(மகரந்தம் குறிப்புகள்)

அது மிகவும் இனிமையான மாலைப் பொழுது. காற்றில் மலர்களின் வாசம் கலந்து வீசியது. பறவைகள் குதூகலத்துடன் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. அஷ்வபதியும், அரசியும் மௌனமாக அந்த நந்தவனத்தில் நடந்து கொண்டிருந்தார்கள்; அரசர் திடீரென்று சிரிக்கவே அரசியார் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டார். அரசர் தன்னைப் பார்த்து ஏதோ கேலி செய்வதாக நினைத்த அவருக்கு சற்றுக் கோபம் வந்தது. “ஏன் சிரித்தீர்கள்?” என்று கேட்டார். இந்த எறும்புகள் சேட்டையாகப் பேசிக்கொண்டு செல்வதைக் கேட்டேன், சிரிப்பு வந்தது என்றார் அஷ்வபதி. “யாரை ஏமாற்றுகிறீர்கள்? எறும்புகள் பேசியதாம்; அதைப் புரிந்து கொண்டு இவர் சிரித்தாரம். அப்படி என்னதான் பேசியது அவைகள்?” என்றார் அரசி. ‘அது தேவ இரகசியம்; நான் சொல்லக்கூடாது என்ற ஆணையின் பேரில் தான் அந்த மொழியை எனக்கு முனிவர் கற்பித்துள்ளார்; மீறினால் என் தலை வெடித்துவிடும்,’ என்றார் அரசர். “நீங்கள் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை என எனக்கு நிரூபணம் வேண்டும்; சொல்லுங்கள், தலை வெடிக்கிறதா என்று பார்க்கிறேன்,” என்றார் அரசி. இராமாயணத்தில் இடம் பெறும் காட்சி இது. இந்த அரச தம்பதியர், கைகேயின் பெற்றோர்களான கேகய மன்னனும், அவன் அரசியும்.
உயிர் நீட்சியை எப்படி இயற்கை சமைத்திருக்கிறது என்பது எப்போதுமே ஒரு விந்தைதான். அனைத்தும் தன் இனத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ ஆசைப்படுகின்றன. இந்த விழைவு இல்லாவிடில் உலகம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்குமா? அதிலும் தேர்ந்த நிலத்தில் விதைத்து பயிரினைப் பெருக்குவதற்காக சிறு உயிரியான எறும்புகள் எத்தனை வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்பது ஆச்சர்யம் நிறைந்த ஒன்று.
‘இளவட்டக்கல்’ ‘ஏறு தழுவுதல்’ போன்றவைகளின் மூலம் ஆணின் உடல் பலம், வீரம் மற்றும் விவேகம் கண்டறியப்பட்டு அவனுக்கு மாலை சூட்டி மனைவியானார்கள் பெண்கள். அப்பெண்கள் வளர்த்த எருதுகள் அப்பெண்களின் தீரத்தையும், அவர்களின் வளப்பத்தையும் காட்டியதாக சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ‘தகுதிக்கு ஏற்ற மரியாதை!’
குழுவாக வாழத் தொடங்கிய மனிதன், தலைமை ஒன்றைக் கண்டெடுத்து, அவன் அரசனென ஆகிப், பின்னர் அவனது வம்சம் ஆளும் நிலையில் முடியாட்சி முறை கொண்டு வந்த சாதக, பாதகங்களை நாம் அறிவோம்; அதைப்போலவே மக்களிடமிருந்து, மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் சில நேரங்களில் வியப்பிலும், பல நேரங்களில் வேதனையில் ஆழ்த்தியதையும் பார்த்துக் கொண்டு வருகிறோம். அனைவரும் சமம் என்று சொல்லியே அதிகாரத்தை மையப்படுத்தும் இடது சாரிகளின் உண்மை உருவத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் கால்களில் மிதிபட்டு, கைகளில் நசுங்கும் எறும்புகள், (‘இந்திய குதிக்கும் எறும்புகள்’) எத்தனைத் திறமையாகத் தங்கள் அரசியைத் தேர்ந்தெடுக்கின்றன என அறிந்தால், அதற்கான திறன் போட்டி வழிமுறைகளை அறிந்தால், நாம் வெட்கப்பட்டுத் தலை குனிவோம்.

செங்குத்தாகத் தாவி, தன் எடையைப் போல் இரு மடங்குள்ள இரையை இவை எளிதாகப் பிடிக்கும். இதை விட வியப்பான செய்தி ஒன்று உண்டு-அவை தங்கள் மூளையை 20% வரை பெருக்கவும் செய்யும், குறைக்கவும் செய்யும். தேன் வண்டுகள் தங்கள் மூளையினை அதிகப்படுத்துவது அறிந்த ஒன்று; ஆனால், இந்த ‘ஜம்பிங்க் ஆன்ட்’ தான் இருவழி மின் சொடுக்கியைப் போல தேவையான நேரங்களில் மூளையைப் பெருக்கிக் கொள்கிறது; தேவையில்லையெனில் சுருக்கிக் கொள்கிறது. (இந்த வசதி மனிதனுக்கு இருந்தால், பிடித்த உணவு உண்கையில், வயிற்றினைப் பானை போல் பெருக்கிக் கொள்ளவும், மற்ற நேரங்களில் முதுகுடன் ஒட்டிய வயிற்றுடனும் இருக்கவும் எவ்வளவு எளிதாக இருக்கும்? மூளையைப் பற்றிய எடுத்துக்காட்டு இங்கே பொருந்தாது; ஏனெனில் இருக்கும் மூளையில் மனிதன் அதிக பட்சமாக கால் பங்கினைத் தான் பயன் படுத்துகிறான்!)
சரி, இந்த எறும்புகள் ஏன் இவ்வாறு செய்கின்றன? அவைகளின் காலனியிலும் அரசிக்குத்தான் முதல் மரியாதை. மற்ற எறும்புகளை விட இவை ஐந்து மடங்கு நீள் ஆயுள் கொண்டவை. ஆண் எறும்புகள் வாரிசுகளை உருவாக்குவதற்கு மட்டுமே செயல் படுகின்றன; மற்றப் பெண் எறும்புகள் அரசியின் காலடிக் கட்டளைக்குக் காத்து ஏவல் செய்பவர்கள். அந்த அரசி மரணிக்கையில், அவளது பெண் வாரிசு, தன்னை அரசியாகக் கருத முடியாது. ஒரு 40 நாட்களுக்கு, 70% வேலைக்காரப் பெண் எறும்புகள் தங்களுக்குள் தங்கள் உணர்கொம்புகளால் பலவித போட்டிகள் நடத்துகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் போதே உடல் அமைப்பில் மாறுதல்கள் தென்படாமல், உள் உறுப்பில், குறிப்பாகக் கருவறையில் பெரும் மாற்றத்தை க்ரியா ஊக்கிகள் கொண்டு வருகின்றன; இந்த ‘விளையாட்டுக் களம் புகுவோர்’களில் (வாடி வாசல்!) 5 முதல் 10 வரையிலான குழுக்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு அவைகளின் வாழ் நாள் முழுவதும் அவை இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.
வென்றவர்கள் அரசிகள். அவர்கள் நிலவறையில் ஒளி அதிகம் இல்லாமல் வாழ்வார்கள். அவர்கள் இரையைத் தேட வேண்டாம்; அவர்களுக்கு அது வழங்கப்பட்டு விடும். எனவே கண் பார்வைக்கு அவள் செலவழிக்கக் கூடிய சக்தி அவள் கருவறைக்குச் செல்கிறது. அவள் பாதுகாப்பாக இருப்பதால், எதிரிகள் படையெடுப்பு அவள் இருப்பிடம் வரை வருவதற்கும் சந்தர்ப்பம் குறைவு. தன் மூளையின் 20% சக்தியை அவள் கருவறைக்குள் கொண்டு போய் விடுகிறாள். தன் இனம் பெருகும் ஆசையில் அவள் கர்ப்பவதியாக முட்டைகள் இட்டுக்கொண்டே இருக்கிறாள். பதவிக்குப் போட்டியிட்ட மற்ற எறும்புகள் ஏவல் பணியாளராக, உணவு சேகரித்துக் கொணர்பவராக, காவல் செய்வோராக, முட்டை கொண்டு வற்புலம் சேரும் படையின் பாதுகாவலராக, ஆட்சியைக் கவிழ்க்காமல், கொலை செய்யும் வஞ்சகம் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல் ஆற்றுகின்றன.
இத்தகைய ஆற்றல் வலிமை மிக்க கருவறையில் உற்பத்தியாகும் சினைகளால், சிறந்த அடுத்தத் தலைமுறையினை உருவாக்கும் உந்துதலை இந்தச் சிற்றுயிர்களிடம் எது ஏற்படுத்தியிருக்கக் கூடும்? மேலும் ஒரு சுவையான செய்தி எது எனில் இந்த வாடிவாசல் எறும்புகளைத் தனியே எடுத்து ஆய்வுகள் செய்கையில் தங்களுடைய பெருகிய கருவறையைச் சுருக்கி மூளையின் அளவை முன்பிருந்த அளவிற்குக் கொணர்ந்து தங்கள் பார்வையினையும் வழக்கம் போல் அவை அமைத்துக் கொண்டன. வாடிவாசல் போட்டியில் தோற்றவை, வேலை செய்வதற்கு ஏற்ற வண்ணம் உருமாறிக் கொள்வதும் நாம் அறிய வேண்டிய ஒன்று. ‘மெய்த்திரு பதம் மேவு என்ற போதினும் இத்திரு துறந்து ஏகு என்ற போதினும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை’ என்று சீதையின் பார்வையில் இராமனை வர்ணிப்பார் கம்பர். இந்தச் சின்னஞ்சிறு உயிரி ராமாயணம் கேட்டிருக்கும் போலும்.