நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே

இந்து தர்மம் அசைவில்லாப் பொருட்களிலும் உயிர்த்தன்மையைப் பார்த்த ஒன்று. ‘உயிர்களிடத்தில் அன்பு செய்தல் வேண்டும்; தெய்வம் உண்மையென்று தான் அறிதல் வேண்டும்.’

நாம் காணும் இவ்வுலகு பலவிதப் பொருட்களால் நிறைந்துள்ளது. இயற்கை ஒன்றுடன் ஒன்றின் சமச் சீரை நிர்ணயிக்கும் விதமாகத்தான் செயல்பட்டு வந்திருக்கிறது. காடுகளில் வன் மிருகங்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், ஆயிரம் காட்டினை தன் லத்தியால் விளைவிக்கக்கூடிய யானைகள் அவைகளைவிட சற்று எண்ணிக்கை கூடுதலாகவும், மான், முயல் போன்ற மிருகங்கள் வன் விலங்குகளுக்கு இரையாகும் விபரீதம் இருப்பதால் அவைகளின் எண்ணிக்கை இன்னும் மிகுதியாகவும், பெரும் காட்டு விலங்குகள் வேட்டையாடிய உயிரியின் எச்சத்தை உண்ணும், ஓனாய், நரி போன்றவை தேவையான அளவிலும், தாவர உணவினை எடுக்கும் உயிரிகளுக்கான பசுமை வகைமைகளும், அனைத்தையும் இணைத்த ஒரு மாபெரும் நெசவு இப்பூமி. இவற்றைப் போலவே நீர் வாழ் உயிரினங்களைப் பற்றியும் சொல்லமுடியும்.

11,000 மற்றும் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய உலகின் மிகக் கொடும் பாலைவனமான சஹாரா, பசுமை நிறைந்து விளங்கியது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அந்தப் பூமி எப்படி இப்படிப் பாலையாயிற்று? வீட்டு வளர்ப்புப் பிராணிகள் அதிகமாக அதிகமாக பசுமை குறைந்து, புதர்க்காடுகள் அமைந்தன. இந்த வீழ்ச்சிக்கு முதல் காரணமாக மனிதர்களின் பேராசையைச் சொல்கிறார்கள் அறிஞர்கள்; இரண்டாவது பூமிச் சுழல் முறை. காட்டினை அழித்து பயிர் நிலங்களை அதிக அளவில் ஏற்படுத்திய மனிதனின் பேராசை, பூமிக்கும் அதன் சூழலுக்குமிடையே நிலவிய உறவினைப் பதம் பார்த்தது. அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பிராணிகளும் இதே நிலையினை ஏற்படுத்தியது என்பதை தரவுகளுடன் நிரூபித்துள்ளார்கள். அழிப்பனவற்றிற்கும், அழிபடும் உயிர்களுக்கும் இடையே உள்ள சீரான அளவு, நிலவியல் தன்மைகளைச் சார்ந்திருக்கிறது. இதைச் ‘சூழியல் அச்சம்’ என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு, மான்கள் திறந்த நிலவெளியில் அதிக நேரம் தங்காது- தம்மை, மனிதர்களும், வன் மிருகங்களும் எளிதாக வேட்டையாடிவிடும் எனும் பயம் அவற்றிற்கு உண்டு. ஆனால், இந்த அச்சம் இல்லாத நிலப் பகுதிகளில், அவைகள் நதிக்கரையோரங்களில் சுதந்திரமாகத் திரிந்து, அப்படுகைகள் குறைவதற்கும் அதன் மூலம் பசுமை குறைந்து போவதற்கும் காரணமாகின்றன. ‘யெல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்கில்’ ஓநாய்களை மீள் வரச் செய்து, அழிந்த காடுகளை மீட்டெடுத்தார்கள். (https://thewire.in/environment/sahara-vegetation-paradise)

நோய் பரப்பும், கொசுக்கள், பயிரை நாசம் செய்யும் எலிகள், காட்டை அழிக்கும் பூச்சிகள், வளர்ப்புப் பூனைகள் இவைகள் மனிதனுக்கும், சுற்றுச் சூழலுக்கும் விளைவிக்கும் கேடுகள் அதிகம்; 1970 முதல் கிட்டத்தட்ட 1.3 ட்ரில்லியன் டாலர்கள் உலகப் பொருளாதாரத்தை இவை பாதித்துள்ளன என்று ஃப்ரெஞ்ச் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வசிப்பிடங்களில் மிக எளிதாக உட்புகும் தாவரங்கள், மெல் உடலிகளான நத்தைச் சிப்பிகள், பூச்சிகள், பறவைகள், ஊர்வன, பாலூட்டி வகையிலான வளர்ப்பு மிருகங்கள் ஆகியவை மொத்தமாகச் செய்யும் கேட்டினை விளக்கி ‘நேச்சர்’ இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்தக் கட்டுரையின் முதன்மை ஆசிரியரும், பாரிஸ்-சக்லே பல்கலையில் சூழியல் துறையில் பணிபுரிவருமான Christophe Diagne சொல்கிறார்: “இதற்கு மனித இனம் மிகுந்த விலை கொடுத்துக்கொண்டிருக்கிறது; இது இன்னமும் கூடுமென்றும் அனுமானிக்கப்படுகிறது.” ஆக்கிரமிக்கும் இனங்களின் தகவல்கள் திரட்டித் தொகுக்கப்பட்டு இதன் விலையைக் கண்டறிந்திருக்கிறார்கள்- அதில் சூழியல் கேடுகள், மீன் வளம் குறைதல், பயிர் நாசங்கள், ஆகியவற்றோடு, பூச்சிகளை அழிப்பதில் செலவிடப்படும் தொகையும் சேர்க்கப்பட்டு கிட்டத்தட்ட ஆண்டொன்றுக்கு 26.8 பில்லியன் டாலர்கள் அளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஆக்கிரமிக்கும் இவைகளில், முதல் பத்து இடங்களில், பயிர்களை உண்ணும் முயல்களும், வட அரைக்கோளத்தில் மரங்களை அழிக்கும் ஆசிய நாடோடி அந்துப் பூச்சிகளும் உள்ளன. (சில வருடங்களுக்கு முன்னர் ஒரு காணொலி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட  மரத்தின் இலைகளை மான்கள் அதிக அளவில் உண்டு மரங்களுக்கு மிகுந்த சேதத்தினை ஏற்படுத்தின. தங்கள் வேர்கள் மூலம் உரையாடிக் கொண்ட அந்த மரங்கள் ஒருவித நச்சுப் பொருளைக் கூட்டாக உற்பத்தி செய்து தங்கள் மர இலைகளில் அதைச் சேமித்து, அழிக்கும் மான்களை மயக்கத்தில் ஆழ்த்தி ஒழித்தன.) டெங்கு, சிக்கன்குன்யா, ஜிகா வைரஸ் போன்ற நோய்களை உண்டாக்கும் தென் கிழக்கு ஆசியாவின் கொசுவும் இந்தப் பட்டியலில் இடம் பெறுகிறது. பாரிஸ்- சக்லே பல்கலையைச் சேர்ந்த ஃப்ராங்க் கோர்ஷாம் சொல்லும் ஒரு விஷயம் கவனத்திற்குரியது “வளரும் உலக வர்த்தகத்தால், அறிந்தோ, அறியாமலோ நாம் பல இனங்களை இறக்குமதி செய்து வருகிறோம்.” (ஓரு காலத்தில் நம் நாட்டில் கடல் தாண்டிப் பயணிப்பது பெரு வர்த்தகர்களுக்கு மட்டும் உரியதாக இருந்தது; கடல் மேல் சென்று நாடுகளைப் பிடிப்பது தனி விஷயம். பிராமணர்கள் கடல் கடந்து பயணித்தால் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டார்கள். காந்தி போன்றார் கப்பல்களில் மேற்கொண்ட கடற்பயணத்திலிருந்து திரும்பும்போது ஊர் விலக்கு செய்யப்பட்டு, பிறகு சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபிறகே திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள் என்பது நமக்கு நினைவிருக்கலாம்.)

ஆஸ்திரேலியாவில் 1800 களின் தொடக்கத்தில் இருந்த யூரோப்பிய காட்டு முயல்களின் எண்ணிக்கை மிகவும் பெருகி அவை பயிர்களை நாசம் செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த தேசத்தின் இனங்களையும் பெருமளவில் அழித்தன. இந்த முயல்கள் இத்தேசத்திற்குப் புலம் பெயர்ந்த பணக்கார யூரோப்பியர்கள் வேட்டையாடிக் களிப்பதற்காக முதலில் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த அரசு 1950-ல் மைக்ஸோமாடோஸிஸ் என்ற நோயைப் பரப்பி இத்தகைய முயல்களை 90% அழித்தது. அரசு பரப்பிய அந்த நோய் மற்ற உயிரினங்களைத் தாக்கவில்லை; இந்த முயல்களும் இத்தகைய கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டன! பின்னர் 1995-ல் இரத்தக் கசிவு ஏற்படுத்தும் கிருமிகளை அந்தக் காட்டு முயல்களிடையே பரப்பி அவற்றின் பெருக்கத்தைக் குறைத்தார்கள். (https://pubmed.ncbi.nlm.nih.gov/20617651/)

தென் பசிபிக் பகுதியில் வாழும் மரப் பாம்புகள் தற்செயல் விபத்தாக க்வாம்(Guam) பகுதியில் இடம் பெற்று அதன் பல்லிகளையும், பிரதேசம் சார்ந்த பறவை இனங்களையும் அழித்ததோடு நிற்காமல், மின்னமைப்புகளில் உள் நுழைந்து, மின் வினியோகத்தைப் பாதித்தன; மனிதர்களை எப்போதுமே அச்சத்தில் வைத்திருந்தன.

முந்தைய சோவியத் ரஷ்யாவின் நீர் நிலைகளிலிருந்து புலம் பெயர்ந்த ஜீப்ரா சிப்பிகள் வட அமெரிக்காவின் கிரேட் லேக்ஸை ஆக்ரமித்து, உள் நாட்டு இனங்களை அழித்து பல மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை உண்டாக்கின. தங்களுடைய இனிய (!) கரகரப்பு கர்ண கடூர இசையாலே வசிப்பிடங்களின் மதிப்பைக் குறைத்த கோக்கி (Coqui) தவளைகள் ஹவாயில்! [இதன் கூக்குரலை இங்கே கேட்கலாம்: https://soundcloud.com/early-detection/one-individual-coqui-frog?in=early-detection/sets/coqui-greenhouse-frog-vocalizations] இந்தத் தவளைகள் சூழலுக்கு ஏற்படுத்தும் அபாயத்தை உணர்ந்த ஹவாயின் சூழல் பாதுகாப்பு அமைப்பு இது பற்றி கொடுத்துள்ள எச்சரிக்கை/ தகவல் பக்கம் இங்கே: https://dlnr.hawaii.gov/hisc/info/invasive-species-profiles/coqui/

சூழல் சவால்களை உள்ளபடியே உணர அதற்கு உலகு கொடுத்து வரும் விலை மதிப்பை உணர்த்துவது அவசியம் என சூழலியலாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், பண மதிப்பைக் கணக்கில் கொள்வது ஒருபுறம் என்றால், கணக்கிட முடியாத அளவில் மனித நலத்தையும், சூழல் நலத்தையும் இத்தகைய ஆக்கிரமிப்புகளான பாம்புகள், எலிகள் பெரும் பாதிப்பில் செலுத்தியுள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

IPBES என்ற ஐக்கிய நாடுகளின் பல்லுயிரிகள் அறிவியல் ஆலோசனை மையம், மனிதனால் கொண்டுவரப்பட்ட- பூச்சிகள் ஆக்கிரமிப்பை விளைவாகக் கொணரும் ஐந்து கெடுதலான முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இவ்வாறு சொல்கிறது- உலகளாவிய சுற்றுச் சூழல் பாதிப்பு, நிலப் பயன்படுத்தலில் நிகழும் மாறுபாடுகள், இருக்கும் வளங்களை அளவிற்கு அதிகமாக நுகர்வதற்கான முன்னெடுப்புகள், மாசு அதிகரிப்பு, சுற்றுச் சூழல் வெம்மை அடைவது. 1970ஆம் ஆண்டிலிருந்து 21 மாதிரி நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளின்படி, ஆக்கிரமிக்கும் இனங்கள் 70% அதிகரித்துள்ளன என்ற கவலைக்குரிய செய்தியை IPBES சொல்கிறது. ஃப்ராங்க் கோர்ஷாம் சொல்கிறார்: “உலக வர்த்தகம் இத்தகைய ஆக்கிரமிக்கும் இனங்களை புதிதாகக் கொண்டு வருகிறது. மாசு மிகுந்த சுற்றுச் சூழலோ, அவைகள் நன்கு செழித்து வளரக் களம் அமைக்கிறது.’ அவர் மேலும் சொல்கிறார்:  “செல்லப் பிராணிகளான பூனைகள் செய்யும் அழிப்பும் அதிகம்; பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் இருக்கும் இவை, பறவைகள், ஊர்வன போன்றவற்றிற்குப் பெரும் யமனாக உருவெடுத்துள்ளன.”

இந்த ஆக்கிரமிப்பு பிரச்சனையை எதிர் கொள்ள, முன் கூட்டியே கண்டறிதல், தவிர்க்கும் முறைகள், சரியான தரவுகள் அவசியம் தேவை.

கொசுக்களை, பல்லி, தவளைகள் சாப்பிடும்; அவற்றை சில வகைப் பாம்புகள் உண்டுவிடும். பாம்புகள் எலிகளையும் தின்றுவிடுவதால் விவசாயம் மிகுந்த நிலங்களில் பாம்புகள் வழி பாட்டிலும் இடம் பெறுகின்றன. பாம்பினை கருடன் உண்டுவிடும். இயற்கை உயிர்களைப் படைத்திருந்தாலும் அதன் சமச் சீரினை அதுவே பாதுகாத்து வந்தது. 

பூஞ்சைக் காளான்கள் பூமியின் மண்ணைக் காக்கின்றன. அதன் மெல்லிழைகள் நீரும், சத்தும் இருக்கும் இடத்தை தாவரங்களுக்கு உணர்த்துகின்றன. சில வகைமைகளைப் பாதுகாக்கின்றன. (https://www.nytimes.com/2021/04/07/realestate/whats-up-with-those-weird-looking-mushrooms.html)

மனிதன் தலையிட்டான்; காட்டினை அழிப்பதில் கர்வம் கொண்டான்; செல்லப் பிராணிகளாக பூனை, நாய் போன்றவற்றை வளர்த்தான். ஒருக்கால் அன்பை சக மனிதனிடம் செலுத்தத் தெரிந்திருந்தால் இவ்வளவு செல்லப் பிராணிகள் வந்திருக்காதோ, என்னவோ?

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்’

திருக்குறள்

உசாத்துணை : https://phys.org/news/2021-03-us128-trillion-stark-economic-carnage.html

பானுமதி ந.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.