இலக்க முறை நல ஆய்வும் மருத்துவமும்

வளர்ந்து வரும் சிறந்த 10 தொழில்நுட்பங்கள் – பகுதி 6

‘சீத்தே’ என்று அலறிக் கொண்டு ஓடி வந்தார் அப்புசாமி.

‘கன்ட்ரி மேன், என்னவொரு டெஸபில்ல கத்தறேள்?’

‘என்னப் புடிக்க வராடீ.’

‘யாரு போலீசா, சி.பி.யை.யா இல்ல எஃப்.பி. ஐ லெவெலுக்குப் போய்டேள்ளா?

‘சீத்தே, ஏதோ என் உடம்புலேந்து கத்தித்தாம். ஆம்புலன்ஸ் போட்டுண்டு…’

‘ஓ, சோ சூன்; ட்ரிபிள் எம்லேந்து வந்துட்டாளா?’

‘அடிப்பாவி, நீதான் வரவழச்சையா? போச் சொல்லு. நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்.’

‘உங்க கைலேந்து சவுண்ட் வரது பாருங்கோ.’

‘ஐயோ, இதை நீ எனக்குக் கட்டிவிட்றச்சே கெழவிக்கி நம்ம மேல லவ்வுன்னு நெனச்சேன். இந்தக் கொரானால ரசகுண்டு, பீமாராவ் கிட்டெல்லாம் இதக் காட்ட முடியாம தவிச்சேன். நீ சிக்னல் கொடுத்திருக்க’

‘யூ இங்காரிஜிபில் ஃபெல்லோ, கோ டு ஹாஸ்பிடல். நானா கிழவி? ஹைஜீனே இல்லாம கண்ட இடத்ல தின்னேளோல்யோ? அந்த வாட்ச் காட்டிக் கொடுத்துடுத்து. போங்கோ ட்ரிபிள் எம்க்கு’

***

இலக்கச் செயலிகள் நம் அலைபேசியுடன் இணைந்து நிகழ்த்தும் ஓர் அற்புதத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

உங்கள் மருத்துவர் வருங்காலங்களில் தரப்போகும் மருந்துச் சீட்டு ஒரு மருத்துவப் பயன்பாட்டுச் செயலியாக இருக்கலாம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள அல்லது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பல நூறு செயலிகள், உடல் நலம், மன நலம் மற்றும் நோயினைத் தானாகக் கண்டறிந்து, அதைக் கண்காணிப்பதோ, மருந்துகளைப் பரிந்துரைப்பதோ செய்யும் வண்ணம் உருப்பெற்று வருகின்றன. பொதுவாக இலக்க மருந்துகள் என அழைக்கப்படும் இவைகள், மரபுசார் சிகிச்சை முறையினை மேம்படுத்தவும், உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் அல்லது அணுக இயலா தொலைவில் உள்ள தூரங்களில் செயல்படும் சாத்தியங்கள் உள்ளவை என்பதால் தேவ தூதர்கள் எனக் கொண்டாடப்பட வேண்டியவையே. இந்தத் தீ நுண்மிக் காலத்தில் இந்த மென்பொருள் செயலிகள் மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே பாலமெனச் செயல்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதன் செயல் முறை எப்படி அமைகிறது? நம் கைபேசிகள் நம்மைப் பற்றிய தகவல்களை, கண்டறியும் கருவிக்கு வழங்குகிறது. பயனாளர்களின் குரல், முக பாவம், பேசும் இடம், அவரது உடற்பயிற்சி, உறக்கம், செய்திகள் பகிர்தல் போன்ற குண நலன்கள் பதிவாகின்றன; செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு, நிகழக் கூடுமென கணிக்கப்பட்ட ஒரு இடர் அல்லது இருக்கும் நோய் தீவிரப்படுவதை இவை அறிவிக்கின்றன. திறன் கடியாரங்களில் இடம் பெற்றுள்ள ஒரு உணரி, இதயத்தின் வேகத் துடிப்பு நடுக்கங்களை (Arterial Fibrillation) உடனே அறிந்து எச்சரிக்கை செய்கிறது. இதைப் போலவே பல்வேறு கருவிகள் மூச்சுத் திகைப்பு, மனச் சோர்வு, ஆடிசம், அல்ஸெய்மர், பார்கின்ஸன் போன்ற இன்ன பிற நோய்களைக் கண்டறிகின்றன. இந்த ‘எண் தோற்றவமைப்பு’ (Digital Phenotyping) அல்லது இந்தச் செயலிகள் மருத்துவரின் தேவையை நெருங்கும் வருங்காலத்தில் இல்லாமல் செய்துவிடாது. ஆனால், ஒரு உற்ற தோழனைப் போல், நோயாளியை, குறிப்பாக நோய் இடருக்குப் பின்னான கால கட்டத்தில் அவரை இலக்க முறையில் கண்காணித்தும், கவனித்தும் மருத்துவருக்குத் தகவல் சொல்லிவிடும். இந்தக் கண்டறியும் கருவிகள், நுண் உயிர் மின்னணுவியல் பொருட்களாகவும் இருக்கும்- சில நோய்க்கூறுகளுக்கு உட்கொள்ளத் தகுந்த, உணரும் திறன் வாய்ந்த மருந்துகள் தேவை. புற்று நோய்க் காரணியான டி.என்.ஏ, வாயுக்களை வெளிவிடும் குடல் நுண்ணுயிரிகள், வயிற்றில் ஏற்படும் குருதிக் கசிவு, உடல் வெப்ப நிலை மற்றும் உயிர் வாயு அளவு போன்றவற்றை அறியவும் செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உணரிகள் தரும் தகவல்கள், செயலியால் பதியப்படுகின்றன.

பல்வகையான பிணி நீக்கங்களுக்கான சிகிச்சைச் செயலிகள் இவ்வாறே அமைக்கப்படுகின்றன. ‘பியர் தெரப்டிக்’சின் (Pear Therapeutics1) பொருட்சாரப் பயன்படுத்தலின் சீர்கேடுகள் (Substance Use Disorder2) என்ற ‘ரீசெட்’(reSET) தொழில் நுட்பம் தான் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை முதன் முதலில் அனுமதித்த எண் மருந்துச் சீட்டு. 2018-ஆம் ஆண்டில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. உடல் நலச் செயல்பாட்டாளருக்கு இணையாக இயங்கும் ‘ரீசெட்’ நோயாளிகளுக்கு ஏற்படும் ஆவலாதிகள், அவை எவ்வாறு தூண்டப்படுகின்றன போன்றவற்றை 24/7 கவனிக்கிறது; மருத்துவர்களுக்கு நிகழ் நிலையில் தகவலைத் தெரிவிக்கிறது. நோயாளிகளுக்கு அறிவாற்றல் நடத்தை சிகிச்சையையும் அளிக்கிறது. தூக்கமின்மை நோய்க்கான ‘சம்ரெஸ்ட்’(Somryst3) என்ற செயலி இருக்கிறது; கவனக் குறைபாடுள்ள குழந்தைகள், மிகு வேகச் செயல்பாடுள்ள சிறுவர்கள் போன்றோர்க்கான ஒரு செயலி ‘முயற்சி செய்’ (EndeavoRX) என்ற பெயரில் காணொலி விளையாட்டு வடிவில் வந்துள்ளது. இவ்விரண்டிற்கும் 2020 தொடக்கத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அனுமதி வழங்கியது.

குழந்தைகள் உடல் நலம் சார்ந்த ‘ஓடின்’(Odin) என்ற தொழில் தொடங்கு நிறுவனம், கண் ஒட்டிற்குப் (Eye patch) பதிலாக நிகர்நிலைப் பயன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இரு கண்களின் செயல்பாட்டு வேக பேதத்தை நிகர் நிலையில் சமன் செய்து, ஓடும் எழுத்துக்களை குழந்தைகள் சமமாகப் படிப்பதற்கு இது உதவும். ‘ஆம்ப்லோபியா’ (Amblyopia) என்ற சோம்பேறிக் கண்ணிற்கு இது நல்ல மாற்றாகச் சொல்லப்படுகிறது.

ஒரு நாள் இப்படியும் நடக்கலாம். சிறு மனச் சோர்வில் இருக்கும் கல்லூரி மாணவரா நீங்கள்? யாருடனும் பழகப் பிடிக்கவில்லையா? உங்கள் திறன் கடிகாரம் உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்; உங்களை அறிவு சார் நடைமுறைக்குக் கொண்டு வர நீங்கள் ‘வோபாட்’(Woebot) செயலியின் ‘பேசும் பாட்டிடம்’ பேசி மீளலாம்.

நலம் நாடும் அத்தனைப் பயன்பாட்டுச் செயலிகளும் இலக்க முறை மருத்துவமாகாது. சுகவீனங்களைக் கண்டறிவதோ, அதற்கான எண் மருத்துவ முறைகளோ மருத்துவ சோதனை ஒட்டங்களில் பாதுகாப்பானவை என்றும், திறன் உள்ளவை என்றும் நிரூபிக்கப்பட வேண்டும். அவை முறையான அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும். சிலவற்றிற்கு மருத்துவரின் மருந்துச் சீட்டு தேவை. (தீநுண்மி பேராபத்துக் கட்டத்தில், ஏப்ரல் 2020-இறுதிவரை, குறைந்த ஆபத்துள்ள, மன நல, எண் கருவிகளுக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை தற்காலிக அனுமதி அளித்தது.)

கோவிட்-19, எண் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. இந்த நோய்க்கிருமி வேகமாகப் பரவ ஆரம்பித்த தருணத்தில் மன பீதியைப் போக்கவும், தகுந்த ஆறுதலுடன் வழி காட்டவும் பலச் செயலிகள் களத்தில் இறங்கின. மைக்ரோசாஃப்ட் நலச் செயலியின் பலவகைமைகளை உலகெங்கும், அரசுகளும், மருத்துவ மனைகளும் பயன்பாட்டில் கொண்டு வரத் துவங்கின. ஒரு அழைப்பு மையத்தை அழைத்துக் காத்திருப்பது, அல்லது துணிந்து நோய்த் தொற்றுக் காலத்தில் அவசர சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்வது போன்றவைகளைத் தவிர்த்து, தங்களுக்கு வந்திருக்கும் இருமல், ஜுரம் போன்றவைகள் கொரோனாவாக இருக்குமோ என ஐயப்படும் மக்கள், தங்கள் வழக்கு அல்லது பேச்சு மொழி பேசும் பாட் செயலியிடம் தங்களின் அறிகுறிகளைச் சொல்ல முடிந்தது; அது செயற்கை நுண்ணறிவு கொண்டு தரவுகளைப் பரிசோதித்து காரணங்கள் இவைகளாக இருக்கலாம் எனச் சொல்லிவிடும்; அல்லது தேவையெனில், உடல் நல மருத்துவருடன் பேசித் தெளிவு பெற வழி செய்யும். கோவிட்டின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய 200 மில்லியனுக்கு மேற்பட்ட விசாரிப்புக்களுக்கு ஏப்ரல் 2020 பிற்பகுதிக்குள்ளேயே ‘பாட்’கள் பதில் சொல்லியிருக்கின்றன. இது நலத்துறையின் அழுத்தங்களை பல மடங்கு குறைத்துள்ளது.

எண் மருத்துவ முறையின் பயன்பாடு சமூகத்திற்கு மிகுந்த பாதுகாப்புகளோடு கொண்டு செல்லப்பட வேண்டும்; செயலிகள் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்; அந்தரங்கங்கள் காக்கப்பட வேண்டும். மருத்துவரின் வேலைச் செயல் முறைகளோடு எளிதில் இணையக்கூடியதாக இருக்க வேண்டும். சரியான ‘எண் தோற்றவமைப்பு’ செயலிகள், அவற்றின் மூலம் அமையப்பெறும் சிகிச்சைகள், நலமற்ற நடத்தைகள் பற்றிய எச்சரிக்கைகளை முன்கூட்டியே அறிந்து தெரிவிப்பதால், நலம் சார்ந்த செலவுகளைக் கட்டுக்குள் வைப்பதில் மட்டுமின்றி, நோய் என வடிவெடுக்கும் முன்னரே தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொள்ள மனிதர்களுக்கு வாய்ப்பையும் தருகின்றன. கிழிசல் சிறிதாக இருக்கும் போதே தைத்து விட வேண்டுமல்லவா? ‘எண் தோற்றவமைப்பு மற்றும் சிகிச்சை செயலிகள்’ உருவாக்கும் மிகப் பெரிய தரவுகளிலிருந்து செயற்கை நுண்ணறிவு கொண்டு நோயாளியின் தனிப்பட்ட அமைப்புக்கேற்ற உடல் நல உதவியும் வழங்க முடியும். ஆய்வாளர்கள், இவை தரும் வடிவங்களை ஆதாரமாகக் கொண்டு மனிதர்கள், நல்ல பழக்க வழக்கங்களோடு நோய்கள் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ காலத்திற்கேற்ற புதுச் சிந்தனைகளைக் கொண்டுவரவும் முடியும்.

“என்னைப் புதிய உயிராக்கி –எனக்
கேதும் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகத் தெளிவு செய்து-என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடையதாக்கி – உடற்
சோர்வும் பிணி பலவும் போக்கி….”

– பாரதி

1.Pear Therapeutics- மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே செயல்படும் வண்ணம், கண்டறிதல், ஆராய்தல் மற்றும் மருத்துவ அங்கீகாரமுள்ள தீர்வுகளைக் குறிப்பிடுதல் போன்ற செயலிகள். முக்கியமாக நோயாளியின் உடல் மற்றும் மன நிலையினை மருத்துவர் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் விதத்தில் இயங்குகிறது.

2.Substanace Use Disorder- குடி மற்றும் போதை மருந்துகளில் சிக்கியுள்ளவர்கள்; அவர்களின் மீட்பிற்கானது இது.

3.Somryst- தூக்கமின்மைக்கான 9 வார சிகிச்சை இது.

Series Navigation

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.