தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

கென் லூ[i]

[இங்கிலிஷ் மூலத்திலிருந்து தமிழாக்கம்: மைத்ரேயன்][ii]

என் செல்லமே, என் குழந்தாய், மிக நீண்ட ஒலிப்புகள் கொண்ட சொற்களையும், சுற்றிச் சுழன்றாடும் கருத்துகளையும், வழிதவறி அலையும் வாக்கியங்களையும், அலங்கார வேலைப்பாடு கொண்ட பிம்பங்களையும் ருசித்துப் பருகும் ரசிகையே, சூரியன் உறங்குகையில், சந்திரன் அரைத் தூக்கத்தில் உலவுகையில், நட்சத்திரங்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தும், பல நூறு ஒளி வருடங்கள் தாண்டி இருந்தும் தம் ஒளியை வீசி நம்மைக் குளிப்பாட்டும் போது, நீ உன் போர்வைகளுக்குள் சுருண்டு சௌகரியமாகப் படுத்திருக்கையில், நான் உன் கட்டிலின் அருகே என் நாற்காலியில் அமர்ந்து குனிந்து இருக்கையில், நாம் பாதுகாப்பாகவும், கதகதப்பாகவும், நிம்மதியாக அசைவின்றி, மச்சகன்னி விளக்கின் முத்து போன்ற பல்பிலிருந்து வீசும் உஷ்ணமஞ்சள் ஒளியில், கடுமையாகக் குளிரும் இருட்டைக் கொண்ட அண்ட வெளியில் சுழன்றபடி, ஒரு வினாடிக்குப் பல டஜன் மைல்களைப் பாய்ந்து கடக்கும் இந்த கிரகத்தில்,  நானும் நீயும் இருக்கிறோம், நாம் படிக்கத் தொடங்கலாம்.

****

டெலோசியன்களின் மூளைகள் அவர்களுடைய புலன்களிலிருந்து கிட்டும் அனைத்துத் தூண்டுதல்களையும் பதிவு செய்கின்றன: அவர்களுடைய தண்டுவடத்தின் மேலுள்ள முடிகளின் மேலாகப் படரும் ஒவ்வொரு சிலிர்ப்பையும், ஜவ்வுப் படலத்தாலான அவர்களுடைய உடலைத் தீண்டும் ஒவ்வொரு ஒலி அலையையும், அவர்களின் எளிய-கூட்டு-ஒளி முறிவு ஒளிப் புலக் கண்களால் பார்க்கப்படும் ஒவ்வொரு பிம்பத்தையும், ஆடிக் கொண்டிருக்கும் தண்டுக் கால்களால் மூலக அளவில் கைப்பற்றப்படும் ஒவ்வொரு சுவையின், ஒவ்வொரு வாசனையின் உணர்ச்சியையும், உருளைக் கிழங்கைப் போல தாறுமாறான உருக் கொண்ட அவர்களது கிரகத்தின் காந்தப் புலத்தில் உள்ள பாய்ச்சல்கள், தேய்வுகளையும் அவை பதிவு செய்கின்றன.

அவர்கள் விரும்பும்போது, ஒவ்வொரு அனுபவத்தையும் அவர்களால் முழு முற்றாக ஒரு சிதைவுமின்றி திரும்பக் கொணர முடியும். ஒரு காட்சியை அப்படியே உறையச் செய்து, அதில் பகுதி விவரங்கள் மீது நெருங்கி உருப்பெருக்கிப் பார்க்க முடியும்; ஒவ்வொரு உரையாடலையும் திரும்ப மீட்டு, அதை கூறு கூறாக அலசி நோக்கி, அதிலிருந்து ஒவ்வொரு தொனியையும், சாயையும் பெற முடியும்; குதூகலமான ஒவ்வொரு கணமும் எண்ணற்ற தடவைகள் திரும்ப உணரப்பட முடியும், ஒவ்வொரு மறு நோக்கும் புதுப் புது கண்டுபிடிப்புகளைக் கொணர்வதைக் காண முடியும். ஒரு துன்பமான நினைவும் இதே போல எண்ணற்ற தடவைகள் மறுபடி நிகழ்த்திப் பார்க்கப்பட முடியும், ஒவ்வொரு தடவையும் புதுப்புது ஆங்காரத்தைக் கிளப்பச் செய்ய முடியும்.

முடிவிலி முடிவுள்ளதின் மீது சுமையாக ஏறுவது அதிகம் நீடிக்க முடியாத ஒன்று.

டெலோசிய அறிதிறனுக்கான உறுப்பு, பகுதி பகுதியாக இணைக்கப்பட்ட உடலினுள் இருக்கிறது. அந்த உடல் ஒரு புறம் புது மொட்டுக்களாகத் துவங்கி வளர்ந்தபடி இருக்கும், இன்னொரு புறம் வாடி உதிர்ந்தபடி இருக்கும். ஒவ்வொரு வருஷமும், ஒரு புதுப் பகுதி தலைப் பகுதியில் இணைக்கப்பட்டு, வருங்காலத்தைப் பதிவு செய்யத் தயாராக இருக்கும்; ஒவ்வொரு வருடமும் ஒரு பழைய பகுதி வால் புறத்திலிருந்து உதிர்க்கப்பட்டு, கடந்த காலத்தைக் காணாமல் அடிக்கும்.

ஆக, டெலோசியர்கள் எதையும் மறப்பதில்லை, ஆனால் அவர்கள் எதையும் நினைவு வைத்திருப்பதும் இல்லை. அவர்கள் மரிப்பதே இல்லை என்று சொல்லப்படுகிறது, ஆனால் அவர்கள் எப்போதாவது வாழ்கிறார்களா என்பதுமே கேள்விக்குரியதாகிறது.

***

சிந்திப்பதே ஒரு வகைச் சுருக்கும் முறை என்று ஒரு வாதம் இருக்கிறது.

நீ முதல் தடவையாக சாக்லேட்டைச் சுவைத்தது நினைவிருக்கிறதா? அது கோடையில் ஒரு பின்மாலை. உன் அம்மா அப்போதுதான் கடைக்குச் சென்று திரும்பி இருந்தாள். அவள் ஒரு மிட்டாய்க் கட்டியை உடைத்து, குழந்தைக்கான உயர நாற்காலியில் அமர்ந்திருந்த உன் வாயில் அதை இட்டாள்.

கோக்கோவின் வெண்ணெயிலிருக்கும் ஸ்டியரேட்[iii] (உப்பு) உன் வாயிலிருக்கும் உஷ்ணத்தை உறிஞ்சிக் கொள்கிறது, உன் நாக்கில் உருகுகிறது, அடர்ந்த காரப் போலிகள்[iv] விடுபடுகின்றன: துடிப்பூட்டும் காஃபீன்[v], கிறுகிறுக்கச் செய்யும் ஃபென் எதில் ஆமீன்[vi], மற்றும் செரொடானிக் தியோப்ரொமீன்[vii]; உன் சுவை மொட்டுகளில் ஊறுகின்றன.

”தியொப்ரோமீன்,” உன் அம்மா சொல்கிறாள், “என்றால் கடவுள்களின் உணவு என்று பொருள்.”

அந்தத் திண்டியின் இழைநயத்தை உணர்ந்தத போது உன் கண்கள் வியப்பில் விரிவதையும், அதன் கடிக்கும் அந்தக் கசப்பில் உன் முகம் சுருங்குவதையும், அதன் இனிப்பு உன் சுவைமொட்டுகளைத் திணறச் செய்த போது உன் மொத்த உடலும் தளர்வதையும், அதில் இருந்த ஆயிரக் கணக்கான இயற்கையான பலகூட்டுப் பொருடகளின் நடனம் இதற்கெல்லாம் உதவுவதையும் பார்த்து நாங்கள் சிரித்தோம்.  

அப்போது அவள் மீதி சாக்லேட் கட்டியை இரு பாதிகளாக உடைத்து, ஒன்றை எனக்கு ஊட்டி விட்டாள், மற்றதை அவள் சாப்பிட்டாள். “அமிர்தத்தை நாம் முதலில் சுவைத்தபோது அது எப்படி இருந்தது என்பது நமக்கு நினைவு வைத்திருக்க முடிவதில்லை, அதற்காகத்தான் நாம் குழந்தைகளைப் பெறுகிறோம்.”

அவள் அன்று என்ன ஆடை உடுத்தி இருந்தாள் என்பதையோ அல்லது அவள் என்ன வாங்கி வந்திருந்தாள் என்பதையோ என்னால் நினைவு கூர முடியவில்லை. அன்று மாலை மீதி நேரம் நாம் என்ன செய்தோம் என்பதும் எனக்கு நினைவில் இல்லை; அவளுடைய குரலின் சரியான தொனியையோ, அல்லது அவளுடைய தோற்றத்தின்  சரியான அம்சங்களையோ, அவளுடைய வாயின் ஓரங்களில் இருந்த கோடுகளையோ, அவளுடைய வாசனைத் திரவியத்தின் பெயரையோ என்னால் திரும்ப நினைவு கொள்ள முடியவில்லை. எனக்கு நினைவிருப்பதெல்லாம், சமையலறை ஜன்னல் வழியே சாய்ந்த சூரிய ஒளி அவளுடைய முன் கை மீது மின்னியதும், அந்தக் கீற்று அவளுடைய சிரிப்பை ஒத்த எழில் கொண்டதாக இருந்ததும்தான்.

ஒளியூட்டப்பட்ட முன் கை, சிரிப்பு, கடவுள்களின் உணவு. இப்படித்தான் நம் நினைவுகள் தகவல்களைச் சுருக்கிச் சேமிக்கின்றன, நமது மனதின் கட்டுப்பட்ட அளவுள்ள இடத்தில் அவை மின்னும் ஆபரணங்களில் பொருத்தப்பட்டு, பதிக்கப்படுகின்றன. ஒரு காட்சி நினைவுத் துணையாக மாற்றப்படுகிறது, ஓர் உரையாடல் ஒரு சொல்லுக்குச் சுருக்கப்படுகிறது, ஒரு முழு நாளுமே குதூகலமான ஆனால் கரைந்து போகும் கணமாக வடித்தெடுக்கப்படுகிறது.

காலத்தின் அம்பு சுருக்கத்தின் நம்பகத்தன்மையில் இழப்பைக் கொணர்கிறது. ஒரு கோட்டுரு, ஒளிப்படம் இல்லை. ஒரு நினைவு என்பது மறு படைப்புதான், மிக அருமையானது ஏனெனில் அது மூலத்தை விட கூடியும் குறைந்தும் உள்ள ஒன்று.

***

இலேசான, கொத்துக் கொத்தாக உள்ள உயிரி மூலக்கூறுகளில் செழித்திருக்கும், எல்லையற்ற, கதகதப்பான பெருங்கடலில் வாழும் ஈஸொப்ட்ரான்கள் உருப்பெருக்கப்பட்ட உயிரணுக்கள் போலத் தெரிகிறார்கள். நம்முடைய திமிங்கிலங்கள் அளவுக்கு பெரிதாகி விட்ட உயிரணுக்களைப் போல சில ஈசொப்ட்ரான்கள் இருக்கிறார்கள். தங்களுடைய ஒளி ஊடுருவும் உடல்களை ஆட்டியபடி, மேலெழுந்தும், கீழே சரிந்தும், உருண்டும் சுருண்டும், இருளில் ஒளிரும் நுங்கு மீன்கள் நீரோட்டத்தின் மீது சவாரி செய்வதைப் போல அவர்கள் மிதந்து போகிறார்கள்.

ஈசோப்ட்ரான்களின் சிந்தனைகள், பாம்பாட்டியின் கூடையில் பாம்புகள் தம்முள்ளேயே சுருண்டு ஒடுங்குவது போல தமக்குள் மடிப்புகளாகும் புரதங்களின் பல அடுக்குச் சங்கிலிகள் போலப் பதிவாகின்றன. மிகச் சிறிய இடத்தில் அடங்கக் கூடியதாக, ஆகக் குறைந்த அளவு சக்தியைச் செலவழிப்பதாக அவை இருக்கின்றன. பெரும்பாலான நேரம் அவை செயலற்று இருப்பன.

இரண்டு ஈஸோப்ட்ரான்கள் சந்திக்கும்போது, அவர்கள் ஒன்றாக இணையலாம், அவர்களின் ஜவ்வுகளிடையே ஒரு சுரங்கப் பாதை போல உருவாகும். இந்த முத்தமிடும் இணைப்பு மணிக்கணக்காகவோ, பல நாட்களாகவோ, வருடங்களாகவோ நீடிக்கக் கூடும். அவர்களின் நினைவுகள் விழித்தெழச் செய்யப்பட்டு, பரிமாறிக் கொள்ளப்படும், அதற்கு இருவரிடமிருந்தும் சக்தி எடுக்கப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்தில், மகிழ்ச்சிகரமான நினைவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை பிரதி எடுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன, இந்த நடைமுறை புரதங்களின் வெளிப்பாட்டை ஒத்திருக்கும்- பாம்பு போன்ற புரதங்கள் பிரிந்து, அவை முதலில் படிக்கப்பட்டு, மறுபடி வெளிப்படுத்தப்படுகையில், அந்த சங்கேதத் தொடர்களின் மின்சார சக்தியுள்ள இசையில் மதிமயக்கும்படி நடனமாடுகின்றன- அதே நேரம் துன்பம் தரும் நினைவுகள் இரண்டு உடல்களிடையே பரவலாக்கப்பட்டு நீர்த்துப் போகின்றன. ஈஸோப்ட்ரான்களுக்கு, இதனால் பகிரப்படும் மகிழ்ச்சி இரட்டை மடங்காகிறது, அதே நேரம் பகிரப்படும் துயரம் பாதியாகி விடுகிறது.

அவர்கள் பிரியும் நேரம் வருகையில், இருவரும் மற்றவரின் அனுபவங்களைத் தம்முள் எடுத்துக் கொண்டு விட்டிருப்பார்கள். இதுதான் உணர்ந்து இசைதலின் மிக உண்மையான வடிவம், ஏனெனில் அனுபவத்தின் குணங்களே பகிரப்படுகின்றன, மேலும் ஒரு மாற்றமும் இல்லாமல் வெளிப்படுத்தப்படுகின்றன. அங்கு ஒரு வகை மொழி பெயர்ப்பும் இல்லை, பரிமாற்றத்தில் இடையிடும் எந்த ஊடகமும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக அறிகிறார்கள், மொத்தப் பேரண்டத்தில் வேறுஎந்த ஜீவராசிகளும் இந்த அளவு அறிதலைச் சாதிப்பதில்லை.

ஆனால் பரஸ்பரம் ஆன்மாக்களின் ஆடியாக இருப்பதற்கு ஒரு விலை கொடுக்கவேண்டி இருக்கிறது: அவர்கள் இருவரும் பிரியும் நேரம் வரும்போது, இணை சேர்ந்த ஜோடியில், ஒருவர் மற்றவரிடமிருந்து தனித்து அறிய முடியாதபடி ஆகி விடுகிறார். இணைவதற்கு முன் இருவரும் ஒருவர் மற்றவருக்காக ஏங்கினார்கள்; பிரியும்போது அவர்கள் தம்மிடம் இருந்தே பிரிகின்றனர். ஒருவரை மற்றவர் விரும்பும்படி என்ன குணங்கள் ஆக்கினவோ அவையே அவர்களின் இணைப்பில் அழிக்கப்பட்டு விடுகின்றன.

இது வரப்பிரசாதமா, சாபமா என்பது நிறைய சர்ச்சைக்கு உட்பட்டதாக இருக்கிறது.

***

உன் அம்மா,  பிரிந்து போக வேண்டும் என்று அவள் விரும்புவதை ஒரு போதும் மறைத்ததில்லை.

நாங்கள் ஒரு கோடைக்கால இரவில் சந்தித்தோம். ராக்கி மலைகளில் உயரே ஒரு முகாமில் சந்தித்தோம். எதிரெதிர் கடற்கரைப் பகுதிகளிலிருந்து வந்திருந்தோம், வெவ்வேறு பாதைகளில் எழுந்தமானம் பயணிக்கும் இரு துகள்கள் நாங்கள். நான் ஒரு புது வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன், நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குக் காரை ஓட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தேன், செலவைக் குறைப்பதற்காக முகாம்களில் தங்கிக் கொண்டிருந்தேன்; அவள் தன் தோழியையும், ஒரு ட்ரக்கில் நிரம்பியிருந்த அவளுடைய பொருட்களையும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகருக்குக் கொண்டு சேர்க்க உதவி விட்டு, பாஸ்டனுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள், நட்சத்திரங்களைப் பார்க்க விரும்பியதால் ஒரு முகாமில் தங்கினாள்.

நாங்கள் மலிவான ஒய்னை அருந்தினோம், அதை விட மலிவான குழலில் அடைத்த வேகவைத்த பன்றி மாமிசத்துண்டுகளை நெருப்பில் வாட்டித் தின்றோம். பிறகு கரும் வெல்வெட் விதானத்தில் பதிந்த படிகங்களைப் போல மின்னும் நட்சத்திரங்களின் கீழே சேர்ந்து நடந்தோம். அவை பாறையின் குழிவில் பொதிந்த தாதுப் பொருள்கள் போல மின்னின. இத்தனை பளிச்சிட்ட நட்சத்திரங்களை நான் முன்னர் பார்த்திருக்கவில்லை. அவள் எனக்கு அவற்றின் எழிலை விளக்கினாள்: ஒவ்வொன்றும் ஒரு வைரம் போல தனித்தன்மை கொண்டிருந்தவை, வெவ்வேறு நிற ஒளியைச் சிந்தின. அதற்கு முன் எப்போது நட்சத்திரங்களை நிமிர்ந்து பார்த்தேன் என்று என்னால் நினைவு கூரக் கூட முடியவில்லை.

“நான் அங்கே போகப் போகிறேன்,” என்றாள் அவள்.

“செவ்வாய் கிரகத்தைச் சொல்கிறாயா?” அப்போது அது பெரிய செய்தி, செவ்வாய் கிரகத்துக்குப் போவதற்குத் தயாரிப்புகள் நடந்து கொண்டிருந்தன. அது அமெரிக்காவை மறுபடியும் பிரமாதமான நாடாகப் பார்க்கப்படுவதற்காகச் செய்யப்படும் பிரச்சார முயற்சி என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது. ஏற்கனவே உள்ள அணு ஆயுதப் போட்டி, அரும் மண் கனிமங்களை வேறு யாருக்கும் கிட்டாமல் தம் நாட்டுக்குள் குவித்துக் கொள்வது, உலக வலை வெளியில் கணினிகள் மீது ‘ஜீரோ-டே’ தாக்குதல்கள் நடத்துவது போன்றவற்றோடு சேர்த்துக் கொள்ள இன்னொரு விண்வெளிப் போட்டி. மற்ற கட்சி ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் ஒரு தளம் நிறுவப்போவதாக அறிவித்து விட்டதால், நாமும் அந்த நடவடிக்கையைப் பிரதி செய்வதாக அறிவித்து, பெரும் போட்டியில் இறங்குவது.

அவள் தன் தலையை அசைத்து மறுத்தாள். “நம் கரையிலிருந்து சில எட்டுகளே உள்ள ஒரு பாறைமீது தாவுவதில் என்ன பயன் இருக்கும்? நான் சொல்வது அங்கே வெளியே.”

இப்படி ஒரு அறிக்கையை யாரும் கேள்வி கேட்பதில்லை, அதனால் ஏன், எப்படி, நீ என்ன சொல்கிறாய் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், அவள் அங்கே நட்சத்திரங்களின் நடுவே என்ன கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறாள் என்று கேட்டேன்.

(தொடரும்)


[i] இங்கிலிஷில் இது Ken Liu என்று எழுதப்படுகிறது.

[ii] இங்கிலிஷ் மூலம் ’ஆன் அட்வான்ஸ்ட் ரீடர்ஸ் பிக்சர்புக் ஆஃப் கம்பாரெடிவ் காக்னிஷன்’ என்பது ‘எஸ்கேப் பாட்’ – [பதிப்பாசிரியர்கள்: முர் லாஃபெர்ட்டியும், ஜி.எஸ்.பி. திவ்யாவும்; டைடன் புக்ஸ், 2020] என்ற புத்தகத்தில் பிரசுரமானது.

‘An Advanced Readers’ Picture book of Comparative Cognition’ – Ken Liu/ published in ‘Escape Pod’ ed. by Mur Lafferty and S.B.Divya, Titan books, 2020 (An anthology of Science Fiction that were also pod casts.)

[iii] ஒரு வகை உப்பு. ஸ்டியரிக் அமிலத்திலிருந்து கிட்டுவது.

[iv] Alkaloid= காரப் போலி என்று அகராதி சொல்கிறது

[v] Caffeine= a bitter alkaloid C8H10N4O2 found especially in coffee, tea, cacao, and kola nuts and used medicinally as a stimulant and diuretic என்று இங்கிலிஷ் அகராதி சொல்லும். தமிழ் அகராதியில் காஃபீன் என்பது ஒரு காரப்போலி என்றும், மர உப்பு என்றும் சுட்டப்படுகிறது.

[vi] Phenethylamine= a neurotransmitter C8H11N that is an amine resembling amphetamine in structure and pharmacological properties  [ஆமீன்= நவச்சியம் என்று மட்டும் வேதியல் அகராதி சொல்கிறது.

[vii] ரத்தக்குழாய்களை நெருக்குவது செரொடோனினின் வேலை. தியோப்ரோமீன் என்பதும் ஒரு காரப்போலிதான். இங்கிலிஷ் அகராதி சொல்கிறது: a bitter alkaloid C7H8N4O2 closely related to caffeine that occurs especially in cacao beans and has stimulant and diuretic properties.

Series Navigationதேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.