வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது?
வெ.சா.
ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். Darkness at Noon என்று அதற்குப் பெயர். அது உடனே உலகம் முழுதும் புகழப்பட்ட, கெஸ்லருக்கு உலகப் புகழ் அளித்த நாவலும் ஆயிற்று. நாவல் முழுதும் நிகழ்வது ஒரு சிறைச்சாலையில். அரசியல் கைதியின் சிறைவாசம் பற்றியது. ஒரு கைதிக்கும் இன்னொரு கைதிக்கும் (அவனும் அரசியல் சதிச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன்} இடையே பழக்கம் ஏற்படுவது கதவைத் தட்டித்தான். கதவையா, சுவரையா? என்பது மறந்து விட்டது. அந்தத் தட்டலிலும் ரகசியக் குறிப்புகள் உண்டு. எல்லாமே அன்றைய ரஷ்யாவில் நடந்த அரசியல் சதிகள், வழக்குகள், கொலைகளைப் பிரதிபலிப்பதாகத் தான் சிறைச்சாலை நடப்புகளை நாம் புரிந்து கொள்வோம். இதே போல இன்னொரு குறியீட்டு நாவலும் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஜியார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில நாவலாசிரியரின் மிருகங்களின் பண்ணை ( Animal Farm) என்னும் ஒரு நாவல். பன்றிகள் அந்தப் பண்ணையைக் கைப்பற்றி விடுகின்றன. முன்னால் இரண்டு கரடிகள் ஓன்றையொன்று அழிக்கத் திட்டமிட்டு இரண்டுமே அழிகின்றன. பன்றிகளின் ராஜ்யத்தில் ஒரு கோஷம் “எல்லாரும் சமம் இங்கு. ஆனால் கொஞ்சம் கூட சமம் கொண்ட பன்றி தான் அதிகாரம் செய்கிறது. (All are equal. But some are more equal) நமக்குப் பரிச்சயமான பஞ்ச தந்திரக் கதைகள் பாணியில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த கோஷங்களையும் அதன் நடைமுறை அர்த்தங்களையும் கிண்டல் செய்தது மிருகங்களின் பண்ணை.
– வெங்கட் சாமிநாதன் (நினைவுகளின் சுவட்டில் …)
கருத்துருவகம் (அலிகரி) ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.
சு. தியடோர் பாஸ்கரன்
பராசக்தி ஒரு உருவகக்கதையாக (allegory) அமைக்கப் பட்டிருந்தது 1952 வெளிவந்த இந்தப்படக்கதை பிரிட்டீஷ் இந்தியாவில் அதாவது 1952 நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சி, நீதிபதியின் இருக்கைக்கு மேலிருக்கும் பிரிட்டீஷ் அரசின் சின்னத்தின் வெகுஅண்மைக்காட்சியுடன் தொடங்குகின்றது. தணிக்கை முறையிலிருந்து தப்ப பலநாடுகளில் இத்தகைய உத்தி அமைக்கப் பட்டிருந்தாலும் பராசக்தி தணிக்கை வாரியத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது
– மீதி வெள்ளித்திரையில்

என் பார்வையில் கீழ்க்கண்ட பத்து தமிழ்ப் படைப்புகளைச் சொல்வேன்: (எந்த வரிசையிலும் இல்லை)
- ஜி.கே. எழுதிய மர்ம நாவல் – தமிழவன்
- வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
- ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி (சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது)
- பூனைக் கதை – பா. ராகவன்
- அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்
- காடு – ஜெயமோகன்
- சொல் என்றொரு சொல் – ரமேஷ் – பிரேம்
- ராஸ லீலா – சாரு நிவேதிதா
- அரசூர் வம்சம் – இரா முருகன்
- புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்
உங்களின் எண்ணங்களைப் பகிருங்கள்.