சோஃபியா ரெய்

தமிழாக்கம்: மைத்ரேயன்
[ஆசிரியர் பற்றிய குறிப்பு: முப்பத்தி ஐந்து புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். எவெரிதிங் ஈஸ் மேட் ஆஃப் லெட்டர்ஸ் என்கிற சிறுகதைத் தொகுப்பு அவற்றில் ஒன்று. ’ராண்டோலா’ என்ற பரிசு பெற்ற நாவல், ’எஸ்பெராமெ என் லா அல்டிம பேஜினா’ என்ற புத்தகங்களைப் பற்றிய அமானுஷ்யக் கதை ஆகியன இவற்றிலடங்கும். இவர் கவிதைகள் பரிசு வாங்கியவை.தற்போது ஒரு பல வகை உடோபியாக்களை வைத்து ஒரு அரசியல் அங்கதத்தை எழுதி வருகிறார். ‘நியூரோபியா’ என்பது தலைப்பு.
இந்தக் கதை ‘எவெரிதிங்’ தொகுப்பிலிருந்த கதை. அந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் ஸ்பானிய மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மாற்றப்பட்டவை. அவற்றை சோஃபியா ரெய், இயான் வேட்ஸ் என்பவரின் உதவியோடு தானே மொழி பெயர்த்திருக்கிறார். ]

ஜுவான் பெரூச்சோ இரவு முழுதையும் தன் வீட்டில், தன்னுடைய மேஜையின் மேல் தலை கவிழ்ந்தபடி, வேலையில் கழித்திருந்தார். அவர் இருந்தது க்ராஸியா பகுதியில பொடியான ஓர் அடுக்ககம், அதன் அலமாரிகளில் எல்லாம் எழுதற எந்திரங்கள், கைவினைஞர்களுக்கான அச்சு எந்திரங்கள்,வீட்டுத் தயாரிப்புகளான காகித அரிப்பான், அல்லது ஜெலடின் ஃபோட்டொகாபியர்கள் வீற்றிருந்தன. அவர் சந்தோஷத்தோடு படைத்துக் கொண்டிருந்தார், ஒரு இசைத் துண்டை முனகிக் கொண்டிருந்தார், தான் சரிவரத் தூங்கவில்லை என்பதைக் கவனிக்கக் கூட இல்லை.
மதத் தணிக்கையாளர்களின் குழு விசாரணை நடத்த வந்த போது, பெனடிக்டீன் சகோதரியின் படைப்புகள் பெரும்பாலும் துறவி மடாலயத்தின் தலைமைப் பெண் துறவியால் மறைக்கப்பட்டிருந்தன. சில நாடகங்கள் முழுதும் தொலைந்து போயின. அதிர்ஷ்டவசமாக, எச்சரிக்கும் கதைகள் ஏற்கனவே சுற்றில் இருந்தன, இத்தனைக்கும் அவை அச்சிடுபவருக்கு ஆபத்தைக் கொண்டு வரக் கூடியவையாக இருந்தன. அவர் ‘கதவுகளின் ரகசியக் கதைகள்’ என்ற படைப்பை கள்ளத்தனமாக விற்றுக் கொண்டிருந்தார், அகப்பட்டுக் கொண்டால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உள்ளாவோம் என்பது தெரிந்தே செய்தார்.
லியோபோல்டோ கால்வான்
ஸ்பானிய சர்ச்சின் சபிக்கப்பட்ட கவிஞர்கள், வய்யாடொலீட், 1929
கடிகாரத்தின் அலார ஒலி அவரை அதிரச் செய்தது. போலியான செய்தித்தாள் பக்கத்தைத் தயாரித்து, அதை கரும் தேயிலைக் கஷாயத்தால் சாயமூட்டி, பழையது போல ஆக்கும் வேலையில் அத்தனை தூரம் மூழ்கி இருந்ததால், அதை மறந்தே போயிருந்தார்.
சந்த் பெரே மெஸ் பைஷ் தெருவில் இருக்கும் பள்ளிக் கூடத்தில் தீ
தீ வெகு சீக்கிரம் கட்டுக்குள் கொணரப்பட்டாலும், இரண்டு தீயணைப்புப் படையாளர்கள் தீயோடு போராடி உயிரிழந்தனர். தீ பற்றியதற்கு ஒரு கரியடுப்பு காரணம், அதை பள்ளியின் காவலர் ஒருவர் சரியாக அணைக்கவில்லை என்று தெரிந்தது. ஒரு சுவர் உடனே பற்றிக் கொண்டது, அது மரத்தால் ஆனது என்பதைக் காட்டியது; அதன் பின்னே, தீயணைப்புப் படையினர் பல ஒளிக்கப்பட்ட புத்தகங்களையும், ஆவணங்களையும் கண்டனர், அவை ஒருகால் மதத் தணிக்கை விசாரணை வருடங்களில் தடை செய்யப்பட்டவையாக இருக்கலாம். அவற்றில் ஒரு எச்சரிக்கைக் கதை, சொர் அஸ்ஸம்ப்சியோ அர்தெபோல் எழுதியது, அது தொலைந்து போய்விட்டது என்று ஆய்வாளர்கள் இதுகாறும் நம்பி இருந்தனர். பழுது பார்க்கும் வேலைக்கு ஒரு வாரம் ஆகும், இந்த நாட்களில் பள்ளியில் வகுப்புகள் நடக்காது; மேல்படி அறிவிப்புகள் கிட்டும்வரை, பெற்றோர்கள் தம் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவர் தான் உருவாக்கிய பத்திரங்களைப் பார்வையிட்டார், திருப்தி அடைந்ததால் புன்னகைத்தார். கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்படப் போகிற இந்தப் பதிவு அவருடைய தனிப்பட்ட வெற்றிகளில் மிகப் பெரியதாக இருக்கும். பார்ஸெலோனாவில் நிறுவப்பட்டுள்ள உலகக் கலைக்களஞ்சியத்துக்காக வேலை செய்கிற, மசி ஒட்டாத அடர்ந்த நிறச் சீருடைகள் அணிந்த பல லட்சம் பேர்களைப் போல, தானும் இருந்தால், கற்பனையில் உருவாக்கிய செய்திகளை பொதுத் தகவல் தளத்தில் சேர்க்கும் இந்த விளையாட்டை மட்டும் அவர் உருவாக்கிக் கொண்டிராவிட்டால் அவரால் அன்றாட வாழ்க்கையைத் தாங்க முடியாமல் ஆகி இருக்கும். துவக்கத்தில் அவை சிறு விவரணைகளாக மட்டும் இருந்தன: சிறு மேற்கோள், கற்பிதமான ஒரு சிறு பாத்திரம், நன்கு தெரிய வந்த ஒரு நபரைப் பற்றிய வண்ணம் கூடிய ஒரு நிகழ்ச்சி. சில வருடங்களில், மேலும் முக்கியமான மறை பொருள் கொண்ட விஷயங்களைச் சேர்க்க அவரால் முடிந்தது, சாறு நிறைந்த கனிகள், ஏன் கிளைகள் மற்றும் மரங்களே போன்ற பொய்த் தகவல்களைச் சேர்க்க முடிந்தது.
அவர் இந்தப் புனைகதைகளின் விவரப் பதிவு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. 1969 இல் அமலான திரை போடத் தடைக்குப் பின் ஆகாயத்திலிருந்தே காவல் துறை எந்த வீட்டையும் எந்த நேரமும் சோதிக்கும் சக்தி கொண்டிருந்தது. ஜுவான் தம் எந்திரங்களை வெள்ளை அலமாரிகளில் ஒளித்து வைத்து விட்டுத்தான் வேலைக்குப் போய் வந்தார்.
அவர் தன் அடுக்கக வசிப்பிடத்திலிருந்து வெளியே செல்லவிருந்தார், அப்போது கதவடியே ஒரு மெல்லிய பாம்பு, பச்சை நிறக் காகிதத்தால் ஆனது, அவரது கதவடியே நழுவி உள்ளே வந்தது.
வேலைக்குப் போகாதீர். மாறாக கரெர் ந’அராய்க்குப் போங்க.
இந்த மாதிரி செய்திகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். அவற்றில் குறிப்பிட்டு எதுவும் எழுதப்பட்டிராது, ஒரு குற்றச் சாட்டும் இராது, அவருடைய சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றியும் ஒன்றும் இராது. ஒருவர் சந்தேகத்துக்குரியவர், ஆனால் அவர் செய்தது என்ன குற்றம் என்பதை நிரூபிக்கத் தெளிவான தடயம், சான்று ஏதும் இல்லாதபோது அவரைச் சிக்க வைக்க ஆகாயக் கண்காணிப்புக் காவல்துறை விரிக்கும் வலைகள் பற்றி அவர் கேட்டிருந்தார். வேலைக்குப் போகாமல் தவிர்ப்பது, சந்தேகத்துக்குரிய ஓர் இடத்துக்குப் போவது, வெளியாட்கள் தப்பி ஒளியும் ரகசிய இடங்களுக்குப் போவது, இதெல்லாம் அவர் குற்றவாளி என்பதை நிறுவப் போதுமானவை.
இல்லை, அவர் தன் தினசரி வழக்கத்தை மாற்றக் கூடாது. அந்த முடிவெடுத்த பின்னர், அவர் கொஞ்சம் நிம்மதியானார். தான் உருவாக்கி, ஸ்கான் செய்து முடித்த போலி ஆவணங்களை அழிப்பது பற்றி அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். போலிச் செய்திகளை உருவாக்கிப் பொய்யைப் பரப்புவதற்கே வாழ்வைச் செலவழிக்கும் அவர் தன் மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒரு இசைத் தொனி போலச் சொல்லிக் கொள்வது இதுதான், ஏதோ ஒன்று நடந்ததென்று செய்தியாக ஒரு முறை அறிவித்து விட்டால், அது நடக்கவில்லை என்று நிரூபிப்பது மிகக் கடினம். குறிப்பாக பெரும்பாலான வரலாற்று ஆவணக் கிடங்குகளும், செய்தித்தாள் நூலகங்களும் நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கையில், சில நேரம் உவெஸ்கா அல்லது காஸ்டெயோன் போன்ற தொலை தூர இடங்களில் வைக்கப்பட்டிருக்கையில், நிரூபணம் தேடுவது கடினம். பெரூச்சோ அதற்கு மேற்கொள்ளும் பயணங்களை, குறிப்பாக பயணத்தில் நிலவும் பெரும் மௌனத்தை விரும்பிய காலம் ஒன்றிருந்தது. ஆகாயக் காவலாளர்கள் நகரத்தில் அத்தனை கூட்டமாக உலவினதால், அவர்களின் சுருள் வளையங்களின் ரீங்காரம், உலோகத்தால் ஆன ஆர்ப்பரிக்கும் கடலின் ஓசை போல நகரத்தில் எந்நேரமும் ஒலித்தது.
பெரூச்சோ ஜன்னல் வழியே வெளியே பார்த்தார், ஆனால் அங்கே யாரும் இல்லை. சட்ட விதிப்படி அமைக்கப்பட்ட தெளிந்த கண்ணாடி கொண்ட ஜன்னலுக்கு வெளியே இருந்து எந்தக் காவலரும் அவர் அடுக்ககத்துக்குள் கண்காணித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அங்கே எப்போதும் இருப்பது போலவே தோன்றியது. அவர்கள் வரக்கூடும் என்ற அபாய உணர்வே, அவர்கள் அங்கே தோன்றுவதைப் போன்ற அச்சத்தைக் கொடுத்தது.
பெரூச்சோ ஓர் ஆழ்ந்த மூச்சை இழுத்துக் கொண்டார். அவர் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். எக்காரணம் கொண்டும் தனித்துத் தெரியாமல் இருக்க முயன்றிருக்கிறார், கூடுதலாகவோ, குறைவாகவோ அவருடைய உற்பத்தி இருக்கவில்லை. புள்ளி விவரங்களை அவர் கவனித்து வருகிறார், தன் சக தொழிலாளர்களின் உற்பத்தி அளவைத் தன் உற்பத்தியும் ஈடு கொடுப்பதாகவே அவர் கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய பெரும்பாலான மேற்பார்வையாளர்களுக்கு ஸ்பானிய மொழியோ, காத்தலான் மொழியோ புரியாது என்பதால், அவர் தன் போலி ஆவணங்களை அந்த மொழிகளிலேயே தயாரித்து வருகிறார்.
காவல் துறையினரால் அழைத்துப் போகப்பட்டு, பிறகு காணாமல் போனவர்களைப் பற்றி நிறைய வதந்திகள் உலவுவதென்னவோ நிஜம், ஆனால் பெரூச்சோ அப்படி ஒரு சம்பவம் நடப்பதைப் பார்த்திருக்கவில்லை. இன்னும் சொன்னால், கருக்காகப் பிழையற்று இருப்பதற்கும், சிறிது கற்பிதம் கொணர்வதற்கும் அப்படி ஒன்றும் கறாரான குறிப்பிட்டதான விதிகள் இருக்கவில்லை. எல்லாமே ஏதோ விதங்களில் பொதுவாகவும், தெளிவில்லாமலும் இருந்தன, விதிமுறைகளை செயல்படுத்துவதில் ஓரளவு சுதந்திரமாக பொருள் கொள்ள இடமிருந்தது.
எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல பெரூச்சோ வேலைக்குப் போவதற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது, அது அப்படிச் செய்ய அவருக்கு இருந்த ஆழ்ந்த விருப்பம்தான். கற்பனை உருவான சொர்அஸ்ஸம்ப்சியோ அர்தெபோல் என்பவரும், அவருடைய கதவுகளின் ரகசியக் கதைகள் என்ற இல்லாத ஒரு புத்தகமும் பற்றிய அந்த செயல்திட்டம் இதுவரை அவர் உருவாக்கியவற்றிலேயே சிறப்பான ஒன்று. இந்தத் திட்டங்கள்தான் அவர் உயிர் வாழ்வதற்கான காரணங்களும் கூட. வியாபாரத்துக்கும், அனுமதிக்கப்பட்ட வடிவுகளிலும் மட்டுமே இலக்கியப் படைப்பு அனுமதிக்கப்பட்ட ஒரு உலகில், இது ஒன்றுதான் இலக்கிய எழுத்துக்கு வழியாக மிஞ்சி இருந்தது. மற்றதெல்லாம் பிரச்சாரம் / போதனை, முன் மாதிரிகளை உருவாக்குவது போன்ற வகை எழுத்துகள்.
அனேக நாட்களில் பெரூச்சோ வேலையிலிருந்து வீடு திரும்புகையில் நடந்தே வந்து விடுவார், இன்று அந்த வழக்கத்துக்கு மாறாகச் செய்ய அவர் விரும்பவில்லை. வழக்கமாக நடப்பதை விட வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நடக்காமல், தினம் செய்யும் அதே வேலைகளைச் செய்தபடி நடந்தார். அதாவது, ரொட்டிக் கடையில் நுழைந்து புட்டிஃபார்ரா[1] திணித்த ரொட்டிச் சுருளை இரவு உணவுக்கு வாங்குவதை இன்றும் செய்தார்.
பத்து வருடங்களுக்கு முன்பு, உலக அரசாங்கம் செயல்திறன் கூட்டும் விதமாக, பொருத்தமான இடங்களில் அமைந்த பல நகரங்களுக்குக் குறிப்பிட்ட செயல்வகைகளை ஒதுக்கத் தீர்மானித்திருந்தது. பார்செலோனா உலகின் அறிவுத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. உலக கலைக் களஞ்சியம் அங்கு 40களிலிருந்து செயல்படுகிறது, அதனால் ருசுப்படுத்தப்படக் கூடிய தகவல்களைச் சேகரிப்பதும், எது முக்கியமானது எது ஒரு முறை கூட பதியப்படத் தேவை அற்றது என்று தீர்மானித்து, அவற்றை வகைமைப்படுத்துவதும் எல்லாம் இடவசதிகளை அதிகரித்து, தேவையான எண்ணிக்கையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தினாலெ நடத்தப்படக் கூடியதாக ஆகி விட்டிருந்தது.
பார்செலோனா எப்போதுமே பல பண்பாடுகளின் குவிமையமான நகரமாகத்தான் இருந்தது, ஆனால் உயிரோடு இருக்கிற, மற்றும் மரித்த அனைத்து மொழிகளையும், அவற்றின் பற்பல கிளை மொழிகளையும் சேகரிப்பில் கொணர்வதற்காக, அடிப்படை அறிவு அமைப்பின் லட்சக்கணக்கான ஊழியர்கள் உலகெங்குமிருந்து இந்த நகரில் வந்து குவியவும், இந்த நகரம் பண்டைக் கதையில் இருந்த பேபல் நகரத்தின் மேம்பட்ட புது வடிவமாக ஆகியிருந்தது.
பழைய நகர்க் கட்டடங்களை அகற்றி விரிவாக்கித் தற்கால நகரத்தின் தேவைக்காகக் கட்டப்பட்ட என்சாஞ்சே பகுதிகளில் இருந்த கட்டடத் தொகுதிகளின் மைய முற்றங்கள் எல்லாம் இருபத்தி ஐந்து அடுக்குக் கட்டடங்களாக மேம்படுத்தப்பட்டன என்று அதிகாரபூர்வமான அறிக்கை தெரிவித்தது. அவை அனைத்தும் ஒரே போல இருந்தன, அவற்றில் இருந்தவர்களும் ஒரே போலத் தோற்றமளிக்கும் கலைக்களஞ்சிய ஊழியர்கள். கீழ்த் தளங்களில் அச்சு எந்திரங்களிருந்தன, அங்கேயே அச்சுத் தொழிலாளர்களும், இதர தொழில் துறை ஊழியர்களும், அச்சு மசிக்கு மசியாத கருப்புச் சீருடை அணிந்தபடி இருந்தார்கள். மேல் தளங்களில்- ஜுவான் பெரூச்சோ வேலை செய்த ஒரு தளமும் இங்குதான் இருந்தது- ஒவ்வொரு பதிப்பாசிரியருக்கும் ஒரு லினோடைப் எந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் எல்லாரும் நிலக்கரி நிறத்தில் மேலங்கி, சட்டை, கழுத்துப் பட்டி ஆகியவற்றுடன் கால்சராய் இத்தியாதி கொண்ட முழு உடை அணிய வேண்டி இருந்தது: அவர்கள் அச்சிடும் மசியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத வேலை செய்தாலும், உடையில் கறை படியும் அபாயம் இல்லை என்றாலும், இந்தக் கருப்பு உடை அணிவது அவசியம். ஏதோ அறிவுச் சேமிப்பு என்பதே நிரந்தரமான, அருவருப்பான கறையை ஏற்படுத்தும் என்பது போல இருந்தது இந்த விதி.
புத்தி பேதலிப்பை ஏற்படுத்தும் சிந்தனைகளுடன், பயம் திடீரென்று எழுந்தது: இதுவரை வெளித் தெரிய வராத கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்று இருந்தால், உண்மையைக் காப்பாற்ற முழு மனதோடு உழைக்கும் ரகசியக் காவலர் இருந்தால், பொய்த் தகவல்களை நுழைப்பவர்களைத் தேடிக் கண்டு பிடித்துத் தண்டனை விதிக்க இழுத்துப் போய், கசகசப்பான, அழுக்கான சிறைகளில் அடைபட அனுப்பினால், வாழ்நாள் முழுதும் அவற்றிலேயே கழிக்க வேண்டும் வெளியேறவே முடியாது என்று இருந்தால்?….
ஜுவான் பெரூச்சோ தன் வழக்கமான புன்னகையோடு கட்டடத்துக்குள் நுழைந்தார், தன் மந்திரத்தைத் தனக்குள் மறுபடி மறுபடி ஜபித்தபடி. ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று நிரூபிப்பது அனேகமாக முடியவே முடியாதது. நிஜத்தில், ஒரு புத்தகமோ, மதிப்புரையோ அல்லது கட்டுரையோ பிரசுரிக்கப்படவில்லை என்று நிரூபிக்கத் தேவையான சான்றைக் கண்டு பிடிக்க வேண்டுமானால், அவருக்குப் பல மாதங்கள் ஆகும். அப்படி ஒரு வேலை கொடுக்கப்பட்டதாக அவர் கேட்டதே இல்லை. அடிப்படை அறிவுச் சேமிப்புத் திட்டம், பதிவானதில் உண்மை பொய்களை தரம் பிரிக்க சம்பளம் கொடுக்கும் நேரங்களைச் செலவழிக்கும் என்பதில் அவருக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை. அதற்கு ஒரு அவசியமும் இல்லை; அனேக ஊழியரும் நம்பத் தக்க விதமாக விதிப்படி நடப்பவர்கள், செருப்பு நக்கிகள், அவர்களின் உடுப்புகளைப் போலவே அடர் சாம்பல் நிறத்தினர்.
நிரம்பி விட்டிருந்த மின் தூக்கியில் அவர் நுழைந்தபோது, தன் பின் கழுத்திலிருந்து குளிர்ச்சியான வியர்வை உடைக்குள் வழிவதை அவர் உணர்ந்தார், தன்னை அமைதியாக்கிக் கொள்ள முயன்றார். அவர் காத்தலான் பிரிவில் இருந்த தன்னுடைய லினோடைப் எந்திரத்திடம் சென்றார், அலட்சியமாகச் செய்வது போல பொய்த்தகவல் ஆவணங்களை எடுத்தார், அவற்றைப் பல நிஜமான ஆவணங்களிடையே பரப்பி நுழைத்தார். பின்னர் தினம் செய்வது போல அவர் தட்டச்சத் துவங்கினார்.
அன்று காலை எந்தச் சம்பவமும் இல்லாமல் கழிந்தது. ஜுவான் இதனால் மனம் தேறினார், பொய்த் தகவல் கொண்ட ஆவணங்களைத் தட்டச்சுவதைத் துரிதமாக்கினார். வேலை செய்யுமிடத்திலேயே மதிய உணவை உண்டார், மேன்மேலும் பொய்யான வரிகளைத் தொடர்ந்து நுழைத்தபடி இருந்தார்:
சொர் அஸ்ஸம்ப்சியோ அர்தெபோல் பழைய பார்ஸெலோனாவின் இருண்ட தெருக்களை வருணிக்கப் பழைய உருவகமான நரகத்துக்குள் இறங்குதல் என்பதைப் பயன்படுத்துகிறார். உருவகமாகவும், எதார்த்தமாகவும் இதைச் செய்கிறார். எல் ரவால்[2] அதிகம் விவரம் தெரியவராத, ஆபத்தான இடம், நல்ல மனிதர்களுக்கு இது அயல் தேசம் போன்றது, இங்கே உண்மையிலேயே சாத்தானின் பரிச்சயம் கிட்டும். இங்கு உண்மையான அபாயம் திருடர்களிடமிருந்தோ, போதை அடிமைகளான பிச்சைக்காரர்களிடமிருந்தோ, அல்லது பித்துக்குளிகளான நாடோடிகளிடமிருந்தோ வருவதில்லை. ஆனால் இங்குள்ள பல “சிறு கதவுகள்,” தவறுதலாக நாம் காலெட்டு வைத்து விடக்கூடிய நுழைவாயில்கள், பல நேரமும் நிழல்களின் இருட்டில் மறைந்திருக்கும் இடங்கள்தான் அபாயமானவை.
ஹ்வானா டோர்ராக்ரோஸா
இமேஜஸ் ஆஃப் பார்ஸெலோனா, பார்ஸெலோனா, 1955
“பெரூச்சோ,” உணர்ச்சிகள் ஏதும் இல்லாத ஒரு சமச் சீரான குரல் ஒலித்தது, “மேலாளர் உங்களைத் தன் அலுவலறையில் சந்திக்க விரும்புகிறார். ஐந்து மணிக்கு வருக.”
பெரூச்சோ தன் உதறும் கைகளைக் கட்டுப்படுத்த முயன்றார். அவர் இயக்குநரின் அறைக்கு அடிக்கடி அழைக்கப்பட்டதில்லை, ஆனால் அது சில முறைகள் நடந்திருக்கிறது. ஒருகால் இது வழக்கமான சரிபார்க்கவென்று வரும் அழைப்பாக இருக்கலாம்.
“பெரூச்சோ, வேலை எப்படிப் போகிறது.”
“நன்றாகப் போகிறது, சார்.”
“உங்கள் தினசரி அளவைக் கொடுக்கத் தேவையான விஷயங்களை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறதா?”
“ஆமாம், சார்.”
“உங்களுக்கு ஜிரோனாவுக்கு ஆவணங்கள் தேடுவதற்காக இன்னொரு முறை போக வேண்டி இருக்குமா?”
“ஒரு வேளை அடுத்த மாதம் இருக்கலாம், சார்.”
தப்பி ஓடி விடும் ஆசை, ஏதாவது சாக்குச் சொல்லி விட்டு வெளியே ஓடிப் போக உந்துதல், கிட்டத் தட்ட எல்லை மீறி விடும்போலிருந்தது. ஆனால் ஜுவான் பெரூச்சோவுக்கு மன உறுதி உண்டு. அவர் ஆழமாக ஆனால் வெளித்தெரியாதபடி மூச்சை உள்ளிழுத்தார், தனக்குத் தானே ஒரு ஜோக்கைச் சொல்லிக் கொண்டார்.
ஒரு காத்தலான் ஒரே ஒரு மீன் இருந்த ஒரு மீன் தொட்டியின் முன் இருந்தார். வியப்பான விதமாக, அவர் மேலே பார்த்தால், அந்த மீன் அவரை நகல் செய்தது, அதே திக்கில் சென்றது. அந்த மனிதர் பிற திக்குகளில் பார்த்தால் மீன் அதையே செய்தது.
ஒரு ஸ்பானியர், காத்தலானைப் பார்த்தவர், அவரிடம் பேச வந்தார்.
“இது ஆச்சரியமானது! அதிசயமானது!” ஸ்பானியர் சொன்னார். “அந்த மீன் உங்கள் கட்டளைகளைப் பின்பற்றுமாறு எப்படிச் செய்கிறீர்கள்?”
“அது ரொம்பச் சுலபம்,”அந்தக் காத்தலான் அமைதியாகச் சொன்னார். “நான் அந்த மிருகத்தை என் விருப்பத்துக்கு அடிபணியும்படி செய்வதற்காக, அதன் கண்களுக்குள் ஆழமாக உற்று நோக்குகிறேன், நிலை தாழ்ந்ததான மீனின் புத்தி மேலான மனித புத்தியை ஒத்துக் கொள்கிறது. கொஞ்சம் பயிற்சி செய்தால் நீங்களும் இதை வெகு சீக்கிரமே செய்து விட முடியும்.:
இது அந்த ஸ்பானியருக்கு சரியானதாகப் பட்டது. எப்படியும் இதற்கு முன்னர் அவர் எந்த மீனையும் கட்டுப்படுத்த முயன்றதில்லையே. இது என்ன பெரிய விஷயம், சுலபம்தான். அவர் அந்த மீனின் கண்ணுக்குள் ஆழ நோக்க முயல ஆரம்பித்தார்.
பத்து நிமிடம் கழித்து காடலான் அந்த மீன் தொட்டியருகே மறுபடி வந்தார்.
“எப்படிப் போகிறது?” என்று அந்த ஸ்பானியரிடம் கேட்டார்.
அந்த ஸ்பானியர் இவர் புறம் ஒரு வெற்றுப் பார்வையோடு திரும்பினார், அவருடைய உதடுகள் மீனின் வாய் போல வட்டமாகக் குவிந்தன.
“ப்ளப்! ப்ளப்! ப்ளப்!” அவர் வாயைப் பிளந்து நோக்கினார்.
பெரூச்சோ தனக்குள் சிரித்துக் கொண்டார். அந்த ஜோக்கை எத்தனை முறை கேட்டாலும், அல்லது சொன்னாலும், அது அவருடைய அபிமான ஜோக்காகவே இருந்தது, அது அவரை உற்சாகப்படுத்தாமல் இருந்ததில்லை. அவர் சுவற்றில் இருந்த பெரிய கடிகாரத்தைப் பார்த்தார், கிட்டத்தட்ட நான்கு மணி ஆகி விட்டிருந்தது. அவருக்கு இன்னும் ஒரு முழு மணி நேர வேலை மீதமிருந்தது: அவர் கண்டு பிடிக்கப்படப் போகிறார் என்றால், தன் செயல் திட்டத்தைச் சீக்கிரம் முடிப்பது நல்லது.
“ஏதாவது எழுத்துகள் வேணுமா?” தள்ளு வண்டியோடு வந்த அந்தப் பெண் கேட்டாள், அவரிடம் உலோக உயிரெழுத்துகளும், மெய் எழுத்துகளும் அடங்கிய ஒரு சிறு கூடையைக் கொடுத்தாள்.
”கொஞ்சம் ‘எஃப்’ களும், கொஞ்சம் ‘வி’களும், ப்ளீஸ்,” என்றார் பெரூச்சோ.
“எல் பாம்பீன்! ஹா வின்கூட் பாம்பீன்!” ஒரு பதிப்பாசிரியர் காத்தலான் மொழியில் எச்சரிக்கை விடுத்தார்.[3]
பெரூச்சோவுக்குத் தெரிந்த வரை, எல் பாம்பீன் அவருடைய மேலாளருக்கும் மேலானவர், ஒரு மூத்த தலைமை அதிகாரி. அவர் அரிதாகவே அலுவலகத்தில் காணப்படுவார், அவர் வரும்போது அவர் ஊழியர்களிடம் ஏதாவது குறை கண்டு பிடிக்கவே முயல்வார். “சரியா உட்கார், பலாகே!” அல்லது “ஃபாண்டனெல்லா, நீங்கள் விசைப்பலகை மீது கைகளை வைத்திருப்பது சரியான முறையில்லை. நீங்கள் அமரும் முறையைத் திருத்தாமல் பிடிவாதம் பிடித்தால், உங்களுக்கு அதனால் வரப்போகும் மருத்துவச் செலவுகளுக்கு அடிப்படை அறிவுச் சேகர அமைப்பு பணம் கொடுக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.”
எல்லா பதிப்பாசிரியர்களும் உடனடியாக இறுக்கமாக ஆனார்கள். ஜுவான் பெரூச்சோ ஏதும் மாறாமல் இருந்தார். அவருடைய வழக்கம் போல அவர் மிகச் சரியான நிலையில்தான் இருந்தார். முதுகுவலிகள் மற்றும் களைப்பு வராமல் இருக்க அவர் தன் முதுகுத்தண்டுவடத்தை நேரான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் ஏற்கனவே கற்றிருந்தார். ஒருகால் அதனால்தான் எல் பாம்பீன் அவரைப் பற்றி ஒரு தடவை கூட எதையும் சொன்னதில்லை. சில நேரம் பெரூச்சோவுக்கு, எல் பாம்பீனின் நகைச்சுவை உணர்வு விசித்திரமானது, அவர் ஊழியர்களைத் திடுக்கிட வைப்பதில் மகிழ்ச்சி பெற்றார் என்று தோன்றும்
ஆனால் லினோடைபிஸ்டுகள் நடுவே சுற்றி வரும் அவரது வழக்கத்தை விட்டு விட்டு, எல் பாம்பீன் நேராக தலைமை அதிகாரியின் அலுவலகத்துக்குள் சென்று, கதவைச் சாத்திக் கொண்டார். பெரூச்சோ ஒருவரைத் தவிர மற்ற ஊழியர்கள் தன்னிச்சையாக உடனடியாக சகஜ நிலைக்குத் திரும்பினார்கள். அவருக்கு மூன்று ஜோக்குகளைத் தனக்குள் சொல்லிக் கொள்ள வேண்டி இருந்தது, பிறகு கொஞ்சம் மௌனமான தியானம் செய்ய வேண்டி இருந்தது, பிறகுதான் சகஜ நிலை திரும்பியது.
அவர் தன் கடைசிக் கட்டுரையைத் தட்டச்சினார், அதன் தலைப்பு, “சொர் அஸ்ஸம்ப்சியோ அர்தெபோலின் படைப்புகளில் சாத்தானைப் பற்றிய விவரணை.” இது அவருக்கு மிகப் பிடித்தமான படைப்பு, அவர் கற்பனையாக உருவாக்கிய எழுத்தாளரின் கிரீடத்தில் பதித்த நல்முத்து. இந்தக் கட்டுரையில், இன்னொரு கற்பனையான முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவர் விளக்குகிறார், அந்தப் பெண் துறவியின் நல்வழி காட்டும் எச்சரிக்கைக் கதைகளில் சாத்தான் எப்போதும் தன் வலது காது இழந்த ஒரு நபராகவே சித்திரிக்கப்படுகிறார் என்பது அந்த விளக்கம். இதன் விளக்கம் என்னவென்றால், சில மனிதர்களுக்கு மனித இயல்பு குறித்து ஒரு எதிர்மாறான அபிப்பிராயம் படிந்திருக்கிறது என்பதால், செய்திகளில் கெட்டதையே, எந்தக் கதையிலும் தவறான வழியையே கேட்க விரும்புவார்கள், அவர்களுக்கான உருவகம் அது.
அந்தக் கட்டுரை முடிந்ததும், பெரூச்சோ, கச்சிதமாக கோர்க்கப்பட்ட அந்த எழுத்துருக்கள் அடங்கிய தட்டை, தட்டுகளுக்கான மின் தூக்கியில் வைத்தார், அதை அச்சடிக்கும் எந்திரத்துக்கு அனுப்பினார். அது முடிந்ததும், அவருடைய உடல் ஓய்வடைந்தது. இப்போது அவருடைய கடைசிப் படைப்பு கலைக்களஞ்சியத்தில் நிரந்தரமாக, அழிக்க முடியாதபடி இடம் பெற்று விடும். அவர் இப்போது கைது செய்யப்படப் போகிறார். அதைக் கிட்டத்தட்ட வரவேற்கும் மனநிலையில் அவர் இருந்தார்.
ஆனால் எல் பாம்பீன் அரைமணியாகியும் அவருடைய தலைமை அதிகாரியின் அறையிலேயே இருந்தார், பிறகு அது ஒரு மணி ஆகியது, இரண்டு மணிகளாயிற்று. ஏழு மணிக்கு கரிநிற முழு ஆடை அணிந்த பதிப்பாசிரியர்கள் தங்கள் வேலையிடங்களை விட்டு நீங்கலாயினர். பெரூச்சொ இன்னும் அரை மணி நேரம் கூடுதலாக வேலை செய்தார், அது அவருக்குக் கொஞ்சம் வழக்கத்துக்கு மாறானது, அவர் எல் பாம்பீன் நீங்குவதற்குக் காத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.
“கசால்ஸ்,” அவர் தன் அதிகாரியின் செயலரை விளித்துப் பேசினார், “என்னை மிஸ்டர் கூல் வந்து பார்க்கும்படி சில மணிகள் முன்பு சொன்னார்.”
“அதைப் பற்றிக் கவலைப்படாதீங்க, பெரூச்சோ. அவர் இன்னும் எல்… மிஸ்டர். க்ளாட்ஸ்டோனுடன் இருக்கிறார். அவங்க இன்னும் நிறைய நேரம் இப்படிப் பேசுவாங்கன்னு நினைக்கிறேன்.”
“இது நிச்சயமா? ஏன்னா, வேணுமுன்னா நான் இன்னும் கொஞ்சம் காத்திருக்க முடியும்.”
கசால்ஸ் மெல்லப் புன்னகைத்தார்.
“நீங்க ரொம்பவே நாணயமா இருக்கீங்க. சும்மா வீட்டுக்குப் போங்க. உங்க பாஸ் நாளைக்கும் இங்கேதான் இருப்பார்.”
பெரூச்சோ அவளிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பினார். கால்கள் இலேசாகின, மனமும் இலேசாகி இருந்தது.
அவர் நினைத்தது முதலிருந்தே சரியாகத்தானிருந்தது: கவலைப்பட அங்கே ஏதுமில்லை. ஏதாவது தவறாக இருந்தால், கசால்ஸுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்; தலைமை அதிகாரியால் இந்த சூப்பர்-திறமைசாலியான காரியதரிசி இல்லாமல் தன்னுடைய நிழலைக் கூடக் கண்டு பிடிக்க முடியாது. அவளோ எப்போதும்போல நட்பாகவும், அன்பாகவும்தான் இருந்தாள்.
அவர் கட்டடத்தை விட்டுப் போகும்போது விடுவிப்பு பெற்ற உற்சாகத்துடன் இருந்தார். கொஞ்சம் சீட்டி கூட அடித்தார். தகவலைத் திரிப்பதன் மூலம் தனக்கு ஒரு தனி உலகை சிருஷ்டிப்பது அவருக்கு அபாரமான கிளர்ச்சியைக் கொடுத்தது: இருட்டில் ஒரு மின்னல் கீற்று, 50களின் இறுதியில் பெரும் இழப்புகளால் உலகத்தில் படிந்து போன சாம்பல் நிற எதார்த்தத்தில் ஒரு வண்ணத் தெளிப்பு அது.
ஒரு வானத்துக் கண்காணிப்பு எந்திரம் பெரூச்சோவைக் கடந்து போயிற்று, அவர் பால் முகர்ந்து போயிற்று. அதில் அமர்ந்திருந்த கண்காணிப்பாளரின் காலணி கிட்டத்தட்ட பெரூச்சோவின் தோளைத் தொடும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த எந்திரத்தின் இருப்பு இப்போது அச்சுறுத்தலாக இல்லை, மாறாக காப்புணர்வைக் கொடுத்தது. எல்லாம் மறுபடி ஒழுங்கில் இருந்தன.
அவர் இப்போது இரவு நேர பழைய பொருள் அங்காடிக்குப் போகலாம். எல்ஸ் என்கான்ஸ் என்ற அதில்[4], அவர் புராதனப் புத்தகங்களைக் கண்டு பிடிக்கலாம், அவை படிக்கும் மகிழ்ச்சிக்கு உதவும். அல்லது தன் அடுக்ககத்துக்குத் திரும்பி அடுத்த செயல் திட்டத்தைத் துவங்கலாம். சிகிச்சைக்கு உதவும் நீரூற்றுகள் பற்றி…. ஏதோ ஒரு யோசனை அவரை உறுத்திக் கொண்டிருந்தது, ஏதோ வெந்நீர்த் தொட்டிகள்தாம் அவர் இப்போது பேச விரும்பும் தலைப்பு போல, அவருடைய மனதில் குமிழிகளோடு பொங்கி ஓடிக் கொண்டிருந்தது.
ஆமாம், அவர் அந்த மாதிரி ஒன்றை இப்போது எடுத்துச் செயல்படுத்த வேண்டும். பின் ஏன் அவர் காலையில் அந்தக் காகிதப் பாம்பு சுட்டிய திக்கில் போய்க் கொண்டிருக்கிறார்? கரேர் த ந’அராய் – ஐ நோக்கியா? அவர் அந்த முகவரியை ஏன் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்?
அவர் தொல்லைகளைத் தவிர்க்க வேண்டும். அந்தச் செய்தியில் குறிப்பிட்ட இடத்துக்குப் போவது பைத்தியக்காரத்தனம். அந்தச் செய்தி ஒரு ஜோக் இல்லை, மாறாக ஏதோ அதிகார அமைப்பு இலக்கின்றி அனுப்பும் வலைப்பொறியாக இருந்தால்? ஒருகால் யாருக்கோ அவருடைய அத்து மீறல்களெல்லாம் தெரிந்திருந்தால்? அதை விட மோசம், பயங்கரம், இந்த நண்பர்கள் அவர் வரக் கூடிய தண்டனையைத் தவிர்க்க உதவ விரும்பினால்?
அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தன்னுடைய அடக்க முடியாத, என்னவென்று அறியும் ஆர்வத்தால் பொறியில் பிடிக்கப்பட்டு அழியப் போகிறார், அதனால் போர்டாஃபெரிஸ்ஸா (இரும்புக் கதவு) நீரூற்றைப் பார்க்க பாசாங்காகச் சிரிப்பு ஒன்றைத் தரித்தபடி நடந்து போனார். வினோதம் என்ன என்றால், தன் அலுவலகத்தை விடத் திறந்த தெருவில்தான் அவருக்கு அச்சம் கூடுதலாக இருந்தது. ஒருகால், வேலை செய்யும் இடம், பழகிய ஒன்று என்பதால், ஏதோ தேற்றுவதாகத் தெரிந்திருக்கிறது.
தெருவில் யாரும் இல்லை. பெரூச்சோ இளைஞராக இருந்த போது பார்ஸெலோனா மிக்க துடிப்புடன் இயங்கிய மாநகரம். லெஸ் டெலீஸிஸ் சினிமாவுக்குப் போனதும், அதில் குழந்தைகள், தொழிலாளர்கள், முதியோர் கூட்டம் இருந்ததும் நினைவுபடுத்திக் கொண்டார்; டிபிடாபோவுக்குப் போய், அங்கிருந்த தானியங்கிகளின் அச்சமூட்டும் அருங்காட்சியகத்தைப் பார்த்தது, பார்க் டெலா சுத்தடேல்யாவின் கண்ணைப் பறிக்கும் அற்புதம் கொண்ட பசுமையகத்தைப் பார்த்தது எல்லாம் நினைவு வைத்திருந்தார். ஆனால் அந்த நகரம் இப்போது முழுதும் அழிந்து போனது. வெடிகுண்டுகள் மழை போல அடர்த்தியாக வீழ்ந்தன, அடுக்கடுக்காக வீதிகளும், மொத்த இருப்பிடத் தொகுப்புகளும் தவிடுபொடியாக்கப்பட்டன, ஓர் உலகமே, மொத்த யுகமே அழிக்கப்பட்டன.
அவர் கிட்டத்தட்ட போர்ட்டாஃபெரிஸ்ஸாவை எட்டி விட்டார். அப்போது, முக்கில், அவர் ஒரு வில்லாளியைப் பார்த்தார். நிழல்களில் பகுதி மறைந்து கொண்டு, அலுவலகச் சீருடையணிந்திருந்த ஒரு பெண், தன் கையை விறைப்பாக்கிக் கொண்டிருந்தார், ஓர் அம்பு பூனை ஒன்றைப் பார்க்கக் குறி வைக்கப்பட்டிருந்தது. அவர் துன்பத்தில் இருப்பதாகத் தெரிந்தது.
“நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியல்லை,” அவள் சொன்னார். “அது கூரையில் சிக்கிக் கொண்டிருக்கிறது, நிறுத்தாமல் கத்திக் கொண்டிருக்கிறது. சொந்தக்காரர் இல்லாத பூனை பொதுச் சுத்தத்துக்குப் பெரும் அபாயம், தொற்று நோய் சுமந்து கொண்டிருக்க வாய்ப்பு அதிகம், நாங்கள் ஏற்கனவே அக்கம்பக்கத்தினரிடமிருந்து குறைகளைப் பெற்று விட்டோம். ஆனால்…. அது மிகவும் குழம்பி இருக்கிறது. நான் தரையிலிருந்து அதை எட்டிப் பிடிக்க முடியாது. ஒருகால் என்னால் அதை எட்டிப் பிடிக்க முடிந்தால் அந்த மிருகத்துக்குப் பிழைக்க ஒரு வாய்ப்பு இருக்கும்… மிருகக் காட்சி சாலைக்கு … இல்லை என்றால் இதைக் கொல்லாமல் விட்டதற்காக நான் என் வேலையை இழக்க நேரும்.”
பெரூச்சோ ஏதோ தன் மூக்கை உறுத்துவது போல உணர்ந்தார், நிலைமின்சாரம் போலவோ அல்லது மூக்கினுள்ளே நுழைந்து விட்ட பூச்சி போலவோ அது இருந்தது. ஏதோ அபாரமான ஒன்றின், எதிர்பாராத ஒன்றின் சுவை போல இருந்தது. அது அரிதான ஒன்றாக, மிக்க சுவையைக் கூட்டும் பயம் கலந்திருந்தது.
அறியும் ஆர்வம் பூனையைக் கொன்றது, பெரூச்சோ உடனடியாக நினைத்தார், கி எஸ்கோல்டா பெல்ஸ் ஃபோராட்ஸ், ஸென் எல்ஸ் சொஒஸ் பெகாட்ஸ் என்ற காத்தலான் பழமொழியை நினைத்தார்: பொருத்தமில்லாத இடங்களில் புகுந்து நோக்குபவர், தமது பாவங்களையே அங்கு காண்பார். அந்த இரு விஷயங்களிலும், தவறானதும், சாத்தானும், புதிதானதுக்கான தாகத்தில், தகவலுக்கும், அறிவுக்குமான தேட்டையில் இருந்தன. அந்த வில்லாளி ஓர் கருத்தின் உருவம் போலத் தெரிந்தார், அல்லது அங்கு வேறொன்றின் பிரதிநிதியாகத் தெரிந்தார், பண்டை மாந்தர் சொல்லியிருப்பார்கள், அறியும் ஆர்வமாகவே தெரிந்தார்.
“ஒருகால் நீங்கள் ஓர் அம்பை அந்தச் சுவர் மீது தைக்கும்படி எய்யலாம், அங்கேதான், பார்த்தீர்களா? ஒருவேளை அந்தப் பூனை அதை ஒரு படி போலப் பாவித்து தானே கீழே இறங்கலாம். அப்போது நீங்கள் அதைப் பிடித்து விடலாம்.”
அப்புறம் அவர் சன்னமாகச் சேர்த்தார்.
“அல்லது முடியாமல் போகலாம்.”
அந்தப் பெண் அவரைப் பார்த்தார்.
“அதை நான் கொல்ல வேண்டாமென்று நினைக்கிறீர்களா?”
பெருச்சோவுக்கு ஒரு கணம் ஐயம் எழுந்தது. சாதாரணக் குடிமகன் அந்தப் பூனையைக் கொல்வதை ஆதரித்திருப்பார், அல்லது அந்தச் சுத்திகரிப்பு ஊழியரைத் தன் கடமையைச் செய்யாததற்காக மருட்டியிருப்பார்.
மாறாக அவர் சொன்னார், “வேண்டாம்.”
“இதில் நிச்சயமாக இருக்கிறீர்களா?”
“வார்த்தைகளை முன்னிட்டு யாரும் சாகத் தேவை இல்லை.”
அந்த வில்லாளி புன்னகைத்தார், தன் தொப்பியை அகற்றினார், சொர் அஸ்ஸம்ப்சியோ அர்தெபோலின் படைப்புகளில் வந்த சாத்தானைப் போலவே, அவருக்கும்m வலது காது இல்லை என்பதைக் காட்டினார். பெரூச்சியோவை உற்று நோக்கினார். பெரூச்சியோ ஒரு நடுக்கத்தை உணர்ந்தார்.
“என்னோடு வருகிறீர்களா?” அந்த வில்லாளி கேட்டார்.
“சரி.”
இந்தச் சமயத்தில், தன்னுடைய கதைகளில் ஒன்றின் உள்ளே இருப்பதான உணர்வு அவருடைய அச்சத்தை விட மேலோங்கியது.
பெரூச்சோ தன் வழிகாட்டியைப் பின்பற்றிப் பல குறுகிய தெருக்கள் வழியே போனார், ஒரு கதவின் முன் வந்து சேர்ந்தார், அதுவும் நிழல்களில் இருந்ததால் அனேகமாகப் பார்வைக்குத் தெரியாதபடி இருந்தது. அவர் கட்டடத்துக்குள் போனார், அதனுள் என்ன இருந்தது என்று பார்த்தபோது அவரால் தான் பார்த்ததை நம்பவே முடியவில்லை.
முழுதும் செயல்படும் பழைய காலத்து அச்சு நிறுவனத்தை அங்கு பார்த்தார். அச்சுத் தொழில் துவங்கிய காலத்திலிருந்து துவங்கி உருவான அனைத்து அச்சு எந்திரமும் அங்கு செயலில் இருப்பதைப் பார்த்தார். பல நபர்கள் கையால் காகிதங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். அங்கு பிரதி எடுக்கும் ஒரு மடாலயத் துறவி கூட இருந்தார், அவர் லா மொரெநெதா என்று அழைக்கப்பட்டார்: 1975 இல் உயிரோடு இருந்த, நல்ல நிலைமையில் இருந்த எழுத்தரான துறவி.
அது, தெளிவாகவே ஒரு சட்ட விரோதமான தொழிற்பட்டறை. ஜன்னல்கள் சிறியதாக, ஒளியை உள்ளே விட்டாலும் காட்சிக்கு இடமளிக்காதவையாக இருந்தன. சுவர்கள் எந்த ஒலியையும் அடக்குவனவாக இருந்தன. எல் ரவாலில்தான்[5] இப்படி ஓர் இடம் மறைந்திருக்க முடியும். இந்த வட்டாரத்தில் பரவிய நிழல்கள் ஒரே நேரம் பாதுகாப்புணர்வையும், எச்சரிக்கையையும் கொடுத்தன.
அப்போது பெரூச்சோ அங்கு எல் பாம்பீனைப் பார்த்தார். அவர் அங்கு தொழிற்சாலை வேலைக்காரர்கள் நடுவே நடந்து கொண்டிருந்தார். இங்கு அவரிடம் காணப்பட்ட பாவனை பெரூச்சோவுக்குப் பழக்கமான ஒன்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. சின்னஞ்சிறு குறைகளையும், தவறுகளையும் கண்டுபிடிக்கும் கெடுபிடித்தனம் இல்லாது, அவர் உல்லாசமாக இருப்பதாகத் தெரிந்தார். மகிழ்வாகக் கூடக் காட்சியளித்தார். முற்றிலும் வேறான நபராகத் தெரிந்தார்.
“ஆ! பெரூச்சோ, உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது!” என்றார், காத்தலான் மொழியில். பெருச்சோவுக்கு எல் பாம்பீனுக்கு மரபு மொழியில் இத்தனை சரளம் இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. “வாங்க, இங்கே வாங்க! நீங்க கவலைப்பட இங்கே ஒண்ணுமில்லே. உங்களுக்கு ஓய்வாக இருக்க நேரம் இருக்காது, ஏன்னாக்க எங்களோட எழுத்தாளர்களின் குழு உங்களிடம் கேட்க நிறையக் கேள்விகள் வச்சிருக்காங்க…”
“இதுதானா அவர்!” கண்ணாடி போட்டிருந்த ஒரு பெண் கேட்டார், அவர் அணிந்த ஆடை வித்தியாசமான பச்சை நிறமாக இருந்தது.
“ஆமாம்! நான் உங்களை அறிமுகப்படுத்துகிறேன்: ஜுவான் பெரூச்சோ, இவர் ரோஸா ஃபாப்ரெகட், எங்களோட மிகத் திறமையான எழுத்தாளர்களில் ஒருவர்.”
“எழுத்தாளர்….”
பெரூச்சோ அந்தச் சொல் தன் வாயில் கொணர்ந்த சுவையை ரசித்தார். அதை அவர் கேட்டு வெகு நாட்களாகி விட்டிருந்தது, அவரே அதைச் சொல்லி இன்னுமே கூடுதலான காலம் ஆகி விட்டிருந்தது. அவர் அந்த இளம் பெண்ணைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்.
“மிஸ்டர் பெரூச்சோ,” அவள் காத்தலான் மொழியில் பேசினாள், “நான் உங்க படைப்புகளுக்குப் பெரிய விசிறி.”
பெரூச்சோவுக்கு சம்பவங்களின் இந்தத் திருப்பம் சரிவரப் பிடிபடவில்லை.
“ஆனால் நான் அப்படி ’படைப்புகள்’ ஏதும் உருவாக்கவில்லையே… நான் பல பதிப்பாசிரியர்களில் ஒருவன்… “
எல் பாம்பீனும், ரோஸாவும் புன்னகைத்தார்கள்.
“நீங்க ஒரு அற்புதமான படைப்பாளி. முழு இலக்கிய வாழ்க்கைகளையே கட்டி அமைத்திருக்கிறீர்கள், அந்த படைப்பாளிகளின் படைப்புகளையும் கூடக் கொடுத்திருக்கிறீர்கள். ஆக்டாவி த ரோமேயு, பெரெ செர்ரா யி போஸ்டியஸும் அவருடைய அரக்கன் பெர்னாபோ…”
பெரூச்சோ தன் முதுகெலும்பு நெடுக பயத்தின் நடுக்கம் ஓடுவதை உணர்ந்தார். அவர் உருவாக்கிய கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி அவை மிக நேசிக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்பது போல அந்தப் பெண் பேசிப் போனாள். அவர்கள் அவருடைய கற்பனைக்கு வெளியே நிஜ உலகில் இருப்பவர்களைப் போல இருந்தது அவள் பேசியது.
“…. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கணும்னு இருந்தேன். பெர்னாபோ பத்தித்தான் அது. அவனுக்கு கருப்பு உரோமம் இருக்கு, வாயே கிடையாது, மூணு கண்கள் இருக்குன்னு நமக்குத் தெரியும். ஆனால் அவன் அந்த எழுத்தாளரை உளவு பார்க்கும்போது, மூணு கண்களையும் அவர் மேல் குவிக்கிறானா இல்லை அவை தனித்தனியாக நகருமா?”
“அம்மா, ரோஸா! பெருச்சாவுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு….”
“இல்லை, பரவாயில்லை….” என்றார் பெரூச்சோ. “நான் பெர்னாபோவின் கண்களைப் பத்தி யோசிக்கவே இல்லை! அது ஒரு அழகான கேள்வி. ஒருவேளை அவனுக்கு ஒவ்வொரு கண்ணும் எதார்த்தத்தோட வேற வேற பகுதியைப் பார்க்க வேண்டி இருக்கலாம்- ஒரு கண் ஒளியைப் பார்க்கவும், மஞ்சள், வெள்ளை நிறங்களைப் பார்க்கவும், இன்னொண்ணு நிழல்களையும், நீலம், பச்சை நிறங்களைப் பார்க்கவும், மூணாவது வேட்கைகளையும், சிவப்பு, ஊதா, ரோஜா, மஜெண்டா நிறங்களைப் பார்க்கவும் வேண்டி இருக்கலாம். இது சரியாப் படுதா?”
“அப்ப அவன் மூணு கண்களையும் ஒரு புள்ளியில குவிச்சுத்தான் பார்க்கணும்.. உங்களுக்கு மிக்க நன்றி, மிஸ்டர் பெரூச்சோ.”
“அவர் கிட்டேயிருந்து இன்னும் கூடுதலா சேதி, அப்புறமாக் கிடைக்கும், ரோஸா. இப்போதைக்கு அவர் இந்த இடத்தை நல்லா பார்த்துத் தெரிஞ்சுக்கட்டும்.”
“ஓகே,” என்று சற்று சலிப்புடன் சொன்னாள் ரோஸா. “இன்னும் ஒண்ணே ஒண்ணு. .. அந்த கண்ணாடிகளைப் பற்றின ஆய்வு… அத்தனை கச்சிதமா இருந்தது, போங்க.”
அவள் அங்கிருந்து போனாள், பெருச்சோவின் முகம் எப்படிச் சிவந்து போயிற்று என்பதை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை.
“அவள் சொன்னது ரொம்பச் சரி. அந்த மத்திய காலக் கதைகள்…. அதெல்லாம் மறக்க முடியாதவை,” மேலும் தொடர்ந்தார் எல் பாம்பீன். பெரூச்சோவுக்கு இந்த மனிதர் தன் புனைவுகளை அத்தனை தூரம் படித்திருக்கிறார் என்பதை அறிந்து அந்தப் புகழ்ச்சி கிறக்கமாக இருந்தது.
“மானுவெல்,”- எல் பாம்பீன் அங்கே ஒரு மேஜையில் வேலை செய்து கொண்டிருந்த கலைஞன் ஒருவரைச் சுட்டினார் – “ சென்ற வருடம் நீங்க அத்தனை விவரமா வருணிச்சீங்க இல்லியா, பழங்காலப் புத்தகத் தொகுப்புன்னு ஒண்ணை. அதைத் தயாரிச்சுக்கிட்டிருக்கிறார்.”
“எனக்கு… எனக்கு இது புரியல்லை. நீங்க இந்தப் பொய்யான ஆவணங்களை எல்லாம் தயாரிச்சுக்கிட்டிருக்கீங்களா… அதுவும் நான் கற்பனையாக் கொடுத்த விவரங்களை வச்சுகிட்டா? எல்லாத்தையுமா?”
“கச்சிதமா அதேதான் நாங்க செய்யறது. ஆச்சரியமா இல்லியா? விதிகளை மீறின பதிப்பாசிரியர்னு யாரையும் பிடிக்க முடியாது, ஏன்னாக்க அந்தப் பொய்யான ஆவணங்கள் எல்லாம் நிஜமாவே இருக்கப் போகிறது. அதனால உங்க படைப்பு எல்லாம் நிஜம்னு ஆயிடும்.”
“எனக்கு இப்ப உக்கார்ந்துக்கணும்,” என்றார் பெரூச்சோ.
ரோஸா கிளம்பிப் போன பிறகு, எல் பாம்பீனும், பெருச்சோவும் கொஞ்ச நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார்கள்.
“ஆனா,…. ஏன் இதை எல்லாம் என்னைக் காப்பாத்தறத்துக்காகச் செய்யணும்… இதை எல்லாம் செய்ய ஏகப்பட்ட செலவு ஆகுமே…”
“உங்களை மட்டும் காப்பாத்தவா? கிடையாது. இலக்கியத்தையே காப்பாத்தறதுக்குத்தான் இதைச் செய்யறோம், பெரூச்சோ. நீங்க ஒருத்தர் மட்டும்தான் கலைக் களஞ்சியத்திலே சுவையான விஷயங்களை நுழைக்கிறீங்கன்னு நினைச்சீங்களா? நீங்க, இதை நான் சொல்லலாம்னு நீங்க அனுமதிச்சா, சிறந்த படைப்பாளிகள்லே ஒருத்தருங்கறது சரிதான். உங்களோட சில சக ஊழியர்கள், நீங்க அவங்களை இப்பச் சந்திக்கவிருக்கீங்க, உதாரணமா, எங்கள் பிரியத்துக்கு உரியவரான மிஸ்டர் குன்கெய்ரொ, அப்புறம் மார்செல் எம்மீ, இவர் ஃப்ரெஞ்சு மொழிப் பகுதியுடைய மேலாளர்களில் ஒருத்தர்…. மத்தவங்க எல்லாம் கல்வித்துறையில தங்களோட கற்பனை உலகங்களை உருவாக்கறாங்க, உதாரணமா புகழ் பெற்ற பேராசிரியர்….”
“டொரெண்டே பாலெஸடே!” பெரூச்சோ இடைமறித்தார். “எனக்கு எப்பவுமே அவரோட அச்செழுத்துகள் மேலே ஒரு சந்தேகம் இருந்தது. அவருடைய சில கதைக் கருக்களெல்லாம் உண்மையா இருக்க முடியாத அளவு எழிலானவை.”
எல் பாம்பீன் பெருமூச்சு விட்டார்.
“ஏதோ எழிலா இருக்கறது உண்மையிலேருந்து வலுக்கட்டாயமா வேறுபட்டதா இருக்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு. … இதெல்லாம் நாம சிக்கிக்கிட்டிருக்கிற இந்தக் காலத்தோட கோலம்தான்.”
“எஸ்டோஸ் புவெய் டெனெமோஸ் யி கொன் எய்யோஸ் டெனெமோஸ் கியெரார்’ [நம்மிடம் இந்தக் காளைகள் இருக்கின்றன, இவற்றை வைத்துத்தான் நாம் உழ வேண்டும்.”]
அங்கு நீண்ட மௌனம் நிலவியது.
“பெரூச்சோ,” எல் பாம்பீன் சொன்னார், “கடந்த சில பத்தாண்டுகளின் வரலாறு அவங்க… நாம… அதிகார பூர்வமாச் சொன்ன மாதிரி இருக்கல்லை. அதிகாரத்துல இருக்கறவங்க, கலைக்களஞ்சியத்துல, அவங்க பங்குக்கு ‘அப்படி ஒண்ணும் உண்மையில்லாத’ சேர்க்கைகளை எல்லாம் செய்திருக்காங்க; அதெல்லாம் நீங்க கொடுக்கறதை மாதிரி அத்தனை மகிழ்ச்சி தருவனவாக இல்லை, அதை நான் சொல்லிடணும். நீங்க நல்லாப் படிச்சவர், அதனால் உங்களுக்கு ஹெர்பர்ட் ஜ்யார்ஜ் வெல்ஸ் பத்தித் தெரியும்னு நான் வச்சுக்கலாமா?”
பெரூச்சோவுக்கு திகைப்பாக இருந்தது. அவர் அரசியல், பொருளாதாரம் பற்றி எல்லாம் பெரிய உண்மைகள் கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்தார்.
“ஆமாம், அவர் ஒரு இங்கிலிஷ் எழுத்தாளர்.”
“இப்ப நமக்குத் தெரியற உலகத்தை அவர்தான் படைச்சார்னு நான் சொன்னா என்ன நெனைப்பீங்க?
“வேறென்ன… நான் ரொம்பவே ஆச்சரியப்படுவேன்.”
“1935 இலே அவர் ஒரு நாவல் எழுதினார்…”
பெரூச்சோவுக்கு அந்தச் சொல் ‘நாவல்’ என்பது அத்தனை அழகாக ஒலித்தது. கடந்த காலக் கலையிலிருந்த அத்தனை சுதந்திரத்தையும், சக்தியையும் அது தெரிவித்தது.
“த ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம்,” எல் பாம்பீன் தொடர்ந்தார். “அது எச்சரிக்கை கொடுக்கும் கதை, ஆனால் பழைய மாதிரிக் கதை இல்லை, அதெல்லாம் தனி நபருக்குப் புத்திமதி சொன்ன கதைங்க. இது அப்படி இல்லை, இந்தக் கதை மொத்தச் சமூகத்தைப் பத்தினது, இருண்ட ஒரு காலத்தை அது வருணித்தது, தவறாகச் செலுத்தப்பட்ட சமூகத்தின் நடத்தையால் வரப்போவது பற்றியது. அந்தப் புத்தகம் சுமாராகத்தான் வெற்றி பெற்றது, ஆனால் பொதுவாக வரம்பு மீறிய ஒரு அதீதமான சோதனையாகக் கருதப்பட்டது. தீவிரமான ஓர் எழுத்தாளர் எதற்காக கற்பிதமான எதிர்காலங்களை விவரித்துத் தன் நேரத்தை வீணா அடிக்கணும்?”
பெரூச்சோ புன்னகை செய்தார். அந்த மாதிரி புத்தகம் அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், ஆனால் ஒருவேளை அவர் சராசரி வாசகர் போல இல்லையோ என்னவோ.
“மூன்று வருஷங்கள் கழித்து, ஒரு ஆள், ஆர்ஸன் வெல்ஸுன்னு பேருள்ளவர், ஒரு ரேடியோ ஒலிபரப்பு நிகழ்ச்சியை நடத்தினார். அவர் தன் குடும்பப் பெயர் போலவே பெயர் கொண்ட அந்த எழுத்தாளரின் படைப்புகளை மிக விரும்பினார், அதை வைத்து ஹாலோவீன் இரவு அன்று ஒரு குறும்பு வேலையைச் செய்ய நினைத்தார். அவர் கருக்காக எதையும் செய்ய நினைப்பவர், அதனால் பிரிட்டன், யூரோப், ஏன் ரஷ்யாவில் கூட, பல வானொலி நிலையங்களில் இருந்த தன் சகபாடிகளை ஒத்தாசைக்கு அழைத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டார். வானொலியின் பெரும் சக்தியைத் தன் மேலாளர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.”
“ஆனால் அனைத்துப் புனிதர் தினம்[6], 1938 ஆம் ஆண்டு… அது பழைய அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் கூ டேடாட் நாளாயிற்றே[7]….” பெரூச்சோ குறுக்கிட்டார்.
“மிகச் சரி. ஆனால் துவக்கத்தில் அங்கே எந்த கலகப் புரட்சியும் இருக்கவில்லை. சும்மா ஒரு போலி வானொலி ஒலிபரப்பு, அப்படி ஒன்று நடப்பதாக.”
பெரூச்சோ தான் திணறுவதாக உணர்ந்தார்.
“இது எதுவும் எனக்கு அர்த்தமாகவில்லை. அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது நிஜம். அதற்குப் பெரும் பின் விளைவுகள் இருந்தன….”
“அந்த வானொலி ஒலிபரப்புக்குப் பிறகு மக்கள் பயந்திருந்தார்கள். பலர் நகரங்களை விட்டு ஓடி விட்டார்கள். எங்கும் கடும் குழப்பம் நிலவியது. அந்தக் கருத்து நிரூபணமாகியது: வானொலிக்கு சக்தி இருந்தது. ஆனால் தான் செய்தது வேடிக்கைக்கான ஒரு குறும்பு என்று ஆர்ஸன் வெல்ஸ் உலகுக்கு விளக்க நினைத்தபோது, தொடர்புகள் எல்லா நாடுகளிலும் வெட்டப்பட்டிருந்தன. புரட்சிக் குழுக்களில் ஒன்று அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு நிஜமான கலகத்தை நிகழ்த்தி அதிகாரத்தைப் பிடித்திருந்தது.
“யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சில மணி நேரங்களில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ரகசியச் சந்திப்புகள் நடந்தன. சீக்கிரமே பெருநிதிக் குழுக்கள் இதெல்லாம் தமக்கு வசதியான மாறுதல்கள் என்று புரிந்து கொண்டன. அதிகார வெறி கொண்ட சில தலைவர்கள் ஆர்ஸன் வெல்ஸைக் கைது செய்து விட்டார்கள். அவர்களிடம் அவர் தனக்கு இந்த புதுக் கருத்தைக் கொடுத்த அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.”
“இன்றைய உலகம் இருக்கிற வடிவம் அப்படி ஒரு நாவலிலிருந்து வந்ததுன்னு சொல்ல வர்ரீங்களா நீங்க?”
“அத்தனை எளிதா அது நடக்கல்லை. பல செயலாளிகளும், ஏகப்பட்ட பிற நலன்களும் இதில் இருந்தன. ஆனால் கடைசியில், அவர்கள் எல்லாம் எச்.ஜி.வெல்ஸின் திட்டங்கள் சிறப்பான குறிக்கோள் கொண்டவை என்று முடிவு செய்தார்கள். ஏற்கனவே ஒரு எதிர்காலம் நன்கு வரையப்பட்டிருந்தால், எதற்குப் புதிதாக ஒன்றை மறுபடி திட்டமிட வேண்டும்?”
“ஆனால் வெல்ஸின் நாவல் ஓர் எச்சரிக்கைக் கதை என்றுதானே நீங்கள் சொன்னீர்கள். அது ஒரு சமூக நலத் திட்டமில்லையே.”
“அவர்கள் அதை ஒரு கையேடாக எடுத்துக் கொண்டனர். அது வேலை செய்தது. இரண்டு வெல்ஸுகளையும் தங்களுக்கு என்று வேலை செய்யுமாறு துவக்க வருடங்களில் செய்தார்கள், பிறகு ஒத்துழைத்ததற்குச் சன்மானமாக அவர்களை விடுவித்தார்கள்.”
“கட்டாயப்படுத்திய ‘ஒத்துழைப்பு’….”
எல் பாம்பீன் தலையசைத்து ஆமோதித்தார்.
“இதை நான் சரியாப் புரிஞ்சுக்க முயற்சி செய்யறேன்.” என்றார் பெரூச்சோ. “இந்தப் பொருளாதார அமைப்பும், நம்மோட மொத்த சமூகமும் உருவாகி எழுவதற்குக் காரணம் ஒரு அதிபுனைவுக் கதையும், ஒரு விளையாட்டுக் குறும்பும்னு சொல்றீங்களா? இதே சமூகம்தான் இப்போ புனைவுகளையே தடை செய்துமிருக்கா?”
“அவங்கப் புதுக் கதைகளைத் தடை செய்யக் காரணமே, புனைவுகளோட சக்தியை அவங்க சரியாப் புரிஞ்சுகிட்டிருக்காங்கங்கறதுதானே?
“ஆர்ஸன் வெல்ஸ் இந்த ஆட்சியோட பிரச்சார எந்திரங்களை பலவருடங்கள் உழைத்து நிறுவினார். அவர் பல புனை பெயர்களில் பிரமாதமான வேலை செய்தார். அதுல ஒண்ணுதான் கேன் என்ற பெயர். அவர் விடுவிக்கப்பட்ட பின் என்ன செய்தார்னு யாருக்கும் தெரியல்லே, ஒருகால் அவர் தன்னோட மிச்ச வாழ்க்கையை ஒரு தீவில வசிச்சுகிட்டு, சுருட்டுகளைப் புகைச்சுகிட்டு, நிறைய குழந்தைகளைப் பெத்துக்கிட்டுக் கழிச்சிருக்கலாம். ஆனால் நமக்கு எச். ஜி. வெல்ஸ் என்ன செய்தார்னு தெரியும். அவர் ஒரு தொழில் முனைபவர் ஆனார், நிறையப் பணம் சம்பாதித்தார். அவருக்கு அதிகாரம்ங்கறதோட உள் இயக்க முறைகளைப் பத்தி நிறையத் தெரியுமில்லையா? மேலும் தன்னோட நண்பர் ஜி.கே. செஸ்டர்டனோட உதவியால அவர் ஒரு ரகசிய நிறுவனத்தை உருவாக்கினார். அன்புள்ள பெரூச்சோ, அது உங்களைப் போல, மிக எதிர்மாறான நிலைகளிலும் புனைகதைகளை எழுதுவதற்கு ஏதோ வழிகளைக் கண்டு பிடிக்கிற படைப்பாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது.”
பெரூச்சோ பொய்களை நிலை நாட்டவென்று வேலை செய்கிற அந்த எந்திரங்களையும், பெரிய தொழிற்பட்டறையையும் ஒரு தடவை பார்த்தார்.
“இதெல்லாம் வெல்ஸின் நிதியிலிருந்து உருவானவையா?” தனக்குக் கிட்டிய புதுத் தகவல்களை ஜீரணித்துக் கொண்ட பெரூச்சோ கேட்டார்.
பெரூச்சோ அந்தப் புராதன உலோகத் தகடுகளில் செதுக்கல்கள் மூலம் அச்சிடும் எந்திரங்களையும், ஆவணங்களைப் பிரதி எடுத்து எழுதுபவர்களையும், காகிதத் தயாரிப்பாளர்களையும் பார்த்திருக்கையில், இருவரும் மௌனமாக நின்றார்கள். அவரிடம் கேட்க வேண்டிப் பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன… ஆனால் அந்த நிலையை முழுதும் புரிந்து கொள்ள முடியாமல் திணறலில் இருந்தார் பெரூச்சோ, அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது தன் சிந்தனைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள.
“நான் கொஞ்சம் நடை போக வேண்டும்,” என்றார்.
எல் பாம்பீன் தலையசைத்து விட்டு, அவரிடம் ரகசியக் கதவுக்கு சாவிகளைக் கொடுத்தார்.
“நீங்க எப்ப வேணும்னாலும் திரும்பி வரலாம்.”
பெருச்சோ நீண்ட நேரம் நடந்தார். மொத்த நகரமும் இப்போது மாறுபட்டுத் தெரிந்தது, ஒரு ரகசிய பார்ஸெலோனா பதுங்கி இருப்பதை அறிந்ததால் அவருக்கு நகரம் இப்போது கிளர்ச்சியூட்டுவதாகவும், வசீகரமானதாகவும் தெரிந்தது. வெளியே தெரிவனவற்றுக்குப் பின்னே இப்படி ஒரு அத்து மீறும் ஸ்தாபனம் வேலை செய்கிறதென்றால், இன்னும் எத்தனை ஆச்சரியமான திட்டங்கள் நிழல்களில் பதுங்கி இருக்கும்?
அவர் எல்ஸ் என்சாண்டெஸ் பகுதிக்கு வந்து சேர்ந்தார், அங்கே இருந்த பழைய புத்தகங்களின் அடுக்குகளில் தேடினார், அவை பல கைகளால் சோதிக்கப்பட்டு கைவிடப்பட்ட குவியல்கள், பழைய துணிகள் மற்றும் பழைய பாத்திரங்கள் நடுவே கிடந்தவை. அவற்றிலிருந்து மூன்று புத்தகங்களை வாங்கினார். அவரால் அதை மட்டும் ஒரு போதும் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்ததில்லை.
மற்ற நாள், அவர் வழக்கம்போல வேலைக்குப் போனார்.
அதற்கடுத்த நாளும்.
அந்த வழக்கமான வேலை மெள்ள பழக்கமான ஓட்டத்துக்குத் திரும்பியது. பிறகு, ஒரு வியாழக்கிழமை, எல் பாம்பீன் அவருடைய வேலைஸ்தலத்துக்கு வந்தார்.
“பெரூச்சோ,” அவர் கோபமாக விளித்தார், “இந்தப் பெட்டி விளிம்புகளோடு சரியாகப் பொருந்தி அமரவில்லை. மறுபடி செய்ய ஆரம்பிங்க.”
பதிப்பாசிரியர் அவரைப் பார்த்தார். அந்த ஆள் அவர் பார்த்ததில் மிகச் சிறந்த நடிகர்.
“சரி ஐயா.”
அந்த மாலையே பெரூச்சோ குறுகிய தெருக்களுக்குத் திரும்பினார், அந்த ரகசியக் கதவைக் கண்டு பிடித்தார். சாவியால் அதைத் திறந்தார். ரோஸாவை அங்கே கண்டார், அவள் அவரைப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.
“இப்ப.. என்ன? நான் என்ன எதிர்பார்க்கலாம்? என்னோட வாழ்க்கை.. அது மாறுமா?”
ரோஸா புன்னகை செய்தாள்.
“அப்படி நடக்கணும்னு இல்லை. பல வருடப் பயிற்சியிலே, நாங்க என்ன கண்டு பிடிச்சோம்னா, திரைமறைவில எழுதறதுக்குச் சிறப்பான வழி எது என்றால் நீங்க இப்ப செய்யறதுதான்: ஒரு விதமான மறைப்பும் இல்லாம இருக்கறதுதான்.”
“அப்ப… இதெல்லாம் நடந்தப்புறம்… நான் நாளைக்கு மறுபடியும் எதுவும் நடக்காத மாதிரி வேலைக்குப் போகணுமா?”
”ஆமாம். இந்த இடமும், இங்கே இருக்கற ஆச்சரியமான எந்திரங்களும், படைப்பாளிகளும், நம்மோட இந்தச் சிறு உரையாடலும்… இதெல்லாம் ஒரு கதைதானே அன்றி வேறேதும் இல்லை.”

***
இங்கிலிஷ் மூலம்: சோஃபியா ரெய் / இந்தக் கதை ஸ்பானிய மொழியிலிருந்து சோஃபியா ரெய்யால் மொழி பெயர்க்கப்பட்டது. இது ‘த இயர்ஸ் பெஸ்ட் சைன்ஸ் ஃபிக்ஷன்’என்ற தொகுப்பின் முதல் வால்யூமில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஜானதன் ஸ்ட்ராஹான் என்பவர் பதிப்பித்த தொகுப்பு இது. 2020 ஆம் வருடப் பதிப்பு. சாகா ப்ரஸ், நியூயார்க், வெளியீடு.
[1] புட்டிஃபார்ரா- Catalan sausage- காத்தலான் பிரதேசத்தின் கொத்திறைச்சிக் குழல் பண்டம். பகலுணவு அல்லது இரவுணவுக்குப் பயன்படும். பல துண்டு இறைச்சிகள் இதில் திணிக்கப்பட்டு, உப்பு, மற்றும் வாசனைப் பொருட்கள் சேர்த்த பண்டம்.
[2] எல் ரபால் என்பது அர்ரபல் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். அர்ரபல் என்பதற்குப் புறநகர், சேரி என்ற பொருட்கள் உண்டு என்று கீழ்க்கண்ட தளம் தெரிவிக்கிறது. இந்தப் பகுதியில் முன்பு பார்செலோனா நகரத்தின் சற்றே ஆபத்தான பகுதியாகக் கருதப்பட்ட சைனா நகரம் என்ற இடம் இருந்தது. இதில் அந்நகரின் சிவப்பு விளக்குப் பகுதிகள் இருந்தன. இன்று இந்தப் பகுதி பலவகை இசை மற்றும் இதர நிகழ்ச்சிகள் மேடையேற்றப்படும் பகுதியாக மாறி இருப்பதாகக் கீழ்க்கண்ட தளம் தெரிவிக்கிறது.
https://thesmartagencyco.com/destination/barcelona/el-raval
மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியாவின் பக்கங்களைப் பார்க்கலாம். இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட பாதிப்பேர் யூரோப்பிலேயே பிறந்திராத குடியேறிகள் என்று விக்கிபீடியா தெரிவிக்கிறது.
https://en.wikipedia.org/wiki/El_Raval
[3] El bombin! Ha Vingut Bombin! = எல் பாம்பீன் ஒரு தலைவர். அவர் வருகிறார் என்று எச்சரிக்கை.
[4] பார்ஸெலோனா மாநகரில் உள்ள அங்காடிகளில் எல்ஸ் என்காண்ட்ஸ் வெய்ஸ் எனப்படும் ஒன்று 12 ஆம் நூற்றாண்டிலிருந்து நடப்பது. இது பெரும்பாலும் பயன்படுத்திய பொருட்கள் மறு விற்பனைக்கு வரும் சந்தை.
[5] El Raval என்பது பார்ஸெலோனா நகரத்தின் ஒரு பகுதி. இது முன்பு சைனாடௌன் என்று அழைக்கப்பட்ட பகுதி.
[6] தோடோஸ் லாஸ் சாண்டோஸ் – ஆல் செயிண்ட்ஸ் டே
[7] திடீர்ப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்