அவள், அழிவற்றவள்

மலையாள மூலம்: லலிதாம்பிகா அந்தர்ஜனம்[1909—1989]

ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜே.தேவிகா; தமிழில் : தி.இரா.மீனா 

இல்லை,என்னால் முடியாது –உன்னைப் பற்றி –- என்னால் எழுத முடியாது. ஆனால் என்னால் எழுதாமலிருக்கவும் முடியாது. எப்பொழுது நான் ஒரு தாளையும்,பேனாவையும் எடுத்தாலும் உன் முகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. முகத்தில் உங்களால் யதார்த்தத்தைப் பார்க்க முடியவில்லை 

என்றால் எதையும் எழுதாதீர்கள், அக்கா . உண்மையின் காட்சி கண்டு நடுங்குபவனால் ஒரு கலைஞனாக  இருக்க முடியாது’ என்று நீண்ட, உன் மென்மையான விரல்களை நீட்டிச் சொல்வாய்.

ஆனால் என் அருமைத் தங்கையே, உண்மை என்பது ஒரு குழந்தையாக இனி  இருக்க முடியாது.அது இப்போது வளர்ந்திருக்கிறது. அதற்குச் சில உடைகள், சில அணிகலன்கள் தேவைப்படுகின்றன . அதற்குப் பிறகுதான் அது கலையாக முடியும்.’

ஓ ,என்ன ஏமாற்று! சாயம், பவுடர்  பூசப்பட்ட வாழ்க்கையின் முகத்தைப் பார்த்துப் பழகி விட்டோம். இரத்தம் துடிக்கும் இதயத்தைப் பாருங்கள். அதற்கு ஆடையில்லை, அணிகலனில்லை; பிறந்த குழந்தையைப் போல  நிர்வாணமாக இருக்கிறது.ஆனால் அதுதான் கலை . வாழ்க்கையின் உண்மை. நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். பழைய பாணியிலான கலையின் கொள்கைகளை நான் மிக வெளிப்படையாகச் சொல்லும் போது, நீங்கள் அமைதி காப்பீர்கள். எந்த விவாதமும் உங்களைச் சமாதானப்படுத்தாது. உண்மையின் நெஞ்சத்திற்கு தன்னைப் புனிதப்படுத்திக் கொள்ள ஓர் உடல் தேவைப்படுகிறதென்பதை நீங்கள் மறந்தும் விட்டதாகத்  தெரிகிறது. அதனால்தான் அல்லவா கடைசியில்…’

ஓ …இல்லை, அம்ரிதா! நான் அப்படிச் சொல்ல மாட்டேன். நீ என்னிடம் முகம்  சுளிக்கிறாய். உறுதியான, விட்டுக் கொடுக்க விரும்பாத  பார்வை, உன் முகத்தில் இருக்கிறது. உன்னுடைய விசேஷ  அம்சம் உன் முகச் சுளிப்புத்தான். ஜனங்களே, பாருங்கள் மறுப்பவர்களுக்கு முன்னால் இங்கே ஒரு புதிய உண்மை! ஏன் அது உங்களைப் பயமுறுத்துகிறது?’ என்று நீ முகம் சுளித்து என்னிடம் குறிப்பாகச் சொல்வதைப் பார்க்கிறேன். இல்லை, என் தங்கையே!  நான் பயப்படவில்லை. ஆனால் அது என்னை விசனப்படுத்துகிறது. ஓர் அடிப்படையற்ற விசனம் என் வார்த்தைகளை முடக்கச் செய்து, என்  மனதை நடுங்க வைக்கிறது.  அழுகையில்லை . ஆனால் என்ன  ஒரு கசப்பான, எரிக்கும் புன்னகை! மேகம் மழையாக மாறத் தயக்கம் காட்டுவது போல, நீ மின்னலின் சிராய்களை எல்லாத் திசைகளிலும் சிதறச் செய்து விட்டுப் போய் விட்டாய். நடப்புக் காலத்தின் எல்லா வேதனைகளையும் உன் உள்மனதில் வைத்துக் கொண்டாய். ஆனால் நீ விட்டுப்போன வார்த்தைகள் எப்படி பிரவாகமாகக் கொட்டுகின்றன என்பதைப் பார் .வார்த்தைகள் பாடுகின்றன.  வார்த்தைகள் அசைந்து நடனமாடுகின்றன. நெஞ்சின் விளிம்பில்  நிற்கின்றன.வார்த்தைகளின் ஒரு முழு உலகம் ஆத்மாவிற்குள் நுழைந்து நாட்டியமாடுகிறது. ஆனால் நீ, எந்த ஊற்றிலிருந்து அவை வெளி வந்தனவோ

இடியைப் பின்னால் விட்டு விட்டு மின்னலின் சிறகுகளில் ,நீ மறைந்து போனாய்!  நாங்கள் வேதனையில் அழுகிறோம் —’அதனால் அம்ரிதா,  அதனால்?’

‘…. நீங்கள் உண்மையின் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? தைரியம், தோற்கடிக்க முடியாத உண்மை? இது அந்த முகமா?  ஐயோ! அவ்வாறெனில் … நீங்கள்  தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறீர்கள்….எல்லா வகைத் துயரங்களுக்கும் ஆளாகும் பூமியின் மடியில் இங்கு உட்கார்ந்துகொண்டு வதந்திகளின் கொடுரமான புகை, பொறாமை, பழி சுமத்தல்களினூடே நான் ஓர்  உண்மையை  உணர்கிறேன். உண்மைக்கு ஒரு முகமில்லை. கோடிக்கணக்கான முகங்களில் நாம் காண்பது எல்லாம் உண்மைதான்.எல்லாம் உண்மைதான். இதில் ‘ உன் உண்மை ’ அல்லது என் உண்மை’ என்று ஏதாவது இருக்கிறதா?  உண்மை தன்னை எந்த விதத்தில் காட்டியதோ அதை அந்த வடிவில் அம்ரிதா  உணர்ந்திருக்க வேண்டும். அதைச்  சீர்தூக்கிப் பார்க்க நாம் யார்?  கடந்த காலத்தைக் குறை சொல்வது வீணானது. ஆனால் வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் ஒரே உண்மை அதுதான். உன்னைப் பற்றிய எதுவும் இப்போது கடந்த காலம்தான்.பள்ளி முற்றத்தில் குல்மெஹர் மரத்தினடியில் நான்  உனக்குப்  படித்துக் காட்டிய கதையை நீ  உன் மெல்லிய விரல்களால் கிழித்தெறிந்தது உனக்கு ஞாபகமிருக்கிறதா அமிர்தா?’

அக்கா, இதை முடிக்க வேண்டாம். கதை எழுதுவதில் பல மாதிரிகள் இருக்கலாம்.ஆனால் உங்கள் மனதால் அதை உணரும் போது , அந்தக்  கதை  எவ்வளவு வித்தியாசமாகி விடுகிறது!’  என்று  நீ சொன்னாய்.

உன் மனதைத் தொடும் ஒன்றை மட்டும்தான் நீ எழுதுவாயா?’ என்று  நான் அவளைக் கேட்கவில்லை. அதனால்தான்  நீ படைக்கும் எல்லாப் பாத்திரங்களும் மற்றவர்களைத் தங்களைப் போல  உணரச் செய்கிறதா? சாய்ந்து, எதிரெதிராக நாம் நெருக்கமாக உட்கார்ந்திருந்து இருந்த போதும், ஒரு சிறிது  கூட  உன் மனம்  அப்போது எனக்குப் புரியவில்லை,நான் ஒப்புக்  கொள்கிறேன். அல்லது உண்மையில் யாருக்குத் தான் உன்னைப் புரிந்தது?

அது நட்படிப்படையிலான சாதாரண சந்திப்புத்தான். ஒரு விடுமுறை நாள். அந்தி நெருங்கிக் கொண்டிருந்தது. பள்ளி முற்றத்தில் குல்மஹர் மரத்தின் நிழலில் உன் மாணவர்களை விட்டுச் சிறிது ஒதுங்கி  வந்து, பெண்  எழுத்தாளர்களாக  நாம்  சந்திக்கும் தடங்கல்களை  மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தோம்.

அக்கா, மனிதப் பிறப்பாகவாவது  பெண் ஏற்றுக் கொள்ளப்படுவாளா? துறவி மற்றும் மயக்குபவள் என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்ட  இடம் அவளுக்குக்  கிடைக்குமா’ என்று  நீ கேட்டாய் .( பிரபலமான ஆங்கில நாடகத்தில் ஒரு  பாத்திரத்தால் எழுப்பப்படும்  கேள்வி  இது என்று என்னிடம் நீ சொன்னாய் ) வாழ்க்கையில் இடறி விழுகிற, குமுறிக் கதறுகிற பெண்களை  நம்  கதைகளில் கதாபாத்திரமாக உருவாக்குகிற உரிமை கூட நமக்குக் கிடையாதா? சமூகத்தில்  அவர்கள்தான் பெரும்பான்மை. அதனால் அவர்களின் நிழல் தயங்குவது இயற்கைதான்.  தயங்கி நிற்பதைத் தடுக்க வேண்டுமெனில்,ஒருவர் அதுபற்றியெழுதுவதை நிறுத்த வேண்டும்.மற்றவரின் எண்ணங்களை மூச்சுத்திணறச்  செய்து விட்டு எப்படி ஒருவரால் வாழமுடியும்? 

நான்  ஏதோ  ஞாபகம்  வந்தவள் போல, வேகமாக அந்தப் பேச்சை திசை திருப்பும் வகையில்  அம்ரிதா, ஒரு சிறுகதையின் கரு  இது. இதைச்  சரிசெய்து, முடித்து விடுகிறாயா?’ என்று கேட்டேன்.

நானா? அக்கா, உங்களுடைய சிறுகதைகளில் ஒன்றையா? எப்படி ஒருவரின்  கதையை இன்னொருவர் முடிக்கமுடியும்?’  வியப்பாக நீ  கேட்டதைப் பார்த்தேன்.

சில கதைகளின் தன்மையை மற்றவர்கள்தான் முடிக்க முடியும் –இது உன் கதை என்று கற்பனை செய்து கொள் — இது முதலில் என்  மனதில் தோன்றியதாக நினைத்துக் கொள். நீ இதை எப்படி முடிப்பாய் என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.இதைப் பார்.’

படியுங்கள் அக்கா,’ என்று சிரத்தையற்றுச் சொன்னாய்.

அந்தி  சாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் மெல்லிய விளக்கொளியில்  நான்  உனக்குப் படித்துக் காட்டிய சுருக்கமான குறிப்பை மறந்து போய் விட்டேன். நீ அதைக் கிழித்துவிட்டாய். ஆனால் இன்று நான் தனியாக  உட்கார்ந்து உன் நினைவில் மூழ்கியிருக்கும் போது –உன்னைப் பற்றி ஞாபகங்கள் மட்டும் — அந்தக் கதை வரி வானொலியில் வருவது போல காற்றில் எதிரொலித்தது.அந்த முடிவு அடையாத   கதையின் வரிகள், அம்ரிதா! உனக்கு நான் சொல்வது கேட்கிறதா? உன் அடிமனதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உன்னால் உணர முடிகிறதா? இதோ, கதை ஆரம்பிக்கிறது.

கதையின் தலைப்பு பெண் ஆசிரியையின் உளவியல் ’ என்பது போல.குரல் பலவீனமான பெண்ணினுடையது, அது நான். காலம் ஐந்து அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னால் திரும்புகிறது.

முதல் வகுப்பில் இலக்கியம் ( ஹானர்ஸ்  ) தேர்ச்சி . தனியார் கல்லூரியில் உடனடியாக வேலை கிடைத்தது.ஷோபா மிக 

அதிர்ஷ்டசாலி. உத்தரம் நட்சத்திரம் மூன்றாவது பாதம். அவள் பிறந்த பிறகு  குடும்பத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியும், 

வெற்றியும்தான். ’ என்று  குடும்பத்தில் எல்லோரும் சொன்னார்கள்.

குடும்பப் பாங்கான பெண். வாழ்க்கையில்  சீரும்,சிறப்புமாக  இருப்பாள்’ என்று உள்ளூர் மக்கள் சொன்னார்கள்.

ஷோபா, நீ எங்களுக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் தருபவள்’ என்றனர்   தோழிகள்.

ஆரம்பத்தில் அவளும் மிகப் பெருமையாகவே உணர்ந்தாள் . தனது வளர்ப்பில் எந்தக் குறையுமில்லை.அவள் பகடை எப்போதும் சரியான பக்கத்திலேயே விழுந்தது!  இருபத்தியோரு வயதிலேயே கல்லூரி விரிவுரையாளர் . மாணவர்கள் உலகிலிருந்து ஆசிரியர் உலகிற்கு மிகுந்த நம்பிக்கையோடு நுழைந்தவள்.மாணவியாக இருந்த காலத்தில், அவள் கவனம்  முழுவதும் படிப்பில்தான். அதனால்தான் எல்லா வகுப்புகளிலும் அவள் முதலாக இருந்து விரைவில் இவ்வளவு உயரத்திற்கு வந்துவிட்டாளோ? நவீனச்சூழலில் வளர்ந்திருந்தாலும்,  பழமைவாதமும் சுற்றியிருந்தது.

அதீத வெட்கமோ அதீத தைரியமோ இல்லாதவள் . இளைஞர்கள் மேல் அவள் கவனம் காட்டவில்லையெனினும்,  தன்னை யாராவது கவனிப்பதைப் பார்த்து விட்டால் அவள்  பாதிக்கப்படுவாள். உடையில், உணர்வு வெளிப்பாட்டில், நடத்தையில் அவளைச் சுற்றி கண்ணியம்  சூழ்ந்திருந்தது. ஆனால் அது அவள் மாணவியாக இருந்த போது.அந்தச் சமயத்தில் அவள் ஆயிரத்தில் ஒருத்தி.

இப்போது அவள் ஆயிரம் பேரை எதிர்கொள்ள வேண்டிய ஒருத்தி, அவள்   கதை எப்படியிருக்கும்?

அவள்  தன்  ஆசிரியர்களிடம் நடந்து கொண்டதைப் போல அவள் மாணவர்கள் அவளிடம் நடந்து கொள்வார்களா? தன் கூடப் படித்த சில குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே தன்னைப் போல இருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. கடினமான ஆசிரியர்களையும் கூட வியர்க்க வைக்கும் வகையைச் சார்ந்தவர்கள் பெரும்பாலான மாணவர்கள்.

நான்   இன்று என் வாழ்க்கையின் மிகப் பெரிய தேர்வை எதிர் கொள்கிறேன். புதிய வகுப்பறையில் நான் கற்கத் தொடங்குகிறேன் —கற்றுத்தர  இல்லை — இன்று  பயமும்,மகிழ்ச்சியும் எனக்குள் கலந்திருக்கின்றன. நான் இதில் தேர்ச்சி அடைவேனா?’என்று தான் வேலையில் சேர்ந்த   நாளன்று ஷோபா தன் டைரியில் எழுதினாள்.

பெரும்பாலான மாணவர்கள் பையன்கள் — பையன்கள்’ என்று நான் சொல்லலாமா? சிலர் ஷோபாவின் மூத்த அண்ணனை விட வயதில் பெரியவர்கள். என் வயது, என் தோற்றம், என் பெயர் என்ற மிக ரகசியமான விமர்சனங்களை நான் கேட்கவேயில்லை என்பது போல நடிக்கலாம். என் பார்வையைப் புத்தகத்தில் மட்டும் இருத்தினால், அந்தச் சிரிப்பையும், முகச் சேட்டைகளையும்  அசட்டை செய்வது சாத்தியமாகலாம்.ஆனால் அசட்டுத்தனமான கேள்விகளை எழுப்புபவர்களை எப்படிச் சமாளிப்பது? எனக்கு நாற்பத்தி ஐந்து வயது. முழு நம்பிக்கையோடு எனக்கு நாற்பத்தி ஐந்து வயது என்று நான்  தலையை உயர்த்தும் போது, என்னைச் சுற்றியுள்ள முகங்கள் 

இல்லை, உங்களுக்குப் பதினேழு, உங்களுக்குப் பதினேழு’ — என்று விசில் ஒலி.

முதல் முறையாக வாழ்க்கையில் ஷோபா தோற்று விடுவாளா? அவளுக்கு வார்தைகள் கிடைக்கவில்லை . அவளுக்குத்  தன்   தலைப்பு நன்றாகத் தெரியும். ஆனால் எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. முழங்கால்கள் தளர்ந்தன .நெஞ்சு படபடத்தது.இந்த  மனவுளைச்சலுக்கான வேலையைத் தூக்கியெறிந்து விடலாம் என்று கூட   நினைத்தாள். ஆனால் அந்த  கடின சந்தர்ப்பத்தில், உள்ளார்ந்த பெண்  கௌரவம் என்பது  அவள் தலையை உயர வைத்தது.தன் புத்தகத்தை  மேசையில் வைத்து விட்டு, முடி சூட்டப்பட்ட ஓர்  இளைய இளவரசி   போல வகுப்பு முழுவதையும் பார்த்தாள்.பிறகு  தெளிவான   குரலில் பேசினாள் :

 நண்பர்களே! ஒரு நிமிடம் … உங்களோடு ஒரு வார்த்தை .’

அவளுடைய நாடக  ரீதியிலான ஆரம்பம் வகுப்பை அமைதிப்படுத்தியது.

அவள் தொடர்ந்தாள்.

நண்பர்களே!  ஆசிரியர்  மாணவர்களாக நாம் ஒருவரையொருவர் பார்க்காமல் நண்பர்களாகப் பார்ப்போம்.நான் ஷோபா. நேற்று வரை நான் உங்களில் ஒருத்தி.உங்களில் பலருக்கு என்னைப் போல சகோதரிகள் இருக்கலாம். இந்த வகுப்பறைக்கு வெளியே, நாம் நண்பர்கள் .நான் இன்று  உங்களுக்கு முன்னால் நிற்பதற்கு ஒரே காரணம் எல்லாப் புத்தகங்களையும் கரைத்துக்  குடித்ததுதான்:  துரதிர்ஷ்டவசமாக அதே பாடங்களை கற்றுத் தர நான் வந்திருக்கிறேன்.நான் சொல்வது 

உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில்,  நீங்கள் சொல்ல வேண்டியது ஒரு வார்த்தைதான், நான் நிறுத்தி விடுவேன். இந்த நாட்களில்  வேலை கிடைப்பது எவ்வளவு கடினம் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.’

அவளுடைய யதார்த்தமான பேச்சு அவர்களைத் தொட்டது. வகுப்பு அமைதியாக இருந்தது. ஒரு நிமிடம் கடந்தது. அவளுடைய மின்னும் கண்கள் அவர்களுடைய மனதுள் ஆழமாக ஊடுருவின. அவள் ஒவ்வொரு முகத்தையும் பார்த்தாள். ஒவ்வொரு மனமும். ஓர் ஆசிரியர் பிறந்து விட்டார். சரி நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். வகுப்பறைக்கு வெளியே நாம் நண்பர்கள். ஆனால் இது வகுப்பு நேரம்.

ஒரு  மணி நேரத்திற்கு, நாம் ஆசிரியர் -–மாணவர்களாக இருப்போம்.’ அப்படியொரு தைரியம் தனக்கு வந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதற்கு முன்னால் அவள்  வகுப்புச் சந்திப்பில்  கூடப்  பேசியதே இல்லை. அவளுக்குச் சிநேகிதிகள் கிடையாது.அப்படியிருக்கையில் அவளுக்கு மாணவர்களின் உளவியலை எப்படி கிரஹித்துக் கொள்ள  முடிந்தது,தன் வயதை மீறிய பக்குவத்தை அவள் எப்படிப் பெற்றாள்? 

எதுவானாலும், இதற்குப்  பிறகு, புதிய ஆசிரியைக்கும், மாணவர்களுக்குமிடையில் ஒரு சிறிய சிக்கல் கூட ஏற்பட்டதில்லை….’

கதையின்  இந்தப் பகுதியில், வயதை  மீறிய பக்குவம்  என்பதன்  பொருளென்ன ?’  என்று  நீ கேட்டாய். 

அதுவா? உம்… ஒரு மாணவி,ஆசிரியை ஆகும் போது அவளுக்குக் கிடைக்கும் பக்குவம்.ஓர் இளம்பெண் ஒரு தாயாவதைப் போல. உன் கூர்மையான கண்களைப் பார்த்தபடி சொன்னேன்.

சரி. மேலே படியுங்கள்.’

நான் ஷோபாவின் கதையைத் தொடர்ந்தேன் .அவள் வகுப்பில் பாடமாகவே ஆனாள்.உலக இலக்கியத்தின் மாபெரும் பாத்திரங்கள்  அவள் மூலம் உயிரோட்டம் பெற்றவர்களானார்கள். மாணவர்கள் அவளை ஆராதித்தனர்.சிறு நிகழ்வுகள் இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தன.

நான் இதை எழுதியிருந்தால் எல்லாவற்றையும், மூன்று வரியில் முடித்திருப்பேன்.ஒரு பெண், ஷோபா,எல்லோரையும் போலப் படித்தவள்.தேர்ச்சி  பெற்றாள். வேலை கிடைத்தது.பிறகுதான் கதை ஆரம்பிக்கும்.’  என்று நீ  சொன்னாய்.

அவள் ஓர்  ஆசிரியையாக இல்லாமல் சாதாரண மனிதப்  பிறவியாக இருந்தால்  என்னவாகியிருப்பாள்? அந்த  இளம் பெண்ணிற்குள் இருக்கும்  ஆளுமை  வாழுமா? வீழுமா? அது மிக முக்கியமான கேள்வி.’ என்றாய்.

நான்  தோற்றுப் போனேன். அந்த இடத்தில் என் சிந்தனை தடைப்பட்டது. வாழ்க்கையின் அந்த மாறுதல்  நிலை என் கற்பனையில்  பரவியிருக்கவில்லை.ஷோபா தன் சாந்தமான,பேசும் விழிகளால் தன்னுடன் வேலை   பார்த்தவரைக்  கவர்ந்து திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அல்லது தன் பாரம்பரியக்  குடும்பத்தின் கட்டளைக்கிணங்க பொருத்தமில்லாத ஒருவனை மணந்து கொண்டு தியாகியாகியிருக்கலாம். அல்லது தன் விசனமான தத்துவத்தால் உலகத்தையே வெறுத்து கன்னியாகவே வாழ்ந்திருக்கலாம். எதுவாக இருப்பினும், சோகமான முடிவே இந்தக் கதைக்குப் பொருத்தமானதாக, மனதை நெகிழ வைப்பதாக இருக்கும். அந்த மாதிரி நிறைவு  செய்ய  எனக்கு தைரியமில்லை. அதனால் இந்தக் கதைக்கு ஒரு மகிழ்ச்சியான முடிவை யோசித்துச் சொல் என்று உன்னிடம் கேட்கிறேன். ஆர்வமாக எதையாவது சேர்த்து ஷோபாவை வெற்றி அடையச் செய்ய வேண்டும். ’

எப்படி?’

சிறிது நேரம், நீ எதுவும் சொல்லவில்லை.அந்தி சாய்ந்து விட்டது.விளக்கு போடப்பட்டு விட்டது.கருமையோடான நீலநிற ஆகாயத்தில்,நிலா மங்கித் தெரிந்தது. குல்மஹர் அடியில் விழுந்திருந்த நிழலில்,உன் முகம் தெளிவற்றதாக இருந்தது.

 அக்கா, கதையின் கடைசி வரியை என்னிடம் விட்டிருக்கிறீர்களா?’ என்று நீ  கேட்டாய்.

ஆமாம், அம்ரிதா!  என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே. யாரையும் மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கதையை நான் எழுதத் தொடங்கவில்லை.  இது யாரையும் காயப் படுத்தக் கூடாது.இந்தக் கதையை நீ எப்படி எழுதுவாயென்பதைச்  சொல். ’

சரி, அதை என்னிடம் கொடுங்கள். நான் முடிக்கிறேன்.’ நீ பெருமூச்சு விட்டு  உன் கையை நீட்டினாய்;அதை வாங்கிக் கொண்டாய்.சுக்கு நூறாகக் கிழித்துத்  தூக்கியெறிந்தாய்.

ஒரு கதையை எனக்கு முடிக்கத் தெரியவில்லை என்ற எண்ணம் வந்தால் இதைத்தான் நான் செய்கிறேன். முடிவில்லாத எதுவும், தொடர்ந்து இருக்க  அனுமதிக்கக் கூடாது.எது முடிவற்றதோ அது தன்னைத் தானே கொன்று  கொள்ளும். அக்கா, வாழ்க்கை முடிவற்ற சோகம்! உலகம் கூட ஒரு சோகம்தான்.சோகம் மட்டும்தான் உண்மை.உண்மையின் முகம் பார்க்கப் பயப்படுபவர்கள்  பேனாவைக் கையிலெடுக்கக் கூடாது. தைரியமான  மற்றும் நிர்வாணமான உண்மையின் முகம்.’ நீ  இதை ஒரே மூச்சில் சொல்லிவிட்டு பெரிதாக, விசித்திரமாகச் சிரிக்கத் தொடங்கினாய் .நானும் சிரித்தேன்.

ஆனால் இன்று… கடந்த காலத்தின்  கருமையான சிறைக்கூடத்திலிருந்து கதையின்  முடிவற்ற வரிகள் எழுந்த போது, நீ கொடுத்த அந்த  சோக முடிவைப்  பார்க்கிறேன்.முன்னால் தெரியாத பல விஷயங்கள் எனக்கு இப்போது தெரிகிறது. என் ஆர்வம் எவ்வளவு பயங்கரமானது! எவ்வளவு சோகம்  அந்தத் தற்செயல் நிகழ்வு ! 

உன்னைப் பொறுத்த வரை வாழ்க்கையும் கலையும் வேறு வேறல்ல.அந்த ஆழமான நேர்மையைக் காட்டத் தெரிந்திருக்காத சகோதரியை மன்னித்து விடு. உன்னைக் குற்றம் சாட்டியவர்களை மன்னித்து விடு.உண்மை திகிலானதாக இருக்கலாம்,ஆனால் கலைஞனின் ஆன்மாவிற்குள் இருக்கிற பயங்கரமான அமைதியின்மையை உணர்ச்சித் துடிப்போடு எங்களுக்குப் புரிய  வைத்தாய். உண்மையின் முகம்  அந்த தைரியமான  கோழைத்தனம்.  காளி விக்கிரகத்தின் முன்பு அவள் தன்னைத் தியாகம் செய்து கொண்டாள். அந்த  வலிமையான  இளம் பெண்ணின்  ஞாபகக் குறிப்பில் நான் இதைச் சேர்க்க விரும்புகிறேன்: நட்சத்திரத்தைப் போல எழுந்த அவள்,ஓர் எரி நட்சத்திரம் போல மனிதர்களின்  மனசாட்சி மேல் விழுந்தாள். இதயத்தின் இழைகள்  சிதைந்திருக்கின்றன.ஆனால், இந்தப் பொறுக்க முடியாத அடியின் போதும், மன வேதனையோடு நாங்கள் பிரார்த்திப்பது :

அழிவற்றவளே!  உன்  நினைவைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒன்று படுகிறோம்.இந்தச் சாபத்திற்கு அனுமதி வேண்டும் : உனக்கு  வாரிசுகள் இல்லை….’

                          ———————————————————–

நன்றி : On The Far Side Of Memory –Short Stories Oxford University Press 

2017

நவீன  மலையாள இலக்கியத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படும் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் படைப்புக்கள் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டவை.சாதி, பாலினம், தேசிய எழுச்சி உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி ஓர்  அரை நூற்றாண்டின் போக்குகளைத் தன் எழுத்துகளில்  மிகத்   துணிவாக வெளிப்படுத்தியவர்  என்று விமர்சகர்களால் மதிப்பிடப்படுபவர் . அக்னிசாட்சி ’ நாவலுக்காக  சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.