புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல்

தமிழில்: கடலூர் வாசு

(கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’ – பகுதி 9)

டேவிட் கிரீன் என்பவர் எழுதிய கட்டுரை, புனித தாமஸ் இந்தியாவில் காளியை வணங்கும் பூசாரிகளால் கொல்லப்பட்டார்** எனும் கிருத்துவர்களின்  நீண்டகாலக்  கூற்றை  மேலும் பரப்புவதற்காக எழுதப்பட்டுள்ளது.  கீழ்வரும் எனது சுருக்கமான கடிதம் இப்பதிவை சரிசெய்வதற்காக எழுதப்பட்டுள்ளது இக்கட்டுக்கதையை உண்மை என்பதுபோல் பேசுவது மதச்சார்பற்றவர்களிடையேயும் காந்தி வழிமுறை இந்துக்களிடையேயும் ஒரு வழக்கமாகி விட்டது. இவர்களது கவனக் காலம்  குறைவு என்பதால் இந்த உண்மையான விவரச் சுருக்கத்தை படிப்பது இவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

புனித தாமஸின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என நீங்கள் ஆராயப்  புகுந்தால்  அது  கிருத்துவ  பாரம்பரிய  நம்பிக்கையில்  கொண்டு  நிறுத்தும். நம்முடைய  நல்லகாலம்,  பாரம்பரியம்  என்பதாலேயே  ஒரு  கூற்றை  நம்பும்  காலம்  மலையேறி விட்டது. அதனால்தான்,  இயேசுவின்  மரணத்திற்கும் அதைப்போன்ற கொடிய தீமைகளுக்கும் யூதர்களே காரணம் என கிருத்துவ பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக தாங்கி வந்த அழிச்சாட்டியமான அவதூறுகளை எவரும் நம்புவதில்லை. அதைப்போலவே  காளியின் பூசாரிகளின் மேல் இடப்பட்ட அவதூறையும் நாம் நம்புவதற்கிடமில்லை

காலங்காலமாகத்  தொடர்ந்துவரும்  இக்கதைக்குச்  சான்று  ஒன்றுமேயில்லை. புனித தாமஸைக் கிருத்துவ மதத்  தியாகியாக  மாற்றிய இச்சம்பவத்தைக்  குறிப்பிட்ட  முதல் புத்தகம் “Acts of Thomas” என்ற ஒன்று. இப்புத்தகம் புனித தாமஸ் மறைந்து 50 வருடங்களுக்குப் பிறகு எழுதப்பட்டது. இப்புத்தகத்தில், தாமஸ் இந்தியாவிற்கு வந்தாரென எழுதப்பட்டுள்ளது. இதில், தாமஸ் இறங்கிய இந்தியாவாக வருணிக்கப்படும் இடம்  ஒரு பாலைவனப் பிரதேசம். அவர் சந்தித்தாகக்  கூறப்படும் மக்கள் பாரசீகப் பெயர்களைக் கொண்டவர்கள். கொலம்பஸ், தான்  இறங்கிய  இடத்தை  ஜப்பான் / ஜிப்பாங்கு என  எண்ணி  அப்பிரதேச  மக்களை  இந்தியர்கள் (ஆசியர்) என பெயரிட்டதைபோல் தாமஸ் அவர்களும் அதே தவறைதான் செய்துள்ளார். அவர் வருணிக்கும் இடம் ஆப்கானிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் பொருந்துமே தவிர செழிப்பான, அபரிமிதமான, இயற்கை வனப்புடைய,  வெப்ப மண்டத்திலமைந்த தென்னிந்தியாவிற்கு அன்று. அவர் புழங்கிய சமூகத்தில் அவரது செய்கைகள் பல குற்றங்களாகக் கருதப்பட்டதால் அப்பிரதேச மன்னர் அவரை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். தாமஸ் அவர்கள் வெளியேற மறுத்ததினால் கழுவேற்றப்பட்டார்.

லீயுவென் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருந்தபோதுதான் புனித தாமஸின் மரணத்தைப் பற்றிய ஓட்டைப் பழங்கதையை  இயேசு சபை (Jesuit)யைச் சார்ந்த  மத ஒப்பீட்டுப் பேராசிரியர் Frank de Graeve என்பவர் கூறக் கேட்டேன்.  இவர் இந்து மத வெறியர் அல்லர். சமீபத்தில், 16ம் போப் பெனடிக்ட் அவர்கள், “புனித தாமஸ் மேற்கு இந்தியாவிற்குத்தான் சென்றார். பல காலத்திற்குப் பிறகு கிருத்துவ மதம்தான் தென்னிந்தியாவை அடைந்தது; தாமஸ் செல்லவில்லை“ எனப் பகிரங்கமாகப் பொதுக் கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். (Pope’s General Audience of 27 September 2006.) அறிவார்ந்த இம்மதிப்பீட்டை இந்தியக் கிருத்துவர்கள் எதிர்த்தது மட்டுமல்லாமல் இக்கூற்றைப் போப்  பெனடிக்ட் அவர்களின் இணையதளத்திலிருந்து நீக்கவும் செய்துவிட்டனர்.  ஆனால் இவர்களது செய்கை, அறிவுபூர்வமான வரலாற்றுத்  தீர்ப்பை மாற்றப்  போவதில்லை. இவர்களுடைய கட்டுக் கதையை ஆதரிக்கும் சான்றுகள்  முன்கூறியதுபோல் எங்குமே காணப்படவில்லை.

கிருத்துவர்கள், முதலாவதாகக் கடலோரப் பகுதியிலுள்ள தென்னிந்தியாவிற்கு 4ம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசிலிருந்து துரத்தப்பட்ட அகதிகளாக வந்தடைந்ததாகத் தெரிகிறது. இவர்கள்  நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம் எதிரி நாடான ருமேனியா முழுவதும் கிருத்தவ மதத்தைத் தழுவியதேயாகும்.  பல தெய்வங்களை வழிபடுபவரைக் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தியதைப் போலல்லாமல்  இக்கிருத்துவ அகதிகளைத் தென்னிந்தியர்கள் சுமூகமாக வரவேற்றனர். இவர்களும் காளியின் பூசாரிகளால் கொல்லப்படவில்லை.  மாறாக, அவர்களை நன்கு உபசரித்து, அவர்களது மதத்தைப் பற்றி எவ்விதக் கேள்வியுமின்றித் தங்கள் சமூகத்தில் ஒருவராக  ஏற்றுக்கொண்டனர்.  இதற்கு முன்பே யூதர்களும் இதன்பிறகு பார்சி, ஆர்மீனியர்கள், திபேத்திய புத்த மதத்தினர் ஆகியோரும் இதேவித வரவேற்பைப் பெற்றுள்ளனர். எனவே, புனித தாமஸுக்கு இழைக்கப்பட்ட படுமோசமான அநீதி என்னும் கட்டுக்கதை இந்துக்களின் மகோன்னதமான இம்மனப்பான்மையைக் குறிவைத்து இட்டுக்கட்டப்பட்டதாகும். 

பின்குறிப்புகள்:

*Published on koenraadelst.blogspot.com on 11 March 2016
** Published in Haaretz on 21 December 2015, accessed on 29 March 2019
http://www.haaetz.com/israel-news/this-day-in-jewish-history/1.692829?date=1457643796561

Series Navigation<< கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’இலா நகரில் பன்மைத்துவம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.