ரௌத்திரம் பழகு

பள்ளியைச் சுற்றி மரம் நட வந்தவர்கள் மூன்று பேர். குழி வெட்ட ஒருத்தர், மரக்கன்றை வைக்க ஒருத்தர், வைத்தபின் மண் கொட்டி மூடி தண்ணீர் ஊற்ற வந்தவர் கடைசி நபர். ஆம் நீங்கள் கேள்விப்பட்ட அதே கதைதான். எல்லாக் கதைக்கும் மூலம் என்று ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்.

மூவரில் யாருமே சோம்பேறி கிடையாது. அதுவும் கடைசியாக மண் கொட்டி தண்ணீர் ஊற்றுகிறாரே அவர் ரொம்ப சுறுசுறுப்பானவர். காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டு நிற்பார். மரத்தை நட்டு முடித்த பின் நாலைந்து வீடுகளுக்கு புல் வெட்டப் போகவேண்டும். சாயங்காலம் இன்னொரு வீட்டில் மரம் வெட்டவும் கூப்பிட்டு இருக்கிறார்கள். ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேலை மட்டும் பார்த்தால் வயித்தை நிறைக்க முடியாது.

மரக்கன்றை வைக்க வந்தவரோ ஒரு நக்கல் பேர்வழி. முராகாமியின் Barn Burning கதையில் வரும் ஒன்றும் இல்லாத வெறுங்கையில் ஆரஞ்சு பழத்தை உறித்துக் கொண்டே இருப்பவள் போல. அவள் இப்படித்தான் ஏதோ ஒரு ஜென் தத்துவம் போன்ற ஒன்றைச் சொல்லிக் குழப்பினாள்.

” கையில் ஆரஞ்சுப் பழம் இருக்கிறது என்று நம்புவதில் இல்லை. ஆரஞ்சுப் பழம் இல்லை என்பதை மறப்பதில் தான் சூத்திரம் இருக்கிறது”.

கையை வைத்து தள்ளுவண்டியில் இருந்து மரக்கன்றை எடுத்து பொறுமையாக எடுத்து ஆடாமல் அலுங்காமல் குழிக்குள் இறக்குகிறார். முடித்து விட்டு கையில் உள்ள மண்ணை குழிக்குள்ளையே தட்டிவிடுகிறார். குழியை மூடக் காத்திருப்பவர் குழம்பிவிட்டார். மரக்கன்றையும் காணோம் தள்ளுவண்டியையும் காணோம்.

“ஏம்பா. விளையாட்டு பண்றதுக்கு இதுதா‌ன் நேரமா? ஒழுங்கு மரியாதயா கன்னை எடுத்து வந்து வைய். காத்துல மந்திரம் போடற வேலையெல்லாம் இங்க வேண்டாம். ஏகப்பட்ட வேல கிடக்குது.”

ஆனால் நடுமவர் கேலி கலந்த புன்னகையுடன் மீண்டும் இல்லாத தள்ளுவண்டியில் இருந்து சீரிய முறையில் கன்றை இருகைகளால் ஏந்தி மூன்றாமவரைப் பார்த்து அகன்ற உதடுகளால் புன்னகைக்கிறார்.

நம்மவர் பொறுமையிழந்து கொண்டுவந்த நிஜ மண்ணை நிஜமான குழியில் நிஜமாகவே கொட்டுகிறார். காமன் சென்ஸ் உள்ள எந்த ஒரு மனிதரும் மூன்றாமவன் செய்தது சரியே என வாதிடுவர்.

பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் தான் “ஏம்பா. உனக்குத்தான் ஆயிரம் வேலை இருக்க. அவனுக்கு கிறுக்கு சரியாவத்தண்டியும் வேற வேலயப் பாத்துட்டு வர வேண்டியது தானே. அதுக்காவ வெறும் குழியில மண்ணள்ளி போடுறது எந்த விஷயத்தில நியாயமாவும்.”. இப்படிச் சொல்லி அவனை நிறுத்தப்பார்த்தான். மூன்றாமவர் எதையும் காதில்போட்டுக்கொள்ளாமல் ஒரு வேகத்தில் அன்று மொத்தம் இருநூற்றிப் பதினேழு குழிகளை மூடினான்.

இரண்டாமவரோ மேலும் நக்கல் பெருவெளியில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிட்டார். இரண்டு கைகளைத் தரையில் ஊன்றி கால்களை வான் நோக்கித் தூக்கி சிரசாசனம் செய்வது போல் நின்று மறுபக்கம் தரையிறங்கினார். விசிலடித்துக் கொண்டே மீண்டும் மீண்டும் இதையே செய்கிறார். ” உங்களுக்கு நான் தான் கிறுக்காடா. பைத்தியக்காரங்களா…இப்ப சொல்லுங்கடா.” என்ற உற்சாகக்குரலில் உச்சகட்ட நிலையை அடைந்தார்.

பள்ளி நிர்வாகம் மூன்றாமவரை என்ன செய்தது என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

நமக்கு இது போன்ற ஆட்களைப் பார்ப்பது இது ஒன்றும் புதிதல்ல. இவ்வகையினர் அரசு அலுவலகங்களில் குவிந்து கிடப்பர். பிசகுகளை உடனுக்குடன் கண்டு களைய பல அடுக்குகள் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

சீப்பியு அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மெமரியில் எழுதிவிட்டு சீப்பியுவிடம் சொல்லிவிடுவார்கள். அது ஒவ்வொரு வேலையாக எடுத்துச் செய்யும். தயார்படுத்தாத மெமரியில் என்னதான் எழுதினாலும் சூன்யமே மிஞ்சும். ஒன்றும் தங்காது. சூடாகாத தோசைக்கல்லில் மாவு ஊற்றி தோசை சுடமுடியுமா என்ன?

பக்குவப்படாத மெமரியில் சீப்பியு பண்ண வேண்டிய வேலைகளை எழுதிவிட்டு செய் என்று சொன்னதால் சீப்பியு தடம் தவறிய பந்தயக்கார் போல் எங்கெங்கோ போய் முட்டி மோதி நின்றது.

இதைக்கண்டு தான் சீலன் குமுறிக்கொண்டிருந்தான். எங்க வீட்டு வளத்தம்மா பள்ளிக்கூடமே போனது கிடையாது. ஆனா முதல் முறை மாவை ஊற்றுமுன் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து கல் சூடாகிவிட்டதா என்று பார்த்துத்தான் தோசை சுடும்.

சுவரில் அந்த வாரம் முடிக்கவேண்டிய வேலைகளைப் பட்டியலிட்ட ஒரு தாள் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் சீப்பியு முட்டி மோதி குப்புறப் படுப்பதை தவிர்க்க வேண்டுதல் என்று ஒரு குறிப்பு இருந்தது.

தடுப்புக்கு அந்தப்புறம் இருந்து பிரகாஷ் சீலனிடம் முகம் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தான்.

“இதே தப்பு இங்க நடந்திருந்தா உண்டு இல்லைன்னு நம்மள ஆக்கிருப்பானுக.”

“டேய் நீ அடிமைடா. அவனுக எங்க இருக்கானுக. நீ எங்க இருக்க.”

“அதெல்லாம் சரி. இத எப்படி சரி பண்ணுவாங்க. நம்மளத் தான ராவும் பகலும் படுத்தி எடுப்பானுக.”

“நீ தப்புங்கிற. அவனுக இத எப்படி சொல்றாங்கன்னு பாரு. “.

ரகசியமாகப் பேச வேண்டிய தலைப்பு என கிசுகிசுத்துப் பேசவில்லை. புதிதாய் அலுவலகத்தில் இணைந்தோருக்கு ஒரு அவநம்பிக்கை ஏற்படும் எனவும் யோசித்த மாதிரி தெரியவில்லை. உயர் பதவியில் இருக்கும் நாம் இப்படி பேசினால் வேலை எப்படி நடக்கும் என எண்ணி பூசிமெழுகவில்லை. இல்லை வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள் என்று பயப்படவும் இல்லை. பதவி உயர்வுக்காக எந்தப் பாசாங்கையும் காண்பிக்கவில்லை.

சீலன் எதிர்பார்த்தபடி காலையில் மேபேனில் உள்ள பரசுராமனிடம் இருந்து மெயில் வந்தது. இந்த புரோகிராம் பலமுறை சரிபார்க்கப்பட்டிருக்கிறது. மேலும் நூற்றுக்கணக்கான கஸ்டமர் இதை வாங்கி பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். எனவே தவறு நடக்க வாய்ப்பில்லை. சீப்பியு எங்காவது முட்டி மோதியிருந்தால் அதற்கான சாட்சியங்களை அளிக்கவும் என்ற பதில்.

சீலன் உட்கார்ந்து தேவையான தஸ்தாவேஜ்களை இணைத்து அனுப்பினான். சுக்குநூறாக கிடந்த கணிணியின் கருப்புப்பெட்டியைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றினுள் இருந்த டேட்டாவை அனுப்பினான். இப்போதும் பரசுராமன் நம்பமாட்டான். வேறு ஏதாவது காரணம் சொல்லுவான் என நம்பியிருந்தான்.

கருப்புப்பெட்டியை பிரித்து மேய்ந்த பிறகு அனுப்பிய பதில் இது.

“மெமரியை ஆயத்தப்படுத்த தேவையானவை செய்யப்பட்டன. பின்னர் போதுமான நேரம் காத்திருந்த பின்னரே சீப்பியு செய்யவேண்டிய வேலைகள் எழுதப்பட்டது. அதற்குள் மெமரி எழுதத் தகுதி அடையாததற்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது.

உங்கள் மொழியில் சொல்வதாக இருந்தால் அடுப்பை பற்றவைத்து மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே மாவு ஊற்றப்பட்டது. தோசைக்கல் சூடாகாததற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. “

சீலன் ஓங்கி மேசையில் அறைந்தான். பிரகாஷ் சொன்ன மாதிரி கைடு ஒன்றை அனுப்பிவித்து தவறு நடக்க வாய்ப்புகள் உள்ள இடங்களில் முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்ற விதிமுறையைக் காட்டி இந்த தவறைத் தவிர்க்கும் வழிகளையும் கூறி அடுத்த மெயில் ஒன்றை அனுப்பினான்.

மறுநாள் மீண்டும் பரசுராமனிடம் இருந்து அதே தொனியில் மெயில் வந்தது. பரசுராமன் மேபேனில் உள்ள தலைமையகத்தில் வேலை செய்கிறான். மேபேன் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் இருக்கிறது. மெமரியின் ஸ்பெசிபிகேஷன் என்று ஒரு முந்நூறு பக்க டாகுமெண்ட் ஒன்றை இணைத்து 164 ஆம் பக்கத்தைப் பார்க்குமாறு கேட்டிருந்தான். ஆயத்தக் கட்டளைகள் அனுப்பியபின் 300 நேனோ நொடிக்குள் மெமரி தயாராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 300 தான் தேவையெனினும் 600 நேனோ நொடிகள் காத்திருப்பதாகக் கூறியிருந்தான். மெமரியின் தகுதி சரியில்லை என்று அங்கு எழுதாமல் விட்டு வேறு வேலைகளைத் தொடர்ந்தால் மெமரியின் இந்தப் பிரச்சினை கண்டுகொள்ளாமல் போய்விடும். மேலும் இந்த புரோகிராம் இருக்கும் லட்சோப லட்ச கம்ப்யூட்டர்கள் பிரச்சினை இல்லாமல் இயங்குகின்றன. ஆகையால் இதில் மறுசிந்தனைக்கு வாய்ப்பே இல்லை என்று பதில் வந்திருந்தது.

மெமரியை பதப்படுத்த தேவையான கமாண்ட் அனுப்பியபின் 600 நேனோ செகன்டிற்கு பதிலாக 1000 நேனோ செகன்ட் காத்திருந்து பாருங்கள். அப்போதும் விபத்து ஏற்பட்டால் 2000 நேனோ செகன்ட் வரை காத்திருந்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்று கவனியுங்கள் என்று ஒரு அறிவுரையும் வந்திருந்தது.

சீலனுக்கு இதைக் கண்டுபிடித்த கஸ்டமருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. எல்லா கம்ப்யூட்டரிலும் பிரச்சினை இல்லாமல் இயங்குவதால் பிரச்சினை இல்லை என முடிவுக்கு வரமுடியுமா என்ன? செய்நேர்த்தி​ என்பதை யாரும் பொருட்படுத்திய மாதிரி தெரியவில்லை. காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது.

முட்டாள் தனமான பதிலொன்றையும் அலுவலகத்திற்கு வெளியே யாருக்கும் அனுப்புவதில் சீலனுக்கு சம்மதமில்லை. டீமுக்குள் சர்வசாதாரணமாக அம்மணமாகத் திரியும் சீலனால் கஸ்டமரிடம் அப்படி இருக்கமுடியவில்லை. வளர்ப்பு அப்படி. வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப காலத்தில் கொரியாவில் சீயோலில் இருக்கும் அலுவலகக் கிளையில் ஒரு நான்கு வருடங்கள் வேலைபார்த்திருந்தான். அங்கு அவனுடைய மேலதிகாரி வில்லியம் கிம். வில்லியம் என்பது மேற்கு உலகத்திற்காக சூட்டப்பட்ட பெயர். உண்மையான கொரியப் பெயர் மற்ற கிளை அலுவலகத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. கஸ்டமர் என்பவர் கடவுளுக்கு சமமானவர் என்பதே அவரின் கோட்பாடு. அவர் மட்டுமல்ல அந்த நாட்டின் பெரும்பாலான சிந்தனை அதுதான்.

கஸ்டமர் திங்கட்கிழமைக்குள் வேலை முடிந்தாகவேண்டும் என்று சொன்னால் சீலனிடம் அந்த வேலைக்கு அதிகமான முக்கியம் கொடுத்து செய்யச்சொல்வார். வேலை முடியவில்லை என்றால் வெள்ளி இரவில் தொடங்கி வேலை முடியும் வரை சீலனை இரவும் பகலுமாக அலுவலகத்தில் அருகில் இருந்தே வேலை வாங்குவார். சில நேரங்களில் திங்கட்கிழமை அதிகாலை வரையும் வேலை நடந்திருக்கிறது. பீட்சா, டோவ்நட் என கடைகளில் இருந்து ஏதாவது வந்து கொண்டேயிருக்கும்.

ஒருமுறை பெரும் செல்வாக்கு கொண்ட ஒரு கஸ்டமர் டீமிற்கு பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார். சீலன் அவர்களோட வேலை செய்வதால் அவனையும் அழைத்துச் சென்றிருந்தார். அந்த விருந்தின் முடிவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். விளையாட்டிடத்திற்குச் செல்லும் முன் சீலனைத் தனியே கூப்பிட்டு நீ விளையாட்டில் தோற்க வேண்டும். ஜெயிக்கிற மாதிரி விளையாடாதே என்று கிசுகிசுத்தார். முன்பு வில்லியத்துடன் விளையாடி பல முறை ஜெயித்த சீலன் அன்றிரவு மோசமாக விளையாடி கஸ்டமர் அணியை ஜெயிக்கவைத்தான்.

ஒரு சனிக்கிழமை நள்ளிரவு. வில்லியமும் சீலனும் மட்டும் தான் அலுவலகத்தில் இருக்கிறார்கள். பன்னிரன்டு மாடிக் கட்டடம். ஒன்பதாவது மாடியில் ஒரு சிறு அலுவலகம். 2500 சதுர அடிதான் மொத்தமே. வில்லியம் அலுவலகத்திற்குள் கோல்ப் ஆடிக்கொண்டிருக்கிறார். சீலன் கஸ்டமர் சொன்ன பிசகைத் திருத்தியிருப்பதாகச் சொல்கிறான். வில்லியம் பிசகைப் பற்றியும் சீலன் சொல்லும் தீர்வையும் பல கேள்விகள் கேட்டுத் துளைக்கிறார். சீலனுக்கு அவன் பரிந்துரைத்த தீர்வைப் பற்றிய ஒரு ஆழ்ந்த புரிதல் இல்லாததால் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தடுமாறுகிறான். நகர முடியாமல் முடங்கிக் கிடக்கும் கடிகாரத்தின் மீது தண்ணீர் தெளித்த பின் சரியான வேகத்தில் ஓட ஆரம்பித்தது போல் தீர்வு இருக்கிறது. அவர் அந்த தீர்வையும் ஏற்காமல் மீண்டும் வேலை பார்க்கச் சொல்லுகிறார். அவருக்கு புரியவில்லை என இவனுக்கு கோவம். அடுத்த அரைமணிநேரத்தில் வேறொரு தீர்வோட செல்லுகிறான். அவரோ பிரச்சினைக்கும் விடைக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார். இதற்கு மேல் வேலை பார்க்கமாட்டேன் என்கிறான். காரசாரமான விவாதம் ஆரம்பித்து கைகலப்பிற்கு வரை சென்றுவிடுகிறது. கோல்ப் மட்டையும் வேக்கம் கிளீனரும் முட்டி மோதுகிறது. வில்லியத்தின் முகம் ஸ்ட்ராபெர்ரி பழம் போல் சிவக்கிறது. ஒருவர் மேல் ஒருவர் உட்கார்ந்து புரள்கிறார்கள். சென்னை அலுவலகத்தின் அறிவுரையின்படி சீலன் ஒரு வாரம் அலுவலகம் செல்லாமல் வீட்டிலே உட்கார்ந்தான். ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் வில்லியம் தொலைபேசியில் அழைத்து சீலனுக்கு பிடித்த பீட்சா கடைக்கு அழைத்துச்செல்கிறார். சமாதானப் பேச்சு பேசி அலுவலகம் அழைத்துச் செல்கிறார். சீலனும் வில்லியமும் மெதுமெதுவாக நட்பு பாராட்ட ஆரம்பித்துவிட்டனர். முதலில் சீலனைப் பார்த்து தலையில் எண்ணெய் வைத்து செல்லும் நாட்களில் “ஒரே இந்திய வாடை வருது. கிட்ட வராதே” ன்னு சொல்லுவார். பின்னாளில் சீலன் வில்லியம் அருகே வரும்போது “ஒரே கிம்ச்சி வாடை. தூரப்போங்கள்” என்று மூக்கைப் பொத்துவான்.

சீலன் தனிப்பட்ட முறையில் கஸ்டமர் அணியில் இருக்கும் ஒரு மேலாளரிடம் நட்பு கொண்டிருந்தான். அந்த மேலாளர் உலகத்திலேயே தலைசிறந்து விளங்கும் அவர்கள் நாட்டின் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார். அவருக்கு மற்றக் கலாச்சாரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம். மேலும் ஆங்கிலம் பேசிப் பழகவும் ஆசை. ஆகையால் ஒரு நாள் வேலைக்கு வெளியே சீலனை சந்திக்க நேரம் கேட்டார். சீலனும் உடனே இதைப்பற்றி வில்லியத்திடம் சொன்னான். வில்லியம் மிகவும் ஆடம்பரமான கொரிய உணவகத்தை பரிந்துரைத்து அனைத்து செலவுகளையும் அலுவலகம் ஏற்கும் என்றார். சீலன் இது தனிப்பட்ட உறவு என்று மீண்டும் சொன்னபோதிலும் வில்லியம் பரவாயில்லை, அலுவலகம் பார்த்துக்கொள்ளும் என்றார்.

அந்த மேலாளருக்குப் பிடித்த சம்கியோப்சல். சுட்ட பன்றிக் கறியை சாஸுடன் ஒரு இலையில் சுருட்டி சாப்பிட்டார்கள். சோஜுவும் சம்கியோப்சலும் சரியான இணை. சோஜுவைப் போல் போதையேற்றும் வேறு எந்த மதுவையும் அவன் அருந்தியதே கிடையாது. சாப்பிட்ட பின் அருகிலிருந்த நோரேபாங். இரண்டு அழகிய பதின்ம வயதுப் பெண்களை தங்களுடன் பாடுவதற்கு வரவழைத்திருந்தனர். மார்புக்கற்றையொன்றும் பிகினி ஒன்றும் மட்டுமே ஆடைகள். அரைகுறை வெளிச்சத்தில் வெற்றுடற்கள் தளதளத்ததன. சீலன் பலமுறை வில்லியத்துடன் நோரேபாங் சென்றிருந்தாலும், இந்த மேலாளருடன் அங்கு இருப்பதை முதலில் கூச்சமாகவே உணர்ந்தான். இரண்டு பாடல்களும் கொஞ்சம் பியரும் கழிந்த பின் சகஜநிலைக்கு வந்தான். வந்த பெண்கள் மாற்றி மாற்றிப் பாடிக்கொண்டிருந்தனர். சீலன் ஏதோ மறந்துவைத்ததைத் தேடுவதைப்போல் அருகில் இருந்தவளின் மிச்சமிருந்த மேல் ஆடைக்குள் தேடிக்கொண்டிருந்தான். எதிர் இருக்கையில் மேலாளரும் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தார். பெண்கள் சீலனின் வேண்டுகோளின் படி “வெல்கம் டூ தி ஹோட்டல் கலிஃபோர்னியா” என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆடைகளை நீக்கக் கூடாது என்பது நிறுவனத்தின் விதிமுறையாதலால் அந்த நான்கு துணிகளும் உடலோடு ஒட்டியிருந்தது. பெண்களும் ஆண்களும் மாற்றி மாற்றிப் பாடினர். ஓய்வெடுக்கும்போது மொடக்கு மொடக்காக பியர் குடித்தனர். பெண்கள் குடித்த அந்த நான்கு பாட்டிலுக்கு மட்டும் மும்மடங்கு விலை. அவ்வளவு சிறப்பான பியர் ஒன்றும் கிடையாது. வந்த விருந்தினர் குடித்தால் ஒரு விலை. அதே பியரை நிறுவனம் அனுப்பிய பெண் குடித்தால் வேறு விலை.

சீலன் அவனுக்கு அனுப்பப்பட்ட பெண்ணிடம் ஏன் அந்த லிப்ஸ்டிக் இனிக்கிறது என்று கேட்க அவளோ அந்த இரைச்சலில் ஏதோ ஒரு பதில் சொல்லி சிரித்து வைத்தாள்.

பாடிக் களைத்த பின் பெண்களை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த லவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இரு அறைகளும் அருகருகே இருந்தது. இரண்டு இணைகளும் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் கீழ்த்தளத்தில் கூடினர். எதுவுமே நடக்காத மாதிரி பேசிச் சிரித்தனர். முடிவில் பெண்கள் விடைபெற்று அவர்களின் நிறுவனத்திற்குத் திரும்பினர்.

மேலும் சில பியர் பாட்டில்களை வாங்கி சீலனின் வீட்டுக்கு வந்தடைந்தனர். தொலைக்காட்சியில் நிர்வாணப்படம் ஓட இவர்கள் வாங்கி வந்த பியரை மெதுமெதுவாக இறக்கிக்கொண்டிருந்தனர். . பேசிக்கொண்டேயிருக்கும்போது மெதுமெதுவாக சாய்ந்து பின் அப்படியே மேலாளர் தூங்கிவிட்டார். அப்போது தான் வில்லியம் சொன்னது ஞாபகம் வந்தது. சாப்பிடும்போது மேபேனிலிருந்து அடுத்து வரப்போகும் சாப்ட்வேர்களைப் பற்றியும் நமது கம்பெனியை வேலைக்கு வைத்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதையும் எடுத்து சொல்லச்சொன்னார் . ஆனால் அவனையும் தூக்கம் விட்டுவைக்கவில்லை. மறுநாள் காலையில் சீலன் எழுந்துபார்க்கும்போது மேலாளரைக் காணவில்லை.

சாப்பாட்டு ரசீதிலிருந்து கடைசியாக வாங்கின பியர் போத்தல்களுக்குரிய ரசீது வரை நோரேபாங் செலவு உட்பட அனைத்தையும் அலுவலகக் கணக்கரிடம் கொடுத்தான். அந்தப் பெண்ணோ அனைத்தையும் வாங்கிவைத்துக் கொண்டு ஒரு இலேசான புன்னகையை உதிர்த்தாள்.

வில்லியம் அடிக்கடி சொல்லும் கஸ்டமர் என்பவர் கடவுள் மாதிரி என்பதன் பொருள் புரிந்தது. சீலனின் இந்த அனுபவங்கள் தான் கஸ்டமர் என்ற வார்த்தைக்கு புனிதங்களை அள்ளிப் பூசியிருந்தது.

முலாம் பூசிய பதிலையும் அனுப்ப மனமில்லை. போரின் முதல்வரிசையில் இருந்து நசுக்கப்படும் காலாட்படை போன்றது சீலனின் டீம். கஸ்டமரின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லும் பொறுப்பு அவர்களுடையது. அவன் கேட்பதெல்லாம் ஒன்றே. மெமரியில் எழுத ஆரம்பிக்கும் முன் ஒருமுறை எழுதி மீண்டும் வாசித்து பார்க்கலாம். அல்லது வேறு வழியில் மெமரி எழுதுவதற்கு பதமாகிவிட்டதா என்பதை சோதித்த பின்னரே எழுதத் தொடங்கலாம். இந்த ஆலோசனையை பரசுராமிற்கு அனுப்பலாம் என்று முடிவுக்கு வந்தான்.

ஆனால் அதற்கும் திருப்திகரமான பதில் வரவில்லை. மீண்டும் அந்த முந்நூறு பக்க டாகுமெண்ட்டைச் சேர்த்து இதன்படிதான் புரோகிராம் எழுதப்பட்டிருக்கிறது என்றான்.

மேபேனில் ஏன் இதை யாரும் புரிந்து கொள்ளமாட்டுகிறார்கள்? வெறும் முட்டாள்தனம் போல் தோன்றுகிறது. அதிகாரத்திற்கு அருகில் இருப்பதால் வரும் மமதையா? நிறைய முட்டாள்தனம் இருந்தாலும் அதைவிட ஒருகைப்பிடி விசுவாசம் அதிகமாக இருப்பதால் தான் அவன் மேபேனில் இருக்கிறான். நான் சென்னையில் இருக்கிறேன். வேலை கொடுப்பவரின் மீது விசுவாசம் நல்லதா? வேலையின் மீதான விசுவாசம் நல்லதா? இந்த விஷயத்தில் கடைசி வாய்ப்பு வரை பயன்படுத்தியே ஆகவேண்டும். நான் நினைப்பது சரி என்பதை முடிந்தவரை சொல்லிப் பார்ப்போம். பரசுராமின் மேனஜர் பார்த்திபனுக்கு தனியே மெயில் அனுப்பலாம் என்று முடிவுசெய்தான்.

நமது கம்பெனி உலகிலுள்ள அநேக கம்ப்யூட்டரில் இருக்கும் முக்கியமான ஒரு பகுதி. கையகக்கணிணியிலிருந்து மிகவும் சக்திவாய்ந்த செர்வர் வரை யாவற்றிலும் நாம் எழுதிய சாப்ட்வேர் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறோம். உயிர்காக்கும் மருத்துவமனை அறைகள், ராக்கெட் அனுப்பும் விண்வெளி மையங்கள், தானியங்கி கார்கள், ராணுவ நிலையங்கள் என அதிமுக்கியமான இடங்களில் நமது புரோகிராம் வேலை செய்துகொண்டிருக்கிறது.

அதனால் நாம் எழுதும் புரோகிராம் மிகவும் கவனத்துடன் எழுதப்பட வேண்டும். மேற்சொன்ன இடங்களில் ஓடிக்கொண்டிருக்கும் கணிணி நமது புரோகிராமால் என்றாவது ஒருநாள் கவிழ்ந்தடித்து வீழ்ந்தால் என்னவாகும் என நினைத்துப்பாருங்கள்.

அப்படி ஒரு சம்பவத்தைத் தான் இந்த கஸ்டமர் பார்த்திருக்கிறார். இதை நம்மிடம் வந்து சொல்வதை நல்ல விஷயமாகக் கருதி நாம் இதை சரி செய்ய முயல வேண்டும். பிரச்சினை பார்த்தோம் என்று வெறுமனே நம்மை எகிறாமல் கஸ்டமர் சரியாக எந்த இடத்தில் இது நடக்கிறது என்பதை ஆய்ந்து பிரச்சினைக்கு ஒரு தீர்வும் கொடுத்து இதை பரீசீலிக்கும்படி கேட்டும் இருக்கிறார்.

இப்படி நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கண்டுபிடிக்க உதவும் சாப்ட்வேர்களை ஒவ்வொரு கம்பெனியும் மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்குகிறார்கள். நாமும் இது மாதிரி சாப்ட்வேர் வேண்டும் என்று நிர்வாகத்திடம் நீண்ட நாட்கள் கோரிக்கை வைத்து தவமிருந்து வாங்கியுள்ளோம்.

இந்த சாப்ட்வேரிடம் நம்ம புரோகிராமைக் கொடுத்தால் எங்கெல்லாம் முட்டி சிதறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று ஒரு அறிக்கையைத் தருகிறது. பிரச்சினை என்னவென்றால் அது மாதிரி சாப்ட்வேர் எல்லாம் நூற்றுக்கணக்கான இடங்களை அடையாளம் காண்பிக்கிறது. அவற்றில் ஒன்றிரண்டு தான் உண்மையான பிரச்சினைகளாக இருக்க வாய்ப்புகள் உண்டு. சிப்பிக்குவியலில் முத்துச்சிப்பியைத் தேடிக் களைத்து நாளடைவில் முத்தைக் கண்டுபிடிக்கும் முனைப்பை இழந்தது போன்று நமது என்ஜினியர்கள் இந்த அறிக்கையை பார்த்து இது எல்லாம் போலி எச்சரிக்கை என்று சொல்லி எளிதாக ஃபைலை மூடிவிடுகிறார்கள்.

அப்படி நடந்ததை கஸ்டமர் சாட்சியுடன் கூறினாலும் ஏதோ காரணங்களைச் சொல்லித் தப்பிக்க பார்க்கிறோம்.

இப்படி ஒரு முன்னுரை எழுதி நடந்த பிரச்சினையை எழுதியிருந்தான். வந்த பதிலோ எதிர்பார்த்த மாதிரி இல்லை.

“ஒவ்வொரு முறையும் நமது புரோகிராமில் ஏதாவது மாற்றம் செய்யும்போது வேறு எங்கெங்கோ உடைப்பு ஏற்படுகிறது. ஒரு கஸ்டமர் பிரச்சினையை சரிசெய்யப் போனால் இன்னொரு கஸ்டமருக்கு அது புதுப் பிரச்சினையை உண்டுபண்ணுகிறது. மெமரியின் வரையறுப்பு ஒரு பெரிய சாகரம். ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு மாதிரி புரிந்துகொள்கிறார்கள். பரசுராம் தன்னெதிரே உள்ள அணைக்கட்டுச் சுவரின் உள்ள பொத்தல்களை ஓராளாக நின்று அடைக்கிறான். வலது கை மேல்பக்கத்தில் தலைக்கு மேலிருக்கும் உடைப்பை அடைக்கிறது. இடது கை முழங்காற்பக்கம் பிய்த்துக் கொண்டு வரும் ஓட்டையை அடைக்கிறது. இரண்டு கால்களும் அடிவயிறும் ஏதோ ஒன்றை தடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த சுவற்றில் வேறு ஏதாவது வேலை செய்து இன்னும் பிரச்சினையை உண்டாக்க விரும்பவில்லை. ஆகையால்தான் மிகவும் அத்தியாவசியமான மாற்றங்களை மட்டும் கணக்கில் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். “

இந்தப் பதிலைப் பார்த்து சீலனுக்கு ரௌத்திரம் எகிறியது. இன்டஸ்டிரியில் பழம் தின்று கொட்டைபோட்ட அறிவுஜீவிகள் ஒன்று கூடி வரையறுத்து பலமுறை மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்பட்ட ஒரு ஸ்பெசிபிகேஷனை வெறும் கலைடாஸ்கோப் என்று சொல்லிக் கடப்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம். ஐயமிருந்தால் அதை எழுதிய குழுவை அனுகுவது ஒன்றும் பெரும்பாடாக இருக்காது. அதிபாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய கூர்மையான புத்திசாலித்தனங்கள் நிறைந்த திட்டங்களைவிட முட்டாள்தனம் நிறைந்த விசுவாசம் போதும். மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய சாப்ட்வேர் சொன்னாலும் சரி கஸ்டமர் கதறினாலும் சரி. பிரச்சினையே இல்லை என்று மூடி மறைக்க மேனஜரும் உதவுகிறார். நான் மேனஜராக இருந்தால் இதே ஸ்பெசிபிகேஷனைப் பார்த்து எழுதிய மற்ற சாப்ட்வேர்களில் ஏன் இந்தப் பிரச்சினை இல்லை என்று கேட்டிருப்பேன். ஏன் நமது கம்பெனி சாப்ட்வேர் மட்டும் இந்தப் பிரச்சினை செய்கிறது? சீலன் மனத்திற்குள் இந்தக் கேள்விகள் அமைதியடைந்ததுபோல் தெரியவில்லை.

போயிங் விமானம் முட்டி மோதி முந்நூறு உயிர்களுக்கு மேல் உறிஞ்சியதற்கு ஒரு சாப்ட்வேரின் சிறு பிழை தான் காரணமாக இருந்ததாம். இதற்குப் பின்னாலும் கவனக்குறைவைத் தான்டி விசுவாசமும் எங்கோ ஒரு அதிகாரச் சங்கிலியின் கண்ணியில் இருந்திருக்கக் கூடும். மேபேனில் உள்ள நண்பன் மதனிற்கு ஒரு போன் போட்டான். பெயர் தான் அமெரிக்கக் கம்பெனி. வேலைபார்ப்பது எல்லாம் பெரும்பான்மையான தமிழ் மக்கள், கொஞ்சம் தெலுங்கு பேசும் மக்கள். மிகச் சிறிய அளவில் வடமாநிலத்தவர்கள். கம்பெனியை ஆரம்பித்தது ஒரு திருநெல்வேலிக்காரர்தான்.

சீலனை ” உங்க நண்பர் தான. ஒரு போன் போட்டு பேசிடலாம். இதுக்கு போய் ஏன் இவ்வளவு சுத்தி போற? ” என மதன் சீண்டினான்.

“பிரண்ட் அப்படிங்கிறதால தான் இந்தக் கோவம். ஒன்னும் பண்ணமுடியாதுன்னு தெரியுது. ஆனாலும் முட்டி மோதித்தான் பார்க்கணும்னு நினைக்கிறேன்.”

சீலன் மேபேனிற்கு ஒரு பிராஜெக்ட் சம்பந்தமான கலந்தாலாசோனைக்குச் சென்றிருந்தபோது பரசுராமன் வீட்டில் தான் தங்கியிருந்தான். இருவரும் சென்னையில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததாலும் ஒத்த வயதில் குழந்தைகள் இருந்தாலும் இரு குடும்பங்களும் நன்கு பழக்கம்.

பரசுராமன் சீலனை மேபேனிலிருந்து நான்கு மணிநேர தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்திற்கு காரில் அழைத்துச்சென்றான். சீலன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். அது ஒரு இலையுதிர்காலம். மலை மீது தான் அந்தக் கோயில் கட்டப்டட்டிருந்தது.

சிவப்பு, பழுப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் மாயம் காட்டும் இலைகளை அந்த மலைச்சரிவில் பார்த்தனர். செங்கல் சூளையில் இருந்து புதிதாய் வெளிவந்த செங்கல், மழையிலும் வெயிலிலும் நனைந்து காய்ந்த பழைய செங்கல், ஆண்டாள் கோயில் குங்குமம், மாரியம்மன் கோயில் குங்குமம், ஆஞ்சநேயர் கோயில் செந்தூரம், முருகன் கோயில் சந்தனம், பீட்ரூட் தோல், வெட்டிவைத்த பீட்ரூட் துண்டுகள் , பாதி பழுத்த மாம்பழத்தின் தோல், நன்கு பழுத்த வாழைப்பழத்தின் தோல், சுவர்ணக் குவியல், வைக்கோல், பாசிப்பச்சை என பல்வேறு நிறங்களில் கோயிலின் பின்புறம் இலையுதிர் கால மரங்கள்.

குங்குமங்களையும், சந்தனத்தையும் தனியாகவும் வெவ்வேறு விகிதங்களிலும் கலந்து வாறியிரைத்த தோற்றம். சீலன் பிரமித்து நிறைய புகைப்படங்கள் எடுத்தான். சாமி தரிசனம் முடிந்த பின் வீட்டிற்கு கொண்டு செல்ல விபூதி எடுத்துக் கொண்டான்.

மதன் சொன்ன செய்திகளின் தொகுப்புகளாவது.

“பரசுராமனுக்கு எக்கச்சக்கம் வேலை கொடுத்துருக்காங்க. கம்பெனியின் நிறைய முக்கியமான பிராஜெக்ட்ல எல்லாத்திலயும் அவன தள்ளிவிட்டுருக்காங்க. மூச்சு விட நேரம் கிடயாது. அவனும் பாதி வேலய இந்தியாவுக்கு கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம். ஆனா அவனோ எல்லா வேலயையும் அவன் கட்டுப்பாட்டுல வச்சிருக்கான். என்ன காரணமோ தெரியல.

பார்த்திபனோட மேனஜர் தெரியும் இல்லையா? . ரகு. ஒருநா‌ள் பார்த்திபன் மீட்டிங் நடத்திட்டு இருக்கார். ரகு வந்து கதவைத் தட்டினார். உடனே பார்த்திபன் மீட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு கிளம்புறாரு. எங்க தெரியுமா? ரகுவ ஏர்போர்ட்ல கொண்டுவிடுறதக்கு. உபர்ல போகலாம். டாக்ஸி சொன்னா வந்து கூப்பிட்டு போவாங்க. இதெல்லாம் விட்டு விட்டு மீட்டிங்ல இருக்க ஆளக் கூப்பிட்டு போறாரு. பார்த்திபனும் தலையாட்டிட்டு கிளம்பிட்டார்.

சாருவோட ராஸலீலா வாசிச்சா தெரியும். போஸ்டல் டைரக்டர், அசிஸ்டெண்ட் டைரக்டர்னு அவங்க போட்ட அட்டூழியத்தை எழுதியிருப்பார். அவங்க பசங்க எல்லாம் இங்க வந்த மாதிரி இருக்கு.

பயபக்தி அப்படியே செயின்ல கீழ இருந்து மேல வர ஊர்ந்து போறமாதிரி இருக்கு. இந்த பக்தி இல்லாதவங்க ஓரமா நின்னு முனுமுனுக்க வேண்டியதுதான். அவனுக குழந்தைகளுக்குக் கூட விசுவாசத்தைத் தான் சொல்லிக்கொடுக்கிறாங்க.

ரகுவோட பொன்னு கல்யாணத்துக்கு வர்ற விருந்தாளிகள ஏர்போர்ட்ல இருந்து மண்டபத்துக்கு கொண்டு போய்விட்டது பார்த்திபனும் பரசுராமனும் தான். வரது போறதுனு காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் ஒரே சண்டிங் தான்.

பரசுராமன் அமெரிக்கா வந்த புதிதில் ரகுவின் வீட்டில் தான் தங்கியிருந்தான். வீட்டின் ஓரு அறையை அவனுக்காக ஒதுக்கிக்கொடுத்திருந்தார். நாங்கள் ஆபிஸ் பக்கத்திலிருந்த ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தோம். ஒரு ஒப்புமைக்காக எவ்வளவு வாடகை என்று பரசுவிடம் கேட்டபோது ரகு யாரிடமும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார் என்றான். சமையல் பாத்திரங்களும் புதுசா எதுவும் வாங்கவில்லை. அவர் வீட்டில் இருந்த பழைய பாத்திரங்களை இவனிடம் கொடுத்திருந்தார். இவனும் வெஜிட்டேரியன் என்பதால் பழுதில்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு முறை பரசு இந்தியா சென்று வரும்போதெல்லாம் பார்த்திபனும் ரகுவும் சேர்ந்து ஒரு பெட்டியை பேசி வைத்துக் கொள்வார்கள். மைசூர் பாகு, தோசைக்கல், கோங்குரா சட்டினி, மனைவியின் உள்ளாடைகள், குழந்தைகளுக்கு தேவையான சில புத்தகங்கள், மாதாந்திர காலென்டர், அரைத்த மிளகாய் தூள், சாம்பார் பொடி என பல விதமான பொருட்கள் வரும்.

இவனுகளுக்கு கீழே வேல பார்க்குற வெள்ளைக்காரங்களும் புலம்பித்தள்ளுறாங்க. இருக்கதிலேயே சுகம் இந்த ஊர்க்காரங்கட்ட ரிப்போர்ட் பண்றது. எந்த வித நொசநொசப்பும் கிடயாது. லேப்டாப் வேணும்னா உடனே அப்புரூவல் கிடைக்கும். வேல முடியுதோ இல்லையோ எட்டு மணி நேரத்துக்கு மேல எதிர்பாக்க மாட்டாங்க. எந்தக் காரணத்தால வேல சுனங்குதுன்னு சொன்னாப் போதும். அவங்களும் எட்டு மணி நேரத்துக்கு மேல வேல பாக்கமாட்டாங்க. சின்ன சின்ன வேலையில எல்லாம் மூக்கை நுழைக்க மாட்டாங்க. நிர்வாகம் என்ன சொல்லுதோ அதை அப்படியே வந்து சொல்லுவாங்க. பூச்சு மெழுக்கல் எதுவுமே கிடையாது. ராவும் பகலுமா சனியும் ஞாயிறும் வேலை பார்த்து தான் முடிக்கனும்கிறதெல்லாம் நம்பிக்கை கிடையாது. கஸ்டமர் தர்ற காசு எட்டு மணி நேரத்துக்குத்தான். தட்டுக்கே சாப்பாடு பிந்தி வந்திருக்கிறது. அதற்காக நாம் ஒன்றும் வேகமாக சாப்பிட்டு சீக்கிரமாக முடிக்க வேண்டும் என தேவையில்லை. அவசரப்படுத்தமாட்டார்கள். அவங்க தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ரொம்ப சொல்லிக்க மாட்டாங்க. நம்ம தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்தக் கேள்வியும் கேட்கமாட்டாங்க.

நம்ம ஆளுங்க அடிக்கிற கூத்து இருக்கே. அப்ரூவலுக்குப் போறப்ப மாசக்கணக்கா காக்க வைக்கிறது. கூஜாக்களுக்கு தனி வரிசை. அப்ரூவல் கேட்ட மெயிலுக்கு பதில் இருக்காது. போன் பண்ணி வேற கேக்கனும். அவங்க வச்சதுதான் சட்டம்.

டேனியல் நம்ம ஆபிஸோட கொலராடோ பிராஞ்ச்ல வேலை பாக்குறாரு. பார்த்திபன் ஒரு நாள் மீட்டிங் நடத்திக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு விஷயம் தேவைப்பட்டது. உடனே டேனியலுக்கு போன் போட்டாரு. இப்ப பேச நேரமிருக்கான்னு கேட்கல. போனை எடுத்த உடனே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டார். ஒரு கேள்விக்கு நான் சாப்பிட்டுட்டு இருக்கேன், பிறகு சொல்லட்டுமான்னு டேனியல் பதில் சொல்றாரு. அப்பவும் விடல. மறுபடியும் நிறுத்தாம கேள்வி கேக்குறாரு.

எரிக் தெரியும்னு நினைக்கிறேன். அவரு ரகுவிடம் தான் ரிப்போர்ட் பண்றார். அஞ்சு மணி நேரம் கூட வேல பாக்கமாட்டாரு. ஆபீஸ சுத்தி நடந்துட்டே இருப்பார். ரகுவால வேலை கொடுத்து எப்ப முடிப்பன்னு கேக்க முடியாது. எட்டு மணி நேரம் வேலை பாருன்னு சொல்ல முடியாது. அவரு அஞ்சு மணி நேரம் பாக்குற வேலையை நாமெல்லாம் நாலு நாள் பாத்தாலும் முடியாது. வேலை செம சுத்தம். எவனுக்கும் பயப்படமாட்டார். அதுதான் ஞானச்செறுக்கு. இது தான் வேணும்.

இதுக்கு அடுத்து ஒரு லெவல் இருக்கு. பால்னு ஒருத்தர் இருக்கார். அவரிடம் இது மாதிரி பிரச்சினையை கொண்டு போயிருந்தால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா. சீலன், நீ சொல்றது எனக்கு சரின்னு தோனுது. ஆனா என்னோட மேனஜர் இதை ஒத்துக்கமாட்டாரு. எதையும் அவசியம் இல்லாமல் மாத்தாதேன்னு பல முறை சொல்லிட்டாருன்னு தேங்காய் உடைக்கிற மாதிரி உடைச்சுடுவார்.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குணம் இருப்பது போல் ஒவ்வொரு டீமுக்கும் ஒரு குணம் உண்டு. சில டீம் மத்த டீமோட நல்ல ஒத்துழைப்பாங்க. சில டீம் முட்டிக்கிட்டு நிப்பாங்க. இது என் வேலை இல்ல உன் வேலைன்னு சொல்லுவாங்க. சில டீம் பொது நன்மையைக் கருதி வளைஞ்சுக் கொடுப்பாங்க. பெரும்பாலும் டீமோட குணம் அங்க இருக்க தலையைப் பொறுத்தது. அப்படித்தான் சில குணம் பரசுராமனிடம் ஒட்டியிருக்கு. அவன் வேலை நல்லாத்தான் பார்ப்பான். வளைந்து கொடுக்காதது அவங்க டீம் சொத்து அது.

பரசு பேணுகிற அந்த புரோகிராம் அவன் எழுதுனது கிடையாது. ஒரு டென்மார்க்காரர் எழுதுனது. அதைப் பார்த்தால் ஒன்னும் புரியாது. கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கும். படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் காணாமல் போய்விடுவோம். அவர் கம்பெனி விட்டுட்டு போறப்ப பரசுவின் கையில் வந்தது. மிகச் சொற்ப நாட்களே அவனுக்கு அந்த புரோகிராம் பற்றி சொல்லிக்கொடுக்கப்பட்டது. பரசு கைக்கு வந்த சிலநாட்களில் அவனுக்கு அந்த புரோகிராம் நன்கு பழக்கப்பட்டுவிட்டது. அந்த சக்கரவியூகத்தில் பல முறை புகுந்து எளிதில் வெளிவரக் கற்றுக்கொண்டான். அவனைத் தவிர வேறு யாரும் அந்தப் புரோகிராமைப் புரிந்து கொள்ள முடியாது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு நல்ல புரோகிராம் ஒரு நல்ல நாவல் படிக்கிற மாதிரி இருக்கவேண்டும். மர்மக்காடாக இருக்கக்கூடாது.

நாங்களும் அந்த புரோகிராமில் நிறைய பிரச்சினைகளைப் பார்த்திருக்கோம். எங்களாலும் புரிஞ்சுக்க முடியல. பரசு உதவியில்லாமல் ஒன்றும் முடியாது. நானும் இதே மாதிரி நிறையவாட்டி சண்டைக்கு நின்னேன். ஒரு மாற்றமும் நடக்கவில்லை. அவன் பேணுற அந்த புரோகிராமை மட்டும் நாங்கள் இப்ப பயன்படுத்தறது கிடையாது. அதே வேலைய பண்ற ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் ஓன்னு கிடைச்சது. ஓப்பன் சோர்ஸ்னா யாரோ பெத்து கோயில்ல கொணர்ந்து போட்ட அனாதைப் பிள்ளைன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. அப்படி எளிதா சொல்லமுடியாது. நிறைய புரோகிராம் நல்ல பராமரிப்போட கிடைக்குது. நிறைய கம்பெனி நல்ல அறிவுஜீவிகள இந்த புரோகிராமை பராமரிக்க அனுப்புது. கொள்ளக் காசையும் கொட்றாங்க. ஏதாவது ஒன்ன மாத்தனும்னா எடுத்தோம் கவுத்தோம்னு மாத்தமாட்டாங்க. இன்டஸ்டிரியில் இருக்கிற பழம் தின்னு கொட்டைபோட்டவங்க நிறைய பேர் விவாதம் நடத்துவாங்க. ரெண்டு மூணு பேர் ஒன்னுக்கு ரெண்டுவாட்டி சரிபாத்து தான் மாத்துவாங்க. ஒரு ஆள் மட்டும் நினைச்சா மாத்த முடியாது. அது ஒரு பெரிய கடல். உலகமே அதை நோக்கிதான் போயிட்டுருக்கு. உண்மையைச் சொல்லப்போனா பழைய பழக்கம் மறுபடி திரும்பி வருது. திருக்குறள் ஒரு பெரிய ஓப்பன் சோர்ஸ் புராஜெக்ட்ன்னு சொல்லுகிற ஆட்களும் இருக்காங்க. அந்தக் காலத்தய விக்கி அது.

நாங்க பரசு எழுதுனத இப்போ என் புரோகிராமோட சேர்க்கிறது கிடையாது. பதிலா அந்த ஓப்பன் சோர்ஸ் எடுத்து போடுறோம். இரண்டையும் சேர்க்கிறது ஒன்றும் பெரிய சிரமமான வேலையில்லை. கஸ்டமர் முதலில் நிறைய கேள்விகேட்டாங்க. அவங்களுக்கு பழக்கப்பட்ட விசயங்கள் இல்லை. பிறகு பழகிட்டாங்க. அங்கங்க போயி முட்டிக்கிட்டு விழுற மாதிரி எதுவும் நடக்கல. “

ரகு சென்னையில் வேலை செய்தபோது காலையில் காரில் வந்து அலுவலகத்தின் போர்டிகோவில் நிறுத்துவார். காரில் உட்கார்ந்துகொண்டே டிரங்கைத் திறப்பாரர். அலுவலகத்தில் இருந்து அட்டெண்டர் ஓடி வந்து கம்ப்யூட்டர் பையையும் சாப்பாட்டுப் பையையும் எடுத்து ரகுவின் இடத்தில் வைக்கச் செல்லுவார். ரகு பின் வண்டியை அவரெருக்கென்ற ஒதுக்கப்பட்ட மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு அலுவலகம் செல்வார். ஆகையால் பரசு ரகுவைப் பற்றிச் சொன்னதில் சீலனுக்கு எந்த வித ஆச்சரியமும் கிடையாது.

பிரகாஷ் தீவிரமாக வேலை செய்து ஒரு ஆய்வறிக்கையையும் மறுதலிக்க முடியாத சாட்சியங்களையும் உருவாக்கி பரசுராமனுக்கும் பார்த்திபனுக்கும் அனுப்பினான். இப்போது பரசுராமன் அவனுடைய புரோகிராமின் பிழையை ஒத்துக்கொண்டு ஒரு சரியான தீர்வையும் கொடுத்தான். பரசுராமன் இப்பொழுது சொன்னது.

” புரோகிராமின் இந்தப் பகுதியை கஸ்டமர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. அவர்கள் இதை நீக்கிவிட்டு அவர்கள் வசதிக்கு அவர்களாகவே எழுதிக்கொள்கிறார்கள். ஆகையால் இது மிகுந்த பரிசோதனைக்கு உட்படவில்லை.”

கடையில் வாங்கிய பிரியாணியுடன் வரும் ரைத்தா பிடிக்காமல் வீட்டில் ரைத்தா மட்டும் தயார் செய்வது போல . ரொம்ப பேர் கடை ரைத்தாவை சாப்பிடுறது கிடையாது என கடைக்காரர் நினைத்து ரைத்தாவை சுவைபார்க்காமல் கொடுக்கலாமா என்ன?

இந்த விவகாரத்தில் சீலனும் பிரகாஷும் 160 மணிநேரம் செலவழித்துள்ளனர். புரோகிராமைப் பேணுபவர் செய்ய வேண்டிய பாதி வேலையை இவர்கள் பார்த்துள்ளனர். வேறு டீமாக இருந்தால் பிரச்சினையை சொல்லியிருந்தால் மட்டும் போதும். துழாவி துழாவி அவர்களே நல்ல விடை ஒன்றைக் கொடுத்திருப்பார்கள்.

ஆனாலும் சீலனின் சுயவிசாரனை மட்டும் முடிந்தபாடில்லை. தூக்கமற்ற இரவில் கூட பரசுராமனே வியாபித்திருந்தான். ஏன் அவனை மட்டும் இப்படி விடாது துரத்துகிறான். அவனுக்கும் காரணம் புரியவில்லை.? ஒருமுறை பிரகாஷும் இதே கேள்வியைக் கேட்டிருந்தான். இல்லாத செறுக்கைச் சுட்டிக்காட்டுவதற்காக கண்டிப்பாக இருக்காது. ஏனென்றால் அதே மனது வில்லியத்தைக் கொண்டாடுகிறது. அது பிற கலாச்சாரத்தின் மீது ஒரு கவர்ச்சி கூட இருக்கலாம். கூடவே இருந்த பரசுவின் அதீத வளர்ச்சியை ஏற்க மறுப்பதாக இருக்கலாம். ஆனால் அதையும் இருக்காது என மனம் உதறித்தள்ளுகிறது.

வில்லியம் அவருடைய கிளை அலுவலகம் அனுப்பிய வேலை நிலவரம் குறித்துப் பேசவும் வரப்போகும் வேலைகளைக் குறித்தும் அதற்கான ஆள் தேவைகள் குறித்தும் பேச வருடா வருடம் சென்னை வருவார். வரும்போது சீலனின் குழந்தைகளுக்கு வண்ணப் பென்சில்கள், பொம்மைகள், சாக்லெட் என ஏதாவது பரிசுப்பொருட்கள் வாங்கி வருவார். அவருக்கு சென்னையில் இரண்டு மீட்டர் காப்பியைப் பார்க்க பிடிக்கும். தெருவோரக் கடைகளில் உள்ள டீ மாஸ்டர்கள் தான் இந்த இரண்டு மீட்டர் காப்பியின் சொந்தகாரர்கள் எனினும் சீலன் வழக்கமாக ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குத்தான் அழைத்துச் செல்வான். அங்கே அவர்கள் சாப்பிடும் மேசைக்கே வந்து இரண்டு மீட்டர் உயரம் அந்த காப்பி அருவி நீர் போன்று சீறிப்பாய்வதை குழந்தையின் வியப்போடு பார்ப்பார்.

சீலன் வில்லியத்திடம் சமீபத்தில் நோரேபாங் சென்றீர்களா என்று கேட்டபோது அவரின் நினைவிலிருந்து வந்த அனுபவங்கள்.

“எப்படியாவது மாதம் ஒருமுறை போகவேண்டி வரும். நண்பர்களோட போவேன். கஸ்டமர் மீட்டிங் முடிஞ்சு போவோம். ஏன் சில நேரம் குடும்பத்தோடவும் சொந்தங்களோடவும் போவோம். எல்லா இடமும் அப்படி இருக்காது. உனக்குத்தான் தெரியுமே.

சில கஸ்டமர் தான் அந்த இடத்துக்கு போகனும் ஆசைப்படுவாங்க.

பெரும் பணம் புரளும் ஒரு கம்பெனி நம்ம அவங்களுக்கு பண்ற வேலையைப் பார்த்து சிறந்த பார்ட்னர் கம்பெனி விருது தந்தாங்க. அதை வாங்குறதுக்கு மேபேனிலிருந்து ஆள் வரச்சொன்னேன். அவங்க ரகு டீமில் வேலை பார்க்குற பரசுராமனை அனுப்பிச்சாங்க. ஏற்கனவே எனக்கு அவனைத் தெரியும். ஒரு துவண்டு போயிருந்த பிராஜெக்ட்டை கடைசி நேரம் வந்து அடிபிடின்னு வேலை பார்த்து தெளிவாக்கிக் கொடுத்தான். கைவிட்டு போயிருமோன்னு பயந்திருந்தேன். திசை திரும்பினபிறகு ரொம்ப சந்தோஷம்.

பரசுராமனையும் இந்த கஸ்டமர் பிராஜெக்ட்ல வேலை பார்த்த எல்லோரையும் கூப்பிட்டு போயிருந்தேன். அவார்டை வாங்கிட்டு வர வழியில் எல்லாரையும் சாப்பிடப்போனோம். பரசுராமன் சைவம்னு சொன்னான். என்ன சாப்பாடு வாங்கிக் கொடுக்கனும்னு தெரியல. அந்தக் கடையில தொல்சோ பிபின்பாப் மட்டும் தான் அசைவம் இல்லாம இருந்துச்சு. சாப்பாடை பார்த்த உடனே முகமே தொங்கிருச்சு. சாப்பிட மனமில்லாமல் சாப்பிட்ட மாதிரி தெரிஞ்சுடுச்சு. நல்ல வேளை பியராவது சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடிச்ச பிறகு டீம் பசங்க எல்லாரும் நோரேபாங் போகனுன்னு ஒரே ரகளை. பக்கத்திலே இருந்துச்சு. பரசுராமனிடம் இடத்தைப் பத்தி விவரிச்சுச் சொன்னாங்க. எனக்கு அந்த மாதிரி இடமெல்லாம் பிடிக்காதுன்னு சொன்னான். பசங்க பொன்னுக இப்படி அழகா இருப்பாங்கன்னு போட்டோ எல்லாம் காண்பிச்சாங்க. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு வரவே முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டான். பசங்களும் இங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு, ஆனால் வீட்டில போய் சொல்ல மாட்டோம்னு சொல்லி விழுந்து விழுந்து சிரிச்சாங்க.

கடைசியில் நானும் அவனும் பிங்பாங் விளையாடப் போயிட்டோம். மத்த எல்லாரும் நோரேபாங் போயிட்டு வரும் வரை விளையாண்டோம். அதற்கப்புறம் பசங்க வந்த பிறகு எல்லாரும் விளையாடி முடிச்சு வீடு திரும்ப வழக்கம்போல பிந்திப்போயிடுச்சு. மறுநாள் சாயங்காலம் பரசுராமனைக் கொண்டுபோய் ஏர்போர்ட்ல விட்டுவந்தேன். “.

வீடு திரும்பும்போது அந்த மாதிரி சென்னையில் ஏதாவது இடம் இருந்தால் அழைத்துப் போகச் சொல்லி வில்லியம் கேட்டார். சீலன் இங்கு காவல்துறை மிகவும் கடுமையாக ஒன்று ஆகையால் அது போன்ற இடங்கள் மிகவும் ஆபத்தானது என்று சொல்லி முடித்துவிட்டான்.


செய்தித் தொகுப்பு

சிலிக்கான் வேலியில் மலரும் மாற்றம்

சிலிகான் வேலியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்கள் மெதுமெதுவாக ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்கின்றன என சாப்ட்வேர் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை பல பெருந்தன சாப்ட்வேர் நிறுவனங்கள் எழுதிய சாப்ட்வேர் புரோகிராம்களை பொதுவெளியில் அளிக்காமல் அவர்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் மேலும் வணிகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். இதுமாதிரியான சாப்ட்வேர்களில் கண்டுபிடிக்கப்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க இந்த நிறுவனங்கள் பெரும் முனைப்புடன் இருப்பினும் இந்த செயல்முறையில் உள்ள நிறைய குறைகளை ஒரு சாரார் பல வருடங்களாக சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். பொதுவெளியில் இந்த புரோகிராம்கள் இல்லாததால் முதன்மையாக இவற்றில் இருக்கும் பாதுகாப்பு ஓட்டைகள் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றன. இந்த ஓட்டைகளை தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த திருட்டுக் கும்பல் இந்த நிறுவனங்களின் கண்களில் மண்ணைத் தூவி பல மில்லியன் டாலர்களை அபகரித்துள்ளனர்.

மற்றொரு பக்கம் பொதுவெளியில் பேணப்படும் புரோகிராம்கள் பகாசுர வளர்ச்சி பெற்று தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக மாறியுள்ளன. துறை ஞானம் பெற்ற பல தன்னார்வலர்கள் பொதுவெளியில் உள்ள புரோகிராம்களை வரிவரியாக உற்றுநோக்கி அவற்றில் உள்ள அனைத்து வகையான பிசகுகளையும் குழுவாக உட்கார்ந்து ஆய்ந்து தகுந்த தீர்வையும் அளிக்கின்றனர். பாதுகாப்பு ஓட்டைகள் குறைவது மட்டுமன்றி இந்த புரோகிராம்களின் நம்பகத்தன்மையும் நிறுவனத்தின் செயல்திறனையும் அதிகரிக்கிறது. இந்த புரோகிராம்களே துறையின் எதிர்காலம் என பல வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.

இருசாரார்களுக்கும் இடையேயான வாத விவாதங்கள் இணையத்தில் பல்லாண்டுகளாக நடந்து வந்தன. காலம் பதில் சொல்லும் என்று அன்றைய கட்டுரைகளை முடித்திருந்தனர். தற்போது நடக்கும் நிகழ்வுகளை உற்றுநோக்கின் காலம் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டது என்பதை கண்கூடாக் காணலாம்.

பல நன்மைகளைக் கருத்தில்கொண்டு கூகுள், அமேசான், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பல வருடங்களாக இந்தப் பொதுவெளியில் உள்ள புரோகிராம்களைப் பேண பல மில்லியன் டாலர்களைச் செலவழிக்க ஆரம்பித்தனர். இவற்றின் ராட்சச வளர்ச்சியைக் கண்டு இதுவரை மூடுவெளியில் புரோகிராம்களை எழுதிக்கொண்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனமும் பொதுவெளியில் காலடி எடுத்து வைக்கிறது.

வரும் ஆண்டுகளில் பொதுவெளியில் உள்ள இந்த புரோகிராம்களே சாப்ட்வேர் துறையை ஆதிக்கம் செலுத்தும் எனத் துறை வல்லுநர்கள் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.


மேபேனிலும் ஓப்பன் சோர்ஸைப் பின்பற்றுவது காசுக்கும் கஸ்டமர் உறவுக்கும் நல்லது என முடிவெடுக்கப்பட்டது.

பரசுராமன் பேணிய புரோகிராமும் முடக்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்டது. புது பிராஜெக்ட் எல்லாம் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்கள் பயன்படுத்தப்படும் என்றும் பழைய பிராஜெக்ட்கள் மட்டும் இந்தப் புரோகிராமைப் பயன்படுத்தும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

சீலனும் பிரகாஷும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியின் பாருக்குள் டம்ளர்களை ஒருவருக்கொருவர் காண்பித்து மெதுவாக முட்டவிட்டு மொடுக்க ஆரம்பித்தனர். இரண்டு மொடுக்கு குடித்தபின் மெதுமெதுவாக சீலன் ஓங்கி மேசையில் ஒரு குத்து குத்தினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.