கார்த்திகையின் பெருக்கில்
தாவிக் குதிக்கும்
கெண்டகளாய்,
குளத்து நீரில்
நழுவிச் செல்லும்
அர்த்தங்கள்.

தூக்க சிரமமான
அகராதியில்
தேய்ந்து பழுப்பேறி
வாசிக்க முடியாமல்
ஆகிவிட்ட வரிகள்,
அழியும் மை உருவின்
ஆழத்துள் சென்று
பதிந்து புதையும் பேதங்களை
சுமந்து அடைகாக்கும்
சொற்கள்.
அடைக்கலம் தேடி
மொழிக்குள்
குழிபறித்து,
பதுங்கி
ஒளிந்து கொண்ட
உவமைகள்
பட்டிக்குள் சேர்ந்த உருவகங்கள்
பஞ்சாரத்துள் அடைத்த படிமங்கள்
அனைத்தையும்
அவற்றின்
சுருக்கு முடிச்சை அவிழ்த்து
விடுவித்து விட்டால்,
இப்போது
நம்முன் இருப்பதோ
குவைகள் அசைய
பரிபூரணம் பொருந்தும்
மொழியின் நிர்வாணம்.
எதிரே இருக்கும் தாளில்
இருப்பது
எதுவாயினும்,
இனிப்புப் பெட்டிக்குள்
போர்த்திய
எண்ணெய் காகிதம் போல்,
நாம்
வாசிக்கப்போகும் வரிகளில்
சப்திக்க தவமிருக்கும் அசைகள்
சேரக் காத்திருக்கும்
சொல் இணைவுகள்
மற்றும்
அவற்றின் கிடக்கைகளை
நம் மனம் போன போக்கில்
வடித்துக் கொள்ளலாம்.
வேட்டுச் சத்தத்தில்
வெளியேறிவிட்ட பறவைகள்
விட்டுச்சென்ற
தனி மரமாய்
கை தவறிய
கண்ணாடியின் இன்மையில்
வாசிப்பதுதான் –
எவ்வளவு
இனிமையானது!
கூர்மையான சொற்தேர்வுகள், வாசிப்பின் இன்பத்தை ரசிக்க வைக்கும் கவிதை. வாசிக்க பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துகள்!!