வில்வபுரத்து வீடு

சக்திவேல் கொளஞ்சிநாதன்

“ஏதோ நீங்க ஆசப்பட்டு கேட்டதனால தான் ரெண்டுநாள் முன்னாலயே அனுப்பி வெக்குறேன். கிராமந்தானன்னு அங்க இங்க சுத்தமா ஓரெடமா இருங்க”

வாடகை மகிழுந்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னிடம் ஜன்னலில் தொற்றி நின்றபடி மகன் சரவணன் உதிர்த்த வார்த்தைகள்தாம் இவை. தன் தகப்பனின் குரல் கேட்டு என் தோளில் சாய்ந்து திறன்பேசியின் திரையில் மூழ்கியிருந்த என் பேரன்,

“அதெல்லாம் தாத்தாவ நான் பார்த்துக்கிறேன், நீ உன் வேலைய பாத்துட்டு போப்பா.”

இறுதி காலம்வரை இருக்கும் தந்தைக்கு மரியாதை தருவதெல்லாம் என் தலைமுறையோடு ஒழிந்துவிட்டது. என் மகன் தலைமுறையில் அது பருவம் வரையிலும், அவன் பிள்ளைகள் தலைமுறையில் அது பால்யம் வரையிலும் என்று மங்கிப்போனது பளிச்சென தெரிகிறது. வெளியில் நின்ற என் மகன் மீண்டும் தொடர்ந்தான்,

“உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். முருகேசன் தாத்தாகிட்ட சொல்லிருக்கேன். அவங்க வீட்ல ஏசி, வைஃபை எல்லாம் இருக்கு. நாங்க வர்ற வரைக்கும் ஒழுங்கா வீட்டுக்குள்ளயே இருக்கணும். ஒனக்கு தூசு, வெயில் எல்லாம் ஒத்துக்காது, தாத்தாகூட எங்கயும் சுத்தாம ஒழுங்கா வீட்லயே இரு.”

அவன் யாரை இழிகிறான் என்று புரியாமல் இல்லை. அவன் என் மீது வைத்திருக்கும் மதிப்பு இப்போதெல்லாம் இதுபோன்ற மறைமுக வார்த்தைகளில் வெளிப்படுவதாகவே தோன்றுகிறது. பிள்ளையின் பணத்தில் வாழும் தந்தை, முன்னாள் விவசாயி, இதய நோயாளி, பகுதிநேர எழுத்தாளன், என எனது எந்தத் தன்மையும் மதிப்பிற்குரியதாய் இல்லை இன்றைய தேதியில். பிறகெப்படி அவன் மதிப்பான் என்னை? வண்டி ஜன்னலில் இருந்து அவன் ஓரடி பின் நகர்ந்ததும், அவன் பின்னால் நின்றிருந்த என் மங்களத்தை பார்த்தேன். அவள் தன் பங்கிற்கு,

“பிள்ளையப் பத்திரமா பார்த்துக்கங்க, உங்களுக்கு நாலு நாளைக்கான மாத்திரையெல்லாம் ஹாண்ட் பாக்ல வச்சிருக்கேன். ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி மறக்காம அந்த ஹார்ட் மாத்திரைய போட்டுட்டுப் படுங்க. அங்க அவங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு ஏதும் தொந்தரவு ஆயிடப்போவுது.”

எனக்கு சரவணன் வார்த்தைகள் மீதிருந்த சினத்தையும் சேர்த்து அவளிடம் கொட்டினேன். 

“நா என்ன குழந்தையா. எல்லாம் எனக்கு தெரியும்!” இதுபோன்று மகனிடம் பதில் சொல்ல முடியாத தருணங்களில் எல்லாம் இப்படி மங்களத்திடம் வெடிப்பதே வாடிக்கையாகிப் போனது இப்போதெல்லாம். என் சீற்றத்தை உமிழ்ந்துவிட்டு வண்டி புறப்பட்டது என் பூர்வீக கிராமத்தில் இருக்கும் என் பூர்வீக வீட்டை நோக்கி.

வில்வபுரம், புவி இடங்காட்டிக் கூற அப்படியொன்றும் பெருமை பொதிந்த ஊரெல்லாம் இல்லை. தண்டில் ஒட்டியிருக்கும் இலை போல, ஆற்றங்கரையை ஒட்டி உயிர்க்கும் ஒரு சாதாரண விவசாய கிராமம் தான் அது. சகாக்களின் ரத்தச் சூடும், நிலத்தடி நீரின் ஈரமும் செழித்திருந்த வரையில் கொழித்திருந்த கிராமம்.  அடுத்தத் தலைமுறையினர் தொழில்துறையை பற்றத் தொடங்கிய பின் வற்றத் தொடங்கிய இந்திய கிராமங்களில் அச்சுப்பிரதி தான் எனது கிராமமும். இன்றைய தேதியில் மாவட்டத்துக்கு நூறு கிராமங்கள் இருக்கும் இதுபோன்று. என்னைப் பற்றியும் என் கிராமத்தைப் பற்றியும் எடுத்துக்கூற பெரிதாய் ஏதுமில்லை என்றபோதும், என் நினைவெல்லாம் இன்னும் மூன்று நாட்களில் இடிபடப் போகும் எனது பாரம்பர்ய வீட்டைப் பற்றித்தான்.

என் தாத்தனுக்கு தாத்தன் கட்டி என் பேரனோடு சேர்த்து ஏழு தலைமுறையும் இருநூறு ஆண்டும் நெருங்கிய பழைய வீடு அது. காரைக்கல் கொண்டு சுண்ணாம்புச்சுவர் எழுப்பி நாட்டு ஓடு வேய்ந்த வீடு. பின்னால் தோட்டம், பக்கத்தில் களம் என, தேரோடும் வீதியில் அமைந்த அழகிய வீடு. பத்தாண்டு முன்னர் வரையில் புழக்கத்தில் இருந்து, இன்றும் நாங்கள் ஊர்த் திருவிழா, நல்லது கெட்டதுக்கு என்று சென்று வர வழக்கத்தில் வைத்திருக்கும் வீடு. என் திருமணம் வரையில் என் மூதாதைகள் திருமணமும் நடந்த வீடு என்றவகையில் வாழ்வதற்கு மட்டுமன்று வைபவத்திற்குமான வீடு. முகப்பில் இருபுறமிருக்கும் திண்ணை கடந்து இரு கதவிட்ட தலைவாசல் திறந்தால் உள்ளே பெரிய பட்டாசல். வீட்டின் நடுநாயகமாய் முற்றம். முற்றத்தை சுற்றி நான்கு பக்க தாழ்வாரம். இடப்பக்க தாழ்வாரத்தின் பக்கத்தில் பெரிய கூடம். கூடத்தின் இரண்டு மூலையிலும் இரண்டு அறைகள். உள் தாழ்வாரம் கடந்தால் ஒரு சிறிய கூடமும் அதன்பின் இடப்பக்கம் சேமிப்பு அறையும் வலப்பக்கம் முழுக்க வீட்டுச் சமையற்கூடமும், இரண்டுக்கும் இடையில் புழக்கடை வாசலும் என அந்தக் காலத்து சகல சாமுத்ரிகா லட்சணமும் பொருந்திய வீடு. புறவாசல் திறந்தால் வீடு ஒட்டிய கொட்டகையில், பண்டிகை பெரிய நாட்களுக்கு என்று சமைக்க வெளி சமையற்கூடமும், அது கடந்த கிணற்றங்கரையும் தோட்டமும் என வீடே உலகமாய், உலகமே வீடாய் வாழ்ந்த இல்லம். 

தூண்களுக்கு பர்மா தேக்கு, விட்டங்களுக்கு பண்ருட்டிப் பலாமரம், கதவு ஜன்னலுக்கு திருமலை செம்மரம், தரைக்கு ஆத்தங்குடித் தரையோடுகள் என பார்த்துப் பார்த்து கட்டிய வீடு, காலத்திற்கு ஏற்ப நிறம் மாறி வந்தாலும் உருமாறாத அழகிய சொத்து. நாளை என் மகனுக்கும் அதன்பின் அவன் மகனுக்கும் என அப்படியே கை மாற்றிவிடலாம். இருந்தும் வீட்டில் எல்லோரும் ஒன்றுகூடி வீட்டை இடித்து கட்டுவதென முடிவெடுத்தாகி விட்டது. குடும்ப ஜனநாயகத்தில் வலுவிழந்து போன என் ஒற்றை எதிர் ஓட்டுக்கு காட்டப்பட்ட இறுதி சலுகையாக, நான் பிறந்து வளர்ந்த என் வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் கழித்துக்கொள்ள அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது.

மனக்கண்ணாடியில் நிழலாடிய பிம்பங்கள் உடைத்து, ஒருவழியாய் அந்த மாலை மங்கிய வேளையில் வண்டி வில்வபுரத்தில் முருகேசன் வீட்டு வாசலில் வந்து நின்றது. வண்டிக் கதவைத் திறந்த முருகேசன்,

“வாங்கண்ணா நல்ல இருக்கீங்களா. டேய் சாத்விக் குட்டி நல்லா இருக்கியா?”

“தாத்தா, ஐம் நாட் எ பேபி. டோண்ட் கால் மீ குட்டி,” என்றபடி இறங்கினான்.

ஆறுவயது குழந்தைக்கு இவ்வளவு பேச்சா என்று அவனை பார்த்துச் சிரித்த முருகேசன், மறுபக்கக் கதவு வழியே இறங்கிய நான் எதிரில் இருக்கும் என் வீட்டையே ஏறெடுத்துப் பார்த்தபடி நின்றதைப் பார்த்தான்,

“வீடெல்லாம் சுத்தம் பண்ணி வச்சாச்சிண்ணா. நீங்க கைகால் அலம்பிட்டு சாப்ட்டு வாங்க, சாவகாசமா போய் பாக்கலாம்.”

வீட்டிற்குள் சென்று குசல விசாரிப்பெல்லாம் முடித்து கைகால் கழுவி, துணிமாற்றி, ஊர்க்காற்று சுவாசிக்க வெளியில் வந்து நானும் முருகேசனும் அவன் வீட்டு திண்ணையில் அமர்ந்தோம். அது திண்ணையெல்லாம் இல்லை. குறைந்தது நான்கு பேராவது சம்மணங்கால் இட்டு அமர முடிந்தால் தான் திண்ணை. இரண்டு பேர் காலை தொங்கலிட்டு சுவற்றை ஒட்டிய சிமெண்ட் பலகையின் மேல் அமர்ந்தால் அதை திண்டு என்று வேண்டுமானால் கொள்ளலாம். என்ன செய்வது, புதிதாய் கட்டப்படும் வீடுகளில் எல்லாம் இதன் பெயர் தான் திண்ணை. அப்போது உள்ளிருந்து வேகமாய் வந்த சாத்விக் முருகேசனிடம், 

“தாத்தா, வைஃபை பாஸ்வோர்ட் கொடுங்க”

“அங்க உள்ள டெலிபோன் பக்கத்துல டைரியில எழுதி இருக்கும்பா. பாத்துக்க,” கேட்டுவிட்டு நாலுகால் பாய்ச்சலில் உள்ளே சென்றவனைப் பார்த்து நான்,

“டேய் சீக்கிரமா சாப்ட்டுட்டு படுடா. உங்க அப்பன் போன் பண்ணுனா வெக்கமாட்டான்.”

“சரவணன் வெள்ளிக்கெழம வரான் போல. வீடு இடிக்க டவுன்ல ஆள் சொல்லி இருக்கேன்னு சொன்னான்.” 

“நமக்கெதுக்கு முருகேசா அதெல்லாம். கேட்டுட்டா செய்யுறான்.”

“விடுங்கண்ணா. இனிமேல் எல்லாம் புள்ளைங்க விருப்பந்தான.”

“ஆமா, நாம என்ன செய்ய முடியும். அவன் சொல்றதும் சரிதான. கால ஓட்டத்துக்கு வீடும் ஓடி வரலன்னா அப்புறம் என்ன பண்ண முடியும்,” என்று சொல்லி வெறித்துக் கிடந்த தெருவையே கண்ணுற்றேன். எங்கள் இளவட்டக் காலம் வரை எப்படி இருந்த தெரு. வாழ்ந்து கெட்ட குடும்பத்துக்கும், செழிப்பிழந்த ஊருக்கும் பெரிதாக ஏதும் வித்யாசம் இல்லை. இடைப்பட்ட அமைதியை மீண்டும் நான் என் வார்த்தை கொண்டே மறுதலித்தேன்.

“அப்படி ஒன்னும் காலத்துக்கும் கூட ஓடி வராத வீடு இல்லையே முருகேசா. என் தாத்தங் காலத்துல ஊர்ல திருட்டு பயம் வரவும் முற்றத்துல முறுக்குக்கம்பி கொண்டு அடச்சாங்க. வீட்ட சுத்தி மண்ணு செவுரு வச்சாங்க. என் அப்பங் காலத்துல கரண்டு கம்பி இழுத்து ஊடெல்லாம் லைட் போட்டாங்க. எங்காலத்துல தண்ணி தொட்டி கட்டி பைப்பு போட்டேன். டாய்லெட் பாத்ரூம், டிவி, போன், காஸ் அடுப்புன்னு எல்லாம் பாத்த வீடு தான இது. வெறும் வீடு மட்டும் இல்லையே முருகேச, இத்தன வருஷ நெனப்பும் தான இருக்கு இதுவுள்ள. ஏதோ எங்காலம் வரைக்குமாவது விட்டுவைக்கலாம்,” சொல்லும்போதே குரல் தழுதழுக்கத் தொடங்கியது எனக்கு.

“அட என்னண்ணா நீங்க சாதாரண வீட்டுக்கு பொய் இவ்ளோ யோசிச்சிகிட்டு.”

“உங்கிட்டையாவது கொஞ்சம் மனசுவிட்டு பேசிடுறேன் முருகேசா. வீடுன்னா வெறும் வீடு மட்டும் இல்லையேப்பா. நம்ம வடக்குத் தெரு பெரியம்மா, ஆஸ்ப்பிட்டல்ல எத்தன நாள் இழுத்துகிட்டு கெடந்துச்சு. தேறாதுன்னு வீட்ல கொண்டாந்து போட்ட ரெண்டாவது நிமிஷம் வீட்ட ஓரெட்டு பார்த்துட்டுதான உசுர உட்டுச்சு இல்ல. இந்த மொடக்கு வீட்டு நாராயணன் அண்ணன், வீட்ட வித்துட்டு வெளியூர் போனப்ப கூட நல்லா இருந்த மனுஷன், வீட்டை வாங்குனவன் வீட்ட இடுச்சுட்டான்னு கேட்ட ஒடனே போய்ச் சேந்துட்டாரு இல்ல.”

கூடிய என்குரலின் பின் ஒளிந்திருந்த என் விரக்தியை முருகேசன் கண்டிருக்க வேண்டும். உடனே அவன் தான் கட்டளையிடும் தொனியில்,

“அட என்னண்ணா ஏதேதோ மனச போட்டு கொழப்பிக்கிட்டு இருக்கீங்க. உள்ள வாங்க சாப்டு படுக்கலாம். இவ்ளோ தூரம் கார்லா வந்தது வேற அசதியா இருக்கும்.”

“இல்ல முருகேசா. நான் இன்னைக்கு என் பழைய வீட்லயே படுத்துக்கலாம்னு இருக்கேன்,” என்றதும் என்னை திரும்பி உற்றுநோக்கிய முருகேசன்,

“அதெல்லாம் கூடவே கூடாதுன்னு சரவணன் போன்ல சொல்லிருக்கான் அண்ணா. ஏசி போட்ருக்கேன். நீங்க பேசாம இங்கயே படுங்க.”

“இல்ல முருகேசா. இன்னும் ரெண்டு நாள் பொழுதுதான் இந்த வீடு நிக்கப் போவுது. அதுவரைக்குமாவது நான் என் வீட்ல இருந்துக்குறேன் விடு. சாத்விக் இங்க படுத்துக்கிட்டும். நான் மட்டும் அங்க போயி படுத்துக்கிறேன். நீ சரவணன் கிட்ட ஏதும் சொல்லிக்காத.”

“சரி அப்ப நானும் உங்க கூட அங்கேயே படுத்துக்குறேன்.”

“இல்லயில்ல, சாத்விக் முழிச்சான்னா எங்க என்னன்னு தேடுவான். நீன்னா கொஞ்சம் சமாளிச்சுக்கலாம். உன் பொஞ்சாதிக்கு தனியா செரமம ஆயிடப்போவுது. எனக்கு என்ன, என் வீடு. அதுவும் எதிர்ல தான இருக்கு. நான் பார்த்துக்கிறேன்.”

“சரி நீங்க சொன்னாலும் கேட்க மாட்டீங்க. உள்ள வந்து சாப்டுங்க. நான் வீட்ல லயிட் போட்டு வச்சிட்டு உங்களுக்கு படுக்கை தண்ணியெல்லாம் கொண்டு வச்சிட்டு வந்துடுறேன்.”

“அப்படியே என் ஹாண்ட் பேக்கும் சட்டப்பையில என் மூக்குக் கண்ணாடியும் இருக்கும். அதையும் கொண்டு போய் வச்சிரு முருகேசா.”

பேசிக்கொண்டே உள்ளே வந்த நாங்கள், முன்னறையில் சாத்விக் சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்ததை கண்டோம். பயணக் களைப்பு அவனையும் இவ்வளவு சீக்கிரம் படுக்கையில் தள்ளியிருந்தது. 

நான் சாப்பிட்டு முடித்து எழவும் முருகேசன் வீட்டைச் சீர்செய்து முடித்து சாவியை வந்து என் கையில் கொடுத்தான். சாவியை வாங்கிக்கொண்டு செல்வதாக சொல்லிவிட்டு நான் என் வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டை நெருங்கி ஒருமுறை வீட்டையே வெறித்துப் பார்த்தேன். அந்த இருள் கசிந்த இரவிலும் வீடு ஒளிமிகுந்ததாய் என் கண்ணில் பட்டது. திண்ணையில் பொங்கலுக்கு வந்த மாமன் என்னைப்பார்த்து ‘மருமவனே கொஞ்சம் தண்ணி எடுத்துக்கிட்டு வாடா,’ என்று சொல்வது கேட்டது. கதவு திறந்து உள்ளே சென்றதும் பட்டாசாலையில் கணக்கு நோட்டோடு சாய்வு நாற்காலியில் இருந்த தாத்தாவின் குரல் என்னிடம் ‘டேய் சின்னவனே, உள்ள கெழவிகிட்ட காபி கேட்டேன்னு சொல்லு.’ பக்கத் தாழ்வாரத்தில் குடக்கல்லில் மாவரைத்துக் கொண்டிருந்த அத்தை உரிமைக்குரலில், ‘அடேய் உங்கம்மா உன்ன காணும்னு தேடிகிட்டு இருந்துச்சு, நீ எங்க போயி சுத்திட்டு வர.’ சமையற்கூடம் அடைந்ததும் பாட்டி வழக்கமான வாஞ்சையுடன், ‘குட்டி, குவளையில முறுக்கு சுட்டு வச்சிருக்கேன், போய் எடுத்துக்க.’ அடுத்ததாக புழக்கடை செல்ல கிணத்தடியில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த அம்மா, ‘வாடா, கொஞ்சம் இதெல்லாம் எடுத்துட்டு போயி உள்ள வை.’ அங்கிருந்து பார்க்க, தோட்டத்தின் மரத்தின் மீதேறி கிளையை கழித்துக்கொண்டிருந்த அப்பா, ‘இங்க வராத. அங்கயே நின்னு வேடிக்க பாரு,’ என்று சொல்வது வரை ஒவ்வொரு குரலாய் கேட்டது. வெறித்துக்கிடந்த வீட்டில் யாரும் இல்லாமல் இல்லை. அருவமாய் எல்லோரும் என்னோடு பேசும் குரல் நிச்சயம் என் செவிகளுக்கு மட்டுமே கேட்கும்.

புழக்கடை வரையில் வீட்டை சுற்றிப்பார்த்து விட்டு எரிந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு விளக்கையும் அணைத்துவிட்டு, ஒற்றை இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு, நேரே கூடத்தில் விரித்திருந்த படுக்கைக்கு வந்தேன். மேலே அப்பா தாத்தா படங்களுக்கு கீழே விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் படுத்து கால் நீட்டினேன். வெயில் கால வேளையிலும் இந்த கிராமத்து வீட்டில் நிலவிய இதமான குளிர் என்னை கொஞ்சம் ஆற்றுப்படுத்தத் தவறவில்லை. வீடு சுமந்த ஞாபகங்களை அசைபோட்டு முடித்து, குடும்பத்தாரோடு இந்த வீடு இடிப்பதற்கான உரையாடலில் வந்து நின்றது நினைவு.

இத்தனை காலமும் வளர்ச்சிக்கேற்ப தன்னை மெருகேற்றிக்கொள்ள முடியாவிட்டாலும் தன்னை உருதேற்றிக்கொண்டே வந்த இந்த வீடு, கடைசியில் ஒரு இரண்டடி தொழில்நுட்ப சாதனத்திடம் தோற்றுப்போய் நிற்பதாய் சொன்னது எங்களது அன்றைய உரையாடல். நாட்டு ஓடு வீட்டில் காற்றுப் பதனாக்கி (ஏசி) போட வழியில்லையாம். தனக்குக் கூட பரவாயில்லை பிள்ளைக்குச் சரிப்பட்டு வராது என்பதே என் பிள்ளையின் வாதம். அதனால் அதற்கென ஒரு அறை மட்டும் கட்டுவதற்கு பதில் வீட்டையே இடித்துவிட்டு தேவைக்கேற்ப நவீனப்படுத்திக் கட்டிக்கொள்வதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. 

சுண்ணாம்புச் சுவர், நாட்டு ஓடு இதமாய் தரும் குளிர்ச்சியை விட ஒரு காற்றுப் பதனாக்கி தரும் அதீத குளிர்ச்சிக்கு பழக்கப்பட்டவர்கள் வேறு என்ன செய்வார்கள். பழக்கூழில் கூட சர்க்கரையும் பனிச் சீவலும் சேர்த்து உண்ணப் பழகியவர்கள் வேறெப்படி யோசிப்பார்கள். எனக்குத்தான் ஒவ்வவில்லை. சந்தனக்கட்டைக்கு எதற்கு சவ்வாது பூச்சு? செந்தாழம்பூவுக்கு எதற்கு வாசனைத் திரவிய குளியல்? என்ன யோசித்து என்ன. இன்னும் இரண்டே இரவுகளில் இடிபடப் போகும் இந்த வீட்டின் நினைவலைகளே என் நெஞ்சத்தை அழுத்தின. பயணக்களைப்போடு சேர்ந்து அழுத்திய நினைவுகளின் பாரத்தில் சில மணித் துளியில் தூங்கிப்போனேன்.

தலையணைக்கு அருகில் கைப்பையில் மங்களம் சொன்ன இதய மாத்திரை எடுத்துக்கொள்ளப் படாமலே உறங்கிக்கொண்டிருந்தது. அறையில் எரிந்துக்கொண்டிருந்த ஒற்றை இரவு விளக்கு ஏனோ விட்டுவிட்டு துடித்துக் கொண்டிருந்தது.

***

3 Replies to “வில்வபுரத்து வீடு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.