சால கல்லலாடு

லலிதா ராம்

“என்னய்யா பலவேசம் இங்க உட்கார்ந்திருக்க?” என்றபடி சைக்கிளை நிறுத்தினார் மாணிக்கம்.

“ம்.,” என்று தலையைத் தூக்கி, இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா என்று பார்த்தார் திண்ணையில் அமர்ந்திருந்த பலவேசம்.

மாணிக்கம் பதில் வராமல் நகர்வதாக இல்லை.

“என் வீட்ல நான் உட்கார்ந்திருக்கேன். இதுல என்ன இருக்கு?”

“ஊரே அங்க பந்தல்ல கூடியிருக்கு. வீட்டுல உட்காறர நேரமா இது?”

பேச்சு சத்தம் கேட்டு வெளியில் எட்டிப்பார்த்தாள் பலவேசத்தின் மனைவி செல்லம்மாள்.

“என்ன அண்ணி, நீங்களுமா வீட்டுல இருக்கீங்க? ஊர் முழுக்க கொண்டாட்டமா இருக்கு. நம்ப தம்பி நடத்தற விழாவுக்கு நீங்க ரெண்டு பேரும் போகாம இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க.”

“நான் போகலைனு உங்களுக்கு யாரு சொன்னது? இவரு வேணும்னா மோட்டுவளையைப் பார்த்துகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கட்டும். என் மவன் நடத்தற விழாவுல மொத வரிசைல உட்கார்ந்துப் பார்த்துட்டுத்தான் வரப் போறேன்.”

“போயேன்! உன்னை யாரு தடுத்தா! மூச்சுக்கு முன்னூறு தடவை ‘என் புள்ளை! என் வாரிசு! நான் கண்டெடுத்த முத்து’-னு அந்த நரசிங்கம்பேட்டையான் உன் புள்ளையைச் சொல்றானே நீயும் போய் அவன் முன்னால உட்கார்ந்துக்க. உன்னையும் ஏதாவது ஒறவுல சேர்த்துக்கறானானு பாரு,” என்று பொருமினார் பலவேசம்.

“வாயிருந்தா என்ன வேணா பேசலாம்னு இல்லை. இதுல நரசிங்கபேட்டையாரு பேச்சுல விவஸ்தையில்லைனு கொறை வேற. நம்ப பேச்சுல வழியற அசடை யார் சொல்றது?” என்று பலவேசத்தைப் பார்த்துக் கொண்டே உள்ளே போனார் செல்லம்மாள்.

“சரி! நான் கெளம்பறேன். ரத்னம் பிள்ளை வர்ர நேரமாச்சு. நம்ப வீட்டுலதான் சாப்பாடு ஏற்பாடாயிருக்கு. வீட்டுல கொஞ்சம் ஏலக்கா வேணும்னா. அதை வாங்கதான் இந்தப் பக்கம் வந்தேன்,” என்று எழுந்தார் மாணிக்கம்

”ரத்னம் பிள்ளை என்னைக்கு சொன்ன நேரத்துக்கு வந்திருக்காரு? அவர் வந்தாலும் உங்க வீட்டுல சாப்பிடற நிலைமையிலயா வரப் போறாரு? சங்கீதக்காரனை எல்லாம் சபையோட பார்த்து தெருவோட அனுப்பிடணும். வீட்டுக்குள்ள விட்டா,” என்று வரியை முடிப்பதற்கு முன் செல்லம்மாள் மீண்டும் வெளியில் வர நிறுத்திக் கொண்டார் பலவேசம்.

ஓரக்கண்ணால் பலவேசத்தைப் பார்த்துபின் மாணிக்கத்திடம் சொல்லிக் கொண்டு தெருவில் இறங்கிச் சென்றார் செல்லம்மாள்.

மாணிக்கம் திண்ணையில் உட்கார்ந்ததும் வெற்றிலைப் பெட்டியை நீட்டினார் பலவேசம். வெற்றிலையில் காம்பை நீக்கி, சுண்ணாம்பைத் தடவி கொஞ்சம் சீவலையும் சேர்த்துக் கொண்டு மடித்து வாயில் போட்டுக் கொண்டார் மாணிக்கம்.

இரண்டு நிமிடம் போயிருக்கும்.

“ஊரே மெச்சற பிள்ளையைப் பெத்துட்டு என்னய்யா குறை உனக்கு?”

“ம்?”

“தவமிருந்தாலும் இப்படி ஒரு வாசிப்பு எவனுக்காவது வருமா? முந்தா நாள் கோனேரிராஜபுரத்துல பதினோறாம் திருநாள். தம்பி ராத்திரி முழுக்க உசைனி வாசிச்சதைக் கேட்க அவ்வளவு கூட்டம். உள்ளூர்காரனுக்கே நிக்க இடமில்லாம நெரிசல். காலைல நாலு மணிக்குத்தான் வாத்யத்தை உறைல போட்டுது.”

பலவேசம் உதட்டை லேசாகக் கோணி ‘ஹூம்ம்’ என்றார். அந்த ஹூங்காரத்தில் லேசாக வெற்றிலைச் சாறு வாயிலிருந்து எட்டிப் பார்த்தது.

”ரத்னத்துக்கு முன்னாடியும் யாரும் இல்லை, பின்னாடியும் யாரும் அவரைப் போல வரப் போறதில்லை-னு சொன்னவன் எல்லாம் இன்னிக்கு, ‘ரத்தினத்துக்கு முன்னாடி யாருமில்லை. ஆனால் அவருக்கு பிறகு அண்ணாமலைதான்’-னு சொல்றது உனக்குப் பெருமையா இல்லையா?”

“ரத்னத்துக்கு முன்னாடி யாருமில்லையா?”

“நான் என்ன கேட்கிறேன், நீ என்ன சொல்ற?”

“நீ கேட்டது இருக்கட்டும். ரத்னத்துக்கு முன்னாடி யாருமில்லையா?”

“எவ்வளவோ பேர் இருந்திருக்கலாம். ஆனால் ரத்னம் மாதிரி யாரு ராகம் ஊதியிருக்காங்க? அவரு ஊதுனா உலகமே ஸ்தம்பிச்சு நிக்கறாப்ல பண்ணியிருக்காரே! அவரு ஊதறது இருக்கட்டும். அவரு வந்து நின்னா யாரோ தேவலோகத்துல இருந்து வந்த கந்தரவன் மாதிரியில்ல இருக்கும்.”

“நீங்க வைரக் கடுக்கனையும், பட்டு ஜிப்பாவையும் பார்த்துட்டு இல்ல மயங்கி நிக்கறீங்க. அதான் அவன் கல்யாணியில என்னத்தைக் கலந்தாலும் தலைய ஆட்டறீங்க.”

“பலவேசம்! சங்கீதம் தெரிஞ்சவன் நீ.  நெஞ்சைத் தொட்டுச் சொல்லு, ரத்னம் பிள்ளை வாசிப்பு சாதாரணமா?”

“வாசிப்பு பெருசுதான்யா. வாசிச்சால்ல?”

“இப்ப அவருக்கு முடியல”

“சரி. இப்பக் கதை வேண்டாம். பத்து வருஷத்துக் கதைய எடுத்துக்க. அவரு சொன்னா சொன்ன நேரத்துக்கு என்னிக்கு வந்திருக்காரு? வந்தது இருக்கட்டும் – எத்தனை நாள் ஜாகைல உட்கார்ந்து குடிச்சுட்டு வராமலே இருந்திருக்காரு? ராத்திரி முழுக்கக் காத்துகிட்டு இருக்கறவனை மனுஷனாவாவது மதிச்சு இருக்காறா? சாமி பொறப்பாடு இவன் குடிச்சு தெளியற வரைக்கும் காத்துகிட்டு நிக்கணுமாய்யா? சங்கீதம் மனுஷனை தன்மையாக்க வேண்டாம்? கச்சேரி கேட்க வந்த இன்ஸ்பெக்டர் மேல வெத்தலையைத் துப்பறதுக்கா சங்கீதம்? அப்புறம் போலிஸ்காரன் கால்ல விழுந்து இவனைக் காப்பாத்தறத்துக்கு ஒரு பெரிய மனுஷக் கூட்டம்.”

”சும்மாப் பொரியாத பலவேசம். நீ ஏன் நாற்பது வருஷம் முன்னாடி பூக்கட்டறதை விட்டுட்டு நாயனத்தை எடுத்துக்கிட்ட?  பூ கட்டினா மனுஷன் தன்மையா இருக்க முடியாது, நாயனம் வாசிச்சா தன்மையாகலாம்னா?”

மாணிக்கம் இப்படிக் கேட்டது பலவேசத்தில் பொட்டில் அறைந்துவிட்டது. வெற்றிலையைத் துப்பிவிட்டு, புகையிலையை வாயில் அடக்கிக் கொண்டார்.

கொஞ்ச தூரத்தில் தவிலில் ‘தொம் ததொம் தததொம்’ என்று ஒலிக்க ஆரம்பித்தது. மாணிக்கம் சைகையாலேயே அங்கே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறினார்.

“நாயனம் வாசிச்சா தன்மையாகலாம்னா இந்தத் தொழிலுக்கு வந்த?” என்று அவரையே கேட்டுக் கொண்டார். அவருக்கு சிரிப்பு வந்தது.

ஆரபி ஒலிக்க ஆரம்பித்தது.  அண்ணாமலை வாசிக்கத் தொடங்கியிருந்தான்.

“ஆறு மணிக்கு இந்தாளுக்கு பாராட்டுன்னா, மணி எட்டாச்சு இன்னும் ஆளைக் காணோம். எங்க உட்கார்ந்து யாரோட கூத்தடிச்சுகிட்டு இருக்காறோ?” என்று ரத்னத்தை நினைத்துக் கருவினார் பலவேசம்.

“கூட்டத்தை சமாளிக்க முடியாம அண்ணாமலையை வாசிக்கச் சொல்லி இருப்பாங்க,” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

‘ரீ மகரீ பமகரீ’ என்று ரிஷபத்தைக் கொஞ்சிக் கொஞ்சி ஆரபியை அண்ணாமலை வளர்த்த போது பலவேசத்துக்கு நடேசப் பிள்ளையின் நினைவு வந்தது.

’நேற்று நடந்தது போல இருக்கிறது’ என்று நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றார் பலவேசம்.  

நெய்க்காரப்பட்டியில் மாஜிஸ்டிரேட் முத்துவையர் வீட்டுக் கல்யாணம். பேரென்னவோ மாஜிஸ்திரேட். அவர் எந்தக் கோர்ட்டுக்கு எப்போது போனார் என்று யாருக்கும் தெரியாது.  ’என்னங்காணும் நீர் நிஜமாவே மாஜிஸ்திரேட்தானா?’ என்று கேட்கக்கூடிய தைரியம் யாருக்கு இருந்தது? ஊரில் காணும் இடத்தை  எல்லாம் முத்துவையருடையது என்று சொன்னால் பத்துக்கு ஒன்பது தடவை சரியாக இருக்கும். ஆள் என்னமோ பார்க்க சாந்தமாகத்தான் இருப்பார். ஆனால் அவர் இருக்கிறார் என்றால் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நெருப்பில் நிற்பது போலத் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

அஞ்சு நாள் கல்யாணம். வேளாவேளைக்கு மாலையாகவும், தொடுத்தும், உதிரியாகவும் வகை வகையாய் புஷ்பங்கள் கொடுக்க வேண்டிய பொறுப்பு பலவேசத்தின் சித்தப்பாவுக்கு. நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்ற நினைப்பில் பலவேசமும் உதவியாளாய் சென்றிருந்தார்.

ஒரு பெரிய வீட்டின் திண்ணையில் அமர்ந்தபடி பூக்கட்டிக் கொண்டிருந்த போது தெருவில் ஒரே சலசலப்பு.

”சித்தப்பா! யாராவது சினிமா நடிகர் கல்யாணத்துக்கு வராங்களா?”

“அடச்சீ! உனக்கு புத்து போகுதே! நடேசப் பிள்ளை வந்திருக்காருடா!”

“யாரு நடேசப் பிள்ளை?”

“எங்கண்ணனுக்கு இப்படியொரு ஞானசூனியமாப் பொறந்தியே! நாயனக்காரர் நடேசப் பிள்ளையைத் தெரியாதா?”

இவர்கள் இருந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் நடேசப் பிள்ளைக்கு ஜாகை ஏற்பாடாகியிருந்தது.

சாயங்காலம் ஊர்வலத்தில் நடேசப் பிள்ளை வாசிக்கப் போகிறார் என்று ஊரே அமளிப்பட்டது.

பலவேசத்துக்கு சங்கீதத்தில் எல்லாம் நாட்டமில்லை. பூக்கட்டுவது, சாப்பிடுவது, தூங்குவது என்று அவர் பொழுது போய்க்கொண்டிருந்தது.

மாலை ஆறரை மணி இருக்கும். கருப்பு கோட்டும், தலைப்பாகையும் அணிந்தபடி வியர்க்க விறுவிறுக்க ஒருவர் வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டார்.

“நாயனக்காரனுக்கு நேரம் சரியில்லை.” என்றார். உடனே தலையை பலமாக ஆட்டி, “இல்லையில்லை! எனக்குத்தான் நேரம் சரியில்லை.”, என்றார்.

பலவேசத்துக்கு விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இருந்தது. கேட்கலாமா என்று தயக்கமாகவும் இருந்தது.

“கணக்கு எழுதறவன் கிட்ட இப்படி கழுத்தறுப்பையெல்லாம் அழைச்சுண்டு வாடா-னா நடக்குமா? நாலரை மணிக்கு வந்து ஒரு தடவை கூப்பிட்டாச்சு. ‘இந்தா வரேன் போங்க’ங்கறான் – கண்ணு கையில இருக்கற சீட்டுக்கட்டைவிட்டு நகரமாட்டேங்குது. அதுக்கப்பறம் அரைமணிக்கு ஒரு தடம் போய்க் கெஞ்சாத குறையா கூப்பிட்டிண்டே இருக்கேன். அதே ‘இந்தா வரேன் போங்க’-தான். அங்க ஊர்வலம் ஆரம்பிக்கணும், எல்லாரும் வந்தாச்சு. முத்துவையர் கேட்டுண்டு வரச் சொன்னார்னு பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை என்னைத் தேடி ஆள் வந்துண்டே இருக்கு. நானும், “இதோ நடேசப் பிள்ளையை கையோட கூட்டிண்டு வரேன்னு’, சொல்லி வந்தவனைத் திருப்பி அனுப்பிண்டே இருக்கேன். “நடேசப் பிள்ளைக்கு ஜாக்பாட் அடிச்சதும்தான் இடத்தைவிட்டு எழுத்திருப்பார். அதுவரைக்கும் பொறுமையா இருங்கோன்னா நான் சொல்லி அனுப்ப முடியும்?’

பலவேசம் மையமாய் சிரித்து வைத்தார்.

“என்னமோ லோகத்துல இல்லாத நாயனம்-னு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தெருமுக்கில் முத்துவையரின் தலை தெரிந்தது.

“அண்ணா! நீங்க இவ்வளவு தூரம் வரணுமா? நான் எதுக்கு இருக்கேன்,” என்று அலறிக்கொண்டே ஓடினார் கணக்குப் பிள்ளை.

முத்துவையர் வீட்டுக்குள் சென்றார். ஐந்து நிமிடங்கள் ஆனதும் வந்த வழியே திரும்பிச் சென்றார்.

கணக்குப் பிள்ளை மீண்டும் வந்து திண்ணையில் அமர்ந்தார், “ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் கூடாது. ஆனானபட்ட முத்துவையர்டையே ‘இந்தா வரேன் போங்க’னு பல்லவியைப் பிடிக்கறானே. முத்துவையர் கண்ணைக் காமிச்சா கையும் காலுமா முறிச்சுப் போட்டுட மாட்டாளோ? சங்கீதம் ஏறினா மத்த எல்லா விஷயத்துலையும் புத்தி மழுங்கிடுமா என்ன?” என்று புலம்பித் தீர்த்தார்.

இது நடந்து அரை மணி நேரம் கழித்து நடேசப் பிள்ளை தெருவில் இறங்கினார்.

பலவேசத்துக்கு ஆவல் மேலிட்டது. முத்துவையர் நடேசப் பிள்ளையை எப்படி எதிர்கொள்கிறார் என்று பார்க்க ஆவலாயிருந்தது. அவரும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.  நடேசப் பிள்ளை நடந்து வரும் செய்து ஊரில் பரவி, அவருக்குப் பின்னால் ஒரு சின்னக் கூட்டமே கூடிவிட்டது. விவரமறியாதவர்கள் பார்த்தால் நடேசப் பிள்ளை ஏதோ பாதயாத்திரைக்கு தலைமை ஏற்றுச் செல்கிறார் என்று நினைத்துக் கொள்வார்கள்.

பலவேசம் கால்களை முந்திப் போட்டு நடேசப் பிள்ளைக்கு அருகில் சென்றுவிட்டார். ஊர்வலம் தொடங்கவிருந்த தெருவுக்குள் அவர்கள் நுழைவதைப் பார்த்த முத்துவையர் நடேசப் பிள்ளையை நோக்கி வேகமாக வந்தார்.

“உங்களைக் காக்க வெச்சதுக்கு மன்னிச்சுடணும்,” என்று கொஞ்சம் வெட்கம் கலந்த சிரிப்புடன் கூறினார் நடேசப் பிள்ளை.

“பிள்ளைவாள்! நீங்க வாசிக்கறீங்கன்னா அந்த சரஸ்வதி கூட காத்திருப்பா. நாங்க காத்து இருக்க மாட்டோமா?”, என்று தழுதழுத்தார் முத்துவையர்.

உறையைக் கழற்றி நடேசப் பிள்ளை நாயனத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

‘பா பா பா
மபா தபா ஸபா
ரிமபா நிதபா ரிஸதபா
மகரிரி ஸரிமபா ரிமபதபா’

நடேசப் பிள்ளை ஆரபியை சின்னச் சின்ன அடுக்குகளாய் வளர்த்து மீண்டும் மீண்டும் பஞ்சமத்தில் நிறுத்திக் கார்வை கொடுத்த போது காலச் சக்கரம் நின்றது போல ஆகிவிட்டது. பலவேசத்துக்கு உடலில் என்னமோ ஒன்று புகுந்து கொண்டது போலத் தோன்றியது. நடேசப் பிள்ளை வாசித்ததென்னமோ சில நிமிடங்கள்தான் இருக்கும். பலவேசத்துக்கு நெருப்பைத் தொட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர் மனம் அவரை எழுந்து சன்னதம் வந்தவனைப் போல ஆடச் சொல்லியது, அவர் கால்கள் வலுவிழந்து அவரைத் துவண்டு தரையில் உட்கார வைத்தன.

”சால கல்லலாடுகொன்ன ஸௌக்யமேமிரா”

கீர்த்தனை தொடங்கியது. பலவேசத்துக்கு ராகம், தாளம், கீர்த்தனை எதுவும் தெரியாவிடினும் – துள்ளிப் பாய்ந்த மெற்காலத் தவில்சொற்களோடு தன்னையறியாமல் லயித்து போனார்.

ஊர்வலம் மெதுவாக நகரத் தொடங்கியது. பலவேசம் எழுந்து நடக்க ஆரம்பித்தார். மெதுவாக ஊர்ந்த ஊர்வலத்தின் வேகத்தில் அவரால் இணைய முடியவில்லை. கீர்த்தனையின் காலபிரமாணத்தில் நடந்து முன்னே கொஞ்ச நேரம் நடப்பார். பின்பு அதே வேகத்தில் திரும்பி ஊர்வலத்தின் மறு எல்லைக்குச் செல்வார்.

நடேசப் பிள்ளை சரணத்துக்கு ஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு முறை ஸ்வரத்தை முடித்து சாகித்யத்தை எடுக்கும் போதும் ‘அங்கப் போகாதே! இங்க வாடா!’, என்று யாரோ கூப்பிடுவது போல பலவேசத்துக்குத் தோன்றியது. நடந்து கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் நடக்க ஆரம்பிப்பார்.

பலவேசத்துக்குக் குழப்பமாக இருந்தது. ‘எங்கு போகாமல், எங்கு வர வேண்டும்?’.

என்னமோ நிஜமாகவே குரல் கேட்பது போல குழம்புவதை எண்ணி சிரிப்பு வந்தது. பைத்தியக்காரத்தனம் என்று சிரித்து உதாசீனம் செய்யக்கூடிய குரலாகவும் அது ஒலிக்கவில்லை. தார ஸ்தாயி ரிஷபத்திலிருந்து மின்னல் கீற்று போல கீழே பாய்ந்து மந்தர தைவதத்தைத் தொட்டு மீண்டும் தார ஸ்தாயிக்கு வந்து நிற்கும்படி ஒரு சங்கதி வாசித்தார். அதை வாசிக்கும் போது அவர் நாயனம் ஒரு வட்டமடித்து மேல் நோக்கிச் சென்றது. தலையை அண்ணாந்து கையை மேலே நீட்டு நாகஸ்வரத்தை வானை நோக்கி நடேசப் பிள்ளை நீட்டி ரிஷபத்தில் நின்றார். பலவேசத்தின் உடலும் அவரை அறியாமலே நடேசப் பிள்ளையைப் பிரதியெடுத்து அசைந்தது.

‘ரீ ரீ ரீ ரிபமகரீ’’

பலவேசத்தின் தலையும் அண்ணாந்து வானத்தைப் பார்த்தது. அவரது கைகள் நாயனத்தைப் பிடித்திருந்தது போல அவர் முகத்துக்கு நேரே எழுந்தன. ஒரு கணம் அவரே வாசிப்பது போல அவருக்கு பிரமைதட்டியது.

‘அடச்சீ’, என்று அவசரமாக கைகளை இழுத்துக் கொண்டார். சுற்றுமுற்றும் நோட்டம்விட்டார். யாரும் அவரை கவனித்ததாகத் தெரியவில்லை.

அதற்குப் பின் நடேசப் பிள்ளை வாசித்த எதுவும் அவருக்கு ஏறவில்லை. அவர் மனம் வாசித்தது போன்ற பிரமை ஏற்பட்ட கணத்தையே சுற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை அந்த எண்ணத்தை விலக்க முற்பட்ட போது அது இன்னும் கொஞ்சம் வலுபெற்று மனத்தில் அலையடித்தது.

பலவேசம் ஊர்வலத்தைப் பார்த்தார். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள் என்று தோன்றியது. அத்தனை பேரின் கவனமும் நடேசப் பிள்ளையின் மேல் உறைந்திருந்தது. ஓடிச் சென்று நடேசப் பிள்ளையின் வாத்யத்தைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்று வேகமெழுந்தது. தன் எண்ணத்தை நினைத்து வெட்கமாகவும் இருந்தது.

பூக்கட்டும் வேலைக்குத் திரும்ப பலவேசம் எழுந்து நடக்க ஆரம்பித்தார். அப்போது அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.

‘அங்கப் போகாதே! இங்க வாடா’

இப்போது அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இருப்பதாக பலவேசத்துக்குத் தோன்றியது.

‘பூக்கட்டப் போகாம, நாயனத்துக்குப் போகணுமா?’

பலவேசம் வேகமாய் நடக்க ஆரம்பித்தார். நடந்தாலும் தொடர்ந்து வந்த நாகஸ்வர ஒலி அவரைக் கலவரப்படுத்தியது.

பூக்கட்டிக் கொண்டிருந்த திண்ணைக்கு வந்த போதும் நாகஸ்வரம் சன்னமாக காதில் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. பூத்தொடுக்கும் வேலைகள் முடியும் தருவாயில் இருந்தன. அவரும் அமர்ந்து பூக்களைத் தொடுக்க ஆரம்பித்தார். வேலை முடிந்ததும் எல்லோரும் சாப்பிடக் கிளம்பினார்கள். பலவேசத்துக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. பலவேசம் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். அவர் மனம் தன்னை நாகஸ்வர வித்வானாய் கற்பனை செய்து கொண்டது. அந்தக் காட்சிகளை வளர்த்தபடி நெடு நேரம் நடந்திருப்பார்.

எண்ணெய்யில் எதையோ பொரித்து எடுக்கும் மணம் அவர் எண்ணத்தைக் கலைத்தது. பலவேசத்துக்குப் பயங்கரமாய் பசித்தது.

ஒருமணி நேரம் நடந்தால்தான் மீண்டும் ஜாகைக்குச் செல்ல முடியும். அவ்வளவு தூரம் நடக்க வேண்டுமென்று நினைத்த போது அலுப்பாக இருந்தது.
’எல்லாம் இந்த பாழாய்ப் போன நாயனக்காரனால வந்தது’ என்று அவர் வாய் முணுமுணுத்தது. நடேசப் பிள்ளையை அவர் மனம் நினைக்க ஆரம்பித்தது.

”நடேசப் பிள்ளைக்குப் பசிக்காதா? அவர் இன்னும் வாசித்துக் கொண்டிருப்பாரா? நாகஸ்வரக்காரர்கள் எல்லாம் இரவு முழுவதும் வாசிக்கிறார்களே! அவர்களுக்கு எப்படி உற்சாகம் குறையாமல் இருக்கிறது?”

பலவேசம் கைகளை நாயனம் போல நீட்டிக் கொண்டார். தனக்குத் தெரிந்த பாடல் ஒன்றை வாயாலேயே ‘பிப்பி பீ பீப்பிப்பிப்பீ’ என்று பாடிய படி நடக்கத் தொடங்கினார். இருட்டிவிட்டபடியால் சந்தடியில்லாத தெருவில் பலவேசத்தின் கற்பனைக் கச்சேரிக்கு எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

அரை மணி நேரத்தில் அவருக்குத் தெரிந்த அத்தனை பாடல்களும் தீர்ந்துவிட்டன. எதைப் பாடலாம் என்று யோசித்த போது மீண்டும் அவருக்கு அந்தக் குரல் கேட்டது.

‘அங்கப் போகாதே! இங்க வாடா’

அதையே பல்லவியாக்கி தன் கற்பனை நாயனத்தில் ஊத ஆரம்பித்தார்.

‘பிப்பிப் பீப்பீப்பீ! பிப்பி பீப்பீ’ என்று ஏதோ மந்திர ஜபம் போல மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டு நடையைத் தொடர்ந்தார்.

கல்யாண வீட்டை நெருங்கும் போதுதான் கையை இறக்கி கச்சேரியை முடித்தார்.

சாப்பிடும் இடத்தை நெருங்கும் போது ஊர்வலக் கச்சேரியில் தனி ஆவர்த்தனம் நடந்துகொண்டிருந்தது.

சாப்பிடும் இடத்தைவிட்டு இரண்டு பேர் வெளியில் வந்துகொண்டிருந்தனர். அவசரமாய் கிளம்பிய ஒருவரை மற்றவர் தடுத்தார்.

“என்னய்யா அவசரம்?”

“கச்சேரில இனிமேதான் பல்லவி வரும்”

“அட இருய்யா! இன்னும் தனி ஆவர்த்தனமே அரை மணி போகும் போல இருக்கு,” என்று திண்ணையில் உட்கார்ந்தார்.

அவர் வாய் சன்னமாய். ‘சால கல்லலாடு’ என்று பாடத் தொடங்கியது.

”நடேசப் பிள்ளை இன்னிக்கு என்னமா ஆரபியை வாசிச்சுட்டார்யா,” என்றார் மற்றவர்.

நடேசப் பிள்ளையைப் பற்றி பேசுவது காதில் விழுந்ததும் பலவேசம் கால்கள் நகர மறுத்துவிட்டன.

“அந்தச் சரணத்துல எவ்வளவு நகாசு!”

“லேசுப்பட்ட சரணமா ஸ்வாமி அது?”

“ம்?”

”தல்லி தண்ட்ரி நேனுண்ட தக்கின பயமேலரா-னு ராமர் சொல்லியிருக்கார்.”

“…”

“யோசிச்சுப் பாரும். ராமர் உம்ம கிட்ட வந்து, அப்பா/அம்மாவா நானிருக்கும் போது உனக்கு என்னடா பயம்-னு சொன்னா எப்படி இருக்கும்? வானத்தை வளைச்சுட மாட்டோம்?”

பலவேசத்துக்கு சுருக்கென்றது.

நடேசப் பிள்ளை வாசித்ததுக்கு இதுவா அர்த்தம்?

“அப்பா அம்மாவா நான் இருக்கேன்” என்று பலவேசம் மனத்துக்குள் சொல்லிப் பார்த்த போது முன்னர் கேட்ட அதே குரல் “அங்கப் போகாதே! இங்க வாடா!” என்று வாக்கியத்தைப் பூர்த்தி செய்தது.

பலவேசத்தின் மனம் துடைத்துவிட்டது போல ஆகிவிட்டது.

சாப்பாட்டுக் கூடத்துக்குள் நுழையாமல், சித்தப்பாவிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் பலவேசம் ஊருக்குக் கிளம்பினார்.


‘ரீ ரீ ரீ ரிபமகரீ’

அண்ணாமலை ஆரபியில் முங்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தான். தார ஸ்தாயியில் ஆரபி ஒலித்து பலவேசத்தை உலுக்கியது.

பலவேசம் ஆரபியை நோக்கி நகர ஆரம்பித்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் பலவேசம் கண்ட காட்சி மீண்டும் அவர்முன் விரிந்தது.

ஆரபியில் நடேசப் பிள்ளை…

“நடேசப் பிள்ளையா அது?”

பலவேசம் கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தார். அண்ணாமலை வாசித்துக் கொண்டிருந்தான்.

“அண்ணாமலையா வாசிக்கிறான்? நடேசப் பிள்ளை மாதிரியே இருக்கே. நான் கண்ட கனவு என் பிள்ளைக்கு…”

பலவேசம் சட்டென உதறிக் கொண்டார்.

“என் புள்ளையா? ஊர் முழுக்க ரத்னம் பிள்ளையோட மகன்னுதானே சொல்லுது? இந்தப்பயலும் அங்கத்தானே கையைக் கட்டி நிக்கறான்?”

பலவேசத்துக்கு கசப்பு நெஞ்சுவரை பொங்கியது.

பத்தொன்பதாவது வயதில் நாயனத்தில் சரளி வரிசை பழக ஆரம்பித்து எத்தனையோ எதிர்ப்புகளையும், அவமானங்களையும் தாங்கித்தான் அவர் சங்கீதத் துறையில் விடாமல் ஈடுபட்டார். எவ்வளவு முயன்றாலும் நடேசப் பிள்ளை அல்ல, உள்ளூர் சுப்பையா பிள்ளை அளவுக்கு கூட வாசிக்கக் கூடப்போவதில்லை என்பதை உணர்ந்தாலும் தன் தொழில் நாயனம்தான் என்பதில் உறுதியாக இருந்தார். காசு செலவு செய்யமுடியாத இடங்களில் பலவேசத்தின் கச்சேரிகள் ஏற்பாடாயின. பெரிய கச்சேரிகளில் ஸ்ருதிப் பெட்டியைப் போடவும் அவர் தயங்கியதில்லை. தாளம் போட ஆளில்லை என்றால் அதற்கும் பலவேசம் தயாராகயிருப்பார்.

பிதுரார்ஜிதமாக கொஞ்சம் நிலபுலன்கள் வயிற்றுக்குக் குறையில்லாமல் வைத்தன. அதனாலேயே உறவில் ஏழைக் குடும்பத்திலிருந்து செல்லம்மாளைத் திருமணம் செய்துகொள்ளவும் முடிந்தது.

அண்ணாமலை பிறந்த போது அவர் வீடு ‘நாயனக்காரர் வீடு’ என்று அறியப்பட்டிருந்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து அண்ணாமலைக்கு தான் நாகஸ்வர வித்வான் ஆகப் போகிறோம் என்பதைத் தவிர வேறு எண்ணம் தோன்றாதபடி சூழலை அமைத்தார் பலவேசம். ராமலிங்க பாகவதரிடம் வாய்ப்பாட்டு, சுப்பையா பாகவதரிடம் நாயனம்,  சாமிநாத ஓதுவாரிடம் தேவாரம் என்று சிறு வயது முதலே அண்ணாமலையை சங்கீதத்தில் ஈடுபடுத்தினார். அவன் சாதகம் செய்வதைக் கண்காணிப்பதே அவரது முழுநேர வேலையாகிப் போனது. ஊரைச் சுற்றி எங்கு நல்ல கச்சேரி நடந்தாலும் அங்கு பலவேசம் அண்ணாமலையை அழைத்துச் செல்வது உறுதி. அப்படித்தான் அண்ணாமலை முதன்முதலில் ரத்தினம் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டான்.

நாகஸ்வர உலகில் நடேசப் பிள்ளை விட்ட இடத்தை ரத்தினம் பிள்ளை பிடித்துக் கொண்டார். நடேசப் பிள்ளையாவது ‘இந்தா வரேன் போங்க’ என்று இழுத்தடிப்பாபார். ரத்தினம் பிள்ளையோ ஒப்புக் கொண்டவற்றில் பாதிக் கச்சேரிகளுக்கு எட்டிக் கூடப் பார்க்கமாட்டார். அப்படியே வந்தாலும் வாசிக்கும் நிலையில் இருப்பார் என்று சொல்வதற்கில்லை.  வாயைத் திறந்தால் துக்கிரிப் பேச்சு. அரை மணிக்குள் ஆயிரம் சண்டை வலித்துக் கொள்ளக் கூடிய கூர்நாக்கு. ஆசையாய் கூப்பிடவனிடமே அடிதடி சண்டை நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம். ஆனாலும் அவரைத்தான் எல்லா இடத்துக்கும் அழைப்பார்கள். ஏனெனில், இதையெல்லாம் மீறி வாசித்துவிட்டால் அதற்கு ஈடுசொல்லமுடியாது.

ரத்தினம் பிள்ளை வாசிக்கும் கச்சேரி என்றால் தொலைவு என்றால் கூட அண்ணாமலையை அழைத்துச் செல்வார் பலவேசம். அப்படித்தான் இருவரும் சித்திரைத் திருவிழாவின் போது மதுரைக்குச் சென்றிருந்தனர். இவர்கள் புறப்பாட்டை நெருங்கும் போது ரத்தினம் பிள்ளையின் குரல் உச்சஸ்தாயியில் கேட்டது.

“எவண்டா இந்தச் சம்பிரதாயத்தைக் கண்டுபிடிச்சான்? எவனோ சாப்பிட்ட எச்சை இலையை எனக்குப் போடுவீங்க – நானும் அதை வாங்கிச் சாப்பிடணுமா? யாருன்னு நினைச்ச? சக்கரவர்த்திடா!”

பலவேசமும் அண்ணாமலையும் கூட்டத்தில் சேர்ந்துகொண்டனர்.

எவ்வளவு பெரிய நாயனக்காரர் என்றாலும் உள்ளூர் மேளம் ஆரம்பித்து வைத்தபின்தான் வாங்கி வாசிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். ரத்தினம் பிள்ளைக்கு இது தெரியாதது இல்லை. அவர் குடித்திருந்த திரவத்துக்கு ஒரு நல்ல சண்டை துணையாகத் தேவைப்பட்டது. இன்று இதைப் பிடித்துக் கொண்டார்.

ஊர் பெரியவர் உள் புகுந்து, “நடேசப் பிள்ளையே உள்ளூர் மேளம் வாசிச்சு விட்டதும்தானே வாசிப்பார்..”, என்று சொல்ல வர.

“நடேசப் பிள்ளைனா பெரிய கொம்பா?”, என்று தொடங்கி தகாத வார்த்தைகளில் அவருக்கு முன்னோடிகள் சமகால வித்வான்கள் என்று ஒருவரையும் விடாமல் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார் ரத்தினம் பிள்ளை. அதுவரை பொறுத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அவரைப் பிடித்துத் தள்ளி அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அவருடைய குழுவில் இருந்த மற்ற கலைஞர்கள் புகுந்து அவரைச் சுற்றி வளையம் அமைத்திருக்காவிட்டால் அன்று ரத்தினம் பிள்ளைக்கு பிழைத்திருப்பதே கடினம்.

நடேசப் பிள்ளையை கேவலமாகப் பேசியதைக் கேட்டதும் பலவேசத்துக்கு சுருக்கென்றது. அண்ணாமலையைக் கூட்டிக்கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டார். இனி ஜென்மத்துக்கும் ரத்தினம் பிள்ளை கச்சேரிக்குச் செல்வதில்லை என்று உறுதிபூண்டார்.

ரத்தினம் பிள்ளையைக் கேட்ட மாத்திரத்திலிருந்து வாசித்தால் அப்படி வாசிக்க வேண்டும் என்று அண்ணமலைக்குத் தோன்றிவிட்டது. அவன் சாதகம் செய்யும் போது ரத்தினம் பிள்ளையின் பிடிகள் தானாக வந்து விழும்.

அது பலவேசம் காதில் விழிந்துவிட்டால், “எதுக்குடா அந்தக் கரப்பான்பூச்சி சங்கதி? உன் பேரும் நாளைக்கு சந்தி சிரிக்கவா? நீ வானத்தை வில்லா வளைக்க வேண்டாம். சாதாரணமா வாசிச்சாலும் தன்மையா நடந்துக்க – அது போதும்!” என்பார்.

அண்ணாமலை பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாலும், அவன் நினைப்பில் எப்போது ரத்தினம் பிள்ளையின் வாசிப்பே இருந்து வந்தது. அவர் கச்சேரி சுற்றுவட்டாரத்தில் நடந்தால் அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு நழுவிவிடுவான். பலவேசத்துக்கு இது தெரியுமென்றாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார்.

ரத்தினம் பிள்ளை யாரிடம் எப்படி நடந்து கொண்டாலும், தான் வளர்ந்து வந்த சமயத்தில் தூக்கிவிட்டவர்கள் என்றால் உயிரையே கொடுப்பார். அப்படித்தான் அவர் வருடா வருடம் கடம்பூரில் நடக்கும் திருவிழாவுக்கு தவறாமல் வந்து ஒழுங்காக வாசித்துச் செல்வார். ஒரு வருடம் உடன் வந்த ரெண்டாவது நாயனக்காரருக்கு கடுமையான ஜுரம். ரத்தினம் பிள்ளை வாசித்தால் ரெண்டாவது நாயனத்துக்கு எல்லாம் வேலையே இல்லை. சஞ்சாரங்களின் போது ஷட்ஜத்தை மட்டும் அடிக்கோடிட்டுக் காட்ட மட்டும் அவருக்கு இரண்டாவது நாயனம் வேண்டும். அதற்கு யாராவது ஆள் கிடைக்குமா என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.

ரத்தினம் பிள்ளை வருகிறார் என்றாலே உள்ளூர் நாயனக்காரர்கள் ஊரைக் காலி பண்ணாத குறைதான். அவர்களுள் யார் இவருக்கு ரெண்டாவது நாயனம் வாசிக்க வருவார்கள். அதிலும் அவர் வாசித்த இடைபாரி நாயனத்தை அந்தக் காலத்தில் வேறு யாரும் வாசித்ததில்லை. தங்கள் நாயனத்தை வாசிக்காமல் இரண்டாவது நாயனம் வாசிக்க வந்தவரின் நாயனத்தை வாசித்து அதில் ஷட்ஜம் சேரவில்லை என்றால் ரத்தினம் பிள்ளை ஊரார் முன் அவமானப்படுத்தவும் தயங்கமாட்டார். எதற்கு வம்பு என்று கேட்ட அத்தனை பேரும் மறுத்துவிட்டனர்.

கச்சேரி ஏற்பாடு செய்த முக்கியஸ்தர்களுள் ஒருவர் கோபாலன். அவர் மகன் மாதவனுக்கும் அண்ணாமலைக்கும் நல்ல நட்பு. வருடா வருடம் கச்சேரி கேட்க வரும்போது ஏற்பட்ட பழக்கம் நட்பாக மலர்ந்தது.  காலப்போக்கில் அண்ணாமலை கடம்பூருக்கு வந்தால் கோபாலன் வீட்டில் தங்குவது என்றானது. அந்த வருடமும் அண்ணாமலை அவர்கள் வீட்டு மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

கோபாலனின் கவலையை உணர்ந்து மாதவன்தான் ’அண்ணாமலையை வாசிக்கச் சொல்லலாமே’ என்று யோசனை கூறினான். கோபாலன் அதைப் பற்றி ஆலோசனையே செய்யாமல் நேராக அண்ணாமலை இருந்த அறைக்குச் சென்று, “வா! ரத்தினம் பிள்ளை கிட்ட போகலாம்”, என்றார்.

அண்ணாமலையும் கோபாலன் ரத்தினம் பிள்ளையைப் பார்க்கப் போகும் போது தன்னையும் அழைத்துச் செல்கிறார் என்ற நினைப்பில் உடன் கிளம்பினான்.

ரத்தினம் பிள்ளை இருந்த அறைக்குச் சென்றதும், “இந்தப் பையன்தான் இருக்கான். உங்களுக்கு சரி வருமாப் பாருங்க”, என்றார் கோபாலன்.

அண்ணாமலைக்கு ஒன்றும் விளங்கவில்லை.

”யாருகிட்ட சிட்சை?” என்றார் ரத்தினம் பிள்ளை.

குரலே எழும்பாமல், “சிறுமலை சுப்பையா பிள்ளை”, என்றான் அண்ணாமலை.

“ஹும்ம்” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு, “கச்சேரியில பார்ப்போம்” என்று வெற்றிலையைத் துப்ப எழுந்து சென்றார் ரத்தினம் பிள்ளை.

அண்ணாமலை குழப்பமாய் கோபாலனைப் பார்த்தான்.

“ஒண்ணும் பதறாத. சும்மா அவர்கூட வாத்யத்தை வெச்சுகிட்டு நில்லு”

”என்னயென்ன? வாத்யமா?”

“ஆமாம்பா! அவரோட ரெண்டாம் நாயனக்காரருக்கு எழுந்திருக்கக் கூட முடியாதபடிக்கு ஜுரம் அடிக்கிது. நீ சும்மா கூட நின்னாப் போறும்:”

“ஐயோ! அவர் கூட இருந்தா பேச்சுக் கூட வர மாட்டேங்குது. வாசிக்கவா முடியும்?”

“எல்லாம் முடியும். கடம்பூர் மாரியம்மன் கொடுத்த பிரசாதம்னு நினைச்சுக்க. யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு?”, என்று உற்சாகப்படுத்தினார்.

அண்ணாமலைக்கு பயமாக இருந்தது. ரத்தினம் பிள்ளையே கச்சேரியில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கும் போது மறுக்கவும் முடியவில்லை. பெரும் சலனத்தோடும் பதைபதைப்போடும் அறையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான்.

ரத்தினம் பிள்ளை கிளம்பிய போது பின்னாலேயே அண்ணாமலையும் செல்ல ஆரம்பித்தான்.

“வாத்தியம் எங்க?” என்று இவனைப் பார்த்துக் கேட்டார் ரத்தினம் பிள்ளை.

அறையில் இருந்த இரண்டு வாத்தியங்களையும் எடுத்துக் கொண்டான் அண்ணாமலை.

அன்று கச்சேரி அற்புதமாய் அமைந்தது. அண்ணாமலையைப் பார்க்கும் போதெல்லாம் ஷட்ஜத்தை மட்டும் நீண்ட கார்வையாய் வாசிப்பான். தோடியை அவர் எடுத்துக் கொண்டதும் தன்னை மறந்தான் அண்ணாமலை. அவன் கண்கள் தானாக மூடிக் கொண்டன. ரத்தினம் பிள்ளையின் கண்ஜாடை அவனுக்குத் தேவைப்படவில்லை. தக்க சமயத்தில் அவனே கார்வைகள் கொடுத்து இட்டு நிரப்பினான். அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு அவன் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

கச்சேரி முடிந்ததும், “தம்பி. நீ என்னோடயே வந்திடறியா?”, என்று கேட்டார் ரத்தினம்.

அண்ணாமலைக்கு யோசிக்கக் கூடத் தோன்றவில்லை. சரியென்று தலையாட்டிவிட்டான்.

அவருடன் போகும் வழியில்தான் அப்பாவிடம் சொல்லாததே அவனுக்கு உரைத்தது. நரசிங்கம்பேட்டைக்குச் சென்றதும் கடிதம் எழுதித் தெரிவித்தான்.

பலவேசம் கடிதம் கண்டதும் அதிர்ந்து போனார். பார்த்துப் பார்த்து வளர்த்த மகன் இப்படிச் சொல்லாமல் கூட சென்றுவிட்டானே என்று உள்ளுக்குள் மாய்ந்து போனார். அதுவும் போயும் போயும் ரத்தினம் பிள்ளையிடமா போக வேண்டும்? அதன்பின் அண்ணாமலை வீட்டுக்கு வந்த போதும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவோ, பேசவோ மனம் ஒப்பவில்லை. அண்ணாமலையே வந்து பேசினால் முகத்தைத் திருப்பிக் கொள்வார். செல்லம்மாள் எவ்வளவோ சண்டைபிடித்தும் பலவேசம் இளகவில்லை.

அண்ணாமலை ரத்தினம் பிள்ளையிடம் சேர்ந்த பத்து ஆண்டுகளில் அவன் சங்கீதம் பெரும் உச்சங்களை நோக்கி நகர்ந்தது. இத்தனைக்கும் ரத்தினம் பிள்ளை உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்கமாட்டார். ஆனால் அவர் வீட்டிலிருக்கிறாரோ கச்சேரிக்குச் செல்கிறாரோ, நிதானமாய் இருக்கிறாரோ, தன்னை இழந்திருக்கிறாரோ – எப்படியிருப்பினும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நான்கு மணி நேரமாவது வாசிப்பார். அவர் வாசிப்பதைக் கேட்டுக் கேட்டு அசைப் போட்டு தனக்குள்ளேயே புதிய இசைப் பரிமாணங்களை உருவாக்கிக் கொண்டான் அண்ணாமலை. சில ஆண்டுகளிலேயே நிஜமான இரண்டாவது நாயனமாக வாசிக்க அனுமதித்தார் ரத்தினம்.

அண்ணாமலை வளர வளர ரத்தினம் பிள்ளையின் நடத்தை இன்னும் கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. காலப்போக்கில் ரத்தினம் பிள்ளைக்குக் கச்சேரி சொன்னா குறைந்தபட்சம் அண்ணாமலையாவது வந்து வாசித்துவிடுவான் என்கிற நிலை ஏற்பட்டது.

செல்லம்மாள் முனைந்து அண்ணாமலைக்கு ஊரில் திருமணம் நிச்சயம் செய்தாள். ரத்தினம் பிள்ளையே அண்ணாமலையுடன் ஊருக்கு வந்து கல்யாணத்தில் வாசிக்கவும் செய்தார். பலவேசம் வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் பேருக்குத்தான் அங்கு இருந்தார்.

ரத்தினம் பிள்ளை கிளம்பும்போது, “அண்ணாமலை. நீ இனிமே ரெண்டாவது நாயனம் வாசிக்காத. உங்க ஊரிலேயே இருந்து உனக்கு வரக் கச்சேரிய பண்ணு.”, என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

பலவேசத்துக்கு அண்ணாமலையின் வளர்ச்சியைப் பற்றி உள்ளூர பெருமகிழ்ச்சி. அப்பாவுக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாதே தவிர அண்ணாமலை வீட்டிலும் உள்ளூர் நிகழ்ச்சிகளுலும் வாசிப்பதை ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருப்பார் பலவேசம்.

கொஞ்ச நாளில் அதுவும் அரிதானது. அத்திப் பூத்தார்ப்போலத்தான் அண்ணாமலை ஊரில் இருக்கும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் தவிர பம்பாய், டில்லி என்றும் அண்ணாமலை ஓய்வில்லாமல் சுற்றிக் கொண்டே இருந்தான்.

ரத்தினம் பிள்ளை இன்னும் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். அவர் நல்ல கச்சேரி வாசித்து குறைந்தது பத்து வருடங்கள் ஆகியிருக்கும். அவரைத் தவிர வெறெவரையும் ஒப்புக் கொள்ளாத ரசிகர்களின் கற்பனையில் மாத்திரம் அவர் மாதாமாதம் ஏதோ ஒரு ஊரில் மலையைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தார்.

காலப்போக்கில் கச்சேரிகளும் இல்லாமல், குடிப்பழக்கமும் முற்றி உடல்நலம் குன்றிய நிலையில் கையில் காசு இல்லாத நிலை ஏற்பட்டது. உச்சாணியில் இருக்கும் அண்ணாமலையிடம் உதவி கேட்க அவருக்கு மனம் ஒப்பவில்லை. அவனாக முன் வந்து பண உதவி செய்ய வந்தாலும் அதை ஏற்க மறுத்தார்.

எப்படி உதவுவது என்று குழம்பியிருந்த அண்ணாமலையை ஒருநாள் ரத்தினம் பிள்ளையின் பால்ய நண்பர் சந்திக்க வந்தார்.

“ஏம்பா! ரத்தினம் பிள்ளையை இப்படி விடலாமா?” என்று முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டார்.

“நானும் ஏதாவது செய்யணும்னுதான் பார்க்கறேன். அவரு ஒப்புக்க மாட்டேங்கறாரே,” என்று கலங்கினான் அண்ணாமலை.

”நான் ஒரு வழி சொல்லட்டுமா?”

“சொல்லுங்க. காத்துகிட்டு இருக்கேன்.”

“நீ கச்சேரி பண்ணப் போற ஊர்ல பெரிய மனுஷங்கக் கிட்டச் சொல்லி ரத்தினத்துக்கு கௌரவம் பண்ணச் சொல்லு. விழாவுல ரசிகர்களும் மாணவர்களுமா சேர்ந்து முடிப்பு தரோம்னா அவன் மறுக்க முடியாது.”

இந்த யோசனை நன்றாக இருந்தது. சென்னையில் ஒரு பெரிய விழா ஏற்பாடானது. நல்ல கணிசமான தொகை பரிசலுக்காக வசூலானது. அண்ணாமலையே பத்தாயிரம் ரூபாய் தன் பங்காய்த் தந்திருந்தான்.

விழா நினைத்ததைவிட சிறப்பாக நடந்தது. ஆனால், அண்ணாமலைக்குப் பிரச்னை வெறொரு வகையில் உருவானது.

ரத்தினம் பிள்ளை விழாவில் பேசும் போது, “நீங்க கொண்டாடறீங்களே அண்ணாமலை, அவன் என் கிட்ட வந்த போது ஷட்ஜம் வாசிக்கவே தயங்குவான். நான்தான் அவனைப் பார்த்ததும் கூட்டிகிட்டு வந்தேன். ஒருநாள் இல்லை ரெண்டு நாள் இல்லை, பத்து வருசம் என் பையனாவே வளர்த்தேன். ஒரு குழந்தையைப் பெத்துட்டா தகப்பனாக முடியுமா? இன்னிக்கு அவன் சங்கீதக்காரனா இருக்கறதுதான் அவனுக்கு அடையாளம். அடையாளத்தைக் கொடுக்கறவன்தான் அப்பா. அப்படிப் பார்த்தா அண்ணாமலை எனக்குத்தான் மகன்,” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார். அண்ணாமலையும் அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

இவை அத்தனையும் படத்துடன் விவரமாய் அடுத்த நாள் செய்தித்தாள்களில் வந்தன.

அதைப் பார்த்ததும் பலவேசத்துக்கு பழைய ரணங்களைக் கீறிவிட்டது போலாகிவிட்டது.

இந்த முறை பலவேசம் மௌனமாகயிருக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அண்ணாமலையையும் ரத்தினம் பிள்ளையையும் அவர் பார்ப்பவர்களிடத்தில் எவில்லாம் கரித்துக் கொட்டினார்.

எப்போதெல்லாம் ரத்தினம் பிள்ளைக்கு பணமுடை ஏற்பட்டதோ அப்போதெல்லாம் அண்ணாமலை ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்தான். அந்தப் பாராட்டு விழாவில் ரத்தினம் பிள்ளை என்ன பேசினாலும் பேசாவிட்டாலும், “அந்தக் குடிகாரப் பய என் புள்ளைங்கறான். இவனும் கேட்டுகிட்டு நிக்கறான்,” என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார் பலவேசம்.

சில ஆண்டுகளில் ரத்தினம் பிள்ளைக்கு பாராட்டு நடத்த இனி யாரும் முன் வரமாட்டார்கள் என்றாகிவிட்டது. வேறு வழியில்லாமல் தன் சொந்த ஊரில், ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தான் அண்ணாமலை. ஊரின் பெரிய செல்வந்தர் முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

விழா அரம்பிக்க வேண்டிய நேரம் போய் இரண்டு மணி நேரம் ஆகியும் ரத்தினம் பிள்ளை வருவதாகத் தெரியவில்லை. கூடியிருந்த கூட்டத்தின் சலசலப்பைச் சமாளிக்க முடியாமல் அண்ணாமலை வாசிக்க வெண்டியதாகிவிட்டது.

ஆரபி இழுத்த இழுப்பில் பந்தலுக்கு வந்த பலவேசம், மீண்டும் வீட்டுக்குச் செல்ல எழுந்தார்.

அப்போது திடீரென்று வாத்தியத்தை கீழே வைத்தான் அண்ணாமலை. மேடைக்கு அருகில் ரத்தினம் பிள்ளை  நின்றிருந்தார். அங்கிருந்தவர்களின் கவனம் முழுவதும் அண்ணாமலையின் வாசிப்பில் இருந்ததில் ரத்தினம் பிள்ளை வந்ததை யாரும் கவனிக்கவேயில்ல.

“அண்ணாமலை, நீ வாசிச்சுக் கேட்டு ரொம்ப நாளாச்சு. கொஞ்சம் உசைனி வாசி” என்று முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார் ரத்தினம்.

என்ன தோன்றியதோ, வீட்டுக்குக் கிளம்பிய பலவேசமும் அமர்ந்து கச்சேரி கேட்க ஆரம்பித்தார்.

உசைனி, சஹானா, ரஞ்சனி என்று ரத்னம் பிள்ளை கேட்கக் கேட்க வாசித்துக் கொண்டே போனான் அண்ணாமலை. ஒரு கட்டத்தில் மேடைக்கு ஓர் ஆள் வந்து அண்ணாமலையின் காதை கடித்தான்.

“இப்பவே பத்து மணிக்கு மேல ஆச்சு.”

“பாராட்டு விழாவை மறந்துட்டோமே. நல்ல காலம் ஞாபகப்படுத்தினப்பா,” என்றான் அண்ணாமலை.

“அது இல்லங்க. ஐயா மாத்திரை போட்டுகிட்டுத் தூங்கணும். அதுக்கு முன்னாடி உங்களோட ஃபோட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்படறாரு”

“ஓ! இப்ப முடிச்சிடறேன்.”

“இல்லைங்க..”

“ம்?”

“நீங்க வாசிக்கும் போது உங்கப் பக்கத்துல உட்கார்ந்து ஃபோட்டோ எடுத்துக்கணும்னு..”

”மேடையில நாற்காலி போட்டு ரத்னம் பிள்ளைக்கு பக்கத்துல நின்னு ஃபோட்டோ எடுக்கற்தைவிட, இந்த ஆளு என்கூட கீழ உட்கார்ந்து ஃபோட்டோ எடுக்கணும்னு நினைக்கறாரே,” என்று சிரித்துக் கொண்டான் அண்ணாமலை.

“ஐயா! மேல வாங்க” என்று அண்ணாமலையே அவரை அழைத்தான்.

அருகில் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தவரை இன்னும் அருகில் இழுத்து உட்காரச் சொன்னான்.

ஃபோட்டோ எடுத்ததும், தன் கையில் இருந்த நாகஸ்வரத்தை விழா ஏற்பாடு செய்தவரிடம் கொடுத்துவிட்டு, “இப்ப எடுங்க,” என்றான்.

வாத்தியத்தை வாங்கி கீழே வைத்துவிட்டு, அவரை அணைத்துக் கொண்டு இன்னொரு படம் எடுத்துக் கொண்டு அவருக்கு விடை கொடுத்தான்.

ரத்தினம் பிள்ளை, “முடித்துவிடு,” என்று கைகாட்டினார்.

திருப்புகழ் ஒன்றை வாசித்து கச்சேரியை நிறைவு செய்தவுடன் மேடையில் நாற்காலிகள் போடப்பட்டன.

ஊர் பிரமுகர்கள் சிலர் பேசியவுடன் ரத்தினம் பிள்ளைக்கு பொன்னாடை போற்றப்பட்டு பண முடிப்பு கொடுக்கப்பட்டது.

ரத்தினம் பிள்ளை ஒலிப்பெருக்கி அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.

பலவேசம் எழுந்து வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

”இன்னைக்கு நான் ஒரு விஷயம் தெரிஞ்சுகிட்டேன். இந்த அண்ணாமலை இவ்வளவு புகழோட இருக்கறதுக்கு நான்தான் காரணம்-னு எல்லா இடத்துலையும் சொல்றது வழக்கம்.”

ரத்தினம் பிள்ளை பேசுவது நடக்கும் போதும் பலவேசத்துக்கு நன்றாகக் கேட்டது.

“இன்னிக்கு அது தப்போனு தோணுது. நான் வாசிச்சுட்டு இருந்த காலத்துல எவ்வளவோ கூட்டத்தைப் பார்த்து இருக்கேன். அப்பல்லாம் இந்த மேடைல இருந்து பார்க்கும் போது கீழ இருக்கறவங்க எல்லாம் சின்னதாத் தெரியுவாங்க. நாம வாசிக்கற ஒரு பிடியைக் கூட இவங்க மனசுல வெச்சுக்கக் கூடாது. புயலா அடிச்சு தூக்கணும்-னு நான் வாசிப்பேன். அருவி பொதபொத-னு விழறதை அனுபவிக்கறா மாதிரி என்னைக் கேட்க வந்தவங்க எல்லாம் அலறுவாங்க. கச்சேரி முடிஞ்சதும் தூசி மண்ணை வேட்டியில இருந்து தட்டிட்டு போறா மாதிரி என் சங்கீதத்தை தட்டிட்டுப் போய்டுவாங்க. அதை நான் பெருமையா நினைச்சேன்.

அண்ணாமலை இன்னிக்கு ராகம் வாசிக்கும் போது நடுவுல ஒருத்தர் வந்து ஃபோட்டோ எடுத்துகிட்டாரு. நானா இருந்தா ‘அடேய்! உனக்கு விவஸ்தை இருக்கா? ஞான சூனியமே’-னு திட்டி பெரிய கலவரமாகியிருக்கும்.

அண்ணாமலை வாசிக்கும் போது கேட்கற உங்களுக்கும் ஏதோ பங்கு இருக்குனு நினைக்கற மாதிரி தோணுது. அவன் உங்களை நடத்தற விதமும் அதை ஆமோதிக்கறா மாதிரி இருக்கு. யோசிச்சுப் பார்த்தா வெளியில வர்ர சங்கீதத்துல வித்தையோட சேர்ந்து வாசிக்கறவனோட சுபாவமும் கலந்துதான் இசையா வருதுனு தோணுது.

சங்கீதத்தை யாரும் ஊட்டிக் கொடுக்க முடியாது. ஓரளவு கோடிகாட்டலாம். அதுக்கு மேல அதுவா வந்தாத்தான் உண்டு.

ஆனால் சுபாவமிருக்கே – அது வளர்ப்பு.  ”

அதற்குப் பிறகும் ரத்தினம் பிள்ளை நிறைய பேசினார். பலவேசத்தின் காதில் அவை விழவில்லை.

அவர் மேடையை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.

***

4 Replies to “சால கல்லலாடு”

  1. நாதஸ்வரத்தை எவ்வளவு உயர்ந்த நிலையில் ரசிகர்கள் அனுபவித்து சங்கீதத்தை வளர்த்திருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் மிக அருமையாக தெரிவித்து உள்ளார். ஆரபி நம் செவிகளில் ஒலித்துக் கௌண்டே இருக்கிறது. பாராட்டுக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.