கடலூர் வாசு

கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளேட்டோ தலைவலிக்கான ஒரு பச்சிலையை நோயாளியிடம் கொடுத்து, இதை அரைத்துத் தடவும்போது சில வார்த்தைகளைச் சேர்த்து உச்சரித்தால் மட்டுமே தலைவலி தீரும், இல்லையென்றால் பச்சிலை வெறும் இலைதான் என்பாராம். பிளேட்டோவின் வார்த்தைகள் இக்கால மக்களால் பித்தலாட்டம் என்றும் நவீன மருத்துவத்தில் பிளாசிபோ என்றும் கருதப்படும். இதைப் படித்தபின், கிராமந்தரங்களில் நாட்டு வைத்தியர்கள் விஷக் காய்ச்சலைப் போக்குவதற்காக வேப்பிலை அடித்தபின் அக்காய்ச்சல் மீண்டும் திரும்பாமலிருக்க மந்திரித்த தாயத்தைக் கழுத்தில் மாட்டுவது நினைவிற்கு வருகிறது.
இந்துக்களின் பழைய கண்டுபிடிப்புகளைப் பற்றிய புதிய அறிவிப்புகளை மட்டம் தட்டும் சிலர் இதைப் படித்தவுடன் இத்தகைய இந்தியப் பழக்கங்கள் கிரேக்கர்களிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடும். ஆனால் மஹாபாரதத்தில் கர்ணனுக்கு குரு பரசுராமர் “தக்க சமயத்தில் பிரம்மாஸ்திரத்தை ஏவும் மந்திரம் மறந்துபோகக் கடவது” என்று இட்ட சாபத்தை யாரால் மறக்க முடியும்? யோகி ராம் என்பவர் இமாலய மலையில் அவரது குருக்களுடன் அடைந்த அனுவபங்களை விவரிக்கும் புத்த்தகத்தில் மந்திரங்களின் சக்தியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதில் அவரது குரு ஒரு யோகப் பயிற்சி நூலை தொடவே கூடாது என்ற கட்டளையை மீறி அவர் அறியாதவாறு தனியான ஓரிடத்தில் அதைப் படிக்க ஆரம்பித்தாராம். அந்த யோகப் பயிற்சியை மேற்கொள்வதற்குமுன் ஒரு மந்திரத்தை 1,008 முறை கண்ணை மூடித் தியானம் செய்யவேண்டும் என அந்நூலில் எழுதியிருந்ததாம். அவர் அதை முடிப்பதற்குள், இரண்டு பெரிய ராட்சத உருவங்கள் அவர்முன் தோன்றி அவரை கொல்ல முயல்வதைப்போல் பிரமையுண்டு மூர்ச்சசையடைந்தாராம். முகத்தில் தண்ணீர்பட்டுக் கண் விழித்தபோது அவரது குரு இப்போது புரிந்ததா என் கட்டளை என்று கூறிச் சிரித்தாராம்.
பிளாசிபோ (Placebos) மருத்துவத் துறையில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாகப் பிரயோகத்தில் இருந்து வருகிறது. மருத்துவர், ஒரு மருந்தைக் கொடுத்து வியாதியைக் குணமளிக்கும் சக்தி படைத்தது எனும்போது பிளாசிபோவைவிடச் சக்தி வாய்ந்தது என்பதைதான் மறைமுகமாகச் சொல்கிறார் என்றறிய வேண்டும். மருத்துவ ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ள பிளாசிபோவை மருத்துவர்கள் உபயோகிக்க அனுமதியில்லை. மருத்துவ ஆராய்ச்சிகளிலுமே பிளாசிபோவைச் சேர்க்கலாமா, கூடாதா என்பதைப் பற்றிய விவாதங்கள் நிற்கவில்லை. பிளாசிபோவின் விஞ்ஞான முன்னேற்றங்கள் மருத்துவத்திலும் அதன் ஆராய்ச்சியிலும் நாம் கொண்டுள்ள தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. பிளாசிபோ இதுவரையிலும் அடைந்துள்ள, இனிமேல் அடையப்போகும் முன்னேற்றங்களையும் பார்ப்போம்.
பிரார்த்தனையிலிருந்து சிகிச்சைக்கு:
பிளாசிபோ எனும் சொல் முதன்முதலாகக் கி.பி. நான்காம் நூற்றாண்டில் புனித ஜெரோம் அவர்களின் லத்தீன் மொழிபெயர்ப்பு விவிலியத்தில் 114வது கடவுள் துதியில், ஒன்பதாவது கவிதையில்தான் வருகிறது. இதன் அர்த்தம் “நான் உங்களை மகிழ்விப்பேன்” என்பதாகும். “இந்த மொழிபெயர்ப்பு சரியானதன்று; நான் உங்களுடன் நடப்பேன்” என்பதே சரியான மொழிபெயர்ப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய நாள்களில் சவ அடக்கத்திற்குப்பின் இறந்தவரின் குடும்பம், வந்தவர்களுக்கு விருந்தளிப்பது வழக்கமாயிருந்தது. இலவச சாப்பாட்டிற்காக உறவினரல்லாதவர்களும் சவ அடக்கத்திற்கு வருவார்களாம். விருந்துண்ண வரும் நபர்கள் பிளாசிபோ என்று பாடிக்கொண்டே வீட்டிற்குள் நுழைய வேண்டுமாம். இவ்வழக்கத்தைப் பற்றி சாஸர், “முகஸ்துதி செய்பவர்கள் சைத்தானின் பாதிரிகள்; எப்போதும் பிளாசிபோ என்று பாடிக்கொண்டிருப்பவர்கள்” என்கிறார். சாஸர் அவரது கதையிலும் பிளாசிபோ என்ற பெயரிட்ட பாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளார். அக்கதையின் கதாநாயகன் ஜனவரி என்னும் வயோதிகப் போர்வீரன். அவனது காம இச்சையைத் தணிக்க மே என்னும் இளம்பெண்ணிடம் தொடர்புகொள்கிறான். அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது பற்றி அவனது நண்பர்களான பிளாசிபோ, ஜஸ்டினஸ் என்ற இருவரைக் கலந்தாலோசிக்கிறான். நண்பன் பிளாசிபோ அவனிடமிருந்து சலுகைகள் பெறுவதற்காக இத்திருமணத்தை ஆமோதிக்கிறான். இன்னொரு நண்பனோ, திருமணத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்; நன்னடத்தையுள்ள பெண்ணைத்தான் திருமணம்செய்து கொள்ளவேண்டும் எனச் செனெகா, கேட்டோ போன்றவர்கள் கூறியுள்ளதை எடுத்துரைக்கிறான். அவன் சொல்லைத் தட்டி, பிளாசிபோவின் வார்த்தைகளை மதித்து அப்பெண்ணை போர்வீரன் திருமணம் செய்துகொள்கிறான். ஜஸ்டினஸ் சொன்னாற்போல், அப்பெண்ணும் கண்பார்வையிழந்த கணவனறியாமல் மற்றவர்களுடன் உறவு வைத்துக்கொள்கிறாள் என கதை முடிவுறுகிறது.
18ம் நூற்றாண்டில்தான், பிளாசிபோ மருத்துவ உலகத்தில் முதற் காலடி எடுத்து வைத்தது. பியர்ஸ் என்னும் மருத்துவர் 1763ல் எழுதிய புத்தகத்தில், நோய்வாய்ப்பட்டுப் படுக்கையிலிருந்த பெண் நண்பரின் உடல்நிலையை விசாரிக்கச் சென்ற சமயம் அப்பெண்மணி, உடனிருந்த மருத்துவர் பிளாசிபோவின் மருந்துச் சொட்டுகளினால் உடல் நலம் நன்கு முன்னேறியுள்ளது என்றாராம். பியர்ஸ், பிளாசிபோவின் நீண்ட சுருட்டைக் கேசமும் கவர்ச்சியான தோற்றமும், படுக்கை அருகிலேயே மருந்தைத் தயாரித்ததுமே அப்பெண்மணியின் உடல் நலத் தேர்விற்குக் காரணம் என்கிறார். பிளாசிபோவின் படுக்கைப் பக்கப் பாங்குதான் அவர் கொடுக்கும் மருந்துச் சொட்டுகளைவிட நன்றாக வேலை செய்கிறது என்கிறார். மருத்துவ சிகிச்சையில் 1752ல் ஸ்காட்லாந்து பிரசவ மருத்துவர், “உபத்திரவம் செய்யாத பிளாசிமஸ் (பிளாசிபோவின் மற்றொரு பெயர்) மாத்திரைகளை மருந்தின் இடைவெளிகளில் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுப்பதன்மூலம் அவர்களது பொழுது நன்றாகச் செலவழியும். மகிழ்ச்சிகரமான கற்பனைகள் நிரம்பியதாகவும் இருக்கும்” என எழுதியுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சிகளில் பிளாசிபோவின் தொடக்கம்:
18ஆம் நூற்றாண்டில், போலி மருத்துவர்களின் மருந்துகள் உபயோகமற்றவை என நிரூபிப்பதற்காக அவை மருத்துவ ஆராய்ச்சிகளில் பிளாசிபோவாகச் சேர்க்கப்பட்டன. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் இரத்த வெளியேற்றலையும் ஆ,ட்டு புழுக்கையையும் சக்தி வாய்ந்த சிகிச்சையாக மருத்துவம் அப்போது ஏற்றுக்கொண்டிருந்தது என்பதுதான். 18ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் எலிஷா பெர்கின்ஸ் என்ற அமெரிக்க மருத்துவர், அவர் உருவாக்கிய இரண்டு உலோகக் கம்பிகள், வியாதிகளை உண்டு பண்ணும் மின்சாரத் திரவங்களை உடலிலிருந்து அகற்றும் எனத் தெரிவித்தார் இதற்காக அமெரிக்கா இக்கம்பிகளுக்கு 1796ல் முதல் மருத்துவக் காப்புரிமைப் பட்டயம் அளித்தது. இது அமெரிக்காவில் விரைவில் பிரபலமடைந்தது. ஜார்ஜ் வாஷிஙடன்கூட இக்கம்பிகளை வாங்கியதாகத் தெரிகிறது.
1799இல் இங்கிலாந்தில் உள்ள பாத் நகரில் இதன் விற்பனை பெருமளவில் நடந்தது. இதற்கு முன்னரே, பாத் நகரம், அங்கிருந்த கனிமங்கள் நிறைந்த நீரூற்றுகளினால் ரோமானியர் காலத்திலிருதே பிணி தீர்க்கும் தலமெனப் பெயர் பெற்றிருந்தது. ஜான் ஹேகார்த் என்ற மருத்துவர் இக்கம்பிகள் வெறும் வெற்றுக் கம்பிகள் என்று நிரூபிக்க ஒரு பரிசோதனையை மேற்கொண்டார்; இரண்டு மரக் கம்பிகளுக்கு மின்சாரக் கம்பிகளைப் போலவே வர்ணம் பூசினார். மரத்தில் செய்யப்பட்டதால் அக்கம்பிகளில் மின்சாரம் பாயும் வாய்ப்பில்லை. ஐவருக்கு அசல் கம்பிகளையும் இன்னும் ஐவருக்குப் போலிக் கம்பிகளையும் கொடுத்தபோது எல்லோருமே சொஸ்தம் அடைந்ததால் மின்சாரக் கம்பிகளும் போலிதான் என நிரூபித்தார். இப்பரிசோதனையின் மூலம் இக்கம்பிகளின் பலன் மின்சாரத்தினால் அன்று; ஆனால், இரு வகைக் கம்பிகளுமே பலன் தருபைவதான் என்று அவரே ஒப்புக்கொண்டுள்ளார். மற்றொரு பரிசோதனையில், ஹோமியோபதி மாத்திரைகளையும் அல்லோபதி மாத்திரைகளையும் ரொட்டியால் செய்யப்பட்ட மாத்திரைகளுடன் ஒப்பிட்டதில் ஹோமியோபதி அலோபதி ஆகிய இரண்டு மருந்துகளை விட ரொட்டி மாத்திரையே சிறந்தது எனத் தெரிய வந்தது.
20ம் நூற்றாண்டின் நடுவில், பிளாசிபோவுடன் புதிய மருந்துகளை ஒப்பிடுவது சகஜமாகிவிட்டதால் ஹென்றி நோல்ஸ் பீச்சர் என்பவர் பிளாசிபோவின் சக்தியைப் பற்றி ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரை எழுதுமளவிற்கு ஆய்வுகள் சேர்ந்திருந்தன. பீச்சர், இரண்டாவது உலகப் போரில் தெற்கு இத்தாலியில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர். வலி நிவாரணி மார்ஃபின் (Morphine) பற்றாக்குறையாக இருந்த சமயம், காயமடைந்த ஒரு ராணுவ வீரனின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் செவிலியர் மார்ஃபினுக்குப் பதில் உப்புநீரை உட்செலுத்தினர். மார்ஃபின் செலுத்தப்பட்டதாக நினைத்த ராணுவ வீரர் அறுவை சிகிச்சையின்போது வலியையே உணரவில்லை. ஆச்சரியமடைந்த பீச்சர் போருக்குப்பின் பிளாசிபோவுடன் வலி நிவாரணிகளை ஒப்பிட்ட 15 ஆய்வுகளை ஆராய்ந்தார். 1082 நபர்களில் 35 சதவீதத்தினர் பிளாசிபோவினால் மட்டுமே வலி நிவாரணம் கண்டதை அறிந்தார். 1955ல் இவருடைய ஆய்வுக் கட்டுரை “வலிமை வாய்ந்த பிளாசிபோ என்னும் தலைப்பில் பிரசுரமானது.
1990களில் ஆராய்ச்சியாளர்கள், பீச்சரின் கட்டுரை முடிவு சரியானதன்று; பிளாசிபோவை உட்கொள்ளாமலேயே குணமடைந்திருக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தனர. இது தத்துவார்த்தத்தில், “காரியம் முடிந்தபின் காரணத்தைக் காட்டுதல்” (Post hoc ergo propter hoc- after, therefore because of) எனப்படும். குணமடைந்ததற்குப் பிளாசிபோதான் காரணம் என முடிவெடுப்பதற்கு, எந்த மருந்தையும் உட்கொள்ளாது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுவதால் மட்டுமே இயலும். டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் ரோப்ஜார்ட்சன், கோட்ஷே என்ற இருவர், பிணியாளர்களை மூன்றாகப் பிரித்து ஒரு பிரிவிற்கு மருந்தையும் இரண்டாவது பிரிவிற்குப் பிளாசிபோவையும் மூன்றாவது பிரிவிற்கு ஒன்றுமே கொடுக்காமலும் ஆராய்ந்ததில், இரண்டாவது பிரிவினரும் மூன்றாவது பிரிவினரும் சிறிதளவு வித்தியாசத்தில் குணமடைந்தனர் என்றறிந்தனர். பீச்சரின் முடிவிற்கு எதிரான முடிவாக இவர்கள் கருதிய இக்கட்டுரையைப் “பிளாசிபோ சக்தியற்றதா” என்ற தலைப்பில் வெளியிட்டனர். பீச்சரின் தவறைத் திருத்த முனைந்த இவர்கள், தாங்கள் செய்யும் தவறை உணரவில்லை. வெவ்வேறு பிணிகளின் ஆராய்ச்சிகளில் பிளாசிபோவாகக் கருதப்பட்ட பொருள்கள் அனைத்தையும் இவர்களது ஆராய்ச்சியில் பிளாசிபோவாக சேர்த்துக் கொண்டனர். எனவே, இவர்களது ஆராய்ச்சி ஆரஞ்சை ஆப்பிளோடு ஒப்பிடுவது போலாகும். ஒரு குறிப்பிட்ட வியாதிக்கு ஒரு மருந்தினால் சிறிதளவு தாக்கம் இருந்தாலும் அதை முழுவதுமாக நிராகரித்துவிட முடியாது. சில சிகிச்சைகள் சில வியாதிகளுக்கு, முக்கியமாக வலி நிவாரணத்திற்கு ஏற்றவை. ஆனால், எல்லா வியாதிகளிலுமல்ல என்பது ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த முடிவு.
அறுவை சிகிச்சை ஆராய்ச்சியில் பிளாசிபோ:
சமீபத்தில், பிளாசிபோ கட்டுப்பாடுள்ள அறுவை சிகிச்சை ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. இதில் மிகப் பிரபலமான ஒன்று, அமெரிக்க எலும்பு சிகிச்சை மருத்துவர் புரூஸ் மோஸ்லி வெளியிட்ட ஆய்வாகும். மருந்திற்குக் கட்டுப்படாத, மூட்டு வலியினால் அவதியுற்ற 180 நோயாளிகளைப் பற்றியது. பாதி நபர்கள் மூட்டுக் குழாய் அறுவை சிகிச்சைக்கும் மீதி நபர்கள் போலி அறுவை சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டனர். போலி அறுவை சிகிச்சையாளர்களுக்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுத் தோலிலும் கீறல் போடப்பட்டது. மயக்கம் தெளியும் சமயம் இரு தரப்பினரின் காதிலும் கேட்கும்படி உண்மையான அறுவை சிகிச்சையில் என்ன செய்யப்பட்டதோ அதை மருத்துவர்களும் உதவிசெய்த செவிலியர்களும் கூறுவர். இதனால் போலி அறுவை சிகிச்சை பெற்றவர்களும் நிஜமான அறுவை சிகிச்சைக்கு ஆளானவர்களாகத் தங்களைக் கருதவேண்டும் என்பதாகும். போலி அறுவை சிகிச்சையும் நிஜ அறுவை சிகிச்சையும் ஒரே அளவு குணத்தை உண்டு பண்ணியது என்ற ஆச்சரியமான முடிவு இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்தது. இதன்பின், பிளாசிபோவுடன் ஒப்பிடப்பட்ட 50 அறுவை சிகிச்சை ஆய்வுகளில், பாதி ஆய்வுகளுக்கும் மேலானவை நிஜமான அறுவை சிகிச்சையும் போலி சிகிச்சையும் ஒரே அளவு குணத்தை அளிப்பது தெரியவந்தது.
உண்மையான போலிகள்:
பிளாசிபோ என்று தெரிந்தால் வேலை செய்யாது என்பதும் தவறான எண்ணமாகும். லீ பார்க், யூனோ கோவி என்ற இரு மருத்துவர்கள் நரம்புக் கோளாறுள்ள 15 நோயாளிகளிடம், “இது வெறும் சர்க்கரை வில்லைகள்தாம். ஆனால் உங்களைப் போன்ற நோயாளிகள் இதன்மூலம் குணமடைந்துள்ளனர்” என்று சொல்லியே கொடுத்தும் அவர்கள் குணமடைந்தனர். ஆனால் மருத்துவர்கள் சர்க்கரை என்று பொய் சொல்லி உண்மையான மருந்தையே கொடுத்தார்கள் என்பது அந்நோயாளிகளின் நினைப்பு. சமீப காலத்தில், வெளிப்படையாகவே பிளாசிபோவும் சேர்க்கப்பட்ட உயர்தர ஆய்வுகளில் பிளாசிபோவும் மற்ற மருந்துகளைப் போலவே வேலைசெய்வது தெரியவந்துள்ளது, இதன் காரணம், நோயாளிகள் தங்கள் மருத்துவர்களின்மேல் வைத்துள்ள அபார நம்பிக்கைதான். சிலந்திக்குப் பயப்படுவோர் விஷமற்ற சிலந்தி என்று தெரிந்தும் அதைக் கண்டு பயப்படுவதுபோல், நோயாளிகள் நம்பிக்கையான மருத்துவர் பிளாசிபோ என்று சொல்லியே கொடுத்தாலும் அது வேலை செய்கிறது என்கிறார்கள்.
பிளாசிபோ உண்மையான மருந்தைப்போல வேலை செய்யும் வழிமுறையை ஜான் லெவின், நியூட்டன் கோர்டன் என்ற இரு மருத்துவர்கள் ஆராய முனைந்தார்கள். 51 நபர்கள் கடைவாய்ப் பல் பிடுங்கி மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குப்பின் வலி நிவாரணத்திற்காக மார்ஃபின் அல்லது பிளாசிபோவை ஊசி வழியாகச் செலுத்தப்பட்டனர். நாலக்சோன் என்னும் தடுப்பு மருந்து சேர்த்துக் கொடுக்கப்பட்டபோது இரு தரப்பினரும் வலி நிவாரணம் அடையவில்லை. இதிலிருந்து, பிளாசிபோவும் மார்ஃபின் போலவே வலியைப் போக்கும் எண்டார்பின்ஸ் எனும் உட்சுரப்பு நீரைச் சுரக்கச் செய்வது தெரியவந்தது. இதற்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஆய்வுகள் எவ்வாறு பிளாசிபோ மூளை மற்றும் இதர உறுப்புகள் வழியாக வேலை செய்கிறது என்பதை ஆராய்ந்துள்ளன. பிளாசிபோவின் விளைவுகளுக்குப் பொதுவாக இரண்டு காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். முன்கூட்டியே நோயாளிகளின் மனதையும் அவர்களின் எதிர்பார்ப்பையும் சீர்படுத்துவதுதான் என்கின்றனர். 1999ல், அமான்ஸ்சியோ, பெனிடெட்டி என்ற இரு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 229 பேரை 12 பகுதிகளாகப் பிரித்து அவர்களின் மனதையும் எதிர்பார்ப்பையும் வேண்டிய மாதிரிச் சீர்படுத்தியபின் பல்வேறு விதமான மருந்துகளையும் பிளாசிபோவையும் கொடுத்தனர். பிளாசிபோவின் விளைவுகளுக்கு இவ்விரண்டு சீர்படுத்தல்களுமே காரணமாக இருப்பது தெரியவந்தது. இவ்வகையான ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்குப் பிறகும் சில ஆராய்ச்சியாளர்கள் பிளாசிபோவின் விளைவுக்கான சில காரணங்கள் புரியாத புதிராகவே உள்ளன என்கின்றனர்.
பிளாசிபோவிற்கான நன்னெறி முறைகள்:
தற்கால ஆராய்ச்சியாளர்கள் பிளாசிபோவை ஆராய்ச்சியில் சேர்ப்பது அவர்களை ஏமாற்றுவதாகும்; அது சரியான நெறிமுறையன்று என்கிறார்கள். வெளிப்படையாகவே பிளாசிபோ சேர்க்கப்பட்டுள்ள ஆராய்ச்சிகளிலும் எந்த ஓர் ஏமாற்று வேலையும் செய்யாமலே பிளாசிபோ மற்ற மருந்துகளுக்குச் சமமாக வேலை செய்வது பற்றி ஏற்கெனவே பார்த்துவிட்டோம். ஆனால், நவீன மருத்துவத் துறையில் பல வியாதிகளுக்குப் பயனுள்ள மருந்துகள் இருப்பதால் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளோ சிகிச்சைகளோ இவ்வாறு நன்றாக வேலை செய்யும் பழைய மருந்துகளோடுதான் ஒப்பிடப்பட வேண்டும்; பிளாசிபோவோடு அல்ல என்பதைப் பொதுவாக எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். உலக மருத்துவக் கழகமும் இதைத்தான் முதலில் ஆமோதித்தது. ஆனால், 2010ல் திடீரென்று இக்கொள்கையிலிருந்து அது பின்வாங்கியது. சரியான மருந்துகள் உள்ள வியாதியைப் பற்றிய சில ஆராய்ச்சிகளிலும் பிளாசிபோவுடன் புதிய மருந்தை ஒப்பிடுவதுதான் சரியான முறை என அறிவித்தது. இதற்குக் கழகம் முன்வைக்கும் காரணங்களை எளிதக்ச் சொல்லவேண்டுமென்றால் (1) பிளாசிபோவுடன் புதிய மருந்தை ஒப்பிடுவதுதான் நம்பிக்கைக்குகந்த முறை என்பதாகும். இது நரம்புத் தளர்ச்சிக்காக உடலைப் பாதிக்கும் சிகிச்சையான கோகெயினை, ரத்தத்தை வெளியேற்றுவதுடன் ஒப்பிடும் காலத்தில் வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இது தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. (2) பிளாசிபோவுடன் புதிய மருந்தை ஒப்பிடுவதே சரியான அடிப்படை. ஏனென்றால், பிளாசிபோ சக்தியற்றது. எனவே, புதிய மருந்துகளின் சக்தியை இதன் மூலமாகத்தான் சரியாக நிர்ணயிக்க முடியும் என்பதாகும். இதுவும் தவறான எண்ணமே. உதாரணமாக, வயிற்றுப் புண்ணை ஆற்றும் பிளாசிபோ கட்டுப்பாடுடன் நடந்த சில ஆராய்ச்சிகளில், பிளாசிபோவும் புண்ணை முழுமையாக ஆற்றுவது தெரியவந்தது.
முடிவு:
பிளாசிபோவின் மறுபெயர் ஏமாற்றல் என்ற காலம் மறைந்துவிட்டது. வெளிப்படையாகவே, இது பிளாசிபோ; உண்மையான மருந்தன்று என்று சொல்லி நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலும் பிளாசிபோ மருந்தளவிற்கு வேலை செய்யக்கூடும் என்ற உண்மை கண்கூடாகவே தெரியவந்துள்ளது.
பிளாசிபோவின் அர்த்தம் சக்தியின்மை என்பதும் தவறான முடிவு எனப் பல ஆராய்ச்சிகளில் நிரூபணம் ஆகியுள்ளது. உலக மருத்துவக் கழகம் 2010ல் முன்வைத்த காலை மறுமுறை பின்வாங்குவதே சரியான முடிவாகத் தோன்றுகிறது..
பிளாசிபோவின் பயணம், பிளாசிபோவை மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையில் ஏற்றுக்கொள்வதற்கு வழிகோலியுள்ளது ஆனால் நவீன ஆராய்ச்சிகளுக்கு மேற்சொன்ன காரணங்களால், உபயோகமற்ற ஒன்றாகிவிட்டது.
(ஆதாரம்: Jeremy Howrick, Director,Oxford Empathy Program,University of Oxford, England:.
Published in The Epoch Times January 27, 2021. First published on The Conversation.
Acknowledgements by the author: James Lind Library. Writing of Ted Kaptchuk, Jeffrey Aronson, and the mentorship of Dan Moerman.)