பள்ளத்தாக்கு மனிதர்கள்

கிரிஸ் ஆஃபட்

[1850 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகி வரும், ஹார்பர்ஸ் மாகஸீன் என்ற மாதாந்திரப் பத்திரிகையின், ஏப்ரல், 2021 இதழில் வெளியான சிறு கதை. இது ஜூன் மாதம் வெளியிடப்படவிருக்கும், ‘த கில்லிங் ஹில்ஸ்’ என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. க்ரோவ் ப்ரஸ் வெளியீடு]

***

[மொழியாக்கம்: மைத்ரேயன்]

கருஞ்சாலையில் சில மைல்கள் தூரம் கடந்ததும், சாலையோரம் நடந்து போகிற ஒரு ஆளைப் பார்த்து மிக் தன் வண்டியை மெதுவாக்கி, அவரைச் சுற்றித் தாண்டிப் போய் நிறுத்தினார். அங்கு மலைகளில் சுற்றுப் பயணிகளோ, மலையில் நடைப் பயணம் போவோரோ வருவதில்லை. யாராவது சாலையோரம் நடந்தால், அவர்களுக்கு வண்டி ஓட்டிகளிடமிருந்து இலவசப் பயணம் தேவை, அவர்கள் போக வேண்டிய தூரம் அதிகமாக இருக்கும், அதனால் காடு வழியே குறுக்காக நடந்து போக முடிந்திராது. அந்த மனிதர் ட்ரக்கின் கதவைத் திறந்து மேலே ஏறி பயணி இருக்கையில் அமர்ந்தார். அவர் மிக்கை விடச் சில வருடங்கள் இளையவராகத் தெரிந்தார், பூட்ஸ், ஜீன்ஸ், மற்றும் கணுக்கை வரை பித்தான்கள் பூட்டிய, வேலைகள் செய்வோர் அணியும் சட்டை ஆகியன அணிந்திருந்தார், கூச்சப்படுபவர் போல ஜன்னல் புறம் பார்த்துக் கொண்டு தலையைத் திருப்பி அமர்ந்திருந்தார். 

“நான் மிக் ஹார்டின்.”

“எனக்குச் சில ஹார்டின்களைத் தெரிந்திருந்தது,” அந்த மனிதர் சொன்னார். “ஒருத்தரோடு பள்ளியில் படித்தேன், லிண்டா.”

“அவள் என் சகோதரி.”

“அவர்தான் இப்போ ஷெரிஃப்னு கேள்விப்பட்டேனே.”

“ஆமா.”

“நான் மல்லின்ஸ்.”

“எங்கே போறீங்க?”

“இந்த ரோட்ல கொஞ்சம் மேலே இருக்கற இடத்துக்கு. மூணாவது இறக்கத்தில, வலது பக்கம் திரும்பணும்.” அந்த மனிதர் தன் முகவாயை உயர்த்தி, அந்த மண் சந்துப் பக்கம் சுட்டினார். அது ஒரு பள்ளத் தாக்குக்குள் திரும்பியது. மிக் வண்டியை திருப்புவதற்காக வேகத்தைக் குறைத்தார். அந்தத் தெரு பூவரசமரங்களின் தோப்பு ஒன்றின் ஊடாக சமதளமாகிப் போனது. அந்த மரங்கள் பெருங்காற்றில் வீழ்ந்திருந்தன. 

“பழம் பூவரசு மரம் ஒன்றை நான் பார்த்ததே இல்லை.” மிக் சொன்னார்.

“காடுகளிலேயே மோசமான மரங்கள். எரிக்கவோ, கட்டடத்துக்கோ பயனில்லாதவை.”

“மற்ற மரங்களுக்கு இவை பிடித்தமானதாக இருக்க வேண்டும். அல்லது பறவைகளுக்கு, ஒரு (காரணம்)”

“ஆமாம், கடவுள் அதை இங்கே வைத்திருக்கிறார் என்றால், எதுக்கும் ஒரு காரணம் இருக்கும். நான் யோசிக்கறது என்னன்னா, உண்ணியைப் பத்தி. அதுங்க இருக்கறதுல யாருக்கு என்ன உபயோகம்?”

“இருங்க.  போஸம்கள் அவற்றைச் சாப்பிடுகின்றன. ஆனா, அதுங்க கூட உயிர் வாழ உண்ணிகளை நம்பி இல்லை.”

”எனக்குப் போஸம்களைப் பிடிக்கும். அவை வினோதமான மிருகங்கள். அதுங்களோட குறி நுனீலெ ரெண்டாப் பிரியும். அதுங்க மூக்கிலெ கலவி செஞ்சு, தும்மலாலெ குழந்தைகளைப் பெத்துத் தங்களோட வயத்துப் பையில போடும்னு கேட்டிருக்கேன்.” 

மைக் தலையசைத்து ஆமோதித்தார். அது உண்மையில்லை என்று அவருக்குத் தெரியும், ஆனால் சிறுவனாக இந்தக் கதையைக் கேட்டபோது அது அவருக்கும் பிடித்திருந்தது. மல்லின்ஸிடம் இதைப் பற்றி மேலும் பேச அவருக்கு விருப்பமில்லை. இந்த மாதிரி விஷயங்களில் கருத்து வேற்றுமை, இந்த மலைப் பகுதியில் அத்து மீறி வளர்ந்து கைகலப்பிலோ, துப்பாக்கிச் சண்டையிலோ முடியும் வாய்ப்பு அதிகம். 

அவர் ஒரு ஓடையின் படுகை மீது ஓட்டிப் போனார். அது சமீபத்து மழையில் ஈரமாகி இருந்தது. ஒரு வளைவைச் சுற்றி ஓட்டி, மேட்டுப் பகுதியில் வண்டியை ஏற்றி, ஓட்டிப் போனார். அங்கே தாழ்வான, முன் முகப்பு மண்டபப் பகுதியோடு இருந்த ஒரு வீட்டை அடைந்தார். ஒரு மூலையில் ஹிக்கரி மரத் தூண் ஒன்று தகரக் கூரையைத் தாங்கி நின்றது. எதிர் மூலையில் இருக்க வேண்டிய தூண் அங்கே இல்லை. அதற்குப் பதிலாக அங்கே ஒரு கோவேறு கழுதை, அதன் கால்கள் தரையில் இருந்த நான்கு திருகாணிகளில் இறுகக்கட்டப்பட்டு நின்று கொண்டிருந்தது. கடிவாளத்தில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சங்கிலி அந்த மிருகம் தன் தலையை அசைக்க முடியாதபடி கட்டிப் போட்டிருந்தது. அதன் முதுகில் ஒரு மர நாற்காலி நிறுத்தப்பட்டு, சேணச் சுற்றுவார் ஒன்றால் உயரமாகப் பொருத்தப்பட்டிருந்தது. நாற்காலியின் மேல்பகுதி அந்த மண்டபத்தின் ஒரு மூலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. 

கழுதைக்கு அச்சம் வராமலிருக்க மிக் தன் ட்ரக்கை நிறுத்தி, எஞ்சினையும் நிறுத்தினார்,  “அட, இந்த மாதிரி எதையும் நான் பார்த்ததில்லை.”

 “என்னோட தங்கைக்கு ஒரு அன்பர் உண்டு, அவருக்குக் குடிக்கப் பிடிக்கும். நேத்தி ராத்திரி அவர் தன் காரை முன்மண்டபத்துக்குள்ளே ஓட்டி, அந்தத் தூணை உடைச்சுட்டார். அந்தப் பையனோட அப்பா காலைல இந்தக் கழுதையைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கார். அந்த நாற்காலி அதோட முதுகிலே ஏற்கனவே இருந்தது. ஒரு புதுத் தூணை அப்புறம் கொண்டு வரேன்னு சொல்லி இருக்கார்.”

“அதோட பேர் என்ன?”

“ஜோ-ஜோ.”

“உங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்ததா?”

“இல்லை. வேலை செய்யறதை விட இது மேல்னு அது நினைக்கிறாப்ல தெரியறது.”

மிக் குலுங்கிச் சிரித்தார், மல்லின்ஸும் ஏதோ இப்போதுதான் அந்தக் கழுதையை முதல் தடவையாகப் பார்க்கிறார்போல, தானும் சேர்ந்து சிரித்தார்.  அவர்கள் பதின்ம வயதுப் பையன்களைப் போல அந்த ட்ரக்குள் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். மல்லின்ஸ் கதவைத் திறந்து வெளியே இறங்கினார். 

“சவாரிக்கு நன்றி.”

“அந்தக் கழுதை அத்தனை சுகமாக இருப்பதாகத் தெரியல்லியே.”

“இல்லைன்னுதான் தெரியறது.”

“நீங்களே அந்த மண்டபத்தைச் சரி செய்வீங்களோ?”

“நான் மரம் வெட்றவன் இல்லே,” மல்லின்ஸ் சொன்னார், “தச்சனும் இல்லே.”

“ஏதாவது கருவிகள் இருக்கா?”

“சுத்தி, ஆணிகள், ஒண்ணு ரெண்டு ஸ்க்ரூ ட்ரைவருங்க, குறடுங்க, எல்லா வீட்லெயும் இருக்கறாப்லதான்.”

 “அளக்கிற நாடா?”

“இல்லை, அது பிஞ்சு போச்சு.”

“ஒரு கயிறைக் கண்டு பிடிக்கிறீங்களா?” மிக் கேட்டார். “பத்தடிக்கு மேல இருக்கணும். அப்புறம் மேலே ஏறி நிக்கறதுக்கு ஏதாவது வேணும்.”

மல்லின்ஸ் வீட்டுக்குள்ளே போனார். கயிற்றுச் சுருள் ஒன்றைக் கொண்டு வந்தார். இன்னொரு கையில் ஸ்ப்ரிங் தோட்டத்துப் பண்ணையோட பால் புட்டிகள் வைக்கும் கூடை, பழசானது, இருந்தது. 

மிக் அந்தக் கூடையைக் கழுதைக்கு அருகில் வைத்து அதன் மீது ஏறி நின்றார். கயிறின் ஒரு நுனியை முகப்பு மண்டபத்தின் கூரையில் வைத்துப் பிடித்தார். சுருளைத் தானே பிரியும்படி விட்டார். கழுதை சற்று அதிர்ந்தது. அதன் குளம்புகள் தரையின் ஓக் மரச் சட்டங்களை இடித்தன. மிக்கிற்குத் தான் ஆபத்தான இடத்தில் இருப்பது தெரிந்திருந்தது, ஆனால் அவர் கழுதையைக் கட்டியிருக்கும் தளைகள் பிய்ந்து போகாமலிருக்கும் என்று நம்பினார். 

“இங்க வாங்க,” மிக் சத்தம் குறைத்துக் கூப்பிட்டார். “அந்தக் கயிறைக் கீழே பிடிச்சு, தரையை அது தொடற இடத்துலே பிடிச்சுக்குங்க.”

மல்லின்ஸ் குந்தி அமர்ந்து சொன்னபடி செய்தார். மிக் அந்தக் கூடையை விட்டுக் கீழே இறங்கினார், தன் பையிலிருந்த சிறு கத்தியைத் திறந்தார், கயிறை அந்த இடத்தோடு பிடித்து, மண்டபத்தின் தரையில் வைத்து அறுத்தார். 

“போய் ஒரு எந்திர ரம்பத்தைக் கொண்டு வாங்க.”

மல்லின்ஸ் எழுந்து நின்றார், அந்த வேலை பழக்கமானதாகத் தெரிந்த மாதிரி அவர் முகம் தெளிவடைந்தது. போய்த் திரும்புகையில் அவர் கையில் மக்கல்லாக் தயாரிப்பான ஓர் எந்திர ரம்பம் இருந்தது. அதில் 20 அங்குல நீளம் பற்கள் கொண்ட இரும்புப் பட்டை, சங்கிலியில் எண்ணெய் மின்னியது. 

“பெட்ரோல் போட்டிருக்கு, கூரா இருக்கு,” அவர் சொன்னார். “ஆனா, அந்தக் கழுதையை நான் வெட்ட மாட்டேன்.”

“அப்படியா, ரொம்ப நல்ல விஷயம். நாம அந்த ட்ரக்கிலே போகலாம்.”

அவர்கள் அந்த ஓடைப் படுகை வழியே போய், அந்த மண் சாலையில் ஓட்டிப் போனார்கள். விழுந்து கிடந்த பூவரசு மரத் தோப்பை அடைந்தனர்.  மிக் பல மரங்களைப் பார்வையிட்டார், ரொம்பத் தடியாக இல்லாத, ஓரளவு நேராக இருந்த ஒன்றைப் பொறுக்கினார். கயிற்றுத் துண்டை வைத்து மரத்தில் நீளத்தைக் குறித்தார். பிறகு மல்லின்ஸை விட்டு சிறுகிளைகளைக் கழிக்கச் சொன்னார். இரண்டு முனைகளிலும் தட்டையாக இருக்கும்படி வெட்டச் சொன்னார். மல்லின்ஸ் வேலையில் இறங்கினார், அந்த ரம்பத்தை அவர் கையாண்டது அது ஒரு பென்சில் அளவுதான் கனம் என்பது போலத் தெரிந்தது. மல்லின்ஸ் முடித்து விட்டு, தன் வேலையில் தானே சந்தோஷமடைந்தவராக இருந்தார். மிக் அந்த மரத்துண்டின் நீளத்தை இன்னொரு முறை கயிறால் அளந்து சரி பார்த்துக் கொண்டார். வெட்டப்பட்டு, இலை, கிளைகள் கழிக்கப்பட்ட அந்த மரத் துண்டை ட்ரக்கின் பின்புறம் படுக்கையில் இருக்கும்படி ஏற்றி வைத்தார்கள். வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள். ஜோ-ஜோ இன்னும் நகர்ந்திருக்கவில்லை. 

“மண்டபத்து வேலை நேரம்.” மிக் சொன்னார். 

அவர்கள் மரத்தை மண்டபத்துக்குத் தூக்கிக் கொண்டு போனார்கள். கழுதைக்குப் பின்னே, அது உதைக்கும் தூரத்துக்கு அப்பால், நிறுத்தினார்கள். மிக் அதை மண்டபத்தைத் தாங்குவதாக அமைக்கப்பட்ட, 2x2x6 அடி அளவு கொண்ட மரச்சட்டத்தின் அடித்தளத்தின் மீது, சாய்த்தார். 

மிக் இப்போது வினோதமான விதங்களில் கட்டப்பட்டிருந்த கழுதையின் நிலையை ஆராய்ந்து பார்த்தார், எங்கே துவங்கி, எப்படி வரிசையாகச் செய்வது என்று யோசித்தார். இருவருக்குமே உதை கிட்டும் அபாயம் இருந்தது. அவர் கழுதையைக் கட்டும் வாரை, முன் கால்களில் மூட்டுகளுக்குக் கீழே கட்டியிருந்ததை அவிழ்த்தார். கழுதை நகர்ந்தது, கால்களை அகட்டி வைத்தது, தன் தலையை உயர்த்த முயன்றது. ஆனால் சங்கிலி இன்னும் அசைக்க விடாமல் பிடித்துக் கொண்டுதான் இருந்தது. அதன் பின்னங்கால்கள் பிரிந்து கொண்டிருந்த தரைச் சட்டங்களில் நகர்ந்தன, புதுச் சுவடுகள் தரைச் சட்டங்களில் பதிந்தன. 

“ஓவ், ஓவ், சும்மா இரு ஜோ-ஜோ.” அவர் சொன்னார்.  “இப்ப எல்லாம் சரியாப் போயிடும். பொறு.” 

“அது மூத்திரத்தைக் கொட்டாம இருக்கணும்,” மல்லின்ஸ் சொன்னார். “அது என்னை மூழ்கடிக்கிற இடத்துல நான் நிக்கறேன்.”

மிக் மண்டபத்தின் ஒரு பக்கம் நகர்ந்து, குந்தி அமர்ந்தார். ஒரு இரும்புக் கொறடு கழுதையின் சேணத்தை, பதிக்கப்பட்ட ஒரு வளைவான இரும்புக் கண்ணில் பிடிப்பாகக் கட்டி இருந்தது. மிக் முன்னே நகர்ந்து அந்தச் சங்கிலியை விடுவித்தார். அந்தக் கழுதை தன் தலையைப் பளிச்சென்று திருப்பி, மிக்கின் முன்னங்கையைக் கடித்தது. அவர் பின்னே சென்று மண்டபத்திலிருந்து கீழே விழுந்து புல் தரையில் உருண்டார், ரத்தம் சட்டை மீது பூசியது. அவர் எழுந்து நின்று தன் கையைச் சோதித்தார். அத்தனை மோசமான காயமில்லை, ஆனால் நல்லதாகவும் இல்லை. 

மல்லின்ஸானால் சிரித்துக் கொண்டிருந்தார். 

“ஜோ-ஜோக்குத் தடுப்பூசி போட்டிருக்காங்களா?”

“எனக்குத் தெரியாது. அதொண்ணும் என்னதில்லையே.”

“எனக்குத் தெரியணும். அதுங்க நீர்விலக்கு நோய்க் கிருமியைச் சுமக்கிற மிருகங்க.”

ரேபீஸ் பற்றிய அச்சம் தந்த யோசனை மல்லின்ஸை வாயடைக்கச் செய்தது. அது திடீரென்று ஒரு கதவு அடித்து மூடப்பட்டது போலத் தெரிந்தது. அவர் வேகமாகத் தலையை ஆட்டினார். 

“கொஞ்சம் கரி எண்ணெயும், ஒட்டு நாடாவும் கொண்டு வாங்க.” என்றார் மிக். மல்லின்ஸ் கொட்டகைக்குள் போய்த் திரும்பி வந்து, ஒரு காலன் ஜாடியில் இருந்த கரி எண்ணெயைக் கொணர்ந்தார். அது என்ன என்று விவரணை ஏதும் அதில் ஒட்டப்படவில்லை, ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. மிக் அந்தக் கரி எண்ணெயைக் காயத்தின் மேல் ஊற்றி காயத்தைச் சுத்தம் செய்தார், பிறகு தன் மேல் சட்டையால் முன்னங்கையைச் சுற்றினார், அதை ஒட்டும் நாடாவால் சுற்றிக் கட்டினார். ஏதோ, தையல் போடத் தேவை இருக்கவில்லை. மிக் இதற்கு முன்பு ஒரு தரம் சுடப்பட்டிருக்கிறார், மூக்கு உடைபட்டிருக்கிறது, விலா எலும்புகள் உடைந்திருக்கின்றன, காலில் ஒரு வெடிகுண்டின் உலோகத் துண்டு எங்கோ புதைந்திருக்கிறது, ஆனால் கழுதைக் கடி இப்போதுதான் முதல் தடவை. 

மிக் மண்டபத்தின் நுனியில், கழுதையின் பின்னங்கால்கள் அருகே நின்றார். குளம்புக்கு மேல் மூட்டுகளைத் தரையோடு பிணைத்துக் கட்டிய தடித்த தோல்வாரில் இறுகிய முடிச்சு போடப்பட்டு இருந்தது. 

”எனக்கு ஒரு சோளம் அறுக்கிற கத்தி வேண்டும்,” என்றார். 

மல்லின்ஸ் விரைந்து போய், இரண்டடி நீளத் தகடுடைய கத்தியைக் கொணர்ந்தார். 

“பின்னாடி போங்க.” மிக் சொன்னார். “என்ன ஆகும்னு என்னால சொல்ல முடியாது, கழுதையோட சண்டை போட நான் தயாரா இல்லை.”

அவர் அந்தச் சோளக் கத்தியை உயர்த்தி சேண வாரை ஒரு வெட்டில் இரண்டாக ஆக்கினார். கழுதைக்கு என்ன ஆயிற்று என்பதோ, தான் விடுவிக்கப்பட்டதோ சரியாகப் புரியவில்லை என்பது போல ஒரு கணம் அப்படியே நின்றிருந்தது, பிறகு ஒவ்வொரு காலையும் பின் நோக்கி உதைத்தது, மண்டபத்திலிருந்து ஒரே தாவலாகத் தாவி வெளியே குதித்தது. நாற்காலி சாய்ந்து கீழே விழுந்து மரத்தில் மோதி உடைந்தது. ஜோ-ஜோ முன்வெளியில் குறுக்கே ஓடியது, தண்டவாளத் துண்டால் ஆன வேலியை ஒரே தாண்டலில் கடந்தது, காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டது. கூரை சரிந்தது ஆனால் அந்தப் புதுப் பூவரசு மரக் கம்பம் அதைப் பிடித்துத் தாங்கிக் கொண்டது. மிக் அந்தக் கம்பத்தை அதன் இடத்தில் நிலை நிறுத்த, எட்டு பென்னி ஆணிகளை அதில் அடித்து கூரையோடு பொருத்தினார். அந்த ஆணிகள்தான் மல்லின்ஸுக்குக் கிட்டி இருந்தன. 

“நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.” மல்லின்ஸ் சொன்னார். “இத்தனை எல்லாம் நீங்க ஏன் செஞ்சீங்க? ஜோ-ஜோ வைப் பார்த்து பரிதாபப்பட்டீங்களா?”

“இப்படிப் பாருங்க. அந்தக் கழுதை இப்படிக் கட்டப்பட்டே ரொம்ப நேரம் நின்னுதுன்னா, அது அப்புறம் ஒரு வேலைக்கும் ஒத்து வராது. அந்த அப்பா தன் பையனைக் குறை சொல்வார். அந்தப் பையன் இங்கே வந்து உங்கள் மேல வெறுப்பு காட்டுவான். யாருக்கும் வேண்டியிருக்காததா எதையாவது செஞ்சு வைப்பான். நீங்க பதிலுக்கு அவனுக்கு ஏதாவது ‘மரியாதை’ செய்வீங்க. அப்ப என்னோட தங்கை வந்து தலையிட வேண்டி வரும், யாரையாவது ஜெயில்லெ போட வேண்டி வரும். அதனாலெ இந்த நிலைமை ஜோ-ஜோக்காக மட்டும் இல்லை, எல்லாருடைய நல்லதுக்காகவும்தான்.”

“அந்தக் கழுதையைப் பார்த்த உடனே இந்த யோசனைகளை எல்லாம் நீங்க செய்தீங்களா?”

“அனேகமா அப்படித்தான், ஆமா.”

“நாசமாப் போக, மவனே, நீங்க ரொம்ப புத்திசாலிதான் போல இருக்கு.”

“கடி வாங்காம தப்பிக்கற அளவு புத்தி இருக்கலியே.”

மிக் கழுதையின் சொந்தக்காரர் இருக்கிற வீட்டுக்கு ட்ரக்கைச் செலுத்தினார். அவர் அடுத்த சரிவில்தான் இருந்தார் என்பது அவருக்குக் கொஞ்சம் வியப்பாக இருந்தது. ஜோ-ஜோ ஏற்கனவே தன்னுடைய திறந்த கொட்டிலில் நின்றது. மிக் ட்ரக்கிலேயே இருக்கத் தீர்மானித்தார்.  அந்த அடுத்த நிலக்காரருக்கு இடுப்பு வரை உயரம் குறைவாக இருந்தது, ஆனால் கைகள் மிக வலுவாக இருந்தன. கொஞ்சம் கெந்தியபடி நடந்தார். அவரிடம் கால்நடை மருத்துவர் கொடுத்த தடுப்பூசிச் சான்றிதழ் (ஜோ-ஜோவுடையது) இருந்தது. அது இருவருக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

மிக் அந்தச் சரிவை விட்டு வெளியே ஓட்டி வந்தார். அங்கே இருந்த சிகமோர் மரத்திலிருந்த ஒரு காக்கை அவருடைய பயணத்தை மர உச்சியிலிருந்தபடி கண்காணித்தது, மற்ற பறவைகளுக்காக அது வேவு பார்த்தது போலிருந்தது. அந்தச் சாலை அடர்ந்த மரங்களூடே வளைந்து ஓடிற்று, இருபுறமும் வெள்ளை எருக்கும், காட்டு முள்ளங்கிச் செடிகளும் வெப்பத்தில் சோர்ந்து வளைந்து நின்றன. அவருடைய கையில் துடிப்பாக வலித்தது, மற்றபடி அந்த மலைகளில் அது ஒரு மிக நல்ல காலை நேரம்தான். 

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.