வேணு தயாநிதி
முடிக்காமல்
மீதம் வைத்த
கவிதை ஒன்று
தன்னைத்தானே எழுதிக்கொண்டு
காகித அடுக்கில் நாவலாகி
எழுந்து நிற்கிறது மேசையில்.

ஆரஞ்சுநிறத் தீற்றலில்
எதிர்பாராமல் எழுந்து விட்ட சூரியன்
அதிர்ச்சியில்
புத்தகத்திலிருந்து
தாவிக்குதித்து ஓடுகின்றன,
எதிர்ப்பக்கத்தின் கிறுக்கலில்
உயிர் பெற்றுவிட்ட
இளஞ்சிவப்பு நிற
ஈஸ்டர் முயல்கள்.
கண்ணாடி இழைகளின் நெடுஞ்சாலைகளில்
முட்டி மோதிக்கொண்டு
முடிவற்று அலைந்த
பதில் வரப்பெறாத
அஞ்சல்களின் சமிக்ஞைகள்,
உருவம் பெற்று
பேச ஆரம்பித்து விட்டன
ஒலிபெருக்கியில்.
சாளரத்தின்
திரைச்சீலையிலிருந்து
வெளியேறி,
கம்பளம் விரித்த தரையில்
அசைந்தாடி
அணிவகுப்பில் நடந்து செல்கின்றன
அன்னப்பறைவகள்.
அனைத்தையும்
கண்ணாடிக்கு வெளியில் இருந்து
கண்டு வியந்து
கையசைத்து,
ஒடிந்து வளைந்து
ஒட்டக சிவிங்கியின் குட்டிபோல்
நின்றிருக்கும்,
சர்க்கரை மேப்பிளின்
தாழ்ந்து வளைந்த
ஒரு கிளை.
***