வ. அதியமான் கவிதைகள்

ருசி

என்றாவது
ஓர் நாள்
என் கட்டிலில்
சிக்காமலா
போய்விடுவாய்?
அன்று
காக்கைகளுக்கு
கறி விருந்து வைக்கிறேன்
பார் மகனே

இரா முழுதும்
என் உறக்கத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்
கொறித்து தீர்க்கிறது
மூலைக்கு மூலை
தாவி ஓடும்
இந்த வெள்ளை சுண்டெலி

என்னிடம்
பேச்சு வார்த்தை
நிறுத்தி விட்ட
என் கண்களிடம்
நீங்களாவது
கொஞ்சம்
கேட்டு சொல்லுங்களேன்

என் உறக்கமென்ன
அத்தனை
ருசியாகவா இருக்கிறது?

நடனம்

வேறு வழியேதும்
இல்லை
என் கால்களுக்கு
ஒரு பட்டாம் பூச்சியின்
நடனத்தில் மட்டுமே
முற்றமெங்கும்
உதிர்ந்துலர்ந்த
இந்த முருங்கைப் பூக்களை
பாதம் படாது
கடந்து செல்ல
இயல்கிறது

எனக்கு முன்
தாவிச் செல்லும்
அத்தனை சருகுகளும்
இதே நடனத்தில் தான்
தன் மெய்மறந்து
இப்பிரபஞ்சத்தை
உதைத்து
உருட்டிச் செல்கின்றன.

பிறவிக் கடன்

இன்னொரு
யோசனைக்கு
இனி
இடமில்லை

கொதி உலையில்
உருக்கி
வடித்து
துள்ளும் மீனென
உறைவிட்டு
உருவி
எடுக்கப்பட்டு விட்டேன்
மகளே

என் இடது பக்கம்
சரிந்துருண்ட
தலைகளின்
கணக்கெல்லாம்
எனக்கெதற்கு?

திரண்டுருண்டு
நிலம் தொட
காத்திருக்கும்
ஆயிரமாயிரம்
தலைகள்
என் வலது பக்கம்
இன்னும் உண்டு

இடதைப் போலவே
வலதையும் கடந்து
மீளவும்
அனலாட கிளம்புவேன்

அப்போது
என் புத்துரு காண
இடதிலும்
வலதிலும்
எவ்விழியும்
இருக்கப் போவதில்லை
என் செல்ல மகளே

தியானம்

ஒளிவிடும்
சின்னஞ்சிறு
கூழாங்கல்லும்
இருள் விழுங்கும்
பெருங்குன்றும்
குளிரக் குளிர
புனலாடி
அமர்ந்திருப்பது
ஒரே கரையில் தான்

நதி வளைத்த
நிலமெங்கும்
உருண்டுருண்டு
விளையாடும்
கூழாங்கற்கள்
நிமிர்ந்து நின்ற
குன்றின்
அரையாடை பற்றி
இழுக்கிறது

கூழாங்கற்களோடு
வாயாடி வாயாடி
நதியாடுகிறது
ஆடை துறந்துவிட்ட
இன்னும் கொஞ்சம்
பெரிய கூழாங்கல்

நிறைதல்

அந்தரத்தில்
ஓயாது சுழலும்
நடனத்தைப்
போலொரு
வாழ்வினை
அணு அணுவாய்
நிகழ்த்தி விட்டுத்தான்
நிலம் தொட
நெகிழ்கிறது
ஒரு கிளைக் காம்பு

காம்புதிர்த்த
கனியின் ரசம்
அதை
உனக்கு
சொல்லவில்லையா?

தாகம்

பாளம் பாளமாய்
உன் தேகமெங்கும்
வெடிக்கும் படி
அதை
முற்ற விடு
மீதமின்றி
முற்றும்
எரிந்து முடி

உன் விரல் தொட்டு
பாதம் நின்றெரியும்
கரும்பாறையின்
நுனி வெடித்து
குளிர் ஊற்றொன்றைப்
பீறிட்டு
திறக்கச் செய்யும்
கணம் வரை
அதை
கனிய விடு

நுனி வாழை
இலை முன்னே
இனி நீ
அமரலாம்
தாளா தவத்திற்கு
மட்டுமே
படையல் நான்

***


2 Replies to “வ. அதியமான் கவிதைகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.