கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்

தமிழாக்கம்: கடலூர் வாசு

மோடி அரசாங்கம்- பா.ஜ.க. வகை மதச்சார்பின்மையின் பிரதிநிதியா?

(இது கோன்ராட் எல்ஸ்ட், 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமெரிக்கன் அகடெமி ஆஃப் ரிலிஜன் நடத்தும் வருடாந்தர மாநாட்டுக்கு எழுதிய ஒரு விளக்கம்)

அமெரிக்க மதக் கழக (American Academy of Religion)த்தின் வருடாந்திர மாநாடு செப்டம்பர் மாதம் ஏதாவதோர் அமெரிக்க நகரத்தில் நிகழும். இந்த மாநாட்டிற்கான கட்டுரைத் திட்டத்தைப் ஃபிப்ரவரி மாதத்திலேயே விரிவான விளக்கமாகவும் பிரசுரத்திற்கான சுருக்கமாகவும் சமர்ப்பிக்கவேண்டும். இம்மாநாட்டிற்காக எழுதப்பட்ட கீழ்வரும் கட்டுரை பா.ஜ.க.வின் மதச்சார்பின்மை என்னும் ஒரு நிகழ்வை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறது ஆனால், பா.ஜ.க. இந்து மதத்தை வெறித்தனமாக ஆதரிக்கும் கட்சி எனும் தவறான கணிப்பிலேயே உழன்றுகொண்டிருக்கும் அமெரிக்க மதக் கழகம், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தில் அக்கறை காட்டவில்லை. இக்கட்டுரையில் முன்வைத்த உண்மைகள் இம்மாநாட்டிற்கு முன்னரோ பின்னரோ தவறானதாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

1998லிருந்து 2004 வரை நடந்த வாஜ்பாயின் அரசாங்கத்தில், “முஸ்லீம் மக்கள் கடலில் தள்ளப்படுவார்கள்” என்றறிவித்த வல்லுனர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதைப்போன்ற மற்ற இறுதிநாள் யூகங்கள் எல்லாமே கடலில் வீழ்ந்தன. இந்துக்களின் பாசிசக் கொள்கைகளினால் ஜனநாயகம் நடுக்கம் கண்டுவிட்டது என்றார்கள். நடந்தது என்ன? வாஜ்பாயின் அமைச்சரவை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் கவிழ்ந்தபோது அவர் சத்தமின்றி வெளியேறினார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நடந்தது என்ன? பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்ற இந்திய ராணுவத்திற்குத் தடை விதித்ததுமல்லாமல் சமாதான உடன்படிக்கையொன்றை ஆரம்பித்து காங்கிரஸ் கட்சியே மறுத்த சலுகைகளைப் பாகிஸ்தானுக்கு அளித்தார் வாஜ்பாய். தனிமை இருப்பு என்றார்களே! அதன் கதியென்ன? இந்தியாவின் ஊடகச் சந்தை வெளிநாட்டினருக்கு விலைபோயிற்று. இது அனைத்துக் கட்சிகளும் எதிர்த்த ஒன்று. இந்தியம் என்ற பெயரில் இந்த அரசாங்கம் செய்தது அமைச்சர் ஜோஷியின் குழப்பம் நிறைந்த இந்திய வரலாற்றுப் பள்ளிப் புத்தகச் சீரமைப்பு மட்டுமே. அதுவும் சுலபமாகப் பழைய நிலைக்கே திருப்பியமைக்கப்பட்டது. இந்திய ஆய்விற்காக ஒரு புதிய பகுதியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நிறுவியபோது, ‘காவித்தனம்’ என இந்தியத்தின் எதிரிகள் சாடியதால் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக வெளிப்படையான எதிரி ஒருவர் இப்பகுதியின் தலைமையாளராக நியமிக்கப்பட்டார்.

வாஜ்பாய் அரசாங்கத்தில் என்னவெல்லாம் நிகழும் என்று யூகித்த அறிவாளிகளிடம் நடந்த வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தால் அவர்களுக்குத் தர்ம சங்கடமாயிருக்கும். பா. ஜ.க.வைப் பற்றிய எதிர்பிரசங்கம் முந்திய அளவு கிரீச் என்றில்லாவிட்டாலும் இந்துக்களின் வலதுசாரிக் கட்சி என்று கூறுவது நிற்கவில்லை. அதனால், இவ்வெதிரிகளின் யூகங்களும் மாறவில்லை. ஆனால், வாஜ்பாய் அரசாங்க நடத்தையை வைத்துக் கணித்தால், மோடியின் அரசாங்கப் போக்கும் இவ்வெதிரிகளின் யூகப் பாதையில் செல்லவில்லை என்பது அதிசயமாகத் தெரியாது. இப்போக்கில் ஏதாவது மாற்றம் இருந்தால் எனது செப்டம்பர் கட்டுரையிலும் மாற்றமிருக்கும்.

பா.ஜ.க. ஒரே விதமான மனப்பான்மையுள்ளவர்களின் பெரும்பான்மைக் கட்சியாக இருந்தும்கூட இந்துக்கள் சார்பானவைகளையோ, சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எண்ணக்கூடியவைகளையோ செய்யத் தயங்குகிறது. மாறாக, இவ்வரசாங்கம் பதவியேற்றவுடன் செய்த முதற்காரியம், முஸ்லீம் பள்ளிக்கூடங்களின் உதவித்தொகையை அதிகரித்ததுதான். இந்தியத்தைக் கண்மூடித்தனமாகப் போற்றிச் சிலர் செய்யும் பேச்சு பின்னிழுக்கப்படுகிறது அல்லது கண்டிக்கப்படுகிறது அல்லது மோடியை ஆதரிக்கும் பத்திரிகையாளர்களின் கோபப் பரிகசிப்பிற்கு ஆளாக்கப்படுகிறது. மதமாற்றத்தைப் பற்றி வாயே திறக்காத ஊடகங்கள், பொதுக்கூட்டமாக நிகழ்த்தப்படும் மதத் திரும்புதலை பூதாகாரமான ஒன்றாகச் சித்திரிக்கின்றன. அரசாங்கமும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதில்லை. வாஜ்பாயின் 2004 தோல்வியை நன்றாக அறிந்துள்ள மோடி அவர்கள் சோற்றுப் பானையைக் கொதிநிலையிலேயே வைத்திருப்பதுடன் சத்தில்லாத இந்துக் குறியீட்டுவாதம் (inconsequential Hindu symbolism) போன்ற சில பருக்கைகளைத் தன் அடிமட்ட ஆதரவாளர்களிடம் அவ்வப்போது தெளிக்கிறார். முறையான மாற்றங்கள் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.

பா.ஜ.க. உழைப்பாளர்கள் மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகளால் ஆதங்கமடையவில்லை. செய்யாமலேயே விட்டுவிட்ட வாக்குறுதிகளை எண்ணியே வருத்தமும் ஏமாற்றமும் அடைகிறார்கள். கட்சிக் கொள்கைகளின் வடிவமாகக் கருதப்படும் சுப்பிரமணியம் சுவாமி, அருண் ஷோரி போன்ற கட்சித் தலைவர்களையும் எதிர்கட்சியிலிருந்து பா.ஜ.க.விற்கு மாறிய மது கிஷ்வார் போன்றவர்களையும் நிராகரித்துச் சுயநலத்திற்காகக் கட்சியில் சேர்ந்துள்ள நம்பக்கூடாத புதுமுகங்களுக்குச் செல்வாக்குள்ள பதவிகளை அளிப்பதின் தந்திரம் என்னவாக இருக்கும் என்று அவர்கள் தலையைச் சொரிகிறார்கள். ஹிந்து ராஜ்யம் போன்ற உபயோகமற்ற கொள்கைகளும் பொது உரிமைச் சட்டம் போன்ற வன்முறை ஆர்ப்பாட்டங்களை கிண்டிவிடும் கொள்கைகளையும் அமல்படுத்துவது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால், இந்து மதத்தை வளர்க்கும் வேறு பல கட்சித் திட்டங்களைச் சுலபமாக எதிர்ப்பில்லாமல் நடைமுறைக்கு கொண்டுவர முடியும்.

குறிப்பாக, இந்துக்களின் கல்விக் கூடங்களைப் பாரபட்சப்படுத்தும் இந்திய அரசியலமைப்புப் பகுதிகள் 28, 30 ஆகிய இரண்டையும் திருத்தலாம். இது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்காது. மேலும் இந்துக் கல்வி நிறுவனங்கள்மேல் இப்பகுதிகள் திணித்துள்ள பெரிய சுமையை அகற்றும். அது மட்டுமல்லாமல் ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண மடம், ஜைன சமூகம், லிங்காயத் சமூகம் போன்றவை இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு வாங்குவதற்காக நாங்கள் இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களல்லர்; சிறுபான்மையினர்தான் என்று நீதிமன்றங்களில் வழக்காடுவதும் அர்த்தமற்ற பிரசாரங்களில் இறங்குவதும் அவசியமற்றதாகிவிடும். அது போலவே, பண வரவு அதிகமாயுள்ள இந்துக் கோயில்களைத் தேசிய மயமாக்கியும், பணமற்ற இந்துக் கோவில்களைப் புறக்கணித்தும் மற்ற மதங்களுக்கு விதிவிலக்களித்து இந்து மதத்தை மட்டும் பாதிக்கும் ஒருதலை அரசியலமைப்புப் பாரபட்சம் நீங்கும். அரசியல்வாதிகளின் சூறையாடல் ஒழியும். வசூல் பணத்தை, வாக்குகளைப் பெறுவதற்காகப் பிற மதக் கோயில்களில் கொண்டுதள்ளுவதும் அடங்கும். மேலும் இந்து மத, கலாசார வாழ்வு முறைகளை வளப்படுத்தும். இந்துக்கள் அல்லாதவர்களின் உரிமைகளை எவ்விதத்திலும் பாதிக்காமல் இவையெல்லாம் சுமூகமாக நடக்கும்.

இங்கு, கோயில் நிர்வாகம் மாநில அரசிற்குட்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். இதுவும், நான் கூறும் பா.ஜ.க,வின் மதச்சார்பின்மையைத்தான் வலியுறுத்துகிறது. பா.ஜ.க. ஆட்சிசெய்யும் மாநிலங்களும் இம்முறைகேடுகளுக்கு விதிவிலக்கல்ல என்பதையும் இவ்விடத்தில் கூறித்தான் ஆகவேண்டும்.

தற்சமயம், பா.ஜ.க.வின் தீவிரவாதிகளாகக் கருதப்படும் அதன் முன்னோடியான ஜனசங்கக் கட்சியின் உண்மையான கொள்கைவாதிகளை, இந்தியம் என்ற பெயரில் அவர்கள் விட்டுவிட்டுச் செய்யும் காரியங்களை நிறுத்தச்சொல்லி, ஒரே சீராக, நியாயமான இந்து ஆதர்சத் திட்டங்களுக்காக ஒத்துழைக்கச் செய்வது கடினமான ஒன்றன்று. பா.ஜ.க.வின் வெளிப்படையான தோல்வி என்று கட்சிக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கும் தெரிந்துள்ள இவ்வுண்மை நிலை வெளியாட்களுக்கு ஏன் தெரியவில்லை? அவர்களின் எழுத்திலோ, பேச்சிலோ இது இடம் பெறவில்லை. இந்தியாவையே உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் கல்வியாளர்களாலும் பத்திரிகையாளர்களாலும் ஒருமித்தமாக, ”இந்து மத தீவிரவாதக் கட்சி” எனக் கருதப்படும் பா.ஜ.க.விடம் இந்தியம் என்ற அட்டவணைக் குறிப்பு என்பதே கையிருப்பிலில்லை என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டத் தேவையில்லை. என் பார்வையில், பா.ஜ.க. இந்தியத்தை ஆதரிக்கும் அடிமட்டக் கட்சிக்காரர்களைத் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டும் உபயோகப்படுத்திக்கொண்டு, பதவியேற்றபின், அவர்களை எச்சில் இலையைப்போல் தள்ளி வைத்து விடுகின்றது. பொருளாதார முன்னேற்றங்களைப் பிரபலப்படுத்துவதிலும் நிறைவேற்றுவதிலும் மதச்சார்பற்றவர்களைக் குஷிப்படுத்துவதிலுமே குறியாக இருக்கிறது.

பா.ஜ.க.வின் நடத்தைக்குக் காரணமென்ன? ஆர்.எஸ்.எஸ். தலைவரும் முன்னோடியுமான கோல்வால்கரின் அறிவாற்றல் மிகுந்த, கூர்மையான, கட்சிக்காகவும் இந்தியத்துக்காகவும் படைக்கப்பட்ட திட்டங்களில் சரியான முதலீடு செய்யாததுதான். நாட்டு நிலவரங்களைப் பற்றிய சரியான பகுத்தாய்வுகளைக் கட்சி நிர்வாகிகள் வெறுத்து ஒதுக்குவதால் அந்நிகழ்வுகளின் நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. உதாரணமாகப் பள்ளிப் புத்தகங்களை மாற்றியமைப்பது போன்ற கருத்தியல் சர்ச்சைகளில் பா.ஜ.க.வின் நிலையை வலிவுடன் எடுத்துசொல்லும் ஆற்றல் வாய்ந்த நபர்கள் ஒருவருமே இல்லை. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பவர்களில், துணைவேந்தர் போன்ற பதவிக்கான தகுதியுள்ளவர்கள் யாருமேயில்லாததால் பல்கலைக்கழகப் பதவிகள் மாற்றுக் கட்சியினரிடமே தங்கிவிட்டன. மதச்சார்பற்றவர்களுடன் நேருக்கு நேர் மோதும்போது, இவர்களது தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே வெளிவருகிறது. பதவிகளில் இருப்பவர்களும் எதிராளிகளான அவர்கள் கிழிக்கும் கோட்டைத் தாண்டாமல் இருப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.

கைதேர்ந்த அரசியல் நிபுணர்கள்கூட பா.ஜ.க.வின் இந்தப் பலவீனங்களைத் தங்கள் கருத்துப் பதிவுகளில் வெளிக்கொணரவே இல்லை ஆனால், முதன்மையான செய்திக் குறிப்புகளில் மட்டுமே விசுவாசம் வைத்துள்ள இக்கட்டுரை சொல்லும் கதையே வேறு: தற்போதுள்ள பா.ஜ.க. ஓர் இந்துக் கட்சி என்று பலரும் சொல்வதற்கு ஒரே காரணம், அதன் ஆரம்ப நிலைப் போக்கைப் பற்றிய பழைய நினைவுகளிலேயே அவர்கள் அமிழ்ந்து கிடப்பதுதான்.

***

Series Navigation<< யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’ >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.