குமார் சேகரன்
குமிழிகள் சுமக்கும் பால்யம்
கொஞ்சம் நுரைகள் நிரம்பிய
சோப்பு நீருக்குள்
சிறிய நெகிழி குழாயைத்
தோய்த்து எடுத்து
வலமிருந்து இடப்பக்கமாக இழுக்கிறேன்
ஒரு மாயாஜால
வித்தைக்காரனைப் போல்
ஒவ்வொரு இழுப்புக்கும்
சோப்பு நீர்
குமிழிகளாக அவதாரமெடுத்து
காற்றில் மிதந்து செல்கின்றன
“அப்பா இன்னும்” “அப்பா இன்னும்”,
என்று கூச்சலிட்டபடியே
ஓடி ஒவ்வொரு குமிழியாக
உடைக்கிறார்கள் பிள்ளைகள்
அவர்கள் விரல் பட்டு உடையும்
ஒவ்வொரு குமிழியிலிருந்தும்
விடுதலையாகிறது
என் பால்யம்.

கவிஞன்
எனக்குள் அமர்ந்திருக்கும்
கவிஞனை வெளியேற்றுவது
அவ்வளவு எளிதானதல்ல
கவிதை எழுத
அவனுக்கு தேவையான
அந்த ஏதோ ஒன்று
எப்போதும் அமைந்துவிடுவதும்
எளிதானதல்ல
அப்படி அமைந்தும்
அவன் ஒரு கவிதையை
எழுதிவிடுவதும்
எளிதானதல்ல
அதை விட…
அவன் எழுதியதை
யாரேனும் ஒருவர்
கவிதைதான் என
ஒப்புக் கொள்வது
அவ்வளவு எளிதானதல்ல

இன்றும் பேசும் நாய்க்குட்டி
இறந்து போன
என் இளவயது காலத்து
நாய்க்குட்டியைப்
புதைத்த இடத்தில்
மாங்கன்று ஒன்றை
நட்டு வைத்தேன்
வளர்ந்து
பூத்து, காய்த்த அம்மரம்
காற்று வீசும் போதெல்லாம்
என்னோடு பேசுகிறது
லொள் லொள் எனும் மொழியில்
தனியாய்
எல்லோரும்
எல்லாமும் இருக்குமிடத்தில்
தனியாய்
தனிமையாய்
இருப்பதென்பது
பெரிய கொடுமை
அப்போது வந்து
என்னை கவ்விக் கொள்ளும்
இங்கில்லாத உன்னைப் பற்றி
விளக்கத்தான் சொற்களைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்
வெகு காலமாக
கதை
முன்பெல்லாம்
என் அம்மா எனக்கு
கதைகள் சொல்லுவாள்
எல்லா கதைகளும்
ஓர் ஊரின்
இராஜாவைப் பற்றியதுதான்
இராஜாவைக் கண்டு பிடிக்க
எனக்கு வெகுகாலமாகியது
இப்போது
என் பிள்ளைகளுக்குக்
கதைகள் சொல்லுகிறேன்
ஓர் ஊரிலிருந்த
இராஜா இராணியின் கதைகள்தான் அவை
தெய்வமாகிவிட்ட அம்மாவை
என்னால் கதைகளில் மட்டுமே
இராஜாவோடு
சேர்த்து வைக்க முடிகிறது.