பய வியாபாரியா ஹிட்ச்காக்?

[மூலம்: ஜான் பான்வில்- ‘The Haunted Imagination of Alfred Hitchcock’

The New Republic, April, 2021]

தமிழாக்கம்: பஞ்சநதம்

பாகம்- 2

இதைக் கேட்டாலே நமக்குஒரு கேள்வி எழலாம், இவருடைய ரசனையில் ஏதோ கோணலாக இருக்கிறதா? பதில் சொல்லும் விதமாக, எது ஹாஸ்யமாக இருக்கிறது என்பது பற்றிய இவரது நோக்கு சில சமயம் கேவலமான தேர்வுகளுக்கும், சாதாரண நாகரீகம் கூட இல்லாத முடிவுகளுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது என்கிறார் ஒய்ட்.

1960 களின் நடுவில் இரு பிரிட்டிஷ்காரர்கள், ஐந்து குழந்தைகளை பால் வன்முறைக்கு உட்படுத்தியதோடு, பிறகு கொன்று ரகசியமாகப் புதைத்த செய்தி வெளி வந்தபோது, அது குறித்து ஹிட்ச்காக் ஒரு பேட்டியில் கேட்கப்படுகிறார். அவர் பதில் சொல்கிறார், “கொலைகாரர்கள் குழந்தைகளை உயிரோடு புதைக்கும்போது அக் குழந்தைகள் வீறிட்டு அலறுகின்றன, அதை அவர்கள் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்…. அபாரமாக இல்லை?”[1]

ஒரு மனிதனாகவும், திரைப்பட இயக்குநராகவும் அவரிடம் குரூர உணர்வு இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ”மற்றவர்கள் அவமானப்படுவதைப் பார்ப்பது அவருக்கு ஏதோ சிறந்த விளையாட்டு நிகழ்ச்சி போலத் தெரிந்திருந்தது,” என்று ஒய்ட் கவனிக்கிறார்.  க்ரஹாம் க்ரீன் என்ற பிரபல எழுத்தாளரைத் தனக்குத் திரைக்கதை எழுத வைக்க ஹிட்ச்காக் முயன்றிருந்தார். க்ரீனைப் போலவே ஹிட்ச்காக்கும், குரூரமானதும், இழிவு செய்வதுமான ஏமாற்று வேலைகளை நகைச்சுவை என்ற பெயரில் செய்வதில் மிக்க மகிழ்ச்சி பெறுபவர். இவை பெரும்பாலும் பெண்களிடமே நிகழ்த்தப்பட்டன. 

ஒரு நடிகைக்கு புகை அலர்ஜி என்று தெரிந்தும், அவர் ஒரு ஃபோன் பூத்தில் இருக்கும் காட்சியில் அந்த பூத்தில் நீராவிப் புகையை மெல்ல ஏற்றினார். ஒரு குழு உறுப்பினருடைய மதுபானத்தில் வலுவான மலமிளக்கியைக் கரைத்துக் கொடுத்து விட்டு, அவரை ஒரு பொது இடத்தில் கைகளை விலங்கால் கட்டிப் போட்டு விடுமாறு செய்வதற்கு நடந்த சதியில் கலந்து கொண்டார். இந்த வகை ‘நையாண்டிகளும்’ இவை போன்ற இதர நடவடிக்கைகளும் ஒய்ட் எழுதுகிற புத்தகத்தில் ‘மகிழ்வூட்டுபவர்” என்ற தலைப்பு கொண்ட பகுதியில் விரித்து எழுதப்படுகின்றன. பான்வில் இந்தத் தலைப்பு குறித்தும் தன் இகழ்வைச் சுருக்கமாகக் காட்டுகிறார்.

ஆனால் நியாயமாகப் பார்த்தால், கேலிக்கு உள்ளாக்கும் சம்பவங்களை நோக்கினால் அவற்றிலிருந்து ஹிட்ச்காக் தன்னையும் விட்டு வைக்கவில்லை. ஹிட்ச்காக்கின் கோமாளித்தனம் பற்றி விளக்கம் தேடுவதானால், அது உலகம் அவரைக் கேலி செய்வதற்கு எதிரான ஒரு தற்காப்பு உத்தி என்று சொல்லலாம் என்கிறார் பான்வில். அவருக்குத் தன் பெரும் இடுப்பின் அளவு, உருண்டைத் தலை, மூன்று மடிப்புடன் தொங்கும் தாடை ஆகியன குறித்துச் சுயக் கூச்சம் நிறைய இருந்தது. ஆனாலும், விருந்துகளில் – மாலை விருந்துகளில்– அவர் “மார்பக பாலே” நிகழ்த்திக் காட்டுவார். அப்போது அவர் தன்   “மேலாடைகளைத் திடீரெனக் களைந்து தன் கொழுத்த நெஞ்சின் தசைகளைச் சுழற்றிக் காட்டுவார்,’ இது விருந்தினருக்கு வேடிக்கை காட்டுவது என்று அவர் எண்ணம்.”  ஒரு பார்வையாளர் தெரிவித்தாராம், “வேறு சில சமயங்களில் அவர் தன் தொப்பையில் ஒரு முகத்தை வரைந்து, சீட்டி அடித்தபடி, வயிற்றுத் தசைகளை அசைப்பார். அந்த முகத்தின் வாய் அவருடைய தொப்புளில் இருக்கும், அப்போது அந்த முகமே சீட்டி அடிப்பது போலவும் தோற்றம் எழும்.”

தற்கால வாழ்க்கைச் சரித ஆசிரியர்களைப் போல ஒய்ட் ஹிட்ச்காக்கின் பாலுறவுத் தேர்வுகளைப் பற்றிச் சுதந்திரமாக ஊகங்களை மேற்கொள்கிறார், ஆனால் இவை அப்புத்தகத்தில் அதிகமாக இல்லை. அவருடைய குடும்ப வாழ்வு சீராக இருந்திருக்கிறது. ஒய்ட் வியக்கிறார், இவரோடு அவருடைய மனைவியால் எப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும்? ஆனால் அந்த மணவாழ்வு தாம்பத்திய உறவு இல்லாதிருந்திருக்க வேண்டும் என்று மென்மையாகச் சொல்கிறார். ஆல்மாவுக்கு வெளியில் ஒரு உறவாவது ஏற்பட்டிருந்தது, ஆனால் ஹிட்ச்காக்கின் பாலுறவு வாழ்வு இருட்டானது என்கிறார் ஒய்ட்.  அதே நேரம் ஹிட்ச்காக்கே தன் விருப்பங்கள் குறித்து தெளிவில்லாததைப் பற்றிப் பேசியிருக்கிறார். 1930களில் அவருக்குத் திரைக்கதை எழுதியவரான ரான் ஆக்லாண்ட் என்பவர், ஒரு தற்பாலுறவுக்காரர். அவர் எழுதித் தெரிவிக்கிறபடி, ஆல்மாவை ஹிட்ச்காக் சந்தித்திராவிட்டால், அவரும் தற்பாலுறவுக்காரராக மாறி இருக்க வாய்ப்பு அதிகம்.

ஒய்ட் சில இடங்களில் எழுதுவன ஏற்கப்பட முடியாத அளவு வினோதமாக இருக்கின்றன என்று பான்வில் கட்டுரை சுட்டுகிறது.  “20 ஆம் நூற்றாண்டில் வேறெந்த ஆண் கலைஞரும் இத்தனை நேரத்தையும் முயற்சியையும் செலவழித்து பெண்களின் அடையாளங்களையும் வாழ்வுகளையும் அலசி நோக்கவில்லை.” என்று எழுதுகிறார் ஒய்ட்.  இது தடாலடியான அறிக்கை என்பது பான்விலின் குறிப்பு.

ஹிட்ச்காக் திரையிலும், வெளி வாழ்விலும் பல நடிகைகள் பற்றி உளைச்சல் கொண்டிருந்தார் என்பது உண்மைதான். க்ரேஸ் கெல்லி, கிம் நோவாக், மற்றும் குறிப்பிடத் தக்க விதத்தில் டிப்பி ஹெட்ரென் ஆகியோரைத் தொடர்ந்து தன் படங்களில் நடிக்க வைத்தார், அல்லது தொடர்ந்து நடிக்க வைக்க முயற்சி செய்தார். இதை அவர் தன் “அடக்கி ஆளும் கவர்ச்சியால்” செய்தார் என்று ஒய்ட் சொல்வது பொருத்தமான சொற்றொடராக இருக்கலாம், ஆனால் நடைமுறையில் அது அந்த நடிகைகளை துன்பத்தில் ஆழ்த்தி இருந்தது என்று திரள் வாசகருக்கான பத்திரிகைகள் சொல்லி இருந்தன, இன்றும் அந்த வருணிப்பு தொடர்கிறது. ஆனால் பெருவாரி நடிகைகளின் பேட்டிகள் அன்றும், சமீபத்து வருடங்களிலும் அப்படி ஒரு தெளிவான எதிர்மறைச் சித்திரிப்பைக் கொடுக்கவில்லை.[2]

ஹெட்ரெனின் இரண்டு படங்கள், த பேர்ட்ஸ் மற்றும் மார்னி இன்றளவும் விமர்சகர்களிடம் மதிப்புடன் உள்ள படங்கள். இரண்டிலும் ஹிட்ச்காக் தன் சைக்கோ படத்திற்குப் பெற்ற அளவு வணிக வெற்றி பெறவில்லை. ஹெட்ரென் ஹிட்ச்காக்கின் அளவு மீறிய கட்டுப்பாடுகள், தவிர அவரது சில குரூர நகைச்சுவை முயற்சிகள் ஆகியவற்றால் அவருடைய படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார். ஹிட்ச்காக் மறுபடி வேறு கதாநாயகிகளைத் தேட வேண்டியதாயிற்று.

பான்வில் கவனிக்கிறார், ஒய்ட்டின் புத்தகத்தின் நேரடியான வருணிப்பில் நமக்குக் கிட்டும் ஒரு மனிதர், அசாதாரணமான விதங்களில் அடர்ந்த குணங்களும், வினோதமான ரசனையும் கொண்ட ஒரு மனிதர், அவர் ஏதோ விதங்களில் ஆழ்ந்த காயங்கள் பெற்றவர் என்பது போலவும் தெரிகிறது.

ஹிட்ச்காக் ஒரு மேதை இல்லை என்று வைத்துக் கொண்டால் கூட, அவருக்குக் கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் மேதைத் தனம் இருந்தது என்பது நிஜம், அந்த நிகழ்ச்சிகள் எல்லாருக்கும் மகிழ்ச்சி தந்தனவா என்பது ஐயமுள்ளதாக இருக்கலாம். ஒய்ட் அவரை இருபதாம் நூற்றாண்டிற்கே இலச்சினையான கலைஞர் என்று சொல்வது கூடதிகமாக இருக்கலாம், அவரை “அனைவரிலும் சிறந்த திறமையாளரில்லை என்றோ, சிறந்த சாதனைகள் கொண்டவரில்லை என்றோ நாம் கருதக் கூடும், ஆனால் அவர் நிச்சயம் மிக விரிவான தாக்கம் கொண்டிருந்தவர்.” என்று சொல்வது பொருந்தும். புகழ் பெற்ற இயக்குநரும், நடிகருமான ஆர்ஸன் வெல்ஸ் ஹிட்ச்காக்கைப் பற்றிச் சொன்னாராம், “நூறு வருடங்கள் கழிந்த பின்னர் ஹிட்ச்காக்கின் படங்கள் இன்னமும் சுவாரசியமானவையாக இருக்கும் என்று நான் நிஜமாகவே நம்பவில்லை.” அதை விட ஒய்ட்டின் முடிவு நம்பக் கூடிய தன்மை கொண்டது என்று பான்வில் சொல்கிறார். அவருடைய எல்லாப் படங்களும் பிரமாதமானவை இல்லை, சில நன்றாகக் கூட இல்லை. ஆனால் சில காலம் கடந்து நிற்கக் கூடிய சாதனைகள். வெர்டிகோவைப் பார்த்தீர்களானால், இதை ஏற்பீர்கள் என்கிறார் பான்வில்.

***


[1] இங்கு இங்கிலிஷ் சொற்பிரயோகத்தை நேரடியாக மொழி பெயர்ப்பது சாத்தியமாக இல்லை. அவர் சொன்னது “Jolly good stuff.”

[2] க்ரேஸ் கெல்லிக்கு ஹிட்ச்காக்கின் பயிற்சி உதவிய விதம் பற்றி இங்கே காணலாம். இதில் ஹிட்ச்காக் என்னென்ன வகைகளில் சிறு விவரங்களைக் கூட கவனித்து மாற்றினார் என்பதையும் பார்க்கலாம். https://offscreen.com/view/hitchcock-kelly

கிம் நோவாக்கின் ஹாலிவுட் அனுபவங்கள் பற்றிய ஒரு பேட்டியில் ஒரு பத்திதான் ஹிட்ச்காக் பற்றி இருக்கிறது, அதில் அவர் ஹிட்ச்காக்கை எதிர்மறையாகப் பேசுவதில்லை. இது நோவாக் 88 வயதானபோது எடுத்த பேட்டி (2021 இல்) என்பதால் ஹிட்ச்காக் இது எடுக்கப்பட்டபோது உயிருடன் இல்லை, ஆனாலும் நோவாக் ஏதும் பழி சொல்லவில்லை என்பதைக் கவனிக்கலாம். https://www.theguardian.com/film/2021/feb/15/i-had-to-leave-hollywood-to-save-myself-kim-novak-on-art-bipolar-hitchcock-and-happiness

டிப்பி ஹெட்ரென் ஒருவர்தான் ஹிட்ச்காக் பற்றிக் குறை சொல்கிறார். அவர் சமீபத்தில் தன் வாழ்க்கையைப் பற்றிய புத்தகம் எழுதுகையில் ஹிட்ச்காக்குடன் அவருக்கு ஏற்பட்ட மோதல்களைப் பற்றியும், ஹிட்ச்காக் அவர் மீது கொண்டிருந்த மோகம் எப்படி வெறுப்பாகி டிப்பி ஹெட்ரனின் நடிப்புத் தொழில் வாழ்வை ஹிட்ச்காக் நாசமாக்கினார் என்பதையும் அவர் பேசுகிறார். இது பற்றிய ஒரு பேட்டி இங்கே: https://www.theguardian.com/film/2016/oct/31/tippi-hedren-alfred-hitchcock-sexually-assaulted-me

Series Navigation<< பய வியாபாரியா ஹிட்ச்காக்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.