ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர்

இக்கட்டுரை சமந்த் சுப்பிரமணியன் எழுதிய ஆங்கிலப் புத்தகம் பற்றிய ஆங்கில விமர்சனத்தின் தமிழாக்கம். “ஜேக்’ என்று நண்பர்களால் பிரியமாக அழைக்கப்பட்ட ஹால்டேன் ஒரு காலகட்டத்தில் தெரிய வேண்டியதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் கடைசி நபரென்று அறியப்பட்டவர். அவருடைய புகழ் மரபியல் துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் அவருடைய அறிவுத்திறன் பல துறைகளில் பரந்து விரிந்திருந்தது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் இளங்கலை வகுப்புகளில் பயின்றது கணிதமும் செவ்வியல் இலக்கியமும். அறிவியலில் பட்டம் பெறாவிட்டாலும் இயற்பியல், வேதியியல் போன்ற அனைத்து அறிவியல் துறைகளிலும் நடக்கும் ஆராய்ச்சிகளைப் பற்றி நன்கு விளக்கிச் சொல்லும் திறமையுடையவராயிருந்தார். அது மட்டுமல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய பன்னாட்டுக் கவிதைகளை அனாயாசமாக உதிர்க்கும் திறன் கொண்டிருந்தார். மேலும் மற்றவர்களைச் சண்டைக்கிழுப்பதிலும் மது அருந்துவதில் மற்றவர்களை மிஞ்சுவதிலும் ஆர்வம் கொண்டவராயும் எடை கூடியவராயுமிருந்ததால் “அடர்ந்த ரோமத்தையுடைய காண்டாமிருகம்” என்று அவரை மதியாதவர்களால் விமர்சிக்கப்பட்டார்.

1964ல் தனது 72வது வயதில் இறக்கும் வரை அவரைத் தெரியாதவரே இல்லை என்பதற்குக் காரணம் செய்தித்துறை, வானொலிப் பேட்டிகள், பொதுமக்களுக்காக அவர் எழுதிய அறிவியல் புத்தகங்கள், கம்யூனிசக் கொள்கைகளுக்கு அவரளித்த ஆதரவு ஆகியவையேயாகும். ஆனால், இப்பொழுது அவர் பெயரைத் தெரிந்த ஒரு சிலரும் அவரைப் பற்றி தெரிந்து வைத்துள்ளது, “நம்மைப் படைத்த இறைவன் வண்டுகளிடம்தான் அதிக ஆசை வைத்துள்ளான்” எனும் வேடிக்கையான கூற்றை மட்டுமே.

ஹால்டேனின் வாழ்க்கை, அரசியல், அறிவியல் பற்றிய சமந்த் சுப்ரமணியன் அவர்களின் இப்புத்தகம் ஹால்டேனை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையதாக அமைந்துள்ளது. ஆனால், இதற்குப் போட்டியாக 1984ல் ரொனால்டு கிளார்க் எழுதி வெளியிட்ட “ஜி.பி.எஸ். ஹால்டேனின் வாழ்க்கையும் செய்கைகளும்” என்ற புத்தகம் இன்றும் புழக்கத்தில் உள்ளது. இரண்டு புத்தககங்களும் இவரது வாழ்க்கையை அணுகும் முறையில் வெவ்வேறு வடிவத்தைக் கொண்டுள்ளன. கிளார்க்கின் புத்தகம் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய மற்ற புத்தகங்களைப் போலவே பிறப்பில் ஆரம்பித்து இறப்பு வரை ஒரே சீராகச் செல்வதால் பல இடங்களில் அதன் ஓட்டம் மந்தமடைகிறது.

சுப்பிரமணியனின் புத்தக ஆரம்பம் பூடகமாக உள்ளது. இதன் காரணம், ஹால்டனின் வாழ்க்கையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திய இரண்டு முரண்பாடான விஷயங்கள்: அறிவியலில் உண்மைக்கு அர்ப்பணிப்பு ஒரு பக்கம்; சோவியத் ரஷியாவின் கம்யூனிசத்தின் மேலுள்ள விசுவாசம் மற்றொரு பக்கம். 1948ல் கூடிய வேளாண்மை அறிவியல் சங்கத் கூட்டத்தில் அதன் தலைவர் ட்ரோபிம் லைசென்கோவின் கருத்தியல் பிரசங்கம் மரபியல் விஞ்ஞானம் உண்மைக்குப் புறம்பான ஸ்டாலினின் கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என அவர் முன்வைத்த திட்டத்தைப் பற்றி ஆசிரியர் பத்து பக்கங்கள் எழுதியுள்ளார். இப்பக்கங்களில் ஹால்டேன் எங்குமே தலை காட்டவில்லை. லைசென்கோவின் களையெடுப்பைப் பற்றிப் பல மாதங்கள் கழித்துப் பி.பி.சி.க்குக் கொடுத்த பேட்டியில் இதையெதிர்த்துப் பேசாமல் மழுப்பியதால் குடும்பம், நண்பர்கள் மற்ற விஞ்ஞானிகள் எல்லோரும் ஏமாற்றமடைந்தனர். இநநிகழ்ச்சி ஹால்டேனைப் புரிந்துகொள்ள சரியான வழி என்கிறார் சுப்ரமணியன். அவருடைய உண்மையான குணத்தை வெளிக்காட்டாததின் மூலம் அவருடைய இயல்பான தன்மையை அறிய முடிகிறது என்கிறார். இது உண்மையாக இருந்திருந்தால் இப்புத்தகத்திற்கு இது நல்ல தொடக்கமாக இருந்திருக்கும். ஆனால் சுப்ரமணியன் சிறந்த எழுத்தாளர், சுயசரிதையாளர் என்பதால் இத்தவறான தொடக்கம் இவரைத் தடை செய்யவில்லை.

ஹால்டேனின் விஞ்ஞான ஆர்வம் அவருடைய விஞ்ஞானித் தந்தை ஜான் ஸ்காட் ஹால்டேனிடமிருந்து தொற்றிக்கொண்டது மட்டுமல்லாமல் அவரது தந்தை நுரையீரல் கோளாறுகளுக்கான பரிசோதனைகளில் பலதர நபர்களை உபயோகப்படுத்தியதைப் பார்த்ததினால்தான் உழைப்பாளி வர்க்கத்தினரிடம் அவருக்கு மரியாதையும் அனுதாபமும் ஏற்பட்டது என்பதைத் தெரிவிப்பதில் சுப்பிரமணியனின் புத்தகம் கிளார்க்கின் புத்தகத்திலிருந்து மாறுபடுகிறது.

ஹால்டேனின் குடும்பம் விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், அரசியல் நிபுணர்கள் போன்ற பிரபலமானவர்களைக் கொண்டது. அவர்கள் நடத்தையும் பேச்சும் மேல் வர்க்கத்தினருடையதாக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே ஹால்டேன் இதை எதிர்த்தார்.

சுப்பிரமணியனின் நெடுங்கதைபோல் எழுதும் திறன் தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே இருந்த நெருங்கிய உறவையம் அவர்களிருவரும் சேர்ந்து செய்த அபாயகரமான பரிசோதனைகளையும் சித்திரிப்பதில் வெளியாகிறது. 1906ல், ஆழமான நீரில் மூழ்கி வேகமாக மேலே வருபவர்களைத் தாக்கும் “பெண்ட்ஸ்“ என்னும் பிணியைத் தவிர்ப்பதற்கு வேண்டிய நேரத்தைக் கணிப்பதற்கக்ச் சென்றபோது தந்தை, மகனையும் தன்கூட அழைத்துச் சென்றார். இப்பரிசோதனைக்கு உதவியவர்களில், அவரது 13 வயதே ஆன மகனும் ஒருவர். அவரது உடை சரியாகச் சேராததால் குளிரிலும் பயத்திலும் நடுங்கியபடியே மேலே வந்தார். அவரது தந்தை, சிறிதளவு விஸ்கியை வாயில் புகட்டிப் படுக்க வைத்ததாக ஆசிரியர் கூறுகிறார்.

சுப்பிரமணியன், ஹால்டேனின் சிறுவயதுச் சுட்டித்தனத்தையும் நன்றாக வருணித்துள்ளார். ஆனால் அவற்றில் சில நம்ப முடியாதவையாக உள்ளன. ஐந்து வயதிலேயே பிரிட்டிஷ் அறிவியல் முன்னேற்றச் சங்கத்தின் அறிக்கைகளைச் செய்தித் தாள்களிலிருந்து உரக்கப் படிப்பாராம். அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால் தலைக் காயத்திலிருந்து ரத்தம் சிந்தியபோது இது ஆக்சிஹீமோகுளோபினா அல்லது கார்போஹீமோகுளோபினா என்று கேட்டுக் குடும்பத்தினரை அசத்தினாராம். 8 வயதில் தன் தந்தையுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில், உயிரியலாளர் ஆர்தர் டார்பிஷயர் “மெண்டலின் மரபு வழிமுறை” உரையைக் கேட்டதின் மூலம் மரபணுவியலுக்கு அறிமுகமானார். (இவ்விடத்தில் மெண்டலின் கருத்துகளை விஸ்தாரமாக ஆசிரியர் விவரிக்கிறார்.] எண்ணங்களை முன்கூட்டியே சொல்வதாலும் விவரிக்காத விஷயங்களை ஜாடையாகக் குறிப்பிடுவதாலும் சொன்னதையே மறுபடியும் சொல்வதாலும் ,புத்தகத்தின் கதைப் பாணி சற்றே தடுமாறுகிறது. மேற்படிப்பிற்குத் தயார்செய்யும் பள்ளியில் சிறந்து விளங்கியதால் 13 வயதிலேயே “அறிவில் சிறந்தவர்” என்று அரசரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஈட்டன் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். பிற்காலத்தில், கர்வம் மிகுந்த சக மாணவர்கள், அளவிற்கு மீறிய மதபோதனை, தேசப்பற்று, குறைவான விஞ்ஞானப் பாடங்கள் போன்றவை இப்பள்ளியை என்னை வெறுக்க வைத்தன என்று பலமுறை சொல்லியுள்ளார். ஆனால், கடைசி வருடத்தில் எல்லாம் மாறிவிட்டது. பள்ளித் தலைவன், படகணியின் தலைவன், பல பரிசுகள், ஐந்தாவது ஜார்ஜ் அரசருக்கான வரவேற்புரை, ஆக்ஸ்போர்ட் நியு கல்லூரியில் கனிதப் படிப்பிற்கான உதவித்தொகை ஆகியவை சக மாணவர்களுடன் சேர்ந்திருப்பதை எளிதாக்கியது.

சுப்ரமணியன், ஹால்டேனின் இளங்கலைக் காலத்தில் எதனாலோ ஆர்வம் செலுத்தவில்லை. இரண்டு பக்கங்களையே இதற்காக ஒதுக்கியுள்ளார். கிளார்க்கின் புத்தகம் இக்காலத்தை நன்கு விவரிக்கிறது. ஹால்டேன் கணிதத்தில் முதலிடம் பெறுகிறார். தந்தையோடு சேர்ந்து முதன்முதலாக எழுதிய கணித ஆய்வுக் கட்டுரையை உடலியல் சஞ்சிகை வெளியிடுகிறது. மேலும், ஆக்ஸ்போர்டில் ஆல்டஸ் ஹக்ஸ்லி, டிக் மிட்சிசன் (பிற்காலத்தில் ஹால்டேனின் தங்கையை மணந்தவர்) போன்றவர்களின் சினேகம் கிடைக்கிறது. ஹால்டேனின் தங்கை, நவோமி அண்ணனுக்குச் சளைத்தவளல்லர் என்பதுபோல வரலாறு, கற்பனைக் கதைகளென 90 புத்தகங்களுக்கும் மேலாகப் பதிப்பித்து ஹால்டேனைப்போல் பிரபலமாயிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது வருடம் கணிதத்திலிருந்து பண்டைய இலக்கியங்களுக்கு மாற்றிக்கொண்டார். இம்மாற்றம் விந்தையாகத் தோன்றினாலும் பண்டைய இலக்கியங்களின் துணை, சாராம்சம் இல்லாத அவரது வாழ்க்கையில் ஒரு ஆறுதலை உண்டுபண்ணியது. மேலும் அவரது எழுத்தில் தெளிவையும் விரிவையும் அளவையும் கொடுத்துதவியது என்று கிளார்க் சொல்கிறார். பண்டைய இலக்கியங்களில் முதலிடம் பெற்ற செய்தி வந்தபின் உடலியலுக்கு மாறுவதற்கான திட்டம் ஆகஸ்ட் 4, 1914 நடந்த சம்பவத்தால் நிறைவேறாமல் போனது.

ஹால்டேன், ஆக்ஸ்போர்டில் அதிகாரிகளுக்கான பயிற்சியணியில் ஒரு ஆர்வமிக்க அங்கத்தினராயிருதார். முதல் உலகயுத்தம் ஆரம்பித்த உடனேயே ராணுவத்தில் சேர அனுமதி அளிக்கப்பட்டுக் “கருப்புக் காவல்” எனும் ஸ்காட்லாந்து படைவகுப்பில் சேர்ந்தார். நான்கு மாத பயிற்சிக்குப்பின் பிரான்சில் லெப்டினண்ட்டாக நியமிக்கப்பட்டார். பதுங்குகுழி அதிகாரி பதவியில் எதிரிகளின் பதுங்குகுழியில் வெடிகுண்டு எரியும் சிறிய அணிகளுக்குத் தலைமை தாங்கினார். அபாயகரமான பீதியை உண்டுபண்ணும் இவ்வேலை இவருக்கு மிக்க மகிழ்ச்சியையும் அளித்தது. எப்போதுமே வெடிப்புகளை அனுபவித்தவர் ஹால்டேன். சண்டையின் மத்தியில் இருப்பதும் எதிரிகளைத் தாக்குவதும் சிலிர்ப்பை உண்டு பண்ணுவதை அறிந்தார். “நான் இந்தத் தட்டையான ஒரு சிறப்பும் இல்லாத நிலத்தில் மரணமெய்தலாம்; மனிதர்களின் மதிப்பிற்கும் பெருஞ்சேதம் விளைந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் இந்த அனுபவம் என்னை மகிழ்வுறச் செய்தது” என்று பின்னர் இவர் எழுதியுள்ளார். மற்ற படை அதிகாரிகளிடமும் பெரிய அதிகாரிகளிடமும் இவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். ஜெனரல் ஹெய்க், “எனது படையிலேயே தைரியம் மிகுந்த கண்ணியமற்ற படைத்தலைவர் ஹால்டேன்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு முனையில் யுத்தத்தின் நடுவில் இருந்துகொண்டே தனது தங்கை நவோமியுடன் சேர்ந்துசெய்த சுண்டெலிகளின் மரபணுப் பரிசோதனைகளைப் பற்றிய கடிதப் போக்குவரத்தையும் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். இப்பரிசோதனைகளின் முடிவுகளை இருவருமாகச் சேர்ந்து மரபணு சஞ்சிகையில் வெளியிட்டனர். “கருப்புக் காவல் போர்முனையிலிருந்து ஓர் அறிவியல் கட்டுரையையும் எழுதிமுடித்த ஒரே படைத்தலைவன்” என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.

பீரங்கித் தாக்குதலில் காயமுற்று ஹால்டேன் ஸ்காட்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு கருப்புக் காவலர்களின் எரிகுண்டுப் பயிற்சிக்காக ஒரு பள்ளியைத் துவக்கினார். பிறகு மெசபொடோமியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆங்கிலேயர்களின் குண்டடியில் காயமுற்றதால் மேற்கொண்டு சேவைசெய்ய இயலவில்லை. காயங்களிருந்து குணமடைவதற்காக யுத்தத்தின் கடைசி இரண்டு வருடங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். தாய்நாடு திரும்பியபோது இந்தியா, இந்தியர்கள், இந்தியக் கலாசாரம் ஆகியனவற்றின்மேல் ஏற்பட்ட நிரந்தரமான பற்றையும் கையோடு எடுத்துச்சென்றார்.

யுத்தம் முடியும் முன்னரே அவர் இளங்கலை பயின்ற கல்லூரி அவருக்கு ஆசிரியர் பதவியை அளித்திருந்தது. 1919ல் அதை ஏற்றுக்கொண்டு, முன்னர் படித்திராத உயிரியல் பாடங்களைப் போதித்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு, கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் உயிர்வேதியல் ஆசிரியராகப் பதவியேற்றார். இங்கே, நொதிகளைப் (Enzymes) பற்றிய முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டாலும் இவரது முழு கவனமும் தத்துவார்த்த மரபணுவியல் பிரச்சினைகளுக்குக் கணிதம் மூலம் தீர்வுகாணும் ஆராய்ச்சியிலேயே இருந்தது. இவ்வாராய்ச்சியின் பலன் 1924-34ல் “இயற்கை தேர்ந்தெடுப்புக் கோட்பாட்டிற்கு கணிதத்தின் பங்களிப்பு” (Mathematical contributions to the Theory of Natural Selection) என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட 10 கட்டுரைகளாகும். பல விஞ்ஞானிகள் இதுதான் இவர் செய்ததிலேயே சிறந்த வேலை எனக் கருதுகின்றனர். இக்கட்டுரைகள் மெண்டலின் மரபணுவியலை டார்வினின் பரிணாமத் தத்துவத்துடன் இணைக்கும் தீர்வுகளை அளிக்கின்றது.

கிரேகர் மெண்டல், மரபணு விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தவராக இப்போது கருதப்படுவர். 1884ல் அவர் இறந்தபோது அவர் ஆராய்ச்சியைப் பற்றித் தெரிந்தவர்கள் ஒருவருமே இல்லை. 20ம் நூற்றாண்டில்தான் மரபுத்தொடர் விதிகளைப்பற்றி இவர் நடத்திய பரிசோதனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன. அவர் கண்டுபிடித்தது இதுதான்; ஒரு மஞ்சள் பட்டாணிச் செடியைப் பச்சைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம் செய்தால் விளையும் செடிகள் எல்லாம் மஞ்சளாக இருக்கும். ஆனால் அடுத்த தலைமுறையில், மூன்று செடிகள் மஞ்சளாக இருந்தால் ஒரு செடி பச்சையாக இருக்கும். பள்ளிக் குழந்தைகளுக்குக்கூட இப்போது தெரிந்துள்ள முக்கியமான பிரதானம் (Dominant) குறுகியது (Recessive) என்ற மரபணு விதிகளை உண்டு பண்ணியது இப்பரிசோதனைதான். ஹால்டேன் செய்தது என்னவென்றால் மெண்டலின் விதிகளையும் டார்வினின் “சிறந்த மாரபணுக்களே வாழ்நாளை நீடிக்கும்” (Survival of the Fittest) எனும் கருத்தையும் ஒரு சிறிய கணிதவழி மூலம் இணைத்ததாகும். உயிரியல் நிபுணர், ஜூலியன் ஹக்ஸ்லி (ஆல்டஸ் ஹக்ஸ்லியின் சகோதரர்) இதற்கு “நவீனச் சேர்க்கை” என்று பெயரிட்டார்.

இதே சமயம், விஞ்ஞானத்தைப் பொதுமக்களிடையே பரப்பும் பணியை ஹால்டேன் ஆரம்பித்தார். 1924ல் அவரெழுதிய, “டேடாலுஸ் அல்லது விஞ்ஞானத்தின் வருங்காலம்” எனும் சிறிய புத்தகம் பெரும் வெற்றி அடைந்து முதல் வருடத்திலேயே ஐந்து பதிப்புகளைப் பார்த்தது. அதைப் படித்து உற்சாகம் அடைந்தவர்களில் ஒருவர் சார்லோட் பர்ஜஸ் என்ற மணமான ஓர் இளம்பெண். அவர் அச்சமயம் மனிதர்கள் குழந்தைகளின் ஆண் பெண் பாகுபாட்டை தேர்ந்தெடுக்கும் திறமைபெற்ற உலகத்தைப் பற்றி நெடுங்கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். இது அறிவியல் பிரகாரம் சாத்தியமா என ஹால்டேனிடம் விவாதிக்க விரும்பி எழுதிய கடிதத்திற்குப் பதில் கிடைக்காததால் நேரே டிரினிட்டி கல்லூரிக்கே அவரைப் பேட்டி காணச் சென்றார். ஒரு வருடத்திற்குள் தனது கணவரை விவாகரத்துச் செய்துவிட்டு ஹால்டேனை மணம்புரிந்தார்.

ஹால்டேனின் வாழ்க்கையில் இது ஒரு புதிய சகாப்தமாக அமைந்தது. அரசியல் இச்சகாப்தத்தில் முக்கியப் பங்கை வகித்தது. தாராளவாதம், பொதுவுடமைக் கோட்பாடுடைய மாணவர்களும் சக ஊழியர்களும் கூடும் இடமாக அவருடைய வீடு மாறியது. ஹால்டேனும் இடதுசாரியாக மாறினார். 1928ல் சோவியத் ரஷியாவிற்குச் சென்ற சமயம், பிற்காலத்தில் லைசென்கோவால் பழிவாங்கப்பட்ட நிக்கொலாய் வாவிலோவ் இவருடைய நண்பரானார். ஊர் திரும்பிய பினனர் சோவியத் ரஷியாவைப் பற்றி மிகுந்த அனுசரணையுடன் பேச ஆரம்பித்தாலும் 1942 வரை கம்யுனிஸ்ட் கட்சியில் சேரவில்லை.

1933ல், ஹால்டேன் கேம்பிரிட்ஜிலிருந்து மாறி லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மரபணுப் பேராசியராகப் ((பின், உயிர் அளவீட்டியல் பேராசிரியர்) பதவியேற்றார். அதே வருடம், ஹிட்லர் ஜெர்மனியின் வேந்தரானார். பின்னர் ஹால்டேன் “பேராசியர்கள் அரசியலை விட்டாலும் அரசியல் பேராசியர்களைத் தனியேவிடாது” என்று இதை குறித்து எழுதினர். 1930களில், மேலும் மேலும் அரசியலிலும் இடதுசாரி வழியிலும் தள்ளப்பட்டார். ஸ்பானிய போரின்போது, குடியரசினருக்கு,விஷவாயுத் தாக்குதலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கைகளை அளித்ததுடன் போர்முனையில் பார்வையாளராகவும் இருந்ததால் விமானத் தாக்குதலினால் ஏற்படும் பேரழிவுகளைக் கண்கூடாகக் கண்டார். 1937ல், “தினசரி வேலையாளர்” பத்திரிகையில் அறிவியல் பகுதியின் நிருபராகச் சேர்ந்தார். அதிலிருந்து 1950ற்குள் விஞ்ஞானத்தை மக்களிடையே பரப்பும் சுமார் 350 கட்டுரைகளைப் பிரசாரத்துடன் சேர்த்தளித்தார்.

சுப்பிரமணியன், ஹால்டேனின் அரசியலால் ஈர்க்கப்பட்டாலும் அவரது அரசியலை முழுமையாக உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் அது உணர முடியாததாகவும் இருந்திருக்க வேண்டும். ஹால்டேனைப் போன்ற அறிவாற்றலும் திறனாய்வும் படைத்த ஒருவர் எவ்வாறு களையெடுப்பு, போலி விசாரணைகள், நாஜிகளுடன் சமாதான உடன்படிக்கை, விஞ்ஞானிகளைத் தாக்குதல், சுதந்தரங்களைக் கைப்பற்றல் ஆகிய அடக்குமுறைகளுக்குப் பிறகும் சோவியத் ரஷியாவின் மேலும் கம்யூனிசத்திலும் விசுவாசம் கொண்டிருந்தார் என்பது ஒரு புரியாத புதிர்தான். ஆனால் ஹால்டேன் கட்சி அங்கத்தினராக எட்டு வருடங்கள் மட்டுமே இருந்தார். லைசென்கோ விவகாரம் அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்பாலும் இதன் காரணமாகவே 1948 முதல் கம்யூனிசக் கொள்கைகளிலிருந்து விலக ஆரம்பித்தார். 1950ல் கட்சியிலிருந்தும் முழுவதாக விலகினார். ஆனால், அவர் உக்கிர இடதுசாரியாகவே தொடர்ந்தார். 1956ல், சூயஸ் நெருக்கடியை இனி என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது என்ற பொது அறிவிக்கைக்குப்பின் இரண்டாவது மனைவி ஹெலனுடன் பிரிட்டனைவிட்டு இந்தியா சென்றார். பின்னர், ”சதா காலமும் காலுறை அணியும் கொடுமையை என்னால் தாங்க முடிவில்லை, 60 வருடங்கள் காலுறை அணிந்தது போதும் என்றுதான் இந்தியாவிற்கு வந்தேன்” என்றார். இரண்டுமே உண்மையல்ல. இந்தியாவின் சோஷலிசமும் கலாசாரமும் சீதோஷ்ணமும்தான் அவரை இந்தியாவிற்கு ஈர்த்தது.

1964ல் புற்று நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். அவரது நோயைப் “புற்று நோய் வேடிக்கையான ஒன்று” என்ற கவிதையின் மூலம் நிலைநிறுத்திவிட்டார். “மலக்குடல் புற்றுநோயைப் பற்றிப் பாட ஹோமரின் குரல் எனக்கிருந்தால்” எனத் தொடங்குகிறது இக்கவிதை. சுப்ரமணியன் தனது புத்தகத்தில் இக்கவிதையை முழுமையாகத் தருகிறார். குறைகளிருந்தாலும் சுப்பிரமணியனின் புத்தகம் ஹால்டேனின் சத்தம் நிறைந்த குரலைக் கேட்க உதவுகிறது. தவறுகள் இருந்தாலும் ஹால்டேனின் குரலை மீண்டும் கேட்பது பயனுள்ளதாகும்.

A Dominant Character: The Radical Science and Restless Politics of JBS Haldane
Samanth Subramanain
Atlantic, 400pages, 20 pounds.
Ray Monk, the reviewer is a Professor emeritus of Philosophy at Southampton University.
Published in New Statesman Books Section 4th November 2020.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.