மின்னல் சங்கேதம் – 4

This entry is part 04 of 12 in the series மின்னல் சங்கேதம்

(வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்சேதுபதி அருணாசலம்)

பாட்சாலாவிலிருந்து திரும்பி வந்த அனங்காவைப் பார்த்து, “அடடே! என்னென்னவோ கொண்டு வந்திருக்கியே?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் கங்காசரண்.

”இதுக்கெல்லாம் நீங்க எனக்கு காசு கொடுக்கனும், ஞாபகம் இருக்கட்டும்” என்றாள் அனங்கா.

”கண்டிப்பா. உன்னோட பாட்சாலா எப்படி இருந்தது?”

”ஓ பிரமாதம்! மோத்தி, காளி, எல்லாம் வந்திருந்தாங்க. இன்னும் யாரெல்லாமோ வந்துப் பாத்துட்டுப் போனாங்க.”

“அப்போ, நம்மள யாரும் மறக்கலைன்னு சொல்லு.”

“மறக்கறதாவது? அவங்கள்லாம் நம்மள திரும்பியே வந்துடச் சொல்லிக் கேக்கறாங்க. எனக்கும், அந்த தாமரைக்குளத்துக்குப் பக்கத்துல ஒரு வீடு கட்டணும்னு ஆசையா இருக்கு, கட்டலாமா?”

”பாட்சாலாவுக்குத் திரும்பிப் போறதுக்கு வாய்ப்பேயில்லை. இப்போதான் பள்ளிக்கூடம் ஆரம்பிச்சு நல்லா போய்ட்டு இருக்கு. திரும்பிப்போனா இதெல்லாம் விட்டுட்டுப் போகனும்.”

”நீங்க என்ன சொன்னாலும் சரி, எனக்கு அந்த தாமரைக்குளத்துக்குப் பக்கத்துல இருக்கனும்.”

கொஞ்சநாள் கழித்து, கங்காசரண் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கையில் அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் உள்ளே நுழைந்து, “இது பள்ளிக்கூடமா?” என்று கேட்டார்.

“ஆமா”

“நமஸ்காரம். நீங்க பிராமணர்னு தெரியுது. நானும் பிராமணன்தான். நான் புகை பிடிச்சுக்கலாமா?”

”நமஸ்காரம். கண்டிப்பா. உட்காருங்க. ஹேய்…”

கங்காசரண் கொடுத்த சமிக்ஞையில் ஒருவன் புகையிலையைக் கொண்டு வர ஓடினான்.

அந்த மனிதர், ஒட்டுப்போட்ட பழைய செருப்பும், நைந்துபோன சட்டையும் அணிந்திருந்தார். மெலிந்த, எண்ணெய்ப் பளபளப்புடன் கூடிய மூங்கில் கைத்தடியை வைத்திருந்தார். செருப்புகள் போட்டிருந்தாலும் முட்டிக்கால் வரை புழுதியாகியிருந்தது. மண்ணெண்ணெய் மரப்பெட்டி மீது ஆசுவாசமாக உட்கார்ந்தார்.

”உங்க பேரென்ன மஷாய்?” என்று கேட்டான் கங்காசரண்.

“ஜி, என்னோட பேர் துர்கா பேனர்ஜி. ஆரங்காதாரா பக்கத்துல குமாரே நாகரகாலி சொந்த ஊர். நானும் உங்களை மாதிரியே ஸ்கூல் மாஸ்டர்தான். உங்களுக்கு அம்பிக்பூர் தெரியுமா? இங்கேருந்து பத்து மைல் இருக்கும். அந்த ஊர் ப்ரைமரி ஸ்கூல்ல உதவி ஆசிரியர்.”

“நல்லது நல்லது, புகை பிடிங்க…”

”அதுக்கு முன்னாடி குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?”

”இளநீர் சாப்பிடறீங்களா? பாஞ்சு, ஹரி காபாலிக்கிட்ட ஓடிப்போய் நான் கேட்டேன்னு ரெண்டு இளநீர் தேங்காய் வாங்கிட்டு வா.”

வந்தவர் கங்காசரணை மதிப்போடு நோக்கினார், “பேஷ்! உங்களுக்கு இங்கே நல்ல மதிப்பு இருக்கும் போலயே?”

கங்காசரண் மெளனமாகப் புன்னகைத்தான். புத்திசாலிகள் தங்கள் பெயரையும், புகழையும் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை.

இளநீர் வந்து சேர்ந்தது. துர்காபதா திருப்தியாகக் குடித்து, ஹூக்காவில் புகை இழுத்துக்கொண்டே, “இங்கே நீங்க நல்ல வசதியா இருக்கீங்க” என்றார்.

“எல்லாம் உங்க ஆசிர்வாதம்” என்று பணிவாகச் சொன்னான் கங்காசரண்.

”இல்லை இல்லை, உண்மையாலுமே. என்னை மாதிரி ஒரு ஸ்கூல் மாஸ்டர் இப்படி செளகரியமா இருக்கறதப் பார்த்தா சந்தோஷமா இருக்கு.”

“உங்க ஊர்ல என்ன சம்பளம் கிடைக்குது?”

”மூணு ரூபாய் ஸ்கூல்லேருந்து கிடைக்குது. அரசு உதவி ஒன்றரை ரூபாய். யூனியன் போர்ட் ஒன்பது ஸிகி குடுக்குது. எல்லாம் சேத்தி ஆறே முக்கால் ரூபாய் கிடைக்குது. ஏதோ ஓடிக்கிட்டுருக்கு.”

”சம்பளம் தவறாம கிடைச்சிருதுதானே?”

“ஓ ஆமா!” துர்காபதா பெருமிதமாகச் சொன்னார், “இது கவர்மெண்ட் உத்தியோகம். மோசடி வேலைக்கு இடமில்லை. ஆனா செளகரியமான வாழ்க்கைக்கு ஏழு ரூபாய் பத்தாதே.”

”குடும்பத்துல எத்தனை பேர்?”

“ஒரே மகள், மனைவி. விதவையான அக்காவும் எங்களோடதான் இருக்கா. இத்தனை பேருக்கும் சாப்பாடு போடனுமே?”

”வேற வருமானம் எதுவும் இல்லையா?”

“இல்லை, நான் அந்த ஊர்க்காரன் இல்லை. அதனால வருமானத்துக்கு வேற வழியில்லை.”

“உங்க கிராமத்தில நிறைய பிராமணர்கள் இருக்காங்களா? வேற ஜாதிக்காரங்க இருக்காங்களா? ஏன் நீங்க புரோகிதம் செய்யக்கூடாது? லக்‌ஷ்மி பூஜை, மானஸா பூஜை, ஸஷ்டி பூஜை…”

“வாய்ப்பே இல்லை. அதுக்கெல்லாம் முறையான புரோகிதர்கள் இருக்காங்க. நிறைய பிராமணர்களும் கூட…”

”அதான் பிரச்சினை. ஏய்! சத்தம் போடாதே! தோலை உரிச்சுடுவேன்! நீங்க மத்த பிராமணர்கள் இருக்க ஊர்ல குடியேறக் கூடாது. இல்லாட்டி எப்படி தொழில் நடத்த முடியும்?’

”நீங்க சொல்றது சரிதான். உங்களையே பாருங்க. இளநீர் கேட்டீங்க. உடனே கிடைச்சுது. அதுதான் அதிகாரமும், செல்வாக்கும். எனக்கு என் சம்பளத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கறதில்லை. எப்போவாவது கத்திரிக்காயோ, வாழைக்காயோ பையன் எவனாவது குடுத்தா உண்டு.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே, துர்காபதாவுக்கு வேறொரு யோசனையும் தோன்றியது. இரண்டாவது முறை புகையிலையை நிறைத்துக்கொண்டபின், மெதுவாக ஆரம்பித்தார், “எனக்கு ஒண்ணு தோணுது…”

“என்ன?”

“நீங்களும் நானும் சேர்ந்து அப்பர் ப்ரமைரி ஸ்கூல் ஆரம்பிச்சா என்ன? நீங்க டீச்சர் ட்ரெயினிங் முடிச்சிருக்கீங்களா?”

“இல்லை.”

“ஓ, டீச்சர் ட்ரெயினிங் படிக்கலைன்னா ஹெட்மாஸ்டர் ஆக முடியாதே. மூணாவது ஆளை சேத்துக்கறதும் சரியா வராது. தகுதிக்கு மேல பங்கு எதிர்பார்ப்பான். எனக்கும் இப்போ செஞ்சுக்கிட்டிருக்க வேலை பிடிக்கல. அங்க எனக்கு நண்பர்களே இல்லை. பேச்சுத்துணைக்கு யாரும் இல்லை. இருக்கற பிராமணனெல்லாம் படிக்காதவனுங்க. விவசாயத்துலதான் அவங்க புத்தியெல்லாம். நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதில்லையா? இந்த உலகமே ஒரு மாயை. எனக்கு தர்மக்கதைகளைப் பத்தியெல்லாம் பேசறதுலதான் ஆர்வம்.”

கங்காசரண் உள்ளுக்குள் ‘நம்ம சம்பாத்தியத்துல மண் விழும் போல இருக்கே’ என்று சொல்லிக்கொண்டு வெளியே, “பேஷ்!” என்றான்.

”நீங்களும் நானும் ஒரே மாதிரி. அதனாலதான் உங்களோட நான் இவ்வளவு வெளிப்படையா பேச முடிஞ்சுது. தப்பா எடுத்துக்காதீங்க. சரி நான் கிளம்பறேன், ரொம்ப தூரம் போகனும்.”

“இந்தப் பக்கம் வரும்போது, அவசியம் மறுபடியும் வரணும்.”

“கட்டாயம் வருவேன். வீட்லையும் எல்லாரையும் கூட்டிக்கிட்டு வருவேன். சரி பார்க்கலாம், நமஸ்காரம்.”

ங்காசரண் பரிகார பூஜை செய்ததும், தற்செயலாக பிஸ்வாஸ் மஷாயின் பேரன் குணமடைந்தான். இதனால் கங்காசரணின் பெயர் எல்லாப் பக்கமும் பரவியது. ஒருநாள் ஓராள் வந்து, “நீங்க தயவுசெய்து எங்க கிராமத்துக்கு வரணும்” என்றான்.

“உள்ளே வாங்க, உட்காருங்க. உங்க கிராமம் எது?”

“காமதேவ்பூர், இங்கேருந்து ஆறு மைல் தூரம். உங்களைப் பத்தி நாங்க கேள்விப்பட்டிருக்கோம். எல்லாரும் உங்களைப் பண்டித மஷாய்னு சொல்றாங்க. எங்க ஊர்ல காலரா கொள்ளை நோய் வந்து சீரழிக்கிது. நீங்க வந்து எங்க கிராமத்தைக் கட்டிப் போடனும்” என்றான்.

கங்காசரண் அதற்கு முன், கிராமத்தைக் ‘கட்டிப் போடுதல்’ என்பதைக் குறித்துக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், மந்திரங்கள் சொல்லி கிராமத்தைச் சுற்றி காலரா வராமல் பாதுகாப்பது என்று புரிந்துகொண்டான்.

மற்ற வாய்ச்சவடால் ஆசாமிகளைப் போல கங்காசரண் உடனே ‘என்னால கட்டிப் போட முடியும், நான் பாத்துக்கறேன்’ என்றெல்லாம் சொல்லவில்லை. அமைதியாக ஹூக்கா பிடித்துக்கொண்டே யோசித்தபடி அமர்ந்திருந்தான்.

”நீங்க தயவு செஞ்சு வந்தீங்கன்னா…”

“அதைப் பத்திதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.”

“எதுக்கு யோசிக்கிறீங்க பண்டிட் மஷாய்? நீங்க கட்டாயம் வரணும்.”

”அது ரொம்ப கஷ்டமான விஷயம், ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்.”

அவர்கள் இருவரும் சற்றுநேரம் மெளனமாக இருந்தார்கள். அந்த ஆசாமி மீண்டும், “அப்படீன்னா ஒண்ணும் செய்ய முடியாதா?” என்று கெஞ்சினான்.

கங்காசரண் ஒரு சில நிமிடங்கள் மெளனமாகவே இருந்தான்.

“பண்டிட் மஷாய்?”

“அப்பனே, கொஞ்சம் சும்மா இருக்கியா? தொணதொணன்னு பேசி தலைவலி உண்டு பண்ணாதே, என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு.”

அந்த ஆசாமி, தான் அப்படி தலைவலிக்கும்படியாக என்ன சொல்லிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டு பந்துபோய் அமைதியாக ஒதுங்கி நின்றான். வேறு கேள்விகள் கேட்பதற்கு தைரியம் வரவில்லை.

கங்காசரண் பேசத்தொடங்கினான், “நாம குலக்குண்டலினியை எழுப்பனும். ரொம்ப கஷ்டமான விஷயம். செலவும் வேற ஆகும். உங்களால முடியுமா?”

இப்போது பேசுவதற்கு தைரியம் வந்து, அந்த ஆசாமி, “என்ன செலவானாலும் பரவாயில்லை. நாங்க அறுபது – எழுபது குடும்பங்கள் இருக்கோம். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் எல்லாம் சேர்ந்து பணம் திரட்டித் தரோம். உயிருக்கே ஆபத்துங்கும்போது காசைப் பத்தி யோசனை செய்ய முடியுமா? மற்ற கிராமங்கள்லாம் இந்த வியாதியால அழிஞ்சிக்கிட்டு இருக்கு” என்றான்.

”நீங்க நதியிலேருந்து தண்ணி குடிக்கிறீங்களா?”

“ஆமா மஷாய். ஆற்றுச்சுழி எங்க கிராமத்துக்குப் பக்கத்துலதான் இருக்கு. அங்கேருந்துதான் குடி தண்ணி எடுக்கறோம்.”

”நான் கிராமத்தைக் கட்டிப் போட்டுட்டா, நீங்க ஆத்துக்குப் போக முடியாது. கிணத்துத் தண்ணிதான் குடிக்கனும், பரவாயில்லையா?”

“பரவாயில்லை மஷாய். எவ்வளவு செலவாகும்?”

கங்காசரண் மனதுக்குள் கணக்குப் போடுவது போல யோசித்துவிட்டு, “எல்லாம் சேத்தி முப்பது ரூபாய் ஆகும். என்னெல்லாம் வேணும்னு பட்டியல் சொல்றேன். கேட்டுட்டுப் போ,” என்றான்.

வந்த ஆசாமி மனதுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். கங்காசரணின் வார்த்தைகளைக் கேட்டு இன்னும் பெரிய செலவாக ஆகுமென்று நினைத்திருந்தான். ஆனால் கங்காசரண் தன்னுடைய லட்சியத்தின் எல்லையைத் தொட்டுவிட்டான். பாட்சாலாவில் நாளைக்கு ஒருவேளை சாப்பிட்டு பட்டினியில் வாடியபின், இதைவிட அதிகமாகக் கேட்கும் மனநிலை அவனுக்கு வரவில்லை.

கங்காசரண் வீட்டுக்குள் போய் மனைவியுடன் ஆலோசித்து பட்டியல் தயாரித்தான். வீட்டுக்கு என்னவெல்லாம் தேவைப்படும் என்று யோசனை செய்தான். அனங்காவுக்கு அளவுக்கதிகமாகக் கேட்கத் தெரியவில்லை. அதனால் அவர்கள் தயாரித்த பட்டியல் அதிகம் செலவுபிடிக்கும் ஒன்றாக இருக்கவில்லை.

”உங்களுக்கு கிராமத்தை எப்படி கட்டிப் போடனும்னு தெரியுமா என்ன? எத்தனை பேரோட வாழ்க்கையோட விளையாடறீங்க…” என்றாள் அனங்கா.

”நான் பசங்களுக்கு அடிப்படை சுகாதாரத்தைப் பத்தி சொல்லிக் கொடுக்கறவன். ”அடிப்படை ஆரோக்கியமும், சுகாதாரமும்”ங்கற புத்தகத்துல தொற்றுநோய் வரும்போது என்ன செய்யனும்னு எல்லாம் விளக்கமா சொல்லியிருக்கு. அது மட்டும் செஞ்சாலே கிராமத்தைக் காப்பாத்தீடலாம். மந்திரம் சொல்லனும்னே அவசியமில்லை.”

பட்டியலோடு வெளியே வந்தான் கங்காசரண், ”கேட்டுக்கோ, பத்து சேர் அரிசி, பத்து சீப்பு வாழைப்பழம், இரண்டரை சேர் பசு நெய், இரண்டரை சேர் சந்தேஷ், மூணு சிவப்பு ஜரிகைப் புடவை – மூணு பைரவி தேவிகளுக்கு, ஒரு வேஷ்டி பைரவருக்கு, யாகம் செய்ய ஒரு தாமிரப் பாத்திரம்…”

அந்தப் பட்டியலோடு ஆசாமி கிளம்பிப் போனான்.

ங்காசரண் காமதேவ்பூருக்குப் போயிருக்கையில் யாரோ அரிசி விலை உயரப்போகிறது என்ற வதந்தி உலவுவதாகச் சொன்னார்கள். இப்போதே தேவைக்கதிகமாக வாங்கி வைத்துவிடுவது நல்லது என்றார்கள்.

“எவ்வளவு அதிகமாகுமாம்?”

“மணங்கு (maund – கிட்டத்தட்ட 37 கிலோ) ரெண்டு ரூபாய் ஆகலாமாம்.”

உண்மையில் யாரும் அதை நம்பவில்லை. அன்று நடக்கப்போகும் வழிபாடுகளையும், கிராமக் கட்டையும் பார்க்க ஏராளமானோர் கூடியிருந்தார்கள். “ஒரு மணங்கு ரெண்டு ரூபாயா? யார் இப்படி வதந்தியக் கிளப்பி விடறது?” என்று கேட்டார்கள்.

அந்த விஷயத்தைச் சொன்னவன் ஒன்றும் விஷயம் தெரியாதவன் இல்லை. அவனுக்கு அரிசி வியாபரத்தில் ஏற்கனவே அனுபவம் உண்டு. அவன் உறுதியாகச் சொன்னான், “உங்களுக்கு இந்த விஷயம் புரிய மாட்டேங்குது. நான் சொல்றேன் கேளுங்க, அரிசி விலை எக்கச்சக்கமாகப் போகுது. எனக்கு இந்த விஷயமெல்லாம் அத்துபடி. இந்த வியாபாரத்துல நான் ரொம்ப நாள் இருந்திருக்கேன்.”

யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. எல்லோரும் கங்காசரணின் கிராமக் கட்டைக் காண ஆவலாக இருந்தார்கள். அவன் மூன்று மணி நேரம் யாக பூஜை எல்லாம் செய்து முடித்து, சடங்கை ஆரம்பிக்கத் தொடங்கினான். அவர்கள் அப்பாவி கிராமத்தினர். கங்காசரணுக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். நிறைய சம்பாதிக்க வேண்டுமென்றால், நீண்ட நேரம் சடங்குகள் செய்ய வேண்டும். அவன் நான்கு பானைகளில் குங்கும அலங்காரம் செய்து, பனையோலைகளைச் செருகி நான்கு திசைகளில் நிறுத்தி, சுற்றி நூலைக் கட்டினான். உள்ளூர் ஆசாரியை தும்பிலி மரத்தில் ஒரு பொம்மை செய்துதரச் சொன்னான். அதற்கு எண்ணெய் பூசி, சிவப்புக் கண் வைத்து நாற்சந்தியில் பதித்து வைத்தான். அவன் இது போன்ற விசித்திரமான பொருட்களைக் கேட்கக் கேட்க, கிராமத்தினருக்கு அவன் மேல் இன்னும் மரியாதை கூடியது.

”இவரு ஏதோ சாதாரண பிராமணர் இல்லை. நிறைய விஷயம் தெரிஞ்சவரு. நிஜமான பண்டிதர். இவரை ஏதோ பகான் காவ்ம் தினு பட்டாச்சார்ஜீ மாதிரி நினைச்சியா?” என்று அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டார்கள்.

கங்காசரண் மேலும் சில பொருட்கள் கேட்டான், “கரி படியாத ரெண்டு பானைகளும், ரெண்டு வெள்ளெருக்குக் கிளைகளும் வேண்டும்.”

மதியமாகிவிட்டது. இதையெல்லாம் யார் எங்கே போய் தேடிக் கொண்டு வருவது என்று யாருக்கும் தெரியவில்லை, எல்லாரும் தயங்கி நின்றார்கள்.

”மஷாய், இந்த ஊர்ல குயவர்களே இல்லை, புதுப்பானைக்கு எங்கே போவோம்?” என்று பவ்யமாகக் கேட்டான் ஒருவன்.

”அப்போ எல்லாத்தையும் மறந்துட வேண்டியதுதான். இதையெல்லாம் முன்னாடியே தயார் செஞ்சு வச்சிருக்க வேண்டியதுதானே? கிராமத்தைக் கட்றத்துக்கு புதுப்பானை வேணும்னு யாருக்குதான் தெரியாது?” என்று எரிச்சலாகக் கேட்டான்.

தங்கள் முட்டாள்த்தனத்தை எண்ணி எல்லோரும் வெட்கப்பட்டார்கள். “இவர் ரொம்ப பெரிய பிராமணர்தான். இவர் கண்ணுலேருந்து ஒண்ணும் தப்பிக்க முடியாது.”

”எல்லாரும் தீர்த்தம் வாங்கிக்க வரிசையில் நில்லுங்க,” என்றான் கங்காசரண்.

எல்லார் மீதும் தீர்த்தம் தெளித்தபின், “இனிமேல்தான் முக்கியமான சடங்கு ஆரம்பிக்கப்போகுது.” என்று தீவிரமாகச் சொன்னான் கங்காசரண்.

அங்கிருந்தவர்களெல்லாம் குழம்பினார்கள். காலையிலிருந்து இங்கே இருக்கிறார்கள், தீர்த்தமும் தெளித்தாகிவிட்டது, இனிமேல்தான் முக்கியமான சடங்கே ஆரம்பிக்கப்போகிறதா? இப்போது மணி மதியம் மூன்றாகிவிட்டிருந்தது.

”என்ன முக்கியமான சடங்கு பண்டிட் மஷாய்?” என்று உள்ளூர்ப் பெரியவர்கள் கேட்டார்கள்.

“இந்த ஊர் ஈசான்ய மூலையில ஒரு வேப்பமரம் இருக்கா?”

”எந்த மூலைல மஷாய்?”

“ஈசான்ய மூலை.”

”அது எங்கே இருக்கு மஷாய்?” என்று திகைத்துப்போய்க் கேட்டார்கள்.

”பத்து மூலைகளோட பேர் கூடத் தெரியாதா? ஈசான்யம்னா வடமேற்கு மூலை – அந்தப் பக்கம் – “
ஊருக்குள் நுழையும்போதே ஒரு வேப்பமரத்தை அவன் கவனித்திருந்தான்.

ஒருவன், “ஆமாம் ஜி, இருக்கு” என்றான்.

”சொன்னேன்ல? இருந்துதானே ஆகனும். ஈசான்ய மூலையோட தேவி…”

”நாங்க என்ன செய்யனும் மஷாய்?”

“அதுல கொடியைக் கட்டனும், என்னோட வாங்க” என்றான்.

இரண்டு வலுவான மனிதர்கள் மரத்திலேறி, கங்காசரண் சொன்னதைப் போல கொடியைக் கட்டினார்கள். நான்கு மணியாகிவிட்டிருந்தது.

கங்காசரண் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, “அப்பாடி, எல்லாம் முடிஞ்சுது. நீங்க எல்லாம் இவ்வளவு கஷ்டமும், செலவும் செஞ்சிருக்கீங்க. ஒரு சின்ன விஷயத்தைக் கூட என்னால எப்படி விட்டு வைக்க முடியும்? இனிமே நீங்களும் நானும் நிம்மதியா இருக்கலாம். ஒரு கிராமத்தைக் கட்டிப்போடறது சாதாரண விஷயமில்லை. அதுக்கு எல்லாத்தையும் முறையாச் செய்யனும்.” என்றான்.

எல்லாரும் பக்திப்பரவசத்தில் திளைத்தார்கள். அடேயப்பா, நிஜமான பண்டிதன்!

கிராமத்துப் பெரியவர்கள் அவனை அவர்கள் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு எதாவது சாப்பிடும்படி கேட்டுக்கொண்டார்கள். கங்காசரண் ஒரேயொரு இளநீர் போதும், வேறெதுவும் வேண்டாம் என்று உறுதியோடு மறுத்துவிட்டான். “நீங்களும் ஒரு மாசம் ஆத்துத் தண்ணியக் குடிக்கக் கூடாது. பழசானதையோ கெட்டுப்போனதையோ சாப்பிடக்கூடாது. ஒரு ஈ வந்து உட்கார்ந்தாக் கூட அந்தச் சாப்பாட்டைத் தூக்கிப் போட்டுடனும். எல்லாத்தையும் கவனமா செய்வீங்களா? கிராமத்துல எல்லார்க்கிட்டையும் சொல்லனும்.” என்றான்.

பெரியவர்கள் எல்லோரிடமும் விளக்கிச் சொன்னார்கள்.

அந்திக்கருக்கலில், கங்காசரண் வீட்டுக்குக் கிளம்புகையில், உள்ளூர் புரோகிதர் தினு பட்டாச்சார்ஜி வந்தார், “நமஸ்காரம். கிளம்பீட்டிங்களா?” என்றார்.

”ஆமாம் ஜி.”

”உங்ககிட்ட ஒண்ணு கேட்கனும், ஒரு நிமிஷம் இருக்கீங்களா?”

கங்காசரண் மாட்டு வண்டியிலிருந்து இறங்கி மர நிழலில் தினுவுடன் நின்றான். தினு அவன் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார், “எனக்கு ஒரு வேண்டுகோள் – “

“சொல்லுங்க”

“இன்னிக்கு உங்களுக்கு என்ன கிடைச்சுதோ அதுல எனக்குக் கொஞ்சம் தரணும்.”

“ஏன்?”

”பசிக்கொடுமை. வீட்டுல ஒரு குந்துமணி அரிசி கூட இல்லை. அரிசி விலை ஏறிக்கிட்டே போகுது. நாலரை ரூபா இருந்துது, இப்போ ஆறு ரூபாயாகிடுச்சு. அஞ்சாறு பேர் சாப்பிடனும். என்னால எப்படி சமாளிக்க முடியும்? என் ஒருத்தன் சம்பாத்தியம்தான். எனக்கும் வயசாகிக்கிட்டே போகுது. கண்ணும் மங்கிக்கிட்டே வருது. இப்போல்லாம் யாரும் என்னைப் புரோகிதத்துக்குக் கூப்பிடறதில்லை.”

கங்காசரண் மெதுவாக, “கஷ்டம்தான். உங்களுக்கு என்ன வயசாகுது?” என்றான்.

“அறுபத்தியொன்பது. பொண்ணுங்களுக்கும் வயசாகிக்கிட்டே போகுது. ஒரு மகன் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். நான் ஒருத்தந்தான் சம்பாத்தியம்.”

”அரிசி விலை அதிகமாகுதா?”

“இன்னும் அதிகமாகப் போகுதுன்னு கேள்விப்பட்டேன். நாங்க ஏற்கனவே பட்டினி. அரிசி விலை இன்னும் அதிகமானா என்ன செய்யப்போறோம்னு தெரியல. போர்னாலதான் இப்படி விலையேறுதுன்னு சொல்றாங்க.”

கங்காசரணும் போரைப் பற்றி அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்தான். அரிதாக சில சமயம் தலைக்கு மேலே விமானங்கள் பறப்பதையும் பார்த்திருக்கிறான். ஆனால் இந்தமாதிரி தூரப்பிரதேச கிராமங்களில் யாரும் செய்தித்தாள் வாங்குவதில்லை. பக்கத்து நகரம் ஏழெட்டு மைல் தள்ளி இருக்கிறது. கங்காசரண் தன் வேலையிலேயே கருத்தாக இருப்பதால் இதைப் பற்றி யோசிக்கவெல்லாம் நேரமே இல்லை. இருந்தாலும் அந்தக் கிழவர் சொன்ன செய்தி அவனுக்குக் கவலையளித்தது. ”என்கிட்டே இருந்து கொஞ்சம் அரிசி எடுத்துக்கோங்க. அப்புறம் பருப்பு, நெய்…”

“வேண்டாம், வேண்டாம், எனக்கு நெய்யெல்லாம் வேண்டாம். அரிசிக்கே வழியில்லாம நெய்யக் கொண்டுபோய் என்ன செய்யப்போறேன்? இதோ இவ்வளவு அரிசியும், பருப்பும் எடுத்துக்கறேன், அது போதும். இன்னிக்கு என் உயிரைக் காப்பாத்தீட்ட. பகவான் உனக்கு எல்லா ஆசிர்வாதமும் கொடுக்கட்டும்.”

கங்காசரண் வழியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டே வீடுபோய் சேர்ந்தான். அனங்கா அன்று கிடைத்த தட்சிணைப் பொருட்களைப் பார்த்துப் படு உற்சாகம் அடைந்தாள். “அரிசி கொஞ்சமா இருக்கே?”

”ஒரு வயசான பிராமணருக்குக் கொஞ்சம் கொடுத்தேன்.”

“அது நல்லதுதான். மத்தவங்களுக்கு உதவி பண்ணா நமக்கும் நல்லதுதான்.”

”அரிசி விலை ஏறப்போகுதுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.”

“ஆறு ரூபாய்க்கும் மேலயா? நிஜமாவா?”

”அப்படித்தான் சொல்றாங்க. போர் நடக்கறதாலயாம்.”

“யாருக்கும் யாருக்கும் போர்?”

“உனக்குப் புரியாது. நம்ம ராஜா ஜெர்மனி கூடயும் ஜப்பான் கூடயும் சண்டை போடறாரு. எல்லாம் விலையேறப் போகுது.”

“இருக்கட்டும். எப்படியும் பாதிப்பொருள் நாம காசு குடுத்து வாங்கறதில்லை. ஆனாலும் அரிசிப்பஞ்சம் வந்துட்டா…”

“நானும் அதைப் பத்திதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.”

அன்று மாலை இதைப் பற்றியெல்லாம் பிஸ்வாஸ் மஷாய் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். பிஸ்வாஸ் மஷாய் சொன்னார், “நாம கவலைப்பட வேண்டியதுதில்ல. ரெண்டு களஞ்சியம் நிறைய அரிசி வச்சிருக்கேன். என்ன ஆகுதுன்னு பாக்கலாம்.”

கிழவர் நவத்வீப் கோஷல் கேட்டார், “எத்தனை நாள் இந்த சண்டை நடக்கும்? ஜெர்மானியர்கள் எதோ ‘பூர்’ங்கற இடத்தைப் பிடிச்சிட்டாங்களாமே?”

“சிங்கப்பூர்” என்றார் பிஸ்வாஸ் மஷாய்.

”அது எந்த ஜில்லாவோ? நம்ம ஜெஸ்ஸூரா? இல்லை மமுத்பூர் பக்கத்தில குல்னாவா?”

பிஸ்வாஸ் மஷாய் பலமாகச் சிரித்தார். “ரெண்டும் இல்லை. சமுத்திரத்தைத் தாண்டி இருக்கு. பூரி (Puri) இருக்க மேதினிப்பூர் ஜில்லாவுல இருக்கு. இல்லையா பண்டிட் மஷாய்?”

கங்காசரணுக்கு உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஆமா, இன்னும் தள்ளி மேற்குப் பக்கத்துல” என்று மழுப்பினான்.

“பூரி பக்கத்துலையா? என் அம்மா அங்கே ஒருமுறை போயிருக்கா. பூரி, சாக்‌ஷிகோபால், புவனேஷ்வர். அது மேதினிப்பூர் ஜில்லாவுலதான இருக்கு?”

”ஆமா” என்றார் பிஸ்வாஸ் மஷாய்.

இந்த பூகோளப் பிரசங்கம் முடிந்ததும், எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்கள்.

அடுத்தநாள் கங்காசரண் மாணவர்களிடம் கேட்டான், “உங்களுக்கு யாருக்காவது சிங்கப்பூர் எங்கே இருக்குன்னு தெரியுமா?”

யாருக்கும் தெரியவில்லை. யாரும் அந்தப் பெயரைக்கூட கேள்விப்பட்டதில்லை.

கங்காசரண் தன் மகனைப் பார்த்துப் பெருமையாகப் புன்னகைத்து, “ஹபு, சிங்கப்பூர் எங்கே இருக்கு சொல்லு?”

ஹபுவும் பெருமையாக எழுந்து நின்று, “பூரிக்குப் பக்கத்துல, மேதினிப்பூர் ஜில்லாவுல” என்றான்.

மற்ற மாணவர்கள் அவனைப் பொறாமையோடும், வியப்போடும் பார்த்தார்கள்.

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 3மின்னல் சங்கேதம் – 5 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.