ஆனந்த் குமார்

ரயிலோடு நீந்திப் போனவன்
~
பெரிய பெரிய ஊர்களில்
எல்லோரையும் இறக்கிவிட்டு
ரயில் மட்டும் என்னுடன்
என் ஊருக்கு வருகிறது
காலியான இருக்கைகள்மீது
கூடுகிறது காட்சிகளின் எடை.
அமைதி இழக்கச்செய்கின்றன
நிறைந்து வழியும் ஜன்னல்கள்
எதிர்ப்பக்கம் ஓடிக் கண்டேன்
மரங்கள் ஓடிச்சென்று
மலைமீது ஏறின
என் பக்கம் மீண்டு நோக்குகிறேன்
குளமொன்று வழுக்கி
நிலநுனியில் வீழ்ந்தது
உள்ளே இருந்து பார்க்கப்பார்க்க
முடிவில்லாமல் நீள்கிறது
வெளியிலிருந்து பார்த்தபோது
கடந்து போன ரயில்
***

பெரியவன்
-பல வருடங்களுக்குப் பிறகு
பார்க்கச் சுருங்கியிருக்கிறது
நான் வளர்ந்த வீடு
நான் முடிவில்லாமல்
தவழ்ந்த அறை
இப்போது எனக்கு மட்டும்
படுக்கக் கொள்கிறது
எல்லையே அறிந்திடாத
எனது ஊரை
இன்றைக்கே மூன்றுமுறை
சுற்றிவிட்டேன்.
தாமரைக் குளமிறங்கி குளிக்கையில்
கால்தடவி அடியில் கண்டுகொண்டேன்
சிறுத்துவிட்ட அதே வழுக்குப்பாறையை.
அதில் ஏறிநின்றவன் கால்கொள்ளாமல்
வழுக்கி வீழ்ந்தேன்
ஒரு நொடி
அதே பழைய ஆழத்துள்
திமிரி மூச்சடக்கி
துள்ளி மேலெழுந்தேன்
கண்டேன்
நீலவெளி.
அலைகள் – மூன்று கவிதைகள்

அலை தீண்டாத மணல்
அங்கே நான் அமர்வதில்லை
அதில் ஒரு பிடிப்பு இல்லை
ஒரு அலை தீண்டிப் போனபின்
மறு அலை வந்து சேரும்முன்
வானம் கொஞ்சம் மிளிர்கிறது
அதன்மீதே
நான் அமர்கிறேன்
அங்கேதான்
எனது வீட்டை கட்டுகிறேன்.
அதுவே இன்னும்
உறுதியாய் இருக்கிறது
நிச்சலனமாய்
ஏந்திக்கொள்கிறது
நீண்ட மடி
பெருந்துயரென
வழிவிட்டு வழிவிட்டு
வருகிறது
கரைதட்டி எழவியலா
அலைகள்
மணலில்
படகில்
இருப்பவன் பார்க்கிறான்
தூரக்கடலின் பேரோல விழுங்கலை
தொடும்முன் கரையும்
நீண்ட சொற்களை
துழாவுகிறான்
திசைகளை
ஒளியை செலுத்தி
மேலெழுகிறான்
கடக்கிறான்
துளியை