது மக்கள் மற்றும் பயனர்களைச் சென்றடையாமல் பார்த்துக்கொண்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் பயனர்கள்.

  • ஜான்ஸ் மேன்வில் (Johns Manville) 1850–களில் தொடங்கிய ஒரு மிகப் பெரிய ஆஸ்பெஸ்டாஸ் தயாரிப்பாளர். 1931–ல் ஆஸ்பெஸ்டாஸினால் நோய் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், எந்தவித பாதிப்பும் பயனர்கள்களுக்கும் தொழிலளர்களுக்கும் இல்லை என்று ஜான்ஸ் மேன்வில் மற்றும் இன்னொரு தயாரிப்பாளரான ரேபெஸ்டாஸ் நிறுவனங்கள் செய்தித்தாள்களில் 1932-ல் பெரிய அளவில் விளம்பரம் செய்ததோடு, மாற்றுச் செய்திகளையும் பரப்பியது.
  • ஜான்ஸ் மேன்வில் நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளில் இன்று சிகரெட் பெட்டிகளில் இருக்கும் உடல்நல எச்சரிக்கை போன்ற குறிப்புகளைப் போடமறுத்தது. ”இது முழுவதும் நிரூபிக்கப்படாத விஞ்ஞானம். அத்துடன் இன்னும் நீதிமன்றங்கள் முடிவு செய்யவில்லை” என்று சாக்குச் சொல்லியது. அதன் அச்சம் என்னவோ, தனது லாபம் குறைந்துவிடும் என்பதே.
  • 1940–களில் ஜான்ஸ் மேன்வில், தன்னுடைய தொழிற்சாலைகளில் பாதுகாப்புச் சோதனைகள் நடக்காமல் வெற்றிகரமாகப் பார்த்துக்கொண்டது.
  • 1949 –ல் ஜான்ஸ் மேன்வில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நோய் விடுப்பு எடுத்துக்கொண்டால், அது ஆஸ்பெஸ்டாஸினால் என்று சொன்னால் வேலை போய்விடும் என்பதால் வெளியே சொல்லவில்லை.
  • 1962–ல் புற்றுநோய்க்கும் ஆஸ்பெஸ்டாஸிற்கும் தொடர்பு உண்டு என்று நிரூபிக்கப்பட்டது. அதுவரை, தமக்கு எதுவுமே தெரியாது என்று ஆஸ்பெஸ்டாஸ் தொழில்கள் சொல்லிவந்தன.
  • 1971–ல் அமெரிக்காவில், நீதிமன்றத்தில் ஆஸ்பெஸ்டாஸ் தொழிலின்மீது நஷ்டயீடு கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. சிலருக்கு நஷ்டயீடு கிடைத்தாலும், இவை முடிவுக்கு வருவதற்குமுன், பல ஆஸ்பெஸ்டாஸ் நிறுவனங்கள் தாம் ஏற்கெனவே திவாலாகிவிட்டதாகச் சொல்லிக் கையை விரித்துவிட்டன.
  • இந்தத் தொழிலின் மிகப் பெரிய நிறுவனமாக இருந்தது ஜான்ஸ் மேன்வில். இதைத் தவிர, ரேபெஸ்டாஸ் மென்ஹேட்டன் (Raybestos Manhattan) என்ற நிறுவனம் ஆஸ்பெஸ்டாஸைக்கொண்டு தொழில் இழைகளைத் தயாரித்து மிகப் பெரிய லாபம் ஈட்டியது. இந்த இழைகள் கார்களின் ப்ரேக்குகளில் பயன்படுத்தப்பட்டன. அதைத் தவிர இதற்குப் பல தொழிலகங்களில் பயனும் இருந்தது. இழைகள் என்பது மிகவும் நோயைப் பரப்பவல்ல ஒரு கட்டமைப்பு. ஆனால், ரேபெஸ்டாஸ் கடைசிவரை தன்னுடைய தயாரிப்புகளால் எந்த உடல் பிரச்சனையும் இல்லை என்று சாத்தித்தது. பெண்டிக்ஸ் (Bendix, இன்றைய Honeywell) நிறுவனம், கார்களுக்குத் தேவையான பல உராய்வுப் பொருட்களைத் தயாரித்தது. இதைத் தவிர டர்னர் மற்றும் நீவால் (Turner & Newall) என்ற பிரிடிஷ் நிறுவனமும் ஒரு பெரிய தயாரிப்பாளர். இந்த நான்கு நிறுவனங்களும் விஞ்ஞானத்தைத் திரிப்பதில், ஒரு 70 வருடம் வெற்றிபெற்றன, பல நோயுற்ற தொழிலாளர்கள், பயனர்களை ஒதுக்கி லாபம் பார்த்தன.

ஆஸ்பெஸ்டாஸ் இன்னும் உலகம் முழுவதும் தடைசெய்யப்படவில்லை. கனடா போன்ற வளர்ந்த நாடுகள் 2018–வரை இதைத் தடை செய்வதை இழுத்தடித்தன. நாம் முன்னமே சொன்னதுபோல, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இன்னும் ஆஸ்பெஸ்டாஸ் பயனில் உள்ளது. ஓஸோன் ஓட்டை போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் எதுவும் ஆஸ்பெஸ்டாஸிற்கு இல்லை. இன்று மேற்கத்தியத் தயாரிப்பாளர்கள் தங்களது தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள். இத்தனை தகவல்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் மூலம் கிடைத்தாலும் வளரும் நாடுகளில் அத்தனைத் தாக்கம் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆஸ்பெஸ்டாஸினால் வரும் நோய் உடனே தெரியாது. அதுவும் இளைஞர்களைச் சட்டென்று பாதிக்கும் விஷயமன்று. ஆனால், மேற்குலகில் நடந்ததுபோல, வளரும் நாடுகளிலும் வியாபாரங்கள் திவாலாகிக் கைவிரிக்கக்கூடும். அதற்குமுன் பொது மக்கள் விழித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

Series Navigation<< விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்துடால்கம் பவுடர் >>

One Reply to “விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.