தாச்சி

தெரிசை சிவா

ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வந்தது. ஊதிப் பெருத்த பலூன் ஒன்றை அடிவயிற்றில் வைத்து தைத்தது போலொரு கனம். வளைவுகளிலும் வேகத்தடுப்பான்களிலும் வண்டி வேகமெடுக்கும் போதெல்லாம் “மூத்திரப்பை” நசுங்கி உடைந்து விடுவது போல ஒரு பதட்டம். அதிகப்படியாய் இருப்பது பேர்கள் ஏற்றக்கூடிய இந்த சிறிய பேருந்தில் நாற்பது பேர்கள் ஏற்றினால் இப்படித்தான் இருக்கும். சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள். திருச்செந்தூர் முருகனைப் பார்க்கப் போக வேண்டியதுதான். அதற்காக இப்படி கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு போக யார் சொன்னார்களோ?. கடுகு போட இடமில்லாதபடி வண்டிக்குள் பெரும் கூட்டம். 

திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள். நெருங்கி முண்டியடிக்கும் உடல்கள். எல்லாம் நெருங்கிய சொந்தக்காரர்கள் மற்றும் பக்கத்து வீட்டு உறவுகள் தான். இருக்கையிலிருந்த ஒவ்வொரு பெண்களின் மடியிலும் சிறிதும் பெரிதுமாய் குழந்தைகள் உட்கார்ந்திருந்தனர். என் மடியிலும் ஒரு வாண்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தது. சரியாகச் சொன்னால் கிடந்து உருண்டுக் கொண்டிருந்தது. கண்டிப்பாக அனுமன் ஜெயந்தியில் பிறந்த குழந்தையாக இருக்கக்கூடும். செய்யும் நடவடிக்கைகள் அப்பட்டமாக அதை பறைசாற்றின. வண்டிக்குள் இருந்த ஒவ்வொருவரின் கைக்குள்ளும், காலுக்குள்ளும் மற்றொருவரின் கைகால்கள் பிணைந்திருந்தன. கூட்டத்தில் யாரென்று சரியாகப் பிடிபடவில்லை. ஏதோ ஒரு புண்ணியாத்மாவின் கடினமான பாதரட்சையின் அடிப்பாகம் என் பெருவிரலை அடிக்கடி பதம்பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்திற்கு நடுவே கிடந்து உருளும் தர்பூசணிப் பழங்களென மொத்த உடல்களும் நசுங்கி நெளிந்தன. கூட்ட மேளத்தால் ஆசுவாச பெருமூச்சென்பது என் நுரையீரலின் சுவாசத்திற்கு அடிக்கடி தேவையாயிருந்தது. 

தாச்சி… கதவை பூட்டுனேன்… கேஸை ஆப் பண்ணினானு சந்தேகமா இருக்கு? – என்று கூட நெரிசலில் தலையுயர்த்திக் கூறினாள் செண்பகத்தம்மா. முற்றித் திரண்ட ஹைபிரிட் எலுமிச்சை பழ நிறத்திலிருந்த செண்பகத்தம்மாவிற்கு “கணீர்” என்ற வெண்கலக் குரல். கனிவும், கருணையும் ஒரு சேர பூத்து குலுங்கும் முகம். கழுவித்துடைத்த பளிங்கு கல்லைப்போல் வெள்ளை மனம். பொடு பொடுவென்ற அவரின் அறுவை பேச்சை மட்டும் பொறுத்துக்கொள்ள பழகிவிட்டால், வெகு ஜோராக அவளுடன் வாழ்ந்து மடியலாம். 

நான் அடுப்பை அணைச்சிட்டுதான் வந்தேன்… அதையும் இதையும் சொல்லி என்னையும் பயம்புறுத்தாதீங்கோ… – ஒண்ணுக்கு மேலும் முட்ட லேசான எரிச்சலோடு பதில் கூறினேன். செண்பகத்தம்மா சமாதானமாகியது போலிருந்தது. 

யாரோ சொல்லிக் கொடுத்தது போல் மடியிலிருந்த வாண்டு அடிவயிற்றை கால்முட்டியால் அழுத்திக்கொண்டேயிருந்தது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாமென்ற “உச்ச உணர்ச்சி நிலை”. இந்த வைபவத்திற்கு வராமல் இருந்திருக்கலாமென்று மீண்டும் தோன்றியது. வராமல் இருந்திருந்தால், “தாச்சி… கோவத்துல இருக்கா… அதான் வரலன்னு”- செண்பகத்தம்மா எல்லோரிடம் குறை கூறியிருப்பாள். அதற்காக வரவேண்டியதாயிற்று. என்ன செய்வது. தாயா… பிள்ளையா… பழகியாயிற்றே. 

ஊரிலுள்ள அனைவரும் என்னைச் சுட்டிக்காட்டி “இவளின்றி செண்பகத்தம்மா வீட்டில் ஓரணுவும் அசையாது” – என பரிகாசமாய் விமர்சிக்கும் போது எனக்குள் ஒரு ஆனந்தமும், மன நிறைவும் அக்கணமே தட்டுப்படும். வெறும் வீட்டு வேலைக்காக, “வேலைக்காரியாய்” வந்தவளுக்கு இதைவிட வேறு என்ன மரியாதை கிடைத்து விடக் கூடும். செல்வம் இல்லாத, அதனால் கல்வி செழிக்காத வீட்டில் பிறந்ததை தவிர வேறெந்த குற்றமும் நான் செய்ததில்லை. கட்டிய கணவன், பெற்ற குழந்தையோடு இந்த செண்பகம்மா வீட்டுக்கு வேலைக்கு வந்து பதிமூன்று பதினான்கு வருடங்கள் இருக்கும். 

காலச்சக்கரம் தான் எத்தனை வேகமாக சுற்றுகிறது. மண்ணைக் கிளறி விவசாயம் பார்க்கும் “நிலையில்லா வேலையில்” கணவன் தவிக்க, மொத்த குடும்பத்தையும் “நெம்புகோலாய்” தூக்கி நிறுத்தியது இந்த வீட்டு வேலைதான். பின்வந்த ஆண்டுகளில் மகனும் டிப்ளமோ படித்து சொல்லிக் கொள்ளும்படியான வேலைக்கு நகர, வீட்டுக்குள் ஆச்சியும் ஐயரும் மட்டும்தான். ஒரே வீட்டில் வேலைக்காரியாக பணியைத் தொடங்கி, அப்படியே எத்தனை காலங்கள் கடந்து இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது, எனக்கே மலைப்பாக இருக்கிறது. மகன் வேலைக்குச் சென்ற பின்பு, இந்த வீட்டு வேலை வேண்டாமென ஒதுக்கி விட முடியவில்லை. அதற்கு இந்த வீட்டில் உள்ள நபர்கள் என் மீது கொண்ட அன்பும் அக்கறையும் பரிவும் பாசமும் மட்டுமே காரணமாக இருந்திருக்கிறது.

ஏதோ ஒரு காரணத்தால் ஒருநாள் வேலைக்கு செல்லா விட்டாலும் “தாச்சி… இன்னைக்கு வரலையா… உடம்புக்கு சொகம் இல்லையோ?” – என்று எண்ணியபடி மொத்த குடும்பமும் என் வீட்டிற்கு வந்து விடும். இந்த வீடும் அவர்கள் கட்டிக் கொடுத்ததுதான். தலைவலி, காய்ச்சல் என்று எதுவாக இருந்தாலும் அடுத்த அரைமணிநேரத்தில் “உலக மகா கசப்பு” கொண்ட ஒரு கசாயத்தோடு செண்பகத்தம்மா ஆஜராகிவிடுவாள்.

“எங்க வீட்ல எல்லோரையும் நீதான் பார்த்துக்கிடுக? உனக்கொண்ணுன்னா நாங்க சும்மா உட்ருவோமா” – என்று கூறி அந்த மருந்துக் குவளையை வாய்க்குள் திணிப்பாள். கூடவே நெஞ்சையும், தலையையும் பிடித்துவிடுவாள். அந்த கசப்பு மருந்துக்கு பயந்தே எந்த உடல் அசௌகரியத்தையும் அவளிடம் தெரிவிப்பதில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் ராகவன் அண்ணாச்சியும் வந்திடுவார். சிறுவயதில் இறந்த அண்ணாச்சியின் தங்கையின் சாயலில் நானிருப்பதால் என்னை தன் சொந்த தங்கையாகவே பாவிப்பார்.

“இதெல்லாம் இப்படி வச்சிட்டு இருக்கப்பிடாது… வடசேரி ஆசுத்திரிக்கி போய் ஒரு ஊசி போட்டாத்தான் தீருமென” – என் உடல்நிலைக்கு அவர் சார்பாய் ஒரு தீர்ப்புக் கூறுவார். எனக்கு கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். கூடவே சிறிது நேரத்தில் பிள்ளைகள் அருணும், பிரேமாவும் “தாச்சிக்கி என்னாச்சு?” என்ற கேள்வியோடு வீட்டுக்குள் வந்து அமருவார்கள். அவர்களின் பேச்சிலும் மனதிலும் உண்மையான பாசத்தின் நிறமே வெளிப்படும். நான் வளர்த்த பிள்ளைகளல்லவா?. வெள்ளந்தியான மனிதர்களின் “கலப்படமில்லாத அன்பு” மிகுந்த சந்தோச பெருமிதத்தையும், கொஞ்சம் மன அயற்சியையும் கொடுக்கும். அன்பாகவே இருந்தாலும், அளவுக்கு மீறிய எதுவும் திகட்டும் தானே. எதற்காக இவர்கள் நம் மீது இத்தனை பாசத்தை கொட்டுகிறார்கள் என பலமுறை யோசித்திருக்கிறேன். இருந்தும் விடை ஏதும் கிட்டியதில்லை. 

எல்லோரும் போன பின்பு, “அந்த வீட்டிலுள்ள அனைவரையும் வசியம் பண்ணிதான் வச்சிருக்க” – என்பார் வீட்டுக்காரர். பதினாலு வருசமா இதையாவது சம்பாதித்தேனே…- என்று கூறி ஏக்க பெருமூச்சு விடுவேன் நான்.

ஆரம்ப நாட்களில் ஒரு வேலைக்காரிக்குரிய இடைவெளியோடுதான் அவர்கள் வீட்டில் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். நாட்கள் செல்ல… செல்ல… வீட்டிலுள்ள மொத்த மனிதர்களின் அன்பும், பரிவும் என்னை அவர்களில் ஒருத்தியாய் மாற்றியிருந்தது. தீடிரென்று ஒருநாள் ஒரு வங்கி பரிவர்த்தன அட்டையை கைக்குள் திணித்தாள் செண்பகத்தம்மா. ஆச்சர்யம் மேலோங்க இது எதுக்கு? என்று நான் கேட்டதற்கு, ” மாசா மாசம் கைநீட்டி சம்பளம் கொடுக்கும்போதுதான், நீ எங்களுக்கு வேறொருத்தியா தெரியுற? இனிஅது வேண்டாம். நாங்க சம்பளத்தை பேங்க்ல போட்டிருறோம். நீ அங்கிருந்தே எடுத்துக்கோன்னு உள்ளங்கையை பிடித்து செண்பகத்தம்மா கண்கலங்கிய போது, முற்றிலுமாய் அழுகையில் கரைந்து விட்டேன். 

இப்படியுமா மனிதர்கள் இருக்கிறார்கள். செய்கிற வேலைக்குத்தான் சம்பளம் தருகிறார்கள் என்ற போதும், கைநீட்டி சம்பளம் வாங்கும் சங்கோஜமும் இப்போது எனக்கில்லை. பின் வந்த காலங்களில் நான் இங்கு வேலை செய்ய வருகிறேன் என்பதே எனக்கு மறந்து விட்டது. இது “என் குடும்பம்” என்பது போன்ற மனநிலை. அவர்களின் பிள்ளைகள் என் பிள்ளைகள்தான் என்பது போல. “விசாலாட்சி” என்ற என் பெயரை எந்த விதத்தில் சுருக்கினார்களோ தெரியவில்லை. கடவுளுக்குத்தான் வெளிச்சம். தாச்சி… தாச்சி… தாச்சி என கூப்பிட ஆரம்பித்து, இன்றைய தேதியில் அந்தப் பெயர் அவ்வீட்டிலுள்ள அனைவரின் வாய்க்குள்ளும் எந்நாளும் ஓயாது உருண்டு புரளும்.

“தாச்சி… அவரோட கண்ணாடியை காணலை…”

“தாச்சி… இன்னைக்கு எனக்கு சேமியா உப்புமா வேணும்…”

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப்பிடாதோ… தாச்சி. அப்ப இருந்து வேலை பார்த்திட்டே இருக்கியே…”

“கேசரி அல்வா… நன்னா வந்திருக்கு… பையனுக்கும், அவாளுக்கும் எடுத்திட்டு போயிரு… நான் யூடூப் பார்த்து சமைச்சதுன்னு சொல்லு.”

“நாளன்னிக்கு நீ வரவேண்டா… வீட்டுல ரெஸ்ட் எடு… நான் சமையல் பண்ணி கொண்டு வரேன் தாச்சி…”

– என “தாச்சி” என்ற விளிப்பெயர் எந்தஒரு வயது வித்தியாசமும் பார்க்காமல் அவ்வீட்டுக்குள் தவறாது உச்சரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. 

இவர்களின் அதிகப்படியான அன்பில் சில நேரம் நானும் திக்கு முக்காடி விடுகிறேன். பையனின் கல்விக் கட்டணமாக இருக்கட்டும். கணவரின் மருந்துத் தேவைகளாக இருக்கட்டும். திருவிழாநாட்களில் பரிசுப் பொருள்களாக இருக்கட்டும். நான் நினைப்பதற்கு முன்பு அவர்கள் எனக்காகச் செய்து முடித்திருப்பார்கள். சிலநேரம் சங்கோஜத்தில் வேண்டாமென்றால் “வரிந்து கட்டிக்கொண்டு” அனைவரும் அதற்கு காரணம் கேட்பார்கள். சில நேரங்களில் எரிச்சல் தலைக்கேறும். விழுங்கவும் முடியாத, கக்கவும் முடியாத “கையறுநிலை” -யில் காலமும் கோபமும் கடந்து போய்விடும். 

நாளடைவில் அவர்களின் சந்தோஷமும், துக்கமும் என்னையும் பாதித்தது. என்னால் அவர்களிடம் கோபப்படமுடிந்தது. சராசரியான வாக்கு வாதம் பண்ணி சண்டை போட முடிந்தது. கோபித்துக் கொண்டு வீட்டுக்கு போய்விட்டால், சில மணிநேரத்தில் மொத்த குடும்பமும் என் வீட்டிற்கு புடைசூழ வந்து “சரணாகதி” அடையும் அதிசயமும் நிகழும்.

நான் போனா… என்னைய மாறி ஆயிரம் பேரு வருவாங்கன்னு- சற்று கோபத்துடன் பதில் சொன்னால், “வரவங்க எல்லாம் தாச்சி ஆயிட முடியுமான்னு?” – என்னிடமே கேள்விக் கேட்டு கண்ணீர் முட்டிக் கரைவாள் செண்பகத்தம்மா. ஒருமாதிரி தர்ம சங்கடமாகிவிடும். பின் வந்த பொழுதுகளில், பிணக்கம் தீர்ந்து அடுத்தநாள் வழக்கம் போல் “பணி பரிவர்த்தனைகள்” பழுதில்லாமல் தொடங்கும்.

இன்றைய திருச்செந்தூர் பயணத்திற்கு செண்பகத்தம்மா முதலில் கேட்ட போது வேண்டாம் என்றுதான் கூறினேன். பின்பு அவர்கள் மீண்டும் மீண்டும் அழுத்திக் கூப்பிட வர வேண்டியதாயிற்று. வரவே மாட்டேன் என்று உறுதியாக கூறியிருந்தால், ஒருவாரம் முன்பு நடந்த அந்த “சங்கோஜ நிகழ்வை” முன்னிறுத்திதான் நீ வராமல் இருக்கிறாயென்று செண்பகதம்மாள் குற்றம் சாட்டியிருப்பாள். செண்பகத்தம்மாவை விடுங்கள். வீட்டில் உள்ள அனைவரும் அந்த சம்பவத்தினால் தான் நான் வராமல் இருக்கிறேன் என்று உறுதியும் செய்து விடுவார்கள்.

விஷயம் இதுதான்… இரண்டாண்டுகள் கழித்து இளையவள் பிரேமா அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். பிரேமாவின் குழந்தை லக்ஷ்மி படுசுட்டி. மூன்று வயதாகிறது. அங்கு வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து இங்கு ஊர்ப் புறத்தை பார்த்ததும் வீட்டைவிட்டு இறங்கி ஓடுவதற்கு எப்போதும் தயார் நிலையிலிருப்பாள் குழந்தை. வந்த மூன்று நாளிலேயே தாச்சி… தாச்சி… தாச்சி என என்னிடமும் ஒட்டிக்கொண்டாள்.

பிரதோஷம் முடிந்த ஒரு மாலைநேரத்தில் ஒரு புத்தகத்தை வைத்து படம் பார்த்துக் படித்துக் கொண்டிருந்தாள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய படங்களை அடையாளம் காணுவதற்கான “பாடம்” அது.

புத்தகத்திலிருந்த வயதான ஒருநபரின் படத்தைக் காட்டி நம்ம வீட்டு கிரான்பா யாரு சொல்லு? என்று பிரேமா கேட்க, ஆர்வப்பெருக்கில் ராகவன் அண்ணாச்சியைச் சுட்டிக் காட்டினாள் குழந்தை. செண்பகத்தம்மாவிற்கு வாயெங்கும் பல்லாயிருந்தது. அடுத்த படத்தை காட்டி கிரான்மா யாரு? என்றதும் செண்பகத்தம்மாவை அடையாளம் காட்டியது. வீட்டிலுள்ள அனைவருக்கும் சந்தோசம் தாங்க வில்லை. எனக்கும் தான். அந்த சரஸ்வதியே எனக்கு பேத்தியா வந்திருக்கான்னு பெருமை பீத்தினாள் செண்பகத்தம்மா. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கழிந்து, வீட்டில் House Made யாரென்று கேட்க குழந்தை என்னைச் சுட்டியது. எல்லோரும் சந்தோசத்தில் சிரித்தார்கள். House Made-ன் பொருள் தெரியாத நானும் சிரித்து, குழந்தையைத் தூக்கி மாரோடு அணைத்துக் கொண்டேன்.

சில நிமிடங்களுக்கு பின் அடுக்களைக்குள் புகுந்து வேலையில் பரபரப்பானேன். மனதிற்குள் மிஞ்சிய அந்தக் கேள்வி குடைந்து கொண்டேயிருந்தது. இப்போது கேட்டால் எப்படியும் செண்பகத்தம்மா கிண்டல் செய்வாள். செய்தால் செய்யட்டும். காய்கறி வெட்டிக்கொண்டிருந்த செண்பகத்தம்மாவிடம் பட்டென்று கேட்டு விட்டேன்.

அம்மா… இந்த housemade ன்னா யாரு?

தலையுயர்த்தி பல்லைக்காட்டினாள் செண்பகத்தம்மா.

அது சரி… அதுக்கு அர்த்தம் தெரியாமத்தான் சிரிச்சியா நீ… மூணு வயசு பொண்ணுக்கு கூட தெரிச்சிருக்கு… உனக்கு தெரியல… அசடு… அசடு…என்று வெள்ளந்தியாய் சிரித்தாள்.

லேசாக வெட்கமாய் இருந்தது.

அமெரிக்காவும், அரசம்பட்டியும் ஒண்ணாகுமாமா? நான் புரிஞ்சு வச்சுக்குற அரைகுறை இங்கிலீசும் நீங்க சொல்லி தந்ததுதான்… – பதில் கூறி சமாளித்தேன்.

அதான்… பிரேமாவோட பிரசவத்திற்கு நீ அமெரிக்காவுக்கு போன்னு சொன்னோம்… உன் கையை புடிச்சி… நான் கெஞ்சினனோ… இல்லையோ… நீதான் பிடிவாதமாய் வேண்டாம்ணே… 

அதுக்கு அண்ணாச்சிதான் காரணமென்றேன்.

அவர் என்ன செய்தார்? – ஆர்வத்தோடு கேள்விகேட்டாள் செண்பகத்தம்மா.

அமெரிக்கா பூமியோட அடுத்த பக்கத்துல இருக்குன்னு அண்ணாச்சி சொன்னாரு… அத கேட்டதுமே எனக்கு பயம் வந்திட்டு…

“க்ளுக்” என்று சிரித்தாள் செண்பகத்தம்மா.

அசடு… அசடு… பொம்மனாட்டிகள் இப்ப உலகம் புல்லா சுத்துறா… நீ இந்த அடுக்களையே கட்டிண்டு அழு… கிண்டல் தொனியில் பேசினாள் செண்பகத்தம்மா.

பெண்களுக்கு தைரியமும் துணிச்சலும் தேவைன்னு… நானும் புத்தகத்திலெல்லாம் படிக்கிறேன் மா… அதுக்காக ஆரம்பத்திலியேயே அமெரிக்கா போகச் சொன்னா எப்படி … மொதல்ல மெட்ராஸ்… அப்புறம் மும்பையோ, டெல்லியோ… அதுக்கப்புறம் வேணா அமெரிக்கா போறேன்.- ஏக்கத்தோடு பதில் கூறினேன்.

வெண்டைக்காயை நறுக்கிக்கொண்டிருந்த செண்பகத்தம்மா மெலிதாகச் சிரித்தாள்.

தாச்சி… நீ மட்டும் போயிட்டு வந்திருந்தேன்னா… இப்ப நான் உன்ட இங்கிலிஷ் படிச்சிண்டு இருப்பேன்… தெரியுமா?

பட்டென்று நானும் சிரித்தேன்.

சரி… சரி… அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

housemaid ன்னா “வீட்டு வேலைக்காரி”-ன்னு அர்த்தம்- வெண்டைக்காயை வெட்டிமுடித்து சீஞ்சட்டியில் இட்டுக்கொண்டே பதில் கூறினாள் செண்பகத்தம்மா.

நகக்கண்ணில் “பனச்சிரா” ஏறியதுபோல் எனக்கென்று நறுக்கென்றிருந்தது. சில நொடிகள் ஸ்தம்பித்திருந்தேன். என் முகமாற்றத்தை கண்டவுடன்தான் செண்பகதம்மாவிற்கு தான் கூறியதன் “உள் அர்த்தம்” விளங்கியது. சுதாரித்துக் கொண்டாள்.

தாச்சி… வீட்டை நல்ல படியா பார்த்துக் கிறவள்னு அர்த்தம்டி – என்று கூறி சமாளிக்க முயன்றாள்.

நான் அசையாமல் நின்று கொண்டிருந்தேன்.

தாச்சி… குழந்தைக்கு என்னடி தெரியும்… இதுக்கெல்லாம் முகத்தை தூக்கி வச்சிண்டா… நான் என்ன செய்வேன். காலில் விழாத குறையாக கெஞ்சினாள் செண்பகத்தம்மா.

ஏதோ ஒரு நினைப்பில் விறு விறுவென வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.

சில நிமிடத்தில் மொத்த குடும்பமும் என் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் சமாதானப்படுத்தினர். சிலநேரங்களில் என் தகுதிக்கு மீறி நடப்பதாகத் எனக்கே தோன்றும். என்னதான் இருந்தாலும் அவர்கள்வீட்டு வேலைக்காரிதான் நான். வேலைக்காரியை வேலைக்காரியென்று கூறாமல் வீட்டுக்காரியென்றா கூற முடியும். செய்தது பெரும் தவறென புரியும். இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு “சுய பட்சாதாபம்” ஊற்றெடுத்துக் கொண்டேஇருக்கும்.

ஒருவழியாய் மனது மாறி அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாமென்று நான் கைதூக்குவதற்கு முன்னால், மொத்த குடும்பமும் என் வீட்டிற்கே வந்து, கெஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் குணநலன் அப்படி. நானும் கண்ணீர் பெருக்கோடு சமாதானமாகி விடுவேன். அப்படி என்னை சமாதானம் செய்துதான், இதோ… இப்போது, குழந்தை லக்ஷ்மியின் காதுகுத்துச் சடங்கிற்காக திருச்செந்தூருக்கு கூட்டிப் போய் கொண்டிருக்கிறார்கள்.

மனஸ்தாபம் குறைந்த ஆர்வப்பெருக்கில் கடைசி சீட்டில் வந்தமர்ந்தது என் இரண்டாவது தவறு. வெறும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்தக் காதுகுத்து சம்பிரதாயத்திற்கு நான் வந்தது என்னுடைய முதல் தவறு. இரண்டுக்கும் சேர்த்து இப்போது “ஒண்ணுக்கு முட்டி” அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். 

வண்டி வேகமெடுத்துப் பறந்து கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழியில் தென்பட்ட “அசுரக் காத்தாடிகள்” சுழன்று சுழன்று டா..டா.. காட்டியது. பயணக்களைப்பில் முட்டி நின்ற மூத்திரத்தின் நினைப்பு மனதை விட்டு அகன்றிருந்தது. கையிலிருந்த வானர வாண்டு முன் சீட்டிற்கு தாவியிருந்தது. பிரேமாவும் தூக்கத்தில் விழ, house made – என்ற சொல்லின் வழி பிரளயம் ஏற்படுத்திய குழந்தை லஷ்மி என் கைக்கு வந்து சேர்ந்தது. ஓடியாடி விளையாடிய குழந்தை அயர்ந்த தூக்கத்திலிருந்தாள். குழந்தையின் பிட்டத்தில் வைத்திருந்த பேம்பெர்ஸ் சிறுநீரை உறிஞ்சி பால் ப்ரட்டைபோல் பொதும்பியிருந்தது. 

தாச்சி… உனக்கு கை வலிக்கிறதோ… இல்லையோ… குழந்தையை கொண்டா நான் வச்சுகிறேன்- என்று வெண்கலக் குரலில் சப்தமிட்டாள் செண்பகத்தம்மா.

வேண்டாம் மா… நான் வச்சுகிறேன். – என்றேன்.

முப்பந்தல் கோவிலில் வண்டி பிரேக் பிடிக்கையில், மேலிருந்த பெரிய குடிதண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலொன்று சரிந்து எங்கள் மேல் கவிழ்ந்தது. பலபேர்கள் வேடிக்கைப் பார்க்க கடைசி சீட்டிலிருந்த நாங்கள் கொஞ்சம் தெப்பலாக நனைந்திருந்தோம். சிறிது நேர களேபரங்களுக்கு பின் வண்டி மீண்டும் நகரத்தொடங்கியது. குளிர்ந்த தண்ணீர் நெஞ்சின் வழி இறங்கி அடிவயிற்றை நனைக்க, முட்டி நின்ற “மூத்திர உணர்வுகள்” மீண்டும் மூளையை உருத்த ஆரம்பித்தது.

வண்டி காவல்கிணறு, வள்ளியூர் தாண்டி வட்டக்குளம் நோக்கித் திரும்பியிருந்தது. வெட்கத்தைவிட்டு யாரிடமாவது சொல்லி, வண்டியை நிறுத்தலாமென முடிவு செய்தேன். செண்பகத்தம்மாவை பார்த்தேன். அரைத்தூக்கத்தில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் வழி வெளியே பார்த்தால் மறைவுக்கு சிறு இடமும் இல்லாத பொட்டைக் காடு. வேகவேகமாய் சில பனைமரங்கள் பாய்ந்துக் கடந்தன. அம்மம்மாவென வறண்ட நிலம் விரிந்து பரந்துக் கிடந்தது. இங்கு வண்டியை நிறுத்தினாலும் சிறுநீர் கழிப்பதற்கான வாய்ப்பில்லை என்று தோன்றியது. ஈரமான காட்டன் சேலை அடிவயிற்றை தெப்பலாக நனைத்து இம்சை படுத்தியது. வளைவுகளில் நெளிவுகளில் பள்ளங்களில் வண்டி விழும்போதெல்லாம் “கட்டுப்படுத்தி வைத்திருக்கும்” கட்டுப்பாடு குறைந்து அதிர்வது போன்றதொரு “அசௌகர்ய” நிலை.

என் முகத்தைப் பார்த்து செண்பகத்தம்மா, தாச்சி… என்னாச்சு… கை கடுக்கிறதா… குழந்தையை வச்சுக்கிடவா என்றாள். 

பரவாயில்லம்மா … என்று கூறி பல்கலைக் கடித்துக் கொண்டேன்.

பூரானைப் போல் வண்டி வளைந்து நெளிந்து சென்று சமூகரெங்கபுரம் ஜங்ஷனில் திரும்பியது. யாரோ கலெக்டர் வருகிறார் என்று வண்டியை முன்னரே நிறுத்தியிருந்தார்கள். எங்களோடு வந்த ஆண்கள் சிலபேர்கள் வண்டியை விட்டு வெளியே சாடி வேட்டியை மடித்துக்கட்டி திரும்பி நின்று பனைமர மூட்டில் மூத்திரம் பாய்ச்சினார்கள். பெண்கள் யாரும் இறங்கவில்லை. என்னைப் போலவே அனைத்து பெண்களுக்கும் மூத்திரம் முட்டிக்கொண்டு இருப்பதாகத் எனக்குத் தோன்றியது. யாரும் எதுவும் கூறவில்லை. ஆணாய் பிறந்திருக்கலாமென அந்த நிமிடத்தில் தோன்றியது. சிறுநீர் பிரியும் சுகத்தில் தலையுயர்த்தி வானம் நோக்கி நின்றிருந்தனர் ஆண்கள். தொலைவில் அவர்களின் கால் இடைவெளி வழி பாய்ந்த “வளைந்த கோடு போன்ற நீரோட்டத்தை” பார்க்க எனக்குப் பொறாமையாகவும் ஆற்றாமையாகவும் இருந்தது. அடிவயிறு பொம்மி, ஒண்ணுக்கு முட்டி, தலை லேசாக வலிக்கத் தொடங்கியது. குழந்தை இருந்த கையும் லேசாகக் கடுக்கத் தொடங்கியது. இருந்தும் முட்டி நின்ற மூத்திர அவஸ்தைக்கு கைவலி ஒன்றும் அத்துணைப் பெரிதாகத் தெரியவில்லை.

சிலநிமிடங்களில் ரோட்டுக்குள் சில சலசலப்பு. அடுக்கடுக்காய் சில வாகனங்களின் பிரவேசம். தொடர்ந்து பெண் கலெக்டர் ஒருவர் “பாலியல் சமநிலை குறித்து” ஏதோ அறிவிப்பு செய்து கொண்டே அவ்விடம் கடந்தார். வண்டிக்குள் இருந்த பெண்கள் அனைவரும் அவரைப் பார்த்து வியந்தனர். இன்னும் சிலர் அவரைப் பார்த்து கையசைத்தனர். செண்பகத்தம்மாவும் கையசைத்துச் சிரித்தாள்.

தாச்சி… பார்த்தியா… நம்மள மாதிரிதான் இருக்கா… சின்ன பிள்ளைதான்… பெரிய கலெக்டராம்… நம்ம இன்னும் சமையல் கட்ட விட்டே வெளிய வரலை- செண்பகத்தம்மா ஏக்கப்பெருமூச்சோடு திமிறினாள்.

நமக்கு இதுதான் விதிச்சிருக்கு போல…- ஒருவாறாக ஆசுவாசத்துடன் பதில் கூறினேன்.

விதிச்சத மாத்தணும்… ஆம்பளைங்க போல பொம்மனாட்டிகளும் எல்லா வேலையும் செய்யணும்… – உள்ளுக்குள் ஊறிய ஆளுமை உணர்வோடு கிசுகிசுத்தாள் செண்பகத்தம்மா. 

ஆம்பளைங்க செய்யுற வேலையெல்லாம் செய்யுறது பொறவும்மா… மொதல்ல இப்ப ஆம்பிளைங்க போனது மாதிரி, வெட்ட வெளியில பொம்பளைங்களால ஒண்ணுக்கு போக முடியலையே… முடிஞ்சா அதுக்கு ஏதாவது பண்ணுங்க … – உடல் அனுபவிக்கும் துயரம் என் வாயின் வழி வார்த்தைகளாய் வெளியேறியது.

தாச்சி… நான் என்ன சொல்றேன்… நீ என்ன சொல்லுற…- குழப்பத்துடன் என்னை நோக்கி பரிகசித்தாள் செண்பகத்தம்மா.

எனக்கு ஒண்ணுக்கு போணும்னு சொன்னேன்… வேற ஒண்ணும் இல்லை.- வெட்கத்துடன் மெதுவாகக் கிசுகிசுத்தேன்.

செண்பகத்தம்மாவிற்கு என் நிலைமை புரிந்த மாதிரி தெரிந்தது. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் கழிப்பிடம் இருக்கும் இடமாகப் பார்த்து வண்டியை நிறுத்த வேண்டுமென்று டிரைவரிடம் சப்தமாகக் கூறினாள். இதற்காகவே காத்திருந்தது மாதிரி, வண்டியில் இருந்த பலபெண்கள் உயிர்ப்போடு நெளிந்து உட்கார்ந்தனர்.

“தாச்சி… மேல தண்ணி ரெம்ப கொட்டியிருக்கு… சேலையும் வேணா மாத்திக்கோவென” – ஒரு சேலையைத் தந்தாள் செண்பகத்தம்மா. தலையசைத்து பேருந்து நிறுத்தத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். 

மூன்று நான்கு நிமிடங்களில் அந்த பேருந்து நிலையம் பார்வைக்கு கிட்டியது. கழிப்பிடம் பார்த்ததும் சொர்க்கவாசலை கண்ட பூரிப்பில், இரண்டு மூன்று பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் அவ்விடம் புகுந்தோம். அடக்கி வைத்திருந்த ஆசைகளையெல்லாம் ஒரே நேரத்தில் அவிழ்த்து விடுவதுபோல், பூமியை நனைத்து பிறவிப்பயன் அடைந்தேன். முகமெங்கும் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளை பெற்ற பூரிப்பு. நிறைவாக பெருமூச்செறிந்தேன்.

இயற்கை உபாதை கழிந்து, கைவசம் கொண்டு சென்றிருந்த சேலையை மாற்றி மீண்டும் என் இருக்கையில் வந்து அமர்ந்த போது, செண்பகத்தம்மா ஒரு கட்டியான பெட்ஷீட் துணியை என் இருக்கையின் மேல் போர்த்தியிருந்தாள். வண்டியெங்கும் லேசான சீறுநீர்வாடை. எனக்கு என்னவோ நினைவுகளில் ஓடியது. பேருந்து நிறுத்தத்திற்கு முந்தைய வேகத்தடையில், வண்டி கொஞ்சம் வேகமாய் தூக்கி போட்டதில் என் கட்டுப்பாடு முறிந்து லேசாக சிறுநீர் வெளியேறியது அப்போதுதான் என் நினைவுக்கு வந்தது. அய்யே… என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்.

இது நம்முடைய வேலைதான். சே… என்பது போலிருந்தது. குற்ற உணர்வில் எனக்கு என்னவோ மாறியிருந்தது. எல்லோரும் என்னையே குறுகுறுவென பார்ப்பதுபோல் தோன்றியது. வெட்கத்தில் சம்மலில் மெலிதாக நெளிந்துச் சரிந்தேன். அவமானம் என்னைக் கொன்றெடுத்தது. மூக்கு முழுதும் மூத்திர வாடை ஏறியது போல் ஒரு “தோணல்”. சிலபேர்கள் காற்றில் பரவிய “மூத்திரநெடியில்” முகம் சுளிப்பது போலவும் உணர்ந்தேன். என் அற்ப புத்திக்குள் தாழ்வுமனப்பான்மை குடியேறி எங்கெல்லாமோ நினைவுகள் ஓடியது. ஒருமாதிரி படபடப்பாய் உணர்ந்தேன். செண்பகத்தம்மா… என் முகக்குறிப்பை உணர்ந்தவளாய், எல்லோரும் கேட்கும்படி சட்டென்று சப்தமிட்டாள்.

“தாச்சி… சீட்ல குழந்தை மூத்திரம் போயிட்டா… கேட்டயா. அதான் பெட்ஷீட் போட்டிருக்கேன். நல்ல சாஞ்சு உட்காரு… கொஞ்ச நேரத்துல காஞ்சிரும்… “- என்று கூறி கண்ணடித்துச் சிரித்தாள்.

பற்றியெரியும் என் அவமானத்தீயில் நீர் இறைத்தது போலிருந்தது அவளின் வார்த்தைகள். வண்டி நகர நகர மூத்திர நெடி காற்றில் கரைந்தது. கொஞ்ச நேரத்திற்கு செண்பகத்தம்மாவை திரும்பியே பார்க்கவில்லை. வண்டிக்குள் இருந்த மற்ற எல்லோரும் இயல்பாக பயணிப்பது போல் தோன்றியது. செண்பகத்தம்மாவை கட்டியணைக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் செய்ய வில்லை. ஏதோ சிந்தனையோடு ஜன்னல் வழி வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். விவரிக்க முடியாத ஆனந்தத்தில் கண்ணீர் பெருகியது. கண்ணில் மோதிய சூடான காற்று, கண்ணீரை அனிச்சையாய் வெளியேற்றியது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.