பரோபகாரம் – நாட்டுக்கு நாடு

This entry is part 5 of 5 in the series பரோபகாரம்

தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும். அத்தகைய உதவிகளின் மாபெரும் வெற்றிக் கதையாக சுட்டிக்காட்டப்படுவது அமெரிக்கா 1940களின் இறுதியில் செயல்படுத்திய மார்ஷல் திட்டம்

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த அந்த வருடங்களில் பல ஐரோப்பிய நாடுகளின் கதை கந்தலாகி இருந்தது. நாஜி ஜெர்மனியை எதிர்த்துப் போரில் அமெரிக்க ஐரோப்பியப் படைகள் வெற்றிபெற்றிருந்தாலும், இடைவிடாத தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்த ஐரோப்பிய நகரங்களும் கிராமப்புறங்களும் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்தன.  விவசாயம், தொழில் நிறுவனங்கள் எவையுமே சரியாக இயங்காததால் பல மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் பெரிய பஞ்சமும் பட்டினியும் வரவிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஜார்ஜ் சி மார்ஷல் என்பவர் தலைமையில் போடப்பட்ட திட்டம்தான் மார்ஷல் திட்டம். அதன்படி சுமார் 15 பில்லியன் டாலர்கள் (இன்றைய கணக்குப்படி சுமார் 170 பில்லியன் டாலர்கள்) பெருமானமான உதவியை அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், நார்வே, கிரீஸ், இத்தாலி போன்ற ஒரு டஜன் ஐரோப்பிய நாடுகளுக்கு உணவு, இயந்திரங்கள், பணம் என்று பல வகைகளில் அனுப்பிவைத்தது. 1948 முதல் 51 வரை தொடர்ந்த இந்த உதவி இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் காப்பாற்றிக் கரைசேர்த்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வாதிடுபவர்கள், அந்த உதவி போய்ச்சேரும் சமயத்தில் அந்த நாடுகள் தாங்களாகவே பொருளாதாரத்தை ஒக்கிட்டு முன்னேற ஆரம்பித்துவிட்டன, எனவே இந்தத் திட்டம்தான் அதற்கு முழுக் காரணம் என்று சொல்லமுடியாது என்றும் இந்தத் திட்டத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு, அமெரிக்க உளவு நிறுவனமான CIA பல போலி நிறுவனங்களை அங்கே நிறுவிப் பல வருடங்களுக்குப் பயன்பெற்றது என்றும்‌ வாதிடுவார்கள். இருந்தாலும், அந்தச் சமயத்தில் அமெரிக்காவின் ஆண்டு வருவாயில் இருந்து சுமார் 5% இந்தத் திட்டத்துக்காகச் செலவழிக்கப்பட்டது என்பதைக் கவனிக்கும்போது, அமெரிக்கா பெரிய கொடை வள்ளலாகத்தான் செயல்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அதோடு இந்தத் திட்டத்தில் சேராத போலந்து போன்ற (சோவியத் யூனியனைச்‌ சேர்ந்திருந்த) பிற நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறப் பல ஆண்டுகள் ஆனது என்பதும் இத்திட்டம் ஓரளவு பயனளித்திருக்கிறது என்றுதான் நம்மைக் கருதவைக்கிறது.  

அப்படியானால் அந்த மாதிரியான நாட்டுக்கு நாடு உதவும் திட்டங்கள் மிகவும் பயன் தருபவைதானோ என்றால், இல்லவே இல்லை என்று அடித்துக் கூறுகிறார் “செத்த உதவி” (Dead Aid) என்ற புத்தகத்தை எழுதியிருக்கும் டாம்பீசா மோயோ. ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த இவர், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த அறுபது வருடங்களில் சுமார் ஒரு டிரில்லியன் டாலர்கள் பன்னாட்டு உதவி என்ற பெயரில் ஆப்ரிக்காவுக்குள் கொட்டப்பட்டிருந்தாலும் பெரிதாக அந்தக் கண்டம் இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று வினவும் மோயோ அதற்குத் தரும் பதிலில், இப்படி வந்து சேரும் பணம், ஆப்பிரிக்க நாடுகளை இந்தப் பணத்துக்கு அடிமைகளாக்குகிறது, சொந்த தொழில் /வியாபாரங்களை வளரவிடாமல் தடுக்கிறது, ஆப்பிரிக்க அரசியல்  தலைவர்களை தங்கள் நாட்டு மக்களிடம் பொறுப்பாக நடந்துகொண்டு பதில் சொல்லவேண்டிய அவசியத்தை ஒழித்து, இந்த நிதி வழங்கும் நாடு, செல்வந்தர்கள், நிறுவனங்கள் பின்னே ஓடவைக்கிறது என்று விளாசித் தள்ளுகிறார். என் குழுவில் வேலை பார்க்கும் என் சக ஊழியர் ஒருவர் நைஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, இதே கருத்துகள் எதிரொலிப்பதைக் கவனித்திருக்கிறேன். (முடிந்தால் நைஜீரிய அரசாங்கம் அமல்படுத்தி இருக்கும் ஒரு பரோபகாரத் திட்டத்தைப் பற்றிய இந்த 20 நிமிட ஒலிச்சித்திரத்தை கேட்டுப் பாருங்கள். அதில் சொல்லப்படும் ஒரே கதையில், இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் தொட்டிருக்கும், வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல், தேவையானவர்களுக்கு நேரடியாக (கடன் அல்லாத) பணம் வழங்குதல், தொழில் தொடங்க உதவுதல், ஆப்ரிக்க முன்னேற்றம், நாடு தழுவிய முன்னேற்றத்துக்குச் சரியான வழிமுறை, பெண்களுக்கு உதவி போன்ற அத்தனை தீம்களையும் சந்திக்கலாம்.)

நாம் முன் சொன்னதுபோல், ஏதோ நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டாலும், பெரும்பாலும் இந்த நிதியுதவிகள் அவை சென்றுசேரும் நாடுகளைச் சரியாக வளரவிடாமல் தடுக்கின்றன. சில வருடங்களுக்குமுன் சொல்வனத்தில் எண்ணெய்யும் தண்ணீரும் என்று ஒரு தொடர் கட்டுரையைப் பிரசுரித்திருந்தோம். அதில் இயற்கைவள சாபம் என்றே ஓர் அத்தியாயம் வந்திருந்தது. அதில் சொல்லியிருந்தபடி, ஒரு நாட்டின் அரசாங்கம், பல திசைகளில் விரவி இருக்கும் தொழில் நிறுவனங்களும், மக்களும், அவர்கள் ஈட்டும் வருவாயில் இருந்து செலுத்தும் வரிப்பணத்தைப் பெற்று, செயல்பட்டு வருவதே நலம். அப்படி இல்லாமல் ஒரே ஒரு கனிம வளம் அல்லது எங்கிருந்தோ வரும் நிதியுதவி போன்றவை அரசாங்கத்தைத் தூக்கி நிறுத்திப் பிடித்துக் கொண்டிருந்தால், நாட்டுக்குத் தேவையான மற்ற முன்னேற்றங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த ஒரு வழி வருவாயை மட்டுமே நம்பி, அந்த அரசாங்கம் தன்னை தக்கவைத்துக்கொண்டு பிழைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்துவிடும். அது எந்த ஒரு நாட்டுக்கும் காலப்போக்கில் நல்லதில்லை.

சொல்ல வருவதற்கு மறுபக்க எடுத்துக்காட்டாக இந்தியா, சீனா போன்ற தேசங்களைச் சுட்டிக்காட்டுகிறார் மோயோ. என்னைப்போல் 1970களில் அரசாங்க ஆரம்பப் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த பலருக்கு, நீலமும் சிவப்புமான USAID என்ற முத்திரை குத்தப்பட்ட டப்பாக்களில் கிடைக்கும் எண்ணெயையும் மூட்டைகளில் இருந்து வெளிவரும் தானியங்களையும் / மாவையும் உபயோகித்து மதிய உணவுத் திட்டத்திற்கான உணவு, பள்ளிகளில் சமைக்கப்பட்டு ஏழை மாணவர்களுக்குப் பரிமாறப்படும் வழக்கம் நினைவில் இருக்கலாம். 1970-80 வரை அடிக்கடி வெளிநாட்டு நிதியுதவியை நம்பிக்கொண்டிருந்த இந்த நாடுகள், பொருளாதாரச் சீர்திருத்தங்களால், தனித்தனியே 30 கோடி குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை நடுத்தட்டுக்குக் கொண்டுவந்திருப்பதோடு நில்லாமல், இப்போது மற்ற நாடுகளுக்குக் கடனுதவியும் நிதியுதவியும் வழங்கி வருகின்றன. எனவே, “ஒருவனுக்கு மீனைச் சமைத்து போட்டால், ஒரு நாள்தான் அவனுக்கு உணவளித்ததாகும். பதிலாக அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால், வாழ்நாள் முழுதும் சாப்பாடு போட்டதற்கு ஈடாகும்” என்ற பழமொழியைப்போல, அரசாங்க நிதியுதவி, சினிமா நட்சத்திரங்கள் தரும் நிதியுதவி போன்ற சேவைகளை எல்லாம் அடுத்த ஐந்து வருடங்களில் படிப்படியாக நிறுத்திக்கொண்டு, ஆங்காங்கே அந்தந்த நாடுகள் தயாரிக்கும் பொருட்கள், வழங்கும் சேவைகளை உலகெங்கிலும் விற்க ஏதுவான நடைமுறைகளைக் கொண்டுவருவதுதான் இந்த பிரச்சினைக்கான நீண்ட காலத் தீர்வு என்கிறார் மோயோ. பில் கேட்ஸ், பாடகர்‌ போனோ (Bono)  போன்ற பலர் இவரை, இரக்கமில்லாதவர், ஆப்பிரிக்காவைப் பிடித்த சனி என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

எனக்குப் புரிந்தவரை பன்னாட்டு உதவி என்ற தலைப்பில் வழங்கப்படும் கொடைகளை மூன்று விதங்களில் பிரித்து வைத்துக் கொள்ளலாம். 

1. அவசரகால தற்காலிக உதவி: இயற்கையாகவோ, செயற்கையாகவோ எங்கெங்கே பேரிடர்கள் நிகழ்ந்து மக்களின் தினசரி வாழ்வுக்கு உலை வைக்கின்றனவோ அங்கே உடனடியாக உதவிகள் வழங்கிக் குடிமக்களைக் காப்பாற்றுவது சமுதாயத்தின் கடமை. உள்ளூர் அல்லது உள்நாட்டு அரசாங்கத்தால் அதைச் செய்ய முடியாத அளவுக்கு இடர் பெரிதாக இருக்கும் பட்சத்தில், உலகம் போட்டி போட்டுக்கொண்டு அங்கே விரைந்து சென்று உதவவேண்டும். சுனாமி, வெள்ளம், பூகம்பம், பெரிய விமான விபத்து, தேசப் போர்களில் விருப்பம் இல்லாமல் மாட்டிக்கொள்ளும் பொதுமக்கள் படும் துயரம்‌ போன்றவை எல்லாம் இந்தப் பிரிவில் அடங்கும். இந்த மாதிரியான சமயங்களில் அவசரகால துரித உதவிகளாகச் செய்யப்படுவனவற்றை மோயோவிலிருந்து ஆரம்பித்து யாரும் குறை சொல்வதில்லை. 

2. நீண்டகாலக் குறிப்பிட்ட உதவி: ஒரு குறிப்பிட்ட ஊரையோ பள்ளிக்கூடத்தையோ தத்தெடுத்துக்கொண்டு, வேறு நாட்டில் இருக்கும் ஒரு பணக்காரர்‌ அல்லது தன்னார்வ நிறுவனம், பல வருடங்களாக உதவி வருவதை இரண்டாவது பிரிவில் போடலாம். இப்படிப்பட்ட உதவிகளில் தவறேதும் இல்லை என்றாலும் அந்தப் பள்ளியில் படித்து முடித்து வெளிவரும் பட்டதாரிகளுக்குப் வேலை வாய்ப்புகள் சரியாகக் கிடைக்கின்ற வரையில் அந்த உதவியின் பலன் பாதியாகத்தான் இருக்கும். 

3. நாடளாவிய நீண்ட கால உதவி: ஒரு நாட்டளவில் அரசாங்கத்துக்கு உதவுவது என்பதை மூன்றாவது பிரிவாகக் கொண்டால், இந்த மாதிரியான நிதியுதவி எந்த அளவுக்கு நீண்டகாலத்தில் உபயோகமாக இருக்கிறது என்பது இன்னும் கேள்விக்குறிதான். 

மூன்றாவது வகையான உதவியை எதிர்க்கும் மோயோ போன்றவர்கள், உலகில் அப்படிப்பட்ட உதவிகளைப் பெற்று, தற்போது முன்னேறிய, செல்வம் மிக்க நாடாக வளர்ந்திருக்கும் நாடுகள் ஒன்றிரண்டையாவது உதாரணம் காட்ட முடியுமா என்று சவால் விடுகிறார்கள். மார்ஷல் திட்டம் வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே தொடர்ந்தது என்பதையும் உதவி பெற்ற நாடுகளில் தொழில்களும் விவசாயமும் பெருகப் பெருக, அமெரிக்கா உட்பட பல நாடுகள் நுகர்வோர்களாக பொருட்களை வாங்கியதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். உண்மையாக உதவ வேண்டுமெனில், நிதியுதவிகளைத் தவிர்த்துவிட்டு வியாபார ஒப்பந்தங்கள்மூலம் அந்தந்த நாடுகளிலேயே சிறிதும் பெரிதுமாக தொழில் தொடங்கவும் கட்டமைப்புகளை முன்னேற்றமும் உதவுவதும் அந்த நாடுகள் தயாரித்து வழங்கும் பொருள்களையும் சேவைகளையும் உலகெங்கிலும் விற்க உதவுவதும்‌ நாளடைவில் அந்த நாட்டிற்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது போலாகும் என்பது புதிய புரிதல். இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பல மகா கோடீஸ்வரர்கள், முதல் பிரிவில் செய்யப்படும் குழந்தைகளைக் காப்பாற்றுவது போன்ற உதவிகளைச் சுட்டிக்காட்டி, அப்படிப்பட்ட நிதியுதவியை நிறுத்துவது பாவம் இல்லையா என்று குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவுகளில் வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு நாட்டு அளவிலோ இல்லை வீட்டு அளவிலோகூட உதவ முனைந்தால் நீண்ட கால விளைவுகள் சிறப்பாக இருக்கும் என்பதுதான் என் கருத்தும்.

2004ஆம் வருட சுனாமிக்குப்பின், பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு அமெரிக்கா உடனே உதவ முற்படாததைக் கண்டித்து நியூயார்க் டைம்ஸ் “நாம் கஞ்சப் பிசினாரிகளா? ஆமாம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. சராசரி அமெரிக்கர்களிடம் “உங்கள் அரசாங்கம் அதன் வருடாந்திர வருவாயிலிருந்து எத்தனை சதவீத பணத்தைப் பிற நாடுகளுக்கு உதவ நன்கொடையாகக் கொடுக்கிறது என்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டால், “சுமார் 24%” என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையான சதவீதம் 1%கூடக் கிடையாது. அது வெறும் 0.25%க்கும் குறைவுதான் என்று கட்டுரை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இங்கிலாந்து போன்ற மற்ற பணக்கார நாடுகளிலும் இதே கதைதான். பொதுமக்கள் தங்கள் அரசாங்கம் ஏதோ இருபது, முப்பது சதவிகித வருவாயை நன்கொடையாகப் பிற நாடுகளுக்கு அனுப்பிவிடுவதாக நினைத்திருக்க, நிஜமான எண் ஒரு சதவிகிதத்திற்கு கீழேதான் நிற்கிறது. நார்வே, ஸ்வீடன் போன்ற சில நாடுகள்தான் 1%தையாவது தொடுகின்றன. இந்த மாதிரியான புள்ளிவிவரங்கள் மட்டுமல்லாமல் நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கும் (எய்ட்ஸ் நோய் தடுப்பில்  இந்தியாவின் பங்கை சிலாகித்துப் பேசும்) Fire in the blood போன்ற ஆவணப்படங்கள்கூட வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு உருப்படியாக எப்படி உதவலாம் என்று நேர்த்தியாகச் சுட்டிக்காட்டக் காத்திருக்கின்றன. 

சரிதான், கடந்த நான்கு அத்தியாயங்களில் சுற்றிச்சுற்றி தனிமனிதர்கள், நிறுவனங்கள், மகா கோடீஸ்வரர்கள், ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு செய்யும் பரோபகாரங்கள் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து முடித்தாகிவிட்டது. கடைசியில் நாம் என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்லி முடி என்கிறீர்களா? 

இந்த கட்டுரைத் தொடரில் எழுதவிருந்த  விவரங்களை நான்கைந்து மாதங்களுக்குமுன் மனதில் அசை போட்டுக்கொண்டிருந்தபோது, சுமார் 100 நண்பர்களிடம் அவருடைய உதவி செய்யும் மனப்பான்மை, வியூகங்களைப் பற்றி ஒரு சர்வே நடத்தினேன். சுமார் முப்பது பேர் விளக்கமாகப் பதில் கொடுத்திருந்தார்கள். அதிலிருந்து தெரிந்த சில புரிதல்கள் ஆச்சரியகரமாக இருந்தன. கிருத்துவர்களாக இருந்த பல நண்பர்கள் tithe என்று சொல்லப்படும் 10 சதவீத வருமானத்தை தேவாலயத்திற்கு நன்கொடையாக அளிக்கும் பழக்கத்தை இன்னமும் தொடர்ந்து வருவது தெரியவந்தது. கோவிலுக்கோ தேவாலயத்திற்கோ பணம் கொடுக்கிறோமோ இல்லையோ, நமக்கு வலிக்கும் அளவுக்கு எதற்காகவாவது தானம் செய்வது முக்கியம் என்ற என் கருத்தோடு இந்தப் புரிதல் ஒத்துப்போனது. எனவே என் அளவில் கீழே இருக்கும் பட்டியலில் காணப்படும் பழக்கங்களை விடாமல் கடைபிடித்து வருகிறேன்.

Home | Doctors Without Borders - USA
  1. வருடம் முடிய இருக்கும் சமயத்தில், நன்கொடையாக நானும் என் மனைவியும் கொடுத்திருக்கும் தொகையின் மொத்தம் எங்களுக்கு எந்தவிதமான பொருளாதார வலியையும் ஏற்படுத்தவில்லை என்றால் கொடுத்தது போதாது என்ற ஓர் இன்ஃபார்மல் அளவுகோலைக் கொடுப்பதை அளக்கப் பயன்படுத்துகிறேன்.
  2. அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் என்ற பழமொழிக்கேற்ப எங்களுக்கு மிகவும் பிடித்த, எங்கள் நம்பிக்கையைப்பெற்ற ஒரே ஓர் அமைப்பிற்கு மட்டும் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெரிய நன்கொடையை வருடம்தோறும் கொடுப்பது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்போதைக்கு அந்த அமைப்பு டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்  என்ற உலகெங்கிலும் அவசர மருத்துவ சேவைகளை வழங்கி வரும் ஓர் அமைப்பு. சில வருடங்களுக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற அமைப்பு இது என்பதாலும் வருடா வருடம் அவர்கள் பிரசுரிக்கும் அறிக்கைகளையும் மற்றவர்கள் செய்யும் ஆய்வுகளையும் வைத்துப் பார்க்கும்போது, நான் கொடுக்கும் பணம் முக்காலே மூணு வீசம் சேவைகளுக்குச் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருப்பதாலும் இதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வரும்போது நண்பர்கள் அனைவரையும் எங்களுக்குப் பரிசுகள் ஏதும் கொடுப்பதற்குப்பதில், அதற்குரிய பணத்தை இந்த அமைப்பிற்கு நன்கொடையாகக் கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டு விடுகிறோம். அமைப்பிற்குப் பணம் கிடைப்பதோடு எங்கள் வீட்டில் கடிகாரங்களும் பேனாக்களுமாக ஒரே மாதிரியான பரிசுகள் பல வந்து குவிவதை இந்தப் பழக்கம் தவிர்த்துவிடுகிறது.
  3. நான் கொடுக்கும் நன்கொடையின் தாக்கத்தை அதிகப்படுத்த என்னால் முடிந்த வேறு மார்க்கங்களையும் முயன்று பார்க்கிறேன்.  உதாரணமாக வரிவிலக்கு மூலம் கிடைக்கும் பணத்தை நன்கொடையை அதிகரிக்கப் பயன்படுத்திக்கொள்கிறேன்.  நான் பணிபுரியும் நிறுவனம் ஊழியர்கள் கொடுக்கும் நன்கொடைகளை மேட்ச் செய்வதை பயன்படுத்திக்கொண்டு என் நன்கொடையை இரண்டு மடங்காக்கிவிடுகிறேன்.
  4. தொண்டு நிறுவனங்களை நடத்தும் பணியாளர்களோ அல்லது நிறுவனத்தின் தலைவர்களோ வறுமையில் உழன்றுகொண்டு, நம்மைவிட ஏழைகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன். யோசித்துப் பார்த்தால் தொண்டு நிறுவனங்கள் லாப நிறுவனங்களைப் போலவே இயங்குவது அவற்றின் பயன் விளைவை (efficiency) அதிகரிக்கவே செய்யும் என்றுதான் தோன்றுகிறது.
  5. எனக்குத் தெரியும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து, புதிய தரவுகள் விளக்கங்கள் கிடைக்கக் கிடைக்க, என் புரிதல்களை மாற்றிக்கொண்டு எங்கே, எப்படி, என்ன செய்தால் அதன் பயன் விளைவுகள் அதிகமாக இருக்கும் என்று அறிந்துகொண்டு தொடர்ந்து தாக்கத்தை அதிகரிக்க முயல்கிறேன்.
  6. “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே,” என்று அசிரத்தையாக இருக்காமல், நமது நகர, மாநில, மத்திய அரசாங்கங்கள் எங்கே / எப்படி / என்ன உதவிகள் செய்கின்றன, நன்கொடைகள் கொடுக்கின்றன போன்ற விவரங்களைப் படித்து, அலசி, புரிந்துகொண்டு, சரியான முடிவுகளைப் பாராட்டியும், சரியில்லை என்று தோன்றும் முடிவுகளை எதிர்த்தும் நமது கருத்துக்களைப் பதிவுசெய்யவும் தெரிந்தவர்களிடம் இதைப்பற்றிப் பேசிக் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும் முயல்கிறேன்.
  7. பணம் கொடுப்பது மட்டுமில்லாமல் Habitat for Humanity என்ற ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் அமைப்பிலும் மற்றும் கூட்டுறவு சங்கம் (co-operative சொசைட்டி) மாதிரியான ஓர் அமைப்பிலும், ACM (Association for Computing Machinery) என்ற எங்கள் தொழில் துறை சம்பந்தப்பட்ட அமைப்பிலும் தொடர்ந்து பல வருடங்களாய் முடிந்த அளவு சிரமதான உதவிகள் செய்துவருகிறேன். சொல்வனத்தில் கட்டுரைகள் எழுதுவதையும் இதே மாதிரியான தன்னார்வச் செயல்களில் சேர்த்துக்கொள்ளலாம்.

முதலில் மற்றவர்களுக்கு உதவும் நல்லெண்ணத்துடன் இந்த செயல்களில் நான் ஈடுபட ஆரம்பித்திருந்தாலும் நாளடைவில் இந்த அனுபவங்களில் இருந்து எனக்குக் கிடைத்த கல்வியும், புரிதல்களும், எனது குடும்பம் / பணி போன்ற வட்டங்களில் இருந்து மிகவும் வேறுபட்ட பல அபூர்வமான புதிய அறிமுகங்களும், இவைகளில் இருந்து அதிகம் பயன்பெறுவது நான்தான் என்று மெல்லப் புரியவைத்தன.

பரோபகாரச் செயல்கள் செய்வது என்பது மனித இனத்திற்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்புக் குணம் என்றில்லை. முகப்பில் இருக்கும் படத்தில் காணப்படும் சிம்பன்சி குரங்குகளில் இருந்து பல்வேறு உயிரினங்களில் ஒன்றுக்கொன்று உதவும் வழக்கம் உலகெங்கிலும் காணப்படுகிறது. ஒரு நடுநிலையான நிலைமையிலிருந்து ஒருவரோ. ஒரு விலங்கோ எதிர்பாராமல் மிகவும் கீழே தள்ளப்படும்போது மற்றவர்களும், மற்ற விலங்குகளும் உதவ முன்வருவது சகஜம். அப்படி இல்லாமல் மனித சமூகம் சமத்துவத்தை இழந்து ஒரு சிலர் மிக அதிக அளவில் சொத்து சேர்க்க அனுமதிக்கப்படும்போது, சமூகத்தின் மறுமுனையில் இருக்கும் ஏழைகளை நடுநிலைமைக்குக் கொண்டுவருவது கடினமாகிறது. 

நசீம் டெலெப் எழுதியிருக்கும் Fooled by Randomness என்ற புத்தகத்தில் ஒரு கதை வரும். நியூயார்க் நகரின் மிக விலையுயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் அதிநவீன பிளாட் ஒன்றில் தன் மனைவி குழந்தைகளுடன் வசிக்கும் ஜாக் ஒரு பெரிய வக்கீல். வருடம் மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார், பென்ஸ் கார் வைத்திருக்கிறார், வருடா வருடம் கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கோ, ஆப்ரிக்காவிற்கோ சுற்றுலா போகிறார். ஆனாலும் அவர் மனதில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ இல்லை. அவர் மனைவியும், குழந்தைகளும் அவரை வாழ்வில் தோல்வி அடைந்தவராகவும், அதிகம் ஏதும் சாதிக்காதவராகவுமே பார்க்கிறார்கள். ஏனெனில், அவர்கள் வசிக்கும் அந்தப் பணக்கார அடுக்கு மாடிக் கட்டிடத்தில், எதிர்த்த / அடுத்த பிளாட்காரர்கள், வருடத்திற்கு ஐந்து மில்லியன் சம்பாதிக்கிறார்கள், சொந்தமாக ஹெலிகாப்டரும், ஃபிரான்ஸ்ஸில் கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகவே பெரிய மாளிகையும் வாங்கி இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது, இவர் ஒன்றும் அப்படிப் பெரிதாக வாழ்வில் கிழித்துவிட்டதாகத் தெரியாததில் என்ன அதிசயம்? ஜாக்கும் அவர் குடும்பமும் பட்டுக்கொண்டிருக்கும் அவதிகளிலிருந்து விடுபட நசீம் டெலெப் தரும் அறிவுரை, ஜாக் இன்னும் திறம்பட நிறைய உழைத்துப் பெரிய இடத்தைப் பிடிக்கவேண்டும் என்பதில்லை. அவர் பரிந்துரைக்கும் எளிதான மருந்து, அவர்கள் அந்தக் கட்டிடத்தை விட்டுவிட்டு வேறொரு நடுத்தர மக்கள் வாழும் பகுதிக்குக் குடிபெயர்ந்து போய்விடவேண்டும் என்பதுதான். அதுவே அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்துவிடும்.

பொருளாதார வட்டங்களில் Getting to Denmark என்ற ஒரு கருத்துப்படிவம் (Concept) உண்டு. கடந்த பல வருடங்களில் டென்மார்க் ஒரு ராமராஜ்ய இமேஜைப் பெற்றிருக்கிறது. ஒழுங்காகச் செயல்படும் அரசியல் பொருளாதார அமைப்புகள் அங்கே வழக்கில் இருக்கின்றன. நிலையான ஜனநாயக அரசியலமைப்பு, அமைதி நிலவும் சமூகம், சீரான பொருளாதார வாழ்வு நிலை, சாதி / நிறம் / இனம் சார்ந்த ஏற்றதாழ்வின்மை, ஊழலின்மை என்று ஒரு நல்ல தினசரி வாழ்வுக்கு வழிவகுக்கும் எல்லா குணாதிசயங்களிலும் அது உயர்ந்து, நிலைத்திருப்பதால் இந்த இமேஜ். டென்மார்க் மக்களிடையே “நான் ரொம்ப பிஸி, மிக அதிகமாக உழைத்துத் தள்ளுகிறேன்,” என்று சொல்லிக்கொள்பவர்களும், மிக அதிகமாகப் பணம் சம்பாதித்து மகா கோடீஸ்வரர்களாக ஆசைப்படுபவர்களும் அவ்வளவு விரும்பத்தகுந்த ஹீரோக்களாகப் பார்க்கப்படுவதில்லை. பொதுவாக அவர்கள் நடுத்தர வாழ்வு முறைகளையும் நடுத்தர செல்வத்தையும் மதிப்பதால், அவர்களின் வேலைப் பளு, சொந்த வாழ்வு இரண்டுக்குமிடையே ஒரு நல்ல பேலன்ஸ் இருப்பதை உலகம் கவனிக்கிறது. அது ஏன், எப்படி அந்த நிலையை அடையமுடிந்தது என்பது இன்னொரு கட்டுரைக்கான தீனி. சமூகம் என்றால், ஓரளவுக்கு ஏற்றத் தாழ்வுகள் இருப்பது நல்லது. அப்போதுதான் நாம் முன்னேற நமக்கு முன்னே நிற்கும் லட்சிய இலக்காக ஒன்று அமையும். யாரொருவரும் முயன்றால் அத்தகைய இலக்கை அடையும் சாத்தியக்கூறுகள் குடிமக்களின் கண்களுக்குத் தெரியவேண்டியதும் அவசியம். அப்படி இல்லாமல், அந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லை மீறி அதீத அளவுக்குப் போகும்போதுதான் அமிர்தம் நஞ்சாகிறது. உலகெங்கிலும் எல்லோருக்கும் ஒரு நடுத்தரமான வாழ்வும் வசதியும் அமைத்துக் கொடுப்பதுதான் நாம் சென்றடைய வேண்டிய சொர்க்கம் என்றால், எல்லோரும் அதை அடைவது உலகால் செய்து முடியக்கூடிய ஒரு லட்சியமாக இருக்கும்.  டென்மார்க் சமூகம் நிஜமாகவே அப்படிப்பட்ட ஒரு நோக்குடன் இயங்குகிறதோ இல்லையோ,  உலகம் அத்தகைய ஓர் இலக்கை நோக்கி முன்னேறுமேயானால், பரோபகாரச் செயல்களின் தேவை உலகில் வெகுவாகக் குறையக்கூடும்.

அப்படிப்பட்ட ஒரு சமத்துவச் சமுதாயத்தை நோக்கி நாம் நடைபோடும்போது, ஓராயிரம் தப்படிகளாவது நம்மைவிட வாழ்வில் கஷ்டப்படும் ஏழை எளியோரின் காலணிகளில் நாம் நடந்து பார்ப்பது நம் அனைவருக்கும் நல்லது. தன தானம் சிலரால் நிறையச் செய்ய முடியலாம், பலரால் அவ்வளவு செய்ய முடியாமல் போகலாம். ஆனால் நம் எல்லோருக்கும் இப்புவியில் ஒரே ஒரு ஆயுள்தான். நம் எல்லோருக்கும் ஒரு தினத்துக்கு 24 மணி நேரங்கள்தான். எனவே அந்த நோக்கிலிருந்து பார்க்கும்போது நாம் எல்லோரும் சமமானவர்கள்தான் என்று கொள்ளலாம். அங்கேயும் நமக்கு இருக்கும் பொறுப்புக்களைப் பொருத்து, சிரம / கால தானம் எவ்வளவு செய்யமுடியும் என்பதும் மாறலாம். இருந்தாலும், வாழ்வில் அதீத வெற்றிகளையே துரத்திக்கொண்டு இருக்காமல், சக மனிதர்களின் வாழ்வு, நோக்கு, அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்கள் முதலியவற்றைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துவதேகூட நம் எல்லோருக்கும் ஒரு நல்ல ஆரம்பமாக அமையும். அந்தப் புரிதலின் தூண்டுதலால், நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின், பெரிய கோடீஸ்வரர் என்று பெயர் வாங்கியபின், வயதானபின் என்று ஏதோ ஓர் எதிர்காலத்தில் பரோபகாரச் செயல்களில் ஈடுபடுவேன் என்று ஒரு தெளிவற்ற குறிக்கோளை மனதின் மூலையில் ஓரங்கட்டி வைத்திருப்பதின் தவறுபுரியும். அதைத் தொடர்ந்து “ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க” என்ற வழக்கிற்கு ஏற்ப, நம்மால் முடிந்த பரோபகாரச் செயல்களில் இன்றே ஈடுபட ஆரம்பித்தால், சிறிதோ பெரிதோ, அந்தச் செயல்களில் இருந்து நாம் பெறும் கல்வி, புரிதல்கள், மன அமைதி / மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து, நாம் கொடுப்பதைவிட பெற்றுக்கொள்வது இன்னும் அதிகம் என்று தெரிந்துகொள்வோம். எல்லோரும் முனைந்தால், வையகம் வளரும், நம்மை வாழ்த்தும்.

(முற்றும்)

முகப்பிலிருக்கும் படத்திற்கான சுட்டி: https://www.artmajeur.com/en/julian-wheat/artworks/13335392/chimpanzee-altruism

Series Navigation<< பரோபகாரம் – மஹா உதவல்கள்

2 Replies to “பரோபகாரம் – நாட்டுக்கு நாடு”

  1. நல்ல தொடர்.

    சிரம தானம் கால தானம் செய்ய முடியாதவர்கள் பலர், மக்கள் திலகம் பாடல் “வயத்துக்காக மனிதன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு, ஆடி முடிச்சு இறங்கி வந்தால் அப்புறம் தாண்டா சோறு ” என்று இருப்பவர்களால் முடியாதுதான். உண்மை.

    ஆனால் நான் கயிற்றில் ஆடுபவன் அல்ல. நான் எத்தனை நேரம் இம்மாதிரி அடுத்தவன் கஷ்டத்தை உணர்த்தும் செய்திகளை, மனித நேயத்தை அதிகரிக்கும் காணொளிகள் ஒலி சித்திரங்கள் படிப்பதில் செலவிட்டேன், எத்தனை மணி நேரம் குறுக்கெழுத்து, அரசியல் வம்பு செய்திகள், யுயுத்சு பற்றி எனக்கு தெரியும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது ஆகியவற்றில் செலவிட்டேன் என்பதை எண்ணிப் பார்த்தால் வெட்கமாக இருக்கிறது.

  2. both are necessary. —we must feed a hungry boy and also help him to become self-reliant.
    —–
    USA is basically a military-industrial complex. they give aid to other countries, to produce consumer goods and services. IF the leadership of the recipient country is far-sighted, it will use the aid to tide over the temporary crisis ( ex-pl400) but take urgent steps to become self-reliant. For example, India;s Green Revolution led by Indira Gandhi and MSSwaminathan.
    BILL GATES humanitarian aid is different from US Govt aid.
    From personal observation , so many Christian organizations are doing wonderful work for the poor.
    Of course, humanistic aid by individuals is fine but we must find a political solution.
    Hobsbawm has written about candinavian countries in the pre-1914 years
    FDR model is a good solution.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.