அர்ஜுன் ராச்
ஈமக்காற்றின் துமி

ஒரு ஆள் குறைந்துள்ள
கேதவீட்டில்
ஒரு தனியறை
சற்று நீளத்துவங்குகிறது
பங்குணவினொரு சிறு பகுதி
பதிலீடாக
காக்கைக்கு இடப்படுகிறது
சில ஆடைகள் அநாதை இல்ல
வாலன்றியரிடம் தத்துக்கொடுக்கப்படுகின்றன
வீட்டை சுத்தம் செய்யும்போது
மறைத்து மறைத்தருந்திய
பிராந்தி குப்பிகளின் மிச்சத் துளிகள்
கண்ணீரின் அலுவலுக்கு
நிறமிழந்திருந்தன
மனம் விட்டுப்பேசாதவர்களுக்கான
புரிதல்களும் புன்னகைகளும்
நாட்குறிப்பேட்டில் மசியீரம் காந்தித்து
பாவித்திருந்தன
இன்றல்ல என்றோ பிதிர்ந்திருந்தார்
என்பதை ,
பரணியின் மிசை மீது ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த
பெட்டியை நகர்த்த
கொட்டின,
கனவு சேகரத்தின்
இருண்மைச் சருகுகளாய்
ரூபாய் தாள்கள்
எட்டாம் நாள் நெருங்க நெருங்க
வீட்டின் சில அவயங்களில்
ஆன்மாவின் அலுக்கங்கள்
பிரமைகள் நிறைக்கின்றன
நான்காவதும் கடைக்குட்டியுமான மகள்
வழக்கம்போல் பக்கவாட்டில்
கையைப்போட்டு உறங்கிக்கொண்டிருக்கிறாள்
அவர் படுத்துறங்கிய இடம்
சமாதியைப்போல் சற்று
மேடுதட்டுகிறது
அரவமின்றி ஆடிக்கொண்டிருக்கும்
சாளரத்தின் வழி
மின்சாரமற்ற புழுக்கத்தை தணிப்பதுபோல்
வெப்பமாற்றி ஆற்றி ஓயாமல் வீசுவது
வேகாத தகப்பனது நெஞ்சினின்
ஈமக்காற்றின் துமியாக இருக்கலாம்.
◆◆◆◆◆
காலியான இடம்

என்னைப்பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இடம்
காலியாக இருக்கிறது.
‘தோ… வந்துவிடுகிறேன்
அம்மா இடத்தை சற்றுநேரம் பார்த்துக்கொள்’
என்று சொல்லிவிட்டுப்போன அம்மா
வருவதற்கு ஏன்
இவ்வளவு கால தாமதமானதோ ?
குடியோடுகைப் பறவைக்கு
காத்திருக்கும் அதன் கூடுபோல
காத்திருப்பின் சோர்வில்
என்னையறியாது நானே
‘அ’விடத்தில் அமர்ந்துவிட்டேன்
அநேகமாக இப்போது
அவளிடத்திலிருந்து
எப்படியெல்லாம்
கவலைப்படுகிறேனோ என
கவலைகள் பற்றி ஏதுமறியாத
என்னைப்பற்றி
மேலும் மேலும்
தவிப்புகள் கூடி விலாசமாற்றாது
காற்றில் நிழலாடிக்கொண்டிருப்பாள்
இப்போதெல்லாம்
என் ருதுவின் சந்தடியடங்கி
தனிமையின் சப்தத்திற்கு செவிமடுக்கத் தொடங்கியுள்ளதை
நீ அறிவாயோ என்னமோ
உற்ற அழுகையில்லை
சமயத்தில் அது துருத்தினாலும்
கண்ணீர் குமட்டிக்கொண்டு
வருவதில்லை
நீ வரமுடியாத இடத்தைப்பற்றி
சூசகமுணர்கிறேன்
கவலை வேண்டாமம்மா
ஒன்று செய்
இன்றிரவு என் கனவில் வா
நம் கவலைகள் பற்றி
பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.
“வந்தவுடன்,
மீண்டும் அதே இடத்தில் அவள் நினைவுகளை நிறுவி
நிவாரணியடைவதைச்சொல்லி
இனியேனும் கவலைப்படவிடாமல்,
அம்மாவை வழியனுப்பிவைக்க வேண்டும்.
ஆம் அதுதான் சரி” என்றபடி
மெல்ல அவன் இமைகள் பொருந்திபோனதாகப்பட்டது.
ஏமாற்றம்

ஏமாற்றம் என்பது
‘பழகிப்போன பசி’ என்றானபின்
என்றாவது
யாரேனும் விருந்துக்கு அழைத்தால் கூட
நான்தான் போய் ‘ நா ‘ நனைத்துவிட்டு வருகிறேன்
அது யாருடைய
உபாச்சார வாசல்களையும்
மிதிக்கவோ
அவர் முகவரிகளை செவிமடவோ உடன்பட்டதில்லை
செவ்வனே அக்கொட்டி உறங்கிக்கொண்டிருக்கும்
தானே ஒரு அமைதியை உருவாக்கிக்கொண்டு
வயிற்றுறுப்பை மறந்து விளையாடும்
நாய்க்குட்டியிடம்
என்னையதன் உருவத்திற்கு
கீழமர்த்தி
தங்கள் முகமன் அரவமிடும்
பதிலுக்கு அந்நாய்குட்டியும்
க்வூ.. க்வூ.. என்று பசியில்
குனுகி மறுவொலியிடும்
இப்போதெல்லாம் அடிக்கடி
நாய்க்குட்டியை
பார்க்க வேண்டுமென்று
என்னைத் துறுத்தி வெளியே கூட்டிப்போகிறது பசி.
வழிதோறும்
புதிதாக சூலுற்றவள்போல்
ஏதோ கூசுவதுபோலிருக்கிறது
அநேகமாய்
பசியின் நா என் அடிவயிற்றை
நக்கிக்கொடுத்துக் கொண்டிருக்கலாம்.
◆◆◆◆◆◆