- விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
- சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
- பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
- பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
- விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன
- விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
- ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
- ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
- விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
- டால்கம் பவுடர்
- டால்கம் பவுடர் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
- விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
இந்தப் பகுதியில், மின் சிகரெட்டுகள் பற்றிய பல சமூக, அரசாங்க மற்றும் விஞ்ஞான விவாதங்களைப் பற்றிப் பார்ப்போம். முதலில் ஒன்றைச் சொல்லவேண்டும். இன்னும், இத்துறையில் விஞ்ஞான ஆராய்ச்சி முழுவதும் நடந்தேறாத கட்டத்தில், பல விஷயங்கள் இன்னும் தெளிவாகவில்லை. சந்தை வளரும் வேகத்திற்கு விஞ்ஞானம் இன்னும் தாக்கு பிடிக்க முடியாமல் திணறுகிறது.
வாதம் செய்வது என் கடமை
அதில் வழியைக் காண்பது உன் திறமை
-கவிஞர் கண்ணதாசன்
கவிஞரின் பாட்டு இத்துறைக்கும் முழுவதும் பொருந்தும். முழு விஞ்ஞானமும் மின் சிகரெட்டினால் உண்டாகும் உடல்நலக் கேட்டை நிரூபிக்காத பட்சத்தில், மின் சிகரெட் தயாரிப்பாளர்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்திவருகின்றனர். இதில் உள்ள ஏராளமான லாபம், பழைய சிகரெட் நிறுவனங்களை, மேலும் இத்தொழிலில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளது. சிகரெட் நிறுவனங்கள் இதில் காட்டும் அதீத ஈடுபாடு, மின் சிகரெட்டில் உள்ள அடிமைப்படுத்தும் தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. சின்ன லாபம் என்பது சிகரெட் நிறுவனங்களுக்கு என்றும் திருப்தி அளிப்பதில்லை. அதுவும், இவர்களின் முதலீடு இளமைப் பருவத்தில் துளிர்விட்டு, பல்லாண்டுகளுக்கு லாபம் ஈட்டும் வழியாக இருக்கவேண்டும். அதில் உள்ள உடல் கேடுகளை இவர்கள் அறிந்திருந்தாலும் பல்லாண்டுகள் இதை மறைக்க, பல நூறு வழிகளைச் சிகரெட் விற்பனையில் கற்றுத் தேர்ந்தவர்கள்.

முதலில், மின் சிகரெட்டுகள் எந்த அளவிற்குச் சிகரெட் அடிமைத்தனத்தைப் போக்குகின்றன என்ற முழக்கத்தில் உண்மை இருக்கிறது என்று பார்ப்போம். புகைபிடிக்கும் 10 பேரில் 7 பேர், அதை விடவேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவே சொல்லுகிறார்கள். சிகரெட்டைத் துறப்பது தங்களது உடல்நலத்திற்கு நல்லது என்பதை இவர்கள் அறிவார்கள். ஆனால், நிகோடின் அடிமைத்தனத்தை விடுவது அவ்வளவு எளிதில்லை. சரி, இதைப் படிப்படியாக குறைப்பதும் எளிதன்று. எப்படியாவது வேறு வழியைத் தேடி இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு, மின் சிகரெட் ஒரு வரப் பிரசாதமாகத் தோன்றலாம். ஆனால், மின் சிகரெட்டுகள் முழுவதும் பாதுகாப்பானவையா?

- சிகரெட்டில் ஏறக்குறைய 7,000 ரசாயனங்கள் கலந்துள்ளன. இவை நுரையீரலில் புற்றுநோய் வரக் காரணமானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மின் சிகரெட்டில், நிகோடின் மற்றும் பலவகை காற்றில் கலந்த ரசாயனங்கள் உள்ளன என்று அறிவோம். ஆனால், எத்தனை உள்ளன, அவற்றில் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பவை எவை என்று முழுவதும் இன்னும் தெரியவில்லை. ஜனவரி 2020–ல், அமெரிக்கா மற்றும் கனடாவில் 60 இளைய சமூகத்தினர், மிக அதிக மின் சிகரெட் புகையால் இறந்துபோயினர் என்று செய்திவந்தது. இதை மேலும் ஆராய்ந்ததில், கறுப்புச் சந்தையில் விற்கும் THC என்ற போதையூட்டும் ரசாயனம் கலந்த திரவம்தான் இந்த இறப்புகளுக்குக் காரணம் என்று தெரியவந்தது. இதனால், அமெரிக்காவின் CDC தாற்காலிகமாக மின் சிகரெட் பிடிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அ) THC உள்ள திரவத்தைப் புகைக்காதீர்கள் ஆ) தயாரிப்பாளர் விற்கும் மின் சிகரெட்டை, எந்த விதத்திலும் மாற்றாதீர்கள்.
- சரி, நிகோடின் ரசாயனத்தைப் புகைப்பதால் அடிமைதனம் ஏற்பட்டாலும் உடல் நலத்திற்கு என்ன கேடு வரக்கூடும் என்று ஒரு வாதம் உள்ளது. இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி, சிகரெட் ஆராய்ச்சியைப்போல புள்ளிவிவரங்களைச் சேகரித்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரம், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுடன் தொடர்பு உள்ளதைக் காட்டினாலும், நிரூபணம் இன்று போதுமான அளவு இல்லை என்பது உண்மை.
- மிக முக்கியமான இன்னொரு விஷயம், சிகரெட் எப்படி ஒருவரை அடிமைப்படுத்துகிறதோ, அதே அளவிற்கு மின் சிகரெட்டும் அடிமைப்படுத்துகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கிறேன் என்று முழங்கி, சந்தைக்கு வந்த மின் சிகரெட்டுகள் இன்னும் அதிக நிகோடினை உடலில் சேர்த்து, மேலும் நுகர்வோரை அடிமைப்படுத்துகிறது.
- உண்மையில், சிகரெட் பழக்கத்தை விட்டுவிலக மின் சிகரெட்டுகள் ஒரு நல்ல வழியே அல்ல என்று விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள். தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான் இது.
- 2015–ல், அமெரிக்க சர்ஜன் ஜென்ரல், மின் சிகரெட்டின் பயன்பாடு 2010 ஆண்டைவிட 900% அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். இதில் 40% இளைய சமூகத்தினர், மின் சிகரெட் பழக்கத்திற்குமுன் சிகரெட் பிடித்ததே இல்லை!

சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுச் சுகாதாரத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், இந்த நிலையைக் கவலையுடனே பார்க்கிறார்கள். இவர்கள் கேட்கும் பல தார்மீகக் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைப்பதில்லை. சரியான பதில் இல்லாததால், மின் சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்கு நல்லதாக மாறிவிடாது. சில உதாரணங்களைப் பார்போம்:
- சிகரெட் பிடிப்பவர்களுக்கு, அந்தப் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து மீள உதவதாகச் சொல்லும் மின் சிகரெட்டுகள், ஏன் 15,000 (அமெரிக்கச் சந்தை) வகை வகையான சந்தைப் பொருட்களாக உலா வரவேண்டும்? நம்மிடம், தலைவலிக்குக்கூட இத்தனை மருந்துகள் இல்லை.
- இன்றைய திறன்பேசித் தலைமுறையினரை எப்படியோ, மின் சிகரெட்டைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்த நிறுவனங்கள் நம்பவைத்துள்ளன. இன்னும் நிரூபணமாகாத ஒரு விஷயத்தை ஏன் திருட்டுத்தனமாகப் புகைக்கவேண்டும்?
- மின் சிகரெட் புகைப்பதால், நீராவி மட்டுமே உள்வாங்கப்படுகிறது என்ற ஆதாரமற்ற வதந்தி டீனேஜ் தலைமுறையிடம் எப்படியோ கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் நீராவி மட்டுமே உள்ளது என்று எந்த மின் சிகரெட் நிறுவனம், விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளது?
- மின் சிகரெட்டின் திரவம் வாயுவாக மாறும்போது, ப்ரொபைலின் க்ளைகால் (Propylene glycol) மற்றும் க்ளிசெரின் (glycerin) போன்ற ரசாயனங்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. நீராவி மட்டுமே உருவாக்குவதற்கு, மின் சிகரெட்டில் உள்ள திரவம் ஒன்றும் தண்ணீர் அன்று. இதை ஏன் மின் சிகரெட் நிறுவனங்கள் தெளிவாகச் சொல்லுவதில்லை?
- ப்ரொபைலின் க்ளைகால் மற்றும் க்ளிசெரின் போன்ற ரசாயனங்கள் எத்தனையோ உணவுப் பொருள்களில் உள்ளன. அதில் இல்லாத தீங்குகளை மின் சிகரெட்டுகள் எப்படி உருவாக்கும்? மேலாகப் பார்த்தால், இது ஒரு நியாயமான கேள்விபோலத் தோன்றலாம். ஆனால், உண்பதும் சுவாசிப்பதும் வெவ்வேறு. கொரோனா வைரஸ், உண்பதால் வருவதில்லை, அது ஒரு சுவாசம் சார்ந்த நோய். இதுவும் அதைப்போலத்தான்.

மனிதர்கள், ஏன் மிருகங்கள்கூட, இயற்கையில் இது போன்ற ரசாயனங்களைத் தொடர்ந்து, விடாப்பிடியாக என்றும் உட்கொண்டதில்லை. அத்துடன், இது ஒரு சமீபப் பிரச்னை என்பதாலேயே விஞ்ஞானிகளுக்கு இது சவாலாக இருக்கிறது. சிகரெட்டின் தீமைகள் நிரூபிக்க 80 முதல் 100 ஆண்டுகள் வரை பிடித்தது. அந்த அளவிற்கு இந்தப் பழக்கம் சமூகத்தில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். வரலாற்றின் பயனே, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான். இம்முறையாவது மின் சிகரெட்டுகளின் பிடியிலிருந்து டீனேஜ் சமூகத்தினரை விஞ்ஞானம் தகுந்த நிரூபணத்துடன் விரைவில் விடுவிக்கும் என்று நம்புவோம். இதற்கிடையில், அரசாங்கங்கள் இயன்றவரை பல தடைகள் மற்றும் சட்டங்களைக்கொண்டு, நிலைமையைச் சமாளிக்க முயன்றுவருகின்றன.
விஞ்ஞானம் முழுவதும் நிரூபிக்கப்படாததால், அரசாங்கக் கட்டுப்பாடுகள் இன்றைய நிலையில் குழப்பமானதாகவே உள்ளன. அரசாங்கங்களை இங்கு குறை சொல்லவில்லை. முடிவாகாத ஒரு விஷயத்தைக் கட்டுப்படுத்துவது மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குச் சமமாகும். ஒரேஒரு விஷயத்தில் மட்டும் பல அரசாங்கங்கள் ஒரேமாதிரி இயங்குகின்றன:
- சட்டப்படி, எந்த ஒரு வியாபார நிறுவனமும் 18 வயதிற்கு உட்பட்டவருக்கு மின் சிகரெட் விற்கக்கூடாது.
- பொதுத் தொலைக்காட்சியில், மின் சிகரெட்டுகளின் விளம்பரங்களைக் காட்டக்கூடாது.
- அப்படி விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றாலும் குழந்தைகளை (18 வயதிற்கு உட்பட்டவர்களை) மாடல்களாகப் பயன்படுத்தக்கூடாது.
இதைத் தவிர, மற்ற எல்லா கட்டுப்பாடுகளும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
- ஜப்பானில் மின் சிகட்ரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. எந்தவித மின் சிகரெட்டும் அங்கு கிடைக்காது.
- பிரிடிஷ் அரசாங்கம், மின் சிகரெட்டுகளை நன்றாகக் கட்டுப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது. அரசாங்கப் பொது மருத்துவச் சேவையான NHS இதை நடத்திவருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், புகையிலை புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட NHS மருத்துவர்கள், மின் சிகரெட்கொண்டு உதவி செய்கிறார்கள். அதுவும், நோயாளிகளின் முன்னேற்றம், மருத்துவரால் கண்காணிக்கப்படுகிறது. சும்மா, இலவசமாகக் கிடைக்கிறது என்று மின் சிகரெட்டை அரசாங்கச் செலவில் ஊதித் தள்ளமுடியாது! குறிப்பாக, மின் சிகரெட் வாங்குவதற்கு மருத்துவரின் மருந்துச்சீட்டு வேண்டும்.
- அமெரிக்கா குழப்பமான நாடு. அங்குள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சட்டம். மத்திய அரசாங்கம், விமானத்தில் மின் சிகரெட் புகைக்கக்கூடாது என்று தடைசெய்துள்ளது. மற்றபடி, இந்தக் குழப்பமான நாட்டின் சட்டங்களை ஆராய:
https://publichealthlawcenter.org/resources/us-e-cigarette-regulations-50-state-review - அமெரிக்காவில் அனுமதிக்கப்படும் நிகோடினின் அளவு யூரோப்பைவிட அதிகம். இதனால் அமெரிக்கச் சட்டத்தில் ஓட்டை இருப்பதைப் பொதுநலச் சுகாதாரத் துறையினர் முணுமுணுத்தாலும், அமெரிக்க முதலாளித்துவம் இவர்களின் குரல்களை அடக்கிவிடுகிறது.
- இந்தியா, பிரேஸில், சிங்கப்பூர் போன்ற தேசங்கள், மின் சிகரெட்டுகளை முழுவதும் தடைசெய்துள்ளன.
- கனடா சற்று இரண்டும் கெட்டான் நாடு. சுகாதாரக் கனடா (Health Canada) அடிக்கடி மின் சிகரெட் மையங்களைச் சோதனை செய்கிறது. 18 வயதிற்கு உட்பட்டவருக்கு மின் சிகரெட் விற்கப்படுகிறதா என்பதே இந்த சோதனையின் குறிக்கோள். மற்றபடி, அலுவலகம், விமானம், கட்டடங்கள் போன்ற இடங்களில் மின் சிகரெட் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. என் பார்வையில், பிரிடிஷ் அரசாங்க முன்னோடியைக் கனடா பின்பற்றவேண்டும். அமெரிக்காவைப் போலல்லாமல், கனேடிய அரசாங்கம் தன்னுடைய பிரஜைகளுக்கு (பிரிடிஷ் அரசாங்கம்போல) வரிப் பணத்தால் மருத்துவ வசதிகள் செய்துதருகிறது. கஞ்சாப் பொருட்களை மருந்துச் சீட்டுடன் வழங்க கட்டுப்பாடுடன் இயங்க வழிவகுத்த கனடாவில், இது ஒரு குறை.
- யூரோப்பியன் யூனியனில், மின் சிகரெட்டுகளின் நிகோடின் அளவு, மற்றும் தரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், விற்கப்படும் மின் சிகரெட்டுகளை, மற்ற போதைப் பொருள்களைக் கலக்க முடியாததாகத் தயாரிக்கவேண்டும்.
மின் சிகரெட்டுகள், இன்று ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், விஞ்ஞான ஆராய்ச்சி சற்றுப் பின்தங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி இந்தத் தொழில், வருடத்திற்கு 20 பில்லியன் டாலர்களை எட்டிவிட்டது. அரசாங்கங்களுக்குச் சரியான நிரூபணம் என்பது விஞ்ஞானிகள் கையில் உள்ளது. உண்மையிலேயே இந்த விஷயத்தில், ஆங்கிலத்தில் சொல்வதுபோல, ஒரு புகையும் துப்பாக்கி (smoking gun) தேவைப்படுகிறது. ஏராளமான பண பலம்கொண்ட இந்தத் தொழில், விஞ்ஞானத்தைத் தோற்கடிக்க சிகரெட் காலப் போராட்டங்களிலிருந்து கிடைத்த பல வித்தைகளையும் கைவசம் வைத்துள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கச் சற்றுக் காலமாகும். அப்படியே நிரூபிக்கப்பட்டாலும், எந்த பொருளால் உடல்நலக் கேடு வருகிறதோ அதை நீக்கி, வியாபாரம் செய்ய இவர்கள் தயாராக இருப்பார்கள். அரசாங்க விசாரணைகள் என்று இது இழுத்தடிக்கப்படுவது நிச்சயம். இந்தியா போன்ற நாடுகள் இதற்கெல்லாம் காத்திருக்காமல், தடைசெய்வது சரியென்றாலும், மேற்குலகில் சுதந்திரம், சட்டம் என்று அப்படிச் செய்வது எளிதனறு. இந்தத் தொடரில், சில விஞ்ஞானத் திரித்தல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதை விளக்கினாலும், இது போன்ற முடிவாகாத திரித்தல்கள் இருப்பதையும் சொல்லியாக வேண்டியுள்ளது.