காடு

This entry is part 2 of 2 in the series காடு

சத்தியமங்கலத்தைக் கடக்கும் முன்பாகவே இடியாப்பம் பிழிந்ததுபோலக் கன்னட ஊர்ப் பெயர்களுடன் பேருந்துகள் காரைக் கடந்தன. ஜாங்கிரிபோலச் சிக்கலான பிழிதல்களென்றால் தெலுங்கு, கொடிக் கம்பியில் துணிகளைக் காயப்போட்டிருந்தால் இந்தி, புள்ளி வைக்காத நெளிக் கோலங்களென்றால் மலையாளம் என்னுமளவில் என்னால் பிற மொழிகளை அடையாளம் காணமுடியும்.

மூங்கில் காடுகளைக் கடந்து மைசூரின் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றிக்கொண்டு இரவு 8 மணிக்கு மைசூரு வந்து சேர்ந்தோம். அங்கு முன்னரே ஏற்பாடு செய்திருந்த ’சாவ்யா’ஸ் ஹோம் ஸ்டே சிறப்பாக இருந்தது. வீட்டின் உரிமையாளர்களோ பணியாளர்களோ இருப்பதில்லை. மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருக்கும் வீடு. கதவுகளைத் திறக்கவும் பூட்டவும் ரகசிய எண்களை முன்னரே அனுப்பிவிடுகிறார்கள். எல்லாம் மிகச்சரியாக இருந்த, பாதுகாப்பான செளகரியமான தங்கல் அங்கு.

அங்கிருந்து அதிகாலை கிளம்பி கபினிக்குப் புறப்பட்டோம். சங்கராந்தி தினமாகையால் சாலைகளில் நாம் இங்கு அதிகம் காணும் அடர் ஊதா நிறக் கரும்புகளுடன் இளஞ்சிவப்புக் கரும்புகளும் விற்பனையில் இருந்தன. சீசன் என்பதால் நடைபாதைக் கடை எங்கும் இலந்தைப் பழங்களையும் காணமுடிந்தது. எங்கும் மஞ்சள் நீராட்டப்பட்டிருந்த காளை மாடுகள் திரிந்தன. பொங்கல் சமய வழமைபோல் இருக்கிறது.

நகரின் பிரபல உணகமொன்றிற்குக் காலை உணவுக்குச் சென்றோம். தமிழைச் சுலபமாகப் புரிந்துகொள்கிறார்கள். சர்க்கரைப் பொங்கல் என்று பாயஸம்போல ஏராளமாக முந்திரி, பாதாம், பிஸ்தா கலந்திருந்த இனிப்பான திரவத்துடன் காரமான தேங்காய்ச் சட்னியும் கொடுத்தார்கள். சாம்பார் உள்ளிட்ட எல்லா பதார்த்தங்களிலும் கொஞ்சம் வெல்லத்தின் இனிப்புச் சுவை இருந்தது மைசூருவில்.

கபினியின் சுற்றுலாத் துறையின் கபினி ரிவர் ரிசார்ட் தங்கும் விடுதிக்கு மதிய உணவுக்குபின்னர் வந்துசேர்ந்தோம். மிக அழகிய விடுதி. உயர்தர மரச் சாமான்களும் மர உத்தரமும் மரத் தளமுமாகப் பல்லாண்டுப் பழமையுடன் கம்பீரமான அறைகளும் நீள விசாலமான இடை நாழிகளுமாகப் பெரு மரக் கூட்டங்களுக்கு நடுவில் கபினி, கழிமுக நீரின் குளிர்ச்சியுடன் அமைந்திருந்தது.

விசாலமான அறைகளில் மைசூரு அரச குடும்பத்தினரும் பிரிட்டிஷாரும் தங்கும்பொருட்டு எழுப்பப்பட்ட கட்டிடம் என்பதைச் சொல்லும் தகவல்கள் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன. அநேகமாக எல்லா அறைகளிலும் புகைப்படங்களில் மகாராஜாக்களும் வெள்ளைக்கார துரைகளும் வேட்டையாடிய புலியுடன் குழுவாக வெற்றிச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார்கள். அறையின்முன்பு பூத்த முந்திரி மரங்கள் ஏராளமாக நின்றன.

முன்பே தொகைசெலுத்தி ஏற்பாடு செய்திருந்த மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையிலான ஒரு கானுலா இருந்தது. மதியம் 2.30’க்கே நல்ல சுவையான தேநீரும் பிஸ்கெட்டுகளுமாக கபினி கழிமுகக் கரையில் கரையில் அமைந்திருந்த உணவகத்தில் அளித்தார்கள். பின்னர் செலுத்தப்பட்ட தொகைக்கேற்ப A, B, எனப் பயணிகளைப் பிரித்து, திறந்திருக்கும் கம்பிவலை வேய்ந்த ஜன்னல்களுடன் பேருந்துகளும் நாங்கள் சென்றதுபோல நாற்புறமும் திறந்திருந்த 10 பேர் மட்டும் அமரும்படியான ஸஃபாரி ஜீப்புகளுமாக அமர வைக்கப்பட்டோம். அனைவரும் முறையாக முகக்கவசம் அணியும்படியும் பளிச்சிடும் நிறங்களில் உடை அணிவதையும் நறுமண திரவியங்கள் உபயோகிக்கவும் வேண்டாமெனவும் முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.

வண்டி ஓட்டுநர் இயற்கை ஆர்வலரான கேரள இளைஞர் சுஜீத். நாங்கள் காட்டின் உள்ளடுக்குகளுக்கும் செல்லும் A பிரிவில் இருந்தோம். வழியில் ஒரு சிறிய வண்டியின் பின்புறம் ஒரு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் பல இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டிருந்த கேமராவுடன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அங்கேயே காத்திருக்கச்சொல்லி சைகை காண்பித்தார். நல்ல உயரமும் அதற்கேற்ற ஆகிருதியுமாக கம்பீரமானவர். சற்றுமுன்னர் இரண்டு குட்டிகளுடன் அன்னைப் புலி அந்த வழியே சென்றிருப்பதாகவும் மீண்டும் அதே வழியாக வரலாமென்றும் சொன்னார். 10 நிமிடங்கள் காத்திருந்தும் சலனம் இல்லையென்பதால் எங்கள் ஜீப் கிளம்பியது. நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.

3 மணிக்குப் புறப்பட்டு 3.25 ஆகி இருந்தது. சுஜீத் ஜீப்பை நிறுத்தினார் கைவிரல்களைப் பரதநாட்டியக் கலைஞர்கள் தாமரை மலர் அரும்பைக் காட்டுவதுபோலக் குவித்தும் திறந்தும் காட்டினார். புலி வருகிறதென மான்களின், குரங்குகளின் எச்சரிக்கைக் குரலை (alarm call) அப்பக்ச் சைகையில் சொல்கிறார் என்று மகன் விளக்கினான்.

ஜீப்புக்கு வெகு அருகே காய்ந்த புதர்களுக்குள்ளிருந்து ஆரஞ்சும் மஞ்சளுமாய்த் தீப்பிழம்பைப்போல மிகப் பெரியதாக வெளிவந்தது ஒரு கம்பீரமான ஆண் வங்காளப் புலி. ராயல் பெங்கால் டைகர் எனப் பெயரிட்டது எத்தனை பொருத்தமென நினைத்துக்கொண்டேன். அரசனின் நிமிர்வும் கம்பீரமுமான உடல் மொழியும். அதற்கு 6 வயதிருக்கலாம் என்று சொன்னார்கள்.

என்பின்னே அமர்ந்திருந்த ஒரு மலையாள யுவதி ’என்டெ அம்மே’ என்றார் மூச்சுக் குரலில். அத்தனை அருகில் நாங்களிருந்ததைக் கொஞ்சமும் புலி கண்டுகொள்ளவில்லை. காமிராக்களின் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. மெல்ல நடந்துவந்து, நிதானமாக நாவைச் சுழற்றிவிட்டு அங்கிருந்த சிறு வாய்க்காலின் குறுக்காக நின்றபடி உடலை வளைத்து நெட்டி முறித்தது. பின்னர் அதன் கண்களைச் சுற்றிப் பறக்கும் சிறு பூச்சிகளும் தெரியும் அண்மையில் எங்களின் வாகனத்தை நோக்கி வந்தது. சுஜீத் மெல்ல ஜீப்பைப் பின்னோக்கி நகர்த்தியவாறே செல்லப் புலியும் முன்னோக்கி எங்கள் வண்டியைப் பார்த்தவாறே வந்துகொண்டிருந்தது. அதன் கண்களில் எங்களைப் பொருட்படுத்திய பாவமே இல்லை. 500 மீட்டர்வரை இப்படி மெல்லப் புலியுடன் கூடவே நகர்ந்தோம். நினைத்துக்கொண்டாற்போலத் திரும்பி அங்கிருந்த மரமொன்றின் அடிப்பகுதியை நிதானமாக முகர்ந்து பார்த்தது. தான் சிறுநீரால் வகுத்து வைத்திருக்கும் தனது எல்லைக்குள் ஏதேனும் குறுக்கீடுகளும் சவால்களும் இருக்கிறதா என அவை இப்படிச்  சோதிக்கும் என மகனால் தெரிவிக்கப்பட்டேன்.

இப்படியான எல்லைப் பிரச்சனைகள், சவால்கள் இணையான ஆண் புலிகளிடமிருந்து மட்டுமல்லாது அவற்றிற்குப் பிறந்து வளர்ந்த ஆண் குட்டிகளிடமிருந்தும் பிற பெண் புலிகளிடமிருந்தும் வருவதுண்டாம்.

இவ்வாறு மரங்களில் தனது சிறுநீரால் வகுக்கப்பட்ட எல்லைகள் பிற விலங்குகளால் குறுக்கிடப்பட்டிருக்கிறதா என்று முன்வரிசைப் பற்கள் ஈறுகளுடன் நன்றாக வெளியே தெரியும்படி மேலுதட்டை வளைத்துச் சில நொடிகள் நன்றாக முகர்ந்து பார்ப்பதைப் ’’ஃப்ளெஹ்மேன் ரெஸ்பான்ஸ்’’ (Flehmen response) என்கிறார்கள் விலங்கியலாளர்கள். இதுபோன்ற செயலை குதிரை, ஆடு, கழுதை உள்ளிட்டப் பல பாலூட்டிகளும் செய்கின்றன. இதை 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த டச்சுத் தாவரவியலாளரும் பிணச் சீரமைப்பு (Embalming) முறையை உருவாக்கியவரும் தாவர, விலங்கு மனித உடல் பாகங்களைப் பாதுகாக்கும் கலையைக் கண்டறிந்தவருமானFrederik Ruyschஎன்பவரே முதலில் கண்டுபிடித்தார். இந்த நடத்தை, பின்னர் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவரும் பல அறுவை சிகிச்சை உபகரணங்களை வடிவமைத்தவருமானLudwig Lewin Jacobson என்பவரால் விரிவாக எழுதப்பட்டது.

பின்னரும் 20 நிமிடங்கள்வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்துவிட்டு மழை வலுக்கத் துவங்கியதும் சரேலென அங்கிருந்த புதர்களுக்குள் சென்று மறைந்தது TT என அங்கிருப்போரால் செல்லமாக அழைக்கப்படும் அந்தக் கம்பீர வங்காளப் புலி.

இத்தனை அருகில் இருக்கும் புலி மனிதர்களைத் தாக்காதா என்று வண்டி ஓட்டுநரிடம் ஒரு பயணி திகிலுடன் வினவினார். இதுவரை அப்படியொன்றும் அங்கு நடந்ததில்லையென்றும் அவை பொதுவாக வனக் காவலர்களையும் பழங்குடி இனத்தவரையும் தொந்தரவுக்கு உள்ளாக்கியதில்லையென்றும், அவற்றின் விருப்ப இயற்கை உணவு அங்கே ஏராளமாக இருக்கையில் அவற்றிற்கான அறத்தை அவை மீறுவதில்லை என்றும் பதிலளித்தார் சுஜீத்.

மான் கூட்டமொன்று நிறைந்திருந்த இடத்தில் மற்றொரு பயணி, இப்படி இரை விலங்குகள் அதிகம் இருக்கும் இடத்தில் புலிகளின் வரவுக்கு அதிகச் சாத்தியமிருக்கிறதா என்றும் கேட்டபோது, பசிக்கும்போது மட்டும் குறிவைக்கும், ஒற்றை விலங்கினை மட்டும் துரத்திச்சென்று வேட்டையாடிக் கொன்று உண்ணும், அதன்பிறகு எதன் பொருட்டும் இரை விலங்குகளைப் புலிகள் தொடர்வதும் தொல்லைசெய்வதும் கொல்லுவதும் இல்லையென்பதால் புலிகளைக் காண மான் கூட்டங்களினருகில் காத்திருப்பது பொருளற்றது என்று சொல்லப்பட்டது

இப்போது குரங்கு, பறவை, மான்களின் ஒக்ச் சுருதி மாறி ஒலித்தது, புலி அகன்றுவிட்டது என்று சொல்லுகின்றன போலும். இத்தனை அருகில் இத்தனை சாவகாசமாக அங்கு வெகுசிலரே இந்த புலியைக் கண்டிருக்கிறார்கள் என்று சுஜீத் தெரிவித்தார்,

சுஜித் அலைபேசியில் செய்தி அனுப்பியதும் அந்தப் பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளரும் மேலும் சில சுற்றுலாப் பயணிகளின் ஜீப்புக்களும் வந்தன. பிற பயணிகள் புலியைக் கண்ட எங்களையும் வேடிக்கை பார்த்தனர். அத்தனை அருகில் ஒரு கொல்விலங்கினைப் பார்த்ததன் பிரமிப்பு நீங்குவதன்முன்னரே பல அரிய பறவைகளையும் நெற்றியில் ஆங்கில ’வி’ வடிவத்தைக் கொண்டிருக்கும் barking Deer எனப்படும் புள்ளி மான்களைவிடச் சற்று சிறிய உடலைக் கொண்டிருக்கும் மான்களையும் விழுந்த மரங்களின்மீது செங்குடை பிடித்தபடி நின்றிருந்த ரத்தச் சிவப்பு நச்சுக் காளான்களையும் பார்க்கமுடிந்தது.

மழை வெயிலைப்போலவே பொழியத் துவங்கினாலும் அங்கிருந்த லங்கூர் குரங்குகளும் மான்களும் மழையைச் சட்டைசெய்யவே இல்லை. தேன் நிறத்தில் அழகிய வெண்புள்ளிகளுடன் கூட்டம் கூட்டமாக மான்கள் மழையிலேயே புற்களை மேய்ந்துகொண்டு எங்கெங்கும் திரிந்தன. பெரும்பாலும் தினந்தோறும் கானுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் வருவது வாடிக்கை என்றாலும் அவை ஒவ்வொரு ஒலிக்கும் உடல் விதிர்த்துச் செவி உயர்த்தித் தலைதூக்கி, திடுக்கிட்டுப் பார்க்கின்றன. மழையிலேயே லங்கூர்கள் மரத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு நிதானமாக நெல்லிக் கனிகளைச் சுவைக்கின்றன. மகன் நிறைவாகப் பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டான். நூற்றுக்கணக்கான மான்கள் நீரருந்திக் கொண்டிருக்கும் நீர்த்தேக்கம் ஒன்றுவரை சென்றுவிட்டுப் பின்னர் விடுதிக்குத் திரும்பினோம்.

தங்கியிருந்த அறையில், சாதாரணமாக நமது வீடுகளின் படுக்கையறை அளவில், சந்தன சோப்புக்கள் காத்திருந்த விஸ்தாரமான குளியலறையில் குளித்து உடைமாற்றி இரவுணவிற்கு அதே கழிமுகத்தையொட்டிய உணவுக்கூடத்திற்குச் சென்றோம். சில மணி நேரத்துக்கு முன்னர் பிடிக்கப்பட்ட மீன் உணவிலிருந்து, சைவ, அசைவ உணவின் பல வகைகளும் ஏராளமான இனிப்புகளும் ராகிக்களி போன்ற பாரம்பரிய உணவுமாக பெரும் விருந்து என்றுதான் அதைச் சொல்லவேண்டும் கர்நாடகத்தின் சிறப்பான ஊனுணவு தயாரிப்பாகச் சொல்லப்பட்ட வெள்ளை ரவையில் புரட்டிப் பொரித்தெடுத்த கொழுத்த மீன் துண்டங்களைப் பலரும் விரும்பி உண்டார்கள்.

காட்டிலாகாவின் உயரதிகாரி ஒருவர் நேரடியாக அங்கே வந்திருந்து உணவு பரிமாறுதலைப் பார்வையிடுகிறார். கொஞ்சம் ஈரமாயிருந்த ஒரு மேசையைத் துடைக்காமலிருந்த பணியாளர்களை அவர் கடிந்துகொண்டதும் அது உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டது. அதிகரிகளின் நேரடித் தலையீடு இருப்பதால் உணவு, கானுலா, தங்கல் எல்லாம் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் சரியாகவும் நேரத்துக்கும் நடந்தன.

பின்னிரவு வரையிலும் அருகிலிருந்த மிகப்பெரியதொரு கூடத்தில் கர்நாடகக் காடுகள் குறித்த ஆவணப் படங்களைத் திரையிட்டார்கள். மறக்க முடியாத திரை அனுபவங்கள் அவை. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு படகுச் சுற்றுலா மற்றும் பறவை காணுதல் என்பதை நினைவூட்டினார்கள்.

மறுநாள் துல்லியமாகக் குறித்த நேரத்துக்கு படகுப் பிரயாணம் துவங்கியது.  அனைவருக்கும் நல்ல மணமும் குணமுமாக ஒரு காபியும் சில பிஸ்கெட்டுகளும் கிளம்பும்முன்பு அளிக்கப்பட்டன. எலும்பை ஊடுருவும் குளிரில் அனைவரும் உயிர் பாதுகாப்புக்கான மிதவை உடைகளுடன் இயந்திரப் படகில் ஏறினோம். படகில் சுமார் 10 குடும்பங்கள் இருந்தன. பாரத விலாஸ் படகென்றே சொல்லலாம் பல மொழிகளில் கலவையாகக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. நல்ல வசதியான இருக்கைகள், புறப்பட்ட சிறிது நேரத்தில் கதிரெழுகையை நிதானமாகக் கண்டோம். அது பெரும் உள எழுச்சியைத் தந்தது. பரந்து விரிந்திருந்த நீர்ப் பரப்பின் நடுவில் இருந்தபடி, எழும் கதிரைக் கணம் கணமாகப் பார்ப்பது பேரனுபவம்.

தூரத்தில் கரையும், அங்கு வெட்டப்பட்டிருந்த மரங்களின் அடிப்பகுதிகளுமாய்த் தெரிந்தது. அந்த நேரத்துக்கு மீனவக் குடும்பங்கள் தோணிகளை நீரில் இறக்கிக்கொண்டும், சிலர் தீக்காய்ந்துகொண்டும் இருந்தார்கள்.

எனக்கு முன்பிருந்த இருக்கையில் புதுமணத் தம்பதியினர். சிறு குழந்தை ஒன்று ஒரே இரவில் பெரிய பெண்ணானதைப்போல அந்தப் பெண் நல்ல புஷ்டியாக முகத்தில் குழந்தைத்தனம் மாறாமல் இருந்தாள்; அவள் அணிந்திருந்த கம்பளிக் குல்லாவை எடுத்துத் தான் அணிந்துகொள்ள முற்பட்ட கணவன் அதில் ஒட்டியிருந்த மனைவியின்  கூந்தல் இழைகளைக் கையிலெடுத்து ரசித்து பார்த்துக்கொண்டு மனைவியைப் பார்த்து மந்தகாசப் புன்னகைத்தார். மணமாகி சில வாரங்களாகியிருக்கலாம்.  

3 மணி நேரப் படகுப் பயணத்தில் ஏராளமான நீர்ப் பறவைகள் நீரில் நின்றிருந்த காய்ந்த மரக் கிளைகளில் அமர்ந்தபடி சுடச்சுட மீன் பிடித்துத் தின்றுகொண்டிருந்தன. முதன் முதலில் நீர்நாய்களை (Otters) மிக அருகில் ஏராளமாகப் பார்த்தேன். நனைந்து பளபளக்கும் கொழுத்த உடலுடன், ஒன்றையொன்று நீருக்குள் மூழ்கியும், எழுந்து துரத்தியும், தப்பித்தும் தீரா விளையாட்டில் இருந்தன.

படகை இரண்டு ஓட்டுநர்கள் மாற்றி மாற்றிச் செலுத்தினார்கள். தான் புகைப்படம் எடுக்க விரும்பிய பறவைகளினருகில் செல்லுமாறு மகன் கேட்டுக்கொண்ட போதெல்லாம் உதவியதுடன் அவனுடன் ஆர்வமும் உற்சாகமுமாகப் பறவைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்தபடி படகைச் செலுத்தினார்கள். மூன்று மணி நேரத்திற்குப்பிறகு திரும்பினோம். காலையுணவு மிக விரிவாக உண்டாட்டு என்று சொல்லும்படி அருமையாக இருந்தது.

மைசூரு மகாராஜாக்களின் தனிப்பட்ட வேட்டை ஸ்தலமாகவும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் இந்திய அரச குடும்பத்தினரும் வந்து தங்கும் பொருட்டும் கட்டப்பட்ட உயர்தர விடுதியான இதைத் தற்போது கர்நாடக மாநில அரசு மிகச் சிறப்பாக நிர்வகிக்கின்றது. பிளாஸ்டிக் பொருட்களையும் புகை பிடிப்பதையும் முற்றிலும் தடைசெய்திருக்கிறார்கள். அதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். எப்போதும் தூய்மைப்படுத்தும் பணி நடந்துகொண்டே இருக்கிறது.

பொன் மூங்கில்கள் செறிந்து வளர்ந்திருந்த இடமொன்றில் இரண்டு ஹார்ன்பில்களையும் கண்டோம். அவை அங்கேயே தங்கியிருக்கின்றன போலும், அடிக்கடி தென்பட்டன. பலவிதமான வன மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. காற்று மாசு அறவே இல்லாத தூய இடங்களில் மட்டும் வளரும் பச்சைப் பாசிகளும் பூஞ்சைகளும் ஈருயிர் ஒருடலாக இருக்கும் லைக்கன்களும் (LIchens) ஏராளமாக மரங்களில் காணப்பட்டன. அனைத்து மரங்களிலும் அவற்றின் தாவரவியல் பெயரும் ஆங்கிலப் பொதுப் பெயரும் எழுதப்பட்ட பலகைகள் இருந்தன.

அன்று மாலையும் கானுலாவிற்கு ஜீப்பில் சென்றோம். யானைகளையும் காட்டெருதுகளையும் மான் கூட்டங்களையும் பூக்கத் துவங்கியிருந்த தந்தப்பாலை மரங்களையும் லங்கூர்களையும் மீண்டும் திகட்டத் திகட்டப் பார்த்தோம்.

இளமழையில் அடர்காட்டுக்குள் பல மணி நேரங்கள் செலவழித்தது உற்சாகமாய் இருந்தது. மறுநாள் அதிகாலையிலும் ஒரு ஜீப் ஸஃபாரி ஏற்பாடு செய்திருந்ததால் முன்னிரவிலேயே உறங்கச் சென்றோம், வழக்கம்போல மிக விரிவான இரவு உணவிற்குப்பின்னர். கபினி ரிவர் ரிசார்ட்டின் உணவுகளைக் குறித்து தனியாக ஒரு பதிவு எழுதலாம், அத்தனை சிறப்பான உணவுகள்.

மறுநாள் அதிகாலையிலேயே பணியாளர்கள் அறைக் கதவருகில் காத்துநின்று எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு வழிநடத்தினார்கள். கடும் குளிர். அணிந்திருந்த கம்பளி ஆடைகளைக் காட்டின் குளிர் பொருட்படுத்தவே இல்லை. அதிக சத்தமில்லாத வேகத்தில், மொத்தம் பத்துப் பயணிகளுடன் நாற்புறமும் திறந்திருந்த ஜீப்பில் காட்டின் உள்ளடுக்கிற்குச் சென்றோம். நடுக்காட்டில் காட்டின் ஒலிகளை மட்டுமே கேட்டபடி அரைமணி நேரம் இருந்தோம். வழக்கமான எனது அதிகாலைகள் குக்கரின், தண்ணீரை மேல்தொட்டியில் நிறைக்கும் மோட்டாரின், மிக்ஸியின், வாஷிங் மெஷினின், குழந்தைகளின் பலவித சப்தங்களால் நிறைந்தவையாக இருக்கும். காட்டின் அந்த முற்றமைதிக்குப் பழக்கப்படாத என் மனம் திகைத்துப் பின்னர் சமனப்படுவதற்குக் கொஞ்ச நேரமானது. இல்லத்தரசிகள் இப்படிக் கானுலாக்களுக்கு அவ்வப்போது வந்துசெல்வது உளவியல் ரீதியாக மிகுந்த நன்மையளிக்கும் என்று நினைக்கிறேன்.

மெல்ல மெல்லப் பறவைகளின் வெவ்வேறு குரல்கள் கேட்கத் தொடங்கின. கதிர் எழுந்து ஒளிக்கற்றைகள் பெருமரங்களின் இடைவெளிகளில் நுழைந்து எங்களை மெல்லத் தீண்டியது. கடுங்குளிரில் அந்தக் கதிர்த் தொடுகை அத்தனை இதமளித்தது.

சில நிமிடங்களிலேயே மான்களைத் துரத்தியபடி வந்துகொண்டிருந்த 6 செந்நாய்கள் அடங்கிய சிறு கூட்டமொன்று காட்டுப் பாதையில் இடைப்பட்டது. வாகனத்தைக் கண்டதும் செந்நாய்கள் தயங்கி நின்றதும் மான்கள் துள்ளி விரைந்தோடி அகன்றன. அங்கேயே அமைதியாக நின்றிருந்தோம் சில நிமிடங்களில் செந்நாய்கள் திரும்பிச்சென்றன. இப்படியாக அக்காட்டின் அன்றைய உணவுச் சங்கிலியின் ஒரு கண்ணியை நாங்கள் அக்கணம் அறுத்தோம்.

அதே நெட்ஃப்ளிக்ஸ் ஒளிப்பதிவாளரும் உடன் இணைந்துகொண்டு, முந்தின நாள் இரண்டு குட்டிகளுடன் அன்னைப் புலியையும் புதரருகில் உறங்கும் ஆண் புலியையும் படமெடுத்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். எல்லைகள் முன்பே வகுக்கப்பட்டிருப்பதால் மீண்டும் அங்கே அவை தென்படும் சாத்தியங்களைக் கணக்கிட்டு அவர் அங்கேயே காத்திருந்தார், பச்சிலையின் வாசனை, இளமழை எழுப்பிய மண் வாசனை என்று கலவையான இயற்கையின் வாசனையில் திளைத்தபடிக்கு நாங்கள் முன்னகர்ந்தோம்.

குட்டிகளுடன் பெண் யானைகளையும் தனித்து நின்றிருந்த கொம்பன் யானைகளையும் பல இடங்களில் பார்த்தோம். பருவமடைந்த ஆண் யானைகள் காமத்தின் பொருட்டல்லாது வேறெப்போதும் பெண் யானைகளுடன் சேர்ந்திருப்பதில்லையாம்.

விடுதிக்குத் திரும்பும் வழியிலும் மற்றொரு செந்நாய்க் கூட்டம் மூன்று திசைகளில் பிரிந்து நடுவில் மான் கூட்டமொன்றை சுற்றி வளைத்தன. இடையில் எங்களின் ஜீப் வந்ததும் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த மான்கூட்டமும் துரத்திய செந்நாய்களுமாகத் திகைத்து நின்றன. மான் கூட்டம் தப்பியோடியதும் செந்நாய்கள் திரும்பிக் கலைந்து சென்றன. எங்களால் அக்காட்டின் வலையின் மற்றொரு கண்ணியும் அறுபட்டது. சூழல் சுற்றுலாக்கள் இயற்கைக்கு ஏற்படுத்தும் இடர்பாடுகளைக் கண்ணாரக் கண்ட நாள் அது.

காட்டெருதுகளை நிறையக் காண முடிந்தது, பலவித பறவைகள் இடையிடையே எங்களைக் கடந்துசென்றன. ஜீப்பில் இருந்த பறவை ஆர்வலர்கள் குறிப்பும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்கள். குற்ற உணர்வும் மகிழ்வும் புத்துணர்வும் உள எழுச்சியும் கலவையான மனநிலையில் விடுதிக்குத் திரும்பினோம்.

ஒன்று போலான நாள்களின் அலுப்பிலிருந்து விடுபடவும் காங்க்ரீட் காடுகளின் மாசு நிறைந்த சூழலில் வாழ்வதால் தூய காற்றைச் சுவாசிக்கவும் அவ்வப்போது இப்படி இயற்கையான இடங்களுக்குச் செல்வது நமக்கு ஒரு நல்ல மாற்றத்தை அளிப்பது உண்மை என்றால் இயற்கையின் பேரமைதியை, அதன் சமநிலையை இக்கானுலாக்களும் சூழல் சுற்றுலாக்களும் குலைக்கின்றன என்பதும் உண்மையே!

Series Navigation<< காடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.