தரிசனம் – கவிதைகள்

தென்கரை மகாராஜன்

தரிசனம்

நீண்ட பிரகாரங்களின்
பழுப்பேறிய தூண்களில்
சாய்ந்து
எதற்கோ காத்திருக்கும்
முதியவரைக் கடந்து செல்கிறேன்
கடவுளை தரிசிக்க…

நடை சார்த்தும்
நேரத்தைக் கடத்துகிறார்கள்
பூக்கடை பெண்ணும்
நெய் விளக்கு விற்பவளும்
போட்டியிட்டுக் கொண்டு…

எந்தச் சலனமுமின்றி
சிறகடித்து
திரும்பி வருகின்றன
இரை தேடிச் சென்ற
கோயில் புறாக்கள்…

காலணிகளை
மாட்டித்திரும்புமிடத்தில்
மழலை ஒன்று தந்த
சில்லைறக் காசினை
நடுங்கும் விரல்களில் பற்றிடும்
முதியவளின் முகவரிகளின்
பின்னே இழையோடுகிறது
வலி மிகுந்த வாழ்க்கை…

தேடிச் சென்றதை
தொலைத்து வருகிறேன்
கோபுரமும் கொடிமரமும்
பார்த்துத்
திரும்பி வருகையில்…

கடவுளின் வேண்டுதல்
பொதுவாகத்தானிருக்கிறது
கோவிலுக்கு வெளியே
கையேந்துபவர்களைப் பொறுத்து…


சுழலும் வாழ்க்கை

கடற்கரையோர
கரும்புச் சாறு பிழியும் சக்கரம்
குடை ராட்டினம்
சோளக்கதிர் அடுப்பு
பஞ்சு மிட்டாய் வண்டி
என எல்லாவற்றிலும்
சுழலும் கை
நிதர்சனமாய்
நிலை நிறுத்துகிறது
நிலையில்லா
அன்றாடத் தேடலை.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.