நா. ராஜேந்திர பிரசாத் & ந. தீபிகா
(உயிர்-வேதியியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.)

ஆன்டிபயாடிக்ஸ் எனப்படுபவை நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்று நோய்களைக் குணமாக்க மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தொற்று நோய்களை உண்டாக்கும் நோய்க் கிருமிகளின் வளர்ச்சியை முழுவதுமாகத் தடுத்துவிடும் திறன்பெற்றவை. ஆன்டிபயாடிக்குகள், முக்கியமாக பாக்டீரியா மற்றும் ப்ரோட்டோசோவா போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களைக் குணமாக்குகின்றன. ஆன்டிபயாடிக்குகளின் கண்டுபிடிப்பானது மருத்துவ வேதியியலில் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன் 47 வருடங்களாக இருந்த சராசரி மனித வயது தற்போது 79 வருடங்களாக உயர்ந்துள்ளது.
இந்த ஆன்டிபயாடிக்குகள் உயிர்கொல்லி நோய்களான காலரா, அம்மை, நிமோனியா, காசநோய் மற்றும் பல்வேறுவிதமான தொற்று நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. ஆன்டிபயாடிக்குகள் புஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பெறப்படுகின்றன. நுண்ணுயிர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளச் சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இந்த மூலக்கூறுகள் தீங்குவிளைவிக்கும் சுற்றுச்சூழல்களில் இருந்து நுண்ணுயிர்களைப் பாதுகாக்கின்றன. நாம் இந்த மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து நோய்களை உண்டாக்கும் கிருமிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்துகின்றோம்.
பல்வேறு வகையான ஆன்டிபயாடிக்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பீட்டாலாக்டம், செபலோஸ்போரின்ஸ், பாலிமிக்ஸின் போன்ற ஆன்டிபயாடிக்குகள் நோய்க் கிருமிகளின் செல் சுவரினைப் பாதிப்படையச்செய்து கிருமிகளை உயிரிழக்கச் செய்கின்றன. சல்போனமைட்ஸ், ரிஃபாம்பின் போன்ற ஆன்டிபயாடிக்குகள் நோய்க் கிருமிகளின் மரபணுக்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திக் கிருமிகளை உயிரிழக்கச்செய்கின்றன. டெட்ராசைக்ளின், குளோரோபினிக்கால், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற ஆன்டிபயாடிக்குகள் நோய்க் கிருமிகளின் புரதம் உருவாக்கும் திறனைத் தடுத்து அவைகளை உயிரிழக்கச் செய்கின்றன. ஆன்டிபயாடிக்குகள் பொதுவாகப் பாதுகாப்பானவை. ஏனெனில் அவை கிருமிகளின்மீது மட்டும்தான் செயல்படுகின்றன. இவை மனித செல்களில் பொதுவாகச் செயல்படுவது இல்லை. அதனால் மனிதச் செல்களுக்கு மிகப் பெரிய பக்கவிளைவுகள் ஏற்படுத்துவது இல்லை.
ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்
மனித வாழ்நாளினை நீடிக்கச்செய்யும் பொக்கிஷமான இந்த ஆன்டிபயாடிக்குகளை நாம் முறையாகப் பயன்படுத்தவேண்டும். தற்போது சாதாரண ஜலதோஷம் (common cold) போன்ற வியாதிகளுக்கும் நாம் ஆன்டிபயாட்டிக்குகளை வெகுவாகப் பயன்படுத்தி வருகிறோம். உயிர்காக்கும் இத்தகைய மருத்துவ மூலக்கூறுகளைத் தேவையில்லாமலும் முறையற்றும் பயன்படுத்துவது ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத் தன்மைக்கு (Resistance) வழிவகுத்துவிடும். ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் தற்போது மருத்துவ உலகின் மிகப்பெரிய சவாலாக திகழ்கின்றது. குடியிருக்கும் (ரெஸிஸ்டன்ட்) பாக்டீரியாக்களை அழித்துக் குணப்படுத்துவது என்பது மிகக் கடினமான காரியமாகும். பல்வேறுவிதமான ஆன்டிபயாடிக்குகளுக்கும் ரெசிஸ்டன்ஸ் பாக்டீரியாக்கள் எதிர்ப்பினைக் காட்டுகின்றன.
ஆன்டிபயாட்டிக் சிகிச்சையின்போது பெரும்பாலான நோய் விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. ஒருசில பாக்டீரியாக்கள் தங்களது மரபணுக்களில் மாற்றங்களை (mutation) ஏற்படுத்திக்கொண்டு ரெஸிஸ்டன்ட் பாக்டீரியாக்களாகத் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன. இந்த ரெஸிஸ்டன்ட் பாக்டீரியாக்கள் தங்களது ரெஸிஸ்டன்ட் காரணி அடங்கிய மரபணுக்களை மற்ற பாக்டீரியாக்களுக்கும் கடத்திப் பெருமளவிலான ஆன்டிபயாட்டிக் எதிர்ப்புத் தன்மைக்குக் காரணமாகிவிடுகின்றன. ரெசிஸ்டன்ட் பாக்டீரியாக்களால் உண்டாகும் தொற்றுகளுக்குச் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமானது. பெருமளவில் அதிகரித்துவரும் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதைப் பற்றிய பொதுவான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சையின்போது பெறப்படும் தொற்றுகள் விலையுயர்ந்த ஆன்டிபயாட்டிக்குகளுக்குக்கூட எதிர்ப்பினை உருவாக்கி உயிர்சேதம் ஏற்படக் காரணமாகின்றன. மெத்திசிலின் ரெஸிஸ்டன்ட் ஸ்டாபிலோகாகஸ் ஆரியேஸ் (MRSA) எனப்படும் கிருமிகள் செபலோஸ்போரின்ஸ், குயினோன் போன்ற ஆன்டிபயாட்டிக்குகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் உருவாகின்றன. இந்த MRSA தொற்றுகளை குணப்படுத்துவது மிகவும் கடினமாகும். இந்த MRSA தொற்று superbug என்று மருத்துவ உலகில் அழைக்கப்படுகிறது. MRSA தொற்று மருத்துவமனைகள் மூலமாகவும், ஆன்டிபயாட்டிக் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மூலமாகவும் உருவாகின்றது. இந்த MRSA பாக்டீரியாக்கள் செப்டிசீமியா (ரத்தம் அசுத்தமாகுதல்), நிமோனியா (நுரையீரல் தொற்று), ஆஸ்டியோமைலிட்டிஸ் (எலும்பு தொற்று), எண்டோகார்டிட்டீஸ் (இதய தொற்று) போன்ற உயிர்கொல்லி வியாதிகளை உருவாக்குகிறது. MRSA ரெஸிஸ்டன்ட் பாக்டீரியாக்களுக்கு வாங்கோமைசின் என்ற செல் சுவரைப் பாதிப்படையச் செய்யும் ஆண்டிபயாட்டிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன. துரதிஷ்டவசமாக சில MRSA பாக்டீரியாக்கள் vanA மரபணு மூலமாக வாங்கோமைசின் ஆன்டிபையோட்டிக்குகளுக்கும் எதிர்ப்பினைக் காட்டுகின்றன. இவைகள் வாங்கோமைசின் ரெஸிஸ்டன்ட் ஸ்டாபிலோகாகஸ் ஆரியேஸ் (VRSA) எனப்படுகின்றன.
காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பல்வேறு விதமான மருந்துகளுக்கும் எதிர்ப்புத் தன்மையைக் காட்டுகின்றன. இந்த விதமான ரெசிஸ்டன்ட் பாக்டீரியாக்கள் அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றன. மிகவும் ரெஸிஸ்டன்ட் தன்மை வாய்ந்த க்ளெப்ஸில்லா என்கின்ற நிமோனியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் பல்வேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. நிமோனியா பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சிறப்பாகச் செயல்படும் விலையுயர்ந்த கார்பபீனம் (carbapenem) போன்ற மருந்துகளாலும் குணப்படுத்துவது கடினமாக உள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவமனை சார்ந்த உயிரிழப்புகளுக்கு க்ளெப்சில்லா நிமோனியே என்கின்ற ரெஸிஸ்டண்ட் பாக்டீரியா காரணமாக இருக்கிறது.
ஆன்டிபயாட்டிக் பயன்பாடுகளை முடிந்தவரை தவிர்ப்பதன்மூலம் ரெசிஸ்டன்ஸ் பாக்டீரியாக்கள் உருவாவதைக் கட்டுப்படுத்தலாம். பெரும்பாலும் தொற்று நோய்களுக்கு யூகத்தின் அடிப்படையிலேயே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நோய்களுக்கான காரணங்களை முழுவதும் சோதனை செய்யாமல் மருத்துவர்கள் பெருமளவிற்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பரிந்துரைப்பதும் ரெசிஸ்டன்ஸ் தன்மை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. வைரஸ் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களுக்கும் ஆன்டிபயாட்டிக்குகளை நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவது பாதகம் இல்லை; மாறாக நலம் பயக்கும் என்று கருதும் பொது எண்ணமும் ரெசிஸ்டன்ஸ் தன்மை உருவாவதற்கு காரணமாகிறது.
உணவுக்கான வளர்ப்பு விலங்குகளில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான ஆன்டிபயாடிக்குகளும் ரெசிஸ்டன்ஸ் தன்மைக்கு வழிவகுக்கின்றன. இந்த ஆன்டிபயாடிக்குகள் உணவின் வழியாக மனிதர்களுக்குக் கடத்தப்பட்டு ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் ஏற்படுத்துகின்றன. வளர்ப்புக் கோழிகள் மற்றும் பன்றிகள்மீது சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் அதிக அளவில் ஆன்டிபயாடிக்குகளை பயன்படுத்துகின்றன.
ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்: காரணங்கள்
1. பெருமளவில் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்துதல்.
2. ஆன்டிபயாட்டிக்குகளை முறையாகப் பரிந்துரைக்கப்பட்ட விதத்தில் உட்கொள்ளாமை.
3. மீன், கோழி மற்றும் கால்நடை வளர்ப்பில் தேவையின்றி ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துதல்.
4. முறையான சுகாதாரமின்மை மற்றும் மருத்துவமனை மூலம் பெறப்படும் தொற்றுகள்.
ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்: தடுக்கும் வழிமுறைகள்.
1. தேவையான அளவில் மட்டும் ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துதல்.
2. முறையான ஆய்வகச் சோதனைகளுக்குப் பிறகு சரியான ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துதல்.
3. பாக்டீரியாக்களின் மூலம் தொற்றுகள் எற்படுவதை தவிர்த்துக்கொள்ளுதல்.
4. புதிய வீரியமுள்ள ஆன்டிபயாட்டிக்குகளை உருவாக்குதல்.
5. வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக்குகளைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுதல்.
6.ஆன்டிபயாடிக்குகளை முழுமையாக உடல்நிலை சரியாகும்வரை தொடர்ந்து பயன்படுத்துதல்.
சிக்கலான அறுவை சிகிச்சைகள்கூட ஆன்டிபயாட்டிக்குகளின் துணையுடன் வெற்றிகரமாக நிகழ்த்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய்ச் சிகிச்சையின்போது ஏற்படும் பக்க விளைவுகள், நீரழிவு நோயின் மூலம் ஏற்படும் சிரங்குகள் போன்றவை ஆன்டிபயாட்டிக்குகளின் உதவியுடன் வெற்றிகரமாகச் சீர்செய்யப்படுகின்றன.
நமது வாழ்நாளினை நீடிக்கச் செய்யும் இந்த ஆன்டிபயாட்டிக்குகளை நாம் முறையாகப் பயன்படுத்த வேண்டும். பாக்டீரியாக்கள் மூலம் ஏற்படும் தொற்று நோய்களைச் சுகாதாரமான வாழ்வியல் மூலமும், சோப்புகள் மற்றும் காஸ்மெட்டிக்குகள், துண்டுகளைத் தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலமும் தடுத்துக்கொள்ளலாம். ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் உருவாவதைத் தடுப்பது என்பது ஒரு கூட்டு முயற்சியாகும். ஆன்டிபயாட்டிக்குகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள், பயன்படுத்தும் நோயாளிகள், ஆன்டிபயாடிக் பயன்பாடுகளை முறைப்படுத்தும் சட்ட வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் மட்டுமே இதுபோன்ற ரெசிஸ்டன்ட் பாக்டீரியாக்கள் உருவாவதை நாம் தடுத்திடமுடியும். ஆன்டிபயாடிக் விழிப்புணர்வு வாரத்தினை ஒவ்வொரு ஆண்டிலும் நவம்பர் 18-24 தேதிகளில் உலகச் சுகாதார நிறுவனம் கொண்டாடிவருகிறது.
***
Super sir.
Exactly correct
Congrats deepika
While it is useful to keep the messaging & take-away quite simple in such articles, ground reality is a bit more nuanced. If you are interested in this topic, please check out the following:
1. We have newer versions of antibiotics that can treat drug resistant infections. But due to lack of use, the pharma companies inventing such drugs are not able to make money and are going out of business. We need a different incentive model: https://www.wired.com/story/the-antibiotics-business-is-broken-but-theres-a-fix/
2. There are interesting alternate treatment models, like phototherapy, on the horizon to treat drug resistant infections: http://www.bu.edu/articles/2020/why-phototherapy-will-be-the-next-frontier-in-combating-antibiotic-resistance/
3. Something that was in use centuries back, but not used for a long time, can potentially be reused to treat MRSA! An interesting podcast episode: https://www.wnycstudios.org/podcasts/radiolab/articles/best-medicine