மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G

பகுதி 2

கோரா

 1G-ஒப்புமை (analog) மொபைல் தொலைபேசி அமைப்புகள்  கார்களிலும் வாகனங்களிலும் தொலைபேசிகளைப்  பொருத்திக் கொள்ள விரும்பிய மேட்டுக்குடி மக்களையே  வருவாய் இலக்குகளாகக்  கொண்டிருந்தன. ஆனால் அவ்வகை மொபைல் தொலை பேசியின் இடம்-பெயர்வு லாவகம் பாமரரையும் கவர்ந்தது.  மேலும் 1980களின்  இறுதியில் மோட்டரோலா வடிவமைத்த, மலிவான, இலகு ரக, சட்டைப்பையில் மடக்கி வைக்கக் கூடிய ( foldable)  சுண்டு (flip) மாடல்  மைக்ரோடேக் (MicroTac) அலைபேசி அனைவரையும் கிறங்க வைத்தது. வீட்டினுள்ளும் வீதிகளிலும் வாகனங்களிலும் வெளியூரிலும் எந்த சூழலிலும் தொடர்புக்கு வசதி செய்யும் சொந்த ஃ போனாக அது உணரப் பட்டதாலும், மின்கலன் துய்ப்பு குறைந்து பயன்பாட்டுக் காலம் கூடி, செலவுகள் அனைவர்க்கும் கட்டுபிடியாகும் அளவில்  இருந்ததாலும்  மொபைல் சேவையின் கவர்ச்சி  பன்மடங்கு அதிகரித்தது.  புதிய செல்களை அமைத்தும், இருக்கும் செல்களைப்  பிரித்தும் (cell splitting) அல்லது பாகம் செய்தும்(sectorization )  கொள்கையளவில் செல்லுலார்  தொலைபேசி அமைப்புகளை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரிவாக்கம் செய்ய முடிந்தது. இந்தக் காரணங்களால்  உலக 1G மொபைல் பயனர்களின் எண்ணிக்கை 1990 இறுதியில் 20 மில்லியனைக் கடந்தது. ஒப்புமை தொழில் நுட்பத்தின் போதாமைகளோ குறைபாடுகளோ அவர்களின் பேரார்வத்தைக் குறைக்கவில்லை.

ஒரு முறை ஒத்திவைக்கப் பட்ட இலக்கமாக்கல் (Digitising) : 

 ஒப்புமை முறை (analog), இலக்க முறை (digital) ஆகிய இரு மொபைல் தொலைபேசி அமைப்புகளிலும், ரேடியோ கோபுரத்திற்கும் தொலை பேசி அமைப்பின் பிற உபகரணங்களுக்கும் இடையே இலக்கமுறை சமிக்ஞைகளே பயன்படுத்தப் படுகின்றன.  முக்கிய வேறுபாடு, அலைபேசிக்கும் ரேடியோ கோபுரத்திற்கும் இடையே நிகழும் குரல் சமிக்ஞைப் பரிவர்த்தனைகளில் மட்டுமே; 1G யில் ஒப்புமை குறிகைகளும், 2G யில் இலக்கமுறை குறிகைகளும் குரல் சமிக்ஞைப் பரிவர்த்தனைக்குப்   பயன்படுத்தப் படுகின்றன. 

1970களிலேயே  முழு இலக்கமுறை மொபைல் அமைப்பின் சாத்தியக்  கூறுகள்  மற்றும் அனுகூலங்கள் குறித்த ஆரம்ப கட்ட விவாதங்கள் மேற்கொள்ளப் பட்டன. அந்த காலகட்டத்தில் இலக்க முறை ரேடியோ போன்கள் ராணுவத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. ராணுவப் பயன்பாட்டிற்கான அலைபேசிகள் ரேடியோ குறுக்கீடுகள் நிறைந்த சூழலிலும் தெளிவான வலுவான குறிகைகளை ஏற்கக் கூடியதாகவும், மறையாக்கம் (encryption) மூலமாக ரேடியோ பாதைகளில் ஒட்டுக் கேட்பை  அனுமதிக்காத பாதுகாப்பு கொண்டதாகவும், முறைகேடான அணுகலைத் தவிர்க்கக் கூடிய வலிய சான்றுறுதி மற்றும் சரிபார்ப்பு(authentication) செயல்முறைகள் கொண்டதாகவும் வடிவமைக்கப் பட்டன. 

ஆனால் ஒருங்கிணைசுற்றுகள் (integrated circuits ), நுண் செயலிகள் (microprocessors ) போன்ற அதி  நவீன மின்னணுவியல் கூறுகள் கிடைக்காத நிலையில்,  தனித்த(discrete) கூறுகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப் பட்ட  ராணுவப் பயன்பாட்டு போன்கள் பருமனாகவும் அதிக மின் சக்தி நுகர்வனவாகவும் அதிகவிலை கொண்டதாகவும்   இருந்தன. மின்னணுவியல் வளர்ச்சி மூலம் கிடைக்கப் போகின்ற சிற்றளவாக்கம்(miniaturisation), குறைந்த மின்சக்தி நுகர்வு மற்றும் குறைந்த மின்கலன் பயன்பாடு ஆகியவை இலக்கமாக்கல் வெற்றிக்கு இன்றியமையாதவை எனத் தொழில்நுட்ப வல்லுநர்களால்   கருதப் பட்டதால், இலக்கமாக்கல் திட்டம்,  2G தலைமுறைக்கு ஒத்தி  வைக்கப்பட்டது. அவர்கள் எண்ணியவாறே 1980களின் இறுதியில்  மின்னணுவியல் கூறுகள் பெருவளர்ச்சி அடைந்து அதுவே இலக்கமாக்கலின் உந்து சக்தி ஆனது.  

மொபைல் இலக்கமுறையாக்கலின் (digitalization ) உந்து சக்திகள்:

  1. மொபைல் அமைப்புகளின் உயர் ஆற்றல் அளவு
  2. கையடக்க  அலைபேசியின்  விலையில் பெரும் சரிவு
  3. மின் சக்தித் தேவை குறைந்ததால் மின்கலம் ஆயுள் நீடிப்பு 
  4. மலிவு விலை இருவழிக் குறிமுறை மாற்றி ( codec-coderdecoder)
  5. அலைபேசியில்  ஒருங்கிணைச் சுற்றுகள்  மற்றும் நுண்செயலிப் பயன்பாடு 
  6. இலக்கமுறை குறிகை செயலாக்கச் சிப்  (Digital Signal Processing chip) வருகை 

குரல் செயலாக்க (Voice processing ) தொழில் நுட்ப DSP சிப்களின் பயன்பட்டால் குரல் அலைப்பாதைகளின் அலைநீளத் தேவைகள் ⅓ ஆகக் குறைந்தன. அதனால் ஒதுக்கப்பட்ட அலைக் கற்றையில் மும்மடங்கு அலைப் பாதைகளை உருவாக்க முடிந்தது.   

2G- இரண்டாம் தலை முறை மொபைல் தொடர்பாடல்(1990- 1999) அறிமுகம் : 

இலக்கமாக்கலை  செல்லுலார் நெட்ஒர்கிங்கிற்கு வெற்றிகரமாகக் கொண்டுவந்த கால கட்டத்தை 2G என்கிறோம். இதுவே மொபைல் தொடர்பாடலின் புரட்சிகரமான மைல்கல்லாகக்  கருதப் படுகிறது. 

ஏனெனில் செல்லுலார் தொடர்பாடலில் இதுவரை சிறிய அளவில் பயன்படுத்தப் பட்டுவந்த ஒப்புமை முறை  முழுதாக, இனி எப்போதைக்குமாக, இலக்கமுறைக்கு மாறியது. இலக்கமுறையின் இரைச்சல் நீக்கல் வழிகளால் பிழைகள் திருத்தப்பட்டு  குரல் நயம் வெகுவாக உயர்ந்தது. ஒரே அளவு அலைவெண் கற்றையில் அதிக பயனர்களுக்கு இடமளிக்க முடிந்ததால் மொபைல் தொலைபேசிக் கம்பெனிகளும் பயனடைந்தன. இலக்க முறை செல்லுலார் அமைப்புகளால், மொபைல் தொடர்பாடல் நம்பகமானதாக மற்றும் பாதுகாப்பானதாக ஆனதோடு  தர அளவுப்பாடு (standardization) முயற்சிகளால்  விலையும் வெகுவாக சரிந்தது. 

ஆனால் அலைக்கற்றை விலை, டவர் சாதனங்கள் விலைகளைச் சரிகட்டி லாபம் ஈட்ட, அதிக எண்ணிக்கையில் பயனர் ஆதாரம் தேவைப்பட்டது. பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின்(ITU ) தீவிர சீராக்க முயற்சிகளால், அது பரிந்துரைத்த ரேடியோ அலைக்கற்றைப் பயன்பாட்டைப்  பெருவாரியான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. அத்துடன் எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஒரே சீராக பயன் படுத்தக் கூடிய ஒற்றை மிகு திறன் இலக்கமுறை செல்லுலார் TDMA தொழில் நுட்ப தர நிலையை தமக்காக உருவாக்கிக் கொள்வதும் அதன் மூலம் அனைத்து யூரோப் திரிகையை(roaming ) உறுதி செய்வதும்,  அப்போது பயன்பாட்டில் இருந்த அனைத்து ஒப்புமை முறை அமைப்புகளை   மூடிவிடுவதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. 

அதன் செயல் வடிவமாக யூரோப்புக்கான GSM தர நிலை (standard) உருவானது. ஐரோப்பிய நாடுகளில்  TDMA அடிப்படையில் உருவான GSM அமைப்புகள் 1991-ல் வணிகப் பயன்பாட்டைத் துவங்கின.  வட அமெரிக்காவின் அன்றைய 1G (ஒப்புமை முறை ) அமைப்புகள், AMPS (Advanced Mobile Phone System ) மற்றும் NAMPS (Narrowband version of AMPS) என்னும் தர நிலைகளில் நாடெங்கும்  செயல் பட்டுவந்தன .  அமைப்புக்கிடை இயக்கத்துக்காக உருவாக்கப்பட்ட IS-41 standard மூலமாக பயனர்களுக்கு  பெரும் பரப்பு திரிகை (wide area roaming) வசதியும் கிடைத்துவந்தது  . யூரோப்  போலன்றி, வட அமெரிக்க AMPS/NAMPS பயன்பாடு இன்னும் பத்தாண்டுகள் (2000 ஆண்டு வரை ) நீடிக்கும் என்று முடிவெடுத்து விட்ட நிலையில், வட அமெரிக்காவுக்கான இலக்கமுறை செல்லுலார் தரநிலைகள், மிகு திறன்கொண்டதாகவும், AMPS/NAMPS அமைப்புகளுடன் இணக்கமாக இயங்கக் கூடியதாகவும் இருப்பதோடு இருவேறு தொழில் நுட்பங்களைப் (TDMA அல்லது CDMA) பயன்படுத்தும் இலக்க முறை தர நிலைகளாகவும் இருக்கவேண்டும் என்று Telecommunications Industries Association (TIA) 1988-ல் உறுதிபடக் கூறியது.  

அமெரிக்காவில் TDMA அடிப்படையில் உருவான D-AMPS தரநிலை 1992-விலும், CDMA  அடிப்படையில் உருவான IS-95A தரநிலை 1995யிலும் வணிகப் பயன்பாட்டைத் துவக்கின. உலக நாடுகள் TDMA அல்லது CDMA தொழில் நுட்பங்களில் ஏதோ ஒன்றைத் தழுவின.  தர நிலைகளுக்கிடையே இணக்கம் இல்லாது போனதால், உலகம் சுற்றும் பயனர்கள் தம் தேவைக்கேற்ப இரு அலைப்பட்டை அல்லது  மூன்று அலைப்பட்டை மொபைல்களைப்  பயன்படுத்தி வந்தனர். அதையும் தொல்லையாகக் கருதாமல்  ஒரு இனிய குழப்பமாகவே கருதினர்.  

உலக வாசிகள் அனைவரும் சொந்த அலைபேசி மூலம் எந்த நேரத்திலும்  எந்த உலகளாவிய அலைபேசி அல்லது தரைவகை தொலைபேசிக்கு  மொபைல் தொடர்பாடல் கொள்ளும் அளவுக்கு  எங்கும் நிறைந்து மாபெரும் வளர்ச்சி கண்டதும் தரை வழித் தொலைபேசிக்கு  நிகராக செல்லுலார் நெட்ஒர்க்கின்  தகவல் பரிமாற்ற சேவை (data service) எழுந்ததும் இந்த தசாப்தத்தில் தான். 

பல் அணுகு (Multiple Access ) தொழில் நுட்பங்கள்: 

மொபைல் பிணையங்களில் (networks ) பரப்பு ஊடகப் (transmission medium ) பயன்பாட்டை உச்ச நிலைக்கு கொண்டு செல்லும் உத்தியே பல் அணுகுத் தொழில் நுட்பம் என்று அழைக்கப் படுகிறது. இதன் மூலம் மொபைல் பயனர்கள் ஒதுக்கீடு செய்யப் பட்ட அலைக்கற்றையை மிக அதிகப் பயனுள்ள முறையில் பகிர்கிறார்கள். 

ரேடியோ நிற மாலை பெருமதிப்புள்ள அரிதான இயற்கை வளம்.  பெரு நிலப் பரப்பில் மொபைல் அழைப்புகளின் செறிவை மேம்படுத்த முறையான பகிர்தல் அவசியம். எனவே இதன் பயன்பாட்டில்  பல் அணுகு உத்திகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போதைய  இலக்கமுறை செல்லுலார் மொபைல் அமைப்புகளில் இரண்டு  வகையான பல் அணுகு உத்திகள் பயன் படுத்தப் பட்டு  வருகின்றன.

  • காலப் பங்கீடு பல் அணுகு  (Time Division Multiple Access-TDMA )-இதில் ஒரு அலைவெண் பல மொபைல் சாதனங்களால் பகிரப் படுகிறது . அதற்காக ஒவ்வொரு ரேடியோ அலைப்பாதையும் பல நேர ஒதுக்கீடுகளாகப் (time slots) பிரிக்கப் படுகிறது. ஒவ்வொரு பயனருக்கும் வேண்டுகோள் அடிப்படையில் அலைவெண் /நேர ஒதுக்கீடு சேர்க்கை விநியோகிக்கப் படுகிறது.
  • குறிமுறைப் பிரிவு பல் அணுகு (Code Division Multiple Access )-இது பரவல் நிறமாலை (spread spectrum) உத்தியைப் பயன்படுத்துகிறது. ஒரு பரவல் குறிமுறையைப் (PNCode–Pseudo-random Noise Code) பயன் படுத்தி அதிக பயனர்களால் அலைக்கற்றையின் பெருந்தொகுதி பகிரப் படுகிறது. வெவ்வேறு பயனர்களிடம் இருந்து வரும் எல்லா PN-code பண்பேற்றம் செய்யப்பட்டக் குறிகைகளும் முழு CDMA அலைப்பாதையின் மீது பரப்புகை செய்யப் படுவதால் இந்த தொழில் நுட்பம் மிக ஆற்றலுடையதாகக் கருதப் படுகிறது.   

1991-ல் பயன்பாட்டுக்கு வந்த ஐரோப்பிய இலக்கமுறை  செல்லுலார் அமைப்பான GSM, வழக்காறு சார்ந்த TDMA உத்தியைத்  தேர்ந்தெடுத்துக் கொண்டது.  அமெரிக்காவைப் பொருத்தவரை, புதிதாக வடிவமைக்கப் படுகின்ற செல்லுலார் இலக்கமுறை அமைப்புகள் பழைய ஒப்புமை முறை அமைப்புகளை விட 10 மடங்கு அதிக அழைப்புகள் கையாளும் திறன் கொண்டதாக இருக்கவேண்டுமென்பது CTIA (Cellular Telecommunications Industry Association) உறுதிசெய்துள்ள இலக்குகளில் ஒன்று. 

TDMA தொழில் நுட்ப இலக்கமுறை அமைப்புகளால் 3 மடங்கு அதிக திறன் மட்டுமே கொடுக்க முடிந்தது. 1990-ல் Qualcomm என்னும் அமெரிக்க கம்பெனி ஒப்புமை முறை அமைப்பை விட 20 மடங்கு அழைப்புகள் கையாளும் திறன் கொண்ட CDMA அடிப்படையில் உருவான செல்லுலார் அமைப்பை உருவாக்கி செயல் விளக்கம் அளித்தது.  

1992-ல் CTIA மற்றும் TIA வின் வேண்டுகோளின் படி, Qualcomm  தர நிலைப் படுத்துதலைத் தொடங்கியது. இவ்வாறு CDMA தொழில் நுட்ப அடிப்படையில் உருவான IS-95 தர நிலை அமைப்பு, 1995-ல் சீராய்வு மற்றும் மேம்படுதலுக்குப் பின் IS-95A என்ற மறு பதிப்பாக வெளியிடப் பட்டது.1999-ல் வெளியான IS-95B, CDMA மொபைல் போன்களில் 115kbps தரவு பரிமாற்ற வசதியை உருவாக்கியது. 

2G இலக்கமுறை செல்லுலார் தர நிலைகள்(standards):

2G இலக்க முறை  செல்லுலார் தர நிலைகளைப் பொருத்தவரை,  ஒவ்வொரு பெரிய பொருளாதாரமும் தனித்தனி தர நிலைகளை உருவாக்கிக் கொண்டன.  உலகின் பெரும்பாலான மொபைல் செல்லுலார் இலக்கமுறை 2G அமைப்புகள் கீழ்க்கண்ட  தரநிலைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றன:

  • ஐரோப்பாவின் GSM 900, GSM1800; TDMA தொழில்நுட்பம்
  • வட அமெரிக்காவின் IS-95A CDMA  சிஸ்டம் ; CDMA தொழில் நுட்பம்
  • வட அமெரிக்காவின் IS-136(D-AMPS) சிஸ்டம் ;TDMA தொழில் நுட்பம்
  •  ஜப்பானின் PDC (Personal Digital Cellular) சிஸ்டம் ; TDMA தொழில் நுட்பம்

தர நிலை  உருவாக்கலின் அணுகுமுறைகளும்  மைல்கற்களும் பின்  வரும் பத்திகளில் விவரிக்கப் படுகின்றன.

GSM தர நிலை- ஐரோப்பிய நாடுகளின் கூட்டு சாதனை:  

1980களின் ஆரம்பத்தில் (அதாவது 1G ஆரம்பத்தில்) பற்பல ஐரோப்பிய மொபைல் டெலிபோன் கம்பெனிகள் NMT 450, TACS தர நிலை ஒப்புமுறை மொபைல் அமைப்புகளை நிறுவிக் கொண்டிருந்தன. அடுத்த (2G) தலைமுறையில் ஐரோப்பிய மொபைல் அமைப்புகள் அனைத்தும் இலக்கமுறை அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்று கொள்கை அளவில் முடிவு எடுத்து அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின. அவற்றின் விவரங்கள்:

1982-ல்  CEPT (Confederation of European Post and Telecommunications), அனைத்து ஐரோப்பிய (PAN -European ) மொபைல் நுட்பத்தை வடிவமைக்க Groupe Speciale Mobile (GSM) என்ற உட்குழுவை  அமைத்தது. ஐரோப்பிய நாடுகளில் அப்போது நிறுவப்பட்டிருந்த ஒப்புமை வகை மொபைல் அமைப்புகள்  வெவ்வேறு அலைப் பட்டைகளில்  இணக்கமற்றும் பிற  குறைபாடுகளோடும்  இயங்கிக் கொண்டிருந்தன. ஒப்புமை முறை  அமைப்பை இலக்க முறைக்கு மாற்றுவதோடு ரேடியோ அணுக்கத் தொழில் நுட்பம் மற்றும் அலைவரிசை ஒருமைப்பாட்டைக் கொண்டுவந்து  ஒரே சீரான அனைத்து ஐரோப்பிய அமைப்பை வடிவமைப்பது உட்குழுவுக்கு நியமித்த பணிகள்.

>1984-பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள்,GSM-க்கான இணை உருவாக்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

>1985-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய ஆணையம் (EC ), GSM திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தது .  

>1986- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் GSM திட்டத்தில் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார்கள். 900MHz அலைப்பட்டையை GSM திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தை யூரோப்பிய ஆணையம் எடுத்துரைத்தது. EC-யின் தொலைத்தொடர்பு ஆராய்வுக் குழு அதற்கு ஒப்புதல் அளித்தது.

GSM தரநிலைகள் உருவாக்கப் பணிகளுக்கு ஆதரவளிக்கவும் ஆராய்ச்சித் தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, U. K ஆகிய நாடுகள் நான்கு தரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

யூரோப் ஒன்றிய உறுப்பு நாடுகளில் தயாரிக்கப் பட்ட வெவ்வேறு இலக்கமுறை ரேடியோ பரப்புகைத் திட்டங்கள் மற்றும் வெவ்வேறு பேச்சு இருவழி குறிமுறை மாற்றி (codec-கோடர் டிகோடர்)கள் அவர்களாலேயே சோதனை செய்யப்பட்டு சோதனை முடிவுகள் ஒப்பீட்டு சீர் தூக்கலுக்காக (comparative evaluation ) பாரிஸ் நகரிலுள்ள CEPT-GSM மையத்துக்கு அனுப்பப் பட்டன.

குழுவின்  பரிந்துரைகளை பதிப்பிக்கவும் மற்றும் இற்றைப்படுத்தவும் (update) நிலையான மையக் குழு அமைக்கப் பட்டது.

>1987- முன்மாதிரிகள்(prototype) மதிப்பிடப் பட்டபின் முக்கிய ரேடியோ பரப்புகை உத்திகள் தேர்வு செய்யப்பட்டன.

பிப்ரவரி மாதத்தில் GSM தர நிலையின் அடிப்படைக் கூறளவுகள் (parameters) ஒப்புதல் பெற்றன.

செப்டம்பரில் GSM நிறுவல் (deployment) உறுதியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப் பட்டு 13 உறுப்பு நாடுகளின் 15 உறுப்பினர்களால் கோபென்ஹகேன்-ல் கையெழுத்திடப்பட்டது.

>1988 உள்கட்டமைப்பு ஒப்பந்தப் புள்ளி கோருதலுக்குத் தேவையான GSM விரிவான விவரக் கூற்றின் (detailed specification) முதல் தொகுதி நிறைவடைந்தது.

ஒரே நேரத்தில் 10 GSM நெட் ஒர்க் ஆபரேட்டர்கள் நெட்ஒர்க் ஒப்பந்த அழைப்புகளை வெளியிட்டனர். அவை அனைத்தும் பின்னர் அதே ஆண்டிலேயே முடிவு செய்யப் பட்டன.

>மொபைல் சிறப்புக் குழு, GSM தர நிலையை ஒரு பன்னாட்டு ஒப்புதல் பெற்ற இலக்கமுறை செல்லுலார் தொலை பேசி தர நிலையென அறிவித்தது.

>1990-ல் GSM 900 முதல் நிலை  (phase1) விவரக் கூற்றுகள் (specifications)

 நிலைப்படுத்தப் பட்டன(frozen).

> 1991-ல் GSM தரநிலையை 1800MHz அலைவெண் பட்டைக்கு  இசைவாக்கும் பணிகள் துவங்கின. புதிய GSM தரநிலை  DCS 1800 எனப் பெயரிடப் பட்டது. 

1991-முதல் 2G GSM செல்லுலார் மொபைல் (நிலை 1) சோதனை ஓட்டம்.

டிசம்பர் 1991-ல் உலகின் முதல் 2G  GSM செல்லுலார் மொபைல் அமைப்பு பின்லாந்தில் (Finland) வணிகப் பயன்பாட்டுக்கு வந்து விட்டது.  

>1992-ல்  ஐரோப்பாவின் பெரிய மொபைல் தொலைபேசிக் கம்பெனிகள் அனைத்தும் GSM 900-ன் வணிகப் பயன்பாட்டைத் துவங்கி விட்டன.

>1993-ல் முதல் 1800 MHz GSM மொபைல் அமைப்பு (DCS 1800), UK யில் வணிகப் பயன்பாட்டுக்கு வந்தது. அதே ஆண்டில் ஆஸ்திரேலியா முதல் GSM நெட்ஒர்க் பயன்பாட்டுக்கு வந்தது. இதுவே யூரோப் புக்கு வெளியே பயன்பாட்டுக்கு வந்த முதல் GSM நெட்ஒர்க்.

>1995-ல் fax ,SMS மற்றும் தரவு சேவைகள் வணிகப் பயன்பாடு துவங்கின.

வட அமெரிக்காவின் முதல் 1900MHz GSM நெட்ஒர்க் பயன்பாட்டுக்கு வந்தது. உலகளாவிய GSM பயனர்கள் 10மில்லியனைத் தாண்டியது.

>1996-ல்  ப்ரீபெய்டு GSM SIM அட்டைகள் அறிமுகப் படுத்தப் பட்டன   

>1998-ல் உலகளாவிய மொபைல் பயனர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்தது. 

அமெரிக்க  2 G தரநிலைகள் உருவாக்கம் : 

1988-ல் வட அமெரிக்காவின் TIA(Telecommunications Industry Association ) குழு

இயற்றிய அணுகுமுறை ஆவணம் இலக்கமுறை பண்பேற்றம் (modulation) இலக்கமுறை குரல் சுருக்கம் (compression) ஆகியவற்றை இணைத்த TDMA தொழில் நுட்பத்தை பரிந்துரைத்தது. அத்துடன் CTIA(Cellular Telecommunications Industry Association ) குழு செயல்திறன் தேவைகளைப்   பரிந்துரைத்தது. 

அவையாவன: புதிய அமைப்பு முன்னோடியான ஒப்புமை முறை AMPS அமைப்பை விட 10 மடங்கு கொள்திறன் கொண்டதாகவும், ஒப்புமை அமைப்புடன் இணக்கமாக செயல் படக் கூடியதாகவும், ஒப்புமையில் இருந்து இலக்கமுறைக்கு நிலை பெயர்வு எளிதானதாகவும் இருக்கவேண்டும். மற்றும்  அலைபேசி பழுது பார்ப்பு காலம் குறைவாகவும், இரட்டைப் பயன்பாடு (analog -digital use) அலைபேசிகள் எனில் அவை குறைந்த விலை கொண்டதாகவும் இருக்கவேண்டும். மோசடிப்பயன்பாட்டிலிருந்தும் ஒட்டுக்கேட்பிலிருந்தும் பாதுகாப்பு, சிறந்த குரல் பரப்புகை ஆகியனவும் அவசியம் . பல புதிய மற்றும் மேம்பட்ட சேவைகள் தொடங்கப் பட வேண்டும். 

புதிய இலக்கமுறை தர நிலைகளின் (standards) நோக்கம், ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றையின் கொள்திறனை உயர்த்துவது மற்றும் பல்வேறு புதிய சேவைகளை உருவாக்கி செயல் திறனை மேம்படுத்துவது. அது மட்டுமல்லாமல் இணக்கம் இல்லாத நான்கு தர நிலைகளுடன் (AMPS, NAMPS, TDMA, CDMA ஆகியவை ) இணைந்து செயலாற்றவும் வேண்டும். மேலும் தீவிர அமைப்புக் கோளாறுகள் (System failures) நேரும் போது AMPS-ல் பின் சார்தலுக்காக (fall back), இரட்டைப் பாணி (dualmode) அலைபேசி வடிவமைக்கப் படவேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ள  ஆர்வம் நிரம்பிய அணுகு முறையைக் கருத்தில் கொண்டு  அமெரிக்காவில் கீழ்காணும் இரு இலக்கமுறை தர நிலைகள் உருவாயின.       

  1. TIA-IS-136 : TDMA தொழில் நுட்ப அடிப்படையில் முதலில்  அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தரநிலை IS-54. அது TDMA அடிப்படையில் உருவான இலக்கமுறை செல்லுலார் தரநிலை, ஒப்புமை முறை அமைப்புகள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்த சூழலில் அவற்றுடன் இணக்கமாக செயல்படவேண்டிய விதத்தில் dual mode அலைபேசி மற்றும் அமைப்புகளுக்கிடை (inter system) இயக்கம் (ரோமிங்) தேவைகளைக்   கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்ட தர நிலை. இந்த தரநிலை செல்லுலார் மொபைல் அமைப்புகள் வட /தென்அமெரிக்காவில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள AMPS (ஒப்புமை) அமைப்புகளுடன் இணைந்து செயல்படுமாறு நடைமுறைப் படுத்தப்பட்டன. பின்னர் இது 1992-ல்  இரட்டைப் பாணி (dual mode) IS-54B தரநிலையாக மேம்படுத்தப் பட்டு, D-AMPS என்ற பெயரில் 1993-ல் வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, பிரேசில், கென்யா, இஸ்ரேல் மற்றும் சில நாடுகளில் வணிகப் பயன்பாட்டைத் தொடங்கியது. 1994 இறுதியில், IS-54B, இலக்கமுறை கட்டுப்பாட்டுப் பாதை (DCC-Digital Control Channel) நிறுவல் மற்றும் குறுஞ்செய்தி, circuit-switched  தரவு வசதிகள் ஆகியவற்றால் செழுமைப்படுத்தப் பட்டபின் TIA-IS -136 என்ற பெயரில் அழைக்கப் பட்டது.  தர நிலையின்  மேம்பாடுகளின் அடிப்படையில் வட அமெரிக்க TDMA மொபைல் அமைப்புகள் IS-136 என்றோ D-AMPS (Digital AMPS)என்றோ குறிப்பிடப் படுகின்றன.
  1. அமெரிக்காவின்  TDMA  தர நிலைகளுடன் ஆற்றல் அளவு மற்றும் விலையில்  போட்டியிடும் விதமாக, CDMA தொழில் நுட்ப அடிப்படையில்   IS-95 தர  நிலையை 1993 யிலும், அதன் மதிப்பு கூட்டிய, சரிபார்க்கப்பட்ட பதிப்பான IS -95A தரநிலையை 1995 யிலும் Qualcomm கம்பெனி மூலம் TIA உருவாக்கிக் கொண்டது.  இது வட/ தென் அமெரிக்கா மற்றும் ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளில் வணிக ரீதியான பயன்பாட்டில் இருந்தது.

ஜப்பானின் 2G  PDC (Personal Digital செல்லுலார் ) தரநிலை  :

ஏப்ரல் 1991-ல் ஜப்பான் ரேடியோ அமைப்புகளின்  Research and Development சென்டர்,   தனி நபர் இலக்கமுறை செல்லுலார்  என்ற தரநிலையை சுய  பயன்பாட்டுக்காகவே  உருவாக்கிச் செயற்படுத்தினர். TDMA அடிப்படையில் அமைந்த அது, வட அமெரிக்காவின் D-AMPS தரநிலையுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டிருந்தது. வளி இடைமுகத்தைப் (Air Interface) பொறுத்தவரை PDC தரநிலை சில முக்கிய பண்புக் கூறுகளில் GSM -ஐ விட உயர்ந்திருந்தது என டிசைனர்கள் கருதுகிறார்கள். ஆனால் PDC அமைப்புகள் 2000க்குள் செயல் திறன் அளவில் முழு நிறைவு நிலையை (saturation) அடைந்து விடும் எனக் கருதப் பட்டதால், முன்கூட்டியே  அடுத்த தலை முறை (3G)  வருகையை விரைவு படுத்த  ITU -விடம் வேண்டுகோள் விடுக்கப் பட்டது.

GSM, CDMA அமைப்புகளின் முக்கிய தனித்துவங்கள் 

GSM-ல் பயனர் தகவல்கள் SIM(Subscriber Identification Module ) அட்டையில் பதிவு செய்யப் பட்டுள்ளன .அலைபேசியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சிம் அட்டையை கழற்றி புது அலைபேசியில் சிம் அமரும் ஸ்லாட்டில் பொருத்திப் பயன் படுத்திக் கொள்ளலாம். சிம் பயன்பாடு மட்டுமல்லாமல்,  GSM அமைப்பில்  சாதனங்களின் அடையாள அட்டவணை (Equipment Identity Register ) பராமரிக்கப் பட்டு, அதன் மூலம்  அலைபேசிகளில் பொறிக்கப் பட்டுள்ள தனிப்பட்ட IMEI (International Mobile Equipment Identity ) சரி பார்க்கப் படுகின்றன. வகை ஒப்புதல் (type approval) பெறாத, பழுதான அல்லது திருடப்பட்ட அலைபேசிகளுக்கு சேவை மறுக்கப் படுகிறது. 

CDMA அமைப்பில் அலைபேசியில்  சிம் அட்டை பயன்பாடு இல்லை. CDMA, அலைபேசி சார்ந்த தரநிலை. இதில் ஒவ்வொரு அலைபேசியும்  போன் நம்பர் இணைந்ததாகவே வழங்கப் படுகிறது.  அலைபேசியை மாற்றவேண்டுமானால் பிணைய இயக்குநர் மூலம்   பழைய அலைபேசியை செயலிழக்க செய்து புதிய அலைபேசியை செயற்படுத்திக் கொள்ள வேண்டும். 

குறுஞ்செய்தி சேவை (Short Message Service -SMS):

GSM தொழில் நுட்பம்  இலக்கமுறைப் பரப்புகை  மூலம் அலைபேசிக்  குரல் பேச்சுகளை  மேம்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனவே பேச்சொலி தரமுயர்ந்து இருப்பதில் வியப்பேதும் இல்லை.  2G க்குள் முதன்முதலாக தொடங்கப்பட்ட தரவுச் சேவையான குறுஞ்செய்தி சேவை,வெளி சாதனங்களின் பயன்பாடு ஏதும் இல்லாமல், தனித்துவமான யோசனையால் உருவான கில்லர்(killer) பயன்பாடு. அலைபேசி அழைப்புகளின் கட்டுப்பாட்டுக் குறிகைகள்(control signal ) செல்லும் சமிக்ஞைத்  தடவழிகளை (signaling paths), சமிக்ஞை செய்திகள் இல்லாத நேரங்களில் குறுஞ்செய்தி அனுப்பப்  பயன்படுத்திக் கொள்வது தான் அந்த ஏற்பாடு. 1992-ல் முதல் குறுஞ்செய்தி அனுப்பப் பட்டது. தொழில் நுட்பக் காரணங்களால்  குறுஞ்செய்தியும் 160 க்குள் எண்ணெழுத்துகள்(alphanumeric characters ) கொண்டதாக    இருக்கவேண்டும் என  விதிக்கப் பட்டது. குறுஞ்செய்தி சேவை  பயனர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. 

வட அமெரிக்க IS-136 TDMA தர நிலைக்கு மேம்படுத்தப் பட்ட மொபைல் அமைப்புகளில் 1994- இறுதியில் குறுஞ்செய்தி சேவை தொடங்கியது.

மேம்படுத்தப்பட்ட IS-95A CDMA தரநிலை அமைப்புகளில் குறுஞ்செய்தி சேவை 1995-ல் தொடங்கியது.

GSM நிலை 2 (phase 2) :

GSM தர நிலையின் மூல வடிவம், தரவு சேவை அதிக பட்சம் 9.6 kbps  வேகத்தில் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது. தரவுகள் TDMA நேர ஒதுக்கீடுகளில் (time slot) அனுப்பப் பட்டன. அதைக் கொண்டு மின்னஞ்சல் மற்றும் சில இன்டர்நெட் சேவைகளை மட்டுமே அணுக முடிந்தது. அடுத்த சில ஆண்டுகளில் திறன் உயர்த்தவும்  மதிப்புக்கூட்டு சேவைகளை வழங்கவும் GSM தர நிலையில் பற்பல மேம்பாடுகள் செய்யப் பட்டன.  அழைப்புக் கட்டண  அறிவிப்பு, அழைப்பு விடுத்தவர்  போன் நம்பர் கண்டறிதல் மற்றும் அடைத்த பயனர் குழு (CUG-Closed User Group ) ஆகியவை GSM இரண்டாம் நிலையில் அறிமுகப் படுத்தப்பட்ட  அலைபேசி சேவைகள். மேலும்   900MHz அலைப்பட்டை நிறை செறிவு(saturation) அடைந்துவிட்ட GSM அமைப்புகளுக்கு 1800MHz அலைப்பட்டையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப் பட்டது. பயனர்கள் dual-band அலைபேசிகளைப் பயன்படுத்தினார்கள்.

GSM நிலை 2+ (GSM Phase 2+) :

புதிய தரவு சேவைகளை அறிமுகப் படுத்துவதற்காகவும்,  குரல் நயம் மேம்படவும் GSM நிலை 2+, அப்போதைய GSM தரநிலைக்கு 90க்கும் அதிகமான மேம்பாடுகளைப் பரிந்துரைத்தது.  அவற்றில் முக்கியமானவை:

  1. தரை வழித் தொலை பேசியின் குரல் நயத்துக்கு நிகராக அலைபேசிப் பேச்சு மேம்பாடு: 13kbps இருவழிக் குறிமுறை மாற்றிகளுக்கு பதிலாக 6.5 kbps மாற்றிகளைப் பயன்படுத்துதலின் மூலம் செல்லுலார் ஆபரேட்டர்கள் தம் தேவைக்கேற்ப பேச்சு மேம்பாட்டையோ  அல்லது அமைப்பின் ஆற்றல் அளவில் உயர்வையோ  தெரிவு செய்து கொள்ளலாம்
  2. மேம்பட்ட தரவு சேவைகள்: GSM அமைப்பில் எளிய மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் உருவாக்கக் கூடிய அதிவேக தரவு சேவைகளாக HSCSD (High Speed Circuit Switched Data) மற்றும் GPRS(General Packet Radio Service) ஆகியவை  நிலை 2+ ல் முன்மொழியப் பட்டிருந்தன. 

2G என்றாலே முழுக்க முழுக்க இலக்கமுறை எனக் கருதுவது இயல்பு. 1990-1999 தசாப்தத்தின் இறுதியில் அநேகமாக எல்லார் கைக்கும் அலைபேசி வந்து விட்டது.  1996-ல் தரை வழித் தொலைபேசிகளில் பயனர் அணுக்க (dialup ) இணைய சேவையின் வணிகப் பயன்பாட்டை இணையச் சேவையாளர்கள்(Internet Service Providers) துவங்கினர். 2004-ல்  தொலை பேசி இணைப்பில் ADSL  இணக்கியைப் (modem) பொருத்தி  இணையத்துடன் அதிவேக(2 Mbps)  அகலப் பட்டை (Broadband) அணுக்க வசதியும் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் முழுதும் இலக்கமுறை குறிகைகளால் இயங்கும்  GSM அமைப்பில் அதிக பட்சம்  9.6 kbps வேகத்தில்தான்  தரவுகளை அனுப்ப முடிந்தது. பயனர்கள் அலைபேசியில்   Dial-up வேகத்திலாவது இன்டர்நெட் அணுக்கம் தேவையெனக் கருதினர். GSM நிலை 2+-ல்  மேற்கொள்ளப்பட்ட படிப்படியான மேம்பாடுகள், தரவு பரப்புகை வேகத்தை  கிட்டத்தட்ட 3G யைத் தொடும் அளவுக்கு கொண்டு சென்றன. அவையாவன: .

HSCSD (High Speed Circuit Switched Data):

 அதிவேக circuit-Switched தரவு சேவை என்ற GSM நிலை 2+ மேம்பாட்டில், செயல் திறன் மிக்க குறியிடல் உத்திகளைப் பயன்படுத்தி ஒரு நேர ஒதுக்கீட்டில் 14.4 kbps வேக தரவு மாற்றல் செய்யவும்,  நான்கு 14.4 kbps அலைப்பாதைகளை ஒருங்கிணைத்து 57.6 kbps வேக தரவு மாற்றல் செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டது. இது தரை வழித் தொலைபேசியின் dial-up க்கு நிகரானது.

2.5G

GSM phase2+ல் செயல் படுத்தப் பட்ட மேம்பாடு இது. இதில்  circuit-switched ஆடியோ தளத்துடன் packet-switched தளமும் இணைந்து செயல்படுவதால்  இது 2G யின் நீட்சியாக, அதாவது 2G க்கும் 3G க்கும் இடைப்பட்ட மொபைல் சேவையாகக் கருதப்பட்டு  2.5 G எனப் பெயரிடப் பட்டது. நடைமுறையில் உள்ள GSM உள்கட்டமைப்பின் மேலடுக்கில் packet மென்பொருள் கட்டுமானம் அமைந்திருப்பதால் இது GPRS (General Packet Radio Service) எனப்படுகிறது. GSM TDMA கட்டமைப்பில் 1 முதல் 8 நேர ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி முறையே 14.4 kbps முதல் 115.2 kbps வரை தரவு பரப்புகை வேகங்களில் GPRS செயல் படுகிறது. அலைக்கற்றைப் பயன்பாட்டைப் பொருத்தவரை HSCSD யை விட   GPRS அதிக திறனுள்ள தரவு சேவை. இதுவே 3G படிமலர்ச்சிக்கான சரியான பாதையும் கூட.

2.75G

EDGE பிணையங்களுக்கு (Enhanced Data Rate ffor GSM Evolution), GPRS பிணையங்களே வழி வகுத்தன. இது 3G ரேடியோ தொழில் நுட்பத்துக்கு சற்று முந்திய பதிப்பு. EGPRS என்றும் 2.75G என்ற பெயரிலும் அறியப் படுகிறது. EDGE தொழில் நுட்பம் முதன் முதலாக 2003-ல் அமெரிக்க GSM பிணையங்களில் AT&T டெலிபோன் கம்பெனியால் பயன்படுத்தப் பட்டது. EDGE தொழில் நுட்பம் மூலமாக தரவு வேகங்கள் 384 kbps வரை எளிதில் எட்டிவிட முடியும். இந்த தரவு வேக அதிகரிப்பு GPRS- ல் கிடைத்ததை விட கணிசமானதாக (கிட்டத்தட்ட  3G ஆரம்ப அளவாக) இருந்ததால் 2.9G எனவும் சொல்லப் பட்டது. அத்துடன் EDGE பிணையம் நடைமுறையில் உள்ள GSM விவரக் கூற்றுகளின் வரையறைக்குள்ளேயே அறிமுகமாகி இருந்ததால், பின்னோக்கிய இணக்கமும் (backward compatibility) கொண்டிருந்தது.

 CDMA அமைப்புகளில் தரவு வேகம் 

CDMA தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இரு மொபைல் தர நிலைகளான IS-95A &IS-95B முறையே 14.4 kbps & 115 kbps ஆகிய மிதமான தரவு வேகங்களைக் கொடுத்தன. 2.5G ,2.75G, 2.9G ஆகிய படிநிலைகள் , CDMA -வின் படிமலர்ச்சிப் (evolutionary ) பாதையில்  இடம் பெறவில்லை.   

முடிவுரை:

கடந்த  நூறு ஆண்டுகளில், பயனரின் உற்பத்தித் திறன் பெருக்கம், பயனர் அபிமானம், அதிவேக அற்புத படிமலர்ச்சி (evolution ) ஆகிய காரணிகளால் உயர்வாக வருணிக்கப் படும் மொபைல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துக்கு நிகரான வளர்ச்சி கண்ட பிற தொழில் நுட்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  2G, குறிப்பாக GSM, மக்களின் பேராதரவைப் பெற்றது. 2001-ல் முதல் 3G அமைப்பு  பயன்பாட்டுக்கு வந்து விட்ட பின்னரும் கூட, 2G இணைப்புகள் பெருகி வந்தன. 2005 யில் இணைப்புகள்  2 பில்லியனைக் கடந்தன. 1946-ல் ஆரம்பித்த மொபைல் போன் இயக்கத்தில் பயனர் கவனம் மொபைல் தரவு சேவை பக்கம் திரும்பியது அண்மைய 10-15 ஆண்டுகளுக்குள்  தான்.  2G-க்கு அடுத்து வந்த தலைமுறைகளிலும் பயனர்களின் நாட்டம் Mbps, Gbps என்ற அதிவேக தரவு சேவையாகத் தான் இருந்து வருகிறது.  இன்றும் 2G மொபைல் அமைப்புகள் சாதாரணர்களின்  அடிப்படை மொபைல் தொடர்பாடல் தேவைகளை நிறைவு செய்து வருவதால் இந்தியாவில் இன்னும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தொழில் நுட்பச் சொற்கள் :

Encryption:தகவலை ஒரு ரகசிய குறிமுறையில் (code) மாற்றி அதன் மூலம் தகவலின் உண்மையான அர்த்தம் விளங்காமல் செய்வது.

Authentication :பயனரின் அடையாளம் கண்டறியும் செயல் முறை

Integrated circuit: தோசைத் துண்டு அளவில் சிலிகான் என்னும் அலோகப் பொருளால் உருவான பல்லாயிரக் கணக்கான டிரான்சிஸ்டர், ரெசிஸ்டர் மற்றும் கேபாசிட்டர்களை உள்ளடக்கி அம்பிலிஃபயிர், டைமர், மைக்ரோப்ரோசசர் போன்ற மின்னணுவியல் சுற்றுகளாக செயல்பட வல்ல ஒரு ஒருங்கிணை சுற்று சில்லு.

Microprocessor: டிஜிட்டல் கம்ப்யூட்டரின் மையச் செயலகமாக செயல்படத் தேவையான எண்கணிதம், தர்க்கம், கட்டுப்பாடு செயலாற்றிகளின் மின்சுற்றுக் கூட்டமைப்பாக இருக்கும் ஒரு வகை குட்டி மின்னணுவியல் சாதனம்.

1MHz: 1Mega cycles per second -1 வினாடியில் ஒரு மில்லியன் சுற்றுகள்

Kbps: kilo bits per second- 1 விநாடியில் ஆயிரம் இரும இலக்கம் (bit) என்ற வேக தரவு மாற்றம். இரும இலக்கங்கள் = 0&1

Mbps: Mega bits per second 

Gbps: Giga bits per sec (Giga=10^9)

Codec : coder-decoder-ன் சுருக்கம். குறியாக்கி-குறிஅவிழ்ப்பி என்று பொருள்படும்.  இது ஒரு வினைச்சரம். ஆடியோ அல்லது வீடியோ போன்ற வடிவங்களில் உள்ள தரவுகளைத் தொடர் துடிப்புகளாக இலக்க வடிவத்தில் தகவலாகக் குறியாக்கம் செய்வதற்கும் குறியாக்கம் செய்யப்பட்ட தரவுகளை குறிவிலக்கம் செய்வதற்கும் இந்த வினைச்சரம் பயன்படுத்தப் படுகிறது.

Circuit switching: பிணையங்களின் முனைகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்திய பின்னர் தரவுகளை அனுப்புதல்

Packet Switching : பிணையங்களில் தரவுகள் பொதிகளாக்கப் பட்ட பின்னரே அனுப்ப ஆரம்பித்தல். தொடர்பு ஏற்படுத்தாமல் தரவு மாற்றல் வழி.

Digital Signal Processing (DSP): மெய்யுலகின் ஒப்புமை குறிகைகளை (எ. கா : பேச்சொலி) இலக்கமுறைக்கு மாற்றி பகுப்பாய்வது. குறிகைகள் நம்பர்களாக சுருங்கிவிட்டபின் அவற்றின் கூறுகளை பிரித்து வைப்பதும் திறமையாகக் கையாள்வதும் எளிதாகி விடும். டிஜிட்டல் ப்ரோசசிங் சிப் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக சிறப்பு கவனம் செலுத்தி தயாரிக்கப் படும் நுண் செயலி சிப்.

 இது  இலக்க முறை தொலை தொடர்புக் கூறுகள் உருவாக்கம், வடிவமைப்பு  தயாரிப்பு மற்றும் தொழில் நுட்ப உதவிகள் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்க   . CDMA2000, TD-SCDMA மற்றும் WCDMA ஆகிய மொபைல் தொடர்பாடல் தர நிலைகள் ஆகியவை இந்த கம்பெனியின் அறிவுசார் சொத்துக்கள். அதற்கான காப்புரிமம் பெற்றுள்ளது.

***

Series Navigation<< மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G)மொபைல்  தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.