பேச்சரவம்

கமல தேவி

“ப்ரியா…காலேஜ்லருந்து லெட்டர்ம்மா…”

ப்ரியா வீட்டின் பின்புறம் காயவைத்த வடகத்தை நிழலில் இருந்து வெயில்படும் இடமாக நகர்த்தி வைத்துக்கொண்டிருந்தாள். தபால்காரர் குரல் கேட்டு நைட்டியை தூக்கிப்பிடித்தபடி முன்வாசலுக்கு ஓடிவந்தாள். நல்லவேளை அவ்வா இல்லை. ஓடிவந்த காலை ஒடிச்சு அடுப்பில் வச்சா என்ன? என்று சொல்ல.

“ரெண்டாவது வருஷமாம்மா…”

“ஆமாப்பா…உங்க பாப்பாவைக் காலேஜ் சேத்தாச்சுங்களா…”

“பி.சி.ஏ…இந்திராகாந்தி காலேஜ்ல சேத்திருக்கோம்…நல்ல வெயில்ம்மா..பசலிக்கோம்பை வரைக்கும் போனும், ”என்றபடி சைக்கிளை மிதித்தார்.

வெளித்திண்ணையில் அமர்ந்து கடிதத்தைப் பிரித்தாள். வீட்டினுள் தூரத்து உறவு மாமாவின் குரல் கேட்டது. திருவிழாவிற்கு வந்தவர் கிளம்பும் நேரத்தில் நைனாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.

“பாப்பாவோட படிப்பு தானேங்க…நல்லா படிக்கட்டும். கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கட்டும்…உங்களுக்கும் வேல முடியுங்களே…இந்த காலத்துல திடிர்ன்னுல்ல மனுசருக்கு நோய் வருது…”

“படிச்சப்பிறகு பாக்கலாங்க….இதுல மனசு போனா படிப்புல நாட்டம் இல்லாம போயிரும்…”

“நீங்க என்னங்க வெவரம் புரியாத ஆளா இருக்கீங்க. படிக்கப்போற எடத்துலருந்து தான் பிள்ளைங்க கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்குது,”

“…….”

“யோசிச்சு சொல்லுங்க…”

“இல்லங்க மச்சான். படிச்சு முடிக்கட்டும்…”

“நீங்களே சொல்லாதீங்க…வீட்டுல, உங்கதம்பிக்கிட்ட கலந்து பேசுங்க…”

ப்ரியாவிற்கு எரிச்சலாக வந்தது. பனிரெண்டாவது முடித்ததிலிருந்து இதே சள்ளை தான்.

திருவிழாவிற்கு வந்திருந்து தங்கள் ஊர்களுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அனைவரும் நடுமுற்றத்தில் கிழக்குபக்க நிழலில் கூடி அமர்ந்துகொண்டார்கள். நைனா முன்பே சொன்னதுதான். படிப்பு வேண்டும் என்றால் வாயைத்திறக்கக் கூடாது என்று.

ப்ரியாவின் அருகில் அமர்ந்தபடி குகன் திருவிழாவில் வாங்கிய ஆமை பொம்மையின் ஓட்டை கழட்டி எடுத்தான். உள்ளே ஒன்று இருந்தது. அதையும் கழட்டினான். அதனுள்ளே ஒன்று இருந்தது.அதையும் கழற்ற முயன்றுகொண்டிருந்தான்.

மாங்காய் ஊறுகாய் பாட்டில்களை அத்தை நிரப்பிக்கொண்டிருந்தாள். மேலே எண்ணெய் மிதந்து பரவி மூடியது.

“ஏம்பிள்ள..மாப்பிள்ளை வருதே. கட்டிக்கிட்டு படிச்சா என்ன?”

“….”

மோர்மிளகாய்களை பலித்தீன் பைகளில் பிரித்துக்கட்டி வைத்துக் கொண்டிருந்த சித்தி,“மாப்பிள்ளையை எனக்கு நல்லாத் தெரியும். நல்ல அழகு..பேசறத கேக்கனுமே. சிரிச்சுக்கிட்டே இருக்கலாம்….சிரிச்சா முகராசி அப்பிடி இருக்கும்…”என்றாள்.

“….”

“வதன…அப்படியே எல்லாருக்கும் மாவும் தேங்காயும் எடுத்து வச்சிடுங்க….”என்று அம்மா அத்தையிடம் சொன்னாள். ப்ரியா முகத்தை பார்த்தபடி அம்மா, மரத்தாலான மத்தை திருப்பிப்பிடித்து மாவில் வெல்லப்பாகை கிண்டினாள்.

வெல்லப்பாகு மணம் வீட்டை நிறைத்தது. ஊர்களுக்கு கொடுத்துவிட நான்குபடி அரிசி மாவை வெல்லப்பாகுடன் கலந்து சாணையாக தட்டிக்கொண்டிருந்தார்கள். பதமாகசூடு உள்ளங்கைகளில் உறைத்தது.

நைனா எப்பொழுதோ சொல்லிய வார்த்தைகள் காதில் ஒலித்தது.

“எல்லாரும் ஜாலியா பேசறாங்கன்னு நீ வாயத்தெறக்காத. பாவாவுக்கென்ன குறைச்சல். எதுமலையான் சாமீகணக்கா ன்னு பின்னி சொன்னா. அதை அவ்வா கேட்டதுனாலதான் அவளோட பிளஸ்டூ படிப்பு நின்னுபோச்சு… பாப்பா கவனமா இருக்கனும்…”

“பாப்பா…நானாவ ஏமாத்திப்புடாத. இந்த பையனுக்கு என்ன குறச்சல். படிக்க வைக்கறேன்னு சொல்றாங்க. கட்டிக்க வேண்டியது தானே. மனசுல எதாச்சும் இருக்குதோ என்னமோ…”என்ற அத்தை மாவு சம்புடத்தை சத்தம் எழ தரையில் வைத்தாள்.

“…”

“இந்த வயசில் மனசு நிக்காது..”என்ற சித்தி ப்ரியாவை உற்றுப்பார்த்தாள்.

 “…” 

முற்றத்தில் வாழையிலைகள் அறுத்துக்கொண்டிருந்த நைனாவை பார்த்து ப்ரியா திரும்பினாள்.

“ப்ரியா…இங்க வாம்மா…”

அவர் அருகில் சென்று இலைகளை வாங்கிக்கொண்டு நின்றாள். குளித்து விரித்துவிட்டிருந்த முடி முன்னால் கிடந்தது. அதை எடுத்து பின்னால்விட்டு முதுகைத்தட்டினார்.

“அழக்கூடாது…காலேஜ்க்குப்போ. நான் இந்த மாப்பிள்ளை விஷயத்தை சமாளிச்சுக்கிறேன்…”என்று மீண்டும் தோளில் கைப்போட்டு அணைத்துக்கொண்டார். நைனாவின் கண்களை தவிர்த்து அருகிலிருந்த செம்பருத்தி செடியைப் பார்த்தாள்.

பின்னாலிருந்து, “சட்டைய போட்டுக்கிட்டு எவனாச்சும் வாழமரத்துல கைய வப்பானாடா… வெவரங்கெட்டவனே. வயசுவந்த பொம்பளப்பிள்ளக்கிட்ட பெத்தவன் தொனதொனன்னு பேச்சு வச்சுக்கறதும்…கூடவே இருக்கறதும் என்ன பழக்கவழக்கமோ. பெத்தவனு ஒருத்தி இருக்கால்ல,” என்ற அவ்வாவின் குரலால் நைனா நகர்ந்துகொண்டார்.

ப்ரியா கல்லூரி வந்து பத்துநாட்களுக்கு மேலாக வகுப்பிற்கு செல்வதும், விடுதியில் உறங்குவதுமாக இருந்தாள். நூலகத்திற்கு கூட செல்லாததை கவனித்த தீபா, “என்னாச்சு ப்ரியா…வீட்ல எதாச்சும் பிரச்சனையா…’என்றாள்.

“….”

“சொல்லு ப்ரியா…உன் வாயத்திறக்கறதுக்குள்ள எனக்கு உயிர் போவுது…பத்துநாளா நீ இப்படி இருக்கறது எனக்கும் ஒருமாதிரி இருக்குடா,”

“திருவிழாவுக்கெல்லாம் ஊருலயே இருக்கக்கூடாது தீபா. லீவ்ல வந்து தொலச்சிருச்சிருச்சு. நம்ம யாருக்கூடவாவது ஓடிப்போற ஐடியால இருக்கற மாதிரியே பேசறாங்க. கொஞ்சம் சிரிச்சா…அழகா ட்ரஸ் போட்டா…ப்ளஷரா இருந்தா… யாரையாச்சும் நெனச்சிட்டிருக்கோன்னு அர்த்தமா? அழகான பூவைப்பாத்தா அதுக்காக மட்டும் சிரிக்கக்கூடாதா? ஒரு ட்ரஸ்ல அழகா இருந்தா என்ன? அது யாருக்காகவோ தான் போடனுமா? நமக்காக போட்டுக்கக்கூடாதா….பதிமூணு வயசிலருந்து முடியல தீபா…அப்பெல்லாம் சரியா புரியாது. இப்பப்புரிஞ்சு தொலையுதே…அழக்கூட முடியல. அதுக்கும் எதாச்சும் சொல்வாங்க…”

இரும்புக்கட்டிலில் அமர்ந்து குனிந்தபடி பேசிக்கொண்டிருந்த ப்ரியாவையே பார்த்துக்கொண்டிருந்த தீபா,

“அதான் நைனா இருக்காருல்ல…”என்றாள்.

“மனசுக்குள்ள எதோ ஒன்னு விடாம மொய்க்கறாப்பல இருக்கு தீபா,”

“ச்..விடு. நீ இன்னும் ஸ்கூல் படிக்கற பிள்ளையா…நாலுபேர் என்ன சொல்றாங்கன்னு யோசிச்சுட்டே இருக்கறதுக்கு…என்னடீ நீ…”

“….”

அடுத்தநாள் கல்லூரி நடைபாதையில் கணிதப்பரிவு ஞானசுந்தரி ப்ரியாவுக்கு கைக்காட்டி சிரித்தாள்.

“என்ன ப்ரியே…அவங்களுக்கு கால் பண்ணியா?” என்று கண்சிமிட்டினாள்.

“இல்ல சுந்தரி…”

அப்பொழுது தன்னை கடந்து சென்ற ஒரு பெண் தன்னையே உற்றுப்பார்க்கும் பார்வையை உணர்ந்து ப்ரியா புன்னகைத்தாள். முதல்தளத்து கணினி ஆய்வகத்தின் கதவை ப்ரியா திறக்கும் பொழுதே பாதிப்பிள்ளைகள் வந்திருந்தார்கள். 

அனித்தாஅக்கா அமரும் சுழலும் நாற்காலி திரும்பி நின்றது. அந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள். அதில் அமர்ந்து ஒருசுற்று சுற்றி, அனித்தாஅக்கா பார்த்த ஆய்வகத்தை பார்க்க முயன்றாள். விரிவுரையாளர்மீனா, மின்னஞ்சல் முகவரி உருவாக்குவதற்கான குறிப்புகளை சொல்லத்தொடங்கினார்.

“புதுசா இருக்கனும். உங்கபேருக்குப் பின்னாடி அப்பா அம்மா பேரு…உங்க பர்த் டேட்ன்னு எதாச்சும் சேத்துக்குடுங்க. அக்செப்ட் பண்ணலேன்னா வேற ட்ரை பண்ணலாம். நான் ஹெல்ப் பண்றேன்,” என்றபடி சுற்றி வந்தார். ப்ரியாவிற்கு எப்பொழுதும் ஒத்துக்கொள்ளாத குளிர்அறை அடிக்கடி இருமலை வரவழைத்தது.

“ஏ.சி கம்மியா தானே இருக்கு,”என்றபடி மீனா அவள் தோளில் கைவைத்து கணினித்திரையை கவனித்தார். புதுவிரிவுரையாளர்களுக்கே உரிய நெருக்கம் இது. அவள்பெயரின் பின்னால் அனிதா என்ற பெயரை சேர்த்துக்கொடுத்ததும் ஏற்றுக்கொண்டது. 

 “இத்தனை கேரக்ட்டர்ஸா…லாங்கா இருக்கேம்மா…”

“இருக்கக்கூடாதா மேம்…”

“அதான் க்ரியேட் ஆயாச்சே…விடுங்க,”என்றபடி நகர்ந்தார். அனித்தாவின் பெயர் அவள்பெயருடன் இருப்பதை பார்த்து புன்னகைத்தாள். சற்று நேரம் திரையை பார்த்தபடியே இருந்தாள்.

சென்றஆண்டு மகளீர்தினவிழா நிறைவடைந்தபின் ப்ரியா தமிழாசிரியர் ராதாவிற்காக காத்திருந்தாள். அவர் வழக்கம் போல சலித்துக்கொள்வார் அல்லது அவள் கண்களை உற்றுப்பார்த்துவிட்டு அனுப்பினால்தான் அவருக்கு மனம் நிறையும்.

அவளுக்கு சற்று முன் கவிதை வாசிக்க மேடையில் நின்றதைவிட, இப்பொழுது இதயத்துடிப்பு வேகமாகியது. ஆளுயர மேடையின் கீழ் நின்றுகொண்டிருந்தாள். விழா முடிந்து பிள்ளைகள் கலைந்து சென்றுகொண்டிருந்தார்கள். சட்டென்று போடியத்தின் கீழ் நீண்டிருந்த பலகையில் கைமுட்டியை ஊன்றி சாய்ந்து கொண்டதால் சிறிது இயல்பானாள். இருபுறமும் திரும்பிப்பார்த்து உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே அனித்தாஅக்கா அவளை நோக்கி வருகிறாள் என்று நம்பினாள்.

அனிதா அடர் கத்திரிப்பூவண்ண சில்க்காட்டன் புடவையில் இயல்பாக நடந்து வந்தாள். ஐந்தறை அடியாவது இருப்பாள். அனிச்சையாக குனிந்து ப்ரியா தன்னுடைய இளமஞ்சள் நிற பருத்தி சுடிதாரை பார்த்துக்கொண்டாள்.

அருகில் வந்த அனித்தா புன்னகைத்தபடி வலது கையை நீட்டினாள். கையைப்பிடித்தபடியே,“ப்ரியா…ஃபர்ஸ்ட் இயர் யூ.ஐீ யா,”என்றாள். ப்ரியா தலையசைத்து சிரித்தாள்.

“ஐ தாட் யூ ரோட் தட் போயம்?”

அவள் சட்டென நிமிர்ந்து நின்று, “ஆமாங்க்கா…உங்களுக்கு புரிஞ்சுதா…”என்று புருவத்தை உயர்த்தினாள். அனித்தா உதட்டை பிதுக்கினாள். பின் அவளின் பிசிறடிக்கும் தமிழில் பேசத்தொடங்கினாள்.

“மீனிங் செப்பு,”

முன்னால் பார்த்தபடி ப்ரியா பேசத்தொடங்கினாள். விழா முடிந்த பந்தல் வெறிச்சோடிக்கிடந்தது. ஆயிரம் நாற்காலிகளுக்கு மேல் இருக்கும். இடதுபுறம் வெயில் சரிந்து பந்தலினுள் பரவிக்கொண்டிருந்தது. பந்தலில் கட்டியிருந்த வண்ணக்காகிதங்கள் சலசல வென்று ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.

அனித்தா விழிகளை விரித்துக்கேட்டாள். பந்தல் நடுவே இருந்த நடைவெளியில் நடக்கும் போது, “ஃபீரி டைம்ல பேசலாமா? உங்கிட்ட பேசனுன்னு நெனச்சேன். டெய்லி ஈவினிங் நவகிரகத்துக்கு பின்னாடி அரச மரத்தடியில ஸ்டடி பண்ணறப்ப பாப்பேன். லாட்ஸ் சண்டே லஞ்ச்டைம்ல அங்கயே தூங்கிட்ட தானே,” என்பதை வெட்டி வெட்டி சொல்லிவிட்டு சிரித்தாள்.

ப்ரியா கல்லூரியில் சேர்ந்த அன்றே சாயுங்காலம் கீழ்த்தள நடைபாதையில் எம்.சி.ஏ இறுதியாண்டு அனிதாவை  கருப்புநிற புடவையில் பார்த்தாள்.

ப்ரியாவின் வகுப்புத்தோழிகள் தினமும் காலையில் வகுப்பறை  முன் வராண்டாவில் அரட்டையடித்தபடி நிற்பது அவளைப் பார்க்கத்தான் என்று ஒருமாதம் சென்றப்பின் தான் ப்ரியாவிற்கு புரிந்தது. அனித்தாவின் ஆடை நடை பேச்சு கண்கள் உயரம் நிறம் என்று அனைத்தும் தனித்துவமானவை அல்லது அழகானவை. கதைகளில் உள்ள இளவரசிகளுக்கு உரியது. இடைக்கு கீழ் தவழும் அடர்ந்த கூந்தலை அவள் ஒருநாளும் பின்னலிட்டதில்லை. அவள் கூந்தலை பார்ப்பதே ஒரு பரவசம். 

அனித்தா ப்ரியாவின் தோளில் தட்டினாள். பந்தலில் இருந்து நடந்து கேன்டீன் அருகில் நின்றார்கள். அனித்தா காத்திருந்த தன்தோழிக்கு கையசைத்தாள்.

“நீயும் வா ப்ரியே…”

ப்ரியே என்று அவள் அழைப்பது புன்னகையை வரவழைத்தது.

“நீங்க போங்கக்கா. ஈவினிங் ஸ்னாக்ஸ் டைம் ஆயிடுச்சு. ராதா மேம் வரசொன்னாங்க. பாக்கனும்,”

 ப்ரியாவின் கன்னத்தைத் தட்டி தலையாட்டினாள். விடுதிஅறையில் தோழிகள் வரிசையாக கேள்விகளை அடுக்கினார்கள்.

“என்ன பேசினா,”

“இவ்வளவு நேரமா?”

“உனக்கு அறிவு இருக்கா? கேன்டீன் கூப்டா போகவேண்டியது தானே.. உன்னைய சரியான பக்கின்னு நெனச்சுருப்பாங்க,”

“அந்தக்கா அப்டில்லாம்  நினைக்கமாட்டாங்கன்னு தோணுது…” என்று ப்ரியா முடித்தாள்.

அடுத்தநாள் காலைஉணவிற்காக செல்லும்போது உணவறையில் வாயிலில் அடர்நீல நிற புடவையில் அனித்தாஅக்கா முகம் மலர குரல் மலர, “ ஹாய் ப்ரியே…வெரி குட்மார்னிங்,”  என்றாள். அவளின் வகுப்பறை ப்ரியாவின் வகுப்பறை படிகளைத்தாண்டிய மேல்தளத்தில் இருந்தது. ப்ரியாவோ அவளோ நாளுக்கு ஒருமுறையாவது கையாட்டி புன்னகைத்துக் கொண்டார்கள். அறைத்தோழிகள் ப்ரியே..ப்ரியே என்று அழைத்து கிண்டலடிக்கத் தொடங்கினார்கள். 

“ஒரு அக்கா கூட பேசறதுக்கூட கிண்டல் பண்ணுவீங்களா?”என்று எரிச்சலானாள். 

“பேசறது தப்பில்ல கண்ணாடி…பேசும்போது தெரியுதே ஒரு ‘பாண்டிங்’ அதைத்தான் சொல்றோம்,”என்று ராஜீ சிரித்தாள்.

“உங்களோடக் கூட அப்படித்தானே பேசறேன்,”

“எங்கக்கிட்ட பேசலாம். அங்க என்ன?” என்று தீபா முறைத்தாள்.

“ஏன்…நாந்தானா இன்னைக்கு உங்களுக்கு. நீங்களும் பேசுங்க. நான் ஒன்னும் சொல்லமாட்டேன். ஃப்ரண்ட்ஸ் நட்சத்திரங்கள் மாதிரி நிறைய இருக்கனும் ,”

“போதும். கேட்டுக்கேட்டு காது புளிக்குது. உன்னோட தியரிய நீயே வச்சிக்க. நீ யாருக்குதாண்டி ஃப்ரண்டு…யார் சொன்னா கேட்டுப்ப. அவங்கல்லாம் எதாச்சும் எடுபுடி வேலைக்கு நம்மள யூஸ் பண்ணிப்பாங்க ஜாக்கிரதை,” 

“ தீபா…”

“ஆமா. நீ ஒரு யூஸ்லெஸ்… எல்.கே.ஜி லருந்து ஒன்னா படிக்கிறோம். உன்னைய எனக்குத்தெரியாதா?  போடீ போய் அவ சொல்ற வேலய செய்..யாரு வேணான்னா…கடைசியா எங்கிட்ட வந்து, தீபா… நம்ம நினைக்கறமாதிரி இல்லன்னு சொல்லு. அப்ப இருக்கு உனக்கு,”

“எதுக்கு இவ்வளவு கோவப்படுற. என்னால அவங்கள அவாய்ட் பண்ணமுடியாது,”

“ஏய் …இதுக்கு எதுக்கு ரெண்டுபேரும் சண்டை போடறீங்க? இதெல்லாம் ஜாலியா எடுத்துக்கனுங்கற மெச்சூரிட்டி கூட இல்லாத ஸ்கூல் பசங்க…ச்சை,” என்ற காயத்ரி கதவை வேகமாகச் சாத்திவிட்டுச் சென்றாள். 

“ப்ரியே…”என்று நடைபாதையிலிருந்து அனித்தாவின் குரல் அழைத்தது.

“போய்த் தொலையேண்டீ…”

“நீ என்ன பெர்மிசன் குடுக்கிறியா… அதுக்கு நீ யாரு,”

“கூப்பிடுறாங்கல்ல..ஒக்காந்தே இருக்க. எழுந்திருச்சு போ லூசு, ”என்று சிரித்த தீபா அறைக்கதவை கதவைத்திறந்து வைத்தாள்.

அனித்தா அக்காவின் உலகம் ப்ரியாவிற்கு ஒரு மாயக்கதை போல இருந்தது. அவளுக்கும் தன் ஆந்திர ஊரை,வீட்டைப்பற்றி இத்தனை ஆசையாய் கேட்கும் ஒருத்தி தேவையாக இருந்தாள். தினமும் கல்லூரி முடிந்து வெளிநடைப்பாதையில் புல்வெளியின் தடுப்புகளில் அமர்ந்து பேசத்தொடங்கினார்கள்.

ஏப்ரலில் கல்லூரி ஆண்டுவிழாவிற்கான முன்பணிகளில் அனித்தா அக்கா சுறுசுறுப்பாக இருந்தாள். இரண்டு மூன்று நடனங்கள், விருந்தினர்கள் வரவேற்பு என்று அவளின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது. கவிதைவாசிப்பில் ப்ரியாவையும் இணைத்திருந்ததால் அவள் மேல்தளத்தில் இருந்த ஒத்திகைஅரங்கிற்கு தினமும் செல்ல வேண்டியிருந்தது. பத்துநாட்களாக பயிற்சி நடந்து கொண்டிருந்தது.

எட்டு சன்னல்கள்,இருவாயில்கள் கொண்ட அந்த அறையில் அனித்தா இடையில் துப்பட்டாவை கட்டிக்கொண்டு நடனமாடுவாள். ஒவ்வொரு சன்னல்பக்கம் திரும்பும் போதும் முகம் வேறுமாதிரி இருக்கும் புதிரை காண,ஆடைகளை எடுத்துக்கொண்டு ஔிந்தவனைத்தேடும் அவள் சுழலும் கண்களை பார்க்க ,ஒரு பறவை அவள் கைகளில் இருந்து எழுவதை,யமுனா நதி கடந்து வந்தானே என்ற வரிகள் ஒலிக்கும் போது அவள் கால்களுக்கு கீழ் யமுனை நகர்வதைக் காண ப்ரியா காத்திருப்பாள். மற்றவர்களுக்கான ஒத்திகை நேரங்களில் அனித்தா ப்ரியா அருகில் வந்து தோளில் கைப்போட்டவாறு அமர்ந்துகொள்வாள். 

“நான் எத்தன டைம் கேக்கறேன். ஒரே ஒரு ஸ்டெப் போடு ப்ரியே…”

“போங்கக்கா…எனக்கு வராது,”

“ஜஸ்ட் ட்ரை பண்ணு ப்ரியே…”

“ப்ளீஸ்க்கா…விடுங்க…”

“இட்ஸ் ட்டூ பேட் ப்ரியே…பட் சம் திங் ராங் வித் யூ. த்ரோ இட் அவுட்,” என்று சலித்துக்கொண்டாள்.

அன்று விடுதி மைதானத்தில் அமர்ந்தபடி ப்ரியா தீபாவிடம்,

“மனசு சுதந்திரமா இருந்தா டான்ஸ் இயல்பவே வருமாம்…”என்றாள்.

“யாருடீ சொன்னா…உங்க அனித்தா அக்காவா…”

“ம்…”

“அதுவும் நெஜந்தான். காலேஜ்ஜே அவங்களை பாக்குதுன்னாலும் எவ்வளவு இயல்பாக இருக்காங்க…”

“தனக்கு பிடிச்ச மாதிரி உடுத்தவும் நடக்கவும் பேசவும் இருந்தா எல்லாருமே அழகா இருப்பாங்க தானே தீபா…”

“கடைசியா பாயிண்ட்ட பிடிச்சுட்டியே புட்டி…” என்ற தீபா அவள் தலையில் தட்டினாள்.

ஆண்டுவிழா நடக்கும் வாரத்தின் முந்தைய ஞாயிறு அன்று. திடீரென்று அனிதா அக்கா ப்ரியாவின் அறைக்கு வந்தாள். மதிய உணவிற்குப்பின் படுத்தவாறு அரட்டையில் இருந்த பிள்ளைகளுடன் சிறிதுநேரம் பேசினாள். அவரவர் படுக்கையில் உறங்க சென்றப்பின்,

“ப்ரியே…காலேஜ் டேக்கு எந்த சுடி போடற. …”என்று கேட்டாள்.

“எதாச்சும்…”

ப்ரியாவின் சூட்கேஸில் இருந்தவைகளை எடுத்துப்பார்த்தாள். இரண்டை எடுத்து வெளியில் வைத்தப்பின் ஊசிநூல் கேட்டாள். அங்கங்கே சில இடங்களில் தையல்களை போட்டப்பின் அணியச்சொன்னாள்.

“நான் பாத்ரூம் போய் போட்டுட்டு வரட்டாக்கா…”என்றதும் வெளியே சென்று நின்றுகொண்டாள். அணிந்து வந்து, “ இவ்வளவு ஃபிட்டா வேணாங்க்கா…”என்ற ப்ரியாவின் கண்களை ஆழப்பார்த்து சிரித்து தையல்களை மாற்றினாள்.

ஆண்டுவிழாவன்று வகுப்பறைக்கு வந்த தமிழாசிரியை ப்ரியாவை அழைத்தார்.

 “கவிதையை வாசி…”

வாசித்து முடித்து அவர் முகத்தைப் பார்த்தாள். உதட்டை அலட்சியமாகப் பிதுக்கினார். ‘ இவங்க வேற கண்ண உருட்டி உருட்டி பாத்து பாத்தே உயிரை எடுக்கறாங்க’ என்று அவள் மனதிற்குள் எரிச்சலானாள்.

“எவ்வளவு முயற்சி பண்ணினாலும் எழுத்துல இருக்கிற உணர்ச்சி குரலில் வரமாட்டிக்குது…தம் பிடிக்கமுடியல. வாசிக்கும் போது இடையில் குரல் எடுக்கலன்னா பாதியோட முடிச்சிட்டு முதல் இரண்டு வரிகளை மறுபடி வாசிச்சு முடிச்சிடு. தொண்டையில் எதாச்சும் பிரச்சனையா,”

“இல்ல மேம். சின்ன வயசுல ப்ரைமரி காம்ப்லக்ஸ் பிரச்சனை இருந்தது. அதனால இப்பவரைக்கும் மூச்சுக்கட்ட முடியல,”

அவர் அவருக்கே தலையாட்டிக்கொண்டு சென்றார்.

ஆண்டுவிழா நாளின் மதியத்திலிருந்து வகுப்புகள் இல்லை. அனித்தா அக்கா ப்ரியாவை அழைத்தாள் என்று அவளிடம் ஐந்தாறு பிள்ளைகள் சொன்னார்கள்.

பந்தலுக்கு பக்கவாட்டிலிருந்த தற்காலிக உடைமாற்றும் மரத்தடுப்புகள் ஒன்றில் ப்ரியா நுழைந்தாள். அனிதா அக்கா கைகளில் சிவப்பு வண்ணம் பூசிக்கொண்டிருந்தாள். உள்ளே சென்றவுடன், “ப்ரியே…டோண்ட் மிஸ்டேக் மீ,”என்றாள்.

“ இல்லக்கா. எதுக்காக கூப்டீங்க,”

“ ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும். மேக்கப் மாத்தனும். எனக்கு ஹெல்ப் பண்ணுவியா…”

தலையாட்டினாள்.

ஊரில் விசேசநாட்களில் அக்காவுடன் அத்தையுடன் இருப்பதைப்போலத் தான் அவளுக்கு இருந்தது. காலடிகளில் அமர்ந்து பரதநாட்டிய ஆடையின் இறுதி மடிப்புகளுக்கு ஸ்டேப்ளர் அடித்தாள்.

“காலை அகட்டிபாருங்க,”

“ஓ.கே…தேங்க்ஸ் டா…”

அடுத்தப்பாடலுக்கு உள்ளாடை சரிசெய்யும் போது சங்கடமாக, “அக்கா…”என்றாள்.

“என்ன ப்ரியே…”

“இந்தக்கலர் ஒத்துவராது…ட்ரெஸ்லாம் போட்டுப்பாக்கலியா…”

“லாஸ்ட்டா ஈவினிங்தான் இந்த டான்ஸ்க்கு வந்துச்சு,”

நகைகளை அணிவிக்கும் போதும், அவள் ஒப்பனை செய்து கொள்ளும் போது சடையை தூக்கிப்பிடிக்கும்போதும்,அங்கங்கே ஊக்குகளை மாட்டிவிடுதல் மற்றும் கழட்டும்போதும் அவள் நன்றி சொல்லிக்கொண்டே இருந்தாள். ப்ரியாவிற்கு மனதில் ஒருகேள்வி மட்டும் ஓயாமல் கேட்டது. இவளின் மிகப்பெரிய கூட்டத்தில் என்னை மட்டும் எதற்காக அழைத்தாள். உடனே தீபாவின் குரல் காதுகளில் ஒலித்தது.

இடையில் தமிழாசிரியர் எட்டிப்பார்த்து கவிதைத்தாளை கேட்டார். கைக்குட்டைக்குள் கசங்கியிருந்த தாளை எடுத்து நீட்டினாள்.

“இதை மேடைக்கு எடுத்துட்டு போவியா? எங்கிட்ட இருக்கட்டும். நீ வாசிக்க வரும்போது தந்து தொலைக்கிறேன்…வரும்போது முகத்தை கழுவிட்டு வா,”என்று எரிச்சலாக முறைத்தபடி சென்றார். 

இவங்க ஏன் என்றைக்கும் இல்லாமல் இவ்வளவு கோபப்படுகிறார்கள் என்று யோசித்தபடி மேடையை எட்டிப்பார்த்தாள். அனித்தாஅக்கா தொடர்ந்த கைத்தட்டல்களுக்கிடையில் ஆடிக்கொண்டிருந்தாள்.

கவிதை வாசிக்க செல்லும் முன் அனித்தா ப்ரியாவின் சிறிய சுருள்முடி பின்னலை கலைத்து முடியை நன்றாக சீவி அவளின் கிளிப்பால் அழகாக குதிரைவால் போட்டுவிட்டாள்.

அழகாய் விரிந்த முடியுடன் தமிழாசிரியரின் கையெழுத்தில் மொடமொடப்பான உயர்தரத்தாளில் இருந்த கவிதையை வாசிக்கும் போது அனித்தாஅக்கா மேடையின் கீழே நின்று கைத்தட்டி சிரித்தாள். 

அவள் கண்கள் தமிழாசிரியரை தேடி சுற்றியலைந்தன. நான்காவது வரிசையில் தீபா வாயில் கைவைத்திருந்தாள். ரவுடி… விசில் அடிப்பாள். அன்பு ஒருநாளும் அவள் வாசிக்கும் கவிதையை கேட்பவளில்லை. அவள் குரலிற்காக ஏசுவிடம் மன்றாடிக்கொண்டிருப்பாள். பக்கவாட்டில் கிடந்த பெஞ்சில் மசூதாபேகமும் திருவளர்செல்வியும் ஏறி நின்றார்கள். தமிழாசிரியர் அவர்களை கீழிறங்க சொல்லி கையாட்டிக்கொண்டிருந்தார். கவிந்த இருளிலில் வண்ண வண்ண குட்டிபல்புகள் மின்னும் பின்புலத்தில் நின்ற அவர் ப்ரியாபக்கம் திரும்பவே இல்லை. பார்த்துக் கொண்டேயிருந்தாள். பந்தல் முழுக்க எவ்வளவு உற்சாகம்.  பக்கவாட்டு தட்டியில் சாய்ந்தாள். குனிந்து காதுகளை தேய்த்துக் கொண்டிருந்த அவள் முதுகில் அடித்த அனித்தா என்னாச்சு என்று கேட்டுவிட்டு நகர்ந்தாள். மீண்டும் அவள் கண்கள் கூட்டத்தை துலாவியது.

விழா முடிந்து இறுதிஆண்டு தோழிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அனித்தா அக்கா தொடர்ந்து மேடையில் பலரால் நிற்கவைக்கப்பட்டாள். இறுதி பாடலுக்கு அணிந்த இளம்பச்சை சுடிதாரில் அழகாக இருந்தாள். மேடையிலிருந்து அனிதா அக்கா அவளை வேகமாக ப்ரியே… என்று கையாட்டி அழைத்தாள்.

அருகில் சென்றதும் ஆள்காட்டி விரலை உயர்த்தி,“ஒன் ஸ்னாப்,”என்று சிரித்தாள். முன்னால் நின்றவர்களுக்கு இடம்விட்டு தள்ளி நின்றார்கள்.

“அக்கா …இந்த ட்ரஸ் மேக்அப் ரூம்ல வேற மாதிரி இருந்துச்சு. இந்த லைட்ல ரொம்ப அழகா இருக்கு..”

“எத்தனை டைம்ஸ் நான் அழாயிருக்கேன்னு சொல்லியிருக்க தெரியுமா?”

ப்ரியா சிரித்தாள்.

“உன்னோட ப்யூட்டி என்ன தெரியுமா?”

“…..”

“ வாய்ஸ் தான்…இட்ஸ் ஒன்டர்ஃபுல்…சம் டைம்ஸ் இட்ஸ் சவுண்ட்ஸ் லக் மை ஓன்வாய்ஸ். என்ன மீனிங்ல சொல்றேன்னு புரியுதா…நீதான் பொயட்ரி எழுதற ஆளாச்சே…”

“ம்…”

“உங்கிட்ட யாருமே சொன்னதில்லையா?”

“….”

“ஐ ஃபீல் சோ ஹேப்பிடா. மைனர் மிஸ்டேக்ஸ்க் கூட இல்லாம பண்ணிட்டேன்…”

ப்ரியா பரவசமாக பேசும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்று குரலும் முகமும் சொல்லியது. பேச்சும்மனமும் சிலருக்கு கண்ணாடி போல.

“கூடவே இருந்ததுக்கு தேங்ஸ்டா…”என்று இருகைகளை விரித்து கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் முதுகிற்கு பின்னால் அந்தப்புறம் நின்ற தமிழாசிரியர் ப்ரியாவை பார்த்து புன்னகைத்து உதட்டை பிதுக்கினார். குரல் அவருக்கு திருப்தி இல்லை. முதன்முறையாக அவரை நேருக்கு நேர் பார்த்து புன்னகைத்தாள். அவர் புருவங்களை உயர்த்தினார். திரும்பி பிள்ளைகளை விடுதிக்கு விரட்டத்துவங்கினார்.  

“இ.மெயில் ஐ.டி…க்ரியேட் பண்ணியாச்சுன்னா எழுதி வைச்சுக்கங்க. மறந்துடும்.  முடியாதவங்க அடுத்த லேப்ல பாத்துக்கலாம்மா…” என்ற குரலால் ப்ரியா கலைந்தாள். உணவுநேரத்திற்கான மணி ஒலி கேட்டது. கணினி ஆய்வகத்திலிருந்து வெளியேறி வராண்டாவில் நின்று கல்லூரி வளாகத்தை பார்த்தாள். விழாக்களுக்காக பந்தல்கள் போடப்பட்ட இடத்தில் பெரிய அரங்கத்திற்கான கட்டிடவேலைகளுக்காக மணல், ஐல்லிகற்கள் கொட்டப்பட்டிருந்தன.

“தீபா…சிலபேர் நம்மளோட ஒன்னுரெண்டு பிகேவியரை அப்படியே மாத்திடறாங்க…இல்லாட்டி நம்மளே அவங்களால மாறிடறோம்…என்ன காரணம்?”

“இதெல்லாம் நார்மல் தான் ப்ரியா…நம்ம அந்த ஸ்டேஜ்ல இருக்கறச்சே சந்திக்கறவங்க…ஃப்ரண்டா ஆகறவங்க கண்டிப்பா மனசவிட்டு போறதில்ல…”

“உனக்கு அந்தமாதிரி யாருமில்லையா?”

“நீ கொஞ்சம் பழம்பஞ்சாங்கம்…க்ராஸ் பண்ணி போறவங்களையெல்லாம் சேத்து வச்சிக்கிட்டே இருக்க…ஜஸ்ட் லைக் தட் மெண்டாலிட்டி நமக்கு நல்லது,”

“சரி தீபா…வார்டன் ரூம் மாறனுமான்னு கேட்டாங்க…நான் ஆந்தரா ரூம்க்கு போறேன்,”

“ஏய்…க்ராஸ் பண்ணிப்போறவங்கள சொன்னேன்…நமக்கு பதினாறாவது வருஷம்டீ இது…கொள்ளியில போறவளே…”

ப்ரியா சிரித்தபடி மீண்டும் அந்த இடத்தை பார்த்தாள்.

“லேட்டாச்சு ப்ரியா…வா,”என்ற தீபாவின் அழைப்பால் திரும்பி நடந்தாள். மீண்டும் காலையில் கண்ட அதே கண்கள். ப்ரியா புன்னகைத்து, “உம்பேர் என்னப்பா,”என்றாள்.

“சேச்சி….ஞான் கொறச்சி தமிள் சம்சாரிக்கும்…நிங்ஞளை ஆதியாயிட்டு ஃப்ரசர்ஸ்டே அன்னு கண்டு…கேட்டோ,”

“பாக்கும்போதே நெனச்சேன்,”

“சேச்சி எந்து பறையூ? அன்னு அச்சனுக்கு நிங்களல்லே ஒபீஸில் ஹெல்ப் செய்து…”

“அட்மிஷன் நாளன்னிக்கா? பெரிய கரை வேஸ்ட்டி கட்டியிருந்தாரா?”

“எந்தா சேச்சி…மனசிலாயில்லா…”

“மனசிலாக்காம் கொச்சே…”என்று சிரித்தாள்.

தீபா திரும்பி அவளைப்பார்த்து, “புட்டி. …பேசுடீ…பேசுடீ,”என்று சிரித்தாள். அவர்களுக்கு முன்னும் பின்னும் பிள்ளைகள் சென்றுகொண்டிருந்தார்கள். நடைபாதை முழுக்கபேச்சொலிகளால் நிறைந்து வழிந்தது.

***

4 Replies to “பேச்சரவம்”

 1. எழுத்தாளர் கமலதேவி அவர்களின் ‘பேச்சரவம்’ கதையினைப் படித்தேன். கூடவே இருப்பதாலேயே ஒருவர் நமக்கு நல்ல நட்புடையவராக மாறிவிடுவதில்லை. மொழி, வயது வேறுபட்டிருப்பதனாலோகூட ஒருவருக்கொருவர் விலகித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மன அலைகளுக்கு இடையேயான ஒற்றுமை, இதயம் சார்ந்த பிணைப்பு என்பன நாமறியாத ஒன்றாகவே இருந்துவருகிறது. என் தனிப்பட்ட வாழ்வில் நான் சிறுவயது முதல் என்னைவிட வயதில் மூத்தவர்களுடனேயே பழகியிருக்கிறேன். அவர்கள் என்னை ஊக்குவித்தபடியே இருந்தனர். அதனாலேயே நான் இளைஞரான பின்னர் என்னைவிட வயதில் இளையோருடனேயே நெருங்கிப் பழகத் தொடங்கினேன். அவர்களை ஊக்குவிக்கத் தொடங்கினேன். நமக்குச் சமவயதில் இருப்பவருடன் பழகும்போது நாம் புதிதாக அறிய ஏதும் இருக்காது என்பதே உண்மை. புதியவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புவர்களிடம் எப்போதும் இந்த மீறல் இருந்துகொண்டே இருக்கும். அதற்குச் சரியான சான்று இந்தக் கதையில் வரும் பிரியா. இந்தக் கதையில் இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று குடும்பச்சூழல், மற்றொன்று கல்லூரிச் சூழல். இரண்டிலிருக்கும் நெருக்கடிகளையும் பிறரின் உதவிகொண்டு, தாண்டிவரும் பெண்ணாக பிரியா இருக்கிறார். நம் வாழ்வில் இந்த அனித்தாவைப் போன்றோர் புறப்பட்டுவிட்ட பேருந்தைப் போன்றவர்கள். நாம் விரும்பினால், நமக்குத் தன்முனைப்பு இருந்தால் ஓடிச் சென்று அந்தப் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம். நமது பயணம் புதிதாகும். அனித்தாவைப் போன்றோருடன் இருப்பவர்கள் பின்னாளில் அனித்தாவாகவே மாறுவார்கள். பிரியாவும் அப்படியேதான் மாறிவிடுகிறாள். அதற்காக அவள் அனித்தாவைப் ‘போலச்செய்கிறாள்’ (இமிடேஷன்) என்று நினைக்க வேண்டியதில்லை. நல்ல பண்புகளைக் கண்டுணர்ந்து, அவற்றை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதை யாரும் ‘போலச்செய்தல்’ (இமிடேஷன்) என்று கூறுவதில்லையே! நல்ல சிறுகதை. வாழ்த்துகள்.
  இப்படிக்கு,
  முனைவர் ப. சரவணன், மதுரை.

  1. அன்புள்ள முனைவர் ப. சரவணன் அவர்களுக்கு,
   மறுவினையைத் தெரிவித்த உடனே தளத்தில் அது தெரியாது. நாங்கள் மறுவினைகளைப் பார்த்து அனுமதிக்க வேண்டும். சில நேரம் உடனுக்குடன் இது நடக்கும், சில நேரம் கால தாமதமாகி நடக்கும். (ஏழெட்டு மணி நேரம் ஆகலாம்.) பதிப்புக் குழுவினர் தன்னார்வலர்கள், வேலையிலிருந்து மீண்டு வந்து தளத்தைப் பார்த்துப் பிறகு அனுமதிக்க இந்த கால இடைவெளி நேரலாம்.
   பதிப்புக் குழு

 2. அருமையான கதை. ப்ரியா, அனித்தா நட்பின் மூலம் சமவயது நட்பைவிட சற்றே மூத்தவர்களின் நட்பு நமக்கு பல விஷயங்களைஎளிதாக புரிய வைக்கும் என விளக்கும் அருமையான கதை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.