பய வியாபாரியா ஹிட்ச்காக்?

பஞ்சநதம்

[மூலம்: ஜான் பான்வில்‘The Haunted Imagination of Alfred Hitchcock’ : The New Republic, April, 2021]

ஹிட்ச்காக் என்ற பெயராவது தமிழகத்தில் ஏராளமான திரைப்பட ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்களைப் பார்த்தவர்களின் பங்கு இன்றைய பொதுஜனத்தில் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.  19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டில் பிறந்த இவர் 1980 இல் இறந்து விட்டார்.  50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர், 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியவர். இவர் இயக்கிய இறுதிப்படம் 1976 இல் வெளியானது. எனவே இன்று 40 வயதுக்குக் கீழே இருக்கும் நபர்களுக்கு இவரது படங்கள் அனேகமாகத் தொலைக்காட்சிப் பெட்டியின் மூலமாகத்தான் தெரிந்திருக்கும்.

பிரிட்டிஷ் இயக்குநரான டேவிட் லீன் போல விஸ்தாரமான திரையில் பார்த்தால் மட்டுமே எடுபடும் படங்களை எடுத்தவர் இல்லை ஹிட்ச்காக். அதனால் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்ப்பதால் பார்வையாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிராது, என்றாலும் தன் திரைப்படங்களில் விவரணைகள் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதிலும், காட்சிப்படுத்தல் கருக்காகவும், கதை சொல்லல் சிக்கனமாகவும் இருக்க வேண்டும் என்பதிலும், பார்வையாளருக்குக் காட்சிகளில் கொடுக்கப்படும் தகவல்கள் பிழையற்று ஆனால் அதிகம் கதையை விட்டுக் கொடுக்காதவையாக இருக்க வேண்டும் என்பதிலும் ஹிட்ச்காக் மிகக் கவனமாக இருந்தவர். அதனால் ஒருகால் 35 எம் எம் திரைப்படங்களுக்குப் பொருத்தமான அளவு திரையிலாவது பார்த்தால் இவரது படங்களின் நிஜமான தாக்கம் கிட்டி இருக்கலாம். ஒவ்வொரு சட்டகத்தையும் திட்டமிட்டு எடுத்தவர் என்பதால் இவர் நடிகர்களை, ‘கால்நடை’களுக்குச் சமமானவர்கள் என்று கூடக் கருதியதாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் கலைஞர்கள் என்றும் அவரே சொல்கிறார். பொருள் என்னவென்றால், இவரது திரைப்படம் என்ன பார்வையில் தொகுக்கப்பட்டது என்பது இவருக்குத் தான் தெரியும் என்பதால் நடிகர்கள் இவர் சொன்ன இடத்தில் இருந்து தம் கலையைக் காட்ட வேண்டும். இடவெளியை, ஒளிப்பதிவுக் கோணங்களை, ஒரு கதை அங்கத்தைக் காட்சிப்படுத்தலைத் தாம் இயக்க முயலக் கூடாது.

நாடகத்தனம் நிறைந்த கதைகளை அதிகம் படமெடுத்தார் என்பதால் இவரது கலைத் திறன் பெரும்பாலும் மறைவான பொருளாகவே இருந்திருக்கிறது. தன் கலைத் திறன் ஒரு காட்சிப் பொருள் அல்ல, அது கதை சொல்லலுக்குத் தோதான, உதவி செய்யும் பின்புலன், அவசியமானது ஆனால் பின்புலன் மட்டுமே என்று இவர் கருதுவது இவருடைய பேட்டிகளில் புலனாகிறது. இவர் ஒரு பேட்டியில் தெளிவாகச் சொல்கிறார், கதை சொல்லல்தான் முக்கியம். அதை எப்படிச் சொல்வது என்று யோசித்துச் செய்வதுதான் திறமை.  காட்சிப்படுத்தலில்தான் சினிமா உருப்பெறுகிறது, உள்ளடக்கம் என்னவாக இருந்தாலும் தனக்குக் கவலை இல்லை என்றே சொல்கிறார்.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இவர் பெரும் இயக்குநர் என்று கொண்டாடப்பட்டது நேர்ந்தது. என்றாலும் ஒரு வணிக இயக்குநர் என்ற சற்றே இளக்காரமான பார்வையும் இவர்பால் தொடர்ந்து வீசப்பட்டு வந்தது நிஜம்.  ஹிட்ச்காக்கைப் பொறுத்தவரை அதெல்லாம் ஒரு பொருட்டல்ல, விமர்சகர்களை விட அவருக்குத் தன் இயக்கம் என்ன வகையானது, தன் வெற்றி எத்தனை அளவு என்பன தெரிந்தே இருந்தன.  அவர் சக இயக்குநர்களின் பேச்சைக் கேட்பார், ஆனால் விமர்சகர்களை அத்தனை பொருட்படுத்தியது இல்லை. இருப்பினும் தன்னிடம் உரையாட வந்த எழுத்தாளர்கள், திரைத் துறையினரோடு விரிவாகப் பேசி இருக்கிறார்.

 அவர் எத்தனை தூரம் கட்டுப்பாட்டுடன் கதை சொன்னார் என்பதை நாம் அறிய ஒரு பேட்டியைப் படிக்கலாம். அதில் அவர் தன் அணுகல் பற்றிவிரிவாகப் பேசுகிறார். அது இங்கே உள்ளது: https://the.hitchcock.zone/wiki/Cinema_(1963)_-_Hitchcock_on_Style:_An_Interview_with_Alfred_Hitchcock

இதில் அவர் தன் இயக்கத்தை எத்தனை தூரம் சிந்தித்துக் கட்டமைத்திருக்கிறார் என்பது புலனாகும். பிறகும் அவரை ‘வணிக’ இயக்குநர் என்பது அவரது சிந்தனைத் திறனை மதிக்காது மேலோட்டமாக அணுகுவதாக ஆகும். பிழை நம்முடையது என்று ஆகும்.


இந்தக் கட்டுரையை நான் தயாரிக்க இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று காக்கைகளைப் பற்றி இரண்டு கட்டுரைகளை இந்த இதழில் சேர்க்க வேண்டி வந்தது. காக்கை என்றவுடன் என் மனதில் முதலில் தோன்றிய உருக்களில் ஹிட்ச்காக்கின் புகழ் பெற்ற ‘த பேர்ட்ஸ்’ என்ற படத்திலிருந்து ஒரு காட்சி இருந்தது. 1963 ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தை நான் 2000த்திற்கு அப்புறம்தான் பார்த்தேன், அதுவும் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் பார்த்தேன். 1990களிலேயே திரைப்படங்களின் தொழில் நுட்பம் ஏகமாக முன்னேறி விட்டிருந்ததால் த பேர்ட்ஸ் படத்தின் பல காட்சிகள் பழைய உத்திகள் கொண்டவையாக எனக்குத் தெரிந்தன. ஆனால் அவை 1960களின் துவக்கத்தில் பிரமாதமான தொழில் நுட்பமாகத் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவுக்கு வரும்போது 65, 66 கூட ஆகியிருக்கலாம். ஆனால் இந்தக் காட்சியை விட,  ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இந்தப் படத்தை ஒட்டி விளம்பரத்துக்குத் தயாரித்த ஒரு ஸ்டில் காட்சிதான் என் மனதில் நின்ற ஒரு பிம்பம். அந்தப் படத்தை இங்கே இட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவை எல்லாமே, கட்டணம் கட்டினால்தான் கிட்டும் என்ற நிலை இருக்கலாம். வலையில் தேடினால் அந்தப் படத்தைக் காண முடிகிறது. (https://i1.wp.com/nofspodcast.com/wp-content/uploads/2018/03/The-Birds-Alfred-Hitchcock.jpg?resize=900%2C450&ssl=1)

அந்தப் படத்தின் பல ஒளிப்படங்களை இங்கே காணலாம்: https://tinyurl.com/46xjfxu6

காக்கைகளைப் பற்றிய கட்டுரையைத் தயாரிக்கையில், தற்செயலாக ஹிட்ச்காக் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்திய சஞ்சிகை ஒன்றில் வந்திருப்பதைக் கண்டேன். அவருக்கு எதெதெல்லாமோ பற்றிய அச்சம் இருந்தது, அந்த அச்சங்களை வைத்துக் கொண்டே அவர் பல திகில் படங்களைத் தயாரித்தார் என்று அந்தக் கட்டுரையாளர் சொல்ல முயல்கிறார். அந்தக் கட்டுரையாளரும் சாமானியமான எழுத்தாளர் இல்லை. அவரும் ஒரு புகழ் பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர்தான். ஹிட்ச்காக் போலவே அவரும் பார்ப்பதற்கு ஒரு தோற்றமும், மறைவில் இன்னொரு தோற்றமும் கொண்டவர். ஆனால் இங்கு வெளி/ உள் என்று சொல்வது ஒரு உருவகமாகத்தான்.

அவருடைய இயற்பெயர் ஜான் பான்வில். இந்தப் பெயரில் அவர் இலக்கியமான நாவல்களை எழுதுகிறார். சமீப காலம் வரை பெஞ்சமின் ப்ளாக் என்ற பெயரில் குற்றப் புனைவுகளையும் (பக்கவாட்டில்) எழுதிக் கொண்டிருந்தார். மிகச் சமீபத்தில் அந்தப் பெயரை விட்டு விட்டு, தன் நிஜப் பெயரிலேயே அதே வகை மர்ம நாவல் ஒன்றை எழுதி இருக்கிறார். பல பெயர் பெற்ற நாவல்களை எழுதியிருக்கிற ஜான் பான்வில், 2005 இல் புக்கர் பரிசையும் பெற்றவர். ஜான் பான்விலுக்கும் ஹிட்ச்காக்கிற்கும் இன்னொரு ஒற்றுமை உண்டு. இருவரும் கல்லூரி வாசலைக் கூட மிதிக்கவில்லை. பள்ளிக் கூடத்தோடு படிப்பை நிறுத்திக் கொண்டவர்கள். சுயமாக எல்லாவற்றையும் கற்றுக் கலைஞர்களானவர்கள்.

ஜான் பான்வில் பற்றி முன்னர் சொல்வனத்தில் எழுதி இருக்கிறோம். இது அவர் எழுதிய கட்டுரையின் நெருக்கமான தழுவல்.

***

நெடுநாட்கள் முன்பு வாலிபப் பருவத்தில் ஹிட்ச்காக்கின் படங்களுக்கு நுழைவனுமதி பெறுவது என்பது வளர்ந்தவனாகி விட்டதற்கான சான்றிதழாகக் கூட  இருந்தது. (சென்னையில் இப்படி இருந்தது.) இன்று இளைஞர், சிறுவர் என்றில்லாமல் யாரும் வீட்டுக்குள்ளேயே எந்த வகைப் படங்களையும் பார்க்க முடிகிறது. உலகம் மூழ்கிப் போகவில்லை, ஆனால் எத்தனை சிறுபிராயத்துப் புத்திகள் தீவிரமான களிம்பேறிப் போகின்றன என்று யாரால் கண்டு பிடிக்க முடியப் போகிறது?

ஜான் பான்வில் இந்தக் கட்டுரையை எழுத ஒரு முகாந்திரம் உண்டு. பிரிட்டிஷ் திரை இயக்குநர் ஹிட்ச்காக்கின் சரிதையை எட்வர்ட் ஒய்ட் என்பவர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார்.[1] இந்தப் புத்தகத்தை பான்வில் மதிப்பிட்ட கட்டுரை இது.

ஹிட்ச்காக்கை ஒரு தேர்ந்த இயக்குநர் என்று ஃப்ரெஞ்சு நூவல் வேக்[2] (புது அலை) அணியைச் சேர்ந்த இயக்குநர்கள்  கொண்டாடினார்கள். (இந்த ஃப்ரெஞ்ச் திரைப்படப் பாணியைக் கைக்கொண்டு திரைப்படங்கள் எடுக்கும் முறையில் பெரும் மாற்றங்களைக் கொணர்ந்த இளைஞர்கள், 50களின் இறுதியில் எழுச்சி பெற்றவர்கள். உலக சினிமாவையே கூட உலுக்கி எடுத்தவர்கள், உங்களுக்குத் தெரிந்திருக்கும்.) சில அமெரிக்க இயக்குநர்களையும், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கையும் இவர்கள் கொண்டாடினார்கள். அவரை இப்படிப் பீடமேற்றுமுன் திகில்படங்களையும், மர்மப் படங்களையும் எடுக்கும் ஒரு வணிகப் பட  இயக்குநர் என்றுதான் ஹிட்ச்காக் அறியப்பட்டிருந்தார். குறிப்பாக ஃப்ரான்சுவா த்ரூஃபோ  ஹிட்ச்காக் பற்றிப் புத்தகம் ஒன்றை எழுதியதோடு, அவரோடு பல மணி நேரம் உரையாடியதை ஒரு ஆவணப் படமாகவும், ஒலிப் பதிவாகவும் வெளியிட்டிருக்கிறார்.[3]

பான்வில் எழுதிய கட்டுரை துவங்கும் புள்ளி சற்று வினோதமானது. 20 ஆம் நூற்றாண்டின் இலச்சினை மனிதர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் திரைப்படத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு நபராக ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இருப்பார். பான்வில் இதை மனதில் கொண்டு, மொத்த 20 ஆம் நூற்றாண்டின் லட்சணங்களில் ஒன்றைப் பொறுக்கி எடுத்து வைத்துத் துவங்குகிறார். அந்த லட்சணம் ஹிட்ச்காக்கின் ‘கலையின்’ மையத்தில் உள்ள ஒன்று என்பதுதான் சிறப்பு.

இருபதாம் நூற்றாண்டு விளக்க முடியாத வினோதங்களின் யுகத்தைக் கொணர்ந்தது. புதிரானவை, தெரிந்தவை போல இருந்தாலும் அவற்றில் ஏதோ விளக்கமுடியாத, சில நேரம் நிலை குலையச் செய்யும் தன்மைகள் இருப்பவை என்று எதையெல்லாமோ உலகெங்கும் நுழைத்தது இருபதாம் நூற்றாண்டு என்கிறார் பான்வில்.  அவர் புதிரானது என்று சொல்லப் பயன்படுத்தும் சொல் ‘அன்கேனி’. ஒரு கொக்கியால் நம் கவனத்தை ஈர்த்து விட்டு, மேலும் விளக்குகிறார்.

இவை இருபதாம் நூற்றாண்டில்தான் தோன்றியன என்றில்லை, பண்டைச் சமூகங்களில் இருந்தே இந்த விதமான விஷயங்கள், சம்பவங்கள், மனிதர்கள் இருந்ததுண்டு. பேயுருக்கள், சாவின் நெடியுள்ளவை, வாழ்வில் சாவின் சாயல், சாவில் வாழ்வின் நீட்சி போன்ற பற்பல இந்த வருணனையில் அடங்கும். இவை எல்லாம் பண்டை நாகரீகங்கள்,இலக்கியங்களில் இருந்தன. மத்திய காலத்திலும் இது தொடர்ந்தது. நவீன காலத்தில் இது நீண்டதே தவிர இப்போதே உருவாக்கப்பட்ட ரசமோ, அல்லது பாணியோ அல்ல இது.

ஆனால் ஒரு நூறாண்டு பூராவும் இந்த ரசனையால் நிரப்பப்பட்டது என்று சொன்னால் அது இருபதாம் நூற்றாண்டாக இருக்கும். பான்வில் ஃப்ரா(ய்)டை இங்கு மேற்கோள் காட்டுகிறார். ”திகிலூட்டும் வகைகளில் அடங்கும் ஒன்று, இது நமக்கு நெடுநாட்களாகத் தெரிந்த ஒன்றுக்கு, நன்கு அறிமுகமான ஒன்றுக்கு, பின்னோக்கி இட்டுச் செல்லும்,” என்று ஃப்ராய்ட் ‘அன்கேனி’ என்பதை விளக்குகிறார். பான்வில் ஓர் உதாரணம் தருகிறார். நாம் ஜன்னல் வழியே வெளியே நோக்குகிறோம், தெருவில் நமது நகல் போன்ற ஒரு நபர் நிற்பதாக வைப்போம், அதுதான் எத்தனை அச்சுறுத்தலாக இருக்கும் என்று கேட்கிறார்.

[எனக்கு அது ஏன் அச்சுறுத்தலாக இருக்கும் என்று விளங்கவில்லை. உங்களுக்கு விளங்கலாம். ]

ஃப்ரா(ய்)ட் அப்படி எழுதியபோது வருடம் 1919. உலகம் இன்னும் முதல் பெரும் யூரோப்பிய யுத்தத்தின் முடிவிலிருந்து மீளவில்லை. (அதை உலக யுத்தம் என்று சொல்லித் தம் நிலப்பரப்பை உலகின் மையமாக்கிக் கொண்டார்கள் யூரோப்பியர்.) அந்தப் போரின் சாவுக் களை யூரோப்பில் எங்கும் பல வருடங்களுக்குப் பரவியிருந்தது. தந்தைகள், மகன்கள், சகோதரர்கள் எல்லாம் போருக்கு அணி வகுத்துப் போனவர்கள், ஏதோ ஒரு ரசவாதத்தால், அடையாளமற்ற போர்க்கருவிகளாக, எந்திரங்களாக, பிணங்களாக மாறியதை என்னவென்று சொல்ல?

ஹிட்ச்காக்கின் வாழ்வுச் சரிதத்தை எழுதிய எட்வர்ட் ஒய்ட், இதைப் பேசுகையில் சொல்கிறார், “ ஹிட்ச்காக் நிறையவும் விரிவாகவும் படித்தவர். உளவியல், அரசியல், தத்துவம் மற்றும் கலைகளில் கிட்டத்தட்ட எல்லாத் துறைகளையும் பற்றி தேர்ந்த உரையாடல் நடத்த வல்லவர்.” பான்வில்லின் கருத்தில், அப்படிப்பட்ட ஹிட்ச்காக் நிச்சயம் ஃப்ராய்டின் கட்டுரையைப் படித்திருக்க வாய்ப்பு உண்டு. நம் அனைவருக்கும் தெரிந்ததில் பொதிந்திருக்கும் வினோதங்களைப் பற்றி மனதில் உள்ளடங்கி இருக்கும் ஈர்ப்பை அவர் தெரிந்து கொண்டு அதை உசுப்பி, நம்மை அங்குள்ள வினோதங்களை உசாவச் செய்து, நம்மை அச்சுறுத்துவனவற்றை வெளியில் கொணர்ந்து நோக்கும்படி செய்கிறார். அவர் மனநல மருத்துவம் பார்க்கவில்லை. ஒரு காட்சிப் பொருளை, கேளிக்கை என்ற பெயரில்தான் கொணர்கிறார். அதை நாம் எப்படி உள்வாங்குகிறோம், அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்பதில் அவருக்குக் கொஞ்சம் அக்கறை உண்டு என்றாலும், திரள் சமூகத்தின் போக்கு என்ன என்பதை நாடி பிடித்துப் பார்க்கத்தான் அவருக்கு ஈடுபாடு இருக்கிறது. நாம் புதிரானவற்றைப் பற்றிக் கொள்ளும் அச்சம், அதே நேரம் அவற்றின் மீது நமக்கு உள்ள வசீகரம் ஆகியனவற்றையே ஹிட்ச்காக் தன் கலைவாழ்வுக்கு அடித்தளமாக ஆக்கிக் கொண்டார்.  தன்னுடைய ஆளுமையில் கூட தன்னைப் போன்ற ஒரு பிரதியை உருவாக்கி அதை பொதுத்தளத்தில் ஒரு பிம்பமாக உலவ விட்டு, அதன் நிழலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பதுங்கிக் கொண்டார் என்று எட்வர்ட் ஒய்ட் சொல்வதாக பான்வில் தெரிவிக்கிறார்.

மத்திய தர வாழ்வின் அடித்தளத்திலிருந்து வருகிற ஹிட்ச்காக், தன் வாழ்வின் துவக்கத்திலிருந்தே முப்பரிமாண உலகை இருபரிமாணத் திரையில் நிழல் நாடகமாகக் காட்டுவது   குறித்து மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஆனால் இன்றளவும் நமக்கு முன்னிருப்பது ஒரு பிம்பம், வழுக்கைத் தலை கொண்ட, திறம்பட தைக்கப்பட்ட சூட் ஒன்றை அணிந்த, பெருத்த இடையைக் கொண்ட, அடி உதடு பிதுங்கிய ஒரு மனிதனின் உருதான் அது. துவக்க கால ஹிட்ச்காக்கின் படங்கள் நம் முன் அதிகம் காணப்படுவதும் இல்லை, அவற்றை நாம் நினைவு கொள்வதும் இல்லை. இத்தனைக்கும் அவர் தன் துவக்க வருடங்களில் நிறையப் படங்கள் எடுத்து அவற்றில் அவர் காட்டிய திறமையால்தான் ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் தயாரிப்புகளுக்கு அழைக்கப்பட்டார்.  அந்தத் துவக்க காலப் படங்களில் சில இன்றளவும் திரைப்படக் கலை நிபுணர்களால் பேசப்படுகின்றன.  இப்படி ஹாலிவுட் படங்களில் மனிதர்களின் அச்சங்களைப் பயன்படுத்தி அவர்களைக் கிளர்ச்சியுறச் செய்த படங்களை எடுத்து பெரும் பணமும், புகழும் சம்பாதித்த ஒரு மனிதரான ஹிட்ச்காக் என்பவர் யார், அவருடைய நிஜ உரு என்ன? அவருடைய பிம்பத்துக்குப் பின்னே இருந்த நிஜ மனிதர் யார்? இல்லை எல்லாமே பிம்பமும், நிழல் நாடகமும்தானா? இது ஒய்ட்டின் புத்தகத்துடைய கேள்வி.

50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த ஹிட்ச்காக்கின் முதல் 20+ படங்கள் பிரிட்டனில், பெருமளவும் கருப்பு வெளுப்புப் படங்களாக, இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதிக்கு முன்பே எடுக்கப்பட்டவைதான். 1940 இலிருந்து 1976 வரை அவர் அமெரிக்காவில் வசித்தபடி படங்களைத் தயாரித்தார். இவற்றிலும் சில யூரோப்பிலும், பிரிட்டனிலும் எடுக்கப்பட்டவை என்றாலும் பெரும்பாலான பிற்காலப் படங்களை அவர் அமெரிக்காவில்தான் தயாரித்தார்.

அவருடைய கதாநாயகர்களில் முக்கியமான ஒரு நடிகர் காரி க்ராண்ட், அவரும் ஓர் இங்கிலிஷ்காரர்தான். பான்வில் எழுதுகிறார், இந்த இரு அசாதாரணமான உருக்களுமே மூல நபர்களின் நகல் உருக்கள்தான். ஒரு உரு நகைக்கக் கூடிய விதத்தில் குரூரமானது (ஹிட்ச்காக்), இன்னொரு உரு சாதாரண மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் வசீகரமானது (காரி க்ராண்ட்).

80 வயதில் இறந்த ஹிட்ச்காக், தோற்றத்திலும், வாழ்விலும் ஓர் இங்கிலிஷ்காரராகவே இருந்தார். அதுவும் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலிஷ்காரர் போலவே நடந்து கொண்டார். இத்தனைக்கும் அவர் பிறந்ததே 19 ஆம் நூற்றாண்டின் கடைசி வருடத்தில்தான். தன் வாழ்நாள் முழுதும் அவர் தன்னுடைய இங்கிலிஷ் பேச்சு வாகை இழக்கவில்லை. அது அவர் வளர்ந்த லண்டனின் கிழக்கு மூலைப் பகுதியின் பேச்சு வழக்கும், உயர்நிலை இங்கிலிஷ்காரர்களின் பேச்சு வழக்கும் கலந்த ஒரு பாணி. பின்னது கோமான்களின் தனிநபர் குழுமங்களில்தான் அதிகம் பேசிக் கேட்கக் கூடிய பாணி.  1955 இல் அவர் அமெரிக்கக் குடிமகனாக ஆனாலும், அவருக்கு அது குறித்துக் கடைசி வரை ஐயம் இருந்தது. ஒரு நண்பரிடம் அவர் சொன்னது, ”ஹிட்ச்காக் என்ற பெயர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் துவக்க காலத்திலிருந்தே இருக்கிற ஒரு பெயர். பிரிட்டிஷ் மரபுகளையும் , வரலாற்றையும் விட்டு விடுவது அத்தனை சுலபமாக இல்லை.” ஆனால் டேவிட் தாம்ஸன் என்ற விமர்சகர் சுட்டுவது போல, ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ திரைப்படம் 1960களின் துவக்கத்திற்கு ஒரு அடையாளச் சின்னம். அந்தப் பத்தாண்டுகள் வெறும் பத்தாண்டுகள் இல்லை, ஒரு யுகத்துக்குச் சமானமானவை. பண்டை யூரோப்பிய நாகரீகத்துடன் ஓர் முறிவை ஏற்படுத்த முயன்ற பத்தாண்டுகள் அவை.

ஹிட்ச்காக் 1899 இல் பிறந்தார், அவருடைய பெற்றோருக்கு மூன்று குழந்தைகள். ஹிட்ச்காக் கடைசி. அவருக்கு ஆறு வயதான போது அவருடைய தந்தை இரண்டு சிறு உணவு விடுதிகளை  வாங்கினார். அவற்றில் ஒன்றின் மேல் தளத்தில் குடும்பம் வசித்தது.  ஹிட்ச்காக்கின் இளம் வயது, காய்கறி வியாபாரிகள், தெருச் சந்தை வியாபாரிகள், உணவு விடுதி வாடிக்கையாளர்கள், மதுபானக் கடையில் பானங்கள் விற்கும் பெண்கள் போன்றவர்கள் நடுவே மலினமான நகைச்சுவை உணர்வும், எப்போதும் அடித்தளத்தில் வன்முறைக்கான அச்சுறுத்தலும் நிறைந்த ஓர் உலகில் கழிந்திருந்தது என்று ஒய்ட் எழுதுகிறார். 

அவரிருந்த வட்டாரத்தில் ஹிட்ச்காக்கின் குடும்பம் சற்று மாறுபட்டது. இவருடைய குடும்பம் ரோமன் கதோலிக்கர்கள், ஏனெனில் இவர்கள் ஐரிஷ் வம்சாவளியினர். ஹிட்ச்காக் சர்ச் உறுப்பினராக வளர்ந்து, கதோலிக்க மத போதகர்களான ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்பட்டார். சர்ச்சுடைய போதனைகளும், சடங்குகளும் அவருடைய குடும்ப வாழ்வின் மையத்திலிருந்தன என்று ஒய்ட் எழுதுகிறார்.  பீடரின் முதல் பாசுரத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி ஹிட்ச்காக்கின் அப்பா, அவரை ‘கறையில்லாத ஆடு’ என்று சொல்வாராம். அவருடைய அம்மா, எம்மாவோ, சிறுவன் ஆல்ஃப்ரெட்டைத் தினம் இரவில் உறங்கு முன் தன் கட்டிலின் முன் நின்று ‘பாவங்களை’ ஒத்துக் கொண்டு பிரார்த்திக்கும்படி வற்புறுத்துவாராம். இவை ஹிட்ச்காக்கின் நினைவிலிருந்து நமக்குக் கிட்டும் தகவல்கள், நம்பகத்தனமை என்பது நாம் ஹிட்ச்காக்கின் மீது எத்தனை நம்பிக்கை வைக்கிறோம் என்பதைப் பொருத்தது என்று ஒய்ட் எச்சரிக்கிறார்.

ஹிட்ச்காக்  நீண்ட காலத்துக்கு கதோலிக்க நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்ற எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்தது போல, கல்வி போதகர்களான கதோலிக்கப் பாதிரிகளின் சாதுரியமான போதனை முறைகளால் ஊடுருவப்பட்ட இளம் புத்திகள், வாழ்நாள் பூராவும் அந்தப் போதனையின் சிக்கல்களிலிருந்து விடுபடுவதில்லை என்பதால், ஹிட்ச்காக்கின் உணர்ச்சிகளையும், அவரது சிந்தனையையும் சர்ச்சின் வழிபாட்டு முறைகளும், சடங்குகளும் பாதித்திருந்தன என்கிறார் ஒய்ட். அவர் எழுதுவது, “ஹிட்ச்காக்கின் பல படங்கள் பார்வைக்கு கதோலிக்கத் தன்மை கொண்டே இருந்தன…. வெர்மாண்ட் மாநிலத்தின் இலையுதிர் கால நிறங்களும், ஷர்லி மக்லெய்னின் அடர்ந்த ஊதா நிற ஆடையும், த ட்ரபிள் வித் ஹாரி படத்தில் சில காட்சிகள் நகர்கிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிச் சாளரங்கள் போலவே இருக்கின்றன.” [4]

இதிலிருந்து நீட்சியாக ஹிட்ச்காக்கின் படங்களில் இதர கதோலிக்க மரபின் பாதிப்புகளைப் பார்ப்பது அதீதமான முயற்சியாக இராது. அவர் தன் படங்களில் திரும்பத் திரும்ப மையப் பாத்திரங்களில் பயன்படுத்திய, அதிகம் உயிர்த் துடிப்பைக் காட்டாத, மஞ்சள் நிறக் கூந்தலுடைய நடிகைகளின் உருக்கள் அவர் தன் சிறு பிராயத்தில் அடிக்கடி எதிர் கொண்டிருக்கக் கூடிய கன்னிமேரியின் சித்திரங்கள் அல்லது பொம்மைகளை நமக்கு நினைவூட்டுவன.  அன்றைய வீடுகளில் ஏராளமானவற்றில் “ ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி” (மேரி) அவருடைய மகனை விடவும் பிரபலமாக இருந்தார். ஹிட்ச்காக்கின் சிறந்த படங்களில் ஒன்றான, வெர்டிகோ என்ற படத்தின் வன்முறைக் காட்சிகள் சர்ச்சின் மணிக்கூண்டில் நிகழ்த்தப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.  

படிமக்கலை கதோலிக்கர்களின் வளர்ப்பில் நிறைய ஆட்சி செய்கிறது, திரு உருவங்கள் திரும்பிய பக்கமெல்லாம் அவர்களின் சிறு பிராயத்தைப் பாதிக்கின்றன.[5]இது அடர்த்தியாக திரு உருவங்களால் நிரப்பப்பட்ட உலகம். மிக அமைதியான தோற்றம் கொண்ட புனிதர்களின் உருக்கள் கூட, கூட்டமாக வடிக்கப்படுகையில் ஏதோ அச்சுறுத்தலைக் கொணர்வனவாகத் தெரிகின்றன- ”நாங்கள் இங்கேதான் இருக்கிறோம், எப்போதும் கண்காணிக்கிறோம்.”

புதிராக, கிலேசமூட்டுவதாக இருப்பதாக பான்வில் பார்க்கிறவற்றில் ஒரு முழு மனித வடிவளவில் ஒரு உரு சிலுவையில் ரத்தமொழுகக் காட்சி தருவதும் சேர்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, எல்லா உண்மையான நம்பிக்கையாளர்களிடமும் வாழ்நாள் பூராவும் ஒரு நிம்மதியின்மையும், பெயர் சொல்ல முடியாத கவலை கலந்த அச்சமும் நிலவுகிறது. ஒய்ட் எழுதுகிறார்: “அவருடைய மிக விரிவான நினைவுகள்- குறைந்தது இவற்றைப் பற்றித்தான் அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் – எல்லாம் பயம் பற்றியவை. இந்த எரிபொருளை நம்பித்தான் அனைத்தையும் நசுக்கி ஓடும் ஹிட்ச்காக் வாகனம் ஓடியது. அவர் கிட்டத்தட்ட எதைப் பார்த்தாலும் தான் அச்சமடைவதாகச் சொல்லிக் கொண்டார்: பொலீஸ்காரர்கள், புது மனிதர்கள், காரோட்டுவது, தனிமை, கூட்டங்கள், உயரங்கள், தண்ணீர், மேலும் எந்த வகை மோதலும்.”

ஆக, சில்லிடும் சுவர்க்கத்தின் கீழே, பூமியின் உருண்டை இருக்கிறது, அதன் சித்திரவதைகளும் இருக்கின்றன.

ஹிட்ச்காக் (ஃப்ரெஞ்சு இயக்குநர்) த்ரூஃபோவிடம் தன் சிறு பிள்ளைப் பிராயக் கதை ஒன்றைச் சொல்கிறார். அவருடைய அப்பா அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்புகிறார். அந்தக் குறிப்பில் இவர் செய்த ஒரு தவறான நடத்தை சொல்லப்பட்டிருக்கிறது. “போலிஸ் தலைவர் அந்தக் குறிப்பைப் படித்து விட்டு, என்னை ஒரு சிறையில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அடைத்தார், “இதைத்தான் நாங்கள் விஷமக்காரப் பையன்களுக்குச் செய்வோம்,” என்று சொன்னார்.”  ஒரு முறை அவர் இரவில் விழித்த போது வீடு காலியாக இருந்தது. அவருடைய பெற்றோர் வீட்டிலிருந்து நழுவி உள்ளூர் மதுபானக் கடைக்குப் போயிருக்கிறார்கள். ஹிட்ச்காக் தான் அனாதையாகக் கைவிடப்பட்டதாக உணர்ந்ததாகச் சொல்கிறார். சமையலறையில் கிலி பிடித்து நின்றதை நினைவு கூர்கிறார். தன்னை அமைதிப்படுத்திக் கொள்வதற்காக, அவர் சமைத்த மாமிசத் துண்டுகளை ஒவ்வொன்றாக விழுங்கியபடி இருந்தாராம். இதைச் சொல்கையில், தனக்கே உரிய பாணியில் அவர் இதிலிருந்தும் ஒரு நகைச்சுவையை உரித்தெடுக்கிறார். ஒய்ட் எழுதுகிறார், “இந்தச் சம்பவம் அவரிடம் நிரந்தரமாக இருட்டின் மீது ஓர் அச்சத்தை விட்டுச் சென்றது… அதோடு குளிர்ந்த துண்டு மாமிசங்கள் மீதும் வெல்லப்பட முடியாத வெறுப்பைக் கொடுத்திருந்தது.”

ஹிட்ச்காக் பள்ளிப் படிப்பை 15 வயதுக்கு முன்னரே விட்டு விடுகிறார். தந்தி அனுப்பும் நிறுவனத்தில் முழு நேர வேலையில் அமர்கிறார். அங்கிருந்து விளம்பர இலாகாவுக்குப் போகிற போது அவருக்குக் கற்பனை உலகு பிடிபடுகிறது. லண்டன் பல்கலையில் ஓவியக் கலையில் மாலை நேர வகுப்புகளில் சேர்கிறார். வாசிப்பில் நடுவாந்திரமான புத்தகங்களையே படித்திருந்தார். ஜே. எம். பாரி, ஜான் பஹ்கன், மேலும் பயங்கர உணர்வைத் தட்டி எழுப்புவதில் சிறப்புத் திறன் கொண்ட எட்கர் ஆலன் போ போன்றார். போ வின் பாதிப்பு பல வருடங்கள் கழித்து ‘மர்மப் படங்கள்’ எடுப்பதில் இறங்கச் செய்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நாஜி படுகொலைப் பாசறைகளில் ஆவணப்படம் எடுக்கப் போன அனுபவம் அவரைப் பாதித்திருக்க வேண்டும். ஃப்ரெஞ்ச் விமர்சகர், ழான் லூயி கொமோல்லி இது பற்றிப் பேசுகையில் சொல்வது இது, “தெரிந்ததை, பழகிய ஒன்றைத் தாங்கமுடியாதபடி அருவருப்பூட்டும் ஒன்றோடு அடுத்தடுத்து வைப்பது ஹிட்ச்காக்கின் அபாரமான கருப்பொருள்களில் ஒன்று.”; இது அந்த ஜெர்மன் பாசறைகளைப் பற்றிய ஆவணப்படத்திலும் காணப்படும் ஒன்று. ஒய்ட் இந்தப் படத்தைப் பற்றிப் பேசுகையில் சொல்கிறார், ஓரிடத்தில் காமெரா தயங்குகிறது, அது பளீரென்று ஒளிவீசும் வெள்ளை நிறத்தில் உள்ள ஓர் அறை வாசல். அது  ‘ப்ரௌஸெபாட்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஜெர்மன் மொழியில் ‘ஷவர் பாத்’ என்று பொருள்.

பலியாக்கப்பட்ட எண்ணிறந்த மனிதர்களை ஏமாற்ற அது குளியலறை என்று குறிக்கப்பட்டிருந்தது. அங்குதான் ஆயிரக்கணக்கானவர்கள் விஷவாயுவால் கொல்லப்பட்டிருந்தனர். ஒய்ட் எழுதுகிறார்,” சைக்கோ படத்தில் வரும் குளியல் காட்சியின் தாளகதி இருக்கிறதே, அது என்னதான் வாழ்வை அவமதிக்கும் காட்சிகளில் ஒன்றாகத் தெரிந்தாலும், அதை நம் மனதிலிருந்து அகற்றுவது எளிதாக இராது.” இந்த இடத்தில் ஹிட்ச்காக்கைப் பொருத்தவரை ‘சைக்கோ’ படம் ஒரு இன்பச் சுவை நாடகம்தான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர் அந்த கெட்ட பெயர் வாங்கிய குளியல் காட்சியைப் பற்றிச் சொல்லுகையில், “நான் கேலி செய்யும் நோக்கத்தோடுதான் அதை இயக்கி இருந்தேன்.”

(தொடரும்)


[1] த ட்வெல்வ் லைவ்ஸ் ஆஃப் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்: ஆன் அனாடமி ஆஃப் த மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்எட்வர்ட் ஒய்ட் –   நார்டன் அண்ட் கம்பெனி, 400 பக். 2021

[2] நூவல் வேக் பற்றி அறிய சுருக்குப் பாதை: https://en.wikipedia.org/wiki/French_New_Wave

[3] https://www.theguardian.com/film/2015/may/12/when-hitchcock-met-truffaut-hitchcock-truffaut-documentary-cannes

[4] இங்கு சுட்டப்படுவது சர்ச்சுகளில் காணப்படும் வண்ணக் கண்ணாடிகள் கொண்ட பெரும் சாளரங்கள். இங்கிலிஷில் இவற்றை Stained Glass Windows என்று சொல்கிறார்கள்.

[5] இந்தக் கட்டுரையின் மூலம் ஒரு ஐரிஷ் கதோலிக்கரால் எழுதப்பட்டது.

தொடர்புள்ள இடுகை:

Series Navigationபய வியாபாரியா ஹிட்ச்காக்? >>

One Reply to “பய வியாபாரியா ஹிட்ச்காக்?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.