துடைத்தழிப்பும் மீட்டெடுப்பும்

வ. ஸ்ரீநிவாசன்

அச்சமேன் மானுடவா ? – நாஞ்சில் நாடன் கவிதைகள்ஒரு மெச்சல்

கவிஞன் கவனிப்பது எதுவோ அது அவன் மூலம் தன்னைப் பாடுபொருளாக வெளிப்படுத்திக் கொள்கிறது. அப்பாடுபொருளும், அதனோடு சேர்ந்து அக்கவிதையின் துல்லியம், உண்மையான நோக்கம் மற்றும் வெளிப்பாட்டின் நேர்த்தி, வாசிப்பவர்களால் அவரவர் வாசனைகளுக்கு ஏற்ப / புரிந்துகொள்ள / உணரப்படுகின்றன. அவர்தம் நினைவிலும் பதிகின்றன. இந்த வெளிப்பாடுகள் அனைத்துடனும் வாசகர் உடன்பட வேண்டிய அவசியம் இல்லை. சிலவற்றோடு மாறுபடவும் செய்யலாம். ஆனால் கவிஞனின் நேர்மை, உள் நோக்கம் (agenda) இல்லாமை, நம்பகத் தன்மை  வாசகனுக்கு – நட்பார்ந்த உரையாடலுக்கு, தன் தரப்பை அருகில் வைத்துப் பார்ப்பதற்கான போதுமான இடத்தைத் (space) தருகின்றன. 

நீண்ட காலமாக எழுத்துலகில் இயங்கி வரும் ஒருவரின் நேர்மை, நம்பகத் தன்மை, கலைத்திறன் எத்தகையன என்பதை அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் உணர்ந்து இருப்பார்கள்; புதிய கூர்மையான, தரமான வாசகர்களும் உடனே உணர்வார்கள். அவர் நமக்கு நண்பராகவும் இருக்கையில் அவ்வெழுத்தாளரின் திரிகரண சுத்தி (மனோ வாக்கு செயல்கள் ஒன்றாக, குறைந்தபட்சம் சொற்பமான முரண்பாடுகளோடு இருத்தல்)  பற்றியும் தெரிந்துவிடுகிறது. அந்த விதத்தில் தன் தனிப் பேச்சில் சொல்பவற்றை பகிரங்கமாக எழுதுகிறவர்,  தான் உலகில் எதிர்பார்க்கும் அறங்களைக் கெடுக்காத வகையில் பெரிதும் வாழ்பவர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள். தன்னிடம் கூட தன்னுடைய இதுநாள் வரையிலான வாழ்க்கையின் சுவடுகளால் பாரபட்சம் இருக்கக் கூடும் என்கிற தெளிவு உள்ளவர். நமக்கும் காழ்ப்புகள் உள்ளன, கட்டுப்படுத்தும் மனச் சாய்வுகள் உள்ளன என்பதை அறிந்தவர். அந்த அறிவே அவருக்கு உண்மையினின்று பிறழாமல் போக வேண்டும் என்கிற ஜாக்ரதை உணர்வையும், அப்பாதைக்கான வெளிச்சத்தையும் அளிக்கிறது. 

”ஒவ்வொரு நபரும் தன் மீது மட்டுமே கவலை கொண்டவராய் இருக்கிறார்” என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. ”மனிதன் மிகக் கறாராகத் தன்  தேவைகளின்படி மட்டுமே வாழ்கிறான் என்பதைக் கற்றுக் கொண்டபோது அதிர்ச்சி அடைந்தேன்”  என்கிறார் இங்மர் பெர்க்மன். தன் மீது மட்டும் கொண்ட அனுதாபத்தாலும் , அபிமானத்தாலும் செய்யப்படும் எழுத்து  உயர் இலக்கியம் ஆவதில்லை. ஆனால் ஒரு கலைஞன் தன்னோடு நிற்பதில்லை, எழுத்தோடு சம்பந்தப்படும் போதாவது. சுற்றிலும் பார்க்கிறான். பிறர் நோவு அவனுக்கு வலியைத் தருகிறது. தன்னிலிருந்து விடுபட்டு விரிவதற்குக் கருவியாய் இருப்பதால்தான் கலையும், இலக்கியமும் ஞான சாதனங்களாகின்றன. அப்படி இன்னுமோர் உயிரின் சந்தோஷம், துயர் பற்றிய உண்மை உணர்விலிருந்து பிறப்பது உயர் இலக்கியம் ஆகிறது. உலகனைத்தையும் உணர்வால் அணைக்கும் இலக்கியம் பேரிலக்கியம் ஆகிறது. இதில் இந்த வகுப்பின் உலகம், பாலின் உலகம், வர்க்கத்தின் உலகம், பாண்டவர் உலகம், கௌரவர் உலகம் என்றில்லை. உள்ளே சென்று உருப்பெற்று வெளிவரும் எழுத்தின் ஊற்றெல்லாம் ஒன்றே. அதில் அது எத்தனை கொடுமையை விவரித்தாலும் கருணை இருக்கிறது. அக்கருணையே இக்கவிதைகளின் உந்து சக்தி.

எழுத்து – கதையோ, கவிதையோ, கட்டுரையோ, என்னிடம் இருக்கும் அடி ஸ்கேல், வெர்னியர் காலிபர், எடை மெஷின் படிதான் இருக்க வேண்டும் என்கிற சட்டாம்பிள்ளைகளின் கைகளிலோ, கண்களிலோ, சிக்குவதில்லை. எனவே கலை பிரசாரமாக இருக்கக் கூடாது என்கிற ஒரு சூத்திரம் முடிந்த முடிவு அல்ல. கேட்டால் எல்லா எழுத்துமே பிரசாரம்தான். எவ்வளவு உந்நதமான கலையும் ஏதோ ஒரு வகையில் பிரசாரம்தான். 

 இக்கவிதைகள் எல்லாம் பிரசாரம் செய்கின்றன. இதுதான் நடக்கிறது, இது நடக்க வேண்டும் என்று இரண்டையும் சொல்கின்றன. இன்றைய நிலையை சமரசங்கள் இன்றி, தன்னுடைய லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் சித்தரிக்கிற இவற்றின் ஒட்டுமொத்த ரசமாகக் கசப்பும், மற்றும் அனைவரின் மீட்சிக்கான கவலை தோய்ந்த அக்கறையும் உள்ளார்ந்த பொறுப்பும் இவற்றில் தெரிகின்றன.

உண்மை, அன்பு, ஞானம் – ஒரு பொருட் பன்மொழி; அவ்வாறே பொய், தீமை, ஆபாசம். இந்தக் குழுக்களில் எந்த ஒன்றின் பக்கத்திலும் இருப்பவர் அக்குழுவிலுள்ள அனைத்தோடும் இருக்கிறார். உண்மை முதலியவற்றோடு இருப்பவர் எதிர்க் குழுவுக்கு இயல்பாகவே எதிரிடையாக இருக்கிறார்.  
நாஞ்சில் அவர்களைப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, “ தமிழ்ச் செல்வம் இவ்வளவு வாய்க்கப்பெற்ற ஒருவருக்கு ஏன் இவ்வளவு கசப்பு உணர்வு எழுத்தில் தெரிகிறது? ” என்று தோன்றியிருக்கிறது. இந்தக் கசப்பு ரசம் தமிழுக்குப் புதிதல்ல. பாரதிதாசனின் “கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்,” என்கிற அழைப்பும், மற்றும் அவர் சீடனாக முயன்று, ஆக முடியாத ஞானக் கூத்தனின் “இரவிலே பொசுக்கப் பட்ட அனைத்துக்கும் அஸ்தி கண்டார், நாகரிகம் ஒன்று நீங்க” என்கிற கவனிப்பும் சிந்தனையால் வெளிப்படுத்தப்பட்ட கசப்பு. ஆனால் ஆதியில் “பரந்து கெடுக உலகியற்றியான்” என்பதில் இருந்து, அருகாமையில் “படித்தவன் சூதும், வாதும் பண்ணினால் போவான், போவான் அய்யோவென்று போவான்” என்பது வரை உள்ள உணர்ச்சியில் பிறந்த கசப்பு ஒன்று உள்ளது. இது வாதங்களுக்கும், சாதுர்யங்களுக்கும் அப்பாற்பட்ட முழுமையானது, நேரடியானது. இவையெல்லாம் தனக்கு நடந்த அநியாயம் காரணமாக மண்ணை வாரித் தூற்றுவதல்ல.  நமக்காக என்கிற பரந்த உணர்வுப் பெருக்கின் கசப்பு.  முளையில் வெட்டப்படாத அடர் கானகமாகிவிட்ட முட்காடு. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் இப்போது அதை எதைக் கொண்டு நீக்குவது என்கிற விரக்தியின் கசப்பு. தற்போது யார் உயர்ந்தோர் எனக் கொண்டாடப் படுகின்றனர் என்பதின் கசப்பு. நல்ல படைப்பு நாதியற்று இருப்பதன் கசப்பு.  

ஆனால் இக்கவிதைகள் ஒரே ரசத்தில் உழலாமல் கவிஞனின் பன்முகத் தன்மையையும் காட்டுகின்றன.. படைப்பூக்கம் மிக்க எழுத்தாளனின் சுதந்திரம் கசப்பின் சிரிப்பாகவும் வெளிப்படுகிறது.

”மண்திணி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதிஆதார் அட்டை இருந்தாலும்இல்லாமற் போனாலும்” என்கிற ஆறுதல் வார்த்தைகளிலும்,

“ மழை பெய்யணும்அதற்கென்ன செய்யணும் ” என்கிற எதார்த்த உலகின் ஒரே அர்த்தமுள்ள கேள்வியிலும்,

“அரசுப் பணியாய் ஏதோவொன்றுஅருளும் ஆலவாயனே ” என்கிற வேண்டுதலிலும்.
“ அச்சமின்றி நுழையலாகும் அலுவலகம் ஒன்றே உளது அஞ்சலகம் அவர் பீடுடன் நீடு வாழ்க “  எனும் உண்மை மெச்சலிலும்,

“யாவர்க்குமாம் எட்டடி மண், ஒரு வண்டி விறகு, அரை லிட்டர் ஆவின் பால்” என்று அனைத்தையும் முடிக்கும் முடிவிலும். 

தொடர்ந்து இன்னொரு கவிதையில் ” எட்டடி மண்ணும் வேண்டாம் மின்மயானச் சாம்பல் கைப்பிடி அளவே ”என்கையில் அபத்த மானுட வாழ்வின் மொத்தப் பொருள் இன்னும் சுருங்கிப் போகிறது. அந்தச் சாம்பலும் காற்றோடு போய்விடும்.

கசப்பும் அதன் கைத்த சிரிப்பும் அன்றி காலைக் கவ்விய முதலையையே காக்க வந்த திருமாலாக எண்ணி, கையைத் தூக்கி வணங்கும் கஜேந்திரனைப் போல் யார் யார் காலிலோ விழுந்து கிடக்கும் மக்களின் அறியாமை, அலட்சியம் பற்றி எழும் ஆற்றாமையையும், துயரையும் சுமந்து வரும் நெஞ்சைப் பிளக்கும் கூர் ஈட்டி வரிகளும் உண்டு.

“ வரலாறு என்பது துரோகத்தின் மிச்சம்
வாழ்க்கை என்பது துயரத்தின் மிச்சம் ”

“சவத்தின் மேல் உமிழ்ந்த எச்சில் அச்சிரிப்பு ”

“ சீழ்ப்பட்டுப் போனதெம் நீதி தீப்பட்டுப் போனதெம் அறம் முறிபட்டுப் போனதெம் மனிதம் நோய்ப் பட்டுப் போனதெம் மனம் ” என்று சொல்கையில் நாமும் உம் சாவில் மகிழும் அளவிற்குக் கீழ்மை அடைந்து விட்டோமே என்கிற தன்னறிவும், கழிவிரக்கமும் வதைக்கின்றன.

கேலிக் கூத்தாய் வரிசைகளில் நின்று வாழ்நாளின் ஒரு பகுதியைக் கழிக்கும் மானிட வாழ்வின் கையறு நிலையை  “கஞ்சி குடிப்பதற்கிலார்; அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்” என்று பாரதி பாடியதை  ”பிணம் உகக்கும் காகம்”என்று இன்னும் சுருக்கமாக, கடுமையாகச் சொல்லி போகிறார்.    நூற்றாண்டுகளின் உறக்கம். மேலும் ஒரு நூற்றாண்டு ஆகி விட்டதல்லவா? எனவே மேலும் வலிந்து இடித்துரைக்கத்தான் வேண்டி உள்ளது.

இக்கவிதைகள் ஒட்டுமொத்தமாக நடந்து விட்ட  செல்வங்களின் துடைத்தழிப்பையும், அவற்றின் மீட்டெடுப்பையும் பற்றிப் பேசுகின்றன.  

அண்டை நாட்டில் நிகழ்ந்த இன, மதத் துடைத்தழிப்பு நாஞ்சில் அவர்களுக்குத் தீராத துயரைத் தந்த ஒன்று. அதற்கிணையாக அது சமயம் கைகோர்த்த வஞ்சகம், துரோகம் முதலியன. அதைப் போலவே நம் மண்ணிலேயே மொழி, பண்பாடு , ஆன்மீகம், கலை, மனித உறவுகள், நன்னடத்தை அனைத்திலும் பல பத்தாண்டுகளாக துடைத்தழிப்புகள் நடந்து வருகின்றன. இந்த ஆபாசத்தைத்தான் தன் கட்டுரைகளிலும், இக்கவிதைகளிலும் அவர் சாடுகிறார். 

” குறளென்போம் சிலம்பென்போம் கம்பன் என்போம் தமிழ்த் தொடை கறிவறுத்து சீயர்ஸ் சொல்வோம் ”

தன் செயல்பாடுகள் மூலம் ஓர் எழுத்தாளன் இந்த அழித்தொழிப்பை எதிர்க்கும் வேலையோடு, நம் செல்வங்களை மீட்டெடுக்கும் பணியையும் புரிகிறான்.

நாஞ்சில் தற்காலக் கதை, கட்டுரைகளில் கூட நற்றமிழ்ச் சொற்களை பயன்படுத்துவார். அதுவும் கவிதைகளில் அவற்றைக் காண்கையில்  அவற்றின் பொருத்தம் இன்னமும் சிறக்கிறது. மேலும்  தமிழன் எங்கே தன் செல்வங்களைப் புரிந்துகொண்டு விழித்துக் கொண்டு விடுவானோ என்று அழிச்சாட்டியமாக நல்ல, செம்மை மிகு அனைத்தையும் அவன் கண்களில் படாமல் வைத்துவிட்ட சூழ்நிலையில் இச்சொற்களை மீண்டும் புழக்கத்தில் கொண்டு வருவது இருவித நன்மைகளைச் செய்கிறது. 

1. நற்றமிழ்ச் சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன. உதாரணமாக சொல்வனத்துக்கென ஒரு கட்டுரைத் தொடர் கேட்டபோது, அவருக்கு கட்டுரையின் தலைப்பாக ‘ புத்தகம் போற்றுதும்’ என்று இருக்கலாம் என்கிற ஆலோசனை தரப்பட்டது. சில நாட்களுக்குப் பின் இது தொடர்பாக அவரது முதல் கட்டுரை  வந்தபோது, அக்கட்டுரைத் தொடருக்கு அவர் வைத்திருந்த பெயர் “ பனுவல் போற்றுதும் “. அப்புறம் பனுவல் என்கிற சொல் அதிகம் புழங்க ஆரம்பித்து, பனுவல் பதிப்பகம் என்ற பெயரில் ஒரு பதிப்பகம் கூட வந்து விட்டது.

2. மொழியை மீட்கையில் நாம் நமது தொல் புராணங்களையும், தொல் வரலாற்றையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும், ஆன்மிகத்தையும், பகா அறிவையும் மீட்கிறோம். உதாரணமாக இக்கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையைப் படிக்கும் ஒருவர், தமிழிலக்கியங்களோடு பரிச்சயம் இல்லாதவராக இருந்தாலும்,இந்த இணைய வசதிக் காலத்தில் முள்மரம் பற்றி வள்ளுவர் என்ன சொன்னார் என்று தேடிப் படிப்பார்.  ’கறங்கு கால் புகா’ என்பதைத் தேடி, கம்பனைப் படிப்பார். நிகும்பலை யாகம் என்றால் என்ன என்று தேடி இந்திரசித்தைப் பற்றி அறிந்து கொள்வார். இராமாயணம் பற்றி மேலும் அறிவார்.

நம் செல்வங்கள் யாவும் பலரது தினசரி வாழ்வெனும் செக்கில் அரைபடுவதன் மீளாத்துயர், தன்னலக் காரர்களின் செல்வச் செழிப்புக்கான செயல்பாடுகள், கொள்கைப் பிரிவுகள், அற்ப சந்தோஷங்கள், கீழ்மையைப் போற்றும் அறியாமை, நற்பண்புகளின் வீழ்ச்சி, வீண் டம்பம் ஆகிய அடுக்குகளின் கீழ் அமுங்கிக் கிடக்கின்றன. அவற்றில் பலவற்றில் நாம் சிக்கியுள்ள அந்தகாரக் கோட்டையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல் உள்ளது. நிதர்சனத்தைத் துழாவி நமக்குக் காட்டிக்கொண்டே கவிஞர் அதைத்தான் தேடிக் கொடுக்கிறார். அதில் நம் அனைவரின் மொத்த மீட்டெடுப்பும் உள்ளது. 

இதோ அது :

“ எனவே,சற்றே இரக்கமுடையவராய் இரும்.பழி பாவம் அஞ்சும். ஆண்டவனையும் அறத்தையும் எண்ணும். ”

*************

2 Replies to “துடைத்தழிப்பும் மீட்டெடுப்பும்”

  1. கவிதை குறித்தும், கவிஞர் குறித்தும் சிறப்பான அடர்த்தியான பார்வை. நாஞ்சில் நாடனின் கவிதை அறம், கலை மேன்மை, தனிமனித ஆளுமை. ஆண்மை என பல தளங்களுக்குள்ளும் விரிந்தும், குவிந்தும் பார்க்கப்பட்ட கண்ணோட்டம். வாழ்த்துக்கள் திரு.வ. ஸ்ரீ நிவாசன் அவர்களுக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.