மைத்ரேயன்

இது மார்ச் 23 ஆம் தேதி.
காலக்கணக்கின்படி மேடாயன தினம். அதாவது மகாவிசுவ தினம். அல்லது வசந்த சமராத்திர தினம்.
(இதெல்லாம் என்னது என்பீர்களே ஆனால், சென்னைப் பல்கலை அகராதியின் இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=equinox&matchtype=default )
இவற்றையே இங்கிலீஷில் சொன்னால், இன்று ‘ஸ்ப்ரிங் ஈக்விநாக்ஸ்’ என்று சொல்லப்படும் தினம்.
இன்று வசந்தம்/ இளவேனில் காலம் துவங்குகிறது. (நான் இருக்கும் நிலப்பகுதியில், இன்று காலை 5.30க்குத் துவங்கியது என்று சொல்கிறார்கள்.)
இன்று இரவும் பகலும் ஒரே கால அளவு கொண்டிருக்கும். அதுதான் சமராத்திரி என்ற பெயருக்குக் காரணம்.
அயனம் என்ற சொல்லுக்கு தமிழகராதி வருடத்தில் பாதி என்று பொருள் தருகிறது. இந்த அயனம்தான் தக்ஷிணாயனம், உத்தராயணம் என்ற சொற்களில் பங்கு பெறுகிறது. இச்சொற்களின் பொருள் முறையே, சூரியன் தென்புறம் திரும்பும் காலம், வடபுறம் திரும்பும் காலம். சூரியன் கூட பயணம் போவதாகக் கற்பனை செய்தவர்கள் நாடோடி வாழ்க்கையை மதித்திருக்க வேண்டும். ஒரு பார்வையில் அனைத்துப் பொருட்களும் எங்கும், என்றென்றும் பயணத்தில்தான் இருக்கின்றன. எதை நோக்கி என்பது யாருக்கும் இன்னும் தெரியவில்லை.
***
நாடோடி என்ற சொல்லுக்கு பண்டை அர்த்தம் இருந்த விதமாக இன்று இல்லை. நாடோடிகளில் எத்தனை வகைகள் சாத்தியமோ அத்தனையும் இன்று காணக் கிட்டுகின்றன. நாடோடிகளிலேயே பஞ்சையானவர்கள், அகதிகள்.
அகதி முகாம்கள் உலகெங்கும் எத்தனையோ நாடுகளில் நிலைபெற்று விட்டன. இவை தவிர, கடல் வெளிகளில் சில ஆயிரம் படகுகளில், நாடிழந்து துரத்தப்பட்டு ஓடுபவர்களோடு, தாமாகவே விருப்பப்பட்டு சொந்த நாட்டை விட்டு விட்டு ஓடுபவர்கள், வளமான எதிர்காலம் கிட்டும் என்ற கனவைத் துரத்த இன்று என்ன துன்பத்தையும் படத் தயாராக இருப்பவர்கள் என்று பலவகை மனிதர்கள் கரை சேர முடியாத அல்லலில் கரையில் இறங்க முடியாமல் இருக்கிறார்கள்.
வசதி படைத்தவர்கள் உலகம் சுற்றுவதைப் பார்த்து, புலியைப் பார்த்த பூனையாக, மத்திய தர மக்கள் பிரும்மாண்டக் கப்பல்களில், கப்பம் கட்டுவது போல கட்டணம் செலுத்தி விட்டு, ஒரு வாரம், ஒரு மாதம் என்று பல நாடுகளைச் சுற்றப் பயணம் போகிறார்களில்லையா, அந்த சுற்றுலாக் கப்பல்களில் கோவிட் தாக்கத்தால் பல அங்கங்கே கரை சேர்ந்தாலும் கப்பல் பயணிகளை அந்த நாடுகள் ஊருக்குள் விட மறுத்ததில், கப்பலிலேயே பல மாதங்கள் சிக்கிக் கொண்டவர்களைப் பற்றி நாம் படித்திருந்தோம்.
சமீபத்துச் செய்திகளின் படி இந்தக் கப்பல்களில் பணி புரிந்த பல நாட்டு ஊழியர்கள் இன்னமும் அதே கப்பல்களில் சிக்குண்டு இருக்கிறார்கள். பராமரிப்பு, மராமத்து போன்ற வேலைகளைச் செய்வதற்காகவும், ஒருகால் சுற்றுப் பயணங்கள் மறுபடி அனுமதிக்கப்பட்டு விட்டால் வரப்போகும் பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்காகக் கப்பல்களைத் தயார் நிலையில் வைக்கவும் இந்த ஊழியர்கள் அக்கப்பல்களில் தக்க வைக்கப்பட்டிருக்கின்றனராம்.
இவர்களுக்கும் நாடிழந்து திறந்த கடல்வெளியில் படகுகளில் சிக்கி மடிவோருக்கும் வேறுபாடுகள் உண்டு என்றாலும், ஒரு தளத்தில் இந்த ஊழியர்களும் நாடோடிகளாகவும், குடியுரிமைகளைப் பயன்படுத்த முடியாதவர்களாகவும்தான் இருக்கிறார்கள். இருந்த இடத்திலேயே நாடோடிகளானவர்கள் இவர்கள்.
பல நாட்டு ராணுவ வீரர்களும், கணினித் தொழில் பெரும் வருமானம் தரும் என்று அதில் இறங்கிப் பல நாடுகளுக்கு ஒப்பந்த ஊழியர்களாகச் சென்று பிறகு குடியுரிமை விதிகளின் சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டு வெவ்வேறு நிலங்களில் கிட்டத் தட்ட சிறை வாழ்க்கை போல முடங்கி வேலை செய்பவர்களும் என்று தம் தொழிலாலேயே நாடோடிகளாக வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இதே போல பல நாடுகளில் உயர்கல்விக்காகப் போய்ப் பல்கலைகளில் மாணவர்களானவர்கள் சமீபத்து கோவிட் சிக்கலால் பல நாடுகளில் மூடப்பட்ட பல்கலைகளிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பவும் முடியாமல், இருக்கிற ஊரிலேயே தொடர்ந்து வாழவும் போதிய வசதி இல்லாமல் தவிப்பில் இருந்தார்கள். பல நாடுகளில் இந்தச் சிக்கல் இன்னமும் தீரவில்லை என்று ஒரு கட்டுரை சொல்கிறது.
[பார்க்க: https://www.chronicle.com/article/the-stranded]
பட்டியல் போடத் துவங்கினால் புத்தகமே எழுதலாம் என்று தோன்றுகிறது.
***
மனிதர் மட்டும்தானா நாடோடிகள்? சூரியனின் சுற்றுலாவை ஒட்டி வண்ணத்துப் பூச்சிகள், சில வகைக் குருவிகள், பற்பல நீர் வாழ் பறவைகள், வன விலங்குகளில் பாலூட்டி மிருகங்கள், திமிங்கிலங்கள், மீன், ஆமை வகைகள் என்று எதெல்லாமோ வருடா வருடம் சில நூறு மைல்களிலிருந்து பல்லாயிரம் மைல்கள் வரை பயணம் போகின்றன.
தவிர, ஒரே மேஜையில் அமர்ந்து எழுதியபடி, ககன வெளி, அண்ட வெளியெங்கும் பயணம் போய் சாகசக் கதைகள் எழுதுவோரும், ஒரே ஊரில், ஒரே ஒரு தொலை நோக்கியின் ஊழியராக வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்துக் கொண்டு ஒளி வருடங்களையும் கடந்து நோக்கும் தொழிலை இராப் பகலாகச் செய்பவர்கள் உண்டு. அண்ட பேரண்டங்களின், எல்லையில்லா கால இடப் பெருவெளியின் பிரமாண்டங்களைப் பற்றி நமக்குத் தகவல் சொல்வாரும் என்று மனிதர் மனவெளிப் பயணங்களில் தூரம் என்பதைச் செல்லாக் காசாக்கி விட்டிருக்கிறார்கள். பிரமனின் படைப்பான பெருவெளி ஒரு முட்டை வடிவானது என்று இந்துக்களின் வானியல் நம்பிக்கை சொல்கிறதாம். அனைத்தின் துவக்கம் என்ற பொருளில் மூதண்டம் என்ற சொல்லை அகராதியில் காணலாம். முட்டையிலிருந்து குஞ்சு வந்ததா என்ற கேள்விக்கு இத்தனை ஆழ்ந்த உட்பொருளும் உண்டு போலிருக்கிறது. பாலூட்டி மிருகமான மனிதக் குரங்குகளுக்கு பறவைகளின் சந்ததிக் கடத்தல் முறையில் ஏனோ இத்தனை ஈர்ப்பு! இதன் பாதிப்பால் மனிதரின் சந்ததிப் பெருக்கு நடக்கும் முறையின் வருணிப்பில் கூட மருத்துவ அறிவியல், முட்டை என்ற சொல்லையே பயன்படுத்துகிறது.
தீர நோக்கினால்,
நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கை என்ற பயணத்தில் தொடர்ந்து இருந்து காலப் பயணிகளாகத்தானே வாழ்ந்து மரிக்கிறோம்?
***
குளிர் மாதங்களாலும், கோவிட் தொல்லையாலும் அனேகமாக வீட்டோடு அடைந்து கிடந்த பின்பு, இன்று, பல மாதங்கள் கழித்து வீட்டுக்கு வெளியே போய் சூரிய ஒளியில் நீள நடை போக முடிந்தது. சூரிய ஒளியில் என்னென்னவோ அழியும் என்கிறார்கள், நம் மனதில் உள்ள கிலேசமும் ஒழிகிறது என்பதுதான் எனக்குப் பிடித்த விஷயம். நகரத்து நடுச் சிறுகாட்டின் சூரிய வெளியில் எத்தனை குழந்தைகள், சிறு பிராணிகள், முதியோர், பதின்மர் உலா போனார்கள்! முகமூடி இருந்தாலும் அதன் பின்னே இருந்த உதடுகளில் உவகை ஊறியிருந்ததை ஊகிக்க முடிந்தது.
பாரதியாரின் ஒரு உரைநடைப் பகுதியில் பசு சூரியஒளியைத் தின்ன விரும்புவதாக வரும். அது எப்போதைக்குமாக நினைவில் நின்ற ஒரு காட்சி. சூரிய ஒளியின் போஷாக்கில் வளரும் புல்லையும் தாவரங்களையும்தானே பசு உண்கிறது. இந்தச் சிறு கான்வெளியில் மனிதரும் சிறு மிருகங்களும் சூரிய ஒளியைத்தான் தின்று கொண்டிருந்தார்கள்.
குளிர் நாட்கள் அகல்வதில் ஒரு பாக்கியம் நிச்சயம் கிட்டும். நிறையப் பறவைகளின் புறப்பாடும், கூவல்களும், புறவெளி உலாவல்களும் நமக்கு அனுபவிக்கக் கிட்டுவதுதான் அது.
ஆமாம், எனக்குப் பறவைகளைப் பிடிக்கும். அனேகமாக எல்லாப் பறவைகளையுமே பிடிக்கும். நொய்ந்த மனதை அவை எப்படியோ தேற்றுகின்றன.
***
இருந்தாலும், ஸ்ரீரங்கப் பட்டணம் போனால் அங்கே உள்ள ஏரியில் அடையும் பறவைகளை அத்தனை பிடிக்காது. அங்கு வீசும் நெடியை என்னால் தாங்க முடிவதில்லை, அதுவோ அவற்றின் வாழ்க்கையிலிருந்து கிட்டுவது. அந்த நெடி மட்டும்தான் எனக்குப் பிடிக்கவில்லை என்றில்லை.
தீர நோக்கினால் எல்லா வாழ்வுகளிலுமே ஏதோ நெடிதான் அடிக்கிறது. எப்படியோ வாழ்ந்து தீர்வோம் என்று நினைத்தால் நம் முகரும் திறனைத்தான் மழுங்க அடித்துக் கொள்ள வேண்டி இருக்கும். உற்று நோக்கினால் சுற்றம் இல்லை என்பார்கள். (குற்றம் பார்க்கின் என்பது பழமொழி, அதைச் சற்று மாற்றினால் உற்று நோக்கலாகிறது. ) உறவுகள் எல்லாமே நன்மையானவை அல்லதானே. குறை காண முடியாத உறவு என்று ஏதும் உண்டா என்ன?
வாழ்க்கையின் பல விஷயங்களைப் போல, பல ஆயிரக்கணக்கில் பல வகைப் பறவைகளின் கூட்டங்களாக அங்கு நீரில் நிற்கும் மரங்களில் அடைந்திருக்கும் அவற்றை, எட்டி நின்று பார்த்தால், அவை வசீகரமாகவே தெரிகின்றன. எத்தனை விதமான அலகுகள், என்னென்ன நிறங்களில் இறகுகள், கால்கள், கழுத்துகள். கூவல்களில் கூட எத்தனை விதங்கள்.
இருந்தாலும், அருகே பார்த்தால் அவை தமக்குள் அடித்துக் கொள்வதும், கிட்டத் தட்ட கொலை வெறியோடு சண்டையிடுவதும் எல்லாம் தெரியும், சில அடிகளே நீளும் கூடுகளுக்காக இத்தனை ஆக்ரோஷமா என்று நாம் வியக்கும் அதே நேரம், எல்லா மனிதர்களும் அதையேதான் செய்கிறார்கள் என்ற தெளிவு பறவைகளைக் குற்றம் சொல்லாமல் இருக்கச் செய்கிறது.
அதே நேரம், இதை அதிகம் கண்டுகொள்ளாமல் பறவைகள்தான் என்ன உல்லாசம், எத்தனை சுதந்திரப் பறவைகள் என்று என்னால் போக முடியவில்லை. இந்தத் தர்க்கத்தை நீட்டினால் மனிதர்கள் எத்தனை சுதந்திரமானவர்கள், என்னவொரு உல்லாசப் பிறவிகள் என்றும் நாம் வாதிடலாமே. செய்வோமா? நமக்கோ பாடு என்பதைப் பெரும் பாறையாக நம் முதுகில் சுமந்து மலையேறும் பிறவிகளாக நம்மை உருவகிப்பதுதான் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த உருவகம் விரும்பப்படாத மக்கள் சமூகங்கள் உலகில் எங்காவது இருக்குமா என்பது ஐயம்தான். தம்மை பலியாடுகள் என்று நம்பாத மக்கள் குழுக்கள் உலகில் எங்காவது இருக்குமா? பலியாடாக இருப்பதைத்தான் மதங்கள் எத்தனை மையத்தில் வைத்து நமக்கு எல்லையற்ற கருணாளனிடம் இறைஞ்சச் சொல்லித் தந்திருக்கின்றன?
****
என்றாலும், தரையில் காலைக் கட்டிப் போடப்பட்ட ஜீவனான நான், அவை எத்தனை சுலபமாக விண்ணேகுகின்றன என்று பார்க்கையில் கொஞ்சம் பொறாமைப் படவே செய்கிறேன். எதைப் பார்ப்பது என்று தேர்வு செய்து பார்த்தால் பயங்கரங்களை ஓரம் கட்டி விட்டு, சில நன்மைகளை மட்டும் வியப்பது மனித புத்திக்கு எளிதுதானே.
மாறாக, நான் மண்ணில் நடப்பதை, ஓடுவதை எத்தனை சுளுவாகச் செய்கிறேன் என்று பார்த்து, அந்தப் பறவைகள் பொறாமைப்படுமா என்று யாருக்குத் தெரியும்? மிருகங்கள், ஜந்துக்கள், தாவரங்களோடு பேசக்கூடியவர்களாக மனிதர் ஆனால் வாழ்க்கை என்னவொரு பிரும்மாண்டமான செயலாக ஆகி விடும்? திரும்பிய பக்கமெல்லாம் உரையாடல்கள் நடக்கும் வாழ்வு எளிதில் தாங்கக் கூடியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
அனைத்தையும் துறந்து தவமிருக்கிறேன் என்று செல்வோர் கூட சூழலில் மரங்களும், கற்களும், புழுக்களும், பறவைகளும் நாள் பூராவும் உரையாடிக் கொண்டிருப்பதை எப்படித் தாங்குவார்கள்?
வெற்றிடத்தை இயற்கை பொறுக்காது என்று சொல்வார்கள், கேட்டிருக்கிறோம். ஜீவராசிகளின் பேச்சு எல்லாம் புரியக் கூடிய தவ நோக்குக்காரர்களுக்குப் போக்கிடம் எதுவுமே இராது என்றுதான் தோன்றுகிறது.
வெற்றிடமும், கடும் குளிரும் நிலவும் அண்ட வெளியில் கூட கடந்து போகும் எரிகற்களும், விண்கற்களும் பேசிக் கொண்டிருக்கும்.
ஒலிதான் அங்கே கேட்காதே என்று சொல்ல வேண்டாம். உரையாடல் என்பது ஒலியாலோ, சொற்களாலோதான் இருக்க வேண்டுமென்று ஒரு அவதியும் இல்லையே? தொடர்பு கொள்வதில் லாகவமே இல்லாத மனிதர்கள் பூமியெங்கும் தம்மிடையே தொடர்பு கொள்வதை இப்போது ஒளிக்கற்றைகள் மூலம்தானே செய்கிறார்கள்?
***
மிருகங்களோடு பேசக் கூடியவர்கள் என்று சிலரைச் சொல்கிறார்கள். பாரதக் கதையில் அதிக இடம் பெறாத, பூவோடு சேர்ந்த நாராகவே விவரிக்கப்படும் நகுல சகதேவர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசாக, குதிரைகளோடு பேசும் திறன் உண்டு என்று படித்த நினைவு. குதிரைகள் மட்டும்தானா, மிருகங்களோடே பேசும் திறனும் இருந்ததா என்று எனக்கு நினைவில்லை. அப்படி இருந்திருந்தால், நகுல சகதேவர்களின் வாழ்க்கை அத்தனை இன்பமாக இருந்திராது என்று நினைக்கிறேன்.
போக வர எல்லா மனிதர்களின் அலைப்புகளையும், குதிரைகள், மாடுகள், கோழிகள், ஆடுகள், தவிர பறவைகள் என்று எல்லாமே விமர்சனம் செய்து கொண்டிருக்கும். மனிதர்களின் வம்பும், ஆணவமும், பேராசைகளும் கொடுத்த தொல்லையால்தான் காட்டுக்குத் துரத்தப்பட்டிருக்கிறார்கள் நகுல சகதேவர்கள். அங்கும் இதே பிரச்சனை என்று மிருகங்கள் தெரிவிப்பதாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள். காதை வேண்டுமானால் பொத்திக் கொள்ளலாம், ஆனால் மிருகங்கள் உடலாலும், சைகையாலும் எத்தனையோ பேசுகின்றனவே, அவற்றை எப்படித் தவிர்த்திருக்க முடியும்?
அப்போது இவர்கள் படுகிற துன்பத்தைப் பார்த்து திரௌபதிக்குத் தன் துன்பங்கள் மிக இலேசானவை என்று கூடத் தோன்றி இருக்கலாம்.
***
மனித புத்தியின் வக்கிரத்தைப் பற்றி எனக்குச் சிறிதும் சந்தேகம் கிடையாது. நம்மால் எதையும் செய்ய முடியும், அத்தனை கிறுக்கர்கள் நாம். எனவேதான், நகுல சகதேவர்களைப் பற்றியெல்லாம் யோசித்த போது, இதே கருத்தின் ஒரு பகுதியைத்தான் ஆக்டேவியா பட்லர் தன் அதிபுனைவில் ஒரு மையக் கருவாகக் கொண்டு நாவல்கள் சிலவற்றை எழுதினார் என்பது உடனே நினைவு வந்தது. நகுல சகதேவர்களுக்கும், ஆக்டேவியா பட்லருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இவரும் ஓரளவு நாடுகடத்தப்பட்டு, அகதி போல வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த ஆஃப்ரிக்க இனப் பெண்மணி என்பது ஒரு ஒற்றுமைக் குணமாக இருக்குமோ?
ஆனால் தான் பட்ட துன்பங்களின் சாரத்தை யோசிக்கும் ஆக்டேவியா பட்லருக்கு, மனிதரில் ஒரு சாராருக்குப் பிறரின் துன்பத்தைச் சிறிதும் உணர்ந்து பார்க்கும் திறன் இல்லை என்பது நன்கு புரிந்திருக்க வேண்டும். அதற்கு எதிராக சிலருக்கு சுற்றிலும் இருப்பவர்களின் எல்லா மனத் துயரங்களும் (சந்தோஷங்களும்தான்) உடனே புரிவதோடு அவற்றைத் தம்முடைய உணர்வுகளே போலப் புரிந்து கொள்ளும், உணரும் திறன் கிட்டினால் என்ன ஆகும் என்பதுதான் அவர் கற்பனை. பரிவுணர்வு என்பதை மிகத் தீவிரமாக, தம் உடல் அனுபவமாகவே உணரும் மனிதர் அதனால் எத்தனை முடக்கப்பட்டு வெளியிலேயே உலவ முடியாதவராக ஆகிறார்கள் என்பதை அவர் பற்பல கோணங்களில் பார்த்து நாவலாக ஆக்குகிறார். தவிர்க்க முடியாதபடி, இப்படிப்பட்ட ஆழ்ந்த பரிவுணர்வு கொண்டவர்கள் அவர் நாவல்களில் அதிகமாக கருப்பினத்து மக்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அதைப் பிறர் அறிந்து விட முடியாதபடி மறைத்து வாழும் சிக்கலும் அவர்களுக்கு இன்னொரு தண்டனையாக அமைகிறது.
இந்தக் கருவின் பின்னே உள்ள மறை சிந்தனையைப் பற்றி நான் பேசத் தேவையில்லை. வாசகர்களால் அதை ஊகிக்க முடியும்.
***
மிருகங்களோடு பேசுவது அத்தனை சுகமான அனுபவமாக இருக்கத் தேவை இல்லை என்று தெரிந்து கொண்டிருக்கையிலேயே, இன்று படித்த ஒரு கட்டுரையில் காக்கைகளோடு பேசக் கூடிய ஒரு பெண்மணியைப் பற்றிப் படித்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, அது ஏன் என்று என்னால் விளக்க முடியாது. [இதைப் பற்றிக் கொஞ்சம் தள்ளி இந்தக் கட்டுரையில் காண்போம்.]
***
அந்தப் பறவைகளை விடுவோம். அவை அங்கே நிரந்தரவாசிகள் இல்லை. எங்கோ குளிர் பிரதேசங்களிலிருந்து இங்கு வந்து விட்டு, முதலில் புறப்பட்ட இடங்களில் கோடை துவங்கும்போது அங்கே திரும்பிப் போகிற வகை. அவை சுற்றுலாவுக்கு வரவில்லை. வருடத்தில் பாதியை இந்தியாவில் செலவழிக்கிற பறவைகளை இந்தியப் பறவைகள் என்று ஏன் சொல்லக் கூடாது என்று சிலர் கேட்கிறார்கள்.
இதே போல வேடந்தாங்கலில் வந்து போகும் பறவைகளும் உலகம் சுற்றும் ஜீவராசிகள்தான். இவற்றில் பலவற்றுக்குத் தமிழ்ப் பெயர்களும் உண்டு, அவை அந்த ஏரிப் பகுதியில் உள்ள பலகைகளில் காணப்படுகின்றன.
ஸ்ரீரங்கப்பட்டணம், வேடந்தாங்கல் ஆகியன பறவைகளுக்குத்தான் புகலிடம் என்றில்லை, அதனாலேயே மனிதருக்கு அவை சுற்றுலாத்தலங்களாகின்றன. பாவம் பறவைகள், மனிதர் கண்ணில் படாது ஆசுவாசமாக வாழ அவற்றுக்கு ஓரிடமும் கிட்டுவதில்லை.
இந்தத் தலங்களுக்கு உலகத்துப் பறவைகள் கொணரும் அல்லது விட்டுச் செல்லும் குப்பைகளில் பெரும்பகுதி இயற்கையில் அழியும் வகை. நின்று நச்சாகும் வகை இல்லை. மாறாக அப்பறவைகளைப் போல பலமடங்கு குப்பையை அவற்றைக் காண வரும் பல்லாயிரக் கணக்கான நபர்கள் கொண்ட மனிதக் கும்பல் அந்த இடங்களுக்குக் கொண்டு வருகிறது. இது விட்டுச் செல்லும் கழிவுகள் பல்லாயிரக்கணக்கான பறவைகளின் கழிவுகள் குப்பைகளை விடப் பல மடங்கு வீச்சம் அதிகமுள்ளன, சூழல் நசிவுக்கும் காரணமானவை என்று சிறிது உற்று நோக்குவோருக்கும் புரியும்.
நான் அங்கெல்லாம் எப்போதோ பத்தாண்டுக்கு ஒரு முறை போனால் அதிகம். சில நண்பர்கள் வருடந்தோறும் போகிறார்கள். இவர்கள் பறவைப் பிரியர்கள். மாறாக, உல்லாசப் பயணம் என்று அங்கு வருபவர்கள் பலரும் பறவைகளைப் பார்க்க வருவதை விடப் பிற மனிதர்களைப் பார்க்கவே வருகிறார்கள் என்று சில சமயம் எனக்குத் தோன்றும்.
தீர நோக்கினால் பறவைகள் தேவலை, மனிதர்களைத்தான் தாங்க முடியாது என்று புரியும். பூமியும் ஓர் ஜீவராசி என்று சொல்லும் கையா இயக்கத்தினர் சொல்வது நிஜம் என்று வைப்போம். அப்போது பூமியும் ஒரு நாள் சினம் கொண்டெழுந்து மனிதப் பூச்சிகளை ஒழிக்க முனைந்தால் அது நியாயமான சினமாகவே இருக்கும்.
***
தூரப் பகுதிக்குப் போகாமல் சென்னையில் வசிக்கும் தெருவருகே பார்த்தால், காக்கை குருவி மைனா மீன்கொத்தி குயில் புறா போன்றனவற்றோடு அங்கங்கே சில செம்போத்துகளின் ஏகாந்தக் குரலும் கேட்கும். தினசரி காலை இவை கேட்கும் என்றாலும், விடிகாலை என்பது எது என்பதைக் குறித்துச் சில காக்கைகளுக்கு நிறைய குழப்பம் என்பது என் அனுபவம். காக்கைகளின் பாரம்பரியத்தையும் ஒழிப்பதற்கு, வல்லூறுகள் பாடத்திட்டம் வகுத்தனவோ என்னவோ.
அநியாயமாக இரவு 3.30, 4 மணிக்கெல்லாம் குரல் கொடுத்துக் கூட்டமாய் குழறிப் பேசி என் உறக்கத்தை அடிக்கடி கலைக்கும் அவற்றை நான் சில நாட்கள் வெறுக்கவே செய்கிறேன். இருந்தாலும் காலை வெளிச்சம் வந்த பிறகு, அதே காக்கைகளை என்னால் அப்படி வெறுக்க முடிவதில்லை.
ஜன்னலருகே வந்தமர்ந்து அல்லது பால்கனிச் சுவரில் வரிசையாக உட்கார்ந்து கத்திக் குரல் கொடுத்து உன் அம்மா எங்கே, அவர் ஏன் இன்னும் எங்களுக்குச் சாப்பாடு போடவில்லை என்று கொடிக்கம்பியில் துணி உலர்த்துகிற என்னிடம் கேள்வி கேட்கும் காக்கைகளின் தர்பார் சுவையானது. பாரதியார் இந்தத் தர்பார் பற்றி அருமையான உரைநடைப் பக்கங்களை எழுதி இருக்கிறார். அவர் எனக்கு இதைப் பள்ளி நாட்களிலேயே சொல்லிக் கொடுத்துக் காக்கைகளின்பால் பெருமதிப்பை என்னிடம் எழுப்பி இருந்தார்.
சரி,ஒத்துக் கொள்கிறேன். எனக்குக் காக்கைகளை மிகவும் பிடிக்கும்.
சனீஸ்வரனின் வாகனமாக அவை ஆனதாலா என்று தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம், அதைக் கூட விரும்பி ஏற்க ஒரு தெய்வம் இருப்பதுதான் என்னவொரு விசித்திரம். இப்படிச் சொல்வது ‘மதச் சார்பற்ற’ வாசகருக்குப் பிடிக்காதென்றால், எனக்குக் காக்கை மகாத்மியத்தைப் போதித்த பெர்ண்ட் ஹைன்ரிஹ்ஹின் புத்தகத்தையும் காரணியாகச் சொல்லலாம். இதுதான் அந்த அற்புதப் புத்தகம்: https://tinyurl.com/yyd39rnj
[அவரை ஒரு விடியோவில் இங்கே பார்க்கலாம்: https://www.youtube.com/watch?v=Fiq-tmPKuok ]
முன்பொரு தடவை மிருக உயிரியலாளரான பெர்ண்ட் ஹைன்ரிஹ் பற்றி சொல்வனத்தில் எழுதி இருக்கிறேன். பல ஆச்சரியங்கள் நிரம்பிய புத்தகங்களின் ஆசிரியர் இவர்.
தினசரி என் ஜன்னலருகே (முதல் மாடி அடுக்ககம்) நீளும் மாமரக் கிளையில் அமர்ந்து நான் மடிக்கணினியில் தட்டச்சுவதை ஆர்வத்தோடு கவனிக்கும் ஒன்றிரண்டு காக்கைகளைப் பார்த்து நான் யோசித்திருக்கிறேன். அவை நான் என்ன செய்கிறேன் என்று நினைக்கும்?
தட்டச்சுவது இயல்பான மனிதச் செயல் எதையும் ஒத்திருக்கவில்லை. காக்கைகளுக்கு மனிதரின் இயல்பான செயல்கள் நன்கு தெரிந்திருக்கும். என்ன என்று புரியாததால்தான் தலையைக் கிளையினூடாகச் சாய்த்து என்னை அத்தனை நேரம் பார்க்கிறதா? திரும்பத் திரும்ப அதே இடத்துக்கு வந்து பார்ப்பதில் என்ன கிட்டி விடும்? அல்லது அறையுள்ளே இருப்பவன் ஏதும் ஆகாரம் கொடுப்பானா என்று பார்க்கின்றனவா?
மோட்டர் சைக்கிள், ஸ்கூட்டி, கார் என்று ஓட்டி வருவதை அவை எப்படிப் புரிந்து கொள்ளும்? எந்திரங்களையே காக்கைகள் என்னவென்று அறிகின்றன? இரைச்சல் போடும் பயங்கரங்கள் என்றா, அல்லது குப்பை லாரிகளின் அற்புதப் புதையல்களைப் பார்த்துப் பெற்ற அனுபவத்தால், அவை பொக்கிஷம் சுமக்கும் வியப்புகள் என்று நினைக்குமா?
ஹைன்ரிஹ்ஹோ சைபீரியப் பனிப்பாலையில் வேட்டையாடும் பழங்குடியினருக்கு இந்தக் காக்கைக் கூட்டங்கள் வேட்டைக்கு உதவுகின்றன என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார். மனிதரின் பல செயல்களைக் காக்கைக் கூட்டங்கள் கூர்மையாகக் கவனித்து நம்மைப் பலவிதங்களில் ‘காவல்’ காக்கின்றன என்பது ஹைன்ரிஹ்ஹின் வாதம். எங்கோ மர உச்சியில் இருக்கும் காக்கையை நாம் கவனிப்பதில்லை. ஆனால் அதுவும், அதன் துணைவர்களும் அத்தனை உயரங்களிலிருந்து நம் உடலசைவுகள் அனைத்தையும் பார்த்தபடி இருக்கின்றன.
இது நமக்கு நன்கு புரிந்தால் நாம் சபைக் கூச்சத்தோடுதான் வெளியில் உலவ முடியும். நம் உணர்வுகளை முடக்கினால்தான் நாம் வெளி உலகில் சிறிதாவது சுதந்திரத்தோடு நடக்க முடியும் என்ற என் கருத்துக்கு இது வலு சேர்க்கிறது.
பட்லரின் அதீதப் பரிவுணர்வு ஒரு மெலிவு, வலு இல்லை என்ற கதையின் திருகலான அணுகல் பல சமூகங்களில் வேரூன்றி இருக்கிற ஒரு அரசியல் கருத்தியலை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறதை நாம் புரிந்து கொண்டிருப்போம். அதே வகைத் திருகல்தான் ஹிட்ச்காக் என்ற ஒரு திரைப்பட இயக்குநர் குறித்தும் நாம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இது ஏன் என்று இக்கட்டுரையில் கடைசிப் பகுதியில் பார்க்கலாம்.
***
காக்கைகள் ஓரளவுக்கு சண்டைக்காரப் பறவைகள்தான் என்றாலும், அவை தம்மை விடச் சிறிய குருவிகளை விரட்டிக் கொல்ல முயல்வதை நான் பார்த்ததில்லை. மாறாக அமைதிச் சின்னமான புறாக்கள் மற்றப் பறவைகளை விரட்டுவதை பார்த்து வியந்திருக்கிறேன். என்னவொரு குரோதம்!
புறாக்களின் அக்கும் அக்கும் முத்தாய்ப்போடு கூடிய தலை அசைத்த நடையைச் சற்று ரசித்தாலும், அவற்றின் சண்டைக் குணமும் தினசரி கண்ணில் படும். இவை எனக்கு உவப்பில்லாத பறவைகள்.
புறாவை சமாதானக் குறியீடாக வரைந்தவன் தான் எத்தனை முட்டாள். விவிலியக் கதையில் அது ஆலிவ் இலையைக் கொணர்ந்தது என்பதற்காக அதை ஒரு புனிதப் பொருளாக ஆக்கியது உலக ஏகாதிபத்திய மதம். இந்தியர்கள் அதை அப்படியே விழுங்கிக் கொள்ள உதவியவர் ஒரு முன்னாள் பிரதமர். சின்ன விஷயங்களைக் கூட அரசியலாக்கியது காலனியத்திலிருந்து விடுபடாத இந்தியம். இவற்றின் சாயையை விலக்கி விட்டுப் பார்த்தால் புறாக்களின் பிம்பத்துக்கும் அவற்றின் நடத்தைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது தெரியும். அவை எந்த இடத்தையும் ஆக்கிரமிப்பதைப் பார்த்தால் எத்தனை சண்டைக்காரப் பறவைகள் என்றே தோன்றும். வெறும் சண்டைக்காரப் பறவைகள் கூட இல்லை அவை. பல திரைப்படக் கதைகளில் வரும் சல்லியரைப் போல, அமைதியான தோற்றம் கொடுத்துக் கொண்டே, திடீரென்று தாக்கும் வன்முறை கொண்டவை என்பது இவற்றை நம்பத்தகாத பறவைகள் என்பது போலாக்குகிறது.
இதே பறவைகளை ஒரு காலத்தில் செய்திகளைப் பரிமாற மனிதர் பயன்படுத்தினர் என்பதில் ஏதோ ஒரு விசித்திரமான தன்மை உள்ளது. செய்திகள் எல்லாமே இப்படிப் புறத்தோற்றமும், உள்ளிருப்பும் மாறி மாறி அல்லது எதிரெதிராகக் கூட அமைந்துள்ளவைதானா?
ஜன்னல் கூரை மீது அமர்ந்து அவை ஒன்றோடொன்று அடித்துக் கொள்வதை எனக்குச் சகிக்க முடிவதில்லை. ஜன்னல் கூரை அடிப்புறத்தை ஒரு கம்பால் இடித்து அவற்றை விரட்டுகிறேன். புறவெளி என்னுடையதல்ல, அவற்றின் ஏகபோக உரிமைப் பகுதி என்பது எனக்கும் தெரியும்.
பல பத்தாண்டுகள் பழையதான இந்த அடுக்கக மாடிக் கட்டடத்தில் எதிர் சாரியில் ஒரு அடுக்ககத்தில் யாரும் பல மாதங்களாக வசிக்கவில்லை. ஒரு ஜன்னல் சரியாகச் சாத்தப்படாமல் இருக்கவும், அந்த அறையில் புறாக்களின் பெரிய காலனியே வசிக்கிறது. அவை அங்கே புகுந்து என்ன களேபரங்களை நடத்தியிருக்கின்றன என்று போய்ப் பார்த்தால்தான் தெரியும். அறைகளில் அடையும் பறவைகளின் மோசமான செயல் என்பது அவை எங்கும் கொட்டி இருக்கும் கழிவுகள்தான். அந்த வீட்டில் யாராவது வசிக்க வந்தால் அந்த அறையை, அந்த அடுக்ககத்தைச் சுத்தம் செய்ய அரும்பாடு பட வேண்டி இருக்கும். அப்படிச் சுத்தம் செய்த அனுபவம் எனக்கு உண்டு. அந்த நெடியைத் தாங்க முடியாமல் அரை மணிக்கு ஒரு தடவை வெளியே வந்து படிக்கட்டுகளில் அமர்ந்து நல்ல காற்றைச் சுவாசித்து அமைதிப்படுத்திக் கொண்டு திரும்ப உள்ளே சென்று அந்த அடுக்ககத்தைச் சுத்தம் செய்தோம். இரண்டு நாட்கள் ஆயின, ஆனால் அந்த கடும் வாடை போக வாரக் கணக்கில் ஆயிற்று. திருமண விருந்தாளிகளுக்காகக் கடன் வாங்கிய அந்த அடுக்ககத்தில் இருந்த சில தினங்களில் அந்தத் திருமணத்தில் பல பத்து உறவினர்களை வெகு நாட்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சி எல்லாம் அப்பறவைகளின் கழிவுகளுடைய காரமான நெடியால் அழிபட்டிருந்தது.
***
நாடோடிகள் என்று பார்த்தால் கடல் நாரைகளை விடப் பெரிய நாடோடிகளாக ஒரு சில கடல் பறவைகளே இருக்கும். ஆல்பெட்ராஸ் என்ற வகைப் பறவை அப்படி ஒரு பறவை. இதை ஒரு தமிழகராதி அண்டரண்டப் பறவை என்று தமிழாக்குகிறது. எதற்கு அண்டரண்ட என்ற சொல் என்று தெரியவில்லை. பிறகு இதைக் கூர்ந்து நோக்க வேண்டும். ஆல்பெட்ராஸைப் பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்.
இங்கு கடல் நாரைகளைப் பற்றிய விசாரம் நடக்கிறது. இவை நான் சென்ற எல்லா நாடுகளிலும் காணப்படுவதோடு எல்லாப் பகுதிகளிலும் அதே அழுக்கு வெள்ளையாகத்தான் தெரிகின்றன. இவற்றில் கலப்பினங்களெல்லாம் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. [நம் அரசியல்வாதிகளுக்கு இவை அத்தனை பிடிக்காத பறவைகளாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். ]
சென்னையிலும் கடற்கரையில் சுற்றித் திரிவதை விட்டு விட்டுப் பல மைல்கள் உள்ளே பறந்து வந்து கூட்டங்கள் உள்ள இடங்களில், சிறு மைதானங்களில் திரியும் சில கடல்நாரைகளைப் பார்த்து எனக்குக் கேள்விகள் எழும்.
இவை மனிதர்களில் சிலர் சமூக வாழ்வை விட்டு விட்டு, மலை காடு என்று அலைவதையே விரும்புகிறார்களே அவர்களைப் போன்ற ஒட்டாது திரியும் பிறவிகளா, அல்லது தம் கூட்டத்திற்கு எல்லை விரிப்பு தேவை என்று உணர்ந்து எங்கே திரிந்தால் நல்லது கிட்டும் என்று பார்க்க வரும் சாரணக் கூட்டங்களா என்றுதான் என் யோசனை.
அல்லது கடல் நாரைகளிலும் நவீன உலகின் தாக்கத்தால் தம் சமூகம் அல்லது சூழலிலிருந்து அன்னியப்பட்டுப் போனவை உண்டா? கடல் நாரைப் புத்தரோ, மகாவீரரோ என்ன போதித்திருப்பார்? கடல் நாரைகள் வெகுண்டெழுந்து மனித மிருகங்களின் ஏகாதிபத்தியத்தை வீழ்த்தப் புரட்சி செய்யும் நாள் வரும் என்று இவை பிரச்சாரம் மேற்கொள்ளுமா? அது பற்றி அவை நாரை மொழியில் ஏற்கனவே பேருரைகள் ஆற்றிக் கொண்டிருக்கின்றனவா?
ஏற்கனவே நாடோடிகளான கடல் நாரைகள் நடுவே அவற்றை விடத் தீவிர நாடோடிகளாக இருப்பது சாத்தியமா? அல்லது நாடோடி நாரை வாழ்க்கையை விட்டு விலகும் நாரைகள் குடும்பஸ்தர்களாக, ஒரே ஊரில், ஒரே மரத்தில் கூடு கட்டிக் கொண்டு வாழ்வதையே புரட்சி என்று நினைக்குமா? இதுதான் டயலக்டிக்ஸ் என்று விதண்டாவாதம் செய்யுமா?
***
இன்னொரு ஊரில், குளிர்ப் பிரதேசத்தில் பல மாதங்கள் வசிக்கையில், வீட்டு வாயிலில் தினம் மின் கம்பிகளில் அமர்ந்து வானை நோக்கி தீவிர ஆலோசனையில் ஈடுபடும் செங்கழுத்துப் பறவையை நான் அவ்வப்போது பேச்சில் ஈடுபடுத்த முயல்கிறேன். அதன் கூவலை நகல் செய்ய முனையும் என் அபத்தமான சீட்டியை அலட்சியம் செய்து கழுத்தைச் சாய்த்து அந்தப் பறவை, என்ன பிரச்சனை உனக்கு, நான் பாட்டில் நிம்மதியாக மின் கம்பி மீது அமர்ந்து இளைப்பாறினால் உனக்கு என்ன உபாதை, அரிப்பு என்று என்னைக் கேட்டு விட்டுப் பறந்து போகும். சில பறவைகளுக்கு நகைச்சுவை உணர்வு உண்டு என்று படித்த நினைவு இருக்கிறது. பெரும்பாலான பறவைகளுக்கு அப்படி ஒரு உணர்வு, ரசனை உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.
எப்போதும் சீரியஸாக இருக்கும் பறவைகளை மட்டும் மனிதர் எப்படி விரும்புகிறார்? அதே போல யாரும் மனிதர்களில் இருந்தால் அவர்களை சிடுமூஞ்சி என்றுதான் நாம் அழைக்கிறோம், இந்த ஓர வஞ்சனை ஏன்?
***
இன்னொரு பறவை தோட்டத்தில் என்ன வேலை செய்யப் போனாலும், குறிப்பாக நாங்கள் மண்ணைக் கொத்திக் கிளறும்போது வேலி மீது வந்து அமர்ந்து கொள்கிறது. மனைவி மண்ணைக் கிளறும்போது அவ்வப்போது கிட்டும் சில வண்டுகள், புழுக்களை எடுத்து ஒரு செங்கல், கருங்கல் மீது வைக்கிறார். அவை மண்ணையும், செடிகளையும் நாசம் செய்யும் வகை ஜந்துக்கள். அவர் வைத்து விட்டு திரும்பி வேறு இடத்தில் கொத்தும்போது அலட்சியமாக ஒரு வளைகோட்டில் மிதந்து வந்து கல்லருகே அமர்ந்து ஜாக்கிரதையோடு இப்படி அப்படி தத்தி விட்டு, இதோ ஓடி விடுவேன் என்பது போல இரண்டு முறை சிறு தவ்வுகளில் எழும்பிச் சிறிது பறந்து மறுபடி அமர்ந்து, அவசரமாக அந்த வண்டை, புழுவைக் கொத்திக் கொண்டு மறு புறம் வளை கோட்டில் அவசரப் பறப்பில் எகிறி வேலி உச்சியில் அமர்ந்து, மூக்கில் சிக்கிய பூச்சியை காலில் பிடித்துக் கொத்தி உண்ணும் ஒரு பறவை எங்கள் நட்புப் பறவை.
…..
நட்பு என்றெல்லாம் இருந்தாலும் இது ரானல்ட் ரேகன் கட்சி என்று என் நினைப்பு. அவர்தானே மேதாவித்தனமாகச் சொன்னார், ‘நம்புவோம், ஆனால் சோதிப்போம்!’ அதுதானே அவருடைய இலச்சினை அறிவிப்பு? உலக இடது சாரிகளுக்கு இவர் பெயர் பூத் ஜோலோகியா மிளகாயாக இருப்பதற்குக் காரணம் இந்தத் திமிரான வாசகம்தான்.
நான் இடது சாரி இல்லை என்றாலும், சோதிப்பதையே முதல் குணமாகக் கொண்டவர்களை நம்புபவனாக இருப்பது அப்பாவித்தனத்தின் உச்சம் என்று நினைக்கிறேன். இந்தப் பறவையின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நான் ஏதேதோ கூழைக் கும்பிடெல்லாம் போட வேண்டும் என்று அது நினைத்தால் அதை எல்லாம் நான் செய்யத் தயாரில்லை. அதுதான் என்னை நம்பக் கற்க வேண்டும் என்பது என் கட்சி.
****
அதற்கு வீட்டுக் கூரைக்கடியில் ஒரு மூலையில் அமைந்த புறத்து மின்விளக்கின் தட்டையான மேல்தகட்டில் கூடு உண்டு. குளிர்காலத்தில் அந்த விளக்கு அவ்வப்போது எரியும், தேவையான கதகதப்பைக் கொடுக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வருடாவருடம் அது முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கிறது. சில நேரம் அங்கு குஞ்சுகள் பெரிதாக முறையிட்டுக் கத்தும். அரவம் இல்லாது சில நாட்கள் இருந்தால், நான் போய் ஏணி போட்டுப் பார்த்தால் அதில் ஒரு நீல முட்டை இருக்கும்.
ஆச்சு, இப்போது ஏப்ரல் நெருங்குகிறது. குளிர் மெல்லப் பதுங்கிப் பின் வாங்கி, சில மாதங்களுக்குக் காணாமல் போகும். பறவைகளின் சுதந்திரத் திரிதலுக்கான மாதங்கள் வருகின்றன. இதுதான் இந்தக் கட்டுரையை மேடாயனம்/ மகாவிசுவம்/ வசந்த சமராத்திரம் என்ற சொற்புதரில் துவங்கக் காரணம்.
குளிர் நாட்களில் காணாமல் போன அந்தப் பறவை, சென்ற வருடத்துப் பறவை இந்த வருடம் வருமா என்று தெரியவில்லை. இந்த வகைப் பறவைகள் அப்படி ஏதும் நாடோடிகளாகப் பல ஆயிரம் மைல்கள் தெற்கே போகும் என்று எனக்குத் தெரியாது. பல நூறு மைல்கள் கூடப் போகுமா என்பது ஐயம்தான். இவை எங்கே சென்று முடங்கும், அதுவும் இத்தனை மாதங்கள் எங்கே போக முடியும்?
இறந்த காக்கை உடல்களை நாம் ஏன் பெரும்பாலும் காண்பதே இல்லை என்று உலகம் பூராவும் உள்ள ஒரு சிறு வியப்புக் கேள்வியைப் போலத்தான் இதுவும். என் போன்றவர்களின் அறியாமைதான் இப்படிக் கேள்விகளை எழுப்பச் செய்கிறது. வலையில் தேடினால் இந்தப் பறவை போன்றன கடும் குளிர் நாட்களில் என்ன செய்யும் என்பது உடனே தெரியும் என்று நினைக்கிறேன்.
அது ரெட் ராபின் என்று என் மனைவி சொல்கிறார். நான் அதைச் செங்கழுத்துப் பறவை என்று வருணித்தது சரியா என்று தெரியவில்லை. வலையில் படங்களைச் சோதித்ததில் சில ராபின்களுக்கு வயிற்றுப் புறம் சிவப்பாக இருக்கிறது, கழுத்து சிவப்பாக இல்லை. சிலவற்றுக்கு கழுத்திலிருந்து வயிறு வரை சிவப்பாக இருக்கிறது. ஆகவே இந்தப் பறவை சிவப்பு ராபின் தான் என்று சொல்லலாம்.
ஆனால் அதன் வாரிசோ அல்லது அது மரித்தபின் அந்தக் காலி இடத்தை நிரப்ப வரும் இன்னொரு இளம் பறவையோ அங்கே கூட்டில் அமரும் என்று நம்புகிறேன். முதலில் எழுதியது போல இயற்கை வெற்றிடத்தை அனுமதிப்பதில்லை என்பது இதில் மட்டுமாவது உண்மைதான். மற்றபடி என் புத்தியையும் சேர்த்து எத்தனையோ ஆயிரக்கணக்கான மனிதரின் புத்தியில் வெற்றிடம் இருக்கிறதை இயற்கையால் என்ன செய்ய முடிந்திருக்கிறது.
ஒரு கோணத்தில் நெடியை ஒதுக்கி பறவையின் ஒயிலை மட்டும் பார்க்கிற மனித புத்தியைப் போலவே, வாழ்வின் கடுமைகளை ஒதுக்கி புத்தியில் வெற்றிடத்தை வைத்துக் கொள்கிற குணத்தாலேயே மனிதர் இன்னமும் கொலை வெறி பிடித்தலையாமல் ஏதோ அவ்வப்போது சிறு சண்டைகள் சச்சரவுகளோடு கூட்டு வாழ்வை நடத்துகிறார்கள். நாடோடிப் பறவைகளின் வேடந்தாங்கல் வாழ்க்கை போலத்தான் அதுவும்.
பத்தாண்டுகளாக வருடந்தோறும் நடக்கும் சிறு திருவிழாதான் இந்தப் பறவையின் திரும்பி வருதலும், விளக்குக்கு மேல் கூட்டில் வாசம் செய்வதும், முட்டை இட்டுக் குஞ்சு பொறித்து, அவற்றை வளர்த்துப் பறக்க முடியும் வரை பராமரிப்பதும். இந்த வருடமும் நடக்காமல் இருக்கக் காரணம் ஏதும் இல்லை. ஆனால் இதை எல்லாம் எப்படி முன் கூட்டி நிச்சயம் என்று சொல்லி விட முடியும்?
இங்கும் எங்கிருந்தோ வரும் ஒரு மீன் கொத்திப் பறவை அடுத்த வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தில் அமர்ந்து குரல் கொடுப்பது ஒவ்வொரு வருடமும் நடக்கும். சுற்று வட்டாரத்தில் நீர்நிலைகள் ஏதும் இல்லை. ஆனால் பறக்கும் ஜந்துவுக்குச் சில மைல்கள் தூரம் என்பது ஒரு பொருட்டாக இராது. சில மைல்கள் தள்ளி நீர்நிலைகள் உண்டு. அதற்கு அந்தத் தோட்டத்தில் ஏதோ எப்போதும் தின்னக் கிடைக்கிறது. அப்படி என்னத்தை அது தின்கிறது என்று நான் எத்தனை எட்டிப் பார்த்தாலும் தெரிவதில்லை.
ஜன்னல் வழியே உலகைப் பார்ப்பதுதான் என்னவொரு தண்டமான அணுகல். ஆனால் சட்டகத்துக்கும் சில பயன்பாடுகள் உண்டு. வெர்மீயரைக் கேட்டால் சொல்வார், ஜன்னல்கள் எத்தனை முக்கியமானவை என்று. எல்லாரும் வெர்மீயராகி விட முடிகிறதா என்ன? அதே நேரம் எந்த ஒரு அமெச்சூர் ஃபோட்டோக்ராஃபரும் ஜன்னல்களின் புகழ் பாடாமல் இருக்க மாட்டார்.
***
இத்தனையும் எழுதக் காரணம் எனக்குக் காக்கைகளைப் பிடிக்கும் என்பதை மறுபடி மறுபடி சொன்னாலும் அந்த விருப்பத்தைச் சொற்களில் அடைக்க முடிவதில்லை.
இன்று காலை படித்த ஒரு இரு பக்கக் குறிப்பில் காக்கைகள் எத்தனை தற்காப்புணர்வு கொண்டவை, கூட்டமான காக்கைகளால் கருவம் கட்டிக் கொண்டு சில நபர்களைத் தாக்க முடியும், தொடர்ந்து தாக்கி அவர்களை ஊரை விட்டுப் போகுமளவு செய்யக் கூட அவற்றால் முடியும் என்று தெரிந்து கொண்டேன்.
சில பத்தாண்டுகள் முன்பு வரை உலகத் திரைப்பட இயக்குநர்களில் புகழ் பெற்றவராகத் திகழ்ந்த ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் ‘பறவைகள்’ என்ற ஒரு திகில் படம் எடுத்து பரபரப்பை ஊட்டி இருந்தார்.
பறவைகள் ஆயிரக் கணக்கில் கூடி ஒரு குடும்பத்தை ஊரை விட்டு விரட்டும் காட்சி அப்படத்தின் இறுதியில் அமையும். இது பற்றித் தகவல் ஏதும் கிட்டுகிறதா என்று பார்க்க வலையில் தேடினேன். ஒரு கட்டுரை கிட்டியது. இதில் ஹிட்ச்காக்கின் இரு தோள்களில் அமர்ந்திருக்கும் இரு பறவைகள், என் வியப்புக் குரிய வகையில் இந்தக் கட்டுரையின் முன்பகுதியில் நான் எழுதிய இரு பறவைகள். கடல் நாரையும், காக்கையும். இரண்டும் சோர்வில்லாது வேட்டையாடும் பறவைகள், தமக்குள் போட்டி சண்டை எல்லாம் கொண்டிருந்தாலும் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. இந்தப் பக்கத்தைப் பார்க்கச் செல்ல வேண்டிய முகவரி: https://nofspodcast.com/alfred-hitchcock-birds-1963-anniversary
இந்த இதழில் (243) ஹிட்ச்காக்கின் சில விசித்திர மனோபாவங்கள் பற்றிய ஒரு சிறு கட்டுரையைக் கொடுக்கவிருக்கிறோம்.
***
இன்னொரு தகவல். சமீபத்தில் வீட்டுப் பக்கவாட்டில் வெளியில் இருந்த விளக்குகள் மிகப் பழையதாகி விட்டிருந்தன என்பதால் அகற்றி விட்டுப் புது விளக்குகளைப் பொருத்தினோம். அவை எல் ஈ டி வகை விளக்கு என்பதால் அவற்றின் உருவும் சிறிது, மேல்பரப்பும் அகலம் அதிகம் இல்லை. ரெட் ராபின் அங்கே கூடுகட்ட இயலுமா என்று இப்போது எனக்குக் கொஞ்சம் கவலை பிறந்திருக்கிறது. தோட்டத்தில் பெரிய மரம் ஏதும் இல்லை. எங்காவது மரத்தால் ஆன பறவைக் கூட்டைத் தொங்க விடலாமா என்று யோசிக்கிறேன். அப்படித் தொங்கவிட்டால் அதை ஒரு அணில் கூட்டம் ஆக்கிரமிக்காமல் இருக்க வேண்டும்.
இந்த இதழில் காக்கைகளோடு பேசும் அந்தப் பெண்மணி பற்றிய சில தகவல்களையும் கொடுக்க உத்தேசிக்கிறேன். முடிகிறதா என்று பார்ப்போம்.
இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கையில், காக்கைகளைப் பற்றி ஒரு சிறப்பிதழ் கொண்டு வரலாமே என்று நான் யோசித்தேன். அது நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
காக்கைகளைப் பற்றி பல கட்டுரைகளை எழுதக் கூடிய பல நபர்கள் தமிழ் நாட்டில் உண்டா? யாரிடம் கேட்டால் தெரியும்?
மைத்ரேயன் /23 மார்ச் 2021
One Reply to “வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக்”