பத்மா அர்விந்த் – பேட்டி

உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? (

அப்பாவின் பிறந்த ஊர் ஒப்பிலியப்பன் கோவில், அம்மாவிற்கு மன்னார்குடி. நான் வளர்ந்ததெல்லாம் மாயவரம், கும்பகோணத்தை சுற்றியுள்ள பல ஊர்களில், ஆனால் படித்தது கும்பகோணத்தில். கல்லூரிக்காக ஜிப்மர், பிறகு அகில இந்திய வைத்திய விஞ்ஞான கழகம் சென்று பிறகு மேல் ஆராய்ச்சிக்காக ஹுஸ்டனில் உள்ள ஆண்டர்சன் புற்று நோய் ஆராய்ச்சிக்கழகம் வந்தேன். பிறகு கார்னெல் சென்று மார்பக புற்றுநோய் மரபணு மாற்றங்களில் ஆராய்ச்சி செய்தேன். பிறகு மேலாண்மை மற்றும் பொதுநலத்துறையில் படிக்க சென்றேன். அதன் பின் நியூ ஜெர்சி அரசாங்கத்தில் பணியாற்றுகிறேன். இப்போது அமெரிக்க மத்திய அரசின் மூலமாக உடல்நல மனிதவள பணிகளுக்கான ஆலோசகராகவும் நியுஜெர்சி மாநிலத்தின் மனித வள துறையிலும் பணி செய்துகொண்டிருக்கிறேன். நானும் என் தோழிகளும் சேர்ந்து  ஒரு இலாப நோக்கற்ற bridging talent ecosystem என்ற அமைப்பையும் விளிம்பு நிலை பெண்களுக்காக நடத்திக்கொண்டிருக்கிறோம். உடல்நலக் கல்வி, கொள்கை குறித்து பணி புரிவதால் அது குறித்தே என் கல்லூரிக் கல்வியும் இருப்பதால், பெருமளவில் உதவியாக இருக்கிறது.

தற்போது நடக்கும் கோவிட் அமளி துமளிகளுக்கு நடுவே உங்களின் வாசிப்பு எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது? அன்றாடக் குழப்பங்களின் தாக்கத்தினால் படிப்பது மாறியிருக்கிறதா?

கோவிட் தொற்றினால் பலர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும், பல்வேறு உடல் நல, மன நல, பொருளதார சிக்கலில் உழல்வதும் உண்மையே. நான், நியுஜெர்சி அரசின் மனிதவளத் துறை, மற்றும் உடல்நலத் துறையில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறேன். காய்கறிகள், பலசரக்கு கடைகள், கொள்முதல் வியாபாரிகள் தொடர்ந்து செயல்படவும், உணவகங்கள் மறுபடி திறக்க என்ன தேவை என்று தெரிந்து அவற்றை பூர்த்தி செய்ய, பள்ளிகள் திறக்க, தொடர்ந்து  செயல்பட பல திட்டங்கள் தயாரிக்க என நிறைய பணி இருந்தது/இருக்கிறது. 

முதியோர் இல்லங்களில் செவிலிகள் மற்றும் இதர பணியாளர்களை வேலைக்கு அமர்த்த, அவர்களின் தேவையைக் கேட்டறிதல் முதல் நிதி ஏற்பாடு செய்வது வரை; பல உயிர்வேதியியல் நிறுவனங்களில் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற, முகக்கவசம், மற்றும் கையுறை போன்ற பொருட்களைத் தடையின்றி உற்பத்தி செய்ய, பணியாளர்களை நியமிக்க, என்று பல நிதியுதவித்திட்டங்கள் பூர்த்தி அடையவும் ஓய்வில்லாமல் பணியாற்றினோம். இத்தகையை பணிகளுக்கு இடையே மூளைக்கும் மனதுக்கும் அதிக ஓய்வினை அளித்தது மாறுபட்ட வாசிப்பு. பணியை எப்படிச் சிறப்பாகச் செய்யமுடியும் என்று தேடித் தேடி வாசித்த புத்தகங்கள். மக்களின் மனக்குறைகளை சஞ்சலங்களை எப்படித் தீர்க்க முடியும் என்று தேடி வாசித்த புத்தகங்கள். 

ஜார்ஜ் ஃபளாய்ட் மரணத்திற்கு பிறகு நிறைய கூட்டங்களில் கலந்து கொண்டு, தொடர்ந்து பாலியல் இன சமன் பாடு பற்றி பேசவும் நிறுவன இனரீதியான வேறுபாடுகளைக் களையவும், அறிவியல் கணித பாடத்திட்டங்களில் பெண்கள், விளிம்புநிலை மனிதர்கள், ஏழை எளியவர்களுக்கு அணுகு விதமாகவும், எளிதாக வெற்றியடையவும், ஒரு சமநிலை தளத்தை ஏற்படுத்தவும் நிறைய படிக்க, கற்றுக்கொள்ள நேர்ந்தது. இந்த கூட்டங்களில் பல எழுத்தாளார்களின் உரையாடல்களை கேட்கவும், அவர்களின் கட்டுரைகளைப் படிக்கவும் முடிந்தது. ஒரு புறம் வேலை அதிகமாக இருந்தாலும் பணிச் சூழலில் அதிகம் தெரிந்துகொள்ளவும், அந்த அழுத்ததில் இருந்து வெளியேறவுமே அதிகம் வாசிக்கவும் முடிந்தது. இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் பிரவுன் நிறத்தவரான நாம் செய்ய கூடியது என்ன என்று தெரிந்து கொள்ளவும், இதன் அடிப்படை வரலாறைத் தெரிந்து கொள்ளவும் இன்னும் நிறைய படித்தேன்.

இதன் ஊடாக பல்வேறு நாடுகளின் அரசியல் பிளவுகள், இங்கே காவலர்களின் உட்கட்சி அரசியல், தொழிற்சங்கங்களின் சக்தி, நிறுவனங்களில் பரவியிருக்கும்  இனவெறி (instituion racism) — இத்தனை விளக்கம் ஏன் என்றால், பெரும்பாலாருக்கு வீட்டில் இருப்பது மட்டுமே ஒரு தடையாகத் தெரிகிறது. ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரமே ஆடிப்போயிருக்கிறது. அதை நேரில் பார்த்தவள் நான். என் தோழர்கள் பலரை இழந்திருக்கிறேன். வீட்டிலேயே அடைந்திருக்கும் பெண்கள், முதியவர்கள்  பலருக்கு வன்கொடுமை அதிகரித்திருக்கிறது, சந்திக்க இயலாமல் முதியவர்கள் இன்னும் தனிமையாய் வருந்துகிறார்கள். இதை எப்படி சின்ன அமளி துமளி என்ற சொல்லில் கடந்து போய்விட முடியும்? 

படிப்பது நிச்சயமாக அதிகரித்திருக்கிறது. 

3. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது? 

எனது சகோதர சகோதரிகள் படிப்பதை பார்த்து நானும் படிக்க ஆரம்பித்ததாக அம்மா சொல்வார்கள். ஆரம்பப்பள்ளி காலத்திலேயே திருக்குறள், திருப்பாவை எல்லாம் முழுமையாக பொருளுடன் சொல்லி பரிசுகள் பெற்றிருக்கிறேன், மன்னார்குடிக்கு கோடை விடுமுறைக்கு சொல்லும் போது அங்கே எஸ்டேட் நூலகத்தில் இருக்கும் சிறுவர்கள் பகுதியில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்துவிடுவேன். வீட்டிலும் அம்மா அப்பா இருவருக்குமே வாசிப்பில் ஆர்வம் உண்டு, எனவே மாத, வாரப் பத்திரிக்கைகள் வாங்கும் வழக்கம  உண்டு. அதைத் தவிர நூலகம் செல்லவும் அனுமதி உண்டு, தொடர்கதைகளை எடுத்துவைத்து வீட்டிலேயே பைண்டு செய்து நூலகமாக அமைத்திருந்தோம். விடுமுறை நாட்களில் அதில் இருந்து எடுத்து படிக்கவும் செய்வோம். ஆரம்பத்தில் சிறுவர் பத்திரிக்கை  கண்ணன், கோகுலம் போன்றவை படிக்க மட்டுமே அனுமதி, பிறகு விகடன் குமுதம் கல்கண்டு என் மாறியது, ஆனந்த விகடனில் என் கவிதைகள் சில பிரசுரமானதும் எல்லா தடைகளும் நீங்கின.☺ 

பள்ளிகளில் படிக்கும் போது நிறைய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்வேன். குறிப்பெடுத்துக்கொண்டு பேசும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை, என்பதால் நிறைய படித்து நினைவில் வைத்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. திருப்பாவை, திருக்குறள், அபிராமி அந்தாதி, நீதிநெறி விளக்கம், கந்தர்கலிவெண்பா போன்றவை  ஒப்புவிக்கும் போட்டியும், பாடல்களின் பொருளுக்கு எழுத்துப் போட்டியும் நடக்கும். வெற்றி பெற்றவருக்கு பள்ளி இறுதிவரை நிதி உதவி கிடைக்கும். இவ்வாறாக நிறைய கற்றுத்தேறவும் நிதி உதவி பெறவும் முடிந்தது. 

தேரழுந்தூரில் இருந்த சில காலம், கம்பன் அமைப்பில் புலவர் கீரனின் தலைமையில் நடக்கும் கம்பன் பட்டிமன்ற நிகழ்வு போட்டிகளுக்கும் பள்ளிவாயிலாக கலந்துகொள்வேன். இப்படியாக முகிழ்ந்தது என் தமிழ் ஆர்வம். பிறகு ஆய்வுக்காக அறிவியல் துறையில் நிறைய படிக்க நேர்ந்தது. இப்போது பணி நிமித்தம்  ஆரம்பப் பள்ளி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை, கடைநிலை பணியாளர் முதல் நிறுவன உயர் அதிகாரிகள் நிறுவன தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள், கல்லூரித் தலைவர்கள், மதத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆளுநர்கள்,  அரசியல்வாதிகள் மேயர்கள், எனப் பலருடன் பல விஷயங்களில் பேசவேண்டியிருப்பதால் எப்போதும் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. ஒரு விஷயம் பற்றி பேசும் முன்னால் அதைப்பற்றி முழுமையாக, எந்த ஒரு சார்பும் இன்றி தெரிந்து கொள்ளவும் பல தரப்பு நியாயங்களைப் புரிந்து கொள்வதும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் வாசிப்பது உதவுகிறது.

4. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன? பள்ளிப் பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது?

 எல்லாவகையான புத்தகங்களும் தேடிப்படிப்பேன், அண்ணனுடைய நண்பர், ஜெயகாந்தன், தி ஜானகி ராமனின்  எல்லாப் புத்தகங்களையும் சேகரித்து வைத்திருந்தார். அவரிடம் இருந்து அனைத்து புத்தகங்களையும் இரவல் வாங்கிப் படித்துவிட்டு திருப்பித் தருவது வழக்கம்,  வை. மு. கோதைநாயகி, லஷ்மி, ஆர் சூடாமணி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, அநுத்தமா, காண்டேகர் முதல் சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுகோட்டை பிரபாகர், சுப்ரபாரதி மணியன், பாலகுமாரன்  என, கையில் கிடைப்பது எதுவானாலும் படிப்பேன், அண்ணன் நன்றாக இருக்கிறது படி என்று சொல்லி கொடுத்தால் அது எனக்கு வேதம், பிடித்த எழுத்தாளர்கள் என்று எவரும் இல்லாமல், எந்த எழுத்தாளரானாலும் அவர் எழுதிய புத்தகத்தில் கதையில் எங்கேயும் பிடித்த புத்தகமோ அத்தியாயமோ ஒன்று இருக்கும், இல்லை பிடிக்காத ஒன்று இருக்கும். ஆனாலும் முடிந்த வரையில் 1990 வரை வந்த பெரும்பாலான  புத்தகங்களையும் படித்திருக்கிறேன். 

அதன் பிறகு அமெரிக்கா வந்தபிறகு தமிழில் படிப்பது சிலகாலம் நின்றே போனது. 7 ஆம் வகுப்பிற்கு பிறகு மெல்ல மெல்ல ஆங்கில புத்தகங்கள் படிப்பதும் அதிகரிக்க ஆரம்பித்தது. Agatha Christy யில் ஆரம்பித்தது மெல்ல Alistar MacLean, Ken Follet, Wallace, J. Archer  என பரவி பிறகு ராபின் குக், சாமர்செட் மாம், அய்ன் ராண்ட் என படிப்படியாக மாறியது,  ஒரு எழுத்தாளரின் புத்தகம் படிக்கத் தொடங்கினால் அவரின் சில படைப்புகளை தொடர்ந்து படித்துவிடும் பழக்கம் உண்டு. Robin Cook Brain, Fever, coma என்று படித்துவிட்டுத்தான் Haileyயின் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் அவருடையை Final Diagnosis, Hotel, Airport, Money Changersm Wheels , என்று முடித்துவிட்டு பிறகு Somerset Maugham புத்தகங்கள்  Of Human Bondage, Razor Edge என இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால், நான் சொல்லுகிற எழுத்தாளர்களின் ஒரு சில புத்தகங்களையாவது படித்தால்தான் அவர்களின் புத்தக அமைப்பு, எண்ண ஓட்டம் எனக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது. 

5. உங்களின் தற்போதைய சிந்தனையையும் இலட்சியங்களையும் எவ்வாறு கண்டடைந்தீர்கள்? அந்தப் பயணம் குறித்து சற்றே வெளிச்சம் பாய்ச்சுவீர்களா

சிறுவயது முதலே பல பல சிற்றூர்களில் வாழ்கிற வாய்ப்பே கிடைத்தது. பலவித வேறுபாடுகளையும் அநீதிகளையும் கண்டிருக்கிறேன், அனுபவித்தும் இருக்கிறேன். வேதனைகள், வலிகள் அவமானங்கள் என்று. மேகலா என்ற பள்ளித்தோழி அறியா வயதில் செய்துகொண்ட தற்கொலை நான் அறிந்த முதல் தற்கொலை. 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே சேமிப்பு பற்றியெல்லாம் பெண்களுக்கு சொல்லித்தரச்  செல்வேன். அம்மாவும் வேலை நேரம் போக  மற்ற நேரம் மற்ற பெண்களுக்கு எழுத, படிக்கச் சொல்லித்தருவார்கள். தங்கள் உடல் நலத்தைப் பேணுவதைக் கூட கடைசி முந்துரிமையாகக்  கொண்டு அலட்சியம் செய்யும் பெண்களைக் கண்டிருக்கிறேன். அப்போதிருந்தே எளிய  மனிதர்களுக்கான உடல் நல, சமன்பாடு தேவை என்பதை உணர்ந்தே வந்திருக்கிறேன். மேலும் மேலும் உலக நடப்புகளை அறியவும் மென்மேலும் பெற்ற அனுபவங்களும் இன்னும் என் சிந்தனையை  வலுப்படுத்தியது. 

ஆராய்ச்சிக்காக  அமெரிக்கா வந்த போதும், இங்கேயும் விளிம்புநிலை மனிதர்களும் இஸ்பானிய மனிதர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஆசியர்களும்  பலவகையிலும் நேரடியாக இல்லாவிட்டாலும் பலவகையிலும் நிராகரிக்கப்படுவதை கண்டிருக்கிறேன். மற்ற நாடுகள் போல அல்லாமல் இங்கே சட்டங்கள் மாற்றுவதும் திருத்துவதும் புதிய சட்டங்கள் ஒரு ஊராகிலும் கொண்டுவருவது எளிது என்பதால், அந்த வழியில் சில மாற்றங்கள கொண்டுவர, ஆராய்ச்சியை விடுத்து உடல் நல கொள்கை, மேலாண்மை துறையில் படித்து தேறி  அரசாங்கத்  துறையில் என் பணியை மாற்றிக்கொண்டேன். 

2011 இல் மிக மோசமான  நிலையில் பலர் வேலைவாய்ப்பை இழந்த போது முதலில் அவர்கள் துறப்பது உடல்நல காப்பீடு, மிக ஆரோக்கியமான  உணவு முறை. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் துரித உணவை வாங்கி உடல் நலத்தை கெடுத்துக் கொள்வது உள்ளிட்ட பலவற்றை காண நேரிட்டது. அப்பொழுது உடல் மற்றும் பொது நலத்துறையில்  இருந்து மனித வளத்துறையில் கவனம் செலுத்த தொடங்கினேன். எளிய முறையில் தொழிற்கல்வி பயிலவும், பணியில் சேரவும், பணி சார்ந்து தொழிற்கல்வி பயிலவும், அந்த தொழிற்சார்ந்த கல்விக்கு இலவசமாக கல்லூரி  கிரெடிட்  வழங்கவும் ஏற்பாடு செய்தேன். அமெரிக்காவில் கல்லூரி கல்வி மிகவும் எளியோருக்கு எளிதாக கிடைப்பதில்லை. கட்டணம்  மிகவும் அதிகம். எனவே கல்லூரி கல்விமுறைப் பாடத்திட்டங்களில்  தொழிற்முறை  பாடத்திட்டங்களைச்  சேர்த்து, அவற்றைப்  போதித்து, படிப்படியாக சான்றிதழ்கள் வழங்கும் ஏற்பாடு செய்யும் மாற்றங்களை சின்ன அளவில் கொண்டுவந்தேன்.  புதிதாக அமெரிக்க நாடுதழுவிய அரசால்  அங்கீகரிக்கப்பட்ட கடைநிலைப் பணிகளை ஏற்படுத்தினேன். இந்தியாவில் சிறுவயதில் பார்த்த கிராம சேவக் பணியாளர்கள் போல இங்கே சமுதாய நல ஊழியர்கள் பணியாளர்கள்; அவர்களுக்கு கலாசாரப் புரிதல் உள்ள  உடல்நலக் கல்வி மற்றும் தொழிநுட்பக் கல்வியறிவின் ஆரம்ப நிலை பாடத்திட்டங்கள் கொண்டுவந்தேன்.  அவசர நிலை ஊழியர்கள் தொடங்கி பணியில் இருந்தவாறே  பாரா-மெடிக் (மருத்துவர் இல்லாதபோது முதலுதவி போன்ற அவசர மருத்துவச் சேவைகள் புரியும் மருத்துவ உதவியாளர்; செவிலி) நிலைக்குச் செல்ல இலவசமாகக் கல்வி பெற, தொழிற்கல்விமுறை கொண்டுவந்தோம். இதை முடித்தவர்கள் இலவசமாகவே  துணைக் கல்லூரி கல்வி சான்றிதழ் பெற முடியும். 

6. சிறந்த கட்டுரையாளர்களாக, அபுனைவு எழுத்தாளர்களாக எவரை எல்லாம் பட்டியல் இடுவீர்கள்? 

கட்டுரைகள் ஒரு விஷயத்தை விரிவாக எழுதுவது மட்டும் அல்லாமல் காலத்தை கடந்து படிக்கும் போதும் வாசகர்களுக்கு விளங்குமாறு இருத்தல் அவசியம். தீராநதி, தடம் மாதிரியான இதழ்களில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை படித்திருக்கிறேன். மற்றும் இணைய இதழ்களிலும். பொதுவாக, சமீபகாலமாக ஆசிரியர்கள் இத்தகைய கட்டுரைகளை எழுதும் போது தங்கள் சார்புநிலையை தீர்மானித்து அதை ஒட்டியே எழுதுகிறார்கள். இது நோயை முன்கூட்டி அனுமானித்து, அதை நிருபிக்க சோதனைகளை செய்வது போல. ஒரு கட்டுரை பல தரப்பு தருக்கங்களையும் எடுத்து ஆராய்ந்து முடிவை வாசகர்களின் பார்வைக்கு விடுதல் அவசியம்.

பெரும்பாலான விழிப்புணர்வு கட்டுரைகள் கூட தற்போது சார்புநிலை கொண்டே வருகின்றன. பன்மையில் ஒருமை என்ற டாக்டர் கா மீனாட்சி சுந்தரம் எழுதிய ஒரு கட்டுரை தொகுப்பு பல ஆண்டுகளுக்கு முன் பிரசுரிக்கப்பட்டது. இப்போது படித்தாலும் அதன் பொருள், சாராம்சம் விளங்கிக் கொள்ள முடியும்,  கம்பனில் தியாகம், வள்ளுவம் என்ன சொல்லுகிறது, எச்சத்தினால் காணப்படுவது என்றால் என்ன பொருள்  என விளக்கமாக எழுதிய  பல கட்டுரைகளை கொண்ட நூல். அது போலவே பேராசிரியர் ஆறுமுகம் எழுதிய உலகம் வாழும் என்ற கட்டுரைத் தொகுப்பும் கூட. அன்பு வீரம் காதல் தயை   என்ற பல்வேறு உணர்ச்சிகளை ப்பற்றி பல்வேறு அறிஞர்கள் பலர் சொன்ன கருத்துக்களை பகுத்தாய்ந்து எழுதிய பல கட்டுரைகள் இன்றும் படிக்க தகுந்ததன, ஞாநி எழுதிய விழிப்புணர்வு கட்டுரைகள் குறிப்பிட வல்லன. 

ஆனால் அவை அனைத்துமே ஒரு தளத்தில் எழுதப்பட்டவை. முழுப்பரிமாணத்தில் ஆராய்ந்து எழுதப்பட்டவையாக, மேலும் படிக்க விரும்புவர்களுக்கு பல தரவுகள தொகுத்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

சமீபத்தில் பா ராகவன் எழுதிய சென்னை நகர்  தன்னை எப்படி அரவணைத்துக்கொண்டது என்பதான கட்டுரைத்தொடர்  என்னைக் கவர்ந்தது. எல்லா நகருக்கும் ஒரு உணர்வு இருக்கும். நான் சென்னையில் அதிகம் வாழ்ந்ததும் இல்லை தங்கியதும் இல்லை ஆனால் அந்த கட்டுரைத்தொடர் படித்து முடித்தவுடன், என்னால் ஒரளவுக்கு அனுமானிக்க முடிந்தது. Ayn Rand ன் Fountainhead  படித்து நியுயார்க் மேல் பித்து பிடித்தது போல. 

இணையத்தில் பல விஷயங்களை தேடுகிறபோது நேரத்தையும் நம்மையும் தேடுகிற செய்தியையும் தொலைத்துவிடாமல் எப்படி கற்பது என்பதாக கற்க விரும்புகிறவர்களுக்கு சொக்கன் எழுதிய தொடர் கூட பிடித்திருந்தது. 

ஆங்கிலத்தில நான் படிப்பது பல சமுதாய சமநிலை விழையும் அறிஞர்கள் Ifeyoma Ike, பரித்மா நாராயண், Brene’ Brown ஆகியோரின் கட்டுரைகள், அரசியலில் ஓபாமாவின் கட்டுரைகள், Zakaria கட்டுரைகள். இதைத்தவிர பிரீட் பரேராவின் பாட் காஸ்ட் வரும் நேர்காணலில் சொல்லப்படும் கட்டுரைகள் படிக்கும் வழக்கமும் உண்டு. 

7. உங்களுக்குப் பிடித்த புனைவு எழுத்துக்கள் என்ன? எவரின் நாவல்கள் உங்களைக் கவர்கிறது? யாரின் கதைகளை ரசித்து வாசித்திருக்கிறீர்கள்? 

முன்பே சொன்னபடி இன்னாருடைய  புனைவு என்றில்லாமல் பலருடைய புனைவுகளையும் படித்திருக்கிறேன். ஒரு நல்ல புனைவு எழுதியவரை மறக்கடித்து நம்மை அந்த கதையில் புனைவில் மூழ்கடிக்க வேண்டும். அனைவரின் எழுத்துகளும் பிடித்த கதைகளும் ஒன்று உண்டு. ஜெயகாந்தனின் எழுத்துக்களை  பிடித்து படித்த நாட்கள் உண்டு, ஆனால் சுந்தர காண்டம் என்ற தொடரை படித்த பின் ஏனோ அவரின் எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை. யுகசந்தி, பாரீசுக்கு போ, ஒரு வீடு ஒரு உலகம் போன்ற புனைவுகள் என்னை கவர்ந்திருக்கின்றன. அதே போல ஜானகிராமனின் அம்மாவந்தாள், மோகமுள், பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் என்னை கவர்ந்திருக்கின்றன. எல்லாமே ஒரு கால கட்டத்தில். 

ஜாவர் சீதாரமனின் மின்னல் மழை மோகினி, பணம் பெண் பாசம்  புதினங்கள், ராகி ரங்காராஜனின் சில, இந்துமதியின் மலர்களில் அவள் மல்லிகை, தரையில் இறங்கும் விமானங்கள், சிவசங்கரியின் பாலங்கள், 47 நாட்கள், சூரிய வம்சம், மாலனின் ஜனகன மண என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பழைய எழுத்தாளர்கள் முதல் சமகால சத்யாராஜ் குமார் வரை படித்த எதுவும் சட்டென்று என் நினைவில் இருந்து நீங்குவதும் இல்லை.

சத்யராஜ் குமார் எழுதிய நியாயார்க் நகர சிறுகதை கதைகள் தொகுப்பு நன்றாக இருந்தது. பலர் அமெரிக்காவை கடுமையாக தாக்கி எழுதியும் சிலர் அமெரிக்காவை புகழ்ந்தும் எழுதி வருகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் குறைகளும், நிறைகளும் உண்டு. இங்கே மக்கள் குறைகளை களைந்து கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பு. இதனை எந்த வித விமரிசனமும் இல்லாமல் சத்யராஜ் கொண்டுவர முயல்கிறார்.

அபுல்கலாம் ஆசாத் எழுதிய மின் தூக்கி என்ற புதினமும் என்னைக் கவர்ந்தது. அயல் நாட்டிற்கு சென்று உழைத்து தன் குடும்பத்தின் கனவை, நனவாக்க செல்லும் இளைஞன் தானும் படிப்படியாக முன்னேறும் கதை. அந்த பாதையில் வலியும் வேதனையும் இருந்திருக்கும். ஆனால் கழிவிரக்கமாக நம்மை அழைத்து செல்லாமல், இளைஞனின் திடமும் அசராத உழைப்பும் அந்த வெற்றியையும் மட்டுமே முன்னிறுத்தி மிக அழகாக எழுதப்பட்ட கதை. 

ஆங்கிலத்திலும் பிடித்த புனைவு என்று பெரும்பாலும் எதுவும் இருந்தது இல்லை ஆனால் படித்த புதினங்களில்  பல இன்னும் நினைவில் இருக்கின்றன. அதிகமாக கவர்ந்தது Fountain Head, Of Human Bondage, Interpreter of Maladies, being Mortal, Name Sake, போன்ற சில நினைவில் மற்ற புத்தகங்களை விட முதன்மை வரிசையில் இருக்கின்றன.

8. இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்களில் எது உங்களை ஈர்த்தது? எந்த நூலை (நூற்களை எல்லாம்) குறிப்பிடத்தகுந்ததாகச் சொல்வீர்கள்?

இந்த வருடத்தில் நிறைய வாசித்தேன். தமிழில் லஷ்மியின் எழுதாப்பயணம் மன திருப்தியை அளித்தது, புத்தகம் இன்னும் அதிக ஆழத்துடன் நன்றாக எழுதப்பட்டிருக்கலாம் என்றாலும், அதன் பின் இருக்கும் உழைப்பும், அர்ப்பணிப்பும் ஆர்வமும் படிக்கும் போது என்னையும் தொற்றிக்கொண்டது. புதினம் இல்லை என்றாலும் சிறந்த வாழ்க்கை குறிப்பு. 

கத்திக்காரன் என்ற சிறுகதை தொகுப்பு நண்பர் ஶ்ரீதர் நாராயணனுடையது. கதாபாத்திரங்கள் கடத்தும் மெல்லிய உணர்வுகள் சில சமூக பிரச்சினைகளை எளிதாக முன்வைக்கும் திறன். உதாரணமாக ஒரு சிறுகதையில், மகளை ஒரு தீவிரவாத வெடிவிபத்தில் இழக்கும் தாயின் மனநிலை, மகளின் இறப்பை ஏற்காமல் ஒருவித நிராகரிப்பு நிலையில் இருக்கும் மனநிலை, மகளின் நினைவுகளுடனே வாழ்வதும் அதற்காகவே தான் மறதி நோயாளியாக தந்தை வாழ்வதுமாக மெல்லிய நுண்ணுணர்வை சித்தரிக்கும் கதை மாந்தர்களை போல நான் நிஜவாழ்வில் மனிதர்களை சந்தித்திருக்கிறேன். 

கலாசார பிரிவுகளால் சின்ன மாற்றங்களை ஏற்க ஆண்கள் பொதுவாகத் தயங்குவதையும், பெண்கள் அதை எளிதாகத் தாண்டிச் செல்வதையும், குழந்தைகளை அதீத நம்பிக்கை மற்றும் தோழமையோடு அணுகுவதையும் கூட ஒரு கதையில் அழகாக சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் ஶ்ரீதர் தன் குழந்தைகளிடம் மிகவும் சினேக பாவத்தோடே பழகிவருவதை அவர் பதிவுகளில் நான் கவனித்து வருகிறேன்.அதே போல கத்திக்காரன் கதையிலும் திறமையின் நுட்பம், பெண்ணின் அதீத காதல் என்று  இப்படி ஒவ்வொரு கதை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். 

நான் விடாமல் தொடர்ந்து சில ஆண்டுகளாகவே தொடர்ந்து படித்து வந்த மற்றொரு புதினம் வெண்முரசு மகாபாரத கதை, கதை மாந்தர்களும் நிகழும் சம்பவங்களும் விரிவாக்கப்படுவதால் இது புதினம், ஆனால் இது தினமும் ஒரு கட்டுரையாக ஆசிரியரின் சொந்த கருத்துக்களும் பாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே திணிக்கப்பட்டு வந்ததால் சில நேரங்களில் எரிச்சலுற வைத்தது. தினமும் பல திசைகளில் எண்ண ஓட்டத்தை ஆக்கிரமித்துக்கொண்ட எழுத்து. 

ஆங்கிலத்தில் இந்த வருடம் படித்ததில் பிடித்த புத்தகங்கள் .

Habits – The power of habit why do we do what we do in life and business – மிகவும் அருமையாக எழுதப்பட்ட புத்தகம். நான் பொதுநலத்தில் ஒரு நல்ல பழக்கத்தை எப்படி ஏற்படுத்தி கொள்ளுவது, எப்படி மன மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதையும் படித்திருக்கிறேன். அதை மக்களின் பழக்க வழக்கங்களை மாற்றப் பயன்படுத்துவேன். இந்த புத்தகத்தின் ஆசிரியர்,  பல ஆச்சரியமான வழிமுறைகளை மிக எளிதாக அதே நேரம் பல விற்பனையாளர்கள் எப்படி அவற்றை கையாண்டார்கள் என்பதையும் கூறியிருக்கிறார். 

Raising Storm, Gifts of Imperfection, Braving the Wilderness போன்ற புத்தகங்களும் மனதுக்கு உகந்தவை. நாம் நம்மை நாமே எப்படி நேசிக்க வேண்டும், எப்படி தடைகளை மீறி நம்முடைய குறிக்கோளை நோக்கி செல்ல வேண்டும் என்பதை அழகாக சொல்லுகிறார். நான் இன்னும் 10 பவுண்ட் எடை குறைத்தால் என்னை பிடிக்கும், அல்லது கோபம் குறைத்தால் என்றெல்லாம் இல்லாமல் குறை நிறைகளோடு நம்மை நாம் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்கிறார். நாம் ஹிலரி கிளிண்டனை அவமதித்தால் எப்படிச் சினம் கொள்கிறோமோ, அதே சினம், மெலனியா டிரம்ப் அவமதிக்கும் போதும் கொள்ளவேண்டும் என்று கொள்கைக்கான முக்கியத்துவத்தை அழகாக சொல்கிறார்.

Gifts of imperfections தைரியம், அன்பு, பரிவு இவற்றின் மூலம் நான் எப்படி இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம் எப்படி உண்மையில் இருக்கிறோம் என்ற இரண்டிற்குமான இடைவெளியை குறைத்து நம் தகுதியை வளர்க்க வழிமுறைகள் சொல்லித்தருகிறார்.

அதுல் கவாண்டேயின் being mortal என்ற புத்தகம், பால் கலாநிதியின் when breath becomes air என் மனதை மிகவும் கனக்க வைத்த புத்தகம். மீண்டும் ஒரு முறை படித்தேன். 

ஒபாமாவின் Audacity of Hope, மிஷெல் ஒபாமாவின் becoming வில்கர்சனின் Caste போன்ற புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர தேயிலையால் வந்த அரசியல் தொடர்பான புத்தகம் இன்னும் பல. 


9. வெண்முரசு வாசிப்பனுவம் பற்றி மேலும் பகிர முடியுமா?

வெண்முரசு எழுதத் தொடங்கிய காலம் முதல் நாள்தோறும் காலை முதலில் நான் கட்டாயமாக முதலில் அன்றைய பகுதியை படித்துவிடுவேன். ஏனென்றால் எனக்கு மகாபாரதம் அதன் கிளைக்கதைகள் என்றுமே அலுத்ததில்லை. எஸ். இராம கிருஷ்ணன் எழுதிய உபபாண்டவமாக இருந்தாலும், ராஜாஜி எழுதிய மகாபாரதமாக இருந்தாலும், குழந்தைகளின் பார்வையில் மகாபாரதம் என்று சம்ஹிதா ஆர்னி எழுதிய மகாபாரதமானலும் சரி எல்லாமே சுவையானது. இரண்டாவது ஜெமோ எப்படி எழுதப்போகிறார் என்ற ஆர்வம் வேறு. முக்கிய கதையைவிட அவர் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்தையையும், அந்த ஊர், மக்கள், உணர்ச்சிகள், பாவம்(bhavam) சூதர்கள் பாடும் பாடல், கருத்தாடல் மிக்க உரையாடல்கள் என்று போகப்போக ஆர்வத்தை அதிகரிக்க செய்தார். 

சொல்லுதல் யாவர்க்கும் எளிது அரியவாம்
சொல்லியவண்ணம் செயல்

– என்பதைப் போல் அல்லாமல் ஒரு அரிய செயலை, மிக அருமையாக ஒரு தவமாக நினைத்து முடித்ததற்காக அவருக்கு என் வணக்கங்கள். அவருடைய அறம் தொகுப்பு, தாயார் பாதம் ராஜன் போன்ற பல சிறுகதைகள் என்னைப் பல நாட்கள் பாதித்திருக்கின்றன. 

அவருடைய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை, பொதுவாக பெண்களைக் குறித்து எழுதுவதில். வெண்முரசில் எழுதிய கருத்துக்களில் சில தாக்கங்களில் எனக்கு உடன்படாமல் இருந்த சில கருத்துக்களில் ஒன்றிரண்டை கீழே  கொடுத்திருக்கிறேன். எல்லாருடைய சிந்தனைகளும், தருக்கங்களும் ஒத்துபோனால், மனிதர்கள் பலர் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. திருமணமாகி உடன் வாழும் இருவரே கூட ஆரோக்கியமான நிலையில் கருத்து வேற்றுமைகளை ஆரோக்கியமாக விவாதித்து முடிவுகாணல் ஒப்புக்கொள்வதும் வேறுபட்டு புரிந்து கொள்வதும் மிக அவசியம். ஒருவர் எண்ணங்களை இன்னொருவர் பிரதிபலிக்க நாம் ஆடிகள் அல்லவே. 

/பெண்கள் எங்கு பறந்தெழுந்தாலும் தங்கள் களிவீட்டை மறப்பதில்லை. பிறந்த வீட்டின் சிற்றறைகளுக்குள் ஒவ்வொரு நாளும் தங்கள் உள்ளத்தால் அவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள். துயரிலும் களிப்பிலும்.  இச்சிறு உலகுக்குள் ஒடுங்கிக்கொள்ளும்போது மட்டும் அவர்கள் அடையும் தனிமையும் பாதுகாப்பும் வேறெங்குமில்லாதது/

இது பரவலாக நம்ப்பப்படும் கருத்து. உண்மையில் பெண்கள் எல்லா இடங்களிலுமே அந்நியமாகி விடுகிறார்கள். பாதுகாப்பும் உரிமையும் அவர்கள் வீட்டில் மட்டுமே அவர்களுக்கு கிட்டுகிறது. ஆனால் பலரும் இப்படியே எழுதுவதாலும் சொல்வதாலும் இதையே பலரும் நம்பிவருகிறார்கள். தாய்மை எப்படி ஒரு புனிதமாக பூஜிக்கப் படுகிறதோ அப்படி, தாய் எப்படி தியாகங்களை செய்து தன் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்று நம்பப்படுகிறதோ அது போல, தந்தையும் எப்படி தன் குடும்பத்திற்காக பொருளீட்டுவதாக இன்னும் இந்த உலகம் அவனையும் அவனைச் சார்ந்தவர்களை நம்ப வைத்து அவனை பலியாடாகப் பயன்படுத்துகிறதோ அது போல. பாதுகாப்பான சூழலிலும் எந்த துன்பமும் இல்லாமல் வாழ்ந்த பெண்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தும்.. ஆனால் நெருங்கிய உறவினர்களால், சகோதரர்/ தந்தை அல்லது தாய் மாமன்களால் நட்புகளால் பாலியியல் தொந்திரவுக்கு ஆளான பெண்களைக் கேட்டு பாருங்கள், அல்லது வேறுவித வன்கொடுமைகளை கண்ட பெண்களை, தாய் அனுபவித்த கொடுமைகளை கண்டு வளர்ந்த பெண்களை கேட்டு பாருங்கள், இந்த கூற்று எந்த அளவு உண்மை என்று? இப்படியான பல பொது கூற்றுகளை என்னால் ஏற்க முடிந்ததில்லை.

பாஞ்சாலிக்காக பானுமதியும் மற்றவர்களும் உதவ முன்வரும் காட்சியை மிக அருமையாக எழுதியிக்கிறார். பெண்களின் துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் பெண்களே சக்தியாக மட்டுமே உதவ முடியும் என்று கூட நினைத்துக்கொள்ளலாம்.

ஜெமோ ஓரிடத்தில் சொல்கிறார் – பீமன் யுதிஷ்டிரிடத்துச் சொல்வதாக / குலம் என்பது இம்மண் உருவான காலத்திலிருந்து எழுந்து நம்மை வந்தடைந்திருப்பது. எளிதில் மறைவதோ திரிவதோ அல்ல/ நிச்சயமாக நான் இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறேன். குலம், சாதி, இனம் இவை அனைத்தும் மனிதர்கள் உருவாக்கியவைதான். மண் உருவான காலத்தில் இருந்தே உருவானதல்ல. 

ஆனால் அடுத்ததாக பீமனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடுவே வரும் உரையாடலில் வஞ்சம் என்பதை வளர்க்க கூடாது என்பதை அழகாக எடுத்துரைக்கிறார். / 

வஞ்சமும் நன்றியும் காற்றுபடக் கரையும் கற்பூரம் போன்றவை. ஆகவே அவற்றை இருண்ட ஆழத்தில் மூடி வைக்கவேண்டும். அடிக்கடி திறந்து நோக்குவதுகூட அவற்றை குறைக்கும் என்று சொல்கிறான் பீமன். அந்த கருத்துடன் நமக்கு ஒப்புதல் இல்லை ஏனென்றால்,  அடிக்கடி நினைப்பதால் வஞ்சமும், குரோதம் எல்லாமே நினைக்க நினைக்க வளரும். காலத்தே அது ஆற வேண்டுமானால் அதை மறப்பதும் மூடிப்போட வேண்டுவதும் சரி. இதைத்தான், ஜெமோவே  யுதிஷ்டிரன் வாயிலாக வஞ்சம் உள்ளுறை நஞ்சு என்கிறார், அது சரியே. நஞ்சாகி நம்மை அழிக்க வல்லது.

/இப்புவியில் இன்பத்தை பகிர முடியும், துயரத்தை எவராலும் பகிர இயலாது. நற்பேறுகளைப் பகிர இயலும், பழிகளைப் பகிர இயலாது./ 

ஒரு குழுவாக செயல் படும் போது அந்த குழுவின் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே உண்மையான குழுத்தலைவராக செயல்பட முடியும். துயரமோ இன்பமோ எதையுமே பங்கிட்டு கொள்ளுதல் முடியாது. அவரவர் பசிக்கு அவரவரே உணவு உண்ண முடியும். ஒருவர் தன் இன்பத்தை கொண்டாட அடுத்தவர் உதவலாமே தவிர, அவர் இன்பத்தை பங்கிட்டு கொள்ள முடியாது. கொண்டாட்டங்களில் ஈடுபடவும் நமது மனநிலை அந்த சூழலுக்கு ஏற்றவாறு இருப்பதும் அவசியம். இல்லையென்றால் அது போலியான பகிர்தல் மட்டுமே. 

/தவம் என்பது அதுவரை ஒருவன் கொண்டிருக்கும் அனைத்தையும் முற்றாக துறத்தல். ஒன்றும் எஞ்சாமல் வெட்ட வெளியில் நிற்றல். அதன் பின்னர் உருவாகி வருவனவற்றில் வாழ்தல். அடைந்து சென்றடையும் மெய்மையை அறிவென்பர். துறந்து சென்றடையும் மெய்மை ஞானமெனப்படும். அறிவைக் கடந்த ஒன்று உங்களில் நிகழ்வதாக!” என்று அவர் சொன்னார்./

இது போன்ற கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. தவம் என்பது துறத்தல் இல்லை. பணிகளில் மூழ்கி, மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் செவ்வி அருமையும் பாரார் அவவருத்தம் கொள்ளார் கருமமே கண்னாயினார் என்று வேலை முடிப்பர் மேற்கொள்ளுவது கூட தவம்தான். 

கடைசியாக இன்னும் ஒரு மேற்கொள்

/ எளிய மானுடருக்கு நெறியென்றும் அறமென்றும் ஏதுமில்லை. சொல்லொழுங்கென்றும் நிறுவுமுறை என்றும் ஏதுமில்லை. அவர்கள் சார்புநிலைகளை மட்டுமே கருத்தெனக் கொண்டவர்கள். அதன் நிறுவுநிலை அல்ல, அதன் விசையே அவர்களை அதை நாடச் செய்கிறது. விசை எப்போதும் வெறுப்பிலிருந்துதான் எளிதில் உருவாகிறது. ஆகவே வெறுக்கிறார்கள். வெறுப்பைத் தனிப்பட்ட காழ்ப்பென ஆக்கிக்கொள்கிறார்கள். தன்னுடன் அவ்வெறுப்பைப் பகிர்ந்துகொள்பவர்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள். அதை மறுப்பவர்களைக் கண்டடைந்து ஓயாது பூசலிடுகிறார்கள். /

நிச்சயமாக இல்லை. அவர்கள் இழக்க எதுவுமே இல்லாத போது எதனுடனும் அவர்கள் சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் அவர்தம் உரிமைகளுக்காகவே போராடுகிறார்கள். அவர்களிடம் இருப்பது வெறுப்பு இல்லை தங்கள் உரிமைக்கான தாகம். அதற்கான ஏக்கம். அவர்களிடம் இருந்து அதைப் பறித்து கொண்ட மக்களுக்குப் புரியாது அந்த ஏக்கமும் அதன் பின்னால் இருக்கும் உழைப்பும். உழைப்பின் சக்தியை உறிஞ்சிக்கொள்பவர்கள் மீது இருக்கும் கோபம் மற்றவர்களுக்கு வெறுப்பாய் தெரிகிறது. 

மாற்றுக் கருத்து இருக்கும் எல்லாருமே ஒருவரை வெறுப்பதாகாது. நிறைய இடங்களில் நான் வெண்முரசை இரசித்துப் படித்தேன். நான் கடின உழைப்பையும் அதன் பின் வரும் வெற்றியையும் ரசிப்பவள். அந்தவகையில் இந்த உழைப்பும் அதன் வெற்றியும் போற்றுதலுக்குரியது. ஆனால் ஜெமோ சொல்வது போல, மாற்றுகருத்து சொல்பவர்களோ விமரிசிப்பவர்கள் எல்லொருமே

/உண்மையில் இப்படி எதையாவது சொல்லிக்கொண்டிருப்பவர்கள் மிகமிக எளிமையான ஆரம்பகட்ட வாசிப்பும், மொண்ணையான அறிவுத்திறனும் கொண்டவர்கள். பெரும்பாலும் அவர்கள் சுட்டிக்காட்டுவது மிக அடிப்படையான ஏதாவது தகவலாகவே இருக்கும். தங்கள் சில்லறை அறிவுக்குத் தெரிந்த ஓர் எளிய செய்தி எழுத்தாளனுக்கு தெரியாமலிருக்குமா என்றுகூட யோசிக்கத்தெரியாத அறிவின்மை கொண்டவர்கள்/ அல்லர்.

படைப்பதனால் அவன் இறைவன் என்றாலும், பிறப்பையும் இறப்பையும் நிறுத்தும் வல்லமை கொண்ட இறைவன்/இயற்கை இல்லை.  எழுத்தாளர்களும்  மனிதர்கள்தாம், அவர்களுக்கு தொழில் எழுத்து, எனக்கு மேலாண்மை  போல. என் துறையிலும் திட்டமிடலும், எழுதுதல், நுட்பமாகவும், விவேகமாகவும், இன்னமும் நூதனமாகவும், சில சமயம் படைக்கும் திறனுடனும் சிந்திக்க வேண்டும். என்னைப்போல, என்னைவிடவும் மேலாக, இன்னும் உயர் பதவிகளில்  இருப்பவர்கள் கூட பலர் இருப்பார்கள். நாங்கள் சந்திப்பவர்கள் உண்மையான  மாந்தர்கள், தீர்ப்பது உண்மையான  பிரச்சினைகள். ஆனால், இதுதான் உயர்ந்தது என்று மற்றதைப் புறந்தள்ள முடியாது. மற்றவர்களை ஒதுக்கித்தள்ளவும் இயலாது. எல்லாவற்றிற்கும் பொது விதியும் இல்லை, எல்லாமும் ஒரேமாதிரி இருப்பதும் இல்லை ஆகவே எதையும் பொதுமைப்படுத்தி எழுதுதல் தவறே. பெரும்பாலானாவர்கள் என்று சொல்வது கூட தவறு. ஏனெனில், நாம் அறிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என்றால், நமக்குத் தெரிந்தவர் எத்தனை பேர்? இந்த அவனியில் இருப்பவர் எத்தனை பேர்? நாம் எப்படி எல்லோர் குணத்தையும் அனுபவத்தையும் அறிய முடியும்?

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! 


10. அலுவல்களும் குழந்தைகளும் சூழ்ந்த இன்றையச் சூழலில், உங்களின் வாசிப்பு எவ்வாறு மாறி இருக்கிறது? எப்பொழுது வாசிக்கிறீர்கள்? எதில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம் என்று பழக்கங்கள் இருத்திருந்திருக்கிறதா? 

எனக்கு பொதுவாக படிக்க பணி செய்ய என்று நேரம் ஒதுக்கிக் கொள்வதில்லை. காலை எழுந்தவுடனே பணி செய்யவும் ஆரம்பித்துவிடுவேன். அதில் இருந்து மாற்று கிடைக்க இடையே வேறு ஏதேனும் படிக்கவும் செய்வேன். கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் போதே பிடிக்காத விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தால், எப்போதோ படித்த செய்யுளை காகிதத்தில் எழுதிப் பார்ப்பேன், அல்லது ஏதாவது படிப்பேன். திரும்பவும் பணியில் கவனம் செலுத்த தொடங்குவேன். ஒரே நேரத்தில் பல விஷயங்களில் என்னால் கவனம் செலுத்த முடியும் என்பதால், இது சாத்தியமாகும். நான் மிக விரைவாக படிக்க கூடியவள். 

கிண்டில் இப்போது படிக்க ஏதுவாக இருக்கிறது.

11. எதற்காக இலக்கியத்திலும் வாசிப்பிலும் நேரம் செல்விடுகிறீர்கள்? உங்களுக்கு அது எதை வழங்குகிறது?

என் பணிக்காக  நான் பொருளாதார நிலையில் பல நிலையில் உள்ள மக்களுடன், பணியில் பல நிலையில் உள்ள மக்களுடன், வயது, படிப்பு என்று பல நிலையில் உள்ள மக்களுடன் பணி புரியவும் பழகவும் வேண்டியிருப்பதால் படிப்பது எனக்குப் பல வகை அனுபவத்தையும் சிந்தனைத் தெளிவையும் தருகிறது. தொழில்நுட்ப ரீதியாக புத்தகங்கள் தவிர இத்தகைகைய அபுனைவு கட்டுரைகள், அபுனைவு எழுத்துக்கள் படிப்பதால் என்னால் தகுந்த முடிவுகளை எடுக்கவும் திட்டங்கள் தீட்டவும், பணியினால் வரும் மன அழுத்தங்களைக் குறைக்கவும் முடிகிறது.

12. நீங்கள் படித்த புனைவுகளில் உங்களுக்குப் பிடித்த கதை மாந்தர் யார்? வாழ்க்கையில் யார் உங்கள் ஆதர்சம்?

என்னை மிகவும் கவர்ந்த கதை நாயகர் ஆங்கிலத்தில் ஹாவர்ட் ரோர்க். மகாபாரத கதை நாயகன் கிருஷ்ணா

என்னுடைய அம்மாவே என்னுடைய ஆதர்ச நாயகி. தபால் நிலைய தலைமை அலுவகராக இருந்த என் தந்தையின் வருமானத்தை மட்டும் கொண்டு எங்கள் அனைவரையும் மிக சிறந்த கல்வி நிலையங்களில் படிக்க அனுப்பி, தளர்ந்து போகும் போதெல்லாம் ஊக்குவித்து முன்னேற செய்தவர். அம்மா அடிக்கடி பாடுவார், உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று. அக்கம் பக்கம் உள்ள பெண்கள் அயல்நாட்டில் உள்ள அவர்கள் கணவர்கள் அனுப்பும் பணத்தோடு வரும் கடிதத்தை படிக்கச் சொல்லி எடுத்துக்கொண்டு வரும் போது, அவர்களுக்கும் எழுதப்படிக்க கற்றுத்தருவார். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும், ஆங்கிலம் படிக்கக் கற்றுக் கொண்டு பேச எழுதத் தெரிந்து கொண்டு இப்போது அடுத்த தலை முறைப் பிள்ளைகளோடு சகஜமாகப் பேசுவார். அவர்கள் ஆராய்ச்சி, மேல் படிப்பு அவை சார்ந்த துறை பற்றியும் தெரிந்துகொண்டு அதைப்பற்றி ஏதேனும் கட்டுரை வந்தால் கூட இன்னமும் படித்து, புரிந்து  அவர்களோடு உரையாடும் அம்மாவின் வயது 87. இன்னமும் கைவேலைகள் செய்வது, பத்திரிகைகள் படிப்பது என்று நேரான சிந்தனைகளோடு மகிழ்ச்சியாய் இருக்கும் அம்மாவிடம் இருந்து நான் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன.

13. நீங்கள் எழுதிய அல்லது நீங்கள் படித்த உங்களுக்கு மிகப் பிடித்த ஒரு வசனம்?

மிகவும் பிடித்த பத்தி : 

“But you see,” said Roark quietly, “I have, let’s say, sixty years to live. Most of that time will be spent working. I’ve chosen the work I want to do. If I find no joy in it, then I’m only condemning myself to sixty years of torture. And I can find the joy only if I do my work in the best way possible to me. But the best is a matter of standards—and I set my own standards. I inherit nothing. I stand at the end of no tradition. I may, perhaps, stand at the beginning of one.” 

Throughout the centuries there were men who took first steps down new roads armed with nothing but their own vision. Their goals differed, but they all had this in common: that the step was first, the road new, the vision unborrowed, and the response they received—hatred. The great creators—the thinkers, the artists, the scientists, the inventors—stood alone against the men of their time. Every great new thought was opposed. Every great new invention was denounced. The first motor was considered foolish. The airplane was considered impossible. The power loom was considered vicious. Anesthesia was considered sinful. But the men of unborrowed vision went ahead. They fought, they suffered and they paid. But they won.

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் – 

செய்வதனைச் செய்து திறமையுடன் வாழ்ந்திருந்தால்

தெய்வமெல்லாம் கைகட்டிச் சேவகமும் செய்திருக்கும்

ஓடுவது காட்டுவழி; உறங்குவது வெட்டவெளி

தேடுவது புகழானால் சிறிதளவும் கிடைக்காது –

14. உங்களுக்கு அகத்தூண்டல் தந்த ஒரு புத்தகம், உங்களை மீண்டும் படிக்க இழுக்கும் ஒரு புத்தகம் இருந்தால், அது என்ன? 

எத்தனை முறை படித்தாலும் முழுப்பொருளும் உள்வாங்க முடியாத புத்தகம் –, கீதை

அடிக்கடி படிக்கும் புத்தகம் – பாரதியார் கவிதைகள்

15. எந்த சஞ்சிகைகள், பத்திரிகைகள், நாளிதழ்களை இன்றும் வாசிக்கிறீர்கள்? அவற்றின் எந்த பகுதிகள், பத்திகள் – உங்களை ஈர்க்கின்றன?

நான் தமிழின் எல்லா வர இதழ்களையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறேன் – குமுதம், சிநேகிதி, ரிபோர்டர், தீராநதி, விகடன் குழுவினரின் இதழ்களும் இணைய இதழ்கள் என்றெல்லம் படிக்கிறேன். கல்கி தீபம் கலைமகள், என்று எல்லாவற்றிற்கும் சந்தா கட்டியிருக்கிறேன். இவற்றை படிக்கிற ஒரே காரணம் இவை என்னை இந்தியாவின் செய்திகளோடு , என் மொழியோடு தொடர்போடு இருக்க உதவுகிறது. 

சில சமயம் சிறுகதை, சில சமயம் ஒரு தொடர்கதை, ஒரு கேள்வி பதில் அல்லது ஒரு கட்டுரை, மாலன் எழுதும் என் ஜன்னலுக்கு வெளியே பகுதியில் ஒரு சின்ன பத்தி என்று ஏதேனும் ஒன்று என்னை எப்போதும் எதையோ தேடி படிக்க வைக்கிறது. 

16. நீங்கள் வாசித்த கடைசிப் புத்தகம் எது? எப்படி உங்கள் புத்தகங்களை தெரிவு செய்கிறீர்கள்?
ஆங்கிலத்தில் ஜோ பைடன் எழுதிய Promise me My Dad 

படித்துக்கொணடிருக்கும் புத்தகம் – The Rules of Contagion  

தமிழில் கத்திக்காரன் – சிறுகதை தொகுப்பு.

நான் நிறைய பாட் காஸ்ட் கேட்கிறேன். அவற்றில் நேர்முகம் செய்யப்படுபவர்கள் சொல்லும் புத்தகங்கள், ஃபரீத் சகாரியா போன்றவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள், நான் மிகவும் மதிக்கும் சில தன்னார்வ தலைவர்கள் சொல்லும் அல்லது எனக்கு அனுப்பும் புத்தகங்கள் படிக்கிறேன்.
17. உங்களுக்கு ஐந்து வயதில் தெரிந்து இப்பொழுது மறந்தது என்ன? இப்பொழுது உங்களுக்கு தெரிந்த ஒன்று உங்கள் ஐந்து வயதில் தெரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நினைத்ததுண்டா?

சிறுவயதில் தெரிந்ததெல்லாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வது வழக்கம். படித்த பாடல்கள், கற்றுக்கொண்ட பாடல்கள், செய்யுள் என்று. முன்பு 1330 திருக்குறளும் வரிசைக்கிரமமாக தெரியும், ஆனால், இப்போது மறந்துவிட்டது. வரிசையும், முடிவுச்சொல்லை சொன்னால் குறளை நினைவுபடுத்தி சொல்லும் ஆற்றலும் மறந்து விட்டது.

இப்போது தெரிந்த ஒன்று 5 வயதில் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எதுவும் இல்லை.

18. வாழ்க்கை வரலாறு, நாடகம், நகைச்சுவை – போன்ற பகுப்புகளில் உங்களின் ரசனையைப் பகிர இயலுமா?

நான் பலருடைய வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் படித்திருக்கிறேன். காந்தி, நேரு, மிஷெல் ஒபாமா, பைடன், ஜேம்ஸ் கோமி ஆகியோரது புத்தகங்கள் நினைவு அனுபவக்குறிப்புகள் படித்திருக்கிறேன். இரசனை என்றில்லாமல், ஆர்வமே முக்கிய காரணம். இவற்றை படிக்கிற போது அவர்கள் எடுக்கும் சில முடிவுகள் எப்படி எடுக்கிறார்கள், என்ன பின்னணி, எப்படி எடுக்கப் படுகிறது, குடும்ப வாழ்க்கை, பொது வாழ்க்கை என்ற தராசை எப்படி சமன் செய்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை அறிய முடியும். உதாரணமாக மிஷெல் தன்னுடைய புத்தகத்தில் தனக்கும் தன் கணவருக்கும் இடையே எழும் மனப்பூசல்களை, கணவரின் இடையறாத பணி காரணமாக நேரமின்மையால் எழுந்த மன வருத்தங்களை, எப்படி மனநல ஆலோசகர் மூலம் இரண்டு மன முதிர்ச்சியடைந்தவர்கள் விவேகத்துடன் அணுகி தீர்த்துக்கொள்ள முடிந்தது என்பதை அழகாகக் காட்டியிருப்பார். 

பள்ளி நாட்களில் நானே நாடகங்கள் எழுதி இயக்கி இருக்கிறேன். அப்போதெல்லாம் மனோகர், மெரினா போன்றோர் நாடகங்கள் வானொலியில் கேட்பதென்றால் பிரியம் அதிகம். ஆனால் அந்த விருப்பம் பிறகு குறைந்து, மறந்து போனது. இங்கே வந்த பிறகு SCREAM என்ற மேடைக் குழுவில் வருடா வருடம் பெண்கள், ஆண்கள் தடை எதுவும் இன்றி வந்து தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பாலியல் கொடுமைகளை மனம் விட்டு சத்தமாக பகிர ஒரு துக்கடா நடகமாக செய்ய ஆரம்பித்த போது, அதன் உணர்ச்சித் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. அதன் மூலம் பலர் தங்கள் மன அழுத்தங்களில் இருந்து வெளியே வந்தனர். பிறகு பல போதைப்பொருட்களின் தாக்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் அதைப்பற்றி நாடகமாக செய்யத் தொடங்கினர். இவற்றின் தாக்கம் மிக அதிகமாகவும், மக்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவும் ஏதுவாக இருந்தது. நாடகம் ஒரு நல்ல தாக்கத்தை மாற்றத்தை ஏற்படுத்தக்க கூடிய ஊடகம். ஆனால் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல தவறான கருத்துக்களை அறியாமல் பரப்புகிறார்கள். காட்சியின் பரபரப்புக்காக  ஊடகத்தின் வீரியத்தை புரிந்துகொள்ளாமல் அதன் பாதிப்பை புரிந்து கொள்ளாமல் செய்யும் இந்தச் செயலைக் காணும் போது சினமேற்படுகிறது

நகைச்சுவை யாரையும் காயப்படுத்தாமல் நினைத்துப்பார்க்கும் போதே மனதை வசியப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் சமீபகாலமாக நான் தமிழ் திரைப்படங்களில் பார்த்த சில நகைச்சுவை காட்சிகள் பெண்களை, உடல் ஊனமுற்றவர்களை, பாலியல் இச்சை தூண்டும் வண்ணம் இருந்தன. இன்னும் சில இன வகுப்பு அடிப்படையில், கருப்பு நிறத்தவரை, உழைக்கும் இனத்தவரை அல்லது எளியோரை கடிந்து கொள்ளும் வண்ணம் அல்லது வன்முறையை ஆதரிக்கும் செயல்களை அடிப்படையாக கொண்டு அதையே நகைச்சுவை என்பதாக சித்தரிக்கிறார்கள். இவை ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் வாழ்க்கையில் வன்முறையில் சிக்கி உழலும் போது, பாலியல் கொடுமையில் சிக்கி வேதனையில் சிக்கி இருக்கும் போது சின்ன சின்ன காரணங்களுக்காக நகைச்சுவைக்காக பெண்களைத் தாக்கி வரும் சில நிலைத்தகவல்கள் கூட அதிர்ச்சியளிக்கின்றன. 

19. உங்களுக்கு வெறியேற்றும் பெரும் ஆசை என்ன? 

கல்வி எல்லாருக்கும் எளிதாகவும் எளிமையாகவும் அணுகக்கூடியதாகவும் கிடைக்க வேண்டும். புரிந்து கொள்ளக்கூடியதாகவும். கல்வி அது எந்த வகையானாலும் நல்ல சிந்தனையை வளர்க்க, நல்ல வேலைவாய்ப்பை வாழ்க்கை முறையை மேன்மபடுத்த உதவும். பாலியல், இன மத மற்றும் வகுப்பு சமன்பாடு கொள்ளவும் கல்வி அணுகுமுறை அவசியம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே நல்ல பாடத்திட்டங்களுடன் கூடிய கல்வி முறை, வாழும் இடம் பொறுத்து மாறுபடுகிற நிலை இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
20. உங்கள் படைப்புகளுக்கோ அல்லது உங்களுக்கோக் கிடைத்த கடுமையான விமர்சனம் என்ன? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?

நம் மீது எந்த தவறும் இல்லாவிடில் நாம் எதற்காகவும் யாருக்காகவும் அஞ்சத் தேவை இல்லை என்பதே என் கருத்து. நான் அவ்வாறே எப்போதும் என் கருத்துக்களை சொல்லி பள்ளி, கல்லூரி காலங்களில் என் எதிர்ப்பை தெரிவித்து வந்திருக்கிறேன். அமெரிக்கா வந்த போது, இங்கே அவ்வளவாக இந்திய காலச்சாரம் பரவி இருக்கவில்லை, இணைய வசதிகளும் இல்லை. அப்போது வீட்டில் இணைய தொடர்பெல்லாம் இல்லாத காலம். என்னுடைய பணியில் நான் முழுநிறைவை எதிர்பார்ப்பதாகவும் கால நேரம் இல்லாமல் உழைப்பதாகவும், என்ன வேலை செய்தாலும் நான் எப்படியும் தலைமைப் பொறுப்பிற்கு போக போவதில்லை என்றும் பலர் விமரிசிப்பார்கள். அது உண்மையாக கூட ஆகி இருந்திருக்கலாம் இதனைப் பலரும் சந்தித்திருக்கலாம். 

என்னைப் போலவே பலரும் முன்னேறி இருக்கலாம், இன்னும் அதிகமாகவே. 

நான் எந்த பொறுப்பையும் புகழையும் எதிர்பார்த்து பணியாற்றி இருக்கவில்லை, ஆனால் என்னால் எந்த பணி செய்தாலும் முழு மகிழ்ச்சியும் அர்ப்பணிப்பும் இல்லாமல் செய்ய முடியாது. இப்போது நான் பல நிலைகளில் பல பொறுப்புகளில் பலருக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். இன்னும் பல பொறுப்புகளை நேரமின்மையால் நிராகரிக்கிறேன். இவை யாவற்றையும் விட வீடெல்லாம் இல்லாமல் சாலையில் இருந்த ஒரு  பெண்ணின் மகளிடம் இருந்து சென்ற வருடம் வந்த ஒரு வாழ்த்து அட்டை, ’உங்களால்தான் எங்களுக்கென்று நிலையான ஒரு வீடும் என் அம்மாவிற்கு ஒரு வேலையும் கிடைத்தது’ என்ற செய்தியைத் தாங்கி வரும் போது விமரிசனங்கள் எல்லாம் காணாமல் போகின்றன.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.