- விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
- சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
- பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
- பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
- விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன
- விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
- ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
- ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
- விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
- டால்கம் பவுடர்
- டால்கம் பவுடர் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
- விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தில் அப்படி என்ன விஞ்ஞானம் மற்றும் அரசியல் இருக்கப்போகிறது? துரதிஷ்டவசமாக, இன்றுவரை இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும், நாம் அதை ஒரு பூச்சி மருந்தாகவே அறிவோம். இதன் இன்னொரு பயனைச் சிலரே அறிவார்கள். சில வெப்ப மண்டல நோய்களுக்கு டிடிடி ஒரு மருந்தாகவும் இருந்துவந்துள்ளது. இந்த வெப்ப மண்டல நோய்களைக் கட்டுக்குள் வைத்திருக்க, டிடிடி ஒரு மலிவான ரசாயனம். இதுவே, இந்த ரசாயனத்தின் அரசியல் மற்றும் வியாபாரச் சிக்கல்களுக்குக் காரணமாக இருந்துவந்துள்ளது.
பின்னணி மற்றும் விஞ்ஞானம்

Dichloro dipheny ltrichloroethane, என்ற ரசாயனம் DDT என்ற வியாபாரப் பெயருடன், 1874 முதல் வலம் வருகிறது. ஜெர்மனிய ரசாயன நிறுவனமான பேயர் (Bayer) நிறுவனத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. 1939–ஆம் ஆண்டுவரை, பெரிதாக யாரும் டிடிடி-யைப் பயன்படுத்தவில்லை. 1939–ல் ஸ்விஸ் நாட்டு விஞ்ஞானி, பால் ஹெர்மென் முல்லர் (Paul Hermen Muller) என்பவர், இது ஓர் அருமையான பூச்சிக்கொல்லி என்று கண்டுபிடித்தார். 1948–ல் இதற்காக அவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
டிடிடி எப்படி வேலை செய்கிறது? தெளிக்கப்பட்ட பூச்சியின் மூளையில் உள்ள நரம்பணுவின் சோடியம் சானல்களை, சகட்டு மேனிக்குத் திறந்துவிடும். இதனால், பூச்சியின் பல கோடி நரம்பணுக்கள் ஒரே சமயத்தில் இயங்கத் தொடங்க, அதன் விளைவாக வலிப்பு ஏற்பட்டுப் பூச்சி இறந்துவிடும்.

1939 – இரண்டாம் உலகப் போர்க் காலம். பூச்சிகள் அதிகமாக இயங்கும் காட்டுப் பகுதிகளுக்கு ராணுவ வீரர்கள் செல்லவேண்டிய நிர்பந்தம். ராணுவ வீரர்களுக்கு டிடிடி–யை தெளித்துவிடுவார்கள். இதனால், பல நோய்களிலிருந்து ராணுவ வீரர்கள் தப்பியதால், இந்தப் பூச்சிக்கொல்லி மருந்து பெரும் வெற்றியடைந்தது. அந்தக் காலகட்டங்களில், இன்று குழந்தைகளுக்குப் போலியோ ஊசி கொடுப்பதைப்போல, போர்க் கால வீர்ர்களுக்கு வரிசையாக டிடிடி தெளிக்கப்பட்டது!
1945–ல், இரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில், விவசாயிகளுக்கு ஒரு பூச்சிக்கொல்லி மருந்தாக டிடிடி அறிமுகப்படுத்தப்பட்டது. மனித உடல்நலத்திற்குக் கேடு ஒன்றும் விளைவிக்காததால் (அன்று அப்படித் தோன்றியது) இதை ஓர் அதிசய ரசாயனம் என்று உலகம் கொண்டாடியது.
1955–ல் உலக உடல்நலக் கழகம், மலேரியா ஒழிப்பிற்கு டிடிடியைப் பயன்படுத்தச் சிபாரிசு செய்தது. உலகின் பல்வேறு நாடுகளில், பெரும் வெற்றிபெற்றது இந்த முயற்சி.

இப்படி விவசாயிகளின், மாடுகளின், கோழிகளின் தோழன் என்று அனைவரும் நினைத்து வியந்த டிடிடியில் என்ன கெடுதல் இருக்கக்கூடும்? 1962–ல் வெளியான ரேச்சல் கார்ஸன் எழுதிய அமைதியான வசந்தம் (Silent Spring by Rachel Carson) என்ற புத்தகம் டிடிடி உலகில் ஒரு மிகப் பெரிய சவாலை முன்வைத்தது. அப்படி என்ன சவால்கள் அவை?

- டிடிடியைக் கண்மூடித்தனமாகத் தெளிப்பதில் பல பின்விளைவுகள் உள்ளன. விமானத்திலிருந்து தெளிப்பது, ஓடும் ஊர்த்திகளிலிருந்து தெளிப்பது என்பதில் அதிக சதுர கி.மீ. பரப்பளவு தெளிக்க முடிந்தாலும், பிரச்சினை அதில்தான் உள்ளது. உதாரணத்திற்கு, ஓடும் நதிகளில் தெளித்தால், அங்கு வாழும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன. பூச்சியை உண்ணும் பல உயிரினங்கள், குறிப்பாக மீன்கள், இதனால் பாதிக்கப்படுகின்றன.
- விமானம் மூலம் தெளிக்கப்படும் டிடிடியால், பாடும் பறவைகள் பல இறந்துவிடுகின்றன.
- தாவரங்களில் முக்கிய பணி மகரந்தச் சேர்க்கை. இந்தப் பணியைச் செய்யும் வேலை பூச்சிகளுடையது. வானிலிருந்து தெளிக்கப்படும் டிடிடி, மகரந்தச் சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளையும் கொல்லுகிறது.
- இன்னொரு விஷயத்தையும் ரேச்சல் விவரித்தார். சில பறவைகள் டிடிடியால் பாதிக்கப்பட்டு, அவற்றின் முட்டைகள் முன்னைவிட மிகவும் மெலிதாக இருப்பதால், குஞ்சுகள் பிறக்கும் முன்னே, முட்டை உடைந்து விடுகின்றன. அமெரிக்கக் கழுகு இதில் அடங்கும்.
- மற்றொரு விஷயம், இவ்வகை சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லிகளால் சில எதிர்பாராத விளைவுகளும் உருவாகும். சில பூச்சிகள், டிடிடியை எதிர்த்து நின்று உயிர்வாழும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன. இவற்றைக் கொல்ல, மேலும் அதிகமாக டிடிடியைப் பயன்படுத்த வேண்டும். இப்படி இது ஒரு தேவையற்ற தெளிப்பு அதிகரிப்பை ஏற்படுத்திவிடுகிறது. ஆரம்பத்தில் இது தெரியாவிட்டாலும், 1947–ல் இவ்வகை எதிர்ப்புச் சக்தி சில பூச்சிகளுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து டிடிடியைப் பயன்படுத்துவதனால் வரும் விளைவு இது. இந்த நிலையைச் சமாளிக்க, டிடிடியைவிட இன்னும் சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி தேவைப்படும். ரேச்சல் சொன்னதைப்போல, அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்குகளை அரிக்கும் குளவி ஒன்று இன்றிருக்கும் அத்தனை பூச்சி மருந்துகளையும் எதிர்க்கும் சக்தி வாய்ந்தது!
- கடைசியாக, ரேச்சல் முன்வைத்த விஷயம், எல்லோரையும் சற்றுத் திடுக்கிட வைத்தது. மனித உடல்நலத்திற்கும், டிடிடி கேடு விளைவிக்கும் என்பதுதான் அது. மனித உடல்நலத்திற்கு எந்தக் கேடும் விளைவிக்காத மாய ரசாயனமாக டிடிடி அதுநாள் வரை பார்க்கப்பட்டது. டிடிடி–யின் நச்சு, தாய்ப்பாலில் கலந்து புற்றுநோய் வரும் வாய்ப்பு பல பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் உண்டு என்று பிறகு ஊர்ஜிதம் செய்யப்பட்டது.
அரசாங்கக் கட்டுப்பாடு
ரேச்சலின் புத்தகம், டிடிடியைப் பற்றிய பெரிய விவாதத்தை மேற்குலகில், குறிப்பாக அமெரிக்காவில் உருவாக்கியது. அதிபர் கென்னடியின் விஞ்ஞான பரிவுக் குழு, ரேச்சலின் குற்றச்சாட்டுகள் சரியென்று சொன்னதோடு நிற்காமல் இவ்வகைப் பூச்சிக்கொல்லிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தடை செய்யவேண்டும் என்று பரிந்துரைத்தது. இதற்காக, 1967–ல் உருவாக்கப்பட்ட EDFஎன்ற தனியார் அமைப்பு, டிடிடியைத் தடைசெய்யப் போராடி வந்தது. இந்த இழுபறி, சில ஆண்டுகள் தொடர்ந்து வந்தது. 1970–ல் அமெரிக்க அதிபரான நிக்ஸன், EPA என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஆணையிட்டார். பல அரசாங்க அமைப்புகள் செய்த குழப்பமான வேலையை EPA, சரியாகச் செய்யவேண்டும் என்பதே இதன் நோக்கம். பல விசாரணைக் கமிஷன்களின் பரிந்துரைகள், தூசி தட்டாமல் அரசாங்க அலுவலகங்களில் தூங்கினாலும் டிடிடி இன்னும் பயனில் இருந்தது. இந்த நிலையில், சில விஞ்ஞானிகள் ரேச்சலின் புத்தகத்தால் ஊக்குவிக்கப்பட்டு, இந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டி, டிடிடியைத் தடை செய்யுமாறு அரசாங்கத்துடன் போராடத் தொடங்கினர். குறிப்பாக, மனிதர்களுக்குப் புற்றுநோய் வர வாய்ப்புண்டு என்பது, பலரது கவனத்தையும் திருப்பியது. 1971 முதல் EPA, பல நிபுணர்களை அழைத்துத் தங்களது கருத்துக்களைச் சொல்லச்சொன்னது. 1972-ல், பயிர்களுக்கு டிடிடி தெளிக்க EPA தடைவிதித்தது. கடைசியாக, 1976–ல் டிடிடி அமெரிக்காவில் முழுவதும் தடை செய்யப்பட்டது. டிடிடிக்கு மாற்றாக உருவாக்கப்படும் பூச்சி மருந்துகள், EPA மூலம் சோதனைச் சான்றிதழ் பெறவேண்டும் என்று முடிவானது.
2001–ஆம் ஆண்டில், ஸ்டாக்ஹோம் நகரில் உலக நாடுகள் சந்தித்து, டிடிடி-யைப் பயன்படுத்தி, பயிர்களுக்குத் தெளிப்பதை தடைசெய்ய ஒப்புக்கொண்டன. மலேரியா ஒழிப்பு போன்ற விஷயங்களுக்காகச் சில ஏழை நாடுகள் சிறிதளவு பயன்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
அரசியல் மற்றும் திரித்தல்
ரேச்சல், தன்னுடைய புத்தகத்தால் பல இடையூறுகளைச் சந்தித்தார். ஏராளமான லாபத்தை ஈட்டும் ஒரு ரசாயனத்தைத் தயாரிப்பவர்கள் சும்மாவா இருப்பார்கள்? யார் இந்த ரேச்சல்? அவருக்கு உண்மையான விஞ்ஞானம் தெரியுமா? இது போலப் பல அவதூறுகளை, டிடிடி தயாரிப்பாளர்கள் பரப்பிய வண்ணம் இருந்தனர். மேற்கத்திய வியாபாரச் சுதந்திரத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் என்றும் அவருக்குப் பட்டம் சூட்ட முயன்றனர். EPA நடத்திய விசாரணைக்குத் தங்களுக்கு ஆதாயமான சிந்தனையுடைய பல விஞ்ஞானிகளை அனுப்பவும் செய்தார்கள். மிக முக்கியமாக, டிடிடியைத் தடை செய்தால் ஆப்பிரிக்க கண்டத்தில், பல கோடி மனித இறப்புகளுக்கு ரேச்சல் காரணமாவார் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. வளரும் மற்றும் ஏழை நாடுகள் மீதான அநீதி இது என்றும் சொல்லிப் பார்த்தார்கள்.
இன்று புவிச் சூடேற்றம் பற்றிப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்த பல நிறுவனங்கள் / அமைப்புகள் டிடிடியை, சிகரெட்டை எதிர்த்தவர்கள். புவிச் சூடேற்றம் பற்றி அலசும்போது அதை விவரமாகப் பார்ப்போம்.
இன்றைய நிலை
சில ஏழை ஆப்பிரிக்க நாடுகள் மலேரியா கட்டுப்பாட்டிற்காக டிடிடியைப் பயன்படுத்துகின்றன. மேற்குலகில் மனித உடல்நலம் மற்றும் உயிரினங்களின் நலம் கருதி அறவே இந்த ரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது. உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே இந்த விஷயத்தில் அடம் பிடிக்கிறது. அது இந்தியா. இந்தியா, டிடிடியை தடைசெய்ய மறுக்கிறது. அத்துடன், இந்திய அரசாங்கம் நடத்தும் இந்துஸ்தான் இன்ஸெக்டிஸைட் நிறுவனமே டிடிடியை உலகிலேயே அதிகமாகத் தயாரிக்கிறது.
http://www.hil.gov.in/ddt.aspx
வருடத்திற்கு, 6,344 மெட்ரிக் டன்கள் டிடிடியைத் தயாரிப்பதாக இங்கு சொல்லிக்கொண்டுள்ளது. கொசுக் கொல்லியாக டிடிடியை இந்த அரசாங்க நிறுவனம் விற்கிறது. இந்தியாவைத் தவிர வட கொரியா, தென் அமெரிக்க நாடுகள் மற்றும் சைனா டிடிடியைத் தயாரிக்கின்றன. மலேரியா கட்டிப்பாட்டிற்கு மாற்று இன்று வரை மலிவாக இல்லாததால் வந்த பிரச்சினை இது. இந்த விஷயத்தில், டிடிடியை முழுவதும் தடைசெய்வது என்பது அதற்கு மாற்று மருந்து, அதுவும் மலிவான ஒன்று உருவாகும் வரை நடவாத காரியம். விஞ்ஞானம் எவ்வளவு விளக்கினாலும் பெட்ரோல் கார்கள்போல, டிடிடி-க்கும் மாற்று ரசாயன முயற்சிகள் தேவை. இல்லையேல், வளரும் நாடுகள் பெட்ரோலால் புகை மண்டலம், டிடிடியால் புற்றுநோய் என்று பழைய பிரச்னைகளுடன் வாழ வேண்டிவரும்.