
கொதிக்கும் அலுமினியக் குழம்பை, உருவாக்கப்பட்ட அச்சில் ஊற்றி வார்த்து எடுக்கப்பட்ட அலுமினியக் காஸ்டிங்கை லேத் இயந்திரத்தின் மையப்பகுதியில் பொருத்தினான், கதிர். கார் ஸ்டேரியிங் வடிவத்திலிருந்த அதன் மேற்புறம் சீராக இல்லாமல் சொரசொரப்பாகவும் சில இடங்களில் விளிம்புகள் நீட்டிக் கொண்டும் இருந்தது.
அதனை லேத் இயந்திரம் மூலம் தேவையான அளவிற்கு செதுக்கி எடுக்கவேண்டும். இயந்திரத்தை இயக்கியவுடன் காஸ்டிங் சுழல ஆரம்பித்தது. நிலையாக இருக்கும் செறிவூட்டப்பட்ட இரும்பாலான டூலின் முனையை சுழலும் காஸ்டிங் மீது தொடுவதன் மூலம் அதனை செதுக்க ஆரம்பித்தான் கதிர்.
கொஞ்சம் கொஞ்சமாக அதன் சீரற்ற மேற்புறம் சீரானதாக மாறத் தொடங்கியது. முழுவதுமாக சீராக ஆனவுடன் வேறொரு கூர்மையான டூலை மாட்டினான். மீண்டும் இயந்திரத்தை இயக்கி மிக மெதுவாக செதுக்கவும், அலுமினியப் பரப்பு வழவழப்பானதாக மாறியது. முடிந்துவிட்டதென இயந்திரத்தை நிறுத்த முடிவு செய்த கணத்தில் அது கண்ணில்பட்டதால், ச்ச்சேஏஏ… என்ற ஒலி அனிச்சையாய் அவன் வாயில் ஒலித்தது. அந்தக் காஸ்டிங்கின் ஒரு ஓரத்தில் சிறு கருப்புப் புள்ளி இருந்தது. இரண்டு மில்லிமீட்டர் விட்டம் அளவிற்கு சிறியதுதான். ஆனால் உட்புறம் பெரிதாக இருக்கும். அச்சில் ஊற்றும்போது காற்றுக் குமிழியால் உண்டான வெற்றிடம். மேற்புறம் பார்த்தபோது தெரியாமல், செதுக்கி முடிக்கும்போது தெரிந்ததால், இவ்வளவு நேரம் கவனமாகப் பார்த்த வேலை பயனின்றிப் போனது. அந்த ஜாபைத் தூக்கி எடைக்குப் போடுவதற்காக வைத்திருந்த ஸ்கிராப்களோடு போட்டான். அந்த சிறு கரும் புள்ளிமட்டும் இல்லாமலிருந்தால் பெருஇயந்திரத்தின் சிறு பாகமாக இயங்கவேண்டியது இப்படி வீணாகிவிட்டதே என்று எண்ணியபோது சம்பத் வந்தான்.
அவனைப் பார்த்தவுடன் ஏற்பட்ட, ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் நிலைக்காமல் வடிந்தது. அவன் விழிகள் கலங்கி சிவந்திருந்தன. உடல் லேசாக தள்ளாடியது. எப்போதும் கலையாத தலைமுடி எல்லாப் பக்கங்களிலுமாக பிரிந்து கிடந்தன. எப்படியிருந்தவன் … சம்பத், சென்னையில் கதிரின் முதல் நண்பன்.
கிராமத்திலிருந்து சென்னை வந்த கதிர், புதிய பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து, ஒருவித பதட்டமும் அச்சமும் கொண்ட மனதுடன் வகுப்பில் மறுவிக் கொண்டிருந்தபோது, சம்பத் வந்து தோளில் கை போட்டான். கதிரின் உடல் கூச்சத்தில் நெளிந்தது. புன்னகை சூடிய முகத்துடன் “புதுசா வந்திருக்கியா… எந்த ஊர்” என சரளமாக பேச ஆரம்பித்தான். அந்தக் கணமே, அவன் கதிரின் மனதிற்கு அணுக்கமானவனாக மாறிவிட்டான்.
சம்பத் இவனிடம் மட்டுமல்ல, எல்லோரிடமுமே இப்படித்தான் தன்னை அணுக்கமானவனாக உணரவைத்தான். ஆனால் அவனுக்கு பிடித்தமானவர் யாரென தனியே பிரித்தறிய இயலாது. உண்மையில் யாரையும் அப்படி நினைக்கிறானா என்றும் யாருக்கும் தெரியாது. ஆனால் கதிர், சம்பத்தை தவிர வேறு எவரிடமும் நட்புக் கொள்ளவில்லை. எல்லோரிடமும் பேசுவது இவனுடைய இயல்பல்ல. மாறாக, மனம் ஏற்கும் ஒருவரிடம் மட்டும் மிக ஆழமாக இணைந்துவிடுவதுதான் கதிரால் இயல்வது.
பள்ளி படிப்பு முடித்தவுடனேயே வேலைக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம் சம்பத்திற்கு. அவன் வசித்த தெருவிலேயே சைக்கிள் கடையை நடத்திக் கொண்டிருந்த ஒருவர், வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அதை மாற்றிவிட்டுச் செல்ல முனைந்தார். சைக்கிள் கடையாகவே வேறொவருக்கு மாற்றிவிட்டால் இருக்கும் உபகரணங்களுக்கான தொகையை ஓரளவிற்குப் பெறமுடியும். இல்லையென்றால் வெறும் முன்தொகையை மட்டுமே வாங்கிக் கொண்டு மூலதனப் பொருட்களை பழைய இரும்புக்கடையில் எடைக்குப் போட்டு மிகச் சொற்பமான தொகையை மனம் கனக்க வாங்கிச் செல்லவேண்டும். சம்பத்தின் அம்மா சைக்கிள் கடை நடத்திக் கொண்டிருந்தவரிடமும் கடையின் உரிமையாளரிடமும் பேசிப் பேசி மூவரும் ஏற்கத்தக்க தொகைக்கு பேசிமுடித்தார்.
சம்பத் கதிரிடம் வந்தான். அவனின் உற்சாக முகமும் உடல் மொழியும் மற்றவர்களைப் போலவே கதிரின் அம்மாவையும் கவர்ந்தது. இவன் எதையும் சாதிப்பான் என்று அவனைப் பார்த்த உடனேயே அவருக்குத் தோன்றியது. சைக்கிள் கடை வைப்பதற்கு தேவைப்பட்ட பணத்தை கதிரின் அம்மா கொடுத்தார். கதிரின் அப்பா பணி ஓய்வு பெற்றபோது வந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்தார். ஒரு வருடத்திற்குள்ளாகவே வாங்கிய பணத்தை, வட்டியேதும் வேண்டாமென மறுத்தபோதும் ஒரு ரூபாய் வட்டியுடன் திருப்பிக் கொடுத்தான். கதிரிடம் அவன் அம்மா “என் கணிப்பு சரியாயிருக்கு பாத்தியா” என்று முகம் பெருமிதத்தில் மின்னக் கூறினார். கதிர், “வாழ்க்கையிலேயே முதல் தடவயா சரியா கணிச்சிருக்க” என்றதற்கு கவனிக்காததுபோல எதுவும் கூறாமல் உள்ளே சென்றுவிட்டார். தான் செய்ய நினைத்தவற்றிற்கு, அம்மா எப்போதுமே ஊக்கம் கொடுத்ததில்லை என்பது கதிரின் மனதில் ஒருவித ஏக்கத்தை உண்டாக்கியது.
சம்பத், எப்போதுமே அவன் செய்யும் வேலைகளை ஈடுபாட்டோடு ரசித்து செய்பவன். ஆனால் தொழில் வெற்றிகரமாக தொடர்வதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. நேரம் என்று பொதுவாகச் சொன்னாலும் காலம்தான் இவன் தொழிலை நலிவடையச் செய்தது. சைக்கிளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து தானியங்கி வாகனமாக மாறியது காலத்தின் மாற்றம்தானே. இவனும் காற்றடிப்பது, பஞ்சர் போடுவது என அவற்றின் வேலைகளையும் பார்த்தாலும் பழுது பார்த்தல் இவனால் இயலாததாகிவிட்டது.
நண்பன் ஒருவனின் வழிகாட்டுதலின்படி பழைய இரும்பு, பேப்பர்கள் வாங்கும் கடையை ஆரம்பிக்க முடிவு செய்தான். முக்கியமான இடத்தில் கடை பார்த்தான். இதற்கு முதலீடாக தராசைத் தவிர வேறு உபகரணங்கள் தேவையில்லை என்றாலும் கடைக்கான முன்தொகை அதிகமாக இருந்தது.
மீண்டும் கதிரின் வீட்டிற்குத்தான் வந்தான். அம்மாவின் ஆசிர்வாதத்தோடு பணத்தையும் பெற்றுக் கொண்டு சென்றான். பணத்தைக் கொடுத்தபோது, அம்மா கதிரினைப் பார்த்த பார்வையில் “எப்படி ஒரு தொழில் சரியில்லையென்றால் உடனே அடுத்த தொழிலுக்கு மாறுகிறான். நீயும்தான் இருக்கிறாயே… ஒன்றையே இழுத்துக்கொண்டு” என இடித்துரைப்பது தெரிந்தது. “மாறலாம் என்றால் நீயல்லவா முட்டுக்கட்டை போடுகிறாய்” என்று மனதிற்குள்ளேயே முனகிக் கொண்டான் கதிர். கதிர் பார்த்துக் கொண்டிருந்த லேத் கம்பெனியை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாறுகிறேன் என்று கூறியபோது இதே அம்மாதான் “கூரையேறி கோழி பிடிக்க முடியாதவந்தான் வானத்துல ஏறி வைகுண்டம் போகப் போறானாக்கும்” என்று பழமொழியால் மறுத்தார்.
ஒரு விடுமுறை நாளில் கதிர் சம்பத்தின் கடைக்குச் சென்றான். என்ன மாதிரியான தொழில் என பார்த்தான். வீட்டில் தேவையற்ற பொருளென இருப்பதில் பெரும்பாலானவற்றை சம்பத் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான். சிறுவனொருவன் ஒரு கட்டைப் பையை தூக்கிக் கொண்டு வந்தான். கடையருகில் வந்தவுடன் பையை வைத்துவிட்டு “அண்ணே, இதப் பாருங்க” என்றான். சம்பத் பையை அப்படியே கவிழ்த்தான். அதிலிருந்து தமிழ் தினசரிகள், சில பிளாஸ்டிக் பொம்மைகள், இரும்புக் கம்பிகள் இரண்டு, அலுமினியக் கைப்பிடி ஒன்று என சிதறியது.
சம்பத் முதலில் தினசரிகளை எடுத்து தராசில் வைத்து எடை போட்டுக் குறித்துக் கொண்டான். பொம்மைகளை எடுத்து தராசில் வைத்தான். அரைக் கிலோவிற்கான எடைக்கல்லை வைத்தான். பொம்மையின் எடை குறைவாக இருந்தது. எடைக் கல்லை கால் கிலோவிற்கு மாற்றினான். பொம்மைகள் இருந்த தட்டு இறங்கியது. உடனே கால் கிலோ எனக் குறித்துக் கொண்டான். இரும்புக் கம்பிகளை எடுத்துவைத்து அதேபோல கால் கிலோ எனக் குறித்துவிட்டு கணக்குப் போட்டு, அந்த சிறிய தாளைக் கிழித்து அவனிடம் நீட்டினான். “மொத்தம் இருபத்தொட்டு ரூபாய் ஆகுது. ரெண்டு ரூபா கொடு. முப்பதா தர்றேன்” என்றான்.
“என்கிட்ட இல்லண்ணே, பரவாயில்ல கொடுக்கலாங் கொடுண்ணே” என்று சிறுவன் கூற, ஒரு அலுப்புடன் “வராது… சில்றை இல்லாததால தர்றேன்” என்றபடி முப்பது ரூபாயைக் கொடுத்தான். பணத்தை நிறைவுடன் வாங்கிக் கொண்டவன் அந்தத் துண்டுச் சீட்டை பறக்கவிட்டபடி வேகமாக ஓடினான்.
நான் சம்பத்திடம் “டேய், இந்த அலுமினியக் கைப்பிடிய விட்டுட்டியே” என்றதற்கு “தெரிந்துதான் விட்டேன். இதுதான்டா இந்தத் தொழிலு” என்று மெலிதாகச் சிரித்தான். “பேப்பர் ஒரு கிலோவ அஞ்சு ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு கொடுப்பேன். பிளாஸ்டிக்க இருபதுக்கு வாங்கி முப்பதுக்கு கொடுப்பேன்”.
“இரும்ப பத்து ரூபாய்க்கு வாங்கி பதினஞ்சு ரூபாயிக்கு கொடுப்பேன். அலுமினியம்லாம் அம்பது ரூபா. ஆனா பொருட்கள கொடுக்க வர்றவங்களுக்கு இதோட மதிப்பு தெரியாது. தூக்கி குப்பையில போடறக்கு பணம் கெடைக்குதேன்னு குடுக்கிறத சந்தோசமா வாங்கிக்கிட்டு போவாங்க. அந்த மனநிலைதான் சில பொருட்கள நாம கவனிக்காத மாதிரி இருந்தா, அத எப்படிக் கேக்கறதுன்னு பெருசா கண்டுக்காம போயிடுவாங்க”.
“ஆனா சில பேரு வெவரந் தெரிஞ்சவங்களா இருப்பாங்க. அவங்களுக்கு வேற டெக்னிக் வச்சிருக்கோம்” என்று கூறிவிட்டு தொடராமல் கீழே கிடந்த பொருட்களை பிரிக்க ஆரம்பித்தான்.
“ஏதோ டெக்னிக்னு சொன்னியே. என்னடா அது”
“நண்பனாவே இருந்தாலும் சொல்லக்கூடாத தொழில் ரகசியம்னு சில இருக்குடா”
“நானென்ன போட்டிக் கடையா போடப் போறேன். சும்மா சொல்லுடா”
“நீ போட்டிக் கடை போடறதா இருந்தாக்கூட கண்டிப்பா சொல்வேன். ஆனா பொது ஜனமா இருக்கிறப்ப சொல்லமாட்டேன். சரி இவ்ளோ கேக்குற… என்ன விசயம்னு சொல்றேன். ஆனா எப்படின்னு சொல்ல மாட்டேன்”
“சரிடா சொல்லு”
“புத்திசாலி மாதிரி ரொம்பக் கூர்மையா பாக்கறவங்கிட்டதான் எடையடிப்போம். இதுக்கு மேல கேக்காத” என்று முடித்தான்.
இந்தத் தொழில் சம்பத்திற்கு நல்ல லாபம் கொடுத்தது. இக்கடையை நடத்துவதை வைத்தே இவனுக்கு திருமணம் நடந்தது. இவன் வியாபாரத் திறமையை வைத்தே இவன் மாமனார் படித்த தன் பெண்ணைக் கொடுத்தார். பார்த்தவுடன், இவன் பொறுப்பானவன் என்று எப்படி எல்லோருக்கும் தோன்றுகிறது என்பது கதிருக்கு எப்போதும் புரிந்ததில்லை.
பழைய பொருட்கள் வியாபாரத்தில் நல்ல வருமானம் இருந்தாலும் பெரிய பாதகம் ஒன்றும் இருந்தது. காவல்துறையை அனுசரிக்க வேண்டும். இல்லையென்றால் ரயில்வே இரும்பு இருக்கிறதென்றோ திருட்டுப் பொருட்களை வாங்குகிறானென்றோ வழக்குப் போட்டு கடையை மூட வைத்துவிடுவார்கள். வாடிக்கையாளரை கணிக்க முடிந்த கதிரால் காவல்துறையை சமாளிக்க முடியவில்லை. தொழிலை விட வேண்டியதாயிற்று.
சம்பத்தின் வேறொரு நண்பனின் மாமா வேறு பெரிய நிறுவனம் தொடங்கவிருப்பதால் அவர் நடத்திக் கொண்டிருந்த பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிற் கூடத்தை தளவாடங்களுடன் மாற்றிவிட முனைந்தார். அதனை நடத்தலாம் என்று சம்பத் முடிவு செய்தான்.
உடனடியாக காலி செய்ததால் பழைய கடைக்குக் கொடுத்த முன்பணம் கைக்குக் கிடைக்கவில்லை. மாற்றிவிட்டிருந்தால் கூடுதலாகவே கிடைத்திருக்கும். மூலதனப் பொருளென ஏதும் இல்லாததால் இவன் கையில் எந்தப் பணமும் இல்லை. புது தொழிலுக்கு முழுத்தொகையும் தேவைப்பட்டது.
கதிரின் அம்மா கைராசிக்காரர் என சம்பத் நம்பினான். வாங்கிய பணத்தை சரியாக திருப்பியளித்துவிடுவதால் அவருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை. அம்மாவிடம் வாங்குவது ராசி என சம்பத் எண்ணுவதும், அவன் சிறப்பாக தொழிலை நடத்துபவன் என்று அம்மா கருதுவதும் பெரும் வினோதமாகத் தோன்றியது கதிருக்கு. இருவருமே இவனுக்கு அணுக்கமானவர்கள் என்பதால் ஒருவருக்கொருவர் வைத்திருந்த மதிப்பீட்டை குலைக்க வேண்டாமென எண்ணி எதுவும் சொல்லவில்லை.
கால மாற்றம் என்பதன் பாதிப்பை நேரடியாக, தொடர்ந்து சந்தித்தான் சம்பத். இரண்டு வருடங்கள் அமோகமாக நடந்த தொழில், பிளாஸ்டிக்கிற்குத் தடை மற்றும் மூலப்பொருளின் விலையேற்றம் போன்றவற்றால் இறக்கம் காண ஆரம்பித்தது. அரசாங்கக் கெடுபிடி வேறு நிலைமையை மோசமாக்கியது. இயந்திரங்கள் பழைய மாதிரி என்பதால் அதனை வேறொருவருக்கு மாற்றிக் கொடுத்து பணமாக ஆக்க முடியவில்லை. பிடித்தம் போக குறைவான முன்பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வெளிவந்தான்.
அதன் பிறகு தொழில் வேண்டாமென முடிவு செய்து கதிரைப் போலவே ஒரு லேத் கம்பெனிக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். இந்த முடிவினால் கதிருக்கு மகிழ்ச்சிதான். “தொழிலில் லாபம் வருமோ நட்டமாகுமோ என்று எந்தக் கவலையும் பட வேண்டாம். கொடுக்குற வேலைய மட்டும் பாத்தாப் போதும். மாசம் பொறந்தா சம்பளம். நிம்மதியா இருக்கலான்டா” என்று சம்பத்தின் தோளில் தட்டிக் கூறினான். சம்பத் அதை ஏற்கவோ மறுக்கவோயில்லாமல் வெறுமே தலையசைத்தான். அவன் மனதில் பெறும் போராட்டம் நடைபெறுகிறது என்பது மட்டும் அவனின் முக நெளிவுகள் மூலம் இவனுக்குத் தெரிந்தது. ஆனால், அந்த போராட்டத்திற்கோ, மனக்குழப்பத்திற்கோ என்ன அவசியம் என்று எவ்வளவு யோசித்தும் இவனுக்குப் புரியவேவில்லை.
வேலைக்கு தவறாமல் சென்று வந்தாலும் சம்பத் முகத்தில் முன்பு காணப்பட்ட அனைவரையும் ஈர்க்கும் வசீகரம் மங்கி ஒருவிதமான ஆற்றாமை மேலோங்கித் தெரிந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு சாலையின் மறுபக்கத்தில் நடந்துவந்த சம்பத் கதிரைப் பார்க்காததுபோல கடந்தான். அப்போது உண்மையாகவே கவனிக்காமல்தான் கடந்திருப்பான் என்றே கதிர் கருதினான். ஆனால் இப்போது தோன்றியது, குடித்துவிட்டு வந்ததை கதிர் அறியக் கூடாதென்பதற்காக கவனிக்காதது போல சென்றிருப்பான் என.
” சரி வாடா உக்காரு” என்று கூறியபடி ஒரு மர நாற்காலியில் சம்பத்தை அமரவைத்தான்.
“என்னடா ஆச்சு. எப்பலேர்ந்து இந்தப் பழக்கம். கையில பணம் புழங்குனப்ப அந்தப் பக்கம் தலைவச்சுப் படுக்காதவன், வேலைக்கி போற இந்த நெலமையில இப்படி ஆரம்பிச்சுட்டியேடா”
தொங்கிய தலை லேசாக அசைந்தது. உதடுகள் துடித்தாலும் வார்த்தைகளாக மாறவில்லை.
“எல்லாரோட வாழ்க்கையும் நெனச்ச மாதிரியே நடந்துடாதுடா. நீ இப்படித் திரிஞ்சா குடும்பத்த யார்டா பாக்கறது”
எந்த வார்த்தையும் அவனுள் சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதைக் கண்டு ஆயாசமடைந்த கதிர், “ஏதாவது சொல்லுடா” என்றான்.
“நானொரு தொழில் ஆரம்பிக்கப் போறேன். அதுக்கு பணம் வேணும். உங்கம்மாக்கிட்டதான் கேக்கனும்னு நெனச்சேன். ஆனா இந்த மாதிரி எப்படி அவங்க முன்னாடி போக முடியும். அதான் ஒன்கிட்ட கேக்கலாம்னு வந்தேன்”.
“டே கதிரு சின்னதா பெட்டிக்கட ஒண்ணு வருதுடா. வைக்கலாம்னு பாக்குறேன். இன்னைக்கே ரெண்டாயிரம் கொடுத்தாத்தான் தக்க வைக்க முடியும். இல்லேன்னா வேற ஆளுக்குப் போயிடுன்டா”
உடல் லேசாக ஆடியபடி இருந்தாலும், வாய் குழறியபடி சொல்லிக் கொண்டிருந்தான். கதிருக்கு குடித்திருப்பவன் மேல் எப்போதுமே வெறுப்புதான். அவன் அப்பா குடித்துவிட்டு வந்து முகத்தில் எச்சில் தெறிக்க மிகையாக கொஞ்சிக் கொஞ்சி பேசுவார். அவர் பேசும்போது உண்டான எரிச்சலும் ஒவ்வாமையும் எந்தக் குடிகாரன் பேசும் போதும் இவனுக்கு ஏற்படும். அவ்வுணர்ச்சிகள் முகத்தில் வெளிப்படாதவாறு இருக்க கடும் முயற்சி செய்வான். அம்முயற்சி
இவன் முகத்தை எவ்வுணர்வையும் காட்டாத இறுக்கமானதாக பிறருக்கு காட்டும்.
“டே.. கதிரு… டேய் ஒரு ரெண்டாயிரம் கொடுடா. சீக்கரமா திருப்பிக் குடுத்தடறேன்”
கதிர் எப்போதுமே குடிப்பவர்களை மதிக்க மாட்டான். இதுவரை யாருக்குமே குடிப்பதற்கு பணம் கொடுத்ததில்லை. அது அப்பாவாக இருந்தாலும் மச்சானாக இருந்தாலும். குடித்திருப்பவர்களிடமும் முகம் கொடுத்து பேச மாட்டான். இப்போதும் சம்பத்துதான் பேசிக் கொண்டிருந்தானே தவிர கதிர் எதுவுமே பேசவில்லை. கதிரின் முகத்தைப் பார்க்காமல்தான் அவன் பேசிக் கொண்டிருந்தான். இவன் முகத்தைப் பார்த்திருந்தால் ஒருவேளை பணம் கேட்காமல் இருந்திருக்கக் கூடும்.
“டே.. கதிரு… டேய் ஒரு ரெண்டாயிரம் கொடுடா. சீக்கரமா திருப்பிக் குடுத்தடறேன்”
மீண்டும் சம்பத் கேட்டபோது கதிர் தன்னிலை குழைந்து எழுந்தான்.
கதிரின் முகம் வெறுப்பில் துடித்தது. “இன்னும் அடங்கலயா நீ. பெரிய தொழிலதிபர் ஆகியே ஆகனுமா” என்று சொல்லியபடி “எங்க ஓனர்
வர்ற நேரம் கெளம்பு. அப்பறம் பாக்கலாம்” என்று சம்பத்தின் தோள்பட்டையை சற்று உந்தித் தூக்கினான்.
“பாக்கெட்ல ஒரு பைசா இல்லடா. ஒன்ன நம்பித்தான்டா வந்தேன். இப்படித் தொறத்திறியேடா”
வெறுங்கையோடு போவதற்கு அவன் விரும்பவில்லை. அவன் உடலில் ஒரு பிடிவாதமும் உறுதியும் தெரிந்தது. கதிரின் கை அவன் தோளில் பட்டபோது இயல்பாகவே தட்டவிட்டான்.
“கண்டிப்பா வேணுன்டா. எப்படியாவது கொடு”
ஒட்டு மொத்த குடிகாரர்களின் மேல் எழுந்த காழ்ப்பில் கதிரின் முகமும் உடலும் துடித்தது. தன் பையில் கைவிட்டவன் அதிலிருந்த ஐம்பது ரூபாயை எடுத்து சம்பத்தின் பையில் வைத்தான்.
“என்கிட்ட இதுதான் இருக்கு. இத வச்சு கடை வைப்பியோ கருமாந்திரம் பண்ணுவியோ ஒன்னிஷ்டம். முதல்ல இங்கேயிருந்து கெளம்பு” என்று கதிரிடமிருந்து ஒவ்வாமையுடன் வெளிவந்த வார்த்தைகளை அவன் ஆழத்திலிருந்த ஒன்று நிறைவான மகிழ்வுடன் நோக்கியது.
இவ்வளவு நேரம் பெற்றோரின் முகம் நோக்காமல் அடம் பிடிக்கும் குழந்தை போல பணம் கேட்டுக் கொண்டிருந்த சம்பத் வெம்மை தொட்ட அரவம் போல நிமிர்ந்து கதிரின் முகம் நோக்கினான். அவன் மனதில் நிலைத்திருந்த சாந்தமான முகத்தைக் காணாமல் திகைத்து, இப்போது தெரியும் அந்நிய முகத்தில் தெரிந்த வஞ்சத்தையும் அசூசையும் நோக்கி புழுவினைப் போல சுருங்கினான். எதுவுமே கூறாமல் சிறிது தூரம் மெல்ல நடந்தவன், பின்னிருந்து உடலை ஏதோ உந்தியதுபோல வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
******
சம்பத் சென்றவுடன் வேலையில் நாட்டம் செல்லாமல் அமர்ந்தான் கதிர். என்னவாயிற்று. என் ஒரே நண்பன். இவன் மேல் ஏன் இப்படிவொரு காழ்ப்பு. முதல் விதை எப்போது விழுந்தது. மனதினுள் அமிழ அமிழ மனக்கரவின் ஆழம் தெளிய ஆரம்பித்தது. எத்தனை கருமை. எத்தனை கார்வை. ஆனால் அதன் மீது நெளியும் மெல்லிய மினுமினுப்புக் கோடு. அரவத்தின் மேனி போன்ற வழவழப்பான மிளிர்வு. அதைக் கண்டபோது ஒரு துளி … இல்லையில்லை துளியின் துளி. அதுவுமில்லை. ஊசி முனையின் மெல்லிய தீண்டலின் புள்ளி. ஆ.. ஆ.. என்னவொரு இனிமை.. சிலிர்ப்பில் உடல் முழுக்க மெல்லிய நடுக்கம் ஓடி மறைந்தது. உட்கரந்த வஞ்சத்தின் முனை, அவ்வவ்போது அலையின் மேல் தெரியும் பனிமலையின் முகடென தட்டுப்பட்டபோதும் அதை அறிய முயலாமல் தவிர்த்து வந்ததை இப்போது உணர்ந்தான். சம்பத்தின் முகம் அனல் பட்ட நெகிழியென சிதைந்து சுருங்கும்போது உள்ளுக்குள் ஊறிய இனிமையை திடுக்கிடலுடன் எண்ணிக் கொண்டான். அந்த ஆழத்தின் எதிர்பார்ப்பு, ஏக்கம் இப்போது நிறைவேறியதா.. இல்லை இன்னும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறதா. எப்படி அதனை அடக்குவது. அடக்க முடியுமா அது சாத்தியமா. அது நீங்கியபின் எஞ்சுவது என்னவாயிருக்கும். இத்தனை நுண்ணிய துளிக்கே இவ்வளவு இனிமையென்றால் குரூரத்திலேயே திளைப்பவர்கள் அடையும் இன்பம். அப்பப்பா அவர்களெல்லாம் பாக்கியவான்கள். நம்மால் அதெல்லாம் முடியாது என்று எண்ணம் எழும்போதே ஏன் முடியாது என்ற குரல் மேலெழுந்தது. இது தொடக்கம்தான். இனிமேல் இதற்குமேல் இதற்குமேல் என உயர்ந்து சென்று கொண்டேயிருக்க வேண்டியதுதான். இந்த எண்ணங்கள் மேலே எழ எழ மற்றொரு உள்ளம் பரிதவித்தபடி மறுக்கவும் தடுக்கவும் துடித்துக் கொண்டிருந்தது. அடுத்தவரை அதுவும் உடனிருப்பவரை இம்சித்தலில் இத்தனை இன்பமா. இதை உணராமல் அல்லவா அன்பென்றும் பாசமென்றும் காதலென்றும் கருணையென்றும் பிதற்றிக் கொண்டு சிலர் திரிகிறார்கள். அவர்களின் வெற்றுப் பேச்சை நம்பி இத்தனை காலம் வீணாகிவிட்டதே… இனி இவ்வழியில்தான் செல்ல வேண்டும்.
மனம் உள்நோக்கி சென்றபடியே இருந்தபோது அலைபேசி ஒலித்தது. சம்பத்தின் மனைவி அழைத்தாள். தன் நடவடிக்கை குறித்து சொல்லியிருப்பானோ என்று எண்ணியபடியே அழைப்பை ஏற்றான்.
“அண்ணே…”
அவள் குரல் தேம்பித் தேய்ந்து ஒலித்தது.
“என்னாச்சுமா”
எதிர் முனையில் வார்த்தை வராமல் விசும்பல் மட்டும் கேட்டது.
“அண்ணே, அவரு தூக்குப் போட்டுக் கிட்டாருன்னே…”
ஒரு கணம் சம்பத்திற்கு, உச்சந்தலையில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு நடுக்கமும் உதறலும் ஏற்பட்டது.
“என்னம்மா சொல்ற?…”
“பெட்டிக்கடை வக்கலாம்னு பேசுனோம். நாந்தான் அவரு மேல அக்கற உள்ள ஒரே ஆளு நீங்கதான்னு சொல்லி, உங்ககிட்ட கேளுங்கன்னு அனுப்பி வச்சேன். அவரு கூட உங்கக்கிட்டேயே கேக்கனுமான்னு யோசிச்சாரு”
“ஒன்னும் யோசிக்காதீங்க, நம்மள அவரு தாழ்வா நினைக்க மாட்டாருன்னு சொல்லி அனுப்புனேன். ஆனா யாருக்கிட்ட போனாரோ தெரியல. புதுசா ஒரு கயறு வாங்கிட்டு வந்து, பேன் கொக்கில மாட்டி, தொங்கிட்டடாருன்னே”
“அவரு கையில ஒரு ரூபாகூட இல்ல. அந்தக் கயிறு எப்டி வாங்குனார்னே தெரியலண்ணே”
கதிரின் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது. பெரும் பிரயத்தனத்துடன் அன்னத்திலிருந்து நாவை விலக்கி “இப்ப எப்டிமா… இருக்கான்” என்றான்.
“அவசரத்துல தாப்பாள ஒழுங்காப் போடாம விட்டுட்டாரு. சத்தங்கேட்டு உள்ள போயி பாத்துட்டு நான் போட்ட கூச்சல்ல பக்கத்து வீட்டுக்காரங்கல்லாம் வந்து புடுச்சு எறக்கிட்டம்னே. இப்ப லேசா மயக்கமா இருக்காரு”
நீருக்குள் அழுத்தப்பட்டு கடைசி மூச்சின்போது மீண்டதுபோல ஆசுவாசமாக மூச்சுவிட்டுக் கொண்ட கதிர் “நல்ல வேளம்மா. சம்பத்துக்கு ஒன்னும் ஆகல. கவலப்படாதம்மா. இந்தா கெளம்பி வர்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
ஒரு ஊசிமுனையளவு தீண்டல் இன்பத்திற்கான விளைவு ஒரு குடும்பத்தின் அழிவா. அப்படியானால், கொஞ்சம் அதிகமாக்கினால் எத்தனையெத்தனை உயிர், எத்தகைய அழிவு உண்டாகும். ஒன்றை அழித்துப் பெறும் இன்பம் உண்மையில் இன்பமா. சம்பத் இறந்திருந்தால் என்னவாயிருக்கும். அந்தக் குடும்பத்தின் அழிவினால் உண்டாகும் குற்றவுணர்வில் வாழ்நாளெல்லாம் வருந்தி மீள முடியாத துயரிலல்லவா ஆழ்ந்திருக்க வேண்டியிருக்கும். அந்தக் குற்ற உணர்வை தடுக்க.. மறக்க.. மழுங்கடிக்க என்னென்ன செய்ய வேண்டியிருக்குமோ. என்ன செய்தாலும் அதை அமைதிப்படுத்த முடியுமா… இம்மாதிரி துன்பத்திலும் தன்னிரக்கத்திலும் மீளவியலாமல் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அல்லவா அறம், அன்பு, கருணை என்றெல்லாம் ஆதியிலிருந்தே தொடர்ச்சி அறுந்துவிடாமல் ஒருவருக்குப் பின் ஒருவராக கூவிக்கூவி உரைத்துக் கொண்டே வருகிறார்கள் என்ற எண்ணங்கள் தோன்றியது. எப்பிறவியில் செய்த புண்ணியமோ சம்பத் இறக்கவில்லை என்ற எண்ணங்கள் மனதினுள் ஓட
” நல்லவேளை தப்பித்தோம்” என்று முணுமுணுத்தவாறு வேகமாக நடந்தவனை சட்டென நிறுத்தியது… அவனின் மனதோரத்தில் எழுந்த அந்தத் துளியின் துளி இன்பத்தின் நினைவு.
குரூரம் சிறுதுளி எனினும் பெரும் விஷம்தான். உள்ளத்துள் முளைவிட்ட வஞ்சகக்கிழங்கைவேரோடு களையும் கதை.வாழ்த்துகள் சிவா.