பட்டர்பி

வைரவன் லெ. ரா.

சாலையின் இருவோரமும் எருக்கும், ஆமணக்கும் கூடவே வந்தது. ஒருக்கரையில் வயலும், மறுக்கரையில் தத்தியார்குளமும் தெரிந்தது. இடையே செம்மண் குவியலாய் நீண்ட பாதை வழி மறிக்கவும், ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த இசக்கி மாமாவிடம் கேட்டான் “என்ன மாமா நடுவுல ரோடு போடுகான்,” 

“ஆமா, மக்கா மண்டைக்கு வழியில்லாத பயக்க. ஊருல ஒரு இடம் பச்சையா கிடக்க கூடாது. இவனுக வேற ஏதாச்சும் நினச்சு வச்சிருப்பான். கன்னியாரிக்குள்ள எதுக்கு இத்தன ரிங் ரோடு. புத்தேரி குளத்துல பாதி மண்ணை மூடி போட்டுட்டான். நம்மல கிறுக்கு ஆக்கிருவானுக. ஆமா, பயலுக்கு என்ன வயசாச்சு,”

“அவனுக்கு ரெண்டு முடிச்சிருக்கு.” 

பேசிக்கொண்டே சென்றதில் தேரூர் வந்தது தெரியவில்லை.

அவன் கைகளைக் காற்றில் அலைபாய விட்டான். குளிர்ச்சியான காற்று வேகமாக வீசி, சிறிய கண்களை வருடி சிறுதுளி கண்ணீரைத் தாகம் கேட்டது. மொழிகள் பிறக்கும் இடமாய் நாக்கையும் உள்வாயையும் சுழட்டி ஓசைகளை பிறப்பித்தப்படியே வந்தான். அவனுக்கே மட்டுமான அவளின் மடியில் அமர்ந்தபடி ஒளி பரவியிருந்த அந்நிலத்தை கண்களால் படம் பிடித்தபடியே இருந்தான். ஆயினும் இடைஞ்சலாக இருவர் பேசியபடியே வருவதை உண்மையிலே அவன் வெறுத்தான். இவ்விடங்கள் ஆச்சர்யமாக இருந்தன, எங்குமே மனிதர்கள் அகப்படும் கட்டிடங்கள் இல்லை. மாறாக வீட்டினுள் குழாயின் ஓட்டை வழியே திணறியபடி வெளிவரும் நீர், பரந்த நிலத்தில் அலையடித்து வருவதும் போவதுமாய் இருந்தது. பறப்பவைகளில் ஒன்றை மட்டுமே அவன் அறிந்திருந்தான். அதுவும் கூட்டமாய் பறக்கும், இங்கோ பலவற்றை வெவ்வேறு அளவில், நிறத்தில் கண்டான். அவனுடைய வீட்டைப் போலவே சுற்றிலும் இருப்பவை இங்கில்லை, பெரிய பெரிய செடிகள், மரம் தான் அவை. அவனுக்குப் பெரிய செடிகள் அவ்வளவே.

தேரூர் குளக்கரையின் எதிரிலே ஓடு வேய்ந்த வீடு, இசக்கி மாமாவிடம் காத்திருக்க முடியுமா எனக் கேட்க, அவரும் சரியென்றார். பின்னே தேரூரில் இருந்து நாகர்கோயிலுக்கு வேறு சவாரி கிடைக்கப்போவதில்லை. வந்ததற்கும், காத்திருப்புக்கும், போவதற்கும் சேர்த்து மொத்தமாய் ஒரு தொகையை போடலாம் என உத்தேசித்துவிட்டார். “நீ சொல்லித்தான் வந்திருக்கேன் விஜி, பாத்தோமா போனோமான்னு இருக்கணும். புரிஞ்சா” என்றான் அவளிடம். 

“கொள்ளாம், உங்க ஆச்சிய பாக்க நா இழுத்துட்டு வரணும். அதுல வியாக்கானம். உள்ள போய் நல்லாப் பேசுங்க. வயசான காலம்.” கையில் பிடித்திருந்த மகனை மடியில் அமர்த்தி நாகுவை இழுத்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

உள்ளே ஆச்சி படுத்தபடி கிடந்தாள், பக்கத்தில் அத்தையாக இருக்க வேண்டும், அப்பாவின் முகச்சாடை இருந்தது. ஆசுவாசப்பட அத்தனையும் இருந்த பெரிய அறையில் உடலை குறுக்கியபடி நாகு சென்றான். விஜி நிதானமாக வந்தாள், மடியில் அவன், வீட்டின் உத்திரத்தை வெறித்தவாறே வந்தான். “அம்மா, யாரு வந்திருக்கான் பாரு. உன் பேரன். அப்படியே அண்ணனை மாதிரியே இருக்கான். என்ன கொஞ்சம் அம்மைக்க கலர் இருக்கு. மூக்கு அப்படியே இருக்கு, மக்கா அப்பாவ மாறியே. எப்ப வந்த ஊர்ல இருந்து. உங்க அம்மைட்ட சொல்லி விட்டுட்டே இருந்தேன். ஊருக்கு வந்தா இங்க வர சொல்லுன்னு. பெரியாளுக்கு உள்ள ஆயிரம் உட்பூசல் இருக்கும். நீங்க அப்புடி இருக்கலாமா?..” நீண்டுக் கொண்டே இருந்த பேச்சை ஆச்சிதான் நிறுத்தினாள். 

“எட்டி, கொஞ்சம் நிப்பாட்டு. அவனே இப்போதான் வந்திருக்கான். கல்யாணத்துக்கு பாத்தது பேரனையும் பேத்தியையும். அதுக்காவது கூப்பிட்டாளே உங்க அம்மை. பாரு என்ன பூட்டி ஆக்கிட்டியே. பயல கொண்டா மக்கா. அப்படியே லெட்சுமணன மாறியே இருக்கான். டீ போடுட்டி,” பேசிக்கொண்டே இருக்கும் போது விஜி அவனை ஆச்சியிடம் கொடுத்தாள்.

அவனின் மொழி அவள் அறிந்திருந்தாள். விரல்களால் உத்திரத்தை அவன் காட்ட சரியாய் மின்விசிறியை ஓட வைத்தாள். நாக்கை மடக்கி கண்களை சுருக்கி அவனை சிரிக்க வைத்தாள். “பிள்ளைக்கு பேரு என்னா” ஆச்சி கேக்க, விஜி ஒரு பெயரை சொல்ல, அவளோ “எனக்கு நீ லெட்சுமணன் தான். எம்பிள்ளைலா நீ. அவன் சொன்னா கேக்க மாட்டான். நீ அம்மைக்கு பேச்ச கேக்கணும் சரியா கண்ணு,” எனச் சொல்ல. எதற்கோ அவனும் தலையசைக்க “பாத்தியா சரினு சொல்லுகான். நல்ல மண்டை இந்த வயசிலியே. மெட்ராஸ்ல எப்புடி இருப்பான் மக்கா. சேட்டை பண்ணுவானா?” 

“பண்ணுவான், ரொம்ப அட்டூழியம் பண்ண மாட்டான். சொன்னா கேட்டுப்பான்,” விஜி கூறினாள்.

நாகு சிரித்தபடி நின்றானே தவிர எதுவும் பேசவில்லை. விஜி சகஜமாக அடுக்களைக்குள் நுழைந்து விட்டாள். தனியாக விட்டு உள்ளே சென்றுவிட்டாள், என்ன செய்ய என்று யோசித்தாவாறே சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களை நோட்டமிட்டான். தாத்தாவின் புகைப்படத்திற்கு அடுத்து அப்பாவின் படமும் மாட்டப்பட்டு தாத்தாவை விட பெரிய ரோஜாப் பூ ஆரமும் இடப்பட்டு இருந்தது. தாத்தாவின் பெயரே நாகுவிற்கும், நாகராஜன் சுருங்கிக் கூப்பிட ஏதுவாய் நாகுவாகி விட்டது.

குடிகார அப்பனை விட தாத்தா அதிகம் குடித்தார். பெண் சகிக்க ஆயிரம் காரணமுண்டு, முதலாய் நிற்பது பாழாய் போன குடிதானே. குடிப்பவனில் ருசியறிந்து சுவைக்காய் போதும் போதும்! போதைக்காய் குடிப்பவர் தானே நூறில், நூறுக்கு நூற்று பத்து ஆட்கார். சண்டையில்லா குடிகாரன் வீடு காணக் கிடைக்குமா!. அப்பனின் அம்மையின் சண்டை குடும்பம் வரை நீண்டது. அப்பாவின் மேல் போலீஸ் கேஸ் மாமா போட, அவர்தான் அம்மையின் அண்ணன் கிருஷ்ணன், பூவாய் வளர்த்த தங்கச்சி குடிகாரன் கையால் அடிபட எப்படி பொறுப்பார். அப்பா இரண்டு நாள் ஸ்டேஷனில் இருக்கப் போய் தாத்தாவிற்கு அம்மையின் மேல் கோபம். அம்மையை வெட்ட அருவாளோடு வீட்டிற்கு வந்துவிட்டார். பெகலத்தில் ஊர்க்காரர் யாரோ போன் போட அப்பா கூட தாத்தாவும் ஒரு நாள் ஸ்டேஷனில் இருந்தார். பின் மாதம் ஒருமுறை இதே கூத்து நடக்கும். பொறுத்தார் பூமி ஆள்வார், சூழல் அல்லவா முடிவு செய்யும். அம்மை பெத்தவளின் வீட்டிற்கே வர, நாகுவும் அங்கே சென்றுவிட்டான். அம்மைக்கு அப்பாவை விட தாத்தாவின் மேல் தான் கோபம்.

தாத்தா இறந்ததற்கு நீர்க்குடம் எடுக்க பேரனை அழைத்து செல்ல லெட்சுமணன் பட்ட பாடு ஊர் அறியும். கிருஷ்ணன் தான் நாகுவை அழைத்து செல்ல முயன்றான், அம்மை விடவில்லை. நாகுவிற்கும் ஏனோ தாத்தாவிற்கு வாக்கரிசி போடத் தோணவில்லை. கடைசி காலத்தில் தாத்தா கை, கால் இழுத்து வாதம் வந்து கோட்டார் பெரிய ஆஸுபத்திரிக்கு வருவார். ஒரு நாள் பயலுக்கு கடும்காய்ச்சல், வயித்தாலே போக அம்மையும் நாகுவை அங்கு அழைத்து சென்றாள். அன்றைக்கு தாத்தா அம்மையை பார்த்தார், சில சம்பவங்கள் மறப்பதில்லை. அம்மை என்னிடம் பத்து ருபாய் கையில் கொடுத்து, தாத்தாவிடம் கொடுத்துவிட்டு வரச் சொன்னாள். உண்மையில் அன்றைக்கு திரும்பி வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு இருந்த பைசா அது. தாத்தாவும் அதை வாங்கினார். அழுதபடியே நின்றார். அம்மையும் தள்ளி நின்று பார்த்தாள், அவள் கண்களும் அப்படித் தான் இருந்தது. பிறகும் அம்மை ஏன் விடவில்லை, நாகு பின்னாட்களில் இதை மறந்து விட்டான். துஷ்டிக்கு அம்மை வரவே இல்லை, அதனால் தான் ஆச்சிக்கு வெப்ராளம் கூடி அம்மையினுடனான பேச்சை வெட்டிக்கொண்டாள். அம்மை பேசாத வீட்டில் மகனுக்கு என்ன வேலை கிடக்கு. நாகுவும் போவதில்லை, அப்பன் இறந்த வீட்டில் பதினாறு நாள் சடங்கு முடிய ஆச்சி நாகு வீட்டிலே இருந்தாலும், பேச்சே இல்லை. கடைசியாய் கல்யாணத்திற்கு எல்லாரையும் பார்த்தது. பேரன் பிறந்தும் எதற்கும் சொல்லிவிடவில்லை, யாரும் வருவதில்லை. ஆச்சிக்கு உடம்பு முடியாமல் போனதும் என்னாச்சோ இறங்கி அத்தை மூலம் பேசியிருக்கிறாள். என்ன கதையப்பா இது? நாகு படங்களை பார்த்தபடி நின்றப்படியே யோசித்தான்.

அத்தை டீ கொண்டு வந்தாள். நாகு குடித்துவிட்டு கிளம்பத் தயாராய் நிற்கவும், “ஆச்சி வீட்டுல மத்தியானம் சாப்பிட்டுட்டு போ மக்கா” அத்தை கேட்டாள். ஆச்சிதான் கேட்க சொல்லியிருப்பாள். விஜி நாகுவை பார்த்து “எப்போவாச்சும் வாரோம், இருந்துட்டு போவோம்” என்றாள். 

இவள் ஒரு முடிவோடு தான் இருக்கிறாள். இசக்கி மாமா இன்னும் எவ்வளவு கூட்டுவாரோ? மாமாவிடம் இன்னும் நேரம் ஆகும் என தயங்கிவாறே சொல்ல, அவரோ இயல்பாய் “அப்படியா, சரி மக்கா.. இங்க பக்கத்துல மைனி வீடு மாங்குளத்துல இருக்கு.. நா ஒரு எட்டு போயிட்டு வந்திருகேன்.. கிளம்பும் போது ஒரு போன் அடி, வாரேன்” என்றார். ஆக மைனி வீட்டிற்கும் இசக்கி போனதாய் ஆகிவிட்டது.

ஆச்சி அவனை மடியில் அமர்த்தி தத்தி தத்தி நடந்தாள். “அம்மா, நீ வெளிய போகாண்டாம். நடக்கவே கஷ்டப்படுக. பிள்ளைய கீழ விட்டுறாதே. பாத்து பைய” அத்தை கூற, ஆச்சி சிரிப்புடன் “கழியாட்டி மருந்து மாத்திரை வேண்டாம். பேரன் பேத்தி வந்தா சுகமாயிடும். போட்டி, நீ அடுக்காளை வேலைய பாரு” மெதுவாய் வாசலுக்கு நகர்ந்தாள். 

விஜி பார்வையாலே நாகுவை கூட செல்லுமாறு கூறினாள். புரிந்தவன் ஆச்சி கூடவே நடந்தான். உள்ளே இரண்டு பெண்கள், மலையளவு கதைகள். “அம்மைக்கு இப்போ முன்ன மாறி இல்ல. மைனிய பாக்கணும்னு சொன்னா, அவாளும் வந்து பாத்துட்டு போனா. நாகுக்கு தெரியாது. அம்மையே மாறிட்டா, பய அப்டி இல்ல. அண்ணனுக்கு குணம் அது. எல்லாம் மாறித்தானே ஆகணும். நல்லா பாத்துக்கானா உன்ன. சும்மா கேக்கேன்.” 

 “நல்லா பாத்துப்பாங்கா. சாப்பாடுதான் கஷ்டம், எதுலயும் குறை. குழம்பு நானே வைக்கேன். நீங்க வச்சு உங்களையும் குறை சொல்லும் நாக்காக்கும் அவங்களுக்கு. மாமா அப்படித்தானா?” 

“அண்ணன் சாப்பாட்டுல ஒரு குறை பாக்காது. சமையலுல நாரோயில்ல ஒரு கலக்கு கலக்குன ஆள். பட்டி போல உள்ளதத் திங்கும்.” கதை இருவருக்கும் இன்னும் இருக்கு.

தேரூர் குளம் அப்படியே இருந்தது. அரசாழ்வான் கண்ணுக்கு தெரிய வேண்டாம். ஆச்சி படித்துறைக்கு நடந்தாள். வெயில் தாழ மேகக்கூட்டம் உதவியது. அவன் எல்லாவற்றையும் கவனித்தான், உண்மையில் அப்பாவும் அவன் பின்னாலே வருவது சௌகரியத்தை கொடுத்தது. கரையில் இருந்த ஊமத்தம் பூவை தொட்டு பட்டாம்பூச்சி விளையாடியது. அவன் நாகுவை பார்த்தான், கைகளை தட்டினான். “அப்ப்பா, பூச்சி. அப்ப்பா” என்றான். 

ஆச்சி “பேசுவான் பாத்தியா மக்கா. வெளிய கூட்டிட்டு போவியா அங்க”, “கூட்டிட்டு போவோம். வாரத்துக்கு ஒரு நாள். அங்க குளக்கரை, தோப்பு, வயலுக்கு எங்க போக. இது புதுசா இருக்கு அவனுக்கு. லேய் குட்டி, இது பூச்சி இல்ல. பட்டர்பிளை. எங்க சொல்லு பட்டர்பிளை.” 

அவன் நாகுவையே பார்த்தான். நாக்கை வளைத்து காற்றை குவித்து வார்த்தை ஒவ்வொன்றாய் உருவாக்கினான், இறுதியில் ‘பட்டர்பி’ வந்தது. ஆச்சி அவனையே கவனித்து “ஆமா, பட்டர்பி. அந்தாளா போவோமா, அங்க நிறைய பட்டர்பி பறக்கும்.”  ஆச்சி நடக்க நாகுவும் கூடச் சென்றான்.

“உன்னைய நா தூக்கவே இல்ல மக்கா. ஆச்சி உனக்கு ஒன்னும் பண்ணல,” குரலில் இருந்த சோகம், கண்களில் வழிந்தது. 

“அதுலாம் விடுங்க. ஒன்னும் இல்ல.” 

“இல்ல நீ மொதப் பேரன். தாத்தா செத்ததுக்கும் நீ வரல. நா பொட்டச்சி என்ன செய்வேன். நா பொறுத்து போய் இருக்கணும். அப்போ எனக்கும் மதி இல்ல. எம்பிள்ளைய ஸ்டேஷன்ல அடிச்ச அடி. உங்க அம்மைக்கு மேல வெறுப்பாயிட்டு. உன்னையும் பாக்காம விட்டுட்டேன். லெட்சுமணன் கனவுல வருவான். அழுவான். இந்தா மடில இருக்கானே இவன் யாரு லெட்சுமணன் தானே. எல்லாம் விதி,” என்றாள். 

நாகு தலையை கவிழ்த்தே நின்றான். “மக்கா, எனக்காண்டி ஒண்ணே ஒன்னு செய்யணும். நீ எனக்கு மூத்த பேரனா நீர்க் குடம் எடுக்கணும்.” கூறிக்கொண்டே ஆச்சி நாகுவின் கைகளைப் பிடித்தாள்.
“இப்போவே எதுக்கு ஆச்சி, நீ இன்னும் இருப்ப. எதுக்கு இதுலாம் பேசுக.” 

“எனக்கு தெரிஞ்சிட்டு, எப்போ வேணும்னாலும் மூச்சு நிக்கும். எல்லாத்துக்கும் உள்ளது தானே. இப்போலாம் ஒரண்டையும் போகது இல்ல. பழசு எல்லாம் ஓர்மை வருகு. நா பண்ணினது தப்போ, சரியோ. உங்க அம்மைய கஷ்டப் படுத்திட்டோம். எல்லாத்துக்கும் ஒரு நாள் வருத்தப் பட்டுட்டோம். உங்க அத்தைக்க மகள கட்டிக் கொடுத்து, அவதான் உன் மைனி. அவ சடங்கு ஆன நாளு, நீ ரசவட சருவத்துல விழுந்துட்ட, மறந்திட்டியா.” 

“இல்ல ஆச்சி நியாபகம் இருக்கு. அன்னைக்கு சருவத்துள்ள விழுந்தேன். இப்போ வர ரசவட ரொம்ப இஷ்டம். அன்னைக்கு யாருக்கும் தெரியாம குனிஞ்சு எடுக்க போய் விழுந்திட்டேன்.” 

சொல்லிவிட்டு அவனும் சிரிக்க, ஆச்சி சிரித்தாள். பின் அமைதியானாள், “அளவோள இருப்பா, ஆனா அந்த பய குடிச்சுட்டு வீட்டுல பெகலம் பண்ணுவான். நல்லப் பயதான். ஒர்க் ஷாப் வச்சிருக்கான். குடிச்சா ஆளு கையில எடுக்க ஆகாது. ஓடத் தண்ணி மாறி, என்ன எழவுதான் இருக்கோ. சமயத்துல அடிப்பான் போல, அழுதுட்டு இங்க ஓடி வந்துருவா. உங்க அப்பனும் இல்ல, உங்க மாமங்காரன் இருக்கானா, இல்லையானே தெரில. அவள இப்போ பாத்தா உங்க அம்மைக்க நினைப்பு வருகு,” ஆச்சி அழுவது சங்கடமாய் இருந்தது. 

“உடுங்க, இப்போ எதுக்கு பழசுலாம்.” நாகு ஆச்சியின் கைகளைப் பிடித்தான். மேகங்கள் நகர்ந்து வெயிலை அள்ளி வீசியது வானம், தெளிவான வானம். அவன் மாத்திரம் ‘பட்டர்பி’யை விடவில்லை.

வீட்டிற்கு நுழைந்தார்கள். சமையல் முடிந்து தயாராய் இருந்தது. அத்தை புறவாசலில் இருந்த வாழையில் இலை வெட்டி எடுத்தாள். சோறும், புளிக் கறியும், ஈறுள்ளி மிளகு பச்சடியும் நாகுவிற்கு பிடித்தது, கூடவே வீட்டிலே உறை ஊற்றி எடுத்த தயிர். சாப்பிடும் இலையில் கொஞ்சம் சோறு மிச்சம் இருக்க, அத்தை கேட்டாள் “மக்கா எப்புடி இருக்கு சாப்பாடு. மிச்சம் வைக்காதே.” 

“விஜி சாப்பாடு சாப்புட்டு இது புதுசா இருக்கு. எனக்கு போதும்.” 

“ஹலோ, நான்தான் சமைச்சேன். மிச்சம் வச்சதுக்கு சமாளிப்பு. நா சொன்னேன்ல சித்தி,” கூறிவிட்டு விஜி சிரிக்க, ஆச்சியும் அத்தையும் கூடவே சிரித்தனர். கிளம்பத் தயார் ஆனார்கள். 

ஆச்சி வாசலில் நின்றாள். நாகு இசக்கி மாமாவிற்கு போன் செய்தான். குளக் கரையில் பல வண்ண பட்டாம்பூச்சி பறந்தது. விஜியின் மடியில் அவன் “பட்டர்பி” என்றான் குளக் கரையை கைநீட்டி. 

விஜி புரியாமல் விழிக்க, ஆச்சி “மக்கா, பட்டர்பி னா பட்டாம்பூச்சி.” எனச் சொல்ல. விஜியின் மடியில் இருந்து அவன் ஆச்சியை கைநீட்டினான். ஆச்சி அவனை தூக்கி பட்டர்பி பக்கமாய் செல்ல, இசக்கி மாமா வந்துவிட்டார். விஜியிடம் “ஒரு பத்து நிமிஷம் நிப்போம். ஆச்சி வரட்டும். ஊருக்கு வந்தா இங்க வருவோம்.” 

விஜி நமட்டு சிரிப்புடன், “சரி, சரி” என்றாள். இசக்கி மாமா பத்து நிமிஷத்திற்கும் சேர்த்து மொத்தமாய் கணக்குபோட, குளக்கரையில் ஆச்சியும், அவனும் ‘பட்டர்பி, பட்டர்பி’ எனக் கூப்பிட, அத்தனை பட்டாம்பூச்சியும் அவர்களைச் சூழ்ந்தன.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.