அந்தப் பயணத்தின் போது

  சிறுகதை       : மலையாள மொழி

  மூலம்         : சேதுமாதவன்

  ஆங்கிலம்      : அபுபக்கர் கப்பாட்  (Aboobacker Kappad )

  தமிழில்        : தி.இரா.மீனா          

அந்த ரயிலின் முதல்வகுப்பு பெட்டியில் இரண்டு பயணிகள் மட்டுமேயிருந்தனர். கனத்த தோற்றமுடையவருக்கு ஐம்பத்திஐந்து வயதிருக்கலாம். தலையின் முன்பகுதி முழுவதும் வழுக்கையாகவும், பின்பகுதியில் நீண்ட முடியுமிருந்தது. மீசை நரைத்திருந்தது. கனமான கண்ணாடி அணிந்திருந்தார்.

பிரகாசமான உடையுடன் எதிர் இருக்கையில் உட்கார்ந்திருந்த இளமையான இன்னொருவருக்கு முப்பது முப்பத்திஐந்து வயதிருக்கலாம். நீண்டநேரம் எவ்வித பரஸ்பர அறிமுகமுமின்றி அவர்கள் உட்கார்ந்திருந்தனர். மீசை மனிதர் கையில் கனத்த புத்தகம் வைத்திருந்தார். அவரருகில் பல பத்திரிக்கைகள் கிடந்தன. நீண்ட நேரம் அவர் புத்தகத்திலிருந்து தன் கண்களை உயர்த்தவில்லை. அமைதியாக உட்கார்ந்திருப்பதை வித்தியாசமாக உணர்ந்த இளைஞன், தன் விரல்களை நொடித்துக் கொண்டு தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு தன் பையிலிருந்த சுவிங்கம் ஒன்றை வாயில் போட்டு மென்றுகொண்டே கடந்து கொண்டிருந்த காய்ந்த மண்பகுதியை வெறித்துக் கொண்டிருந்தான். சிலசமயங்களில் மீசைக்காரரைப் பார்த்தான், ஆனால் அவரோ அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை.

சிறிதுநேரம் கழித்து இளைஞன் பெரிதாக இருமினான். எனினும் மீசைக்காரரிடமிருந்து பதிலில்லை. நூர்ஜஹான் பாடிய பாடலொன்றை இளைஞன்’ஹம்’ செய்யத் தொடங்க, மீசைகாரர் நிமிர்ந்து உட்கார்ந்தார். புத்தகத்தைச் சிறிது தள்ளிவைத்துவிட்டு. கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார். தலையைத் திருப்பி வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தின் மீது பார்வையைச் செலுத்தினார்.

புத்தகத்தைச் சிறிது தள்ளி வைத்துவிட்டு. கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார். தலையைத் திருப்பி வெளிப்புறக்காட்சிகளைப் பார்த்துவிட்டு மீண்டும் புத்தகத்தின் மீது பார்வையைச் செலுத்தினார்.

“ஹலோ பேராசிரியர், நான் சுதீர்– சுதீர்ஸ்ரீவாத்சவ்.” என்று சிரிப்புடன் சொன்னான்.

மீசைக்காரர் வியப்படைந்தார். புத்தகத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு இளைஞனை ஆர்வத்தோடு பார்த்தார். “ஹலோ. ஆனால் நான் பேராசிரியர் என்பது எப்படித் தெரிந்தது?” என்று உரத்த குரலில் பேசினார்.

“ஓ!”சுதீர் சிரித்தான்.”அது என் பொழுதுபோக்கு. ரயிலில் பயணிக்கும்போது தெருக்களில் நடக்கும்போது, பீச்சிலும், பூங்காவிலும் உட்கார்ந்திருக்கும்போது, எதுவும் செய்யாமலிருக்கும்போது அருகிலுள்ளவர்களை உன்னிப்பாகக் கவனித்து அவர்கள் எங்கிருப்பவர்கள், என்ன மொழிபேசுபவர்கள், என்ன வேலை அவர்களுக்கு என்று எல்லாவற்றையும் யூகிப்பேன். கவனமாக முயற்சித்தால் அவர்களின் உறுப்புகள், பாவனைகள் ஆகியவற்றை வைத்தே இந்தவிதமான விவரங்களைக் கண்டு பிடிக்க முடியும். என் கணிப்புகள் தவறாகப் போவதென்பது மிகக் குறைவானதுதான்.”

“ஓ! கெட்டிக்காரப்பையன்!” அவர் குரல் கம்பார்ட்மெண்ட் முழுவதும் எதிரொலித்தது. ”என் துறை என்னவென்று உங்களால் யூகிக்க முடியுமா?” “வரலாறு.” சுதீர் தன் பதிலில் மிக உறுதியாக இருந்தான். பேராசிரியரின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

“மிகச்சரி. ஆனால் எப்படி உங்களால் சொல்லமுடிந்தது…? நான் அணிந்திருக்கும் கனமான கண்ணாடியும், அதிலிருந்து ஊடுருவதுபோல பிதுங்கிக்கொண்டிருக்கும் கண்களுமா அல்லது என் வழுக்கையா? ஒரு வரலாற்றாசிரியனுக்கு உரிய தோற்றம் என்னிடமிருக்கிறதா?”

“பேராசிரியரே, மன்னிக்கவும், என் தொழில் சம்பந்தமான ரகசியங்களை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை” சுதீர் சிரித்தான்.

“இல்லை நண்பரே. நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. இப்போது நான் உங்கள் வேலையை யூகித்துச் சொல்கிறேன்.“

“ வரவேற்கிறேன்.”

“பன்னாட்டு நிறுவனத்தில், நிர்வாகியாக இருக்கலாம்.”

சுதீர் இல்லை என்று தலையாட்டினான்.

“விற்பனை?”

“இல்லை.”

“நிதியாளர் ?”

“இல்லை.”

“பிறகு?”

“அலுவலகப்பணியாளர், எல்லாவற்றிற்கும். உங்களால் அனுமானித்திருக்க முடியாத ஒருதுறை. அந்த வேலையின் மூலமாகத்தான் மனிதர்களை நெருக்கமாக அறிந்து, அவர்களின் ஆளுமையை மதிப்பிடும் அந்தத் திறமையை நான் வளர்த்துக் கொண்டேன்.”சுதீர் சிரித்தபடி சொன்னான்.

“அருமை! மற்றவர்களைக் கூர்ந்து கவனித்து அவர்களைப் புரிந்து கொள்வதற்கு வேண்டிய பொறுமையும், ஆர்வமும் கொண்டிருப்பது மிகச் சிறந்த வியம். இதுவும் ஒருவகையான அலுவலக நிர்வாகம்தான்.”

“ஆனால் ஐயா, இந்த நாட்களில் மூளைக்கு அதிகம் வேலைதராத ஒன்றாக எங்கள் துறை ஆகிவிட்டது. சில தந்திரங்கள், கொஞ்சம் சாமர்த்தியம், சிறிது தைரியம் இருந்தால் எப்படியோ சமாளித்துவிடலாம்.”

பிறகு அவன் தன் தொடையைத் தட்டிக்கொண்டே எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

“நிர்வாகத்திலும் கூட ஒருவித லயமிருக்கிறது இல்லையா சுதீர் ?”

சுதீர் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை. எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து , “எப்படியோ ஐஸ்கட்டி உடைந்து விட்டது. இவ்வளவு நேரம் மிகச் சலிப்பாக உணர்ந்தேன். சிறுவயதிலிருந்தே வெகுநேரம் அமைதியாக இருந்து எனக்குப் பழக்கமில்லை. அது என் இயல்பு. நான் பத்து நிமிடம்கூடப் பேசாமல் இருந்ததில்லை என்று என் அம்மா சொல்வாள். நான் பேசுவதைக் கேட்க யாருமில்லையென்றால் நான் எனக்குள்ளே பேசிக் கொள்வேன். அதுதான் என் கடைசிப் போக்கிடம். முதலில் மனதிற்குள் பேசிக் கொள்வேன். அது பிறகு வெளியே வரும். என் முன்னால் உட்கார்ந்து கொண்டு யாரோ என் பேச்சைக் கேட்கிறார்கள் என்று கற்பனைசெய்து கொண்டு அயராமல் பேசிக் கொண்டே போவேன்.” என்றான்.

பேராசிரியர் மகிழ்ச்சியாக உணர்ந்தார். சிகரெட்டைபற்றவைத்துக்கொண்டு,“சுதீர் , பொதுநிர்வாகம் உங்களுக்குச் சரியான துறையாக இருக்கலாம்.”

’சார்,இந்தப் பொதுநிர்வாகமென்பது நீங்கள் புத்தகத்தில் படிப்பது போலவோ, அல்லது ஏதாவது நிறுவனத்திலோ கற்றுத் தரமுடியாதது. எப்படியானாலும் நான் சிறந்த பொதுநிர்வாகியில்லை.”

“உங்களைப் போல சகஜமாகப் பழகியவர்கள் பலரை நான் பார்த்திருக்கிருக்கிறேன். ஒரு குறிப்பிட்டகாலத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் கூட்டிற்குள் அடங்கிவிடுவார்கள்.”

“இருக்கலாம். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை எனக்கு உங்கள் வயது வரும்போது, நானும் உங்களைப் போல பக்குவமடைந்தவனாக மாறலாம். “

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சுதீர். அது வயதோடு தொடர்புடையதில்லை. ஒருவனுடைய ஆளுமையின் விசித்திரப் போக்குதான் அது. எனக்கு அம்மாதிரியான மனிதர்களைப் பிடிக்கும். என்னிடம் இல்லாத ஓர் உயர்ந்த குணம் அவர்களிடமிருக்கிறது.”

’பேராசிரியர்கள் நன்றாகப் பேசத் தெரிந்தவர்கள் என்று நினைக்கிறேன்.“

“அப்படியில்லாமலும் இருக்கலாம். நானே இதற்கு ஒரு நல்ல உதாரணம். யாரிடமும் பேசாமலே ஒருநாள் முழுவதையும் என்னால் கழிக்க முடியும். எனக்குள்ளே பேசிக்கொள்வதை நான் விரும்புகிறேன். எனக்குள்ளே சொல்லிக்கொள்ள, விவாதிக்க, சண்டை போட, சமாதானமாகிக் கொள்ள பல விஷயங்களிருக்கின்றன. எதையும் செய்வதற்கு முன்னால் என்னை நம்புவதே எனக்குப் பெரிய விஷயம். ஆனால் மற்றவர்களின் முன்னால் நான் திக்கித் திணறிவிடுவேன். பிறருடன் என்னால் திறம்படப் பேசமுடியாத இயலாமையே எனக்குப் பெரியவலி.”

“பயிற்சியின் மூலமாக இது சரியாகிவிடுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்”

“ஆனால் என்னைப் பொறுத்தவரை அது உண்மையல்ல. நான் பலமுறை முயற்சித்து மோசமாகத் தோற்றிருக்கிறேன். ஒருவேளை அது பிறவித் திறமையாக இருக்கலாம் .”

“எப்படியெனினும், நீங்கள் இந்தப் பெட்டியில் என்னுடன் இருக்கிறீர்கள். வரண்டபூமியைப் பார்த்துக்கொண்டு, நல்ல தோழமையின்றி ஒன்றரை நாள் பயணம் என்பது மிகச் சலிப்பானது.”

பேராசிரியர் சிரித்தபடி தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார்.

“உங்களுக்குப் பக்கோடா பிடிக்குமா? காரமாக இருக்கலாம். என் மனைவி செய்தது.”

“பரவாயில்லை. மிளகாயின் கார நெடி எனக்கும் பிடிக்கும்.”

“பெரிய பயணங்களின் சலிப்பைத் தவிர்க்க நான் பக்கோடாக்களையும், தண்ணீரையும் வைத்திருப்பது வழக்கம்” சிரித்துக் கொண்டே சொன்னார்.

“நீங்கள் பேராசிரியர் என்று நான் கண்டுபிடிக்க ஒருகாரணமிருக்கிறது. நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஒரு சுவையான தற்செயல் நிகழ்வு.”

“சொல்லுங்கள். எந்தப் புதிய தகவலையும் நான் நம்பத் தயாராக இருக்கி்றேன்.”

“இந்த வழித்தடத்தில், இதே கம்பார்ட்மெண்ட்டில் இது என் மூன்றாவது பயணம். போதாததற்குப் பயணத்தின் தொடக்கத்தில் இரண்டு பயணிகள் மட்டுமே—ஒரு பேராசிரியரும் , நானும்.”

“ஹா ! ஹா ! இந்தத் தடப்பயணத்தினிடையே ஒரு பேராசிரியரைச் சந்திக்காமல் உங்களால் பயணிக்க முடியாதென்று தெரிகிறது. ஒருவகையில் அதுஉண்மை. நம் நாட்டில் பேராசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தவிர பயணத்தின் மேல் அவர்களுக்குப் பித்து அதிகம்.”

பேராசிரியரின் சிரிப்பு கம்பார்ட்மெண்ட்டுக்குள் எதிரொலித்தது. ரயிலின் ஒலியோடு கரைந்து விடாமல் வெகுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது.

“கடந்த பயணங்களின் போது உடனிருந்தவர்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள் என்று சொல்லமாட்டீர்களென்று நம்புகிறேன்.”

“இல்லை. ஒருவர் தத்துவம், மற்றொருவர், மயங்கிவிடாதீர்கள், மீநிகழ்வு உளவியல் .”

“ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு. சாக்லெட் பெட்டியில் மிட்டாய்கள்.“

“எப்படியோ, அவர்கள் புத்திசாலிகள். பல விஷயங்கள் பற்றிப் பேசினார்கள். சில பழைய நகைச்சுவைத் துணுக்குகளைத் தவிர சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை. ஆனால் விஷயம் தெரியாத என்னோடு பகிர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கு நிறைய இருந்தது. அவர்கள் உலகம் எவ்வளவு விரிவானது! எனக்குப் பொறாமையாக இருந்தது. மீநிகழ்வு உளவியல் பேராசிரியர் மறுபிறப்பு பற்றி ஆராய்ச்சி செய்தவர்.”

“பேராசிரியர் மித்ரா—சந்தன் மித்ரா ?”

“ஆமாம். உங்களுக்கு அவரைத் தெரியுமா ?”

“நாங்கள் காசியில் வெகுகாலம் ஒன்றாகப் படித்தவர்கள்.ஆனால் நாங்கள் சந்தித்துக் கொண்டும் வெகுகாலமாகிவிட்டது.”

“அது சுவையான பயணம். இப்போது இந்தத் தடத்தில் மீண்டும் மீண்டும் பயணிக்க எனக்குள் ஓர் உத்வேகம் ஏற்படுகிறது. விஞ்ஞானத்தில் தேர்ந்த பேராசிரியர்களை நான் இன்னும் சந்தித்ததில்லை.”

’ஆனால் தோழரே, இம்முறை உங்களுக்குச் சலித்துவிடும். என்னால் பேராசிரியர் சந்தனைப்போல அற்புதமாகப் பேசமுடியாது.”

“போகட்டும். எந்தத் தோழமையும் எனக்குச் சலிப்புத் தராது. நீங்கள் எல்லோரும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பேசுவீர்களில்லையா? எனக்கு அது பிடிக்கும். ஆனால் நாங்கள் அப்படியில்லை. எதையும் அதிகாரபூர்வமாகப் பேசுவோம். ஒருவிதமான தொழில் ரீதி நிலைதான்”என்று சுதீர் சொன்னான்.

சந்தன் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லியிருக்க வேண்டுமில்லையா ?”

“ஆமாம். அவருக்குச் சொல்ல பல விஷயங்கள். ஒரு சாதாரணக் குழந்தையாக நான் வாயைப் பிளந்தபடி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நானறியாமலேயே அந்தநாள் கடந்துபோனது. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பிரிவதற்கு முன்னாலேயே நான் அவரது ரசிகனாகி விட்டேன். சிலகாலம் கடிதத் தொடர்பு வைத்திருந்தோம். என் கவனத்திற்கு வருகிற சுவாரஸ்யமான செய்தி அல்லது சம்பவம் பற்றித் தெரிவிக்கச் சொன்னார். பின்பு எப்படியோ எங்கள் தொடர்பு நின்று போயிற்று. அதன்பிறகு சந்திக்கவுமில்லை.”

“சந்தன் மிக புத்திசாலி.”

”அந்தச் சந்திப்பு எதையும் நம்புவதற்கு எனக்கு வழி தந்திருக்கிறது. எதுவும் சாத்தி்யப்படக் கூடியதென்று நம்புகிறேன். யாராவது என்னிடம் வந்து சிறகுகளோடு பழைய டெல்லிகோட்டையின் மேல் நீங்கள் பறந்ததைப் பார்த்தேன் என்று சொன்னால் நான் நம்புவேன். அதற்குப் பெரிய சாத்தியக்கூறு இருக்கிறது. ஒரு வரலாற்றாசிரியன் பழைய சிதைவுகளின் மீது சிறகுகளோடு கண்டிப்பாகப் பறக்க முடியும். அவனால் அதைச் செய்ய முடியும். தனக்கான சிறகுகளை வளர்க்க முடியாதவன் எப்படி ஆராய்ச்சியாளனாக முடியும் ?”

எதையோ நினைத்து தன் மீசையைத் தடவியவாறிருந்த பேராசிரியர் சிறிது அமைதிக்குப் பிறகு சொன்னார்.

“அதுசரி சுதீர். நம் வாழ்க்கை என்பது நம்புவதற்குக் கடினமான சில கட்டுக்கதைகளின் தொகுப்புத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. வரலாறு மட்டுமில்லை, மனிதனின் இறந்த, நிகழ், எதிர்காலம் எல்லாமே ஒரு கட்டுக்கதை மாதிரித்தான் தெரிகிறது. விஞ்ஞானப் பார்வையில் எதையும் பகுத்தாய்வு செய்யும் முயற்சி மிகச் சலிப்பானது. இந்தத் தொன்மங்கள் இல்லையெனில் வாழ்க்கை வரண்டதாகிவிடும். தாவரவியலாளன், இயற்கை தந்த அழகான மலரைத் துண்டாக்கும்போது நான் அவனை வெறுக்கிறேன்..”

ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு சாதாரண மனிதன் வினோதமாகச் செயல்படும்போது என்னால் அதற்கு ஐந்து காரணங்களையாவது சொல்ல முடியும். எந்த அறிவியல் கொள்கையின் சார்புமின்றி அதற்கான சாத்தியக்கூறுகளை சொல்வதற்கும் கூட நான் தயார் .எண்ணங்களின் வெளிப்பாட்டில்தான் சாத்தியங்கள் உருவாகின்றன என்றும் நான் நம்புகிறேன்.”

“அதுசரிசுதீர். சில சாத்தியங்களோடு ஒட்டிக் கொண்டுதான் நாமெல்லோரும் நம் நாளையை எதிர்நோக்குகிறோம். தெரிந்தோ தெரியாமலோ நேற்றின் புரிகளைப் பிரிக்கும்போதும்கூட விடாமுயற்சியோடு, அந்தவகையான சாத்தியக் கூறுகளின் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறோம்.”

“விடுங்கள் சார் நாம் இந்தக் கம்பார்ட்மெண்ட் பற்றி மட்டுமே நினைப்போம். நன்கு வரையறை செய்யப்பட்ட நான்கு எல்லைகளைக் கொண்ட ஒரு கம்பார்ட்மென்ட். இந்தஒன்றரை நாள் பயணத்தில் நாம் இருவர் மட்டுமே இந்தக் கம்பார்ட்மென்ட்டில் பயணிகளாக இருப்போமென்று நினைக்கிறீர்களா?”

“இல்லை, அந்த மாதிரியெதுவுமில்லை. யாரும் இங்கு வரலாம். இருட்டுவதற்கு முன்னால் எந்த ரயில் நிலையத்திலாவது இரண்டு பயணிகள் ஏறி விடியற்காலையில் இறங்கிவிடலாம். பின்பு அவர்களின் இடத்தில் வேறு சிலர்.” தோளைக் குலுக்கிக் கொண்டே பேராசிரியர் சொன்னார்.

“ஆனால்சார், அப்படி நடக்காது. ஒரே ஒருவர் மட்டும் ஏறுவார். அதுவும் ஓர் அழகான பெண்.” சுதீர் அடித்துச் சொன்னான்.

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

“அது நடக்க பெரிய வாய்ப்பிருக்கிறது. என் முந்தையப் பயணங்களில் அது நடந்திருக்கிறது.”

“இந்த முறை அது ஏன் வேறு மாதிரியாக இருக்கக் கூடாது?”

“அது வேறு மாதிரியாக இருக்க முடியாது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.”

“உள்ளுணர்வு ?”

’எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை.”

“அப்புறம்“

“அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.”

’ஹா! ஹா!ஹா!எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் ?” பேராசிரியர் சிரித்தபடிகேட்டார்.

“இந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் காரணம் சொல்வது இயலாதது. அது நடக்கும் என்றுதான் சொல்ல முடியும்.”

“நண்பரே, இது ஒருவகையான மழுப்பல் இல்லையா ? எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கும்.”

“அவசியமில்லை. காரணம் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துவதுதான் சிக்கல்களை உருவாக்குகிறது. பல சம்பவங்கள் காரணமின்றி , நம்மைச் சுற்றி நடக்கின்றன. நாம் காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தால் முழு இருட்டில்தான் இருப்போம்.”

“அவள் எங்கே ஏறுவாள்? அவள் யார் ?”

“எனக்குத் தெரியவில்லை. இருட்டுவதற்கு முன்னால் அவள் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம்.”

“தனியாகவா?”

“ஆமாம்.”

“அவள் யார் ?”

“சார், எனக்குத் தெரியாது.”

சுதீர் வெளியே பார்த்தபடி வெகுநேரம் அமைதியாக இருந்தான். பனைமரக்காடுகளின் பின்னால் சூரியன் மெல்ல மறையத் தொடங்கியிருந்தான்.

வரண்ட மண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் முகம் செம்மையாவதை பேராசிரியர் பார்த்தார். சூடான காற்று வர. கர்சீப்பைத் தலையில் கட்டியபடி சுதீர் ஓர் இந்துஸ்தானி பாடலின் டியூனை முணுமுணுத்தான் தொடையைத் தட்டியபடி. சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்து நின்று பேராசிரியரிடம். “சார், நாம் ஏன் இந்த மாலைப் பொழுதை வீணாக்க வேண்டும்? என் வெளிப்படையான தன்மையை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லையெனில், நாம் மது அருந்தலாமா ?”என்றான்.

“எனக்குக் குடிகாரனின் சாயலிருப்பதாக என் நண்பர்கள் சொல்வார்கள். அந்தவிஷயங்களில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லை .நான் அதை ருசித்திருக்கிறேன். நல்ல நண்பர்களோடு இருக்கும்போது, அவர்கள் கட்டாயப்படுத்தினால் நான் குடிப்பேன். அவ்வளவுதான். மிக மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் ஒருவர் குடிக்க வேண்டும். அதில்தான் த்ரில் இருக்கிறது” சொல்லிவிட்டுப் பேராசிரியர் சிரித்தார்.

“நீங்கள் என்னுடன் மது அருந்த விரும்பினால்…”

அவர் தலையாட்டினார். சுதீர் தன் பையிலிருந்து இரண்டு பிளாஸ்டிக் டம்ளர்களையெடுத்து அதில் விஸ்கியை ஊற்றினான்.”உங்களிடம் தண்ணீர்இருக்கிறதென்று நினைக்கிறேன்? எனக்குத் தண்ணீர் வேண்டாம். நாம் காத்திருக்கும் அந்த முன்னறியாத விருந்தாளிக்காக “ என்று சொல்லிவிட்டு டம்ளரை உயர்த்தினான்.

பேராசிரியர் வாயருகே டம்ளரைக் கொண்டு செல்வதற்குள் சுதீர் ஒரு மடக்கில் டம்ளரைக் காலி செய்து விட்டான் .பிறகு சிறிது தண்ணீர் பருகி விட்டு இரண்டு பக்கோடாக்களை வாயில் போட்டுக் கொண்டான்.

’பொதுவாக இருட்டியபிறகுதான் நான் குடிப்பது வழக்கம். நம் விருந்தாளி எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாமென்பதால் இன்று சிறிது சீக்கிரமாக ஆரம்பித்து விட்டேன். புதியவராக வரும் பெண் முன் குடிப்பது அநாகரிகமில்லையா?’

“ஓ.. நான் அது பற்றி யோசிக்கவில்லை”

“உங்களுக்கு ஆட்சேபணையில்லையெனில் நான் இன்னும் இரண்டு டம்ளர்கள் எடுத்துக் கொள்கிறேன். அது என்னுடைய வழக்கமான பங்கு .இது அதிகம்தான் ஆனாலும் பழகி விட்டேன். வீட்டிலிருக்கும் போது அப்பா, மாமாவின் கண்களுக்குப் படாமல் குளியலறையிலோ அல்லது மாடிப்படிகளின் கீழோ இருந்து ஒரே மடக்கில் குடித்து விடுவேன்.”

“சரி, எனக்கு இது போதும். நான் மிக மெதுவாகத்தான் அருந்துவேன்.”

சுதீர் மேலும் இரண்டு டம்ளர்களை விரைவாக அருந்தியதையும் ,பகோடாக்களை மென்றதையும் பேராசிரியர் ஆர்வமாக கவனித்தார். பிறகு சுதீர் பாட்டிலை பையில் வைத்துவிட்டு பையிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

“தன் பகோடாக்கள் இப்படி ஒரு சூழலுக்குப் பயன்படுமென்று என் மனைவி நினைத்திருக்க மாட்டாள்.”

“அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கேட்க மறந்து விட்டேன். உங்கள்குடும்பம்?”

“குடும்பமென்றால் என் மனைவியும் நானும்.”

“குழந்தைகள்?”

“ஒருமகள்இருந்தாள்.இப்போதில்லை..”

“ஓ.. மன்னியுங்கள்.”

பன்னிரண்டு வயதில் அவள் இறந்து போனாள்.”

சிறிது நேரம் அவர் கண்களை மூடிக் கொண்டிருந்தார் .பிறகு தன் டம்ளரிலிருந்ததை ஒரே மடக்கில் குடித்து முடித்தார். ”வெறும் நிமோனியாதான்— எந்த டாக்டராலும் குணப்படுத்தக் கூடியதுதான்.”என்று சொன்னார். பேராசிரியரின் முகம் இருண்டிருப்பதை சுதீரால் உணர முடிந்தது. எழுந்து விளக்கைப் போட்டான். வெளியே இருள் பரவத் தொடங்கியிருந்தது. தொலைவில் இருந்த வரண்ட மலைகளை பனி மூடத் தொடங்கியிருந்தது.

“சுதீர் ,உங்கள் குடும்பம்?”

“அப்பா, அம்மா, ஒருதங்கை .”

“இன்னும் திருமணமாகவில்லையா ?”

“நான் இன்னும் அதைப் பற்றி நினைக்கவில்லை. தவிர்க்க முடியாதபோதுதான் அது பற்றி யோசிப்பேன். திருமணமென்பது அருமையான தோழமையில் அமைவது. இல்லையெனில் அது மிகவும் சலிப்பாகிவிடும்.”

“அதற்குள் உங்களுக்கு மிக வயதாகிவிடும்.”

“பரவாயில்லை சார், நாமெல்லோருமே ஏதோ சில வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறோம்.” சுதீர் சிரித்தபடி சொன்னான்.

பேராசிரியர் அமைதியாக இருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. வெளியே அடர்த்தியான இருள். கருமையானகுகைக்குள்ளே ஊடுருவது போல ரயில் சென்று கொண்டிருந்தது. மாறும் அந்த ஒலிக்கேற்றபடி, சுதர் ஒரு டியூனை ஹம் செய்தான்.

“சுதீர், இன்னும் அவள் வரவில்லையே“ பேராசிரியர் ஞாபகப்படுத்தினார்.

“அவள் வருவாள் சார்; கண்டிப்பாக அதற்குச் சாத்தியமிருக்கிறது.”

“அடுத்த ரயில் நிலையத்தில் வரலாம்.”

“வரலாம்.”

“அவள் யார்?”

“சார், அது பற்றியெனக்கு ஒன்றுமேதெரியாது. அவள் யாராகவுமிருக்கலாம். முதல் சந்தர்ப்பத்தில் பயணித்தவள், கலைநிகழ்ச்சியில் பங்கு பெறப்போன ஒரு நாட்டிய மங்கை. அவள் கண்களிலும், அசைவுகளிலும் நாட்டியபாவமிருந்தது. இரண்டாம் முறை புதிதாகத் திருமணமான பெண், தன் கணவர் வேலைக்குச் சேர்ந்திருக்கும் இடத்திற்குப் பயணித்தவள்.கூச்ச சுபாவமுள்ள அவள் தன் தலையைப் புடவைத்தலைப்பால் மூடியிருந்தாள். ஒரு முழு இந்தியப்பெண்ணின் அடையாளமான குங்குமம் முன் நெற்றியிலிருந்தது.”

“சரி, இந்த முறையாராக இருப்பார்கள்?”

“என்னால் யூகிக்கமுடியாது. யாராக வேண்டுமானாலும்.”

அதற்குள் ரயில் அடுத்தநிலையத்தை அடைந்தது. நீண்ட நேரம் இருட்டினூடே பயணித்தபிறகு, ரயில்நிலையம் மிகவெளிச்சமாகவும், பலவித சப்தங்களுடனும் இருந்தது. அவர்கள் ஆர்வமாக வெளியே எட்டிப் பார்த்தனர். ஜனங்கள் பைகளோடும், மூட்டை முடுச்சுகளோடும் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். பேராசிரியரும், அவர் தோழனும் ஓடுகின்ற கூட்டத்தினிடையே முதல்வகுப்பிற்கு வரப்போகும் பெண்ணைப் பார்த்துவிடும் நம்பிக்கையில் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். சுதீர் கதவைத் திறந்து நின்று பிளாட்பாரத்தை நோட்டம் விட்டான். ஜனங்கள் அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு ஓடிக் கொண்டிருந்தார்கள். விழாவைப் போல பிளாட்பாரத்தில் கூட்டம் கூடியிருந்தது.

சுதீர் தலையை வெளியே இன்னும் சிறிது நீட்டிப் பார்த்தான். ஒல்லியான, உயரமான ஒரு மாநிறமான பெண் அந்தக் கூட்டத்தில்இருந்தாளோ?

கடைசியில் மணியடிக்க, ரயில் நகரத் தொடங்கிற்று .சுதீர் குனிந்த தலையோடு வந்தான்.

“அவள் வரவில்லையா சுதீர்?” பேராசிரியரின் தொனியில் தெரிந்த ஏமாற்றத்தை அவனால் உணரமுடிந்தது.

’அவள் வரமாட்டாள் என்று நம்புகிறீர்களா?”

“இப்போது அதை நான் நம்ப ஆசைப்படுகிறேன்.

“நீங்கள் என்னைத் தவறாக நினைக்கவில்லையெனில் நான் ஒன்று கேட்கவிரும்புகிறேன் .உங்கள், ஆளுமைக்கும், வயதிற்கும் நான் இந்தக் கேள்வியைக் கேட்பது சரியா என்று எனக்குத் தெரியவில்லை.”

“பரவாயில்லை. வெளிப்படையாகப் பேசுங்கள். நீங்கள் என்னுடைய இளம் நண்பரில்லையா ?”

“நிச்சயமாக. ஆனால் எப்படிநான்–? அவள் வரவேண்டுமென்று உண்மையாக நீங்கள் விரும்புகிறீர்களா?” ஒரு தயக்கத்துடன் கேட்டான்.

பேராசிரியர் தடுமாறினார். புன்னகையால் தன்னை மறைத்துக் கொள்ள முயன்றார். சிகரெட்டை எடுத்து உதட்டிற்கிடையே வைத்துக்கொண்டு தீப்பெட்டி டப்பாவைத் திறந்தார். அது காலியாக இருந்தது. கோபத்தோடு அதை வெளியே எறிந்தார். லைட்டரின் உதவியோடு அவர் பற்ற வைத்த போது அவர் முகம் குழப்பத்திலிருந்ததை சுதீரால் கவனிக்க முடிந்தது.

“உண்மைதான் சுதீர், நான் ஏன் உங்களிடம் பொய் சொல்ல வேண்டும்? நான் அவளைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் .அதை ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கமெதுவுமில்லை. அவள் வருகையை விரும்புகிறேன். நள்ளிரவு கடைசிப்பயணி ரயிலில் ஏறும்வரை அவளுக்காகக் காத்திருக்கவும் தயார். நாம் கதவைப் பூட்ட வேண்டாம். எந்த நேரத்திலும் கதவு தட்டப்படலாம். ஆமாம், சாத்தியமாகத் தெரிந்தது இப்போது நிச்சயமாகிவிட்டது” பேசி முடித்த பேராசிரியருக்கு மூச்சிரைத்தது.

“சிறிது மது அருந்துகிறீர்களா ?”

“வேண்டாம்.”

“சிறிதாவது’ சுதீர் வற்புறுத்தினான்.

“இல்லை சுதீர், அநாவசியமான சிக்கல்கள் உருவாகும்.”

ரயில் வேகமாக ஒடத் தொடங்கியது.

“அரைமணிக்குள் அவள் அடுத்த நிலையத்தில்கூட ஏறலாம். அவள்அங்கில்லையெனில், நாம் அவளுக்குக் காத்திருக்க வேண்டியதில்லை. ஒன்பது மணிக்குப் பிறகு யாரும் வரமாட்டார்கள்.”

“சுதீர், சாத்தியம் என்ற ஜன்னலை அடைக்கிறீர்கள். நாம் அந்த சாத்தியத்தை பெருமைப்படுத்திக் கொண்டிருப்பினும், அதுதான் இப்போது யதார்த்தமாகத் தெரிகிறது.

“சில சமயங்களில் அப்படி நடக்கலாம் சார்.. உண்மையையும், மாயையும் வேறுபடுத்துவதில் சில நேரங்களில் குழம்பி விடுகிறோம். எப்படியோ நான் சாத்தியத்தை ஒதுக்கிவிடவில்லை.”

“நான் உங்களை நம்புகிறேன் தோழரே. என் முன்னால் வேறெந்த வாய்ப்பும் இல்லை.” பேராசிரியர் எழுந்து மேலும் கீழுமாக நடந்தார்.

“பன்னிரண்டு வயதாகும்போது என் மகள் ஆர்த்தி இறந்து போனாள். கருப்பாக இருந்தாலும், மிக அழகான முகம் அவளுக்கு. கருமையான நீண்ட விழிகள். சிரிக்கும்போது அவள் விழிகள் விரிந்து எங்கள் வீட்டையே வெளிச்சப்படுத்தும்.பாடுவாள்; வரைவாள். கடந்த முப்பது வருடத்திற்கான அழகான ஞாபகங்களை தன் குறுகிய பன்னிரண்டு வயதிற்குள்ளேயே எங்களுக்குத் தந்துவிட்டு தன் கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டு விட்டாள்.

பேராசிரியரின் குரலில் தடுமாற்றம். கர்ச்சீப்பால் அவர் கண்களைத் துடைத்துக் கொண்டபோது அவர் விரல்கள் நடுங்குவதை சுதீர் பார்த்தான்.

“அவள் என் நெருங்கிய தோழி. எதிர்பாராத நேரத்தில் விழும் எரிநட்சத்திரத்தை கண்ணாடி ஜாடியில் சேகரிக்கும் பித்துப் பிடித்த குழந்தையாகவே உண்மையில் இருந்திருக்கிறேன்.எங்களுக்கென்று  ஒரு சிறிய உலகமிருந்தது. எனக்குள் இருக்க வேண்டுமென்று நான் ஏங்கிய வித்தகம் எல்லாம் அவளிடமிருந்தன. அவளின் நீண்ட விழிகள் என்னைச் சிறைப்படுத்தின.

அவள்தான் எனக்குத் தொடக்கமும், முடிவும்.அவளுடைய இறப்புக்குப் பின்பு நான் வெறும் ஓடாகிவிட்டேன்.”

“சார், இப்போது பழையடெல்லி கோட்டையின் மேல் நீங்கள் பறப்பதை நான் பார்க்கிறேன்.”என்றான்சுதீர்மென்மையாக.

“சுதீர், நீங்கள் பேச்சை மாற்ற முயற்சிக்கிறீர்கள்.’

“சார்,அது அலுவலகநிர்வாகத்தின் அடிப்படைத்தந்திரம். நாங்கள்சதுரங்கத்தில் புத்திசாலிகள். புத்திசாலியான நகர்வு மூலம், தவிர்க்கமுடியவில்லையெனில் ஏமாற்றுவதன் மூலம் எப்போதும் நாங்கள் மேலே போய்க் கொண்டேயிருப்போம். அந்தவகையான நகர்வு வெற்றி, தோல்வி இரண்டையும் தருவதோடு சில சமயங்களில் விட்டுக் கொடுத்தலுக்கும் வழிவிடும். எப்படியாவது வெற்றி அடைவதுதான் எங்கள் ஒரே கவலை.”

“உங்களைப் போன்றவர்கள் சில சூழல்களை மட்டுமே கையாள்கிறீர்கள் சுதீர். சில யுக்திகள், தந்திரங்கள் அதற்குப் பயன்படும்.அரசியல் அல்லது நிர்வாகத்தில் அந்த யுக்திகளைச் சுவீகரித்தல் என்பது பெரும்பாலும் ஒன்றே. ஆனால் குடும்பக்கட்டில் சிலசூழல்கள், எதிர்பாராத தோல்விகளைச் சரி செய்ய வெறும் தந்திரங்கள் போதாது. சில சமயங்களில் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அறை வாங்க நேரலாம்.”

“அது பற்றி எனக்கும் தெரியும் சார். எதுவாக இருப்பினும் பேச்சை மாற்றுவது நல்லதென்று நினைத்தேன்.அவ்வளவுதான்.” சுதீர் குறுக்கிட்டான்.

பேராசிரியர் தன்னிடத்திற்குப் போய் சரிந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார். அவர்உதடுகள்நடுங்குவதைஅவன்பார்த்தான். அவர் தன்னை எதற்காவது சமரசப்படுத்திக் கொள்கிறாரா அல்லது வழிபடுகிறாரா? அவன் காத்திருந்தான். அந்த நிலையில் அவரைத் தொந்தரவு செய்வது சரியில்லையென்று நினைத்தான். இருந்தும் அவன் தொடர்ந்தான்.

“நீங்கள் எப்போதாவது தனியாகக் கோட்டைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களினிடையே ஒரு முழு அந்திப்பொழுதைக் கழித்திருக்கிறீர்களா? நான் பலமுறை அதை அனுபவித்திருக்கிறேன். ஒருமுறை கோடை அந்தியில், முதல்முறையாக கஞ்சா சாப்பிட்டுவிட்டு மல்லாக்கப் படுத்திருக்கிறேன். சிறிது நேரத்திற்குப் பிறகு கோட்டைகள் உயர்ந்து வானத்தைத் தொட, அந்தப் பெரிய சிறையின் இருட்டு அறை ஒன்றில் நான் தனிக்கைதியாகப் படுத்திருப்பது போலவுணர்ந்தேன். மாபெரும் வெளிப்புறச்சுவர்களுக்கப்பால்

குதிரைகளின் குளம்புச்சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது. தங்கள் கிரீடங்களை இழந்த சக்ரவர்த்திகள் ,அரியணைக்காக தம் உடன்பிறப்புக்களைக் கொன்றவர்கள் சரித்திரத்தின் பக்கங்களில்.அ வர்களின் கையிலுள்ள வாள்களிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அரசவைகளில் நிகழும் முடிவற்ற இசைநிகழ்ச்சிகள். .இசைக்கேற்றபடி தாளமிடும் பகட்டான பாதங்கள்.. சந்தத்திற்கேற்ற கொலுசொலி.. நான் பழைய காலத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். பிறகு தன் மகுடத்தை இழந்த அரசனாக, கையில் புனிதநூலேந்தி, உண்மையான மனிதனை உலகெங்கும் தேடியலைகிற ஒரு பக்கீராக நானிருந்தேன். என்னைச் சுற்றி மணியோசை. பக்திப்பாடல்கள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் காதுகளில்ஒலித்தது. பிறகுவிழித்துக்கொண்டு விட்டேன். சம்மணம்போட்டு உட்கார்ந்து சிறுவயதில் நான் கற்றுக் கொண்ட ஒரு பக்திப் பாடலைப் பாடினேன். எனக்கு எதுவும் ஆகாது என்று உறுதியாகத் தெரிந்திருந்தபோதிலும் எது என்னைப் பாடத் தூண்டியது? கடந்து போன தலைமுறைகளின் காவலிலிருந்தும், சரித்திரத்தின் கடமைகளிலிருந்தும் தப்பிக்கவா அது? அல்லது வரையறுக்கப்பட்ட எல்லைகளில் நிகழ்காலத்தில் உறுதியாகக் காலூன்றவா ?”

பேராசிரியர் அவன் தோளைக் குலுக்க, அரைக் கண்களை மூடிக் கொண்டு தான் ஏதோ உளறிக் கொண்டிருந்ததை உணர்ந்தான்.’சுதீர்,என்னைப் பொறுத்தவரை வரலாறு பெரிய ஆதாரம்.அதன் துணையின்றி இறப்போ, நிகழ்வோ இல்லை. நம்முடைய சிந்தனையற்ற செயல்களுக்குத் தொடர்பு காண முற்படும் போதும், பகுத்தறிவுக்குப் புறம்பான முடிவற்ற காத்திருப்பின் போதும் கூட நாம் வரலாற்றின் மாறுநிலைக் காலத்தை அடைய முயல்கிறோம்.”

“எனக்குப் புரியவில்லை சார்.”

“போகட்டும் சுதீர், நான் சிறிது மது அருந்தினேன்.”என்று அவன் தோளைத் தட்டிக் கொடுத்துச் சொன்னார்.

அவருடைய சிரிப்பு கம்பார்ட்மென்ட்டில் எதிரொலித்தது. அடுத்த நிலையம் வந்துகொண்டிருந்ததால் ரயிலின் வேகம் குறைந்தது.”நாம் அடுத்த ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோமென்று நினைக்கிறேன்”

“ஆமாம்.”

“நீங்கள் என்னைத் தவறாக நினைக்கவில்லையெனில் அதற்கு முன் ஒரு கேள்வி. என் சுதந்திரத்தை உங்களிடம் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று நினைக்கவேண்டாம் .கம்பார்ட்மென்ட்டுக்கு வரப்போகும் அந்தப் பெண்ணைப் பற்றி என்ன மதிப்புவைத்திருக்கிறீர்கள்?”

அவனையே அமைதியாகப் பார்த்த அவர் “என்னகேட்கிறீர்கள் ?” என்றார்.

“நான் சொல்ல வருவது..நாம் சந்திக்கும் முகமறியாதவர்கள் மீது ,நம் மனதிற்குள்ளாவது அவர்கள்மேல் ஒரு கவர்ச்சி இருக்குமல்லவா?”

“ஓ,அதுவா?அது பற்றி எனக்கு தெளிவில்லை. என் கண்களுக்கு எல்லாப் பெண்களும் ஒன்றுதான்—பல முகங்களுடனான ஒரு சக்தி.அதே சக்தியின் பலவகையான வெளிப்பாடுகள்.வேறுகோணத்தில் பார்த்தால் எல்லா முகங்களும், உறவுகளும் ஒன்றாகவே தெரியும். ஆணின் பயணத்தில் நிறைவையுண்டாக்கும் இயல்பான சக்தியாகவே இந்தப் பலவகை உறவுகள் அமைகின்றன.”

“இங்கு வரப்போகிற பெண் எந்த வகையிலாவது நம்மில் ஒருவருக்கு உறவாக இருப்பாளென்று எனக்குத் தோன்றுகிறது.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“இல்லையெனில் அவள் வருகையை நாம் இவ்வளவு ஆர்வமாக எதிர்நோக்கியிருக்க மாட்டோம். அதனால் பெரும் சாத்தியக்கூறு உண்டு.”

“வரையறைக்குட்பட்ட என் அறிவுக்கு மிஞ்சியதாக உங்கள் சாத்தியக்கொள்கை இருக்கிறது. திடீரென உங்கள் முன்னால் நான் தாழ்வானவனாக உணர்கிறேன். பொதுவாக என்னை மிஞ்ச நான் யாரையும் அனுமதிப்பதில்லை.”

பேராசிரியர் பெரிதாகச் சிரித்தார். அதே எதிரொலிக்கும் சிரிப்பு. ரயிலின் சப்தத்தில் கரைந்து விடாமல் கம்பார்ட்மென்ட்டில் எதிரொலித்தது. தொலைவில் வெளிச்சம் தெரிந்தது. ரயிலின் வேகம் குறைந்தது.சுதீர் தன் இருக்கையிலிருந்து நகர்ந்து ஜன்னல் கம்பியில் கையை வைத்துக் கொண்டு வெளியே பார்த்தான்.

அவர்கள் வெகுநேரம் காத்திருக்கவில்லை. ஓர் உயரமான மெல்லிய பெண் தோள்பை மற்றும் பெட்டியுடன் கம்பார்ட்மென்ட்டில் ஏறினாள். பெட்டியை இருக்கைக்கு அடியில் வைத்துவிட்டு ,வசதியாக உட்கார்ந்தபிறகு ,அவர்களைப் பார்த்துச் சிரித்தாள்.

“நான் அனிதா.” அறிமுகம் செய்து கொண்டாள்.

சுதீர் வியந்து போய் அவளைப் பார்த்தான்.மெல்லிய தோற்றம் கொண்ட மாநிறமான பெண், குர்தா சூரிதார். முகத்தில் இளமை பொங்கியது. பெரிய விழிகள் அவள் முகம் முழுவதையும் நிரப்பியது போலிருந்தது. அவள் சிரித்தபோது, விழிகள் அகன்று, கம்பார்ட்மென்ட்டையே மேலும் வெளிச்சமாக்கியது போலிருந்தது.

சுதீர் பேராசிரியரைப் பார்த்தான், அவர் அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தார். நம்பமுடியாத எதையோ பார்த்தது போல அவர் அந்தப் பெண்ணை அளந்து கொண்டிருந்தார். முகத்தைச் சிலமுறைகள் துடைத்துக்கொண்டு, கண்ணாடியை அணிந்துகொண்டு “இல்லை; இருக்கமுடியாது. ஒருபோதும் உண்மையாக முடியாது. ” என்று முணுமுணுத்தார்.

“நான் உங்களுக்குத் தொல்லை தருகிறேனா?” அவள் மென்மையாகக் கேட்டபோது முகம் ஒளிர்ந்தது.

பேராசிரியர் அசையாமல், பேச்சுமூச்சின்றி இருந்தார். அவர் முகத்தில் பதட்டம் தெரிந்தது.

“சார், நாம் சாப்பிடலாமா? ஏதாவது வாங்கி வரட்டுமா?” சுதீர் மெதுவான குரலில் கேட்டான்.

அவர் அதைக் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. அவர் பார்வை அந்தப் பெண்ணின் முகத்திலேயே இருந்தது. அவருடைய காய்ந்த உதடுகள் இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

அவர் பார்வையின் அர்த்தம் தெரியாமல் ,அனிதா தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். ஆனால் அவள் சொன்னது;

~சார், உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன், ஆனால் எங்கேயென்று நினைவிலில்லை.”

“அவர் உங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கலாம்.”சுதீர் குறுக்கிட்டான்.

“ஹேய். இல்லை. எங்கேயோ, விஷேசமான ஓரிடத்தில். மிக நெருக்கமான சந்திப்பு. ஆனால் எங்கேயென்று நினைவிலில்லை.” முந்தைய சந்திப்பை ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றாள்.விழிகள் அகன்றன.

சிறிது கலக்கமாக இருந்த பேராசிரியர் கரகரத்த குரலில் சுதீரிடம் “சந்தனின் முகவரி உங்களிடமிருக்கிறதா ?” என்று கேட்டார்.

“என் டைரியில் இருக்கலாம்.”

“எனக்கு அது வேண்டும்.”

’நான் கொடுக்கிறேன்.”

சுதீர் மெதுவாக பிளாட்பாரத்திலிறங்கி சிகரெட்டைப் பற்ற வைத்தான். பிளாட்பாரம் பாலைவனமாக இருந்தது. சிவப்பு சிக்னல் விளக்கு தொலைவில் தெரிந்தது. ரயில் அங்கேயே சிறிது நேரம் நிற்குமென்று சுதீர் உணர்ந்தான். அவனுக்குப் பசித்தது. பேராசிரியரும் பசியோடிருக்க வேண்டும் என்று நினைத்தான். ஜன்னலருகே போய் கம்பார்ட்மென்டிற்குள் எட்டிப் பார்த்தான்.

ஆனால் பேராசிரியர் அவனைப் பார்க்கவில்லை. அவர் முகம் முழுவதுமாக மாறிப் போயிருப்பது தெரிந்தது. தொடக்கநிலைக் குழப்பத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அவர் அனிதாவின் அருகே நகர்ந்தார். அவளிடம் தொடர்ந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.அவர் முகத்தில் தெரிந்த பாவனை அறிவிற்கெட்டாததாக தெரிந்தது. அந்த முக பாவங்கள் ஏதோ சில சினிமாக் காட்சிகளை ஒத்திருந்தது. காற்றின் மூலம் எங்கிருந்தோ அவை மிதந்து வருவது போலும் , அவர் முகத்தில் ஒட்டிக்கொண்டது போலவுமிருந்ததன பாட்டி சொல்லும் கதையை கவனமாகக் கேட்கும் சிறுமி போல. அனிதா கவனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்

வியப்போடு சுதீர் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தான். சீரான புருவங்களின் கீழே அவள் விழிகள் இரண்டு நட்சத்திரங்களைப் போலத் தெரிந்தன. கணப் பொழுதில் அவை அவள் முகம் முழுவதும் விரிந்ததாகத் தெரிந்தது. தற்போது அவள் முகத்தில் விழிகளைத் தவிர வேறெதுவுமில்லை என்பது போல இருந்தது. திடீரென கம்பார்ட்மென்ட் இருளிற்குள் அமிழ்வது போலவும், அவள் கண்களிலிருந்து வரும் ஒளியின் வேகம் பொறுக்க முடியாமல் பேராசிரியர் ஒரு மூலையில் தன்னைச் சுருக்கிக் கொண்டது போலவுமிருந்தது. அவர் முன் நெற்றியிலும், கன்னங்களிலும் வியர்வை வழிந்தோடியது.

“பேராசிரியரே.. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” என்று ஜன்னல் கம்பியைத் தட்டி சுதீர் கேட்டான்.

அவர் பதில் முனகலாக வெளிப்பட்டது. சோர்வான அவர் உடல் லேசாக நடுங்கியது. நெஞ்சு ஏறி இறங்கியது. திகைப்புடன் அனிதா அவரருகே நகர்ந்தாள்.

சுதீர் வேகமாக கம்பார்ட்மென்டிற்குள் ஓடினான். சுருண்டு கிடந்த பேராசிரியர் கனமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். சுதீர் அவருடைய நெஞ்சை நீவத் தொடங்கியதும், தனக்கு ஒன்றுமில்லையென்பது போல ஜாடை காட்டினார் .பிறகு உயிரற்ற சிரிப்போடு நேராக உட்கார்ந்தார். மெதுவாக உடைந்த குரலில் பேசினார்:

“இந்த விருந்தாளிஆண்டுகளுக்கு அப்பால் பால்வீதியிலிருந்து வந்திருக்கிறவர். இம்மாதிரியான எதிர்பாராத விருந்தாளிகள், நமக்குச் சொல்வதற்காக, பூமிக்கு அப்பாலான சில வினோதமான செய்திகளை வைத்திருப்பார்கள். பல காலம் கழித்து வந்திருக்கும் இந்த விருந்தினரை, வரவேற்க எனக்கு அனுமதி வேண்டும். எதிர்பாராத விதமாக விழும் எரிநட்சத்திரங்களை கண்ணாடி ஜாடியுள் பாதுகாக்கும் சிறு குழந்தையாகத்தான் இன்னமும் நானிருக்கிறேன்.”

சுதீர் அமைதியாக இருந்தான்.வெறுமனே தலையாட்டினான். பிறகு.தன்.பையைத்.திறந்து அதில் பேராசிரியர் சந்தனின் முகவரியைத் தேடத் தொடங்கினான்.


நன்றி :Indian Literature Sahithya Academi’s Bi Monthly Journal

Sep/Oct 2012 சேது என்று எல்லோராலும் அறியப்படும் சேதுமாதவன் நவீன மலையாளப் புனைகதையின் முன்னோடிகளுள் ஒருவர். பாண்டவபுரம், கைமுத்ரைகள், நியோகம் உள்ளிட்ட பதினைந்துநாவல்களும், சேதுவின்கதைகள் வெளுத்தகூடாரங்கள், பெதிஸ்வப்நங்கள் உள்ளிட்ட பதினேழு சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமி, கேரள சாகித்யஅகாதெமி, விஸ்வதீபம், மலையத்தூர், வயலார் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். அலியா(2013) அவரது அண்மைக்காலச் சிறந்த படைப்பாக மதிப்பிடப்படுகிறது

One Reply to “அந்தப் பயணத்தின் போது”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.