(வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

பைஷாக் பண்டிகை சமயத்தில், கங்காசரண் சந்தையில் சில விசித்திரமான மாறுதல்களைப் பார்த்தான். ஒவ்வொரு பொருளும் விலையேறிக்கொண்டே போனது. எல்லாவற்றையும் விட, ஒரு முக்கியமான நிகழ்ச்சி, அவனை மட்டுமல்ல மற்ற எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கியது.
அது ரொம்ப சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது. யாஸின் பிஸ்வாஸ் ஒரு மளிகைக்கடை வைத்திருந்தான். அதில் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை. பலரும் வெறுங்கையோடு திரும்பிப் போனார்கள்.
கங்காசரணால் நம்பமுடியவில்லை. அவனுக்கும் மண்ணெண்ணெய் தேவைப்பட்டது. யாஸினின் அண்ணன் யாகுப் சொன்னான், “எண்ணெய் இல்லை பண்டிட் மஷாய்.”
”கொஞ்சங்கூட இல்லையா?”
“இல்லை, மஷாய்”
”நீ வாங்கிட்டு வரலையா?”
“இல்லை மஷாய், கிடைக்கவே இல்ல”
”அது எப்படி? ‘க்ராஸின்’ (கெரோஸின்) எப்படி கிடைக்காமப் போகும்?”
”இந்தவாட்டி எங்களுக்கு சப்ளை கிடைக்கலை. சப்டிவிஷன் ஜட்ஜ்கிட்ட மனு குடுத்தாதான் கிடைக்குமாம்.”
“அதுக்கு எத்தனை நாளாகும்?”
“தெரியல மஷாய்.”
வெறும் பாட்டிலோடு திரும்பிப்போன கங்காசரணை யாகுப் அழைத்து ரகசியமான குரலில், “ஜி, இப்போவே கொஞ்சம் அரிசியும், உப்பும் வாங்கி வச்சுக்கோங்க. அது ரெண்டும் வீட்ல இருந்துட்டா எப்படியாவது சமாளிச்சிடலாம்.”
”ஏன்? அதுவும் சந்தையில கிடைக்காமப் போகப் போகுதா?”
”யாருக்குத் தெரியும் பண்டிட்-மஷாய்? முன்னெச்சரிக்கையா இருந்துக்கறது நல்லதுதானே. நாங்க வியாபாரிங்க, எங்களுக்குப் பல விதமான செய்திகள் வருது.”
கவலையோடு வீட்டுக்கு வந்த கங்காசரண் மனைவியிடம் சொன்னான், “இன்னிக்கு ஒரு விசித்திரமான விஷயத்தைப் பார்த்தேன்.”
”என்ன?”
“காசு இருந்தாலும் சில பொருட்கள வாங்க முடியாது. எந்தக் கடையிலும் கிடைக்கல. அது போக, கடைக்காரன் வேற அரிசியும், உப்பும் வாங்கி வச்சுக்கோங்கறான்.”
அனங்கா, “இவங்க சும்மா சொல்றாங்க. அரிசியும் உப்பும் எப்படி கிடைக்காமப் போகும்? ஜனங்க இதில்லாம இந்த உலகத்துல எப்படி வாழப்போறாங்க! சரி, உங்களுக்கு இப்போ என்ன சாப்பிடத் தரட்டும்?” என்று சுலபமாக மறுத்துப் பேசினாள்.
”என்ன இருந்தாலும் சரி”
அனங்கா பசுநெய்யில் அவல் கலந்து கொண்டு வந்தாள். அதில் சில வெள்ளரிக்காய்களும் நறுக்கிப் போட்டிருந்தாள். ”கொஞ்சம் சக்கரையும் கலக்கட்டுமா?”
”இல்லை, இனிப்பா இருந்தா நல்லா இருக்காது. ஹபு எங்கே?”
”வீட்ல இல்லை. அவனும் பிஸ்வாஸ் மஷாய் பேரனும் நண்பர்களாகீட்டாங்க. அவன்தான் வந்து கூப்பிட்டான். பணக்காரங்களோட நட்பா இருக்கறது நல்லதுதான? கஷ்டகாலத்துல உதவி கிடைக்கும். அதனால்தான் நான் தடுக்கல.”
”சரி, நீயும் வந்து என்னோட சாப்பிடு, வா.”
”அட! ஐயாவுக்கு என்ன இன்னிக்கு திடீர்னு காதல்? நம்ம பையனுக்கே கூடிய சீக்கிரம் கல்யாண வயசாகப்போகுது, ஞாபகம் இருக்கட்டும்.”
இருந்தாலும் கணவனுக்கருகே அமர்ந்து, கொஞ்சம் நெய்யவல் எடுத்துக்கொண்டாள். மெல்ல கணவனைப் பார்த்துக் கேட்டாள், “பாட்சாலா குளம் ஞாபகம் இருக்கா? அது பக்கத்துல உட்கார்ந்து நீங்களும் நானும் ஒரே தட்டுலேர்ந்து அவலும், பழமும் சாப்பிடுவோமே? ஹபு அப்போ இன்னும் சின்னப் பையன்.”
அனங்காவின் புன்னகையும், குறும்பான தோற்றமும் அவளுக்கு இன்னும் வயதாகிவிடவில்லை என்று காட்டியது. சுற்றியிருக்கும் ஆண்களைக் கவரும் சக்தியும் இன்னும் போய்விடவில்லை.
கங்காசரண் பெருங்காதலோடு அவளைப் பார்த்தான்.
பங்குனி மாதத்தின் கடைசியில் ஒருநாள் கங்காசரண் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்புகையில், காம்தேவ்பூரின் துர்கா பண்டிட் திடீரென்று பிரசன்னமாகிப் பிடித்துக் கொண்டார். ”நமஸ்காரம்! எப்படி இருக்கீங்க? நீங்க எங்க கிராமத்துக்கு வந்திருந்தபோது நான் வீட்ல இல்லாமப் போய்ட்டேன், மன்னிக்கனும்.”
”நமஸ்காரம். நான் செளக்கியம். நீங்க எப்படி இருக்கீங்க?”
“ஏதோ இருக்கேன். உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.”
“என்ன விஷயம்?”
“என்னால இனிமேல் அங்கே இருக்க முடியாது. ஆறரை ரூபாய் சம்பளம் பத்தல. அரிசியே ஒரு மணங்கு பத்து ரூபாயாம்.”
கங்காசரணின் மூச்சே நின்றுவிட்டது. ”எங்கே கேள்விப்பட்டீங்க?”
”அம்பிகாப்பூர் சந்தையில. நீங்களே போய்ப்பார்த்துக்கலாம்.”
”கொஞ்சநாள் முன்னாடி நாலு ரூபா இருந்தது. அப்புறம் ஆறாச்சு. இப்போ பத்தா!”
”நான் பொய் சொல்லல. நீங்களே விசாரிச்சுப்பாருங்க.”
”ஒரே தடவைல நாலு ரூபா விலையேறிடிச்சா? அது எப்படி?”
”இதுல இன்னும் கவலையான விஷயம் என்னன்னா, நாம இவ்வளவு குடுத்தாவது இப்போவே வாங்கி வச்சுக்கலன்னா, இதுவும் காணாமப் போயிடுமாம். அதைக் கேள்விப்பட்டப்போ நான் கிட்டத்தட்ட மயக்கமே போட்டுட்டேன்.”
துர்கா பண்டிட்டும், கங்காசரணோடு பேசிக்கொண்டே அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். கங்காசரணின் வீட்டில் கூடம் என்று தனியறை எதுவும் இல்லை. வீட்டு முற்றத்திலேயே பாய் விரித்து அவரை உட்காரவைத்து, ஹூக்காவும் எடுத்து வந்தான். ”மாங்காய் கொண்டு வரட்டுமா? தாகமா இருக்கா?”
”ஓ பேஷா! எல்லாம் உங்க உள்ளங்கையிலேயே இருக்கு. நீங்க இந்த ஊர்ல வசதியா இருக்கீங்க!”
”வேற ஏதாவது வேணுமா?
“வேண்டாம் வேண்டாம், இப்படி உட்காருங்க.”
பல ஊர்க்கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். துர்கா பண்டிட் கிளம்புகிற வழியைக் காணோம். காம்தேவ்பூர் நீண்ட தூரம் என்று கங்காசரணுக்குத் தெரியும். இப்போது கிளம்பினால்தான் உண்டு. அந்திசாயத் தொடங்கிவிட்டது.
இன்னும் கொஞ்சம் நேரமானது. கங்காசரணுக்கு துர்கா பண்டிட்டின் திட்டம் என்னவென்று புரியவில்லை. ஏன் கிளம்பவில்லை? குளிர்காலம். சூரியன் அஸ்தமித்து நீண்ட நேரமாச்சே!
திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவராய், துர்கா பண்டிட் சொன்னார், “ஆம் அப்புறம், நான் இன்னிக்கு ராத்திரி இங்கேயே சாப்பிட்டிடறேன்.”
“ஓ அப்படியே செய்ங்க, வீட்டுக்காரிக்கிட்ட சொல்லிட்டு வரேன்.”
அனங்கா உள்ளே அரிசி வறுத்துக் கொண்டிருந்தாள். “அரிசி வறுத்திருக்கேன். நீங்க ரெண்டு பேரும் உப்பும், எண்ணெய்யும் கலந்து சாப்பிடலாம்.”
”அவர் ராத்திரி சாப்பாடும் இங்கேயே சாப்பிடப் போறாராம்.”
“நீங்க சாப்பிடச் சொல்லி சொன்னீங்களா?”
“இல்லை, அவரே சொன்னார். நானா எதுவும் சொல்லிக்கல.”
“அது பரவாயில்லை. சாதத்துக்கு வேற என்ன தர்றது? நீங்களும் ஹபுவும் ஏற்கனவே பாலைக் காலி பண்ணீட்டிங்க.”
துர்கா பண்டிட் மிகவும் கவலையோடிருக்கிறார் என்று கங்காசரணுக்குப் புரிந்தது. நிலைமை இத்தனை மோசமாகப் போகும் என்று அவன் கற்பனை கூட செய்திருக்கவில்லை. துர்காபதாவின் கவலை அவனையும் தொற்றிக்கொண்டது. வீட்டு வாசலிலிருந்த வேப்பமர நிழலில் ஹபு ஒரு மூங்கில் திண்ணை அமைத்திருந்தான். இரண்டு பண்டிதர்களும் அதில் ஒரு பாய் விரித்து அமர்ந்து. புகைபிடித்துக்கொண்டே தென்றலை அனுபவித்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். ஹபு வந்து அழைத்தான், “அப்பா, சாப்பாடு ரெடி. அம்மா உங்க ரெண்டு பேரையும் சாப்பிடக் கூப்பிடறா.”
சாப்பாட்டுக்கு பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு போட்ட சாதம், பப்பாளிக்காய்ப் பொறியலோடு வடையும் இருந்தது.
அனங்கா நன்றாக சமைப்பாள். துர்கா பண்டிட் அப்படியொரு ருசியான உணவை உண்டு நீண்டகாலம் ஆகியிருந்தது. நடுவே ஹபு வந்து கேட்டான், “இன்னும் வடை பொறிக்கட்டுமான்னு கேக்கறா.”
“பொறிக்கச்சொல்லு, கேட்கவே வேண்டாம்,” என்றான் கங்காசரண்.
அனங்கா மேலும் வடைகளும், பொறியலும் கொடுத்தனுப்பினாள்.
கங்காசரண் அவளை அழைத்தான், “அனங்கா, நீ வெளியே வரலாம். இவருக்கு உன்னோட தனபதி மாமா வயசு இருக்கும். கண்டிப்பா, என்னை விட வயசு அதிகம், அப்படித்தான?”
”ஓ, ரொம்பவே அதிகம்! உங்க மனைவியையும் நம்மோட வந்து இருக்கச் சொல்லுங்க. ஆங்… வரும்போது அப்படியே மிளகாயும் கொண்டு வரச்சொல்லுங்க.”
கொஞ்சநேரம் கழித்து, நாணத்தோடு அனங்கா உள்ளேயிருந்து வந்தாள். கையில் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். துர்கா பண்டிட்டிடம் மிளகாய்களைக் கொடுத்தாள். துர்கா பண்டிட், “என்ன ஐஸ்வர்யக்களை! மகாலஷ்மி! கூச்சப்படாதேம்மா. நீ என்னோட மருமகள் மாதிரி. வீட்ல கொஞ்சம் பால் இருக்குமாம்மா?” என்றார்.
அனங்கா மீண்டும் உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் ஹபு வெளியே வந்து, “அம்மா பால் இல்லேங்கறா. சாதத்துக்குப் புளியும் வெல்லமும் கலந்து தரட்டுமான்னு கேக்கறா.” என்றான்.
”பேஷா! பேஷா! இந்தக் காலத்துல பால் வாங்கிக் கட்டுபடியாகாதே. நாங்களும் வீட்ல பால் குடிக்கறதேயில்ல”
துர்கா பண்டிட்டால் இந்த வயது முதிர்ந்த காலத்திலும், நிறைய சாப்பிட முடிந்தது. புளி கலந்து அவர் சாப்பிட்ட சிவப்பரிசிச்சோறு, பொதுவாக கங்காசரண் சாப்பிடும் இரண்டு சாப்பாட்டுக்கு சமம். ஆனால் அனங்கா மிகவும் சந்தோஷப்பட்டாள். சாப்பாட்டை ருசித்துச் சாப்பிடுபவருக்கு சமைத்துப் போடுவது மிகவும் திருப்தியளிக்கும் விஷயம். அவள் தனக்காக வைத்திருந்த வடைகளையும் அவருக்கே கொடுத்துவிட்டாள்.
ஆறரை ரூபாய் சம்பாத்தியத்தில் அவர் ஒருநாளைக்கு அரைச்சாப்பாடுதான் சாப்பிடுகிறார் என்று நினைத்தான் கங்காசரண்.
மணி இரவு பத்தாகிவிட்டிருந்தது. இலேசாகக் குளிரத் தொடங்கியிருந்தது. இரண்டு பண்டிதர்களும் மீண்டும் மூங்கில் திண்ணைக்குப் போனார்கள். ஹபு புதிய ஹூக்காவைக் கொண்டுவந்து தந்தான்.
துர்கா பண்டிட் கேட்டார், “நான் என்ன செய்யட்டும்னு சொல்லுங்களேன்? நிலைமை ரொம்ப மோசமாப் போய்ட்டிருக்கு.”
“நானும் அதைப் பத்திதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எனக்கும் ஏதோ உள்ளுணர்வு சொல்லுது. சந்தையில க்ராஸின் எண்ணெய் இல்லை. நாளைலேருந்து நெருப்புப்பெட்டியும் கிடைக்காதுன்னு சொல்றாங்க.”
“க்ராஸின், நெருப்புப்பெட்டியெல்லாம் கிடைக்காமப் போனா பரவால்ல, நாம இருட்டுல இருந்துக்கலாம். ஆனா சாப்பாட்டுக்கு வழி? அரிசி விலை இன்னும் ஜாஸ்தியாகப் போகுது…”
”இதுக்கு மேலயுமா? பத்து ரூபாய்க்கும் மேலயா?”
”இப்போவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கிவச்சிக்கச் சொல்லி எல்லாரும் சொல்றாங்க. என் சம்பளத்துல அதுவும் முடியாது. என் ஸ்கூல் ஸெக்ரட்டரி ரீதிகாந்த கோஷ் அடுத்த கிராமத்திலதான் இருக்கான். வீட்ல களஞ்சியம் வச்சிருக்கான். ஒரு மணங்கு நெல்லு தா, காசை சம்பளத்துல கழிச்சிக்கோன்னு சொன்னேன். ஒரு மணங்கு தர முடியாது, வேணும்னா அரை மணங்கு வாங்கிக்கோங்கறான்.”
“ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு அரிசி தேவைப்படும்?”
”ஒவ்வொரு நாள் காலையிலயும் ஒரு பாலி அரிசி செலவாகுது. எட்டு, ஒன்பது பேர் ரெண்டு வேளை சாப்பிடனும். எப்படி சமாளிக்கறதுன்னு சொல்லுங்க. அந்த அரை மணங்கு அரிசி அதிகம் நாள் தாங்காது.”
இவரைப்போல வீட்ல இருக்க எல்லாரும் சாப்பிட்டா ரீதிகாந்தா வீட்ல இருக்க அரிசி கூட பத்தாது என்று நினைத்துக்கொண்டான் கங்காசரண்.
துர்கா பண்டிட் இப்போதைக்குத் தூங்குவதாகத் தெரியவில்லை. கங்காசரண் வசமாக மாட்டிக்கொண்டான். விருந்தினரைத் தனியே விட்டுவிட்டு தான் மட்டும் தனியே உறங்கப்போவது முறையில்லை. அது மட்டுமில்லாமல், அவனுக்கும் எதிர்காலத்தைக் குறித்த கவலை ஏற்பட்டுவிட்டது.
”நான் என்ன செய்யறதுன்னு சொல்லுங்க, பாயா (சகோதரா)? அங்கே படிப்பறிவில்லாத விவசாயிகள் மத்தியிலே எனக்கு நண்பர்களே இல்ல. எனக்குப் படிச்ச நண்பர்களோட சத்சங்கம் வேணும். அவங்களோட நான் மனம் விட்டுப் பேசனும். அது கிடைக்காம என்னோட ஆத்மா மூச்சுத் திணறுது. இது என்ன வாழ்க்கை?”
”சரிதான்.”
”அதனால்தான் நான் உங்ககிட்ட யோசனை கேட்டு வந்தேன். முட்டாள்கள்கிட்ட யோசனை கேட்டு என்ன பிரயோசனம்? அவங்களுக்கு உங்க அளவுக்கு ஞானம் கிடையாது.”
”ஜப்பான்காரங்க சிங்கப்பூரைப் பிடிச்சிட்டாங்களா? போர் பத்தி எதாவது புதிய செய்தி உண்டா?” என்று கேட்டான் கங்காசரண்.
”சிங்கப்பூர் மட்டுமில்ல, பர்மாவையும் பிடிச்சிட்டாங்க. உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியாது – அதாவது உறுதியா யாரும் சொல்லல, பர்மாவையும் பிடிச்சிட்டாங்களா?”
”ஆமா, நமக்கு அங்கேருந்துதான் ரங்கூன் அரிசி வருது. முக்கியமா, சின்ன அரிசி, விலை கம்மி. எங்கிட்ட புழுங்கலரிசியும் இருக்கு, ஆனா பச்சரிசிதான் பிடிக்கும்.”
கங்காசரணுக்கு இது போர் குறித்த புதிய தகவல். பிஸ்வாஸ் மஷாயின் மண்டபத்தில் உட்கார்ந்து பேசிக்கொள்ள ஒரு புதிய செய்தி. அடேயப்பா! பர்மாவையும் பிடித்துவிட்டார்கள்! இங்கே இத்தனை நாளாய் யாருக்கும் இதைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை! இப்படிப்பட்ட குக்கிராமத்தில் அதில் ஆச்சரியமும் இல்லை. இருந்தாலும் கங்காசரணுக்கு எல்லாம் புகைமூட்டமாக இருந்தது. அவனுக்கு அந்த இரண்டு இடங்களையும் தெரிந்திருக்கவில்லை. எவ்வளவு தூரம், சரியாக எந்த திசை – எதுவும் தெரியவில்லை. உண்மையில் அவை தூரப்பிரதேசங்கள்தானா?
அடுத்தநாள் துர்கா பண்டிட் கங்காசரணின் வீட்டில் மதிய உணவும் சாப்பிட்டார். அனங்கா அவருக்கு இரண்டு மூன்று காய்கறிப் பதார்த்தங்களைச் செய்திருந்தாள். பிராமண அதிதி – அதிலும் சாப்பாட்டுப் பிரியர். ஏழை – அவர்களைக் காட்டிலும் ஏழையாகத் தெரிகிறார்.
அதிகாலையிலேயே அனங்கா ஹபுவிடம், “சயாத் வீட்லேருந்து ஒரு வாழைப்பூ வாங்கிட்டுவா.” என்று சொல்லியிருந்தாள்.
மனைவி வாழைப்பூ நறுக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த கங்காசரண், ”அடடே, அதிதிக்கு தடபுடலா விருந்து தயாரிகிட்டிருக்கு போல?”
”ஒண்ணுமில்ல. வெறும் வாழைப்பூவும், கொஞ்சம் ஷுக்தினியும்தான்.” (ஷுக்தினி – வங்காள காய்கறிக்கூட்டு.)
”பேஷ்! பேஷ்! அவர் பேரைச் சொல்லி நாங்களும் இன்னிக்கு விருந்து சாப்ட்டுக்கறோம்.”
”பண்டிட் மஷாய் ரொம்ப ஏழை மாதிரி தெரியுதுல்ல? பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் போட்டிருக்க துணியைப் பார்த்தீங்களா? செருப்பு கூட சரியில்லை, பாவம்.”
”அவருக்குப் பாடசாலைல கிடைக்கற ஏழு ரூபாய் சம்பளத்துல வேற என்ன எதிர்பார்க்க முடியும்? இன்னிக்கு அவருக்கு பலமா விருந்து போடு.”
”கொஞ்சம் பால் வாங்கிட்டு வரீங்களா?”
”நிபாரண் கோஷ்கிட்ட கேட்டுப் பாக்கறேன். நீ நறுக்கிட்டிருக்கறது பச்சைக்காயோட பூவா இருக்கப்போகுது. அப்புறம் ரொம்ப கசப்பாய்டும். யாருமே சாப்ட முடியாம போய்டப்போகுது.”
”இல்லை, இது காம்தாளி வாழைமரத்துப்பூ. நீங்க எனக்கு சமைக்க சொல்லித்தர வேண்டாம்.”
மதிய உணவு நேரத்தில் துர்கா பண்டிட் வியப்பின் உச்சத்துக்கே போய்விட்டார். “அடேயப்பா! இது பலமான விருந்து! என்னோட மருமகள் ஒருத்தியே இத்தனையும் சமைச்சிருக்காளா? என்ன கைமணம்! என்னோட பெள-மா மகாலஷ்மியோட ஸ்வரூபமேதான். எங்கேம்மா இருக்க? இப்படி வா!”
அனங்கா கூச்சத்தோடு தலையைத் தாழ்த்தியபடி முன்னே வந்து நின்றாள்.
துர்கா பண்டிட் வாழைப்பூவில் பிசைந்து நான்றாக திருப்தியாக நிறைய சாப்பிட்டார். “நிஜமாவே நான் இப்படி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” என்றார்.
கங்காசரண் அவர் அதை மரியாதைக்காகவோ நாகரிகத்துக்காகவோ சொல்லவில்லை என்று புரிந்துகொண்டான். அவர் உண்மையாலுமே அப்படி சாப்பிட்டு வெகுகாலமாகிறது.
சாப்பிட்டு முடித்ததும், பனங்கற்கண்டு போட்டு சுண்டக்காய்ச்சிய பாலும் கொடுத்தாள் அனங்கா. துர்கா பண்டிட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார். கண்களில் நீர் துளிர்த்திருந்தது. ஒருவேளை தொடர்ந்து பட்டினி கிடந்ததால்தான் அவர் அப்படி மெலிந்திருக்கலாம். அனங்கா அவர் மீது பரிதாபம் கொண்டாள். அவருக்கு தினமும் இப்படி தட்டு நிறைய விதவிதமான பதார்த்தங்கள் சமைத்துப்போடுமளவுக்கு வசதி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டாள்.
ஒரு வழியாக துர்கா பண்டிட் ஊருக்குக் கிளம்பிப் போனார். “போய்ட்டு வரேன் பெள-மா. உன்னோட உபசரிப்ப ஒருக்காலும் மறக்கமாட்டேன்.”
அணங்காவுக்கும் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது.
”எப்போவாவது பட்டினியோட உன் வாசலுக்கு வந்தா எங்களைக் கைவிட்டுடாதேம்மா அன்னபூரணி. நாங்க பரம ஏழை.”
துர்கா பண்டிட்டின் மெலிந்த உருவம் மா, இலவ மரங்களின் நிழலில் மெல்ல மெல்லத் தேய்ந்து மறைவதைப் பிரியத்தோடு பார்த்தபடியே நின்றிருந்தாள் அனங்கா.
அன்று மாலை அந்த துரதிர்ஷ்டமான சம்பவம் நடந்தது.
ராதிகாப்பூர் சந்தையில், நிறைய மக்களின் கண் முன்னாலேயே, பாஞ்சு குண்டுவின் கடை கொள்ளையடிக்கப்பட்டது. இப்படி பட்டப்பகலில் இது போன்றதொரு சம்பவம் இதற்கு முன் இப்பகுதியில் நிகழ்ந்ததில்லை. கங்காசரணும் அப்போது அக்கடையில் பொருட்கள் வாங்கச் சென்றிருந்தான். கூரை வேயப்பட்ட அந்தக் கடை பெரியது. ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் நின்றிருந்தது. மக்கள் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. கடையைச் சுற்றி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை என்னவென்று புரியாமல் திகைப்போடு கங்காசரண் பார்த்தான். மக்கள் ஓலமிட்டுக்கொண்டு கடைக்கு உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பலர் திருட்டுப் பொருட்கள் நிறைந்த மூட்டைகளையும், கூடைகளையும் எடுத்துக்கொண்டு வயல்வெளிகளைத் தாண்டி ஆற்றங்கரையோரமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருட்டாகிவிட்டது. சூரியன் கிட்டத்தட்ட அஸ்தமித்துவிட்டது. மர விளிம்புகளில் செந்நிறம் தொட்டுவிட்டது.
“அடடா! எப்படி எல்லாத்தையும் திருடிக்கிட்டு ஓடறாங்க பாரேன்!” என்று யாரோ சொன்னார்கள்.
கங்காசரண் கையில் சாக்குப்பை ஒன்று வைத்திருந்தான். அவனும் அரிசி வாங்கத்தான் போயிருந்தான். ஆனால் எல்லா கடைகளிலும் அரிசி விலை மணங்குக்கு பன்னிரண்டு ரூபாய் ஆகியிருந்தது. போன சந்தையில் பத்தேகால் ரூபாயாக இருந்தது. இப்படி திடீரென விலையேறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. கங்காசரண் அரிசி வாங்குவதா வேண்டாமா என்று யோசித்திக்கொண்டிருக்கையிலேயே அந்த சம்பவம் நடந்தது.
கொஞ்ச கொஞ்சமாகக் கூட்டம் குறையத் தொடங்கியது. அப்போதும் எல்லோரும் எல்லா திசையிலும் ஓடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அரிசியோடும், சிலர் வெறுங்கையோடும்.
கங்காசரண் திகைப்போடு இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அவனைப் பின்னாலிருந்து இருவர் வளைத்துப் பிடித்தார்கள். ஒருவன் அவன் கையிலிருந்த பையைப் பறிக்க முற்பட்டான். கங்காசரண், “யாரு? என்ன?” என்று திமிறினான்.
”அரிசியோட ஓடவா பாக்கற? திருட்டுப்பயலே, மாட்டிக்கிட்டியா?” என்று அவர்களில் ஒருவன் சொன்னான்.
கங்காசரண் தன்னை விடுவித்துக்கொண்டு, “நான் ஒண்ணும் திருடல. என்னை யாருன்னு தெரியல?” என்றான்.
மங்கிய வெளிச்சத்தில் அவர்கள் அவன் முன்னால் வந்து நின்றார்கள். ஒருவன் சாதுசரண் மண்டல், போனிபெரே தஃபேதார் (சுதந்திரத்துக்கு முந்திய போலிஸ் ஆபிஸர்). இன்னொருவன் அந்த சங்கத்தில் செளகிதார் (கடைநிலை போலிஸ்). கங்காசரண் அவர்களை அடையாளம் கண்டுகொண்டான், ஆனால் அவர்களுக்கு அவனைத் தெரிந்திருக்கவில்லை.
”ஆமா! எல்லாரும் உத்தமங்கதான்! எங்களுக்குத் தெரியாதா என்ன? அரிசியை எங்க ஒளிச்சு வச்ச?” என்று கேட்டான் செளகிதார்.
“நான் கங்காசரண் பண்டிட். நதுனகாவ்ம்ல ஸ்கூல் மாஸ்டர். இங்கே அரிசி வாங்க வந்தேன், ஆனால் கிடைக்கல. ஒரு பிராமணனை அவமதிக்காதீங்க. இங்கே எல்லாருக்கும் என்னைத் தெரியும், என்னைப் போக விடுங்க.” என்றான்.
சாதுசரண் சொன்னான், “எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு. பழைய திருடனா இருக்கும். பேரு சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது. கட்டிப் போடலாம்.”
அப்போது நதுனகாவ்ம்லிருந்து வந்த சிலர் அவனை அடையாளம் கண்டுகொண்டதால், அவனை விடுவித்தார்கள். அவன் அதற்கு முன் அப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொண்டதில்லை.
கங்காசரண் அன்று வீடு திரும்ப நீண்ட நேரமானது. அனங்கா, அவன் அரிசி வாங்கிக்கொண்டு வருவான் என்று முற்றத்திலேயே காத்திருந்தாள். அவன் சந்தையிலிருந்து திரும்பிவர, ஒருபோதும் இத்தனை தாமதம் செய்ததில்லை. இன்று என்ன ஆனதோ?
பினோத் காபாலியின் சகோதரி பானு வந்திருந்தாள். “என்ன செஞ்சிட்டு இருக்கீங்க, தாக்ருன் – தீதி?” என்று கேட்டாள்.
”வா பானு, உட்காரு”
“தாதா தாகுர் எங்கே?”
”ராதிகாநகர் சந்தைக்குப் போனவரு இன்னும் வரலை.”
”ஓ, இன்னிக்கு அங்கே என்னவோ தகராறுன்னு கேள்விப்பட்டேன். எங்க அண்ணன் போய்ட்டுத் திரும்பி வந்தாரு. அவருதான் சொன்னாரு.”
”என்ன ஆச்சு பானு?” அனங்கா கவலையாகக் கேட்டாள்.
”ஏதோ அரிசிக்கடையில கொள்ளை போய்டுச்சாம். போலிஸ் கொஞ்சம் பேரை கைது செஞ்சிருக்காங்களாம்.”
அனங்காவுக்குக் கொஞ்சம் நிம்மதியானது. அவள் கணவன் ஒருபோதும் அது போன்ற திருட்டில் ஈடுபடப்போவதில்லை. கலவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததால் தாமதமாகியிருக்கும். இருந்தாலும் ஹபுவைக் கூப்பிட்டுச் சொன்னாள், “கொஞ்சம் சந்தை பக்கமாப் போய்ப் பாத்துட்டு வாயேன். போனவங்கள்லாம் திரும்பி வந்துட்டாங்க. ஆனா உங்க அப்பாவைக் காணோம், என்ன ஆச்சுன்னு தெரியலை.”
அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கங்காசரண் காலி சாக்குப்பையோடு வீட்டுக்குள் நுழைந்தான்.
“கடவுளே! இன்னிக்கு நான் சரியான சங்கடத்துல மாட்டிக்கிட்டேன். என்னைத் திருடன்னு நினைச்சுப் பிடிச்சு வச்சுக்கிட்டாங்க.”
அனங்கா பதறினாள், “ஐயோ என்ன ஆச்சு? எப்படி?”
”ஆமா. அந்த குண்டனுங்க – போனிபெரே தஃபாதார் சாதுசரணும், செளகிதாரும் சேர்ந்து பிடிச்சுக்கிட்டானுங்க.”
“ஐயோ கடவுளே! அப்புறம் என்ன ஆச்சு?”
”அவனுங்க என்னைக் கட்டிப்போடற சமயத்துல நல்லவேளையா நம்ம ஊர்க்காரங்க சில பேரு வந்தாங்க. அவங்க வந்திருக்கலன்னா – “
”தெய்வாதீனம்! காளிக்கு அஞ்சணாவும் ஒரு பைஸாவும் காணிக்கையாக் குடுக்கறேன். அவதான் உங்களைக் காப்பாத்திருக்கா!”
”அது போக அரிசியும் கிடைக்கல.”
”அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம். இன்னிக்கு ராத்திரி எப்படியாவது சமாளிச்சிடறேன். நாளைக்கு பகல் சாப்பாட்டையும் கூட ஒப்பேத்திடலாம். அதுக்குள்ள நீங்க என்னவாவது கொண்டு வந்திடுவீங்க.”
பானுவிடம் வந்து கிசுகிசுப்பாகக் கூறினாள், “பானு-தீதி, ஒரு பாலி அரிசி கிடைக்குமா? சந்தையில நடந்த தள்ளுமுள்ளுல இவர் மட்டிக்கிட்டு அரிசி வாங்க முடியாமப் போய்டுச்சு.”
”சரிம்மா, நான் இப்போவே வீட்டுக்குப் போய் அரிசி குடுத்தனுப்பறேன்.”
”கொஞ்சம் உதவி பண்ணு. நீ அரிசி குடுக்கலைன்னா இன்னிக்கு ராத்திரி பட்டினிதான்.”
”அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நானே கொண்டுவந்து தரேன்.”
பானு கிளம்பிச் சென்றாள். ஆனால் திரும்பி வரவில்லை. அனங்கா ஒரு மணி நேரமாகக் காத்திருந்தாள். அவளுக்குக் கவலையாக இருந்தது – என்ன ஆச்சோ! அதுவரை அந்த கிராமத்தில் அவர்கள் என்ன கேட்டாலும் அது உடனடியாகக் கிடைத்து வந்தது. மக்கள் அவர்களுக்குக் கொடுப்பதை அவர்கள் கடமையாக நினைத்து சந்தோஷமாகக் கொடுத்துவந்தார்கள். இப்படி அனங்கா காத்திருப்பது இதுவே முதல் முறை – அதுவும் கொஞ்சமே கொஞ்சம் அரிசிக்காக!
இதற்கு நடுவே கங்காசரண் வேறு மீண்டும் வீட்டை விட்டு எங்கோ போய்விட்டான். ஒருவேளை பிஸ்வாஸ் மஷாய் வீட்டுக்குப் போய் இன்று சந்தையில் நடந்த சம்பவத்தைப் பற்றி நண்பர்களிடம் சொல்வதற்காய் இருக்கும். அரிசி இல்லையென்று அவனிடம் இப்போது சொல்வது எப்படி? நேரங்கழித்து வரப்போகிறான் – சாப்பிட ஒன்றும் இருக்காது.
இப்படியெல்லாம் அனங்கா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, பானு முற்றத்திலிருந்து கூப்பிட்டாள், “தாக்ருன் – தீதி.”
அனங்கா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ”என்ன ஆச்சு பானு?” என்று ஓடினாள்.
”தாக்ருன் – தீதி, நாலஞ்சு வீட்டுல போய் அரிசி இருக்கான்னு கேக்க வேண்டியிருந்தது.”
“ஏன்? உன் வீட்ல இல்லையா?”
”இல்லை. எங்களுக்கும் இன்னிக்கு சந்தையில அரிசி கிடைக்கலையாம்.”
”நீங்க எதுக்கு சந்தைக்குப் போகனும்? உங்க நிலத்து விளைச்சல் என்ன ஆச்சு?”
”அதை ஏன் கேக்கறீங்க தீதி! எங்க நிலத்து நெல்லெல்லாம் போச்சு! மணங்குக்கு ஆறு ரூபாய் விலையானப்போ என் பெரியப்பா எல்லாத்தையும் மொத்த வியாபாரிக்கிட்ட வித்துட்டாரு. காசு நிறைய கிடைச்சுது. அதையெல்லாம் என் பெரியம்மா – செருப்பு, துணி, பண்டம் பாத்திரம், மீன், ஆட்டுக்கறி, இனிப்புன்னு கண்டபடி செலவு பண்ணிட்டாங்க. இப்போ அரிசியும் இல்லை, காசும் இல்லை. நாங்களும் சந்தையில இருந்துதான் வாங்கிட்டு இருக்கோம்.”
”மத்த வீட்லயும் கிடைக்கலையா?”
“எங்க ஜனங்க யாரு வீட்லயும் அரிசி இல்லை, தாக்ருன் தீதி. எல்லாருமே சந்தையில வாங்கிடலாம்னு நினைச்சிட்டு இருந்திருக்காங்க.” என்று சொல்லிக்கொண்டே பானு, தன் முந்தானையிலிருந்த முடிச்சை அவிழ்த்தாள்.
”என்ன கொண்டு வந்திருக்க?”
”பால்காரன் குடேயோட மருமகள்கிட்டேருந்து கொஞ்சம் குருணை அரிசி கிடைச்சுது தீதி.”
”ஐயோ பானு – அவங்களே ரொம்ப கஷ்டப்படறவங்களாச்சே. அவங்ககிட்ட போய் வாங்கலாமா பாவம்?”
”நானும் யோசிச்சுப்பாத்தேன் தீதி. அவங்க நாலு வீட்ல அரிசி புடைக்கறவங்க. எட்டு காதாவுக்கு ஒரு காதா குருணை அரிசி அவங்களுக்குக் கிடைக்கும். அப்படித்தான் சமாளிச்சிட்டு இருக்காங்க.”
அனங்கா சற்று நேரம் யோசித்தாள். “எனக்கு இன்னொரு உதவி பண்ணறியா?”
“சொல்லுங்க தீதி.”
“சரி வேண்டாம் விடு. அந்த அரிசியைக் குடு.”
”நீங்க எல்லாரும் இதுல இன்னிக்கு சமாளிச்சிருவீங்களா? ஆனா எனக்கு வேற வழியும் தெரியல. இதைக் கொண்டு வரதுக்கே ரொம்ப கஷ்டமாயிடுச்சு.”
கங்காசரண் அன்று நேரங்கழித்து சாப்பிட்டான். அனங்கா சாதம், பருப்பு, கொடிப்பசலைக் கீரைக்கூட்டு செய்திருந்தாள். அவள் வீட்டு முற்றத்திலேயே பரங்கிக்காய், வெண்டைக்காய், அரைக்கீரையோடு பசலைக்கீரையையும் விளைவித்திருந்தாள். அப்படித்தான் அன்றைய காய்கறிகளை சமாளிக்கமுடிந்தது.
”இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு பருப்புல பிசைஞ்சுக்கோங்க.” என்று கணவனிடம் சொன்னாள்.
“இந்த அரிசி ஏது? நம்ம வீட்ல ஏற்கனவே இருந்ததா?”
”ஆமா.”
“நாளைக்கும் சமாளிச்சிருவியா?”
”ரொம்ப கஷ்டம். நாளைக்குக் காலைல மொதல் வேலையா அரிசி வாங்கிட்டு வாங்க. இன்னிக்கு ராத்திரி ஒரு வேளைக்குதான் என்னால சமாளிக்க முடிஞ்சுது.”
”இது பிஸ்வாஸ் மஷாய் தட்சிணையாக் கொடுத்ததில மீந்ததா?”
”ஆமா.”
அனங்கா பெள கணவனுக்கும், மகன்களும் திருப்தியாக அன்னமிட்டு, வெல்லமிட்ட நீர் குடித்து அன்றிரவு பட்டினி கிடந்தாள்.