மின்னல் சங்கேதம் – 6

This entry is part 06 of 12 in the series மின்னல் சங்கேதம்

(வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

இரண்டு வாரங்கள் சென்றன.

கிராமங்களில் மக்கள் கவலையோடிருந்தனர். அரிசி கிடைப்பது மேலும் மேலும் கடினமாகிக்கொண்டிருந்தது.

ராதிகாநகர் சந்தையில் ஒரு காலத்தில் இருபது முப்பது கிராமங்களிலிருந்து வரும் பெண்கள், தானியங்களைப் புடைப்பதில் சம்பாதித்த அரிசியைக் கொண்டு வந்து விற்பார்கள். ஆனால் இப்போதோ ஏழெட்டு பெண்களே இருந்தார்கள். சாம்தா குளத்துக்கருகிலோ, பார்தோலா சந்திப்பிலோ கூட்டமாக நின்று கொண்டிருப்பவர்கள், மற்றவர்களிடமிருந்து அரிசியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினார்கள். சாதாரண வாடிக்கையாளர்கள் அரிசி கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்பிப்போனார்கள்.

இரண்டு சந்தைகளுக்குச் சென்று தேடியும் கங்காசரணுக்கு இன்று அரிசி கிடைக்கவில்லை. சாம்தா குளக்கரையில், ஒதிய மர நிழலில் களைப்பாக நின்றிருந்தான். அவனோடு வேற்று கிராமத்தினர் நான்கைந்து பேர் நின்றிருந்தனர். அப்போது மதியம் இரண்டரை மூன்று மணி இருக்கும். வெயில் சுட்டெரித்தது.

கொய்ரா கிராமத்தின் நபீன் பரூயி கவலைப்பட்டார், “அரிசியில்லாம நாம வாழ முடியாது பாபா தாகுர், அரிசியில்லாம வாழ முடியாது. கடந்த மூணு நாளா சாப்பிடவேயில்ல.”

”நானும், ரெண்டு நாளா சாதம் சாப்பிடல.” என்றான் கங்காசரண்.

”நானும்தான்” என்றான் இன்னொருவன்.

”அப்புறம் வேற என்ன சாப்பிடற?” என்றார் நபீன்.

”வேற என்ன? போன கோடை பைஷாக் சமயத்தில வீட்டுப்பெண்கள் அவல் இடிச்சு வச்சிருந்தாங்க. அதைத்தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். பிள்ளைகளுக்குப் புரியறதுல்ல. அவங்க முழு வயிறு சாப்பிட்டுக்கறாங்க. பெரியவங்க நாங்க அரை வயிறுதான்.”

”அவல் விலையும் ஏறிடுச்சே. ரெண்டனா இருந்துது. இப்போ பன்னிரெண்டு அனா.”

“அவல் பன்னிரண்டனான்னா யாராவது நம்புவாங்களா?”

”அரிசி மணங்கு பதினாறு ரூபாய்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?” என்று கேட்டான் கங்காசரண்.

நபீன் பரூயி பெருமூச்சுவிட்டார். அவருக்கு வயது ஐம்பது இருக்கும். ஆனால் நல்ல உறுதியான தேகம். மார்பிலும், புஜங்களிலும் சதைகள் திரண்டிருந்தன. நாள் முழுதும் கடுமையாக உழைத்து, வழக்கமாகச் சாப்பிடுவதில் பாதிதான் சாப்பிடுகிறார். இப்படி வாழ்வதில் என்ன பயனிருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஆகாய்புர வயல்களிலிருந்து பிரதான சாலைக்கு இரண்டு மூன்று பெண்கள் தலையில் பெரிய மூட்டைகளையும் கூடைகளையும் சுமந்தபடி வந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே எல்லோரும் அங்கே ஓடிச்சென்று அரிசியைப் பறித்துக்கொள்ள முயற்சித்தார்கள். திடீரென நினைவுக்கு வந்து அவர்களில் ஒருவன் கேட்டான், “பாலி எவ்வளவு?”

”அஞ்சு சிகி (காலணா)” என்றாள் ஒருத்தி.

கங்காசரணும் மற்றவர்களும் விதிர்த்துப் போனார்கள். அப்படியென்றால் மணங்கு இருபது ரூபாய்!

நபீன் பரூயிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரிடம் ஒரு ரூபாய்தான் இருந்தது. ஒண்ணேகால் ரூபாயில்லாமல் அந்தப் பெண்கள் அவருக்கு எதுவும் தரப்போவதில்லை.

அவர்கள் திகைத்துப்போயிருந்தாலும், இதைவிட்டால் அரிசிக்கு வேறு வழியில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதுவும் கூடிய சீக்கிரம் தீர்ந்து போய்விடும். அதற்குள் இன்னும் ஆறு பேர் அரிசி வாங்குவதற்காகக் கூடிவிட்டார்கள். நபீன் பரூயியும், மற்றவனும் ஏமாற்றமடைந்துப் பின் தங்கினார்கள். குறைந்தபட்ச அரிசியை வாங்குவதற்குக் கூட அவர்களிடம் பணமில்லை.

”அரிசி வாங்கலையா நபீன்?” என்று கேட்டான் கங்காசரண்.

”இல்லை பாபா தாகுர். என்கிட்ட நாலணா குறைச்சலா இருக்கு.”

“என்கிட்டயும் இல்லை, இல்லாட்டி உனக்குக் கடன் தந்திருப்பேன்.”

“சாம்தா குளத்துல அரை சேர் மீன் பிடிச்சேன். ஆறணாவுக்கு வித்தேன். நேத்திக்கு வித்ததுல பத்தணா இருந்துது. எல்லாம் சேர்ந்து ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கலாம்னு வந்தா, விலை திரும்பவும் ஏறும்னு எனக்கு எப்படித் தெரியும்.”

“உண்மைதான்.”

”ரெண்டு நாளா அரைப் பட்டினி. குடியானவங்ககிட்டயாவது அரிசி இருக்கும். எங்க நிலைமை இன்னும் மோசம். நாங்க மீன் பிடிச்சு ஜீவனம் செய்யனும். மீனை வலைக்குள்ள போகச்சொல்லி கட்டாயமா செய்ய முடியும்? எப்போ காசு கிடைக்குதோ அப்போ அரிசி வாங்கறோம். இல்லாட்டி பட்டினிதான். முந்தியெல்லாம் மத்தவங்க அரிசி கடன் தருவாங்க. இப்போ அதுவுமில்ல.”

கங்காசரண் கடும் தள்ளுமுள்ளுக்கு நடுவே இரண்டு காதா அரிசி வாங்கிவிட்டான். நபீன் பரூயிக்கும் கொஞ்சம் தரலாம் என்று நினைத்தான். ஆனால் மறுநாள் பட்டினி கிடக்க வேண்டிவரும். கிராமங்களில் அரிசி கிடைப்பது அரிதாகிவிட்டது. அரிசி இருந்தாலும் கூட யாரும் வெளியில் சொல்வதில்லை.

கங்காசரண் நபீனை ராதிகாபூர் சந்தைக்கு அழைத்து வந்தான். ஒரு ரூபாய்க்கு எப்படியாவது அரிசி வாங்கித் தந்துவிட வேண்டுமென்று நினைத்தான். ஆனால் மூன்று நான்கு பெரிய கடைகளில் ‘அரிசி இல்லை’ என்ற அறிவிப்பு தொங்கியது.

கங்காசரணுக்கு குண்டு மஷாயின் நினைவு வந்தது. போன பைஷாக் சமயத்தில் கூட கங்காசரணை வரவேற்று ஹூக்கா கொடுத்து, அவரிடமிருந்தே எப்போதும் அரிசி வாங்கச் சொல்லி சொல்லியிருந்தார். “அரிசி என்கிட்டதான் எப்போவும் வாங்கனும். நல்ல உயர்தரமான அரிசி என்கிட்ட இருக்கு.” என்றிருந்தார்.

ஒருவேளை குண்டு மஷாயிடம் விலைக்குக் கொஞ்சம் கிடைக்கும் என்று அவரிடம் நபீனை அழைத்துச் சென்றார். அங்கேயும் அதே கதைதான். கடைக்குள் நுழையும்போது இடப்புறம் திரும்பிப் பார்த்தான். அங்கே மூங்கில் திண்ணை மேலே அரிசி மூட்டைகள் கூரை வரை அடுக்கியிருக்கும். இப்போது அங்கே காற்றாடிக்கொண்டிருந்தது.

குண்டு மஷாய், “வணக்கம். உள்ளே வாங்க. எங்கே இவ்வளவு தூரம்?” என்றார்.

அவருடைய வரவேற்பில் வழக்கமான உற்சாகமோ, அன்போ இல்லை. விலக்கமான மரியாதைதான் தொணித்தது.

”கொஞ்சம் அரிசி வேணும்” என்றான் கங்காசரண்.

”அதுக்கு நான் எங்க போறது? எங்கிட்ட இல்லை.”

“ஒரே ஒரு ரூபாய்க்கு இருந்தா போதும், அதிகம் வேணாம். உங்ககிட்ட கண்டிப்பா இருக்கும். இல்லாட்டி இந்த மனுஷன் பட்டினியாப் போவாரு.”

குண்டு மஷாய் குரலைத் தாழ்த்தி, “அவரை என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க. சமையலுக்கு வச்சிருக்க அரிசியைத் தரேன்.” என்றார்.

”உங்க நெல் விளைச்சல் என்ன ஆச்சு? இவ்வளவு பெரிய கடை இப்படி காலியா இருக்கே, என்ன காரணம்?”

”என்ன செய்யறது? அன்னிக்கு பாஞ்சு குண்டு கடைல கொள்ளை போனப்புறம், எங்களுக்குக் கடைல அரிசி வச்சுக்கவே பயமா இருக்கு. எல்லா வியாபாரிகளும் இப்படித்தான் இருக்காங்க. மிலிட்டரிக்குக் குடுக்கறத்துக்காக போலிஸ் எங்ககிட்டேருந்து குறைஞ்ச விலைக்கு வாங்கப் போறதா வேற கேள்விப்படறோம்.”

“ஓ, அப்படின்னு யார் சொல்றா?”

”எல்லாரும்தான். சந்தையில இப்படி நிறைய வதந்தி உலாவிக்கிட்டிருக்கு. உங்ககிட்ட நான் பொய் சொல்ல மாட்டேன். எங்க வீட்ல அரிசி வச்சிருக்கேன், ஆனா பொதுவுல ஒத்துக்க மாட்டேன்.”

”அப்போ நாங்கள்லாம் பட்டினி கிடந்து சாகனுமா?”

”எங்கிட்ட இருக்கற வரையிலும் நான் கொஞ்சம் விற்பேன். ஆனால் என் மருமகன் கொஞ்சம் அரிசியை மாட்டு வண்டியில் கொண்டு போய் பத்யிபாதி சந்தையில் விற்கப்போறான். அதான் யோசிக்கறேன் – “

”ஐயா, அப்படிச் செய்யாதீங்க. போற வழியிலயே கொள்ளை அடிச்சிருவாங்க. நல்லா யோசிச்சுப்பாருங்க. இங்கே இருக்கவுங்களுக்கும் கொஞ்சம் வச்சுக்கோங்க. இல்லாட்டி இங்கே பெரிய பஞ்சம் வந்துடும். ஜனங்க எப்படி வாழ்றது?”

”அது புரியுது. ஆனால் நான் ஒருத்தன் மட்டும் என்ன செய்ய முடியும்? கான் பாப்ரா எவ்வளவு பெரிய வியாபாரி! அவனே எல்லா நெல் விளைச்சலையும் அரசாங்கத்துக்கு வித்துட்டான். ஒரு குந்துமணி கூட மிச்சம் வைக்கல. இன்னும் நிறைய பேர் அப்படித்தான் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அவங்களையெல்லாம் பாத்தா நான் வெறும் சுண்ணாம்பு. என்கிட்ட ஐம்பது சொச்சம் மணங்கு அரிசிதான் இருக்கு.”

அந்திக்கருக்கலில் கங்காசரண் ஆழ்ந்த சிந்தனையில் வீட்டுக்கு நடந்துகொண்டிருந்தான். கூடவே நபீனும் வந்து கொண்டிருந்தார். அவர் நதுன்காவ்ம் கிராமத்தை அடுத்த தோமோஹானி கிராமம் வரை போக வேண்டும்.

“பண்டிட் மஷாய், உங்களாலதான் இன்னிக்கு என் பிள்ளைங்க அரிசி சாப்பாடு சாப்பிடப் போறாங்க. குண்டு மஷாய் நான் சொல்லிருந்தா கேட்டிருக்க மாட்டாரு. நாங்கள்லாம் ஏழைப்பட்ட ஜனங்க. நாளைக்கு நான் உங்களுக்குக் கண்டிப்பா மீன் கொடுத்து அனுப்பறேன்.” என்றார் நபீன்.

ஒருநாள் கங்காசரண் வீட்டிலிருக்கவில்லை. பள்ளிக்குப் போயிருந்தான். ஹபுவும் பாடோலும் அவனோடு சென்றிருந்தார்கள். அனங்கா வீட்டில் தனியே இருந்தாள். யாரோ வாசலிலிருந்து அழைத்தார்கள், “பண்டிட் மஷாய், வீட்ல இருக்கீங்களா?”

அனங்கா பொதுவாக அந்நியர்கள் முன்னே வெளியே வருவது வழக்கமில்லை. ஆனால் வந்திருப்பவர் வயதானவர் என்பதை உணர்ந்து வெளியே வந்து மெல்லமாக, “அவர் ஸ்கூலுக்குப் போயிருக்காரு.” என்றாள்.

”யாரு? லக்ஷ்மி தேவி மாதிரி இருக்கே?”

அனங்கா நாணத்தோடு மெளனமாக நின்றாள்.

கிழவர் முற்றத்துக்கு முன்னேறி வந்து, “குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்றார்.

அனங்கா சட்டென்று உள்ளே சென்று ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். கூடவே துடைத்துக்கொள்ள ஒரு துண்டும் சொம்புக்கருகில் வைத்தாள். அடுத்து கொஞ்சம் வெல்லத்துண்டும் வைத்து விட்டு, “பலாப்பழம் சாப்ட்றீங்களா?” என்றாள்.

”காய்வெட்டா இருக்கா இல்லை நல்ல பழமா?”

”அரைப்பழம். இன்னும் முழுசா பழுக்கல”

“இருக்கட்டும், கொண்டு வாம்மா. இன்னொரு விஷயம் – “

“சொல்லுங்க – “

“நான் மதியம் இங்கேயே சாப்ட்டுக்கறேன். நான் ஒரு பிராமணன். பேரு தீனபந்து பட்டாச்சார்ஜீ. காம்தேவ்பூர் பக்கத்துல பகான் காவ்ம் ஊரு.”

“ஓ கண்டிப்பா. மொதல்ல கொஞ்சம் இளைப்பாறிக்கோங்க.”

கொஞ்ச நேரம் கழித்து தீனு போட்சாஜ் (பட்டாச்சார்ஜீ என்பதன் சுருக்கம்.) திருப்தியாகச் சாப்பிட்டார். சிவப்பரிசிச்சோறு (aush rice), வெண்டைக்காய் பொறியல், கத்திரிக்காய் கறி, காய்கறிகள் போட்ட கீரைக் கூட்டு எல்லாம் சமைத்திருந்தாள் அனங்கா. பணிவாகப் பரிமாறியபடி நின்றிருந்தாள்.

தீனு பெருமூச்சு விட்டபடி, “லக்ஷ்மி தேவியோட சமையல் அம்ருதம் மாதிரி இருக்கு. இன்னும் கொஞ்சம் கூட்டு போடும்மா.”

அனங்கா நாணியபடி, “தீர்ந்து போச்சு. வெண்டைக்காய்க்கறி போடட்டுமா?” என்றாள்.

”பரவாயில்லை, போடும்மா”

ஒரு கிழவரால் ஒரே நேரத்தில் அத்தனை சாப்பிடமுடியுமென்று அனங்காவால் நம்ப முடியவில்லை. “இன்னும் கொஞ்சம் சாதம் போடட்டுமா?” என்றாள்.

“பேஷா!”

”பிசைஞ்சுக்க எதுவும் இல்லையே, கூட்டு தீர்ந்து போச்சு.”

”கொஞ்சம் புளி இருக்குமா?”

“ஓ, இருக்கே”

”நாங்கள்லாம் ரொம்ப ஏழைப்பட்டவங்க. மீனும், காய்கறியும் தினமும் கிடைக்காது. ஆனா கொஞ்சம் புளி இருந்தா ஒரு தட்டு சாதம் உள்ளே போய்டும்.”

அனங்கா அந்தக் கிழவரின் பேச்சை மிகவும் ரசித்தாள். அவருக்கு அவள் அப்பா வயது இருக்கலாம். அவர் சாப்பிட்ட விதத்தைப் பார்த்து அவர் மிகவும் பசியோடிருந்திருக்கலாம் என்று நினைத்தாள். இன்னும் கொஞ்சம் தந்திருந்தாலும் அவர் சாப்பிட்டிருக்கக் கூடும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மேலும் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. அவர் சாப்பிட்டு முடித்தவுடன், “ஹூக்கா கொண்டு வரட்டுமா?” என்றாள்.

”நீ எனக்கு ஹூக்கா எடுத்துத் தரக் கூடாதும்மா ல‌க்ஷ்மி தேவி. அது முறையா இருக்காது. எங்கே இருக்குன்னு சொல்லு, நானே எடுத்துக்கறேன். எனக்கு அறுப்பதியொன்பது வயசாச்சு, இத்தனை காலமா எனக்கு நானே எடுத்து வச்சுக்கறதுதான் வழக்கம்.”

”அறுபத்தொன்பதா?”

”ஆமா, வர ஐப்பசிக்கு எழுபதாகப் போகுது. உனக்கு என் பேத்தி வயசு இருக்கும்.” என்று சொல்லிவிட்டு தீனு போட்சாஜ் பலமாகச் சிரித்தார்.

அனங்கா பெள அவளே ஹூக்காவை தயார் செய்து நெருப்பை ஊதிக்கொண்டே கொண்டுவந்தாள். அவள் முகம் அக்கனலில் சிவந்திருந்தது.

”அடடா! சொல்லச் சொல்ல கேக்காம நீயே கொண்டு வந்துட்டியே? இப்படி என்கிட்ட குடு”

“இருக்கட்டும் பரவாயில்லை. எனக்கு உங்க பேத்தி வயசு இப்போதானே சொன்னீங்க?”

”இல்லை, இல்லை, அது சரியில்லை. லக்ஷ்மி தேவி, நீ ஹூக்கா தயார் செய்யலாமா? எனக்கு அது துளியும் பிடிக்கல. இப்படி என்கிட்ட குடு. ஊதறத நிறுத்து.”

அனங்கா ஒரு பாயும், தலையணையும் கொண்டு வந்து கொடுத்தாள். ”கொஞ்சம் படுத்துக்கோங்க.”

மாலை ஐந்து மணிக்கு கங்காசரண் வீட்டுக்கு வந்தவன், முற்றத்தில் ஒரு அந்நியர் படுத்திருப்பதைப் பார்த்தான். அனங்காவிடம் விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டவன், “ஓ! இது காம்தேவ்பூர் பட்டாச்சாரிக் கிழவரா? அது சரி, அப்போ இன்னிக்குப் பூராவும் நீ எதுவுமே சாப்பிடலையா?” என்றான்.

”அதனால என்ன? நான் என்னவாவது சாப்ட்டுக்குவேன். அவரு பாவம் வயசானவர், முடியாதவர். அவரு பட்டினியா இருக்கறதைப் பார்த்தா பாவமா இருக்கு.”

“ஓஹோ. ஆனால் என்னவாவது சாப்பிட்டுக்குவேன்னா, என்ன சாப்பிடப்போற? எனக்குத் தெரிஞ்ச வரையில வீட்ல ஒண்ணும் இல்லை – “

“அது என் பிரச்சினை. அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க.”

கங்காசரணுக்கு அவளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவளோடு பேசிப் பிரயோசனமில்லை. அவள் எப்போதுமே தன் உணவைப் பிறருக்குக் கொடுத்துவிட்டு, தான் பட்டினி கிடக்கிறவள். தான் என்ன சாப்பிட்டாள், ஏது சாப்பிட்டாள் என்று சொல்லவே மாட்டாள். அந்த அரிசியை அத்தனை சிரமப்பட்டு முதல்நாள் வாங்கி வந்திருந்தான். அவளுக்கு அதைப் புரிய வைப்பது மிகவும் சிரமம்.

தீனு பட்டாச்சார்ஜி அதற்குள் எழுந்துவிட்டிருந்தார். “நமஸ்காரம் பண்டிட் மஷாய்.” என்றார்.

”நமஸ்காரம்”, கங்காசரண் கைகூப்பி வணங்கினான். ”நல்லா இருக்கீங்களா?”

தீனு உற்சாகமாகச் சிரித்து, “லக்ஷ்மி தேவியோட சாப்பாடு சாப்பிட்டதும் ரொம்ப நல்லாவே இருக்கேன். அவங்க சாக்‌ஷாத் லக்ஷ்மியேதான்.” என்றார்.

கங்காசரண், “ஆமா ஆமா. இப்டியே லக்ஷ்மி தேவி, அன்னபூர்ணான்னு சொல்லி அவளைக் கெடுத்திருங்க. நான் இல்ல கஷ்டப்படனும்.” என்று மனதுக்குள் நினைத்தாலும் வெளியே, “இருக்கட்டும், இருக்கட்டும், நல்லது” என்றான்.

”எங்கேருந்து வரீங்க?”

“பள்ளிக்கூடத்திலேருந்து.”

”நான் கொஞ்சம் பிரச்சினைல இருக்கேன். அதான் உங்ககிட்ட யோசனை கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்.”

”என்ன?”

“சொல்றத்துக்கே வெட்கமா இருக்கு பண்டிட் மஷாய். வீட்டுல பொட்டு அரிசி கூட இல்லை. நாங்க எல்லாம் பட்டினி கிடக்கோம். ரொம்ப கஷ்டப்படறோம் – “

“காம்தேவ்பூர்ல அரிசி இல்லையா?”

“சுத்திபத்தி எந்த கிராமத்துலயுமே இல்லை. வச்சிருக்கவங்கள்லாம் காதாவுக்கு ஒன்னரை ரூபா கேக்கறாங்க. இந்த தேசம் எங்கே போய்ட்டு இருக்கு? வீட்ல அஞ்சு பேர் இருக்கோம். ஒரு காதாவுக்கு ஒன்றரை ரூபா குடுத்தா எப்படி கட்டுபடியாகும்?”

”எங்க கிராமத்துலயும் அதே நிலைமைதான்.”

”நிஜமாவா?”

“நிஜமாதான். போன சந்தையில ரொம்ப கஷ்டப்பட்டு ரெண்டு ரெண்டு காதா அரிசிதான் எனக்குக் கிடைச்சுது.”

”நெல்லாவது கிடைக்குதா?”

“யாரும் விக்க மாட்டேங்கறாங்க. அப்படியே வித்தாலும் மணங்குக்கு ஒன்பது, ஒன்பதரை ரூபாய்க்குக் குறைச்சல் இல்லை.”

”நாம என்ன செய்யப்போறோம் பண்டிட் மஷாய்? உட்காருங்க. இதனாலதான் உங்ககிட்ட யோசனை கேக்கலாம்னு வந்தேன். உண்மைய சொல்லப்போனா, நான் நேத்து ராத்திரி ஒண்ணுமே சாப்டல. வீட்டுல அரிசி இல்லை. என்னோட லக்ஷ்மி தேவி புண்ணியத்துல இன்னிக்கு சாப்பாடு ஆச்சு. இந்தத் தள்ளாத வயசுல பசி தாங்க முடியல.”

”கேக்கறத்துக்கே சங்கடமா இருக்கு. ஆனா, நான் என்ன செய்ய முடியும்? நாங்களும் இதே நிலைமைலதான் இருக்கோம்.”

தீனு பெருமூச்சு விட்டார். “இந்த வயசான காலத்துல பட்டினி கிடந்து சாகனும்னு இருக்கு போல” என்றார்.

“எனக்கு எதும் வழி தெரியல பண்டிட் மஷாய். அதுவுமில்லா, நாங்க இங்கே இருந்துக்கிட்டு உங்க ஊர் பிரச்சினையை எப்படித் தீர்த்து வைக்கறது? எவ்வளவு அரிசி வேணும்? பிஸ்வாஸ் மஷாய்க்கிட்ட கேட்டுப் பார்க்கலாம்.”

”நான் காசு எதுவும் கொண்டு வரலியே?” என்று தீனு போட்சாஜ் சங்கடமான முகத்தோடு கூறினார்.

கங்காசரண் எரிச்சலானான். “காசு இல்லையா? அப்புறம் நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?”

கொஞ்சம் சூடாகச் சொல்லிவிட்டதாகவே பட்டது.

தீனு விரக்தியாக, “அப்போ நிஜமாலுமே பட்டினிச்சாவுதான் போல இருக்கு” என்றார்.

’பிரமாதம். காசு கொண்டு வரமாட்டான். பட்டினி கிடந்து சாகப்போறானாம், அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? இதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்’ என்று கங்காசரண் நினைத்தான்.

கதவுக்குப் பின்னிருந்து அனங்கா உள்ளே வரும்படி சைகை காட்டினாள்.

”என்ன வேணும்?”

”அவரு வெள்ளரிப்பழம் சாப்பிடுவாரான்னு கேளுங்க. குடுக்க நம்மகிட்ட வேற ஒண்ணும் இல்லை.”

”இருந்தா குடேன். என்கிட்ட கேக்கவே வேண்டாம். ஆனா தொட்டுக்க என்ன தருவ? சர்க்கரையோ வெல்லமோ ஒண்ணும் இல்லையே?”

”அதைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க. அப்புறம் ஒரு விஷயம் – அவரு இந்த வயசான காலத்துல பட்டினி கிடந்து சாகப்போறேன்னு சொல்றாரு. நீங்க எதாவது உதவி செஞ்சே ஆகனும். எதாவது உதவி கிடைக்கும்னு நம்ம வீடு தேடி வந்திருக்காரு. நமக்கும் குழந்தைங்க இருக்கு. வயசான பிராமணருக்கு உதவி செய்யலன்னா நம்ம குடும்பத்துக்குப் பாவம் வந்து சேரும். அதுவுமில்லாம அவ்வளவு தூரம் நடந்தே வந்திருக்காரு. நாம ஏதாவது செஞ்சே ஆகனும் – “

கங்காசரண் எரிச்சலாக, “நான் என்ன செய்ய முடியும்? அவரோ காசும் கொண்டு வரல. சரியான விஷமம். ஒரு தரம் காம்தேவ்பூர்ல எனக்கு தட்சிணையா வந்த அரிசியில பாதியைப் பிடிங்கிக்கிட்டாரு – ” என்றான்.

அனங்கா அவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தாள். ”சீ! சீ! அப்படிச் சொல்லாதீங்க. அதிதி நாராயணனுக்கு சமம். நம்மளைத் தேடி வந்திருக்காரு, நமக்குத்தான் புண்ணியம். வயசானவரை அவமானப்படுத்தாதீங்க. அவருக்கு என் அப்பா வயசு. அவரு ஒரு தரம் அரிசி எடுத்துக்கிட்டா எடுத்துக்கிட்டுப் போகட்டும்.”

”அது இருக்கட்டும். நான் ஒண்ணும் சொல்லப்போறதில்லை. ஆனால் அவருக்கிட்ட காசு இல்லைன்னா, நான் என்ன பொருளை வாங்கித் தர முடியும்?”

”மொதல்ல என்ன வேணும்னு கேளுங்க.”

”என்ன வேணும்னு தெளிவாவே தெரியுதே. அவரு இங்கே இப்போ பிச்சையெடுக்க வந்திருக்காரு. அதுதான் இப்போ அவரோடு தொழில்னு நினைக்கறேன் – “

அனங்கா அவனைத் திட்டினாள், “திரும்பவும் அவரைப் பத்தித் தப்பா பேசறீங்களே?”

”சரி, நான் என்ன செய்யட்டும்னு சொல்லு.”

“அவரு வெறுங்கையோடத் திரும்பிப் போகாதபடி பார்த்துக்கோங்க. வயசான பிராமணர், என்னோட அப்பா வயசு. இந்தாங்க என் வளையல். அடகு வச்சு கொஞ்சம் அரிசி வாங்கிட்டு வாங்க. கண்டிப்பா வாங்கிட்டு வரணும். இல்லாட்டி சத்தியமா சொல்றேன் – நான் செத்துப் போய்டுவேன். நமக்கும் இன்னிக்கு ராத்திரிக்கு அரிசி வேணும்.”

கங்காசரண் வெளியே போக யத்தனித்தான். ”போறத்துக்கு முன்னாடி வெள்ளரிப்பழம் சாப்பிட்டுப் போங்க” என்றாள்.

கங்காசரண் கோபமாக, “எனக்கு ஒண்ணும் வேணாம். என்னால உங்க கிழக்கு பெங்காலிங்க மாதிரி இனிப்பில்லாம வெள்ளரிப்பழம் சாப்பிட முடியாது.” என்றான்.

அனங்கா குறும்பாகச் சிரித்தபடி, “ஆஹா, எங்க கிழக்கு பெங்காலிங்க பத்தியெல்லாம் பேச வேணாம். இவரென்னவோ முக்‌ஷுதோபாத் ஜில்லாவுல இருந்து வந்த பிரபு மாதிரி!” என்றாள்.

”என்னது அது? அதைப் பத்தி எங்க கேள்விப்பட்ட?”

“எனக்கும் ஆள் இருக்காங்க. பாட்சாலாவுல நம்ம வீட்டுக்குக் கூரை வேய வந்தவங்கள ஞாபகம் இருக்கா? அவங்க முக்‌ஷுதோபாத்லேருந்து வந்ததா சொல்லிக்கிட்டாங்க. ஹி ஹி ஹி” என்று சிரித்தாள்.

சற்று நேரம் கழித்து தீனுவும், கங்காசரணும் வெள்ளரிப்பழத்தை பனை வெல்லம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டார்கள். அனங்கா அவசரகாலத்துக்காக ஒளித்து வைத்திருந்ததாக இருக்க வேண்டும். அவள் இப்படித்தான் எப்போதும் கடைசி நேரத்தில் மந்திரம் போட்டது போல் பொருட்களை வரவழைத்துவிடுவாள்.

தீனு சுத்தமாக வழித்துச் சாப்பிட்டார். “ஆஹா! இந்த வருஷத்து பனை வெல்லத்தை இன்னும் ருசிக்கல.”

கங்காசரண் வெறுமனே, “அது சரி” என்றான்.

”பண்டிட் மஷாய், முந்தியெல்லாம் எதுவுமே காசு குடுத்து வாங்க வேண்டிய தேவையே இருக்காது. எங்க ஊர் அருந்ததியர்கள் தரையில குழி வெட்டி வெல்லப்பாகு காச்சுவாங்க. கையில ஒரு பாத்திரத்தோட அங்கே போய் நின்னா போதும், ஒரு சேரோ, அரை சேரோ பனை வெல்லம் சும்மாவே கிடைக்கும், கேள்வியே கிடையாது. அந்தக் காலமெல்லாம் எங்கே போச்சோ!”

கங்காசரண் கிளம்பிப்போனதும், அனங்கா வெளியே வந்து தீனு பட்டாச்சாரியிடம், “வெள்ளரிப்பழம் எப்படி இருந்தது?” என்றாள்.

”பிரமாதம், வெகு பிரமாதம். நீ எனக்கு சாக்ஷாத் லக்ஷ்மி தேவியேதான். ஒரு சின்ன விஷயம் – “

“சொல்லுங்க.”

“எனக்குக் கொஞ்சம் டீ போட்டுத் தருவியா?”

அனங்கா திகைத்துப் போனாள். “டீயா?”

”டீ குடிச்சு ரொம்ப நாளாச்சு. ஒரு மாசம் முன்னாடி சபாய்பூர் கங்கூலி வீட்ல குடிச்சது. எனக்கு டீன்னா ரொம்ப இஷ்டம். முந்தியெல்லாம் அடிக்கடி குடிப்பேன். இப்போ இல்ல. அரிசிக்கே வழியைக் காணோம், டீக்கு எங்கே போறது? வீட்ல டீ இருக்கா?”

அனங்கா சற்று நேரம் யோசித்துவிட்டு சொன்னாள், “சரி, கொஞ்சம் இருங்க. பார்க்கறேன் – “

உள்ளே போய் ஹபுவிடம், “காபாஸியோட அம்மாக்கிட்ட கொஞ்சம் டீத்தூள் கிடைக்குமான்னு கேட்டு வாங்கிட்டு வா. அங்கே இல்லைன்னா, ஷிபு கோஷ் வீட்ல கேளு. எங்கேருந்தாவது கண்டிப்பா கொண்டு வரனும். ஓடு.” என்றாள்.

ஹபு, “அந்தக் கிழவர் யாரு?” என்றான்.

“கிழவர்னு சொல்லாத. வீட்டுக்கு வந்திருக்கப் பெரியவங்களை மரியாதைக் கூப்பிடப் பழகிக்கோ.”

“ஆனா, வெறும் டீத்தூள வச்சு என்னம்மா செய்யப்போற? நம்ம வீட்ல சர்க்கரையும் இல்லை.”

“அதைப் பத்தி நீயொண்ணும் கவலைப்பட வேண்டாம். ஓடிப்போய் டீத்தூள் கொண்டு வா.”

அரை மணி நேரம் கழித்து, அனங்கா சிரித்துக்கொண்டே, ஒரு வெண்கலக் குவளையில் சூடான டீயைக் கொண்டு வந்து, “இந்தாங்க, உங்க டீ. எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நாங்க டீ குடிக்கறதில்லை. அதனால எனக்கு டீ போட்டுப் பழக்கமில்ல. நல்லா இருக்கோ என்னவோ.” என்றாள்.

தீனு போட்சாஜ் வேட்டியில் குவளையை ஏந்திப்பிடித்து சுவைத்து, “ஆஹா, இது திவ்யாம்ருதம், லக்ஷ்மி தேவி!” என்றார்.

வெளியே போயிருந்த கங்காசரண் அப்போதுதான் மீண்டும் வீட்டுக்கு வந்தான். மனைவியிடம், “உள்ளே வா. உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் – “ என்றான்.

அனங்கா உள்ளே போய், “என்ன விஷயம்?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள்.

”பிஸ்வாஸ் மஷாய்க்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி ஒரு காதா அரிசி வாங்கியிருக்கேன். அது போக, மூணு காதா நெல்லும் கடனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். தீனு பட்டாச்சாரிக்கு நாளைக்குக் காலைல கிடைச்சிரும். எப்படியிருந்தாலும் ஆசாமி இன்னிக்கு ராத்திரி இங்கேருந்து கிளம்பற மாதிரி தெரியல. என்னக் குடிச்சிக்கிட்டிருக்கு? டீயா? எங்கேருந்து டீத்தூள் கிடைச்சுது? கிழவனுக்கு பலமான உபசரிப்பு போல? அதான் இங்கேயே தங்கிட்டதுல ஆச்சரியமேயில்ல.”

”உங்களுக்கென்ன பிரச்சினை? டீ வேணுமா? இதோ தரேன். ஆனால் அவரைப் பத்தி அப்படியெல்லாம் பேசாதீங்க. வயசான ஏழை பிராமணர். நம்ம அதிதி. சீ! சீ!”

கங்காசரண் பழித்துக்காட்டினான், “ஆமா… அதிதி!”

அனங்கா, “மறுபடியுமா?” என்று கோபப்பட்டாள்.

(தொடரும்)

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 5மின்னல் சங்கேதம் – 7 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.